எல்லா நலமும் தரும் சிவராத்திரி விரதம்!

எல்லா நலமும் தரும் சிவராத்திரி விரதம்!


கல்லாப் பிழையும் கருதாப்பிழையும் கசிந்துருகி
நில்லாப் பிழையும் நினையாப்பிழையும் ஐந்தெழுத்தைச்
சொல்லாப் பிழையும் துதியாய்ப்பிழையும்
எல்லாப் பிழையும் பொருத்தருள் கச்சி ஏகம்பனே!

ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி எந்த நாளில் வருகிறதோ அது  ‘சிவராத்திரி’ ஆகும். இதை மாத சிவராத்திரி என்பர். மாசிமாதம் வரும் சிவராத்திரி மஹாசிவராத்திரி என்று மகிமையுடையதாய் போற்றப்படுகிறது. தேய்பிறை சதுர்த்தசி திதியும் சிரவண நட்சத்திரமும் வியாபிக்கும் இரவு சிவராத்திரியாக ஜோதிட ஆகமங்கள் கூறுகின்றன.

  சிவனை மகாசிவன் என்று அழைப்பது இல்லை! அதே சமயம் சிவராத்திரியை  ‘மகா’ என்று அடைமொழியிட்டு அழைக்கின்றனர். இதில் இருந்தே இந்த இரவின் மகிமையை அறியலாம். அதே சமயம் சிவனை சதாசிவன் என்று அழைப்பதுண்டு. வேறு எந்த தெய்வத்திற்கும் இந்த அடைமொழி கிடையாது. ‘சதா’ என்றால் ‘எங்கும் எப்போதும்’ என்று பொருள். எங்கும் எதிலும் நிறைந்திருப்பவன் ஈசன் என்பதை இந்த சொல் உணர்த்துகிறது. அமரகோசம் என்ற சம்ஸ்கிருத நூலில் சிவம் என்றால் மங்களம், சுபம், என்று அர்த்தங்கள் சொல்லப்பட்டுள்ளது. இத்தகைய சிறப்பு பெற்ற சிவனுக்கு உகந்த ராத்திரி சிவராத்திரி ஆகும். மாசிமாதம் தேய்பிறை சதுர்த்தசி நாளில் வரும் சிவராத்திரி அன்று சிவன் கோயில்கள் முழுநேரமும் திறந்திருக்கும் விடிய விடிய சிவனுக்கு அபிஷேகங்கள் நடைபெறும். இந்த விரதம் தோன்றிய கதையை பார்ப்போம்.

    ராமபிரான் காட்டுக்கு சென்ற போது கங்கை நதியை கடக்க உதவி செய்தவன் குகன். இவன் முற்பிறவியில் வேடனாக பிறந்து மிருகங்களை வேட்டையாடி வந்தான். ஒருநாள் மிருகங்கள் ஏதும் சிக்கவில்லை! பொழுது கடந்துவிட்டது. இரவானாலும் ஏதாவது மிருகத்தை வேட்டையாடித்தான் செல்லவேண்டும் இல்லாவிட்டால் குடும்பத்தினர் பட்டினியாக இருப்பார்கள் என்று காட்டில் அலைந்து கொண்டிருந்தான். அவனுக்கும் கடும்பசி காலையில் இருந்து ஏதும் உண்ணவில்லை! இருட்டிவிட்டதால் விலங்குகளிடமிருந்து தப்பிக்க ஒரு மரத்தில் மேது ஏறி அமர்ந்து கொண்டிருந்தான். பசி மிகும் போது தன் இடுப்பில் கட்டியிருந்த குடுவையில் இருந்து நீரை குடித்துக் கொண்டான். தூங்காமல் இருக்க வேண்டும் என்று அந்த மரத்தின் இலைகளை பிய்த்து கீழே போட்டுக்கொண்டிருந்தான். அவன் குடிக்கும் போது சிறிது தண்ணீர் கீழே சிந்தியது. இப்படி விடிய விடிய விழித்து இருந்தான் அந்த வேடன்.
   பொழுது விடிந்ததும் கீழே பார்த்தான். அங்கு மரத்தடியில் சிவலிங்கம் ஒன்று இருந்தது. அதன்மேல் வில்வ இலைகளை பறித்துப் போட்டிருந்தான் இவன். ஆனால் இவன் அதை பெரிதாக எண்ணவில்லை! ஒரு கும்பிடு போட்டுவிட்டு சென்றுவிட்டான். அவன் தன்னையறியாமல் விழித்திருந்து சிவனை வழிபட்ட தினம் சிவராத்திரி தினமாகும். இதனால் அவனுக்கு சிவனின் கடாட்சம் கிடைத்தது. மறுபிறவியில் அவன் குகனாக பிறந்தான். இராமனுக்கு உதவி செய்யும் பாக்கியம் கிடைத்து. குகனோடு ஐவரானோம் என்று இராமனின் சகோதரன் என்ற நிலைக்கு உயர முடிந்தது. தன்னை அறியாமல் கடைபிடித்த எளிய விரதத்துக்கே குகனுக்கு இந்த அளவு பெரிய பலன் கிடைத்தது. இவ்வளவு சிறப்பு மிக்க விரதத்தை சிரத்தையாக அனுஷ்டித்தால் அதன் பலனை சொல்லிட முடியா அளவிற்கு இருக்கும்.
   மிகவும் எளிமையானது இந்த விரதம். சிவராத்திரியன்று காலையில் நீராடி சுத்தமான ஆடை அணிந்து சிவாலயத்திற்கு சென்று  ‘சிவ சிவ’ என்றோ ‘நமசிவாய’ என்றொ சிவநாமம் சொல்லி வழிபட்டு வீட்டிற்கு வந்து நீர் மட்டும் அருந்தி உபவாசம் இருக்க வேண்டும். அன்று முழுவதும் நீராகாரம் தவிர்த்து வேறு எந்த திட ஆகாராத்தையும் உண்ணக்கூடாது. உடல் நிலை சரியில்லாத வயதானவர்கள் பழம் சாப்பிடலாம். மாலையில் சிவாலயத்திற்கு  சென்று, பழம், பால், அபிஷேகத் திரவியங்கள் இயன்ற அளவு வாங்கிக் கொடுத்து அன்று இரவு நடக்கும் நான்கு கால பூஜையில் கலந்துகொள்ள வேண்டும்.  அர்த்தஜாம பூஜை முடிந்ததும் வீட்டிற்கு வந்து நீராடி அதிகாலை மீண்டும் கோயிலுக்கு சென்றுவழிபட வேண்டும்.  பின்னர் உணவருந்தி விரதத்தை முடிக்க வேண்டும். அன்று அமாவாசை தினம் வருமாதாலால் பிதுர் தர்ப்பணம் செய்ய வேண்டியவர்கள் தர்ப்பணம் செய்து முடித்து பின்னர் உணவருந்த வேண்டும்.
   இந்த எளிய விரதத்தை தொடர்ந்து கடைபிடிப்போருக்கு வாழும் காலத்தில் நல்ல செல்வ வளமும் பின்னர் பிறப்பற்ற நிலையும் கிடைக்கும்.
    சிவபெருமானுக்குரிய அடையாளங்கள் ஐந்து அவை ருத்ராட்சம், விபூதி, வில்வம், சிவலிங்கம், ஐந்தெழுத்து மந்திரம். சிவராத்திரியன்று நெற்றியில் நீறிட்டு கழுத்தில் ருத்ராட்சம் தரித்து நமச்சிவாய மந்திரம் ஜெபித்து சிவலிங்கத்தை வில்வத்தால் அர்ச்சனை செய்து வழிபடுதல் வேண்டும் என்று பெரியோர்கள் சொல்வார்கள்.


காஞ்சிப்பெரியவர் சொல்கிறார்,
    சிவன் அபிஷேகப்பிரியர், சிவராத்திரியன்று அவருக்கு அபிஷேகம் நடந்தவண்ணம் இருக்கிறது. சிவலிங்கம் ஏன் வட்ட வடிவமாக இருக்கிறது தெரியுமா? வட்டமான ஸ்வரூபத்திற்குத்தான் அடி முடியில்லை ஆதியில்லை, அந்தமும் இல்லை. ஆதியந்தம் இல்லாத வஸ்து சிவம் என்பதை லிங்காகாரம் காட்டுகிறது.
   இது சரியான வட்டமாக இல்லாமல் நீள்வட்டமாக இருக்கிறது. பிரபஞ்சமே நீள்வட்டமாகத் தான் இருக்கிறது. “நம் சூரிய மண்டலத்தை எடுத்துக்கொண்டால் கிரகங்களின் அயனம் நீள்வட்டமாகத்தான் இருக்கிறது.” என்று நம் நவீன விஞ்ஞானம் சொல்வதும் “ஆவிஸ்புரத்” என்று சாஸ்திரம் சொல்வதும் லிங்க ரூபத்திற்கு ஒற்றுமையாக இருக்கிறது.
  அன்போடு பக்தி செய்து உருகினால் சிவன் விரைவில் அகப்பட்டுவிடுவார். அன்பினால் மிகமிகவிரைவில் திருப்தி பெற்று அநுக்கிரகிப்பவர் என்பதால் அவருக்கு “ஆசுதோஷி” என்று ஒரு பெயர் இருக்கிறது. கேட்ட மாத்திரத்தில் அநுக்கிரகம் பண்ணுகிற வள்ளல்தான் ஆசுதோஷி. சகல பிரபஞ்சமும் அடங்கியிருக்கிற லிங்க ரூபமானது ஆவிர்பவித்தது (உருவானது) சிவராத்திரி மகா சதுர்த்தசி இரவில். அவரை அப்படியே ஸ்மரித்து (உள்வாங்கி) அவருக்குள் நாம் அடங்கியிருக்க வேண்டும். அதை விட ஆனந்தம் வேறு இல்லை.

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தம்மை நன்னெறிக்குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே!


வருகின்ற 27-2-2014 வியாழக்கிழமை சிவராத்திரி. அன்று பிரதோஷமும் உடன் வருவது விசேஷம்!. அன்றைய தினத்தில் சிவாலயங்களுக்கு சென்று இறைவனை வழிபட்டு எல்லா வளமும் நலமும் அடைவோமாக!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

 1. மகா சிவராத்திரி பற்றிய விளக்கங்கள் அருமை. குகனின் முற்பிறப்பு கதை எங்கோ படித்த நியாபகம். தங்களின் இந்த பதிவு மூலம் மீண்டும் சரியாக தெரிய வந்தது.
  பகிர்ந்துக்கொண்டதற்கு மிக்க நன்றி

  ReplyDelete
 2. பிரதோஷமும் உடன் வருவதால் 27-2-2014 அன்று விசேசம் சிறப்பு தான்... விளக்கத்திற்கு நன்றி...

  ReplyDelete
 3. நமக்கு எதனை அருளவேண்டுமோ அதனை அவன் தகுந்த நேரத்தில் வழங்கி அருளுவான். பிறப்பின் பயனை அடையும் இலக்கினை அடையவும், நமது கடமையை சிரத்தியுடன் செய்து வரவும் அவன் அருள் வேண்டுமல்லவா. உரிய நாளின் உரிய முறையில் சிரத்தையுடன் செய்ய வேண்டும் என்பதனை வலியுறுத்தும் பகிர்வு! நன்றி சகோ!

  ReplyDelete
 4. சித்தத்தில் சிவனை நிறுத்தி பக்தியோடு வழிபட்டு வேண்டும் வரத்தைப்
  பெற்று அனைவரும் மகிழ்வோடு வாழ வேண்டும் .சிறப்பானா பகிர்வுக்குப்
  பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சகோதரா .

  ReplyDelete
 5. சிவராத்திரி பற்றிய தகவல்களும் படங்களும் மிக அருமை.....

  இந்தப் பதிவினை மகாசிவராத்திரி அன்று படிக்கிறேன்!

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்!

சிரிக்க வைத்த சிரிப்புக்கள்! பகுதி 6

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2