Tuesday, May 30, 2017

தினமணி கவிதை மணியில் எனது கவிதைகள்!

தினமணி கவிதை மணியில் எனது கவிதைகள்!

தினமணி இணைய தளத்தில் கவிதை மணி என்றொரு பக்கம் உண்டு. வாரா வாரம் திங்கள் கிழமைகளில் ஒரு தலைப்பு கொடுத்து எழுத சொல்கிறார்கள். இந்த திங்கள் கொடுக்கும் தலைப்புக்கான கவிதைகள் அடுத்த திங்களில் வெளிவரும். சனிக்கிழமைக்குள் படைப்புக்களை அனுப்பி விட வேண்டும். தமிழகத்தின் பிரபல கவிஞர்களும் இதில் எழுதி வருகிறார்கள். புதியவர்களும் எழுதுகின்றார்கள்.
  நானும் எழுதி வருகிறேன். சென்றவாரமும் இந்த வாரமும் இதில் வெளியான எனது கவிதைகள் உங்களின் பார்வைக்கு.

குழந்தையின் குரல்: நத்தம். எஸ்.சுரேஷ்பாபு.

By கவிதைமணி  |   Published on : 21st May 2017 10:56 AM  |   அ+அ அ-   |  
குயிலோசையின் இனிமையை கசக்கச் செய்திடும்
குழலோசையின் இசையை மறக்கச் செய்திடும்
தேனின் தித்திப்பை மறக்கடிக்கும்!
தீம்பழத்தின் சுவைதனை கசக்கச் செய்திடும்!

தெவிட்டாத தமிழ் மொழியை பின் தள்ளிடும்!
குடும்பத்தில் குதூகலத்தை குறைவில்லாது அளித்திடும்!
பொங்கி வரும் கோபத்தை பொசுக்கிவிடும்!
தங்கி நிற்கும் அழுக்காறை அகற்றிவிடும்!

கொஞ்சி கொஞ்சி பேசிடும் குழந்தையின்
பிஞ்சு குரல் அழுத்தத்தை அகற்றிவிடும்!
தெள்ளூ தமிழ் பேச்சாளரின்
துள்ளு தமிழ் பேச்சினையும்
பிள்ளைத் தமிழ் முறியடிக்கும்!

தவழ்ந்து வரும் தென்றலாய் வருடி
கமழ்ந்து வரும் கற்பூரமாய் மணமூட்டி
சுமக்கும் சுமையெல்லாம் விரட்டி
சூழ்நிலையை கலகலப்பாக்கும் குழந்தையின் குரல்!

தத்தி தத்தி தவழ்ந்து
திக்கி திக்கிப் பிறழ்ந்து
கொச்சைத் தமிழ் பேசினாலும்
இச்சை ஊட்டும் அல்லவோ குழந்தையின் குரல்!

இவ்வுலகம் இருக்கும் வரை இதைத் தாண்டி
இனிமையில்லை!
 அமுதமான குரல்! ஆசை வைக்கும் குரல்!
இறைவனே சிலிர்க்கும் குரல்
ஈரம் சொட்டும் குரல்!

உவகை அளிக்கும் குரல்
ஊரே மகிழும் குரல்! எல்லோரும் ரசிக்கும் குரல்
ஏங்க வைக்கும் ஒரே குரல்
வையமே மயங்கும் குரல்
ஒருபோதும் மாறாக்குரல் ஒங்கு புகழ் குரல்
ஒளஷதமான குரல்
குழந்தையின் குரல்தானே!
   

  கல்வீச்சு: நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு

  By கவிதைமணி  |   Published on : 29th May 2017 03:42 PM  |   அ+அ அ-   |  
  வன்முறையின் பிறப்பு!
  வழி தவறியனின் ஆயுதம்!
  வீசி எறியும் கல் தன்னையும் தாக்கும் என்று
  யோசித்தறியாதவர்கள் செய்யும் செயல்!
  கல்வீச்சால் இவர்கள் காயப்படுத்துவது 
  எதிரிகளை அல்ல!
  ஒரு பாவமும் அறியா பொதுமக்களை!
  கல்வீச்சில் உடைத்தெறியப்படுவது
  வெறும் கண்ணாடிகள் அல்ல!
  இந்தியாவின் இறையாண்மை!
  பொதுக்கூட்டங்களில் வீசப்படும் கல்வீச்சு!
  சொல்வீச்சை ஏற்க பயப்படும் கோழையின் ஆயுதம்!
  ஒரே ஒரு கல்வீச்சு
  தகப்பனை எதிர்ப்பார்த்திருக்கும் குழந்தையை!
  கணவனை வரவேற்க காத்திருக்கும் மனைவியை!
  குடும்பத்தூணாய் இருக்கும் மகனை நம்பியிருக்கும் தாயை
  எதிர்கால கனவுகளோடு பயணிக்கும் இளைஞனை
  மனைவியோடு திருமணநாள் கொண்டாட இருக்கும் கணவனை
  தாத்தாவின் வருகையை ஆவலோடு 
  எதிர்பார்த்திருந்த பேரப்பிள்ளைகளை!
  இன்னும் எத்தனை எத்தனை அத்தனையையும்
  தகர்த்து எறிந்துவிடுகிறது!
  வீசியவனுக்கு வேண்டுமானால் வெற்று மகிழ்ச்சியைத்
  தந்திருக்கலாம் ஒற்றைக் கல்!
  வீச்சை வாங்கியவன் வலி வெறும் உடல் வலி அல்ல!
  உள்ளம் சார்ந்த மனம் சார்ந்த குடும்பம் சார்ந்த
  கொடும் வலி! கல்வீச்சால் ஏற்பட்ட உடல் ரணம் ஆறும்!
  உள்ளத்தின் ரணம் மேலும் புண்ணாகும்!
  கல்வீச்சு உடைப்பது வெறும் உடமைகளை அல்ல!
  ஒட்டி வரும் உறவுகளை!
  யாரோ ஒருவருக்காக
  யாரோ வீசிய கல்லில் யாரோ அடிபட
  யாரோ பாதிப்பது எவருக்காக?
  கல்வீச்சில் உடைபட்ட பேருந்து கண்ணாடிகளை
  பார்க்கையில் யாரோ ஒரு முகம் தெரியாதவரின்
  அழுகுரல் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது!

  தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

   இந்த வார பாக்யா (ஜூன் 2-8) வில் என் ஜோக்ஸ்கள்!

   இந்த வார பாக்யாவில் என் ஜோக்ஸ்கள்!

   பாக்யா இதழில் தொடர்ந்து எனது படைப்புக்கள் வெளிவந்தது நண்பர்கள் அறிந்ததே! இருப்பினும் மார்ச் மாதம் முதல் ஒரு சிறு தொய்வு ஏற்பட்டு நான் படைப்பு அனுப்ப வில்லை.
      இரண்டு மாதங்களாக எனது படைப்பு வராமல் இருந்தது. சென்ற வாரத்தில் சில ஜோக்ஸ்களை அனுப்பி வைத்தேன். அது இந்த வார பாக்யாவில் பிரசுரம் ஆகி மகிழ்ச்சியை தந்தது.

   தொடர்ந்து எனது படைப்புக்களை வெளியிட்டு வரும் பாக்யா இதழ் நிறுவனத்திற்கு மிக்க நன்றி!
     

   கீழே உங்களின் பார்வைக்கு ஜோக்ஸ்கள்!
   தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

   Sunday, May 21, 2017

   நேற்றைய இந்துவில் எனது பஞ்ச்!

   நேற்றைய இந்துவில் எனது பஞ்ச்!

   இந்து தமிழ் நாளிதழில் பஞ்சோந்தி பராக் என்ற பகுதி வெளியாகிறது. அதில் செய்திகளுக்கு சிறந்த பஞ்ச் நாம் எழுதினால் பிரசுரமாகும். பலமுறை முயன்றும் அதில் இடம்பிடிக்க முடியாமல் இருந்தேன். அதனால் முயற்சியை  கைவிட்டு இருந்தேன்.

   தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுவும். நண்பர் திருமாளம் எஸ். பழனிவேல் அவர்களும் ஊக்கப் படுத்தியமையால் மீண்டும் சில நாட்களாக முயற்சி செய்ய ஆரம்பித்தேன்.
    19ம் தேதி எக்ஸ்ட்ரா பஞ்சிலும் 20 ம் தேதி முகப்பு பஞ்சிலும் எனது பஞ்ச் இடம்பெற்றது.

   நேற்றைய பஞ்ச் பலராலும் பாராட்டப்பட்டது மகிழ்ச்சியை தருகிறது. கீழே உங்களின் பார்வைக்கு அந்த பஞ்ச்கள்
   தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


   Saturday, May 20, 2017

   தினமணி கவிதை மணியில் எனது கவிதைகள்!

   தினமணி கவிதை மணியில் எனது கவிதைகள்!

   தினமணி இணைய தளத்தில் கவிதை மணி என்றொரு பக்கம் ஒதுக்கி கவிதைகள் வெளியிட்டு வருகின்றார்கள்.
   வாரா வாரம் திங்களன்று கவிதைகள் வெளியாகும். ஒரு தலைப்பினை அவர்கள் தருவார்கள். அதற்கு நாம் கவிதை எழுத வேண்டும். வளர்ந்த வளரும் எழுத்தாளர்கள் கவிஞர்கள் பலர் இந்த பக்கத்தில் பயனடைந்து வருகின்றார்கள்.

     கவிதை ஆர்வலர்களுக்கு இந்த பக்கம் மிகவும் உபயோகமாக இருக்கும். இந்த பக்கம் குறித்து நண்பர் உலகநாதன் ஐயா தெரிவித்தார். முதலில் ஆர்வமின்றி இருந்த நான். பின்னர் இப்பக்கத்தில் கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். போன மாதம் ஒரு கவிதையை அந்த பக்கத்தில் வந்தது என்று வெளியிட்டிருந்தேன் நினைவிருக்கலாம். தொடர்ந்து எனது கவிதைகள் அந்த பக்கத்தில் வந்து கொண்டிருக்கிறது. போனவாரம் அதற்கு முந்தைய வாரம் வந்த கவிதைகள் உங்களின் பார்வைக்கு.


   சுமைகளும் சுகங்களும்: நத்தம். எஸ். சுரேஷ்பாபு

   By கவிதைமணி  |   Published on : 15th May 2017 04:19 PM  |   அ+அ அ-   |  
   கருவொன்றை சுமப்பது தாய்க்கு
   சுமையல்ல சுகம்!
   கருவான பிள்ளை தடம் மாறிப்போனால்
   தாய்க்கு சுகமல்ல சுமை!
   பலர் பசி தீர்க்க தாரொன்று சுமப்பது
   வாழைக்கு சுமையல்ல சுகம்.
   கனியிருந்தும் கசந்து நிற்கும் எட்டிக்கு
   பழம் சுகமல்ல சுமை!
   நிழலதனை அளிக்க நெடும் வெயில்
   சுமப்பது விருட்சங்களுக்கு சுமையல்ல சுகம்!
   நெடிது உயர்ந்து நின்றாலும் நிழல் தர 
   மனமில்லா மரங்கள் சுகமல்ல சுமை!
   படிப்பில் ஆர்வமுள்ளவனுக்கு
   பாடங்கள் சுமையல்ல சுகம்!
   படிக்க பிடிக்காத மடையனுக்கு
   பாடங்கள் சுகமல்ல சுமை!
   சேற்றில் இறங்கி நாற்றுக்கள் நடுவது 
   உழவனுக்கு சுமையல்ல சுகம்!
   விவசாயத்தை வெறும் பாடமாய்
   படிப்பவனுக்கு சேற்றில்
   இறங்குவது சுகமல்ல சுமை!
   கானமதை ரசிப்பவனுக்கு
   பறவைகளின் சப்தம் சுமையல்ல சுகம்!
   இசை அறியா மாந்தருக்கு இனிய
   கானம் கூட சுகமல்ல சுமை!

   குடும்பத்தை நேசிப்பவனுக்கு
   சொந்தங்கள் சுமையல்ல சுகம்!
   தனிமைதனை விரும்புபவனுக்கு
   சப்தம் கூட சுகமல்ல சுமை!
   கனவொன்றை சுமப்பது
   லட்சியவாதிக்கு சுமையல்ல சுகம்!
   ஊர் சுற்றி திரிபவனுக்கு உறக்கம் கூட
   சுகமல்ல சுமை!
   வெற்றியைத் தேடிச் செல்பவருக்கு
   ஒவ்வொரு விநாடியும் சுமையல்ல சுகம்!
   வீணர்களுக்கோ விடியும்
   ஒவ்வொரு நாளும் சுகமல்ல சுமை!
   சுமைகளும் சுகங்களும் நம் பண்பில்!
   இதை உணர்ந்தால் உலகம் நம் அன்பில்!

   ஒற்றைச்சிறகோடு! நத்தம். எஸ்.சுரேஷ்பாபு.

   By கவிதைமணி  |   Published on : 08th May 2017 02:31 PM  |   அ+அ அ-   |  
   உயரே பறக்கையில் பறவையொன்று
   உதிர்ந்துச் சென்றது ஒற்றைச்சிறகு!
   உதிர்ந்ததும் வீசிய காற்றில்
   உயரே எழுந்து பறந்தது அந்த ஒற்றைச்சிறகு!
   
   ஒற்றைச்சிறகோடு பயணமானேன்!
   காற்றின் திசையில் பயணமானது ஒற்றைச்சிறகு!
   காற்றின் வேகத்தில் எழுந்து வேகம் குறைகையில் அடங்கி!
   
   மண்ணிலே புரண்டு கல்லிலே விழுந்து
   கால்களில் மிதிபட்டு மரக்கிளைகளில் சிக்குண்டு
   காற்றிழுத்த வேகத்தில் பயணித்த ஒற்றைச்சிறகு
   ஒன்றை உணர்த்திச் சென்றது!
   
   பறவையின் சிறகுகளில் ஒன்றாய் இருந்தபோது
   காற்றைக் கிழித்து பறவையை உயரப் பறக்கச் செய்தது.
   சிறகுகளை விட்டு பிரிந்து ஒற்றைச் சிறகாய் உதிர்கையில்
   காற்றின் வேகத்திற்கு கட்டுப்பட்டு கிழிந்து போனது!
   கூடி வாழ்ந்தால் கோடி நன்மை!
   தேடி வந்து உணர்த்திச் சென்றது ஒற்றைச்சிறகு!
   

   கீழே அதே தலைப்பிற்கு எனது மகள் பெயரில் எழுதிய கவிதை!

   ஒற்றைச்சிறகோடு:  எஸ். வேத ஜனனி

   By கவிதைமணி  |   Published on : 08th May 2017 02:30 PM  |   அ+அ அ-   |  
   மாலைநேரத்து சூரியன்
   வேலை முடித்து கிளம்புகையில்
   வேப்பமர நிழலில் படுத்துறங்கியவன் முகத்தில்மேல்
   வந்து உதிர்ந்தது ஒற்றைச் சிறகு!
   
   இதமான வருடலில் விழித்தெழுந்தவன் கேட்டான்.
   ஒற்றைச்சிறகாய் உதிர்ந்துவிட்டாயே! வருத்தமில்லையா?
   பறவையின் உடலோடு ஒட்டியிருக்கையில் அது
   பறக்க உதவினேன். வளர்சிதை மாற்றத்தில் உதிர்ந்தேன்!
   
   வருத்தம் எதற்கு மனிதா?
   உன்னுள்ளே ஒட்டியிருக்கும் சிலவற்றையும்
   ஒற்றைச் சிறகாய் நீயும் உதிர்த்துவிடு!
   உள்ளத்தே எழும் பேராசைகள்!
   பள்ளத்தே தள்ளும் பொறாமைகள்!
   
   உயர்வுக்கு தடைபோடும் சோம்பல்கள்!
   வெற்றிக்கு விடைகொடுக்கும் தயக்கம்
   தோல்விக்கு வழிகொடுக்கும் அச்சம்.
   இன்னும் எத்தனை எத்தனை கேடுகள்!
   
   அத்தனையும் ஒவ்வொன்றாய் உதிர்த்துவிடு!
   உதிர உதிர நீ உயர்ந்திடுவாய்!
   காற்றோடு பயணிக்கும் முன் கனிவோடு
   உணர்த்திச்சென்றது ஒற்றைச்சிறகு!
    இணைய இணைப்பு ஜியோ பயன்படுத்துகிறேன்!
   அது மிகவும் ஸ்லோவாக இருப்பதால் முன்பு போல இணையம் வர முடிவதில்லை!
   கூடிய விரைவில் முன்பு போல படைப்புக்கள் எழுத முயல்கிறேன்!
   தங்களின்வருகைக்கும் கருத்துரைகளுக்கும் மிக்க நன்றி!

    Related Posts Plugin for WordPress, Blogger...