பாவம் போக்கி பரமபதம் அளிக்கும் ஏகாதசி விரதம்!

பாவம் போக்கி பரமபதம் அளிக்கும் ஏகாதசி விரதம்!


விரதங்களில் வைகுண்ட வாசனை துதித்து இருக்கும் விரதமான ஏகாதசி விரதம் முக்கியமானது. மாதம் தோறும் இந்த விரதம் இருந்தால் மகா புண்ணியம் கிடைக்கும். இயலாதவர்கள் மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசியன்று வரும் ஏகாதசி விரதம் இருந்து வைகுண்ட வாசனை வழிபட்டால் அவர்களுடைய பாவங்கள் விலகி பரமபதவாசல் கிடைக்கும் என்பது ஐதீகம்.
     ஏகாதசி விரதத்திற்கு பாவத்தை போக்கும் மிகப்பெரிய சக்தி உண்டு. அஸ்வமேத யாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் பெற முடியும். முறையாக விரதம் செய்து வழிபட்டால் கோ வதை செய்த பாவமும் விலகும். முப்பத்து முக்கோடி தேவர்களும் அனுசரிக்கும் விரதம் இது என்று பரமேஸ்வரனே சொல்லியிருப்பதாக புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது.

ஏகாதசி விரதம் இருப்பது எப்படி?
        ஏகாதசி விரதம் இருப்பவர்கள் முதல் நாளான தசமி அன்று ஒரு பொழுது உணவு உண்ண வேண்டும். ஏகாதசி நாளில் உண்ணாமலும் உறங்காமலும் விரதம் இருக்க வேண்டும். மறுநாள் துவாதசி அன்று பாரணை எனப்படும். அன்று சூரியோதயத்திற்குள் நீராடி 21 வகை காய்கறிகளுடனான உணவை சாப்பிடவேண்டும். அன்று பகல் பொழுதில் உறங்கக் கூடாது. இந்த உணவில் அகத்திக்கீரையும் நெல்லிக்காயும்,சுண்டைக்காயும் அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அகத்திக் கீரையில் பாற்கடல் அமுதமும், நெல்லிக்காயில் சுண்டைக்காயில் லட்சுமியின் அருளும் இருப்பதாக கூறப்படுகிறது. துவாதசியன்று சுவாமிக்கு நிவேதனம் செய்து யாராவது ஏழைக்கு தானம் செய்துவிட்டு பிறகு சாப்பிட வேண்டும். சூரிய உதயத்திற்குள் சாப்பிட்டுவிட வேண்டும். அது உத்தமம் எனப்படும். அன்று பகல் பொழுதில் உறங்காமல் நாரயண மந்திரத்தை ஜெபித்துக் கொண்டு இருக்க வேண்டும். இப்படி இந்த விரதம் இருப்பவர்கள் பாவம் அனைத்தும் நீங்கப் பெற்று வைகுண்டம் செல்லும் பாக்கியம் பெறுவார்கள்.

  பச்சை மாமலைபோல் மேனி பவளவாய் கமலச்செங்கன்
  அச்சுதா அமரரேறே ஆயர்தம் கொழுந்தே என்னும்
  இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகம் ஆளும்
  அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே!

ஸ்ரீ ரங்கத்தில் உறைந்திருக்கக் கூடிய பச்சை மலை போன்ற திருமேனி கொண்ட பெருமானே! பவளம் போன்றவாயும் தாமரை போன்ற கண்களும் உடையவரே! அச்சுதா! தேவர்களுக்கெல்லாம் தலைவரே! ஆயர்குலத்தில் உதித்த கண்ணனே! இந்திரன் ஆளும் தேவலோகம் கிடைத்தாலும் அதை விரும்பேன் உன்னை இங்கேயே வணங்கக் கூடிய பாக்கியம் ஒன்றே போதும்.

வைகுண்ட ஏகாதசி அன்று காலையில் சொர்கவாசல் திறக்கும் தலங்கள் இரண்டு. தென் தமிழகத்தில் ஸ்ரீரங்கமும் வட தமிழகத்தில் திருவல்லிக்கேணியுமே அவை.


சுமதி ராஜன் என்ற மன்னன் பெருமாள் பக்தன். இவனுக்கு குருட்சேத்திர போரில் தேரோட்டியாக இருந்த கண்ணணின் வடிவத்தை தரிசிக்க  ஆசை ஏற்பட்டது. தனக்கு அக்காட்சியை காட்டும் படி பெருமாளிடம் வேண்டினான். சுவாமியும் தேரோட்டியாக காட்சி தந்தார். மகிழ்ந்த மன்னன் அதே கோலத்தில் பெருமாளை சிலை வடித்தார். பாரதப்போரில் அர்ச்சுனனுக்கு சாரதியாக இருந்த போது பெருமாள் ஆயுதம் எதையும் எடுப்பதில்லை என்று செய்த சபதத்திற்கு ஏற்ப ஒரு கையில் சங்கு மட்டுமே ஏந்திய கோலத்தில்  இருக்கிறார். சக்கரம் கிடையாது. இவருக்கு வேங்கட கிருஷ்ணன் என்பது திருநாமம். இந்த தலத்து உற்சவரே பார்த்தசாரதி ஆவார். பிற்காலத்தில் உற்சவர் பெயரால் இந்த கோயில் வழங்கப்பட்டு இன்றளவும் அதே நடைமுறையில் உள்ளது.

ஐந்து மூலவர்கள். கோயில்களில் மூலவர் ஒருவர் தான் இருப்பார். இந்த தலத்தில் ஐந்து மூலவர்கள் வணங்கப்படுகின்றனர். பிரதான மூலஸ்தானத்தில் வேங்கடகிருஷ்ணர். முன்மண்டபத்தில் ரங்கநாதர், ராமபிரான், பிரகாரத்தில் கஜேந்திரவரதர் மற்றும் யோகநரசிம்மர் உள்ளனர். எனவே பஞ்ச மூர்த்தி தலம் என்றும் இந்த கோயில் வழங்கப்படுகிறது.


இந்த தலத்தில் உள்ள யோக நரசிம்மரே முதல் மூர்த்தியாவார். காலையில் இவருக்கே முதல் பூஜை நடக்கும். அத்திரி மகரிஷிக்கு காட்சிதந்தவர் இவர். இவரது சந்நிதியில் உள்ள மணிக்கு நாக்கு இருக்காது. அலங்காரத்திற்காக கதவில் உள்ள மணிகளில் கூட நாக்கு இருக்காது. நரசிம்மர் யோக நிலையில் இருப்பதால் மணி ஒலிக்கும் சப்தம் பேச்சு சப்தம் கேட்கக் கூடாது என்பதால் இப்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேரோட்டியானதால் வேங்கட கிருஷ்ணன் மீசையோடு கம்பீரமாக காட்சி தருகிறார். இவருக்கு மீசைபெருமாள் என்ற பெயரும் உண்டு. வைகுண்ட ஏகாதசி உற்சவத்தின் போது பகல்பத்து ஆறாம் நாளில் இருந்து பத்தாம் நாள் வரையில் 5 நாட்கள் இவரை மீசையில்லாமல் தரிசிக்கலாம்.

இந்த கோயிலின் சர்க்கரைப் பொங்கல் பிரசாதம் பிரசித்திப்பெற்றது. இரண்டுகிலோ அரிசியில் தயாரிக்கும் பொங்கலுக்கு 1கிலோ நானூறு கிராம் முந்திரியும், 700 கிராம் நெய்யும் சேர்க்கப்படும் இந்த பொங்கல் மிகவும் சுவையானது. இதை கட்டணம் செலுத்தி சுவாமிக்கு படைக்கலாம்.

பூலோகத்தில் அசுரர்களின் பலம் அதிகரித்த போது விஷ்ணுவின் உடலில் இருந்து மாயா சக்தி வெளிப்பட்டு ஒரு பெண்ணின் வடிவம் எடுத்து அவர்களை அழிக்க புறப்பட்டது. வெற்றியுடன் வைகுண்டம் திரும்பிய அந்த சக்தியை போற்றிய நாளே வைகுண்ட ஏகாதசி எனப்படுகிறது. அந்த பெண்ணுக்கு ஏகாதசி என்று பெயர் என்று பத்ம புராணம் கூறுகிறது.
   அர்ஜுனனுக்கு கண்ணன் கீதை உபதேசம் செய்த நாளும் ஏகாதசிதான். அதனால் இந்த திதிக்கு  கீதா ஜெயந்தி என்ற பெயரும் உண்டு.

அருமையும் பெருமையும் நிறைந்த இந்த ஏகாதசி விரதத்தை சிரத்தையுடன் கடைபிடித்து வந்தால் நன்மைகள் நடந்தேறும். ஏகாதசியன்று விழித்திருக்க வேண்டும் என்று தாயக்கட்டை, சொக்கட்டான் ஆடுதல், டீவி,சினிமா பார்த்தல் போன்றவை கூடாது. துவாதசியன்று மூக்கு முட்ட உண்டு பகலில் உறங்கக் கூடாது.

   கடைபிடிப்போர் விரதத்தை சிரத்தையுடன் அனுசரிக்க வேண்டும். இயலாதோர் கடைபிடிக்காமல் விட்டு விடலாம். அன்று விஷ்ணுவின் ஆலயங்களுக்கு சென்று வழிபாடு மட்டும் செய்து வரலாம். சிரத்தையில்லாமல் விரதம் இருந்து விரதம் பங்கப்படுவதை விட விரதம் இல்லாமல் விட்டுவிடுவது சாலச்சிறந்தது.

  விரதங்களில் சிறந்த இந்த ஏகாதசி விரதத்தை சிரத்தையுடன் அனுசரித்து மஹாவிஷ்ணுவின் அருளை பெறுவோமாக!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

 1. சிறப்புப் பதிவு மிக மிக அருமை
  அறியாதன அறிந்தேன்\
  பகிர்வுக்கும் தொடரவும்
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. ஏகாதேசி விரதத்தை பற்றி விரிவாக விளக்கியுள்ளீர்கள். மிக்க நன்றி.

  "கடைபிடிப்போர் விரதத்தை சிரத்தையுடன் அனுசரிக்க வேண்டும். இயலாதோர் கடைபிடிக்காமல் விட்டு விடலாம். அன்று விஷ்ணுவின் ஆலயங்களுக்கு சென்று வழிபாடு மட்டும் செய்து வரலாம். சிரத்தையில்லாமல் விரதம் இருந்து விரதம் பங்கப்படுவதை விட விரதம் இல்லாமல் விட்டுவிடுவது சாலச்சிறந்தது.//"

  - முற்றிலும் உண்மை.

  ReplyDelete
 3. மிகவும் அருமையான விளக்கம்... நன்றி... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. மிகவும் அருமையான விளக்கம்... நன்றி..

  ReplyDelete
 5. ஏகாதசி விரதம் பற்றிய விவரங்கள் மிக நன்று. பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்!

சிரிக்க வைத்த சிரிப்புக்கள்! பகுதி 6

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2