Monday, July 24, 2017

இன்றைய தினமணி கவிதை மணியில் என் கவிதை!


இன்றைய தினமணி கவிதை மணியில் என்னுடைய கவிதை. வெளியிட்ட தினமணி ஆசிரியர் குழுவினருக்கு மிக்க நன்றி!


தூரத்தில் கேட்குது! நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு

By கவிதைமணி  |   Published on : 24th July 2017 04:21 PM  |   அ+அ அ-   |  
காலம் மாறிப் பெய்யும் மழை!
காய்த்தெடுக்கும் வெப்பம்!
புதைந்து போகும் ஏரிகள்!
புதியதாய் முளைக்கும் நோய்கள்!
மரபணு மாற்ற காய்கறிகள்!
மாறி வரும் வேளாண்மை!
வறண்டு கிடக்கும் குளங்கள்!
திரண்டு நிற்கும் மாசுக்கள்!
உழைப்பை மறந்த மக்கள்!
உலர்ந்து போகும் பசுமை!
பெருகும் வாகன போக்குவரத்து
அருகும் நடைப்பயிற்சிகள்!
அழியும் கிராமிய பண்பாடு
வழியும் ஆங்கில மோகம்!
உருகும் பனி ஆறுகள்!
சுருங்கும் ஓசோன் படலம்!
நொறுங்கும் மலைச்சிகரங்கள்!
நெருங்கும் கடல் எல்லைகள்!
சரியும் நிலத்தடி நீர்வளம்!
உறிஞ்சும் அன்னிய நிறுவனங்கள்!
இவைகள் பெருகப் பெருக
அருகி வருகின்றது பூமியின் ஆயுள்!
அதோ தூரத்தில் கேட்கிறது
அபாயச் சங்கு!

டிஸ்கி:  சில சொல்ல இயலாத விஷயங்களால் இணையப்பக்கம் நெடுநேரம் வரமுடியவில்லை!  விரைவில் மீண்டதும் நண்பர்களின் வலைப்பக்கங்களுக்கு வருகிறேன்! பொறுத்தருள்க!

தங்களின் வருகைக்கு நன்றி !பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில்  தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

  Saturday, July 22, 2017

  அப்பாவுக்குத்தெரியாமல்! பாப்பா மலர்!

  அப்பாவுக்குத்தெரியாமல்!

  சூரியன் மறையும் மாலை வேளை. அலுவலகத்திலிருந்து வந்தார் தெய்வநாயகம். அவர் உதடுகள் கோபத்தால் துடித்துக் கிடந்தன." ஏய் மங்களம்! எங்கேடி உன் புத்திர சிகாமணி? கூப்பிடுடி அவனை!" என்று கத்தினார்.
     அடுக்களையிலிருந்து அவர் மனைவி மங்களம் வெளிப்பட்டாள். "என்னங்க என்னாச்சு ஏன் இப்படி வந்ததும் வராததுமா கோபப்பட்டு குதிக்கிறீங்க? இந்தாங்க காபி குடிச்சிட்டு நிதானமா என்ன விஷயம்னு சொல்லுங்க! "என்று காபியை நீட்டினாள்.
   காபியை வாங்கி ஒரு துளி பருகிய வேத நாயகம் மீண்டும் கேட்டார். "எங்க அவன்?"
  " யாரைக் கேக்கறீங்க?"
  " அதான் நீ பெத்து வச்சிருக்கிறியே ஒரு சொக்கத்தங்கம்! அவனைத்தான் கேக்கறேன்." என்றார் தெய்வநாயகம்.
   ” ஏன் அவன் உங்களுக்கு மட்டும் பிள்ளை இல்லையாக்கும் உங்க சத்புத்திரன் தானே அவன் ?”
  ”சரி சரி கேட்டதுக்கு பதில் சொல்லு?”
   ”நம்ம நவீன் காலையில வெளியே போனவன் இன்னும் வரலைங்க?”

  ”மங்களம் அவன் தினமும் காலையிலபோனா மாலையிலதான் வர்றானா? இது எத்தனை நாளா நடக்குது? அப்படி அவன் நாள் முழுக்க எங்க சுத்துறான்? இதெல்லாம் விசாரிக்க மாட்டியா? இன்னிக்கு அவனை டவுன் ரோட்டில ஒரு ஆள் கூட பார்த்தேன் என்னை கண்டதும் அப்படியே பதுங்கறான். சரி வீட்டுக்கு போய் பார்த்துக்கலாம்னு விட்டுட்டேன். வரட்டும் அவன் இன்னிக்கு ரெண்டுல ஒண்ணு பார்த்துடுறேன்.”

  ”ஐயையோ வேண்டாங்க அவன் நம்ம பையங்க! தப்பா எதுவும் செஞ்சிருக்க மாட்டான். உங்க கோபத்தை அவன்கிட்ட காட்டாம இதமா விசாரிங்க!”
    ”சரிசரி நீ போ நான் பார்த்துக்கறேன்”. வேதநாயகம் சொல்லிக்கொண்டிருக்கும்போதே உள்ளே நுழைந்தான் நவின்.
   ”டேய் நில்லுடா எங்கே போய் ஊர் சுத்திட்டு வரே? நான் உங்கப்பா என்கிட்ட சொல்லாம ஊர் சுத்தினா எனக்குத் தெரியாம போயிடுமா? இன்னிக்கு தெரிஞ்சிடுச்சு பாத்தியா?”

   “அ.. அப் அப்பா அ.. அது .. அது வந்து”  என்று இழுத்தான் நவீன். “ ”என்னடா திணறறே? ஒழுங்கா எல்லாத்தையும் சொல்லிடு!”
   ”அப்பா நான் எங்கேயும் ஊர் சுத்தலைப்பா!”
  ”பொய் சொல்லாதே நான் இன்னிக்கு உன்னை டவுன்ல பார்த்தேனே?”
   “அ.. அது வந்து... சொல்லுடா!” தெய்வநாயகம் மிரட்டினார்.
   ”அப்பா நான் ஒரு எலக்ட்ரிகல் கடையில வேலை செய்யறேம்பா  முதலாளி கூட சாமான்கள் வாங்க வந்தப்பதான் நீங்க என்னை பார்தீங்க ”என்றான் நவீன்.

  ”என்னது வேலை பார்க்கறியா?”
   தெய்வநாயகத்தின் முகத்தில் அதிர்ச்சி தெரிந்தது.

  “ஆமாப்பா! நான் ஒருமாசா லீவுல தற்காலிகமா வேலை செய்யறேன். வெளிநாட்டு மாணவர்கள் இந்த மாதிரி விடுமுறையில வேலை செஞ்சு அடுத்த வருட படிப்புக்கு பணம் சேர்க்கறதா ஒரு பத்திரிக்கையில படிச்சேன். நாமும் ஏன் அந்த மாதிரி செய்யக்கூடாதுன்னு  தோணுச்சு. ஆனா உங்க கிட்ட சொன்னா ஒத்துக்கமாட்டிங்க நீ சம்பாதித்து ஒண்ணும் ஆகப் போறது இல்லன்னு சொல்லுவீங்க அதான் உங்க கிட்ட சொல்லாம வேலையில சேர்ந்துட்டேன்.விடுமுறையில  வீணா பொழுது கழிக்கிறது எனக்குப் பிடிக்கலை! இப்ப பொழுதும் போகுது பணமும் கிடைக்குது தொழிலும் கத்துக்கறேன் இப்ப சொல்லுங்கப்பா நான் செஞ்சது தப்பா?” நவின் கேட்க அவனை வாரி தழுவிக்கொண்டார் தெய்வ நாயகம்.

    ”இல்லடா நவீன் நீ செஞ்சது தப்பே இல்லை. நாந்தான் உன்னை தப்பா புரிஞ்சிகிட்டேன். வெளிநாட்டுப் பொருள்கள் மேல மோகம் கொண்டு அலையும் நாம அவங்க கிட்ட இருக்க சில நல்ல பழக்கங்களை எடுத்துக்கிறதே இல்லை. ஆனா நீ அவங்க கிட்ட்யிருந்து ஒரு நல்ல பழக்கத்தை பயன் படுத்தியிருக்கே யூ ஆர் ரியலி கிரேட் !”என்று மகனை அணைத்தபடி சொன்னார் தெய்வநாயகம்.

   ”அவன் என் மகனாக்கும் !”என்று மகிழ்ச்சி பொங்க கூறினாள் மங்களம்.


  அறவுரை!

  சமண முனிவர்களின் நாலடியார்.

   
  கல்லாது போகிய நாளும் பெரியவர்கண்
  செல்லாது வைகிய வைகலும்- ஒல்வ
  கொடாஅ தொழிந்த பகலும் உரைப்பின்
  படா அவாம் பண்புடையார் கண்

  விளக்கம்.  கற்க வேண்டிய நூல்களை கற்காமல் வீணாக கழித்த நாளும் கேள்வியின் காரணமாக பெரியோரிடத்தில் செல்லாமல் கழிந்த நாளும் இயன்றளவு பொருளை இரப்பார்க்குக் கொடாது கழிந்த நாளும் பண்புடையாரிடம் உண்டாகாது.

  (மீள்பதிவு)

   தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரியப்படுத்தி ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

  Friday, July 21, 2017

  இன்றைய இந்து எக்ஸ்ட்ரா பஞ்சில் எனது பஞ்ச்

  Image may contain: textஇந்து தமிழ் நாளிதழில் இன்று வெளியான எனது பஞ்ச் மற்றும் நண்பர்களின் பஞ்ச்கள் உங்களின் பார்வைக்கு.

  தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

  Thursday, July 20, 2017

  கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 92

  கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 92

  1.   எங்க தலைவரை அவ்வளவு சீக்கிரத்துல யாரும் விலை கொடுத்து வாங்கிட முடியாது!
    அதுக்காக “ தமிழகத்தின் தக்காளியே!”ன்னு பேனர் வைக்கிறது எல்லாம் ரொம்ப ஓவர்!

  2.   தலைவர் தீர்த்த யாத்திரைக்கு போயிருக்கார்னு சொல்றீங்களே ஏதாவது வேண்டுதலா?
  நீ வேற ‘சரக்கு அடிக்க போயிருக்கிறதை”த்தான் அப்படி சொன்னேன்!


  3.   நம்ம பால்காரனுக்கு வாய்கொழுப்பு ஜாஸ்தியா ஆயிருச்சு!!
  ஏன் என்ன ஆச்சு?
  பால்ல ஏன் தண்ணி கலக்கறேன்னு கேட்டா, நான் என்ன ரசாயணமா கலக்கறேன் தண்ணிதானேன்னு நக்கலா பதில் சொல்றான்!

  4.   படத்தோட கதை நடக்கிற இடம் மும்பை, கேரளாவில் இருந்து ஹீரோயினையும் ஆந்திராவில் இருந்து வில்லனையும் இறக்குமதி பண்றோம். பாரின்ல நாலு சாங் எடுக்கிறோம்!
    சிறந்த தமிழ்ப்படமா தேர்வாகும்னு சொல்லு!

  5.   எதிரி படை திரட்டி வருகிறான் மன்னா!
    நடையை வீசிப் போட்டு பழகலாமா மந்திரியாரே!


  6.   எதிரி கமல் ரசிகனாய் இருப்பான் போலிருக்கிறது மன்னா!
     எப்படி சொல்கிறீர்கள் மந்திரியாரே!
  நம் அனைவரையும் ஒரே சிறையில் அடைத்து வைத்து இருக்கிறானே!

  7.   கல்யாணத்துக்கு முன்னாலே அந்த ப்ளேயர் வாழ்க்கையிலே நிறைய செஞ்சுரிஸ்!
    அப்புறம்!
  கல்யாணத்துக்கு அப்புறம் நிறைய “இன் ஜுரிஸ்”

  8.   மன்னா! புகழ்ந்து பாடியதற்கு இன்னும் பரிசில் தரவில்லையே மன்னா!
  முதலில் உங்கள் ஆதார் கார்டை பான் கார்டோடு இணையுங்கள் புலவரே!

  9.   ஜி.எஸ்.டி. ஜி.எஸ்.டி என்கிறார்களே அது என்னது மன்னா?
    அது நீர் இயற்றும் பாடல் போன்றது! ஒன்றுமே புரியாது புலவரே!


  10. சிறைச்சாலையையே வீடாக நினைத்து தவ வாழ்க்கை வாழ்ந்த தலைவர் மேல் அபாண்டமாக சொகுசாக வாழ்ந்தார் என்று பழி கூறுவதை வன்மையாக கண்டிக்கிறேன்!

  11. தலைவர் விஞ்ஞான ரீதியா ஊழல் பண்ணியிருக்காரா எப்படி?

  கட்சியை இணைக்க வை-ஃபை இணைப்பு கொடுத்த செலவுன்னு கணக்கு காட்டியிருக்காராம்!

  12. உன் பையன் சதா எதையோ தேடிக்கிட்டே இருக்கான்னு சொல்லுவியே இப்ப எப்படி இருக்கான்!
    கூகுள்”ல வேலைக்கு சேர்ந்துட்டான்!

  13. அவர் வாழ்க்கையிலே ஸ்டெப் பை ஸ்டெப்பா முன்னுக்கு வந்தவர்!
    அப்படியா என்ன வேலை செய்யறார்?
  கணக்கு வாத்தியாரா இருக்கார்!

  14. முதல் முறையாக கன்னிமாடத்திற்குள் யாரோ ஆடவர்கள் புகுந்துவிட்டார்களாமே!
  “கன்னி” முயற்சி என்று சொல்லுங்கள்!

  15. தலைவர் ஏன் அந்த நடிகையை கட்சிக்குள்ளே சேர்க்கணும்னு ஆர்வமா இருக்கிறார்?
  அவங்களுக்குத்தான் இப்ப நிறைய “ஓட்டு” விழுதாமே!


  Tuesday, July 18, 2017

  இந்த வார கவிதை மணியில் என் கவிதை!

  தினமணி கவிதை மணியில் என்னுடைய கவிதை!

  இந்தவாரம் திங்களன்று 17-7-17 அன்று தினமணி கவிதை மணியில் வெளியான எனது கவிதை!

  இன்றைய தாலாட்டு: நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு
  By கவிதைமணி  |   Published on : 17th July 2017 04:36 PM  |   + -   |  
  தூளியே தொலைந்த காலத்தில்
  கொஞ்சம் தள்ளியே நிற்கிறது
  இன்றைய தாலாட்டு!
  அம்மாக்கள் அரவணைப்பில்
  பாட்டி தாத்தா பாசத்தில்
  பயணித்த தாலாட்டு
  இன்று தேய்பிறையாய்
  தேய்ந்து கிடக்கிறது!
  நிலா முற்றங்களில் நீண்டு ஒலித்த
  தாலாட்டுப் பாடல்கள்
  அப்பார்ட்மெண்ட் அடுக்ககங்களில்
  அமிழ்ந்து கிடக்கிறது!
  சோறுட்டும் போதும்  தாலாட்டும் போதும்
  இசையூட்டிய அம்மாக்கள்
  பசை தேடி பயணிக்கையில்
  திசை தெரியாமல் திணறி
  மூச்சிழந்து முடங்கி கிடக்கின்றன!
  அலைபேசிகளும் தொலைக்காட்சிகளும்
  தோழனாக உலாவும்
  தோற்றப்பிழை காலத்தில் பிள்ளைகளுக்கு
  கிடைப்பதில்லை
  பெற்றவளின் தாலாட்டு!
  திரையிசையும் தெருவசையுமே
  இன்றைய பிள்ளைகளுக்கு
  என்றும் தாலாட்டு!
  வசதிகள் எல்லாம் வழக்கமாக
  வழுவிப் போய் வெறும்
  தழுவலோடு நின்றுவிட்டது
  இன்றைய தாலாட்டு!

  தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! 


                                  

  இரண்டு ரூபாய்!”

   “இரண்டு ரூபாய்!”  நான் அந்த பேருந்து நிறுத்தத்தின் முன் நின்றுகொண்டிருந்த போது மணி முற்பகல் பத்தை கடந்து இருந்தது. சித்திரை மாதம் என்பதால் வெயில் அப்போதே கொளுத்திக் கொண்டிருந்தது. நிழற்குடையை ஆக்ரமித்து ஏதோ பெட்டிக்கடைகள் முளைத்திருக்க வெயிலில் பேருந்துக்காக காத்திருந்தனர் என்னோடு இன்னும் சிலர்.
     நான் பேருந்தில் பயணித்து ஏறக்குறைய நான்கைந்து வருடங்கள் ஆகிவிட்டது. ஏதோ தொலை தூரம் என்றால் பேருந்து பயணமே தவிர அருகில் உள்ள இடங்களுக்கு இருசக்கரவாகனத்தில்தான் பயணம். ஒருகாலத்தில் பேருந்திலேயே பயணித்தபோது பேருந்து கட்டணங்கள் எல்லாம் எனக்கு அத்துப்படி. நடத்துனர் கேட்கும் முன்னரே சரியான சில்லரையைக்கொடுத்து டிக்கெட் வாங்குவேன். நடத்துனர்கள் எல்லோரும்  “நீங்கதான் சரியான சில்லரை கொடுத்து எங்க டென்சனை குறைக்கறீங்க!” என்று பாராட்டுவர். இப்போது டூ வீலர் வாங்கிவிடவே பேருந்து பயணம் குறைந்து போனது. பஸ் கட்டணங்களும் மறந்து போனது.
      இன்று திடீரென்று பஸ் பயணம் செல்ல வேண்டியதாகிவிட்டது. டூ வீலரை சர்வீஸ் விட்டுவிட்டு அருகில் உள்ள நகரில் ஒரு விஷேசத்தில் கலந்து கொள்ள வேண்டிய கட்டாயம். சர்வீஸ் செண்டருக்கும் அருகில் உள்ள நகருக்கும் சுமார் மூன்று கிலோ மீட்டர்தான் தூரம் இருக்கும். ஏதாவது டூவீலரில் லிப்ட் கேட்டுச் சென்றுவிடலாம் என்றால் சமயம் பார்த்து வரும் எல்லா டூ விலர்களிலும் பில்லியனில் யாரோ அமர்ந்து வந்து கொண்டிருந்தனர். சரி இது ஆகாது… என்று நடந்து அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு வந்துவிட்டேன். கையில் சுமை ஒன்றும் இல்லைதான். ஆனாலும் காலை வெயில் முதுகை சுட்டு முடியில்லாத மண்டையையையும் காய்ச்சி எடுத்தது.
     கைக்குட்டையால் முகத்தை துடைத்தபடி பஸ் நிறுத்தத்தில் கால்மணி நேரம் காத்திருந்த பிறகே பஸ் ஒன்று வந்தது. நல்ல கூட்டம். கூட்டத்தை பார்த்தால் வேலைக்கு ஆகாது என்று முண்டியடித்து ஏறினேன். புட்போர்டில்தான் நிற்க முடிந்தது. அதற்கு நேர்மேலே நின்றிருந்த கண்டக்டர் டிக்கெட், டிக்கெட் என்று குரல் கொடுத்துக் கொண்டிருந்தார். மேல்சட்டைப் பையினை மெதுவாகத் துழாவினேன். ஒரு பத்து ரூபாய் தாளை எடுத்து, பொன்னேரி ஒண்ணு கொடுங்க! என்றேன்
     அது தனியார் பேருந்து! அரசுப் பேருந்து என்றால் அப்படியே எரிந்து விழுந்திருப்பார் கண்டக்டர். அந்த கண்டக்டரோ, சில்லரை இல்லையா? ஏழு ரூபாய் இருந்தா கொடுங்க! என்றார்.
      பையைத் துழாவி இல்லையே! என்றேன். சரி இந்தாங்க அஞ்சு ரூபா! ரெண்டு ரூபா இருந்தா கொடுங்க! என்றார்.
      ரெண்டு ரூபா இருக்கும்! ஆனா படியிலே இருக்கேன்! இறங்கறப்ப கொடுக்கிறேனே! என்றேன்.
     கண்டக்டரும் பரவாயில்லை! இறங்கரப்ப கொடுங்க! என்றார்.
  எப்படியோ தொத்திக் கொண்டு பொன்னேரி வந்துவிட்டேன். கண்டக்டர் கூட்டத்தை விலக்கி முன்னே சென்று விட்டார். பழைய பேருந்து நிலையத்தில் கொஞ்சம் இடமும் கிடைக்க வசதியாக அமர்ந்துவிட்டேன். அப்படியே கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். புதிய பேருந்து நிலையத்தில் இறங்கிவிட்டேன். அந்த இரண்டு ரூபாய் எனக்கு மறந்தே போய்விட்டது. கண்டக்டரும் கேட்கவில்லை.
      நான் அடுத்து செல்ல வேண்டிய ஊருக்கான வண்டி புறப்பட்டுக் கொண்டிருக்க அதில் மடமடவென்று ஏறிவிட்டேன். அந்த பஸ்ஸில் அமர்ந்து டிக்கெட் வாங்கும் போதுதான் அடடே! அந்த பஸ்ஸில ரெண்டு ரூபாய் கொடுக்காமல் விட்டுவிட்டோமே என்று தோன்றியது.
      விழாவில் கலந்துகொண்டேன்! ஆனாலும் மனம் என்னவோ அந்த இரண்டுரூபாயையே சுற்றி சுற்றி வந்தது. ரெண்டுரூபாயை கொடுக்காம வந்துட்டோமே! அந்த கண்டக்டர் என்ன நினைப்பார்? என்று தவித்துக் கொண்டிருந்தது மனசு.

     சுவையான மாம்பழம் ஒன்றை சாப்பிட்டு முடித்ததும் அதனுடைய நார் ஒன்று பல்லிடுக்கில் சிக்கிக் கொண்டால் அதை எடுக்கும் வரை ஓர் அசவுகர்யமாக இருக்குமே அதே போன்று இருந்தது.
     அந்த மங்கல நிகழ்ச்சியில் என் கவனம் செல்லாமல் இந்த ரெண்டு ரூபாயையே நினைத்துக் கொண்டிருக்க என் அருகில் அமர்ந்தவர் கேட்டே விட்டார்.
     “என்ன ஓய்! என்ன ஏதோ சிந்தனையிலே இருக்கீர்! கவனம் இந்த பக்கமே காணோம்!”
       “அதெல்லாம் ஒண்ணுமில்லையே!”
   “சும்மா சொல்லும் ஓய்! கவனம் இல்லேன்னா நான் அங்க தூரத்துல நின்னு கை அசைக்கிறேன்! நீர் விட்டத்தை பார்த்துகிட்டு உக்காந்து இருக்கீர்! என்ன ஆச்சு?”
       “ஒண்ணுமில்லே ஓய்! பஸ்ஸில ஒரு ரெண்டு ரூபா விட்டுட்டேன்!”
     “ ரெண்டாயிரமா? பிக்பாக்கெட்டா!”
    “ யோவ்! நீ வேற பெரிசா பீதியை கிளப்பிக்கிட்டு! ரெண்டுரூபா சில்லரை…”
      அவர் என்னை மேலும் கீழும் பார்த்தார்! பைத்தியம் முத்திவிட்டதோ என்பது போல இருந்தது அவர் பார்வை!   “என்னய்யா ரெண்டு ரூபா தொலைச்சதுக்கா இவ்வளவு பில்டப்!”
    “ நான் தொலைக்கலை! கண்டக்டருக்கு ரெண்டு ரூபா சில்லரை தர மறந்துட்டேன்!”
     இப்போது அவர் என்னை முழுப்பைத்தியம் என்றே தீர்மானித்து இருக்க வேண்டும். “யோவ்! அவனவன் டிக்கெட் வாங்காம வித்தவுட்லேயே உலகம் பூரா சுத்தி வரான்! இவரு ரெண்டு ரூபா சில்லரை தரலையாம்! உக்காந்து கவலைப்பட்டுக்கிட்டு இருக்காரு! நீர் யோக்கியந்தான்யா! ஒத்துக்கறேன்! என்று ஏளனம் செய்துவிட்டு போய்விட்டார்.
    அருகில் அமர்ந்திருந்த சிலரும் பெரிதாக ஜோக் கேட்டதைப் போல சிரித்துவிட்டு, விட்டுத் தள்ளுங்க சார்! அவனுங்க எத்தனை முறை நம்ம கிட்ட ஒருரூபா, ஐம்பது பைசான்னு அடிக்கிறானுங்க! இன்னிக்கு உங்க டர்னுன்னு நினைச்சுக்கோங்க! என்றனர்.
       ஆனாலும் என் மனம் அமைதி அடையவில்லை! ஒரு மாதிரி அலைந்து கொண்டிருந்தது. விழா முடிந்து மாலையில் புறப்பட்டேன். பொன்னேரி பேருந்து நிலையத்தில் வந்து இறங்கினேன். காலையில் என்னை இறக்கிவிட்ட தனியார் பேருந்து அங்கு இருக்கிறதா என்று பார்த்தேன். ஊகும்! காணோம்!
     என்ன செய்யலாம்? அங்கே இருந்த நேரக் கண்காணிப்பாளரிடம் விசாரித்தேன்.
      “அந்த பெரும்பேடு போற பஸ்ஸா?”
        “ஆமாங்க!”
     “இப்ப போயிருக்கு! இன்னும் ஒரு அரைமணி இல்லே முக்காமணி நேரத்துல ரிட்டர்ன் வரும்! ஆனா பெரும்பேடு போகாது ரெட் ஹில்ஸ்தான் போவும்!”
      “ரொம்ப நன்றி சார்!”
   அந்த முக்கால் மணி நேரமும் முள்ளின் மேல் நின்றிருப்பது போல ஒரு அவஸ்தை! இந்த நேரத்தில் சர்வீஸ் செண்டருக்கு சென்று வண்டியை எடுத்து வந்து விடலாமா? என்று தோன்றியது. ஆனால் அதற்குள் அந்த பஸ் வந்துவிட்டால்?
    அங்கேயே காத்திருந்தேன்.

    என் பொறுமையை சோதித்த அந்த பேருந்து பொறுமையாக ஒரு மணி நேரம் கழித்து வந்து நின்றது. பஸ் நின்றதும் நிற்காததுமாய் ஓடிச் சென்றேன்.
      கண்டக்டர் படியில் இருந்து இறங்கியபடியே, இருங்க சார்! பேசண்ஜர்ஸ் இறங்கட்டும்! பொறுமையா வாங்க! சீட் இருக்கு! என்றார்.
    எனக்கு அவரை நினைவிருந்தாலும் அவர் என்னை சுத்தமாய் மறந்துவிட்டிருந்தார்.
       “சார்! என்னைத் தெரியலையா?”
      “தெரியலையே! யாரு நீங்க?”
   “காலையிலே உங்க வண்டியிலே வந்தேன். பத்து ரூபா கொடுத்து ஏழுரூபா டிக்கெட் எடுத்தேன்! நீங்க அஞ்சு ரூபாய கொடுத்து ரெண்டு ரூபா கேட்டீங்க! நான் படியில தொங்கிட்டு வந்ததாலே அப்புறமா தரேன்னு சொன்னேன். நீங்களும் சரின்னு சொல்லிட்டீங்க! ஆனா நான் மறந்து போய் அவசரத்துல அந்த ரெண்டு ரூபாயை தராம இறங்கிட்டேன். வெரி சாரி சார்! இந்தாங்க அந்த ரெண்டுரூபாய்! இதை கொடுக்காம விட்டுட்டேமேன்னு என் மனசாட்சி என்னை வாட்டி வதைச்சுன்னு இருந்தது! இப்ப நிம்மதியா ஆயிருச்சு!” என்று சொல்லி ரெண்டுரூபாயை நீட்டினேன்.
     கண்டக்டரால் நம்பவே முடியவில்லை! “ சார்! நான் எப்பவோ அதை மறந்துட்டேன்! என் டூட்டியிலே எத்தனையோ பேர் என்கிட்ட சில்லரை வாங்காம போயிருவாங்க! சிலபேர் மறுநாள் இல்ல அடுத்த ட்ரிப்புல கேட்பாங்க! கொஞ்சம் கூட யோசிக்காம இல்லேன்னு நிர்தாட்சண்யமா சொல்லியிருக்கேன். எனக்கு அது மத்தவங்க காசுன்னு கொஞ்சம் கூட ஒறைச்சதே இல்லை!  ஒரு ரூபா ரெண்டு ரூபாய்தானேன்னு அலட்சியமா இருந்திருக்கேன்! இன்னிக்கு நீங்க இந்த ரெண்டு ரூபாயை திருப்பிக் கொடுத்து என் கண்ணை திறந்து விட்டிருக்கீங்க! இனிமே யாருடைய சில்லரையையும் எடுக்காம ஒழுங்கா கொடுத்திருவேன்! இது சத்தியமா சார்! நீங்க உண்மையிலேயே கிரேட் சார்!” என்றார் அந்த கண்டக்டர்.

        “இதெல்லாம் பெரிய விசயம் இல்லேப்பா! நான் தப்பு செஞ்சேன்! அதை திருத்திக்கிட்டேன்! இந்த சின்ன விசயம் உன்னை திருத்தி இருக்கே! அதுதான் கிரேட்! நீதான் கிரேட்! காட் ப்ளஸ் யூ!” என்று வாழ்த்தி விட்டு திரும்பினேன் நான்.

  மீள்பதிவு)

  தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்தவும். நன்றி!

  Friday, July 14, 2017

  தினமணி கவிதை மணியில் எனது கவிதைகள்!


  தினமணி கவிதை மணியில் கடந்த வாரங்களில் வெளிவந்த எனது கவிதைகள் உங்களின் பார்வைக்கு!

  மறு ஜென்மம்!

  காய்ந்திட்ட்ட நதிகள் தோறும் மீண்டும்
  நீரோடினால் அது நதிக்கு மறு ஜென்மம்
  காய்ந்திட்ட புற்கள் எல்லாம் மழை பெய்து
  துளிர்த்திட்டால் அது புல்லுக்கு மறு ஜென்மம்!
  குற்றங்கள் புரிந்த மனிதன் தவற்றை உணர்ந்தே
  திருந்தி வந்தால் அது அவனுக்கு மறு ஜென்மம்!
  பிள்ளைகள் பிரசவிக்கும் தாய்மார்கள் எல்லோர்க்கும்
  பிரசவம் முடிந்து வருதல் மறுஜென்மம்!
  செதுக்கிய பாறைகள் எல்லாம் சிற்பமாய்
  மாறுகையில் அது பாறைக்கு மறு ஜென்மம்!
  பிசைந்த சேறு குயவனின் கைவண்ணத்தில்
  குடமாய் மாறுகையில் அது மண்ணுக்கு மறுஜென்மம்!
  பூக்களாய் பூத்தவை மாலையாக
  தொடுக்கப்படுகையில் அது பூவுக்கு மறு ஜென்மம்!
  தோல்வியில் துவண்டவன் துணிச்சலாய்
  எழுந்து வெல்கையில் அவனுக்கு மறுஜென்மம்!
  வாழ்க்கையில் புதிய பாதையை வகுத்து
  நடக்கையில் அது மறுஜென்மம்!
  துன்பங்களையே துணையாகக் கொண்டவன்
  இன்பத்தை அடைவது மறுஜென்மம்!
  எதிரியை நண்பனாய் ஏற்றவனுக்கு
  எதிர்வரும் வாழ்க்கை மறுஜென்மம்!
  தூங்கி விழிக்கும் மாந்தருக்கெல்லாம்
  துளிர் விடும் மறுநாள் மறுஜென்மம்!

  நிழலாடும் நினைவு:  நத்தம். எஸ்.சுரேஷ்பாபு

  By கவிதைமணி  |   Published on : 10th July 2017 04:32 PM  |   அ+அ அ-   |  
  அதிகாலைப்பொழுதில் எந்திரிக்கையில்
  நினைவுக்கு வருகிறது கிராமத்து கோயில் ரேடியோவில்
  ஒலித்த சுப்ரபாதம்!
  அடுக்குமாடி குடியிருப்பில் வாசல் நோக்குகையில்
  ஸ்ரீரங்கத்து வீதிகளின் மாக்கோலம் நினைவுக்கு வருகிறது!
  மொபைலில் ஒலிக்கும் எஃப் எம் கேட்கையில்
  அந்தகாலத்து விவிதபாரதியின் வர்த்தக ஒலிபரப்பு
  நிழலாடுகின்றது.
  அபார்ட்மெண்ட் பார்க்கில் சிறுவர்கள் ஆடும் ஊஞ்சலை
  காண்கையில் அழகாய் கண் முன்னே நிழலாடுகிறது
  ஆற்றங்கரை ஆலமரத்து விழுது ஊஞ்சல்கள்!
  கொளுத்தும் கோடை வெயிலில் வியர்த்து வீடு திரும்புகையில்
  ஐயங்கார் வீட்டு தென்னை தோப்பில் இளநீர் குடித்தது
  நிழலாடுகின்றது!
  பேரப்பிள்ளைகள் ப்ராக்ரஸ் ரிப்போர்ட் பார்க்கையில்
  எட்டாம் வகுப்பில் அப்பா கையெழுத்து போட்டு மாட்டிக்கொண்டது
  நினைவில் நிற்கிறது!
  ஐஸ்க்ரிம்பார்லரில் வெண்ணிலா ஃப்ளேவரில் ஐஸை சுவைக்கையில்
  மிதி வண்டியில் சேமியா ஐஸ் வாங்கி தின்றது நினைவில் வருகிறது!
  குட்டிக் குழந்தைகள் அபார்ட்மெண்ட் வாசலில் மூன்று சக்கர சைக்கிள்
  ஓட்டுவதை பார்க்கையில் அந்த நாளில் பனங்குடுக்கை வண்டி ஓட்டியது
  நிழலாடுகிறது!
  ஏசி காற்றில் ஃபோம் மெத்தையில் படுத்துறங்கும் சமயத்திலும்
  வராண்டா முற்றத்தில் ஈஸிச் சேரில் விசிறியால் விசிறி
  படுத்த காலங்கள் நிழலாடுகின்றது!
  அகல சாலைகளில் அதிவேக வண்டிகளில் பயணிக்கையில்
  மண் சாலையில் மாட்டுவண்டியில் பயணித்த காலங்கள்
  நிழலாடுகின்றது!
  டூரிங்க் டாக்கீஸ்! குதிரை வண்டி! தேன் மிட்டாய்!
  கண்ணா மூச்சி! நொண்டிக்குதிரை! இப்படி எத்தனையோ நினைவுகள்!
  நிகழ்காலத்தில் ஒவ்வொருவரிடமும் இறந்த கால நினைவுகள்
  எச்சம் இருக்கிறது
  நிழலாடும் அந்த நினைவுகளில் ஒரு சுகம் இருக்கிறது!
  Related Posts Plugin for WordPress, Blogger...