காதல் கிறுக்கு!

காதல் கிறுக்கு!



பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த அந்த சாலையின் ஓரம் அந்த பெண்கள் கல்லூரி அமைந்திருந்தது. அதன் வாயில் வழியே வெளிப்பட்டாள் மாதவி. இன்றைய கல்லூரி இளம்பெண்களுக்கே உரிய மேக்கப்பில் ஊதா நிற சுடிதாரில் மொத்த அழகையும் தாங்கி அவள் வெளியே வருகையில் வாசலை மறித்து எதிர்பட்டான் சுந்தர்.

     சுந்தர் நான்கு நாட்களாக எண்ணெய் காட்டாத பரட்டைத்தலை. பான்பராக் போட்டு பற்கள் கறை படிந்து அவன் மீது குமட்டும் விதமாய் பான் வாசம் வீசிக்கொண்டிருந்தது. நேற்று குடித்த சரக்கின் மிச்சம் அவன் கண்கள் சிவந்து உறுதி படுத்தியது. கையில் ஒரு ஐந்து லிட்டர் கேன் நிறைய பெட்ரோல் இடுப்பில் ஒரு கத்தி சொறுகியிருந்தான்.

         ”ஏய்! மாதவி! என்னை ஜெயில்லே வைச்சிட்டே இல்லை! உன்னை விடமாட்டேண்டி! இன்னிக்கு மரியாதையா நீ என்னை ஐ லவ் யூ சொல்லணும்! இல்லே  உன்னை உயிரோட விடமாட்டேன்! என்னை கிள்ளுக் கீரையா நினைச்சு தூக்கி எறிஞ்சுட்டே இல்லே! இன்னிக்கு நீ எனக்கு பதில் சொல்லியே ஆகனும்!”

    மாதவி அதை காதில் வாங்காதது போல் நடக்கவும் ஆவேசமானான் சுந்தர். “ஏய்! நில்லுடி! என்னடி நான் ஒருத்தன் நாய் மாதிரி கத்திக்கிட்டு இருக்கேன்! நீ பாட்டுக்கு போய்கிட்டு இருக்கே?” என்று வழிமறித்தான்.
    “ரோட்டுல போற கண்ட நாய்கிட்டே எல்லாம் என்னால பேசிக்கிட்டு இருக்க முடியாது! வழியை விடறியா? காலேஜ் வாசல்ல வந்து கலாட்டா பண்ணிகிட்டு இருக்கிறியே! உனக்கு வெக்கமா இல்லை?”

      “எனக்கேண்டி வெக்கம்? நீ தான் வெக்க படனும்! உங்கப்பன் போய் சேந்தப்புறம் படிக்க வக்கில்லாம இருந்த உனக்கு நான் உழைச்சு பணம் சேர்த்து பீஸ் கட்டினேன்! ஆனா நீ என்னை கட்டிக்க மாட்டேங்கற! அன்னிக்கு என் பணம் தேவைப்பட்டப்ப என்னை தூக்கி வைச்சு கொண்டாடிட்டு இப்ப தூக்கி எறியறியா?”

    ”லுக்! நீ பணம் கொடுத்தது உண்மைதான்! நான் வாங்கிட்டதும் உண்மைதான்! அதுக்காக உன்னை கல்யாணம் பண்ணிக்க முடியாது! பச்சை பொறுக்கிப்பய  மொடாக் குடியன் உன்னை என் ஹஸ்பெண்டா நினைச்சுக்கூட பார்க்க முடியாது!  உன் பணத்தை நான் கூடிய சீக்கிரம் திருப்பித் தருவேன்! வீணா கிறுக்கு பிடிச்சு அலையாதே கிளம்பு!”

   ”கிறுக்கன் தாண்டி! உன் மேல எனக்கு கிறுக்குதான் பிடிச்சிருக்கு! நீ ப்ளஸ் ஒன் படிக்கையிலே என் மேல சாய்ந்துகிட்டு செல்பி எடுத்துக்கலை! அப்ப இருந்த மயக்கம் இப்ப தெளிஞ்சு போச்சா!  இப்ப நான் கொளுத்திக்க போறேன்! என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு ஒரு வார்த்தை சொல்லு! போதும் நான் போயிடறேன்!”

   “டேய்! அன்னிக்கே ஸ்டேஷன் ல வைச்சி சொன்னேன் இல்லே! உன் கூட செல்ஃபி எடுத்துகிட்டேன் தான்! அது புரியாத ஒரு இனக்கவர்ச்சி! அப்ப நான் பதினாறு வயசு! இப்ப  பதினெட்டு தாண்டப்போகுது. டீவி சீரியலையும் சினிமாவையும் பார்த்து நானே உன் மேல காதல்னு நினைச்சு ஏமாந்து எடுத்துகிட்டது அது. இப்ப உன் மேல எனக்கு துளியும் லவ் இல்லே! உன்னை பார்த்தா பரிதாபம்தான் வருது! போ! போய் உன் லெவலுக்கு ஏத்த பொண்ணை தேடு! என்னை விட்டுடு”

      "ஏண்டி! உன் லெவல் இப்ப உசந்து போயிறுச்சோ! இந்த  சிலிண்டர் பாயை கல்யாணம் பண்ணிக்க முடியாதோ! இல்லைடி! நான் விடமாட்டேன்! நீ இல்லாம நான் வாழ மாட்டேன்! மரியாதையா லவ் பண்றேன்! என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லு! இல்லை இப்பவே கொளுத்திப்பேன்! என் சாவுக்கு நீதான் காரணம்னு லெட்டர் எழுதி வைச்சிருக்கேன்!"  பெட்ரோல் கேனை அப்படியே தன் மீது கவிழ்த்துக் கொண்டான்

    பெட்ரோல் நாற்றம் குபிரென்று தாக்க  ஒரு கணம் அதிர்ந்தாள் மாதவி. “ஏய்! வேண்டாம்! நான் சொல்றதை கேளு! நான் உன்னை லவ் பண்ணவே இல்லை! நீயா கண்ட சினிமாவை பார்த்து கற்பனை பண்ணிகிட்டு கிறுக்குத்தனமா எதுவும் பண்ணிக்காதே! போயிரு! இந்த மாதிரி பயமுறுத்தி என்னை ஏமாத்த முடியாது!”

  “யாருடி! ஏமாத்தறது! நாயே! நீதாண்டி! என்னை காதலிச்சு ஏமாத்தினே! என்னைவிட படிப்பு அதிகம் படிச்சிட்டா என்னை கட்டிக்க மாட்டியா? உனக்காக நான் செத்து போயிருவேன்னு பாத்தியா உன்னை கொன்னு போட்டுத்தான் மறுவேலை  இடுப்பில் சொறுகியிருந்த கத்தியை உருவிக்கொண்டு மாதவியின் மேல் பாய்ந்தான் சுந்தர்.

   ஒரு நொடியில் விலகி தன் வலக்காலால் அவன் கையை ஒரு எத்து எத்தி கத்தியை தட்டி விட்டாள் மாதவி. இப்போது அவன் அதிர்ந்து போய் நிற்க, டேய் முட்டாள் சொன்னா கேட்க மாட்டியா!  ஏதோ படிப்புக்கு உதவினே அந்த நன்றிக்கு ஒரு போட்டோ சேர்ந்து எடுத்துகிட்டேன் உடனே லவ்வுன்னு நீயா  நினைச்சுகிட்டு என்னை கொல்லவும் செய்வியா?”

    உன்னை சொல்லி குத்தமில்லை!  தமிழ் சினிமாக்களை பாத்து பாத்து நீ கெட்டு போயிருக்கே! எந்த பொம்பளைடா உன்னை மாதிரி பொறுக்கியை லவ் பண்ணுவா! தமிழ் சினிமா ஹீரோயின் தான் லவ் பண்ணுவா! போய் அவளை லவ் பண்ணு படிக்கிற என்னை விட்டுறு!  முடியாதுன்னு வம்பு பண்ணா  சிம்பிள் மேட்டர்  உன்னை எரிச்சு போட்டு போயிட்டே இருப்பேன்! என்றவள் கையில் ஒரு தீக்குச்சி சுடர் விட்டது.

       “ஏய் மாதவி! வேண்டாம்! வேண்டாம்! தீக்குச்சியை போட்டுறாதே!”

     " நான் இல்லாம வாழ மாட்டேன்! செத்துருவேன்னு சொன்னே இல்லே! இப்ப நான் தான் இல்லேன்னு ஆயிருச்சு இல்லே! செத்துப்போயேன்! தீக்குச்சியை அவன் மேல் வீசுவது போல் பாவனை செய்ய அவன் திரும்பி ஓடவும்  இரு காவலர்கள் அவனை மடக்கவும் சரியாக இருந்தது.


      நல்ல தைரிய சாலிம்மா நீங்க! இவன் கத்தியோட வந்தப்ப எங்கே குத்திருவானோன்னு நானே பயந்திட்டேன்! காவலர் கூற, "இந்த மாதிரி கிறுக்கனுங்க கிட்டே இருந்து தப்பிக்கத்தான் கராத்தே கத்துகிட்டு இருக்கேன்!  பிடிச்சுட்டு போய் நாலு சாத்தி சாத்தி உள்ள தள்ளுங்க!" இனிமே எந்த பொண்ணுங்க கிட்டேயும் இவன் வாலாட்ட கூடாது என்று நடக்க ஆரம்பித்தாள் மாதவி.


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்தலாமே!

Comments

  1. இப்படி நடந்திருந்தா சந்தோசம்தான்...

    ஆனாலும் அந்த பொண்ணும் காதலிச்சதா சொல்லி ஏமாத்துனது தப்புதான்

    ReplyDelete
  2. முடிவில் நல்ல வழிகாட்டல்

    ReplyDelete
  3. ஓடும்வரை மட்டும் நாய் நம்மைத் துரத்தும், நாயை அடிக்கத் திரும்பி கல்லைத் தூக்கினால் நாய் மிரண்டு ஓடும். இது உங்கள் கதையில் பிரதிபலித்துள்ளது. நிஜவாழ்க்கையிலும் நடக்கவேண்டும்.

    ReplyDelete
  4. சுரேஷ் நல்லாருக்கு.....

    கீதா

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!