Tuesday, November 29, 2016

எடை!

  எடை!


  “என்னங்க! பழைய பேப்பர் நிறைய சேர்ந்து போச்சு! எடைக்கு போடனும்!” என்றாள் மீனாட்சி

 “சரி சரி! வழக்கமா வர பொன்னுசாமி அண்ணாச்சியை வந்து எடை போட்டு எடுத்துட்டு போக சொல்லறேன்!”

   ”வேணாங்க! புதுசா ஒரு பையன் வந்து கேட்டுட்டு போயிருக்கான்! கிலோவுக்கு பத்துரூபா தரேன்னு சொன்னான். அண்ணாச்சி 8 ரூபாவுக்குத்தான் எடுத்துப்பாரு! சுளையா ரெண்டு ரூபா கூட வருது! உங்ககிட்டே சொல்லிட்டு போடுவோம்னு நாளைக்கு வா!ன்னு சொல்லி அனுப்பிச்சிட்டேன்! அந்த பையன்கிட்டேயே போட்டுருவோமா?”

  ”பொண்ணுசாமி அண்ணாச்சி ஏமாத்திற ஆள் கிடையாதே! நியாயமான விலைக்கு எடுத்துக்கிறவர்  வேணும்னா அவர்கிட்டேயே இந்த மாதிரி பத்துரூபாய்க்கு எடுத்துக்கறேன்னு சொல்றாங்க என்ன சொல்றீங்கன்னு கேட்டு பார்ப்போமே!” என்றேன் நான்.

  ”நீங்கதான் அவரை மெச்சிக்கணும்! காலத்துக்கேற்ப மாத்திக்கணும்! இன்னும் அதே பழைய சைக்கிள்  பழைய தராசு எடுத்துட்டு வந்துகிட்டிருக்காரு! புது பையன் எலக்ட்ராணிக் தராசுலே எடை போடறான்! கூடுதலா ரெண்டு ரூபாவும் தரான் அவன்கிட்டே போடாம நீங்க என்னடான்னா அண்ணாச்சிக்கிட்டே கெஞ்சறேன்னு சொல்றீங்க!” மீனாட்சி சிடுசிடுத்தாள்.

   சரி சரி கொஞ்சம் பொறு! வாடிக்கையா நம்ம கிட்டே பேப்பர் எடுக்கிறவர் ஏமாத்த வேணாம்னு பார்த்தேன்!”

  அவர் நம்மை ஏமாத்திகிட்டே இருக்கார்! விலைவாசி உயர்ந்துட்டு போவுது! இன்னும் பழைய ரேட்ல எடுத்திட்டு இருந்தா எப்படி?
   சரி உன் இஷ்டம்!  என்று சொல்லவும் அந்த புது பையன் வரவும் சரியாக இருந்தது.

   கொண்டுவந்த புது தராசில் எடை போட ஆரம்பித்தான். மூன்று மாத பேப்பர்கள் வார இதழ்கள் மொத்தமாய் பத்து கிலோ இருந்தது இந்தாங்க சார் நூறு ரூபா என்று கொடுக்க வந்தவனை தடுத்து, போன தடவை அண்ணாச்சி மூணு மாச பேப்பர் எடை போட்டப்போ எவ்ளோ இருந்தது என்று மீனாட்சியை கேட்டேன்.

   “அது யாருக்கு ஞாபகம் இருக்கு?”

  ”என் டைரியை கொண்டா? அதுலே குறிச்சு வைச்சிருக்கேன்!”
டைரியை புரட்டவும். சார் இந்தாங்க காசு! எனக்கு எவ்வளோ வேலை இருக்கு கிளம்பணும் என்று பேப்பரை மூட்டை கட்ட முனைந்தவனை நிறுத்தினேன்.
   ”இதே மூணுமாச பேப்பர் போன தடவை எடை போட்டப்ப பதினைஞ்சு கிலோ! அதுக்கு முந்தியும் பதினைஞ்சு கிலோ! ஆனா இப்போ பத்துகிலோவா குறைஞ்சிருக்கு!”

  பையனின் முகம் வெளிறியது! ”நான் சரியா எடை போடலைன்னு சொல்றீங்களா? எலக்ட்ரானிக் எடை சார்!”
   “வெளியே மளிகை கடை இருக்கு அந்த தராசில் எடை போட்டு பார்ப்போம்! உன் எடை சரியா இருந்தா எடுத்திட்டு போ!”
    “அங்க எல்லாம் எடை போட வரமாட்டேன் சார்! என் மிசின்லதான் எடை போடணும் சம்மதம்னா போடுங்க!”
      “அப்ப நீ கிளம்பு!”

அவன் முறைத்துக் கொண்டு வெளியே செல்ல, ”என்னங்க! அஞ்சு கிலோ குறைச்சு எடை போடறான்னு எப்படிங்க கண்டு பிடிச்சீங்க?”

   “கிலோவுக்கு ரெண்டு ரூபா அதிகம் தரான்னு சொன்னப்பவே சந்தேகமா இருந்துச்சு! அதான் செக் பண்ணேன். அவன் எடை சரியா இருந்தா வெளியே எடை போட சம்மதிச்சு இருப்பான். அஞ்சு கிலோ பேப்பர் 40 ரூபா அவனுக்கு லாபம் அதுல இருபது ரூபா நமக்கு போனாலும் இருபது ரூபா நிக்குது!” அதான் வலிய வந்து அதிகவிலைக்கு எடுத்துக்கறேன்னு சொல்லி இருக்கான்.”

   பொன்னுசாமி அண்ணாச்சியையே வரச்சொல்லிடுங்க! அவர் தராசு பழசா இருந்தாலும் எடை குறைச்சலா போட மாட்டாரு. நீங்களும் சரியா மனுசங்களை எடை போடறீங்க! என்றாள் மீனாட்சி.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!Monday, November 28, 2016

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

தளிர் ஹைக்கூ கவிதைகள்!


1.   போர்த்துக்கொண்டதும்
போர்வையைத் தேடினார்கள்!
பனி!

2.   அணிந்த முத்துக்களை
கழற்றிக்கொண்டது சூரியன்!
பனி!

3.   சாய்ந்த பொழுது!
நிமிர்கிறதுவாழ்க்கை!
நடைபாதைவியாபாரிகள்!

4.   உறவைப்பிரிக்க போராட்டம்!
பறவையிடம்விளையாடுகிறது காற்று!
தூக்கணாம்குருவிக் கூடு!


5.   சிரித்த செடிகள்
அழுதுவடிந்தன!
உதிர்ந்த பூக்கள்!

6.   சிதறும் பண்டங்கள்!
சேதி சொல்லி அழைத்தன!
எறும்புகள்!

7.   தொடர்வண்டி தடம்புரண்டது
பாதிப்பில்லை
எறும்புகள்!


8.   மறைந்து போனாலும்
மறையவில்லை!
பாடகரின் குரல்!

9.   ஒரு நொடியில் வேறு உலகம்
அழைத்துச்செல்கிறது!
குழந்தையின் பேச்சு!

10.  பிரித்து வைத்தாலும்
ஒட்டிக்கொள்கிறது
குழந்தைகளிடம் மண்!

11.  ஒளிந்த நிலவை
தேடிய நட்சத்திரங்கள்!
அமாவாசை!

12.  பெரும் நிசப்தம்!
உணர்த்திவிட்டு சென்றது
பேரொலி!

13. வெளிச்சம் போட்டு காட்டியது
ஒளிர்ந்த விளக்கு!
இருளின் அழகு!

14. தாகம் தீர்ந்ததும்
அணைந்து போனது!
எண்ணெய்விளக்கு!


15. விழுங்கியவுடன்
குளிர்ந்து போனது குளம்!
முழுநிலா!

16. பிய்த்து எறிந்தாலும்
ஒட்டிக்கொள்கின்றன
அழுக்குகள்!

17.  தனிமையில் வாடியது
 ஒற்றை மரம்!
 பொட்டல் காடு!

18. வாழ்த்திய உள்ளங்கள்
மிதிபட்டுக்கொண்டிருந்தன!
வாழ்த்துமடல்கள்!


  தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்து கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Sunday, November 27, 2016

இந்த வார பாக்யாவில் என் ஏழு ஜோக்ஸ்!

இந்த வார பாக்யாவில் என்  ஏழு ஜோக்ஸ்!  

  பாக்யா இதழில் எனது படைப்புக்கள் வெளியாகி வருவது நம் நண்பர்கள் அறிந்த ஒன்று. இந்த வாரமும் என்னுடைய ஏழு ஜோக்ஸ்கள் வெளியாகி என்னை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திவிட்டது.

  பாக்யா இதழில் வெளிவந்த ஜோக்ஸ்களை தமிழக எழுத்தாளர்கள் வாட்சப் குழுவில் ஜான் ரவி சார் பகிர்ந்து கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தார். குழு தோழர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து ஊக்கப்படுத்தினர்.

  பாக்யா இதழ் எங்கள் பகுதியில் கிடைப்பது இல்லை. தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுவினர் பத்திரிக்கைகளில் வரும் குழுவினரின் படைப்புக்களை ஸ்கேன் எடுத்து குருப்பில் பதிவிட்டு வாழ்த்து தெரிவிப்பது மிகவும் உதவியாக உள்ளது.

   புதுப்புது எழுத்தாளர்களை ஊக்குவித்து வரும் பாக்யா குழுமம் என் படைப்புக்களை தொடர்ந்து வெளியிட்டு ஆதரித்து வருவதற்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். பாக்யா ஆசிரியர் திரு பாக்யராஜ், பொறுப்பாசிரியர், சித்தார்த், மற்றும் ஆசிரியர் குழுவினர், தமிழக எழுத்தாளர்கள் வாட்சப் குழுமம், பூங்கதிர் சார் மற்றும் வலையுலக நண்பர்கள் , என் பெற்றோர், மனைவி, குழந்தைகள் சகோதர சகோதரிகள் அனைவரும் என்னை ஊக்குவித்து தொடர்ந்து எழுதச் செய்கிறார்கள். அனைவருக்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்!

   இந்த மாதம் அக்டோபர் மாத கார்டூன் ஆன்லைன் ஜோக்ஸ் போட்டியிலும் எனது ஜோக்ஸ் வெற்றி பெற்று பாராட்டுக்கள் பெற்றேன். கார்டூன் ஆன்லைன் இணையத்தில் வெளிவரும் இதழ். இதன் ஆசிரியர் நல்லமுத்து மிகுந்த சிரமங்களுக்கு இடையில் இதழ் நடத்தி பரிசுகள் தந்து வருகிறார்.  நம் தோழர்கள் கார்டூன் ஆன்லைன் தளத்திற்கு சென்று  ஆசிரியர் நல்லமுத்து சாரை ஊக்கப்படுத்தலாமே!
பாக்யா மற்றும் கார்டூன் ஆன்லைனில் வெளிவந்த ஜோக்ஸ்கள் கீழே!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Wednesday, November 23, 2016

நொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள் பகுதி 26

நொடிக்கதைகள்! பகுதி 26


பூமராங்க்!
  “இந்த வயசுல நான்…” என்று சொல்ல ஆரம்பித்த அப்பாவை இடைமறித்து “உங்க அப்பாவும் இப்படித்தான் உங்களை குறை சொல்லிக்கிட்டு இருந்திருப்பாரு உங்களை மாதிரி!” என்றான் மகன்.

பொய்!:
   “ஃபீவரா இருந்தது ஹோம் ஒர்க் எழுதலேன்னு மிஸ்கிட்ட சொல்லிடறேன்! என்ற குழந்தையிடம் “இந்தவயசிலேயே பொய் சொல்ல ஆரம்பிச்சிட்டியா?” என்று எரிந்து விழுந்தவன்.,ரிங்கிய செல்லை ஆன் செய்து “ ஆன் த வே சார்! வந்துகிட்டே இருக்கேன்! ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ்ல அங்கிருப்பேன்!” என்று பொய் சொன்னான்.

ஐநூறு!


  மளிகை கடை அண்ணாச்சியிடம் எப்படியோ பேசி சாமர்த்தியமாக ஒரு ஐநூறு ரூபாய் நோட்டை தள்ளிவிட்டு வீட்டுக்கு வருகையில் ஏங்க! முருகேசு உன்கிட்ட வாங்கின ஐநூறை திருப்பி தந்துட்டு போனாரு என்று ஐநூறு ரூபா நோட்டை நீட்டினாள் மனைவி.

ஆயிரம்!
ஆயிரம் முறையாவது நடந்து திரிந்து நண்பனிடம் கடன் கொடுத்த ஆயிரம் ரூபாயை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தவன் அதிர்ந்தான். செய்தியில் “ஆயிரம் ஐந்நூறு ரூபா நோட்டுக்கள் செல்லாது” என்று ஒடிக் கொண்டு இருந்தது.

கணக்கு!

   தன் வீட்டுத் திருமணத்தில் எதிர்பார்த்ததை விட விருந்து செலவு கூடிவிட்டது என்று சொன்னவர் மொய் வருகை அதிகரித்தது என்று எவரிடமும் சொல்லவில்லை!

பிரிவு!
   சினிமா ஜோடிகள் பிரிவு என்ற செய்தியை படித்து வருந்தினாள் கணவனை விவாகரத்து செய்தவள்.

பரிவு!
    வளர்த்த தந்தைக்கு வீட்டில் இடம் கொடுக்காத மகன் வளர்க்கும் நாயை பரிவோடு வீட்டு சோபாவில் படுக்க இடம் கொடுத்தான்.மழை!
   போனவருஷம் மழையை சபித்தவர்கள் எல்லோருமே இந்தவருஷம் குளிரை சபித்துக் கொண்டிருந்தார்கள் மழையே இல்லாம போயிருச்சு பனியா கொட்டுது என்று.

ஹெல்மெட்!
  சாலையோரத்தில் ஹெல்மெட் வியாபாரம் செய்து கொண்டிருந்தவன் வியாபாரம் முடிந்ததும் கடையை கட்டிக்கொண்டு கிளம்பினான் டூவீலரில் ஹெல்மெட் அணியாமல்.

முதல் பிரசவம்!
   நெர்வஸா இருக்காதே! இப்ப ஆயிரம் வசதி வந்திருக்கு! ஒண்ணும் பயம் கிடையாது! இது முதல் பிரசவங்கிறதாலே டென்ஷன் இருக்கத்தான் செய்யும் போகப் போக பழகிடும் என்று மகப்பேறு மருத்துவரான தன் மகளிடம் சொல்லிக்கொண்டிருந்தார் தாய்.

விளையாட்டு!
   “சமத்தா விளையாடிட்டு இருக்கணும்! நாங்க கடைக்கு போயிட்டு வந்துடறோம்!” என்று தன் டேப்லட்டை குழந்தைகளிடம் கொடுத்துவிட்டு கிளம்பினாள் அந்த தாய்.


பேய்!
  “இந்த வாரம் டீவியிலே பேய்ப் படமே போடலை! ஒரே போர் அடிக்குது!” நீயாவது பேய்க்கதை சொல்றியா பாட்டி என்று கேட்டாள் பேத்தி.

வேசம்!
  சாமி வேஷம் போட்டு பிச்சை எடுத்து வந்தவனை விரட்டி அடித்துவிட்டு கிளம்பினர் கோயிலுக்கு!

கமிஷன்!
    விளக்கை தேய்த்ததும் வந்து நின்ற பூதத்திடம் நோட்டை மாற்றிக் கொடுக்கணும் என்றார். “எவ்வளவு கமிஷன் தருவே? என்றது பூதம்.

தங்கள் வருகைக்கு நன்றி!  பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்!


Monday, November 21, 2016

இந்த வார பாக்யாவில் எனது எட்டு ஜோக்ஸ்கள்!

இந்த வார பாக்யாவில் எனது எட்டு ஜோக்ஸ்கள்!

  வாராவாரம் என் ஜோக்ஸ்கள் பாக்யாவில் படையெடுத்து வருவதை அறிவீர்கள்! ஒரு மாறுதலுக்கு இந்த வாரம் மன்னர் ஜோக்ஸ் இல்லாமல் ட்ரெண்டி ஜோக்ஸ்கள் பாக்யாவில் இடம்பிடித்தது. பாக்யாவில் எனது படைப்பு வந்ததும் தமிழக எழுத்தாளர் வாட்சப் குழு ஜான் ரவி சார் தகவல் அளித்தார். உடன் தோழர்கள் வாழ்த்துக்கள் நல்கினார்கள்.

    சக எழுத்தாளர்களை ஊக்குவித்து பாராட்டி ஆலோசனைகள் தரும் நல்லதொரு வாட்சப் குழுவாக தமிழக எழுத்தாளர் வாட்சப் குழு திகழ்கிறது. குழு அட்மின்ஸ் வைகை ஆறுமுகம் சார், பாண்டியன் சார் மற்றும் தோழர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்! நன்றிகள்!

வலைப்பூவில் ஊக்கமளித்து வரும் சக நட்புக்கள் என் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது நன்றிகள்!

   எனது படைப்புக்களை தொடர்ந்து வெளியிட்டு ஆதரவளித்து வரும் பாக்யா ஆசிரியர் குழுவினர் திரு பாக்யராஜ் சார், ஆசிரியர் சித்தார்த் சார், குருமூர்த்தி சார்! மற்றும் ஆசிரியர் குழுவினருக்கும் முக்கியமாக எனது படைப்புக்களை பாக்யா பக்கம் திருப்பி விட்ட பூங்கதிர் சாருக்கும் எனது நன்றிகள்!

இனி ஜோக்ஸ்கள் உங்கள் பார்வைக்கு!

படங்களை என் செல் கேமராவில் எடுத்து பகிர்ந்துள்ளேன்! கிளியராக தெரியவில்லை எனில் பொறுத்துக் கொள்க!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்!நன்றி!
Saturday, November 19, 2016

சாமார்த்திய திருடன்! பாப்பா மலர்!முன்னொரு காலத்தில் விவேகன் என்ற திருடன் ஒருவன் வாழ்ந்து வந்தான். பெயருக்கேற்றபடி விவேகம் உள்ளவன். திருடினாலும் திருந்தத் திருடுவான். மிகுந்த திறமை சாலியான அவன் திருடன் ஆனது அவனது பொல்லாத காலம்.

 உள்ளூரில் திருடி திருடி பிழைத்துவந்த அவனுக்கு சலித்துப்போய்விட்டது. வெளியூருக்குப் புறப்பட்டான். அந்த ஊரில் ஒரு மிகப்பெரிய பண்ணைவீடு இருந்தது. அங்கு சென்று வேலை கேட்டான். முன் பின் தெரியாத உனக்கு எப்படி வேலை தருவது? என்று கேட்டார் பண்ணையார். ஒரு மாதம் இங்கு எனக்கு ஒத்தாசையாக இரு. உன் வேலை எனக்கு பிடித்து உன் மீது நம்பிக்கை ஏற்பட்டால் தொடர்ந்து வேலையில் வைத்துக் கொள்கிறேன் என்று சொன்னார்.

 விவேகனும் ஒருமாத காலம் உண்மையாக அங்கு உழைத்தான். பண்ணையாரிடம் மிகுந்த விசுவாசமாக நடந்து கொண்டான். இன்னு கொஞ்ச நாள் பண்ணையாரின் நம்பிக்கையை பெற்றுவிட்டால் இங்கு கொள்ளை அடிப்பது சுலபம் என்று அவரது நம்பிக்கையை பெறும் வண்ணம் வேலை செய்து வந்தான்.

  சில நாட்கள் கடந்தன.

ஒருநாள் பண்ணையார் விவேகனை அழைத்து  “விவேகா! நீ என்னதான் சாமர்த்தியமாக நடந்து கொண்டாலும் நீ ஒரு திருடன் என்று தெரிந்துவிட்டது. உன் ஊரைச்சேர்ந்த ஒருவன் இங்கு வேலையில் இருந்தான். இங்கிருந்து வெளியூர் சென்ற அவன் இன்று திரும்பி வந்துவிட்டான். நீ திருடன் என்று அவன் போட்டு உடைத்துவிட்டான். இனி என்னை ஏமாற்ற முடியாது. உன்னை அரசரிடம் பிடித்து கொடுக்கும் முன் கிளம்பி விடு! ”என்றார்.

  விவேகன், ”பண்ணையார் ஐயா! நான் திருடன் தான்! உங்கள் மனதை திருடிவிட்டதால் இங்கு எதையும் திருடவில்லை! என்னை மன்னித்து வேலையில் வைத்துக் கொள்ளுங்கள்” என்றான்.

   ”அப்படியானால் ஒரு சவால்! என்னிடம் இருந்து ஒரு பொருளை எடுத்துச் சென்று விற்றுவிடவேண்டும். விற்ற பொருளினை மீண்டும் என்னிடமே சேர்ப்பிக்கவேண்டும். அதற்கு நீ பணம் கொடுக்க கூடாது. அப்படி நீ செய்தால் உன்னை சாமார்த்தியசாலி என்று ஒத்துக் கொண்டு வேலை தருகிறேன். ”என்றார் பண்ணையார்.

  ”சவாலுக்குத் தயார்! ”என்றான் விவேகன்.

”ஐயா! உங்களது குதிரை ஒன்று வேண்டும். ஊருக்குச் சென்று திரும்பி வந்துவிடுகிறேன்! ”என்றான்.

பண்ணையாரும் குதிரையைக் கொடுத்துவிட்டார். குதிரையில் ஏறி ஊருக்கு கிளம்பினான் விவேகன். எதிரே ஒரு வியாபாரி கிழ குதிரையில் வருவதை பார்த்தான். உடனே அவன் மூளையில் ஒரு எண்ணம் உதித்தது. “ ஐயா! வியாபாரியாரே! உங்கள் கிழ குதிரையை வைத்து கொண்டு எவ்வளவு வியாபாரம் செய்ய முடியும்? இதோ இந்த குதிரையை வாங்கிக் கொள்ளுங்கள் நூறு பொன் பெறும் இந்த குதிரையை ஐம்பது பொன்னுக்குத் தருகிறேன்.எனக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது!”என்றான் விவேகன்.

 வியாபாரியும் குதிரை நன்றாக இருக்கிறது. நமக்கு ஐம்பது பொன் லாபம் கிடைக்கும் வாங்கி கொள்ள வேண்டியதுதான் என்று முடிவு செய்தார்.

  வாங்கிக் கொள்கிறேன்! ஆனால் இந்த கிழ குதிரையை என்ன செய்வது? என்று கேட்டார்.

  ”அதை நான் இருபது பொன்னுக்கு வாங்கிக் கொள்கிறேன்! மீதி முப்பது பொன் கொடுத்து இந்த குதிரையை ஓட்டிச்செல்லுங்கள்.”
  “நல்லயோசனை!  அப்படியே செய்வோம்!”. என்று முப்பது பொன் கொடுத்து குதிரைய மாற்றிக் கொண்டார்கள். அப்போது விவேகன், “ஐயா! பக்கத்து ஊரில் ஓரு பண்ணையார் இருக்கிறார் போகும் வழியில் இந்த கடிதத்தை அவரிடம் சேர்த்துவிட முடியுமா? ”என்று பணிவோடு கேட்டான்.

வியாபாரியும் அவ்வளவுதானே சேர்த்துவிடுகிறேன்! என்று குதிரையுடன் கிளம்பினார். விவேகன் தன் ஊருக்குச் சென்றான்.

  குதிரையுடன் பண்ணை வீட்டுக்கு வந்தார் வியாபாரி. “ என்ன ஐயா! விவேகன் குதிரையை திருப்பி கொடுத்து அனுப்பினாரா?” என்று அங்கிருந்த வேலையாட்கள் குதிரையை பிடித்து தொழுவத்தில் கட்டினார்கள்.

 “ஐயோ! இது என் குதிரை! நான் உங்கள் எஜமானரை பார்க்க வேண்டும்! ”என்று அலறினார் வியாபாரி.
 பணியாட்கள் வியாபாரியை பண்ணையார் முன் கொண்டு நிறுத்தினர். நடந்ததை விசாரித்தார் பண்ணையார். விவேகன் கொடுத்த கடிதத்தையும் வாங்கி வாசித்தார்.

   “பண்ணையார் ஐயா! உங்கள் அனுமதி பெற்று உங்கள் கண் முன்னே உங்களது குதிரையை எடுத்துச் சென்றேன். அதை ஐம்பது பொன்னுக்கு விற்று பணத்தையும் எடுத்துக் கொண்டேன். அதில் இருபது பொன்னுக்கு ஒரு கிழகுதிரையை வாங்கிவிட்டேன். வாங்கியவனிடமே குதிரையை கொடுத்து உங்களிடம் அனுப்பி விட்டேன். எப்படி என் சாமார்த்தியம்?” என்று கேட்டிருந்தான்.

 பண்ணையார் விவேகனின் சாமார்த்தியத்தை மனசுக்குள் பாராட்டிக் கொண்டார். விவேகனை கிழ குதிரையுடன் அழைத்துவரும்படி கட்டளையிட்டார். அந்த கிழ குதிரையை வியாபாரியிடம் தந்துவிடும்படி கூறிய அவர் வியாபாரியிடம் பெற்ற பொற்காசுகளையும் திருப்பித் தர சொன்னார். விவேகனை தன்னுடைய பணியாளராக சேர்த்து கொண்டு இனி திருடாமல் திருந்தி வாழ சொல்லி அறிவுரை கூறினார்.

விவேகனும் பண்ணையாரிடம் அதன் பின் உண்மையாக நடந்துகொண்டு உழைத்து பிழைத்து வந்தான்.

(செவிவழிக்கதை என் பாணியில் தந்தேன்)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!Friday, November 18, 2016

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 87

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 87


1.   ஆயிரம்தான் இருந்தாலும் சொந்தங்க ஒருத்தரை ஒருத்தர் விட்டுக் கொடுத்து போக வேணாமா?
ஆயிரம் இல்லாததுதாங்க பிரச்சனை! என்கிட்டே வாங்கின ஆயிரம் ரூபா நோட்டு செல்லாத போயிருச்சுன்னு திருப்பித் தர மாட்டேங்கிறார்!

2.   ஒருத்தர்கிட்டே  கைமாத்தா ஒரு ரெண்டாயிரம் வேணும்னு கேட்டுட்டிருந்தியே கிடைச்சுதா?
கிடைச்சுது! ஆனா மாத்தத்தான் முடியலை!

3.   அந்த டைலர் இதுக்கு முன்னாடி வாஸ்து நிபுணரா இருந்தவராம்!
அதுக்காக வாஸ்து பார்த்துதான் ஜாக்கெட்ல ஜன்னல் வைப்பேன்னு சொல்றது நல்லா இல்லை!

4.   பேங்க்ல விரல்ல வைக்க வைச்சிருந்த மை நான் கட்டப்போன பணத்துல கொட்டிருச்சு!
அப்புறம்?
கருப்பு பணம் ஆயிருச்சு!

5.   நம்ம காதல் எங்கப்பாவுக்கு தெரிஞ்சிருச்சு?
அப்புறம்?
இதுவரைக்கும் எத்தனை ரூபாவுக்கு டாப் பண்ணி இருக்கான்னு கேட்டாரு!!

6.   என் பொண்டாட்டி சேர்த்துவைச்சிருந்த ப்ளாக் மணி எல்லாம் வெளியே வந்துருச்சு!
அப்புறம்?
அதை மாத்தறதுக்கு என்னை பேங்க் வாசல்ல வைச்சு லாக் பண்ணிட்டா!


7.   கல்யாண போட்டோ ஒண்ணுகூட சரியில்லையே என்ன ஆச்சு?
ஆதார் கார்டுக்கு போட்டோ எடுக்கிறவரை கூப்பிட்டு வந்து எடுத்தா எப்படி இருக்கும்?

8.   கல்யாணத்துக்கு மெய் வருந்தி கூப்பிட்டும் பலன் இல்லாம போயிருச்சா ஏன்?
மொய் வருகை குறைந்து போயிருச்சே!

9.    மன்னர் நகர்வலம் வருவதற்கு ராணியார் கடிவாளம் போட்டுவிட்டார்களாமே?
மன்னரின் மேய்ச்சல் அதிகம் ஆகிவிட்டதாம்!

10. எதிரிக்கு உங்கள் சிம்மாசனத்தின் மீது ரொம்ப நாளாய் ஆசை மன்னா!
அப்படியானால் ஒரு விலை பேசி விற்றுவிடுமோ மந்திரியாரே!


11. எதிரி எல்லா வழிகளையும் அடைத்துவிட்டான் மன்னா!
தப்பித்துவிடலாம் என்று நான் கட்டியிருந்த மனக்கோட்டையை இப்படி உடைத்துவிட்டீர்களே தளபதியாரே!

12. உங்களோட பாரத்தை என்கிட்ட இறக்கிவைச்சிருங்கன்னு சொல்றாரே அவர் யாரு?
எங்க கம்பெனியோட “லோடுமேன்”

13. எனக்கு நிறைய மணியார்டர் வரும்னு சொல்லிக்கிட்டு இருக்காரே அவர் பெரிய எழுத்தாளரா?
நீங்க வேற அவரோட சம்சாரம் ”மணி” மேகலை போடற ஆர்டரைத்தான் அப்படி சொல்லிகிட்டுத் திரியறாரு!


14. எதிரியினுடனான போரில் மன்னரின் வாள் பேசியதா? வேல் பேசியதா?
  ஊகும் கால்தான் பேசியது!

15.  முதலிரவு அறையில் கணவன்: கண்ணே! நீ இதுக்கு முன்னாடி யாரையாவது காதலிச்சு இருக்கியா?
மனைவி: அந்த லிஸ்டை சொல்ல ஆரம்பிச்சா பொழுது விடிஞ்சிரும் பரவாயில்லையா?

16. அந்த டாக்டர் எதுக்கு மல்லுவேட்டியும் பனியனும் போட்டுகிட்டு ஆபரேஷன் தியேட்டருக்கு போறார்?
அவர் மைனர் ஆபரேஷன் பண்ண போறாராம்!

17. அவர் சில்லறை சில்லறையாய் சம்பாதிச்சு இந்த வீட்டை கட்டி முடிச்சு இருக்காரு!
அதுக்காக வீட்டுக்கு “உண்டியல்”னு பேர் வைக்கிறது கொஞ்சம் கூட நல்லா இல்லை!


18. புலவரே பாடல்களை ஒப்புக்கு எழுதுகிறீர்கள் போலிருக்கிறதே!
நீங்கள் கொடுக்கும் ”செப்புக்கு” தான் எழுதுகின்றேன் மன்னா!

19. மன்னா! அண்டை நாடுடனான நம் உறவில் விரிச்ல் ஏற்பட்டு விட்டது!
   ஏன்?
அண்டை நாட்டு மன்னர் அனுப்பிய புறாவை சமைத்து பிளந்து கட்டிவிட்டீர்களே!

20. எப்ப கேட்டாலும் உன் புருஷன் லைன்ல இருக்காருன்னு சொல்லிக்கிட்டிருக்கியே சதா உன்கிட்ட பேசிக்கிட்டே இருப்பாரா?
நீ வேற பேங்க் க்யு, ஏடி,எம் கியுவுல நின்னுக்கிட்டிருக்கார்னு சொல்ல வந்தேன்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Wednesday, November 16, 2016

சாமர்த்தியம்!

சாமர்த்தியம்!


“ அந்த மேஸ்திரி கூட வேலைக்கு போனா ரொம்ப கஷ்டமா இருக்கும் சாயந்திரம் ஆறு மணிவரைக்கும் வேலை வாங்குவாரு!”

ஆமாம்! ஆமாம்! நான் கூட போன வாரம் ஒருநாள் வேலைக்கு போனேன்! ஆறரை மணி வரைக்கும் பிழிஞ்சு எடுத்திட்டாரு!”

”நீங்க சொல்றது சரிதான்! காலையிலே ஒன்பது மணிக்கு போனா சாயந்திரம் அஞ்சு மணியாச்சுன்னா டான்!னு அனுப்பிடுவார் எங்க மேஸ்திரி! கூலியும் கரெக்டா தந்திருவாரு!

கட்டிட வேலை செய்யும் கொத்தனார்களும் சித்தாள்களும் கூடிப் பேசிக்கொண்டிருந்தார்கள். கேட்டுக்கொண்டிருந்த பரமசிவம் எந்த மேஸ்திரியைப்பா சொல்றீங்க? என்று கேட்க நினைத்தார். ஆனால் அவர்கள் சம்பாஷணையில் குறுக்கிட்டு பேச சங்கோஜமாக தயங்கி நின்றார். அப்போது அவரின் குறையை தீர்ப்பது போல ஒரு சித்தாள் பேசத் துவங்கினான்.

   நீங்க ஆயிரம்தான் சொல்லுங்க நம்ம மணி மேஸ்திரி மாதிரி யாரும் வர மாட்டாங்க! அவர் ஆறு மணிவரைக்கும் வேலை வாங்கத்தான் செய்யறாரு ஆனா நம்ம வேலை நேரம் எட்டு மணி நேரத்தை தாண்ட விடமாட்டாரு! கூலியும் கரெக்டா கொடுத்திருவாரு! கமிஷன் கூட எடுக்கிறது இல்லை! நான் அவர் கூடத்தான் வேலைக்கு போயிகிட்டு இருக்கேன் எனக்கு ஒரு கஷ்டமும் இல்லை!” என்றான் ஒருவன்.

  பரமசிவத்துக்கு “பக்”கென்று இருந்தது. அவர் இந்த சம்பாஷணையை செவிமடுக்க காரணமே அவரது மருமகன் ஒரு கட்டிட மேஸ்திரி. அதனால்தான் ஆர்வமாய் கேட்டுக் கொண்டிருந்தார். அவர்கள் பேசிக்கொண்டிருந்தது தனது மருமகன் மணியை பற்றித்தான் என்றதும் பதறிப் போனார். இப்படி கொத்தனார்கள் வேலைக்கு வராமல் போனால் மருமகன் பாடு திண்டாட்டமாய் போய்விடுமே? இன்று போனதுமே மருமகனிடம் விஷயத்தை கூறிவிடவேண்டும் என்று ஆளாய் பறந்தார்.

  வீட்டுக்கு கூட செல்லாமல் மருமகன் வீட்டுக்கு சென்றார். “ என்ன மாமா! திடீர்னு விளக்கு வெச்சப்புறம் புறப்பட்டு வந்திருக்கீங்க? என்றான் அப்போதுதான் வேலையை விட்டு வந்து கை கால் கழுவிக்கொண்டிருந்த மணி.

   ”மாப்ளே! கொஞ்சம் வர்றீங்களா? அப்படியே கொஞ்சம் காலாற நடந்துட்டு வருவோம்!”
    “என்ன விஷயம் மாமா?”

  வாங்க சொல்றேன்!”  என்று அழைத்து சென்றவர் கொத்தனார்கள் பேசியதை எல்லாம் சொல்லி ஏன் மாப்பிள்ளே இப்படி இருக்கீங்க? நீங்க வீட்டுக்காரங்க கிட்ட நல்ல பேர் எடுக்கணும்னு தொழிலாளிங்க கிட்ட கெட்ட பேர் எடுத்துட்டு இருக்கீங்க? இப்படியே போனா உங்களுக்கு வேலைக்கு யாரும் வரமாட்டாங்க! என்றார்.

   அதைக் கேட்டு சிரித்தான் மணி.

  ”என்ன மாப்ளே சிரிக்கறீங்க? நான் என்ன ஜோக்கா சொல்லிட்டு இருக்கேன்?”

 “மாமா உங்க கவலை நியாயம்தான்!” என்னை புரிஞ்சுகிட்டவங்க என் கூட ரெகுலரா வேலை செய்யறவங்க என்னை தப்பு சொல்ல மாட்டாங்க! இதுஎன் தொழில் ரகசியம் மாமா!”

   ஆமா! ஒருத்தன் மட்டும் உங்க கூடத்தான் வேலை செய்வேன்னு சொன்னான்.”

 அங்க தான் என் ட்ரிக் இருக்கு!” எல்லா மேஸ்திரிகளும் காலையில் ஒன்பது மணிக்கு ஆட்களை  கரெக்டா வரச்சொல்லுவாங்க! நான் முன்னே பின்னே வந்தாலும் கண்டுக்க மாட்டேன். இடையிலே டீ குடிக்க பாத்ரூம்னு பத்து பதினைஞ்சு நிமிஷம் ரெஸ்ட் எடுத்துப்பாங்க மத்தியானம் சாப்பிட்டதுக்கு அப்புறமா ரெண்டு மணிக்கு ஆரம்பிக்கிற வேலையை ரெண்டே காலுக்கு ஆரம்பிப்பாங்க இப்படி காலையிலே ஒரு மணி நேரம் வேலை செய்யாம  அப்பப்ப ரெஸ்ட் எடுத்துக்குவாங்க அதை ஈடுகட்ட அஞ்சரை ஆறு மணிவரைக்கும் வேலை செய்வாங்க

   முதலாளிகளுக்கு நாங்க ஆறு மணிவரைக்கும் வேலை செய்யறோம் கூடுதலா செய்யறோம்னு ஒரு நல்ல நம்பிக்கை வந்துடும். ஆனா இடையிலே ரெஸ்ட் எடுக்கிறது அவருக்குத் தெரியாது. ஆட்கள் கிட்டேயும் அப்பப்ப ரெஸ்ட் எடுத்து வேலை வாங்கறதினாலே எனக்கு நல்ல பேர். என் கிட்ட ரெகுலரா வர்றவங்க என்னை தப்பு சொல்ல மாட்டாங்க! நீங்க கவலையே படாதீங்க என் தொழிலுக்கு எந்த பாதிப்பும் வராது மாமா என்றான் மணி.

  மாப்பிள்ளையின் சாமர்த்தியத்தை மெச்சிக்கொண்டார் பரமசிவம்.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை
பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Related Posts Plugin for WordPress, Blogger...