Sunday, May 21, 2017

நேற்றைய இந்துவில் எனது பஞ்ச்!

நேற்றைய இந்துவில் எனது பஞ்ச்!

இந்து தமிழ் நாளிதழில் பஞ்சோந்தி பராக் என்ற பகுதி வெளியாகிறது. அதில் செய்திகளுக்கு சிறந்த பஞ்ச் நாம் எழுதினால் பிரசுரமாகும். பலமுறை முயன்றும் அதில் இடம்பிடிக்க முடியாமல் இருந்தேன். அதனால் முயற்சியை  கைவிட்டு இருந்தேன்.

தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுவும். நண்பர் திருமாளம் எஸ். பழனிவேல் அவர்களும் ஊக்கப் படுத்தியமையால் மீண்டும் சில நாட்களாக முயற்சி செய்ய ஆரம்பித்தேன்.
 19ம் தேதி எக்ஸ்ட்ரா பஞ்சிலும் 20 ம் தேதி முகப்பு பஞ்சிலும் எனது பஞ்ச் இடம்பெற்றது.

நேற்றைய பஞ்ச் பலராலும் பாராட்டப்பட்டது மகிழ்ச்சியை தருகிறது. கீழே உங்களின் பார்வைக்கு அந்த பஞ்ச்கள்
தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Saturday, May 20, 2017

தினமணி கவிதை மணியில் எனது கவிதைகள்!

தினமணி கவிதை மணியில் எனது கவிதைகள்!

தினமணி இணைய தளத்தில் கவிதை மணி என்றொரு பக்கம் ஒதுக்கி கவிதைகள் வெளியிட்டு வருகின்றார்கள்.
வாரா வாரம் திங்களன்று கவிதைகள் வெளியாகும். ஒரு தலைப்பினை அவர்கள் தருவார்கள். அதற்கு நாம் கவிதை எழுத வேண்டும். வளர்ந்த வளரும் எழுத்தாளர்கள் கவிஞர்கள் பலர் இந்த பக்கத்தில் பயனடைந்து வருகின்றார்கள்.

  கவிதை ஆர்வலர்களுக்கு இந்த பக்கம் மிகவும் உபயோகமாக இருக்கும். இந்த பக்கம் குறித்து நண்பர் உலகநாதன் ஐயா தெரிவித்தார். முதலில் ஆர்வமின்றி இருந்த நான். பின்னர் இப்பக்கத்தில் கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். போன மாதம் ஒரு கவிதையை அந்த பக்கத்தில் வந்தது என்று வெளியிட்டிருந்தேன் நினைவிருக்கலாம். தொடர்ந்து எனது கவிதைகள் அந்த பக்கத்தில் வந்து கொண்டிருக்கிறது. போனவாரம் அதற்கு முந்தைய வாரம் வந்த கவிதைகள் உங்களின் பார்வைக்கு.


சுமைகளும் சுகங்களும்: நத்தம். எஸ். சுரேஷ்பாபு

By கவிதைமணி  |   Published on : 15th May 2017 04:19 PM  |   அ+அ அ-   |  
கருவொன்றை சுமப்பது தாய்க்கு
சுமையல்ல சுகம்!
கருவான பிள்ளை தடம் மாறிப்போனால்
தாய்க்கு சுகமல்ல சுமை!
பலர் பசி தீர்க்க தாரொன்று சுமப்பது
வாழைக்கு சுமையல்ல சுகம்.
கனியிருந்தும் கசந்து நிற்கும் எட்டிக்கு
பழம் சுகமல்ல சுமை!
நிழலதனை அளிக்க நெடும் வெயில்
சுமப்பது விருட்சங்களுக்கு சுமையல்ல சுகம்!
நெடிது உயர்ந்து நின்றாலும் நிழல் தர 
மனமில்லா மரங்கள் சுகமல்ல சுமை!
படிப்பில் ஆர்வமுள்ளவனுக்கு
பாடங்கள் சுமையல்ல சுகம்!
படிக்க பிடிக்காத மடையனுக்கு
பாடங்கள் சுகமல்ல சுமை!
சேற்றில் இறங்கி நாற்றுக்கள் நடுவது 
உழவனுக்கு சுமையல்ல சுகம்!
விவசாயத்தை வெறும் பாடமாய்
படிப்பவனுக்கு சேற்றில்
இறங்குவது சுகமல்ல சுமை!
கானமதை ரசிப்பவனுக்கு
பறவைகளின் சப்தம் சுமையல்ல சுகம்!
இசை அறியா மாந்தருக்கு இனிய
கானம் கூட சுகமல்ல சுமை!

குடும்பத்தை நேசிப்பவனுக்கு
சொந்தங்கள் சுமையல்ல சுகம்!
தனிமைதனை விரும்புபவனுக்கு
சப்தம் கூட சுகமல்ல சுமை!
கனவொன்றை சுமப்பது
லட்சியவாதிக்கு சுமையல்ல சுகம்!
ஊர் சுற்றி திரிபவனுக்கு உறக்கம் கூட
சுகமல்ல சுமை!
வெற்றியைத் தேடிச் செல்பவருக்கு
ஒவ்வொரு விநாடியும் சுமையல்ல சுகம்!
வீணர்களுக்கோ விடியும்
ஒவ்வொரு நாளும் சுகமல்ல சுமை!
சுமைகளும் சுகங்களும் நம் பண்பில்!
இதை உணர்ந்தால் உலகம் நம் அன்பில்!

ஒற்றைச்சிறகோடு! நத்தம். எஸ்.சுரேஷ்பாபு.

By கவிதைமணி  |   Published on : 08th May 2017 02:31 PM  |   அ+அ அ-   |  
உயரே பறக்கையில் பறவையொன்று
உதிர்ந்துச் சென்றது ஒற்றைச்சிறகு!
உதிர்ந்ததும் வீசிய காற்றில்
உயரே எழுந்து பறந்தது அந்த ஒற்றைச்சிறகு!

ஒற்றைச்சிறகோடு பயணமானேன்!
காற்றின் திசையில் பயணமானது ஒற்றைச்சிறகு!
காற்றின் வேகத்தில் எழுந்து வேகம் குறைகையில் அடங்கி!

மண்ணிலே புரண்டு கல்லிலே விழுந்து
கால்களில் மிதிபட்டு மரக்கிளைகளில் சிக்குண்டு
காற்றிழுத்த வேகத்தில் பயணித்த ஒற்றைச்சிறகு
ஒன்றை உணர்த்திச் சென்றது!

பறவையின் சிறகுகளில் ஒன்றாய் இருந்தபோது
காற்றைக் கிழித்து பறவையை உயரப் பறக்கச் செய்தது.
சிறகுகளை விட்டு பிரிந்து ஒற்றைச் சிறகாய் உதிர்கையில்
காற்றின் வேகத்திற்கு கட்டுப்பட்டு கிழிந்து போனது!
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை!
தேடி வந்து உணர்த்திச் சென்றது ஒற்றைச்சிறகு!

கீழே அதே தலைப்பிற்கு எனது மகள் பெயரில் எழுதிய கவிதை!

ஒற்றைச்சிறகோடு:  எஸ். வேத ஜனனி

By கவிதைமணி  |   Published on : 08th May 2017 02:30 PM  |   அ+அ அ-   |  
மாலைநேரத்து சூரியன்
வேலை முடித்து கிளம்புகையில்
வேப்பமர நிழலில் படுத்துறங்கியவன் முகத்தில்மேல்
வந்து உதிர்ந்தது ஒற்றைச் சிறகு!

இதமான வருடலில் விழித்தெழுந்தவன் கேட்டான்.
ஒற்றைச்சிறகாய் உதிர்ந்துவிட்டாயே! வருத்தமில்லையா?
பறவையின் உடலோடு ஒட்டியிருக்கையில் அது
பறக்க உதவினேன். வளர்சிதை மாற்றத்தில் உதிர்ந்தேன்!

வருத்தம் எதற்கு மனிதா?
உன்னுள்ளே ஒட்டியிருக்கும் சிலவற்றையும்
ஒற்றைச் சிறகாய் நீயும் உதிர்த்துவிடு!
உள்ளத்தே எழும் பேராசைகள்!
பள்ளத்தே தள்ளும் பொறாமைகள்!

உயர்வுக்கு தடைபோடும் சோம்பல்கள்!
வெற்றிக்கு விடைகொடுக்கும் தயக்கம்
தோல்விக்கு வழிகொடுக்கும் அச்சம்.
இன்னும் எத்தனை எத்தனை கேடுகள்!

அத்தனையும் ஒவ்வொன்றாய் உதிர்த்துவிடு!
உதிர உதிர நீ உயர்ந்திடுவாய்!
காற்றோடு பயணிக்கும் முன் கனிவோடு
உணர்த்திச்சென்றது ஒற்றைச்சிறகு!
 இணைய இணைப்பு ஜியோ பயன்படுத்துகிறேன்!
அது மிகவும் ஸ்லோவாக இருப்பதால் முன்பு போல இணையம் வர முடிவதில்லை!
கூடிய விரைவில் முன்பு போல படைப்புக்கள் எழுத முயல்கிறேன்!
தங்களின்வருகைக்கும் கருத்துரைகளுக்கும் மிக்க நன்றி!

  Friday, April 28, 2017

  இந்த வார விகடனில் எனது ஜோக்!

  இந்த வார விகடனில் எனது ஜோக்!

  இரண்டு மாதங்களுக்கு மேல் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்ததோடு இணைய இணைப்பும் சரிவர இல்லை. போன் மூலம் இணையம் இணைப்பது  சரிவர இல்லை! அதனால் வலைப்பூ பக்கம் வர முடியவில்லை! ஓய்வெடுக்கும் சமயத்தில் பத்திரிக்கைகளுக்கு படைப்புக்கள் அனுப்புவது உண்டு.
    தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுமத்தில் இருப்பதால் நண்பர்களின் படைப்புக்கள் வெளிவருகையில் வாழ்த்துவதும் அவர்கள் நம்மை எழுதத் தூண்டுவதும் சகஜமாகிவிட்டது. மிக அருமையான வாட்சப் குருப் அது. நண்பர் புது வண்டி ரவீந்திரன் அவர்கள் அறிமுகம் செய்து இணைத்து விட்டார்.
    அந்த குருப்பில் இணைந்தபிறகுதான் நிறைய எழுத வேண்டும் என்ற ஆவலே தோன்றியது. நண்பர்கள் ஒருவருக்கொருவர் ஆலோசனைகள் திருத்தங்கள் கூறி சக எழுத்தாளர்களை ஊக்குவிக்கிறார்கள் என்றால் அது பெருமையான விஷயம். பொறாமைப்படாமல் அவனுடையது வருகிறது எனது வரவில்லையே என்று யாரும் வேதனைப்படுவது கிடையாது. நிறைய பேரை ஊக்குவித்து மீண்டும் எழுதத் தூண்டியுள்ள அருமையான குருப் தமிழக எழுத்தாளர்கள் வாட்சப் குழுமம்.
    இந்த குழுவில் நண்பர் கிருஷ்ண குமார் ஒரு முறை அலை பேசி உரையாடலில் விகடனுக்கு எழுதுவது குறித்து சில ஆலோசனைகள் சொன்னார். அதை பின்பற்றினேன். போன வாரம் ஒரு ஜோக்கும் இந்த வாரம் ஒரு ஜோக்கும் ஆனந்தவிகடனில் வெளிவந்தது. இதில் ஓர் வருத்தம் என்னவென்றால் இந்த வார ஜோக் சென்னை பதிப்பில் வெளிவரவில்லை. மற்ற மாவட்டங்களில் வெளிவந்துள்ளது.
  இரண்டும் உங்களின் பார்வைக்கு கீழே தந்துள்ளேன்.  தொடர்ந்து இரண்டுவாரங்கள் விகடனில் ஜோக் வருவது இதுவே எனக்கு முதல் முறை. விகடன் குழுமத்தினருக்கும் தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுமத்தினருக்கும். நண்பர் கிருஷ்ண குமார், ஏந்தல் இளங்கோ, புதுவண்டி ரவீந்திரன் சார்களுக்கும் மிகவும் நன்றி.
  தொடர்ந்து எனது பதிவுகளை வாசித்து வரும் வலைப்பூ நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி.


  Monday, April 3, 2017

  தினமணி கவிதை மணியில் என் கவிதை

  இன்றைய தினமணி கவிதைமணியில்
  என்னுடைய கவிதைகள் இரண்டு
  பிரசுரம் ஆகியுள்ளது அதில் ஒன்று என் மகள் பெயரில் எழுதியது  உடல் நலக்குறைவால் இத்தனை நாள் தளிர் மலரவில்லை இனி தொடர்ந்து மலரும். விசாரித்த நண்பர்களுக்கு நன்றி
  பச்சை நிலம்: நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு

  By கவிதைமணி  |   Published on : 03rd April 2017 03:46 PM  |   அ+அ அ-   |

  கண்ணுக்கு குளுமை தரும் பச்சை நிலம்!
  காண்போரை இச்சை கொள்ளச்செய்யும் பச்சை நிலம்!
  வயலெல்லாம் நாற்றுக்களாய் வளைந்தாடி
  வளர்ந்து நின்று உழவனை ஊக்குவிக்கும் பச்சை நிலம்!

  தீயாய் சுட்டெரிக்கும் கத்திரி தணலினிலே
  தென்றலாய் உடல்வருடும் ஓங்கி வளரும் பச்சை நிலம்!
  வற்றாத நதிகள் எப்போதும் பாய்ந்தோட
  வளர்ந்து அசைந்தாலும் புவியெங்கும் பச்சை நிலம்!

  குன்றாத மழை தப்பாமல் பொழிந்திட்டால்
  நன்றாக செழித்து வளர்ந்திடும் தரணியெங்கும் பச்சைநிலம்!
  பசுமை போர்த்தி அழகு சேர்க்கும் சாலையோர மரங்கள்
  குன்றின் மீது போர்வையாக வளர்ந்து அழகூட்டும் மரங்கள்!

  வீடு தோறும் வீதி தோறும் மரங்கள் வளர்த்திட
  கண்கள் காணும் காட்சியெல்லாம் பச்சை நிலம்!
  இயற்கை வண்ணம் பூசி செயற்கை சிறிதும் இன்றி
  பிறக்கும் குழந்தை பச்சை நிலம்!

  இச்சை கொண்டு எல்லோரும்
  பச்சை பேண முனைந்திடின்
  பாரெங்கும்  காணக்கிடைக்கும்
  பசுமை கொஞ்சும் பச்சைநிலம்!

  Wednesday, February 1, 2017

  நினைவில் நிற்கும் நெய்க்குள தரிசனம்!

  நினைவில் நிற்கும் நெய்க்குள தரிசனம்!  வழிபாடு எத்தனையோ விதம்! நம்மை படைத்து ஆட்டுவிக்கும் இறைவனுக்கு விதவிதமாய் அபிஷேகங்கள் அலங்காரங்கள் செய்து நிவேதனங்கள் படைத்து ஆராதித்து மகிழ்வது தமிழர் பண்பாடு.
      விதவிதமான மலர்கள், பட்டாடைகள், காய் கனிகள் என்று வகைவகையாக அலங்காரங்கள் செய்வதுண்டு. அதே போல படையலும் விதவிதமான அன்னங்களுடனும் பட்சணங்கள் பழங்களுடன் படைப்பது உண்டு.
       அதில் வித்தியாசமான ஒன்றுதான்! படைக்கும் படையலில் ஆண்டவன் பிம்பத்தை காண்பது. சர்க்கரை பொங்கலை குளமாக்கி அதனுள் நெய்யை உருக்கி விட்டு அதில் சுவாமியின் பிம்பத்தை கண்டு வழிபடுவது ஓர் மரபு.
      இதை அன்னப்பாவாடை, மஹா நைவேத்தியம், பள்ளயம், என்று பலவாறாக சொல்லுவர். பெயர் வேறு வேறாக இருந்தாலும் செயல் ஒன்றுதான். ஆண்டவன் தரிசனமும் அவனது கருணையும் பெறுவதுதான் நோக்கம்.
          அன்னம் விஷேசமான ஒன்று. எத்தனைதான் பொருளும் பணமும் கொடுத்தாலும் மனம் நிறையாது. அன்னத்தை தானம் அளிக்கும் போது மனசு மட்டுமல்ல வயிறும் நிறைகிறது. அரிசி லிங்க வடிவில் அமைந்துள்ளது. அதை சமைத்து இறைவனுக்கு படைத்து உண்ணும் போது சாதம் பிரசாதம் என்ற பெயர் பெறுகின்றது.
      நம்மையும் உலகையும் படைத்து காக்கும் இறைவனுக்கு நாம் செய்யும் ஒரு சிறு நன்றியே படையல்! இறைவன் என்று சொல்லும் போது சிவனும் சக்தியும் சேர்ந்தே நினைவுக்கு வரும். உமையொரு பாகனான இறைவனை சேர்த்தே வழிபடுவது சிறப்பு.
       அம்பிகைக்கு மிகவும் பிடித்த அன்னம் சர்க்கரை பொங்கல். குடான்ன ப்ரீத மானசாய நம : என்று ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமாவில் வருகின்றது. அத்தகைய சர்க்கரை பொங்கலில் நெய்யை உருக்கிவிட்டு குளம் செய்து அதில் அம்பிகையின் உருவை காணும் போது மெய் உருகி நிற்போம்!
      இத்தகைய நெய்க்குள தரிசனம் தமிழகத்தில் திருமீயச்சூர் ஸ்ரீ லலிதாம்பிகை ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறுகிறது.
      வட தமிழகத்தில் பொன்னேரி அருகே அமைந்துள்ள ஸ்ரீ காரிய சித்தி கணபதி, ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பிகை சமேத ஸ்ரீ வாலீஸ்வரர் ஆலயத்தில்       2-1-2017அன்று கும்பாபிஷேக  ஐந்தாவது வருட நிறைவையோட்டி காலையில் நவகலச பூஜை, விஷேச திரவிய ஹோமம், விஷேச திரவிய அபிஷேகம், பூர்ணாஹுதி நடைபெற்று கலச அபிஷேகம் நடைபெறும்.
       அன்று மாலை ஆறு மணி அளவில், ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பிகைக்கு சிறப்பு அலங்காரம் செய்விக்கப்பட்டு அன்னப்பாவாடை எனப்படும் மஹா நைவேத்தியம் படைக்கப்படும்.
     இதில் சர்க்கரை பொங்கல், புளியோதரை, தயிரன்னம், வடை, பாயசம், பலவகை கனிகள், பட்சணங்கள், இளநீர், பானகம் போன்றவை படைக்கப்படும்.
      சர்க்கரை பொங்கலில் நெய்க்குளம் செய்து நெய் உருக்கி விடப்பட்டு அதில் அம்மனின் பிம்பம் தோன்றும்.
       நெய்க்குளத்தில் அம்மனின் தரிசனம் காண்பது ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமாவளி பாராயணம் செய்த பலனை நல்கும். இந்த நெய்க்குளத்தில் அம்மனை சர்வலங்கார பூஷிதையாக காணுகையில் நம் மெய் சிலிர்க்கும்.
        ஆண்டுக்கு ஒரு முறையே இத்தகைய காட்சியை காண முடியும். இதனால் ஆலய சுற்றுவட்டார கிராம மக்களும் பக்தர்களும் திரளாக வந்திருந்து இந்த காட்சியை கண்டு அம்பிகையை வழிபட்டு மகிழ்வர்.

     இந்த ஆலயம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையானது. பரிகாரஸ்தலம், திருமணத்தடை, ராகு-கேது- சர்ப்ப தோஷ நிவர்த்தி ஸ்தலமாகும். வல்லபை சித்தர், சுந்தரானந்தர், கடப்பை சச்சிதானந்த சித்தர் முதலிய சித்தர்கள், ரிஷிகள் வழிபட்ட தலமாகும். ராஜராஜ சோழன் காலத்துக்கு முந்தைய ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட சிவாலயம் இது.


    சென்னை- கும்முடிபூண்டி மார்க்கத்தில் பஞ்செட்டி பேருந்து நிலையத்தில் இருந்து மேற்கே செல்லும் சாலையில் மூன்று கிலோமீட்டர் தொலைவில் ஆலயம் அமைந்துள்ளது. பேருந்து ஆட்டோ வசதிகள் இல்லை!
        ஆலயம் காலை 7. மணி முதல் 12 மணிவரை மாலையில் 5 மணி முதல் 7 மணி வரையிலும் திறந்து இருக்கும்.
  ஆலய தொடர்பு எண்: சாமிநாத குருக்கள்: 9444497425, சுரேஷ்பாபு குருக்கள் 9444091441

  சிறப்பான இந்த நினைவில் நிற்கும் நெய்க்குள தரிசனத்தை கண்டு ஸ்ரீ ஆனந்த வல்லி அம்பிகையின் அருளினை பெற்றுய்யுவோமாக!


  தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

  இந்த வார பாக்யா பிப்ரவரி 3-9 இதழில் எனது ஜோக்ஸ்!

  இந்த வார பாக்யா பிப்ரவரி 3-9 இதழில் எனது ஜோக்ஸ்!

  இந்த வார பாக்யா இதழிலும் என்னுடைய ஜோக்ஸ்கள்   இடம் பெற்றுள்ளது. வாராவாரம் பாக்யா என்னை ஏமாற்றாமல் என் ஜோக்ஸ்கள் இடம்பெற்று வருவதில் எனக்கு மகிழ்ச்சியே!

    இந்த வாய்ப்பினை நல்கிய பாக்யா ஆசிரியர் குழுவினருக்கும், எஸ்.எஸ்.பூங்கதிர் சாருக்கும் மற்றும் தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுவின் நண்பர்களுக்கும் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது நன்றிகள்!

  இதோ நீங்கள் படித்து மகிழ என்னுடைய பாக்யா ஜோக்ஸ்!

  தங்கள் வருகைக்கு நன்றி! ஜோக்ஸ்களை படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

  Saturday, January 28, 2017

  இந்த வார ஆனந்தவிகடனில் எனது ஜோக்! 1-2-2017

  இந்த வார ஆனந்தவிகடனில் எனது ஜோக்! 1-2-2017

  சென்ற ஆண்டில் இரண்டு முறை விகடனில் இடம் பிடிக்க முடிந்தது. இந்த ஆண்டில் முதல் முறையாக என்னுடைய ஜோக் இந்த வார விகடனில் இடம்பெற்று மகிழ்ச்சியை உண்டாக்கியது. இரண்டு வருடங்களாக எண்ணற்ற ஜோக்ஸ்களை அனுப்பி தளராத நம்பிக்கையுடன் போராட்ட குணத்துடன் எழுதி வந்ததற்கு கிடைத்த பரிசாக இதை கருதுகிறேன். 

     விகடனில் ஜோக்ஸ் வந்ததை உடனே பதிவிட்டு தெரியப்படுத்திய தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுமம், பதிவிட்ட பொன் ராஜபாண்டி அண்ணாச்சி, வாழ்த்துக்கள் வழங்கிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி!

  என்னுடைய ஜோக்கினை பதிவிட்ட விகடன் குழுமத்தினருக்கும் விகடன் ஆசிரியர் குழுவினருக்கும் நான் ஜோக்ஸ் எழுத உறுதுணையாக இருக்கும் என்னுடைய குடும்பத்தினருக்கும் என்னுடைய நன்றிகளை உரித்தாக்குகிறேன்!

  என் வளர்ச்சியில் உறுதுணையாக தொடர்ந்து ஆதரவளித்து வரும் வலைப்பூ நண்பர்கள்  என்னை பத்திரிக்கைகளில் எழுதுமாறு சொன்ன மதுரைத் தமிழன், தில்லையகம் கீதா,உள்ளிட்ட நண்பர்களுக்கு இந்த வெற்றியை காணிக்கை ஆக்குகிறேன்!

  கீழே ஜோக்!

  தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

  சூரியன் பெற்றசாபமும் சந்திரன் பெற்ற வரமும்! பாப்பா மலர்!

  சூரியன் பெற்றசாபமும் சந்திரன் பெற்ற வரமும்! பாப்பா மலர்!


  வானத்துல ரொம்ப தொலைவுல உள்ள ஒரு நட்சத்திர குடும்பத்துல சூரியன், சந்திரம், காற்று ஆகிய மூவரும் பிறந்து வளர்ந்து வந்தார்கள். அப்போ அவங்க ஊருல ஒரு வீட்டுல விருந்து நடந்தது.
     அந்த விருந்துக்கு போக மூன்று பேரும் ஆசைப்பட்டாங்க! உடனே மூணு பேரும் தங்களோட அம்மாக்கிட்ட வந்து அம்மா!   “அம்மா!  பக்கத்து ஊரில எங்க நண்பன்வீட்டுல பெரிய விருந்து வைக்கறாங்களாம்! வடை பாயாசம்,லட்டு, அதிரசம்னு இனிப்பெல்லாம் நிறைய விருந்துல உண்டாம். எங்களோட நண்பன் கூப்பிடறான். நாங்க போயிட்டு வரட்டுமா?”ன்னு கேட்டாங்க.
      “அப்படியா பசங்களே! நண்பன் வீட்டு விருந்துன்னு சொல்றீங்க! போகாட்டி நல்லா இருக்காது! போயிட்டு பத்திரமா திரும்பி வந்துருங்க”ன்னு மூணு பேரையும் வழி அனுப்பிச்சு வச்சாங்க அம்மா!
    இந்த மூணு பேரும் விருந்துக்கு போனாங்க! அங்க தடபுடலா விருந்து நடந்துகிட்டு இருந்துச்சு. இவங்களை பார்த்த உடனேயே அவங்க நண்பன் வாசல்லேயே வந்து வரவேத்து கூட்டிட்டுப் போனான்.  “வாங்க!வாங்க! நீங்க வந்ததுல எனக்கு ரொம்ப மகிழ்ச்சி!” அப்படின்னு சொல்லி சாப்பாட்டு ஹாலுக்கு கூட்டிட்டு போயி விருந்து பறிமாறினான்.
        விதவிதமான பலகாரங்கள், இனிப்பு வகைகள், காரவகைகள், குளிர்பானங்கள் விருந்து அட்டகாசமா இருந்துச்சு. மூணு பேரும்  ஆசையோட விருந்து சாப்பிட்டாங்க. வீட்டில அம்மா இருக்காங்களே அவங்களுக்கு ஏதாவது கேட்டு வாங்கி போய் கொடுப்போம்னு சூரியனுக்கும் காத்துக்கும் தோணவே இல்லை! வயிறு முட்ட சாப்பிட்டு கிளம்பினாங்க! சந்திரன் மட்டும் தயங்கி தயங்கி சாப்பிடவே அவனோட நண்பன்   “என்னப்பா எதுக்கு தயங்கறே?  வெக்கப்படாமே சாப்பிடுன்னு” சொன்னான். அப்போ சந்திரன், “ நண்பா! வீட்டில தினம் தினம் எங்க அம்மாதான் வேளா வேளைக்கு ருசியா சமைச்சுப் போடுவாங்க! எங்களோடவே உக்காந்து சாப்பிடுவாங்க! அவங்களை விட்டுட்டு சாப்பிடறது மனசுக்கு கஷ்டமா இருக்கு! இத்தனை பலகாரங்கள் இருந்தாலும் சாப்பாடே உள்ள இறங்க மாட்டேங்குது!” அப்படின்னான்.
      “அப்படியா! இதுக்கு ஏன் கவலைப்படறே! நீ தயங்காம சாப்பிடு! உங்கம்மாவுக்கு தேவையானதை நான்  ஒரு துணியில பத்திரமா மூட்டை கட்டிக் கொடுக்கறேன்”னு அவனோட நண்பன் சொல்லி அதே மாதிரி  மூட்டைக்கட்டி கொடுத்த பிறகுதான் சந்திரனுக்கு சோறே உள்ளே இறங்குச்சு. விருந்து நல்லபடியா முடிஞ்சதும் மூணு பேரும் வீட்டுக்கு கிளம்பினாங்க! நண்பனும் வழி அனுப்பி வைச்சான்.
     இவங்களோட அம்மா! ஆவலோட வீட்டு வாசல்லேயே காத்துட்டு இருந்தாங்க!  “என்னப்பா! விருந்து நல்லபடியா முடிஞ்சுதா? என்னென்ன பலகாரங்கள் போட்டாங்க?” அப்படின்னு விசாரிச்சாங்க. மூவரும், நல்லபடியா முடிஞ்சுதும்மா!  “விதவிதமான பலகாரங்கள்! சுவையோ அருமை! ரசிச்சு ருசிச்சு சாப்பிட்டோம்”னு சூரியன் சொன்னான்.
      “அப்படியா! நீ ரசிச்சு சாப்பிட்டே சரி! உன் அம்மாவுக்கு என்ன கொண்டு வந்தே?”ன்னு கேட்டாங்க அம்மா.
      “அம்மா! விருந்துக்கு நீ வந்தா சாப்பிட்டிருக்கலாம்! அங்க இலையிலே போட்டதை எப்படி எடுத்து வரமுடியும்? நாங்க சாப்பிட மட்டும்தான் முடியும் எதுவும் நான் கொண்டுவரலை”ன்னு சொல்லிட்டான் சூரியன்.
      “சரிப்பா! நீயாவது ஏதாவது கொண்டுவந்தியா?” அப்படின்னு காற்றுக்கிட்டே கேட்டாங்க அம்மா.
      “இல்லேம்மா! பலகாரங்களை பார்த்ததும் பசி அதிகமாயிருச்சு! உங்க நினைவே வரலை! நீங்க வந்திருந்தா சாப்பிட்டு இருக்கலாம்! நான் ஒண்ணும் கொண்டுவரலைம்மா!” என்றான் காற்று.
      அதைக்கேட்டு மனம் நொந்து போன அம்மா,  “நீ என்னப்பா!” என்று சந்திரனை கேட்கவே,  “அம்மா! பலகாரங்களை பார்த்த உடனே உன் நினைவுதான் எனக்கு வந்தது. என் நண்பன் கிட்டே சொல்லி உனக்கு தனியா  சாப்பாடு பலகாரங்கள் மூட்டைக்கட்டி வாங்கி வந்து இருக்கேன்” என்று ஒரு பையில் தாய்க்கு எடுத்து வந்த உணவை எடுத்து இலை போட்டு பறிமானினான்.

     இதைப் பார்த்ததும் அந்த அம்மாவுக்கு மகிழ்ச்சி தாளவில்லை! அதே சமயம் மற்ற இரண்டு மக்களையும் பார்த்து கோபத்துடன்,  ‘உல்லாசமாக சென்று விருந்தை பார்த்ததும் உங்களுக்கு தாயின் நினைவே வரவில்லையே? சூரியா! நீ தன்னலத்தோடு நடந்து கொண்டதால் இன்று முதல் உன் ஒளி எல்லாம் நெருப்பை போல் வெப்பம் உடையதாகவும், எதையும் சுட்டெரிக்கும் தன்மை உடையதாகவும் ஆகக் கடவாய்! உன் தகிப்பு தாங்காமல் அவரவர் நிழல் கண்ட இடத்திற்கு ஓடுவார்கள். தங்கள் தலையை மறைத்துக் கொள்வார்கள். உன்னை திட்டித் தீர்ப்பார்கள்.” என்று சாபம் இட்டாள்.
     இந்த சாபத்தினால்தான் சூரியன் இப்போதும் கொடிய வெப்பம் உடையவனாக இருக்கிறான். புல் பூண்டுகளை சுட்டெரித்து கருகச்செய்கிறான். கோடைக்காலத்தில் சூரியனை மக்கள் திட்டி தீர்க்கிறார்கள். அதற்கடுத்து, காற்றை நோக்கிய அந்த தாய்,  “எரியும் தீக்கு துணை போகும் காற்றே! ருசியான விருந்து கிடைத்ததும் தாயை மறந்து விட்டாய் அல்லவா? அதனால் அக்னி நட்சத்திர காலத்தில் வெயில் சுட்டெரிக்கும் வேளையில் நீ அனல் காற்றாக மாறி மக்களிடம் அவப்பெயர் பெறக் கடவது!” என்று சபித்தாள். அது போலவே இன்றும் அனல் காற்று வீசுகிறது. மக்கள் சபிக்கிறார்கள்.
     கடைசியாக சந்திரனை பார்த்து,  “குழந்தாய்! விருந்தை கண்டதும் மகிழ்ந்து என்னை மறக்காமல் நீ சாப்பிட்டதை எல்லாம் எனக்காகவும் மூட்டை கட்டி வாங்கி வந்து எனக்கு தந்து உபசரித்தாய். இதனால் என் வயிறு குளிர்ந்தது. இது போலவே நீயும் எப்போதும் குளிர்ச்சியாக விளங்குவாய்! மக்கள் உன்னை புகழ்ந்து கவிபாடுவார்கள். நிலாச்சோறு உண்பார்கள். உன்னை ரசித்து மகிழ்வார்கள்.” என்று வரம் தந்தாள்.
     அன்னை அன்போடு தந்த வரத்தினால் இன்றும் நிலா குளிர்ச்சியுடன் காட்சி தந்து அனைவரும் ரசிக்கும் படி இருக்கிறது. அனைவரும் ரசித்து மகிழ்கிறார்கள்.

  (நாடோடிக் கதைகளில் இருந்து தழுவல்)

  (மீள்பதிவு)

  தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்!

  Monday, January 23, 2017

  இந்த வார பாக்யாவில் என் ஜோக்ஸ் பத்து!

  இந்த வார பாக்யா ஜனவரி 27- பிப்3 இதழில் என் பத்து ஜோக்ஸ்கள்!

  இந்த வாரமும் நான் எதிர்பார்த்தது போலவே பாக்யாவில் என் ஜோக்ஸ்கள் இடம்பெற்றன.  இரண்டாம் முறையாக என்னுடைய பத்து ஜோக்ஸ்கள் இடம் பெற்றது கூடுதல் மகிழ்ச்சி!

     பாக்யா ஆசிரியர் குழுவினர், தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுமம், குடும்பத்தினர்கள், வலைப்பூ நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.

  ஜோக்ஸ்கள் உங்கள் பார்வைக்கும் கருத்துக்கும் கீழே காத்திருக்கின்றன!


  தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

  நியதியும் வசதியும்!  இப்படித்தான் வாழ வேண்டும்
  என்று ஒரு கட்டுக்குள்
  கட்டுக்கோப்பாய் வாழ்வது நியதி!
  எப்படியும் வாழ்வேன்!
  என்று கட்டுக்களை
  தளர்த்தெரிந்து பாய்வது வசதி!
  நியதிக்குள் வாழ்க்கை நீடிக்கும்
  நித்தம் நம்மை சோதிக்கும்!
  நெளிவும் சுளிவும் தரும் வசதி!
  நித்தமும் அதனால் அசதி!
  பித்தமும் ஒருநாள் உறுதி!
  கூட்டுக்குள்ளே புழுவாக இருந்து
  பட்டு இறக்கை முளைத்து
  பறக்கிறது வண்ணத்துப்பூச்சி!
  கூட்டினை உடைத்து
  கொடியதன் கொழுந்தினைத்
  தின்று புழுவாய் உதிர்ந்து மடிகிறது
  கம்பளிப்பூச்சி!
  சிப்பிக்குள் அடங்கினால் விளையும்
  முத்து!
  குப்பிக்குள் அடங்கினால் விளையும்
  மருந்து!
  உடைப்பெடுக்காத ஆறு!
  ஊட்டும் நல்ல சோறு!
  மடை திறந்தால் அது வெள்ளம்!
  உடைந்து போகும் உழவன் உள்ளம்!
  கட்டுக்குள் வாழ்க்கை அமர்க்களம்!
  கட்டுடைத்த வாழ்க்கை போர்க்களம்!
  நியதி மனிதன் வகுத்தது!
  வசதி மனிதன் படைத்தது!
  படைப்பு மிஞ்சினால் நியதி அடங்குகிறது!
  எல்லோரும் சமன் என்பது நியதி!
  எல்லோருக்கும் மேல் நான் என்பது வசதி!
  நியதிக்கும் வசதிக்கும்
  நிதம் தோறும் போட்டியில்
  வென்றதுவோ வசதி!
  வல்லான் வகுத்ததே நியதி என்று
  எல்லோரும் சொல்லும் நிலை இன்று!
  உள்ளதை உள்ளபடி உரைக்கவோ
  நல்லதை நல்லபடி செப்பவோ
  அல்லதை அல்லதென தள்ளவோ
  இல்லாமல் போனதே நியதி!
  இதுவே அழிவினுக்கு கொண்டு செல்லும் வியாதி!

  மீள்பதிவு)

  தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

  Friday, January 20, 2017

  சென்ற வார பாக்யா ஜனவரி 20-26 இதழில் என் ஜோக்ஸ்!

  இந்த வாரமும் பாக்யாவில் எனது ஜோக்ஸ்கள் பிரசுரமாகி மகிழ்ச்சியைத்தந்தன. திங்கள் அன்றே புத்தகம் வாங்கிவிட்டாலும் அன்று போனவார ஜோக்ஸ்களை பகிர்ந்து கொண்டதால் இரண்டு நாட்கள் தள்ளி இன்று ஜோக்ஸ்களை பகிர்ந்து கொள்கிறேன்.

  பாக்யா தவிர்த்து, குமுதம், விகடன், கல்கி, குங்குமம் இந்து போன்ற இதழ்களுக்கும் படைப்புக்கள் அனுப்பி வருகிறேன். விகடன், குங்குமம் போன்ற பாரம்பரிய இதழ்களில் நகைச்சுவை துணுக்குகள் குறைந்து விட்டது. குங்குமத்தில் இரண்டு வாரங்களாய் நகைச்சுவை துணுக்குகளே வரவில்லை! விகடனில் அதிகபட்சமாய் நான்கு அல்லது ஐந்துதான் வருகின்றது. அந்த வகையில் பாக்யாவில் சன்மானம் வராவிட்டாலும் நிறைய துணுக்குகள் பிரசுரம் ஆகின்றன. 
    ஈன்ற பொழுதும் பெரிதுவக்கும் தன் மகனை 
   சான்றோன் எனக்கேட்ட தாய்!    
                 என்பது போல நமது துணுக்குகள் வலைப்பூவில் எழுதி வெளியிட்டு இருந்தாலும் பலரின் பாராட்டுதல்கள் பெற்றிருந்தாலும்  அச்சு ஊடகத்தில் வரும்போது ஒரு தனி மகிழ்ச்சி கிடைக்கிறது. கல்கி கேள்வி பதில் பகுதியிலும் இந்த வாரம் என்னுடைய கேள்வி இடம் பெற்றிருந்தது. இப்படி பத்திரிக்கைகளில் எழுத வேண்டும் என் பெயர் இடம்பெற வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. அது நிறைவேறிக்கொண்டிருப்பதில் மகிழ்ச்சி.

    ஜோக்ஸ்களை பிரசுரித்த பாக்யா ஆசிரியர் குழுவினர், தொடர்ந்து ஊக்கப்படுத்தும் தமிழக எழுத்தாளர் வாட்சப் குழும நண்பர்கள். வலைப்பூ நண்பர்கள், குடும்பத்தினர்  அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!

  ஜோக்ஸ்கள் கீழே!

  தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

  Thursday, January 19, 2017

  நொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள்! பகுதி 29

  1.   காலண்டர்!

    “எதுக்குங்க இத்தனை காலண்டர் எல்லார் கிட்டேயும் கேட்டு வாங்கறீங்க! ஒண்ணு இருந்தா போதாதா? என்று கேட்ட மனைவியை நாளைக்கு பார்! என்று அடக்கினார். மறுநாள் வாங்கி வந்த காலண்டர்களை தன் வீட்டு வேலைக்காரர்கள் மற்றும் அலுவலக கடைநிலை ஊழியர்களை வரவழைத்துக் கொடுத்துக் கொண்டிருந்தார் அவர்.

  2.   அட்வைஸ்!

  நேரத்துக்கு சாப்பிடனும்! நிறைய தண்ணி குடிக்கணும், காய்கறி பழங்கள் நிறைய சேர்த்துக்கணும் என்று பேஷண்டுக்கு அட்வைஸ் செய்த டாக்டரின் போன் சிணுங்கியது, எடுத்தார். ஒருநாளாவாது டயத்துக்கு சாப்பிட வீட்டுக்கு வர்றீங்களா? மணி ரெண்டு ஆவப்போகுது என்று சிடுசிடுத்தாள் அவர் மனைவி.

  3.   வாழ்த்து!
  சுற்றங்களும் நட்புக்களும் பரஸ்பரம் பொங்கல் வாழ்த்துக்களை பறிமாறிக் கொண்டனர் வாட்சப் பில்!


  4.   ஞாபகம்!
     சாமிக்கு பொங்கல் வைத்து படையல் போட்டதும் மறந்துடப் போறே ஞாபகமாய் போட்டோ எடுத்து எஃப்.பியில் ஷேர் பண்ணு! கவனமா இரு மறந்துடாதே! என்றாள் அக்கா.

  5.   எழுத்து:
      மனதில் கரு உதித்தவுடன் வேக வேகமாய் கணிணித் திரையை ஆன் செய்து எழுத ஆரம்பித்தார் அந்த எழுத்தாள்ர்.

  6.   வதந்தி:
     வேகமாக பரவியது வதந்தி செல்லுக்கு செல் வாட்சப் மூலம்!

  7.   சாட்டிங்க்:
     குடும்பத்தோடு ஒரு வார்த்தை பேச முடியாதவன் விடிய விடிய சாட்டிங் செய்து கொண்டிருந்தான் வாட்சப்பில்


  8.   தடை:
    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட புறப்பட்டுக்கொண்டிருந்த மகனை தடுத்துக் கொண்டிருந்தாள் ஜல்லிக்கட்டில் கணவனை இழந்த மனைவி.

  9.   விளையாட்டு!
     விளையாட்டை தடை செய்து விளையாடிக்கொண்டிருந்தார்கள் அரசியல்வாதிகள்.

  10. கண்டுபிடிப்பு:
     தொடர் மின்வெட்டு கண்டு பிடித்துக் கொண்டுவந்தது காணமல் போன ஆட்டு உரலை.


  11. பொங்கல் மரியாதை!
     பொங்கல் மரியாதை கேட்டு ஆளாளுக்கு தொல்லை பண்றாங்க என்று முணுமுணுத்தவர் எதிர்பட்ட நண்பரிடம் கேட்டார் ”இந்த வருஷம் டைரி எதுவும் இல்லையா?”

  12. பாரம்பரியம்!
    ஜீன்ஸ் பேண்ட் ரேபான் குளிர் கண்ணாடி கையில் கோக்கோடு வெளிநாட்டு மொபைலில் ஜல்லிக்கட்டு நமது பாரம்பரியம் என்று ட்விட்டிக் கொண்டிருந்தான் அந்த இளைஞன்.

  13. முரண்:
    கூல்டிரிங்க் வியாபாரம் செய்து கொண்டிருந்தவன் தாகமெடுத்ததும் வெளியே சென்று இளநீர் வாங்கி அருந்தினான்.

  14. சில்லறை!
     இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கு சில்லறை இல்லை என்று ஸ்டிக்கர் எழுதிக்கொடுத்தவனிடம் கூலியாக இரண்டாயிரம் ரூபாய் தாளைக் கொடுத்தபோது சில்லறை இல்லீங்களே என்றான்.

  தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


  Tuesday, January 17, 2017

  சென்ற வார பாக்யா-ஜனவரி 13-19 இதழில் எனது ஜோக்ஸ்கள்


  பாக்யா வார இதழ் ஜனவரி 13-19 2017ல் என்னுடைய ஜோக்ஸ்கள்!

  ஒரு வார இடைவெளிக்கு பின் என் ஜோக்ஸ்கள் மீண்டும் பாக்யாவில் பிரசுரம் ஆனது. புது வருடத்தின் முதல் இதழில் அதாவது வருடம் பிறந்து கிடைக்கும் இதழில் (புத்தாண்டு சிறப்பிதழ் அதற்கு முன்பே வந்துவிடும்) என் ஜோக்ஸ்கள் இல்லாமல் போனது வருத்தமாக இருந்தது. இருந்தாலும் விடவில்லை! தொடர்ந்து அனுப்பினேன்.

  பிரசுரம் ஆகியிருக்கிறது. இம்முறை தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுவில்  உங்கள் ஜோக்ஸ் வந்திருக்கிறது என்று சொன்னார்கள். புக் யாரும் வாங்காததால் பதிவிட வில்லை! நானும் தாமதமாகத்தான் கடைக்கு சென்று புத்தகம் வாங்கினேன். வாங்கிய பிறகும் உடனே பகிர்ந்திட இயல வில்லை! பின்னர் மறந்தும் போனேன். இன்றுதான் மீண்டும் நினைவுக்கு வந்து பதிவிடுகிறேன்!

  பிரசுரம் செய்த ஆசிரியர் குழுவினர், ஊக்கமளிக்கும் வாட்சப் குழுவினர், நண்பர்கள் வலைப்பூ தோழமைகள் அனைவருக்கும் எனது நன்றிகள்! ஜோக்ஸ்கள் கீழே!  இந்த வாரமும் என்னுடைய ஜோக்ஸ்கள் வந்திருக்கிறது அதை நாளை பதிவிடுகின்றேன்!

  தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

  Related Posts Plugin for WordPress, Blogger...