Monday, October 31, 2016

இந்த வார பாக்யாவில் எனது ஜோக்ஸ்கள்!

இந்த வார பாக்யாவில் எனது ஜோக்ஸ்கள்!

இந்த வார பாக்யா இதழில் எனது ஜோக்ஸ்கள் ஒரு பக்கம் அளவிற்கு ஐந்து ஜோக்ஸ்கள் இடம் பெற்று உள்ளது.
 தொடர்ந்து ஆதரவளித்து வரும் பாக்யா ஆசிரியர் குழுவினருக்கும் தகவல் தந்து ஊக்கப்படுத்தும் தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!

கீழே ஜோக்ஸ்!

தங்கள் வருகைக்கு நன்றி!  பதிவு குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டு ஊக்கப்படுத்தலாமே! நன்றி!

கல்கி தந்த தீபாவளிப் பரிசு!

 வார இதழ்களில் நான் படைப்புக்கள் எழுதி வருவதை நீங்கள் அறிவீர்கள். பாக்யாவில் வரும் அளவிற்கு மற்ற இதழ்களில் படைப்புக்கள் வரவில்லை. எனினும் விடாமல் குமுதம், விகடன், கல்கி, கண்மணி என்று தொடர்ந்து முயற்சித்துக் கொண்டு இருக்கிறேன்.
    நகைச்சுவை எழுத்தாளர் திரு சீர்காழி ஆர். சீதாராமன் சார் போன் செய்து பேசுகையில் சில ஆலோசனைகள் சொன்னார். அதில் ஒன்று  கல்கிக்கு தராசு பதில்களுக்கு கேள்விகள் அனுப்புவது. அவர் சொன்னபடி கேள்விகள் மெயில் அனுப்ப மறு வாரமே ஒரு கேள்வி பிரசுரம் ஆனது.  இந்தவாரமும் கேள்வி அனுப்பி இருந்தேன். அதில் என் கேள்வி பரிசுக்குரிய கேள்வியாக தேர்ந்தெடுக்கப்பட்டு  ரூபாய் 150 பரிசினை பெற்றுள்ளது. 

   கல்கிக்கு ஜோக்ஸும் அனுப்பி இருந்தேன். அதில் இரண்டு ஜோக்ஸ்கள் பிரசுரம் ஆகி இருக்கிறது.
    தீபாவளி பிஸியில் இருந்தமையால் இதை உடனே அறிந்து கொள்ள முடியவில்லை! தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுவில் பகிர்ந்து இருந்தார்கள் அதை தீபாவளி அன்று இரவுதான் பார்த்தேன். நேற்று கேதார கௌரி நோன்பு. கோயில் பணி. பிஸியாக இருந்தமையால்  புத்தகம் வாங்கவும் பகிர்ந்து கொள்ளவும் முடியவில்லை!
   இன்று புத்தகம் வாங்கி படித்து மகிழ்ந்தேன். பாக்யாவிலும் இந்தவாரம் ஜோக்ஸ்கள் வந்துள்ளது. அதை தனி பதிவாக கொடுக்கிறேன். இனி! என் பரிசு கேள்வியும் அதற்கு தராசு பதிலையும்  கீழே படியுங்கள்.

கல்கியில் பிரசுரமான எனது ஜோக்ஸ்கள்!கல்கி போன்ற பாரம்பரியம் மிக்க இதழ்களில் என் படைப்புக்கள் வராதா என்று ஏங்கிய காலங்கள் உண்டு.  தீபாவளி அன்று எனது ஏக்கத்தை போக்கி பரிசை வழங்கியது கல்கி!

   கல்கி குழுமத்தினருக்கும் என்னை ஊக்கப்படுத்தி வரும் தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுமத்தினருக்கும்  வலைப்பூ நண்பர்கள் மற்றும் எனது குடும்பத்தினருக்கு எனது இதயங்கலந்த நன்றிகள்! 

தங்கள் வருகைக்கு நன்றி!  பதிவு குறித்த உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டு ஊக்கப் படுத்துங்களேன்! நன்றி!

Friday, October 28, 2016

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 84

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 84


1.   எங்க தலைவர் தவுசன் வாலா பட்டாசு மாதிரி! பத்த வைச்சா பட படன்னு வெடிச்சிருவார்!
அப்ப அவரை பீஸ் பீஸா கிழிக்கிறது ரொம்ப சுலபம்னு சொல்லு!

2.   தலை தீபாவளிக்கு மாப்பிள்ளைக்கு மோதிரம் போட்டது தப்பா போயிருச்சு!
ஏன்?
மோதிரத்தை அடகுவெச்சு “ரம்” அடிச்சுட்டுவந்து நிக்கறார்!

3.   பொண்ணுக்கு கல்யாணத்தை தள்ளி போட்டுக்கிட்டே போகாதீங்கன்னு சொன்னேனே கேட்டீங்களா?
ஏன் இப்ப என்ன ஆச்சு?
நாள் தள்ளி போயிருக்குங்கறா!

4.   மாப்பிள்ளை ராக்கெட் விடறேன்னு சொல்லி பெரிய பிரச்சனையை உண்டாக்கிட்டார்!
ஏன்? என்ன ஆச்சு
பக்கத்து வீட்டு பொண்ணு கொண்டையில ராக்கெட் விட்டுட்டார்!

5.   அந்த பட்டாசு கடை ரொம்ப ஸ்டிரிக்டா வியாபாரம் பண்றாங்களா எப்படி?
பாம்பு மாத்திரை வேணும்னா கூட டாக்டர் ப்ரிப்ஸ்கிரிஷன் இருந்தாத்தான் தருவாங்களாம்!


6.   இந்தாங்க வீட் அல்வா?
என்ன ரவை அல்வாவை கொடுத்து வீட் அல்வான்னு சொல்றே!
வீட்டு அல்வான்னு சொல்ல வந்தேன்!

7.   சனிக்கிழமைன்னா எங்கம்மா எண்ணெய் தேய்ச்சு குளிப்பாட்டிவிடாம விடமாட்டாங்க!
ஆயில் தண்டணைன்னு சொல்லு!

8.   அந்த படத்தோட டைரக்டர் இதுக்கு முன்னாடி அனஸ்தீஷியா டாக்டரா இருந்தவராம்!
மயக்குனரா இருந்தவர் இயக்குனரா மாறிட்டார்னு சொல்லு!


9.   எதிரி நம் அண்டை நாடுகளை வென்று கொடிநாட்டி வருகிறான் மன்னா!
உடனே அவனுக்கு சமாதானக் கொடியை நாட்டி விட வேண்டியதுதான் அமைச்சரே!

10.  மன்னருக்கு போரில் நாட்டம் இல்லையாமே!
ஆமாம்! ஆமாம்! அப்புறம் அவரது அரியணை ஆட்டம் கண்டு விடுமே என்று பயம்தான்!

11. வெடி வைச்சு பார்த்தாலும் உடைக்க முடியலைன்னு புலம்பிக்கிட்டு இருக்கிறியே எதை?
தீபாவளிக்கு என் பொண்டாட்டி செஞ்ச மைசூர் பாகைத்தான்!

12.  திடீர்னு தலைவர் எதுக்கு சீனப்பட்டாசுக்கு எதிரா அறிக்கை விட்டு போராட ஆரம்பிச்சிட்டாரு!
உள்ளூர் ல பட்டாசு கடை ஏலம் எடுத்தவன் தலைவருக்கு கமிஷன் கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டானாம்!


13. கட்சி ஆரம்பிச்சு  முதல் தீபாவளிக்கு தலைவர் ஜெயிலுக்கு போயிட்டார்!
தலை தீபாவளிக்கு மாமியார் வீட்டுக்கு போயிருக்கார்னு சொல்லு!

14. மன்னா! இளவரசர் மிளகாய் பட்டாசு வெடிக்க கூட பயப்படுகின்றாராம்!
அவனுக்கு காரம் பிடிக்காது என்று உங்களுக்குத் தெரியாதா மந்திரியாரே!

15. எதிரி படையெடுத்து வரப்போவதாக ஓலை அனுப்பி இருக்கிறான்  மன்னா!
  ஒலைவெடி வெடித்துவிட்டான் என்று சொல்லுங்கள்!

16. தீபாவளிக்கு பட்டு எடுத்தாத்தான் கட்டுவேன்னு என் பொண்டாட்டி கண்டிப்பா சொல்லிட்டா!
அவளுக்கு பட்டு எடுத்துட்டு நான் வாங்கின கடனுக்கு வட்டி கட்டிக்கிட்டு இருக்கேன்!

17. அந்த டயலாக் ரைட்டர் ரொம்ப வறுமையில இருக்கார் போலிருக்கு!
எப்படி சொல்றே?
பஞ்ச் டயலாக் எழுதி கொடுங்கன்னு கேட்டா பஞ்ச டயலாக்கா எழுதி தள்றாரே!

18. தலைவர் எதுக்கு டெய்லி காலண்டரை கீழே போட்டுட்டு மேலே ஏறி நிக்கிறார்?
அப் டேட்டா இருக்க முயற்சி பண்றாராம்!

                  19.அந்த சர்வருக்கு நக்கல் அதிகமா போச்சு!
                  ஏன்?
                  சூடா என்ன இருக்குன்னு கேட்டா தோசைக் கல்லு                       இருக்கு கொண்டு வரவான்னு கேக்கறான்!

 20.மன்னர் ஏன் இப்படி மருந்து குடித்தது போல முகத்தை வைத்துக்கொண்டுள்ளார்!
   ராணியார் தன் கையால் செய்த தீபாவளி விருந்தை சாப்பிட சொல்லி வற்புறுத்துகிறாராம்!

வலையுலக நட்புக்கள் வாசகர்கள் தோழர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!  

Wednesday, October 26, 2016

செல்லாக்காசு!

செல்லாக்காசு!


    அன்று திங்கட்கிழமை! செல்வம் அவசரம் அவசரமாக அலுவலகத்திற்கு கிளம்பிக் கொண்டிருக்கையில் அவன் மனைவி லதா ஆரம்பித்துவிட்டாள்.  “என்னங்க! பசங்களுக்கு ஸ்கூல் பீஸ் கட்டணும்? நீங்க பாட்டுக்கு கிளம்பிப் போனா எப்படி? நேத்தே சொன்னேன் இல்லை?”

     செல்வம் அமைதியாக லதாவை பார்த்தான்!” எவ்வளவு?” என்றான்.
  “ரெண்டுத்துக்கும் சேர்த்து இருபத்தி இரண்டாயிரம் ஆவுது?”
    “ என்னது?”
  “ஏன் இப்படி மலைச்சி போய் நிக்கறீங்க? நாம என்ன உங்க ப்ரெண்ட் மாதிரி இண்டர்நேசனல் ஸ்கூல்லயா நம்ம பசங்களை சேர்த்து இருக்கோம்? சாதாரண மெட்ரிகுலேசன் ஸ்கூல்தான்! இதுக்கே இப்படி திகைச்சு போய் நின்னா எப்படி? அப்புறம் சொல்ல மறந்துட்டேனே? மளிகை தீர்ந்து போச்சு! பால்காரன் நேத்தே பணம் கேட்டான்.”

        செல்வம் தலையில் கைவைத்து அமர்ந்து கொண்டான்!” அம்மா தாயே! இன்னும் எதாவது பாக்கி இருக்கா?”

     “ இருக்கு! ஆனா இதுக்கே இங்கே வழியைக் காணோம்! அவனவன் லட்சம் லட்சமாய் சம்பாதிக்கிறான்! நீங்க என்னடான்னா? சம்பளத்துக்கும் வழி இல்லை! கிம்பளமும் வாங்க மாட்டேங்கிறீங்க! நல்லா பாத்து வச்சார் எங்க அப்பா மாப்பிள்ளையை! வருவாய்த்துறைடீ! நல்ல வருமானம் வரும்னு! “ என்று நொடித்தாள்.

      என் மாத வருமானமே ஒரு இருபத்தி நாலாயிரம்தான் வரும். அதில் பிடிப்பு எல்லாம் போக கையில் ஒரு இருபத்தி சொச்சம் வரும் இவள் இந்த மாதம் சொல்லும் கணக்கை பார்த்தாள் கையை கடிப்பது என்ன? கடித்து விழுங்கியே விடும் போல,  நான் திகைத்து நிற்பதை பார்த்த அவள், “ என்ன அப்படி இஞ்சி தின்ன குரங்காட்டம் முழிக்கிறீங்க? நாளைக்குத்தான் ஸ்கூல் பீஸ் கட்ட கடைசி நாள்! நீங்க என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ தெரியாது பணத்தை ஏற்பாடு பண்ணுங்க! ”  என்றாள்.

     நான் மவுனமாய் வண்டியை ஸ்டார்ட் செய்து அலுவலகம் கிளம்பினேன். அவள் சொன்னது போல வருவாய்த்துறைதான். ரெவின்யூ இன்ஸ்பெக்டர் பதவிதான். லஞ்சம் புரண்டோடும் துறைதான். ஆனால் இதுவரை நான் ஒரு பைசா கூட கைநீட்டி வாங்கியது கிடையாது. நியாயமான கோரிக்கைகள் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுத்து விடுவேன். அதே சமயம் யாராவது காசு பணம் என்று வந்து நின்றால் துரத்தி விடுவேன்.

   வேலையில் சேரும் போதே என் தந்தை கூறிய வார்த்தைகள்! வருவாய்த்துறை! கவனம் இருக்கட்டும்! ஜாக்கிரதையா நடந்துக்கோ! காசு பணத்துக்கு ஆசைப்பட்டியோ! நீ நல்லா இருந்தாலும் பின்னாலே உன் பசங்க கஷ்டப்படும்! யாருடைய வயித்தெரிச்சலையும் கொட்டிக்காம ஒழுங்கா வேலை பண்ணு என்று அறிவுரை கூறினார்.

    என்னுடன் பதவியில் சேர்ந்தவர்கள் எல்லாம் எடுத்ததெற்கெல்லாம் பணம் வாங்கி கொண்டு சம்பளத்தை விட கிம்பளம் இரண்டு மடங்கு வாங்கி வீடு மனை என்று வாங்கி குவித்து விட்டனர். அலுவலகத்தில் எனக்குப் பெயரே செல்லாக் காசு! “ யோவ்! அவன் கிட்ட ஏதாவது இல்லீகல் விசயத்தை கொண்டு போய் மூக்குடைபட்டு வந்து நிக்காதீங்க! பையன் காந்தி வீட்டுக்கு பக்கத்துவீடு! நேர்மை நியாயம் நீதின்னு தத்துவம் பேசுவான். அவனால நம்ம பொழப்பும் நாறுது !”என்று பேசுவர்.

     மற்றவர்கள் தவறை நான் என்ன செய்ய முடியும்! முடிந்தவரை சொல்லிப் பார்ப்பேன்! என்னிடம் ஏதாவது கையெழுத்துக்கு வரும்போது அந்த தகவல் சரியா என்று பார்ப்பேன் சரியில்லை என்றால் மறுத்து நிராகரித்து அனுப்பி விடுவேன். இதனாலேயே பல முறை பல இடங்களுக்கு பந்தாடப்பட்டு கடைசியில் இந்த ஊருக்கு வந்து சேர்ந்தேன்.

      சிந்தனை செய்தபடியே அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தேன். நாளை ஸ்கூல் பீஸிற்கு என்ன செய்வது? என்ற சிந்தனையில் வேலை ஓடவே இல்லை! அப்போதுதான் அந்த பெரியவர் அங்கு வந்து சேர்ந்தார். என்னை பார்த்து வணக்கம் சொன்னார்.  “என்னங்க  என்ன விசயமாய் வந்திருக்கீங்க?  “என்று கேட்டேன்.
     அவர் பையினுள் கை விட்டு சில ஆவணங்களை எடுத்துக் காண்பித்தார் . ”இது நம்ம நிலங்க! பக்கத்துலதான் அந்த கான்வெண்ட் இருக்குது. நம்ம நிலத்தை கேட்டாங்க! நமக்கு உழுதாதாங்க சோறு! சோறு போடற தாயை விற்க முடியாதுன்னு சொல்லிட்டேங்க! இதோ பாருங்க நான் நாற்பது வருசமா அந்த நிலத்துக்கு கிஸ்தியெல்லாம் கட்டி வரேங்க! அவங்க திடீர்னு வந்து அவங்க நிலம்னு சொல்றாங்க!”
     “அது எப்படின்னு கேட்டதுக்கு நிலத்தை நான் வித்திட்டதா சொல்றாங்க? நீங்கதான் விசாரித்து சொல்லனும். என் தாயை எனக்கு காப்பாத்திக் கொடுக்கணும்” என்றார் கண்கலங்க அவரது ஆவணங்களை சரிபார்த்தேன். கடைசியாக இந்த ஆண்டு வரை கிஸ்தி எல்லாம் செலுத்தி இருந்தார். தாய்பத்திரம் சொத்து ஆவணம் எல்லாம் சரியாக இருந்தது. எல்லாம் சரியாக இருக்கும் போது அவர்கள் எப்படி நிலத்தை தனது என்று சொல்கிறார்கள்?

    “நான் விசாரிக்கறேன் பெரியவரே! கவலைப் படாதீங்க! நாளைக்கு நான் உங்க இடத்துக்கு வந்து பார்க்கிறேன்” என்றேன். அவர் கையெடுத்து கும்பிட்டு விட்டு சென்றுவிட்டார்.
   அன்றைய பொழுதை எப்படியோ கழித்தேன். இரவு வீடு திரும்பியதும் லதா நச்சரித்தாள்.

     “என்ன பீஸீக்கு பணம் ரெடி பண்ணிட்டீங்களா?”

   “பணமா? அது என்ன மரத்துலயா காய்க்குது? பறிச்சு எடுத்து வர? ஆமா! நம்ம பசங்க கவர்மெண்ட் ஸ்கூல்ல படிச்சா என்ன? இப்ப அங்கேயும் இங்கிலீஷ் மீடியம் வந்துருத்து இல்லே! “என்றேன்.

    “ என்னது கவர்மெண்ட் ஸ்கூலா? என் ப்ரெண்ட்ஸ் எல்லாம் என்னை கேலி பண்ணுவாங்க?”

 “அவங்க கேலி பண்ணா என்ன? வேலை மட்டும் கவர்மெண்ட் வேலை வேணும்னு கேக்கறாங்க படிப்பு மட்டும் கவர்மெண்ட் ஸ்கூல்ல வேணாமா? நம்ம தலையிலே நாமே மண்ணை அள்ளி போட்டுக்கறோம்! நாம எல்லாம் இப்படி கான்வெண்ட் மோகம் கொண்டு அலையறதாலேதான் அவன் நம்மகிட்ட கொள்ளை அடிக்கிறான்.”

    “இந்த வியாக்கியானத்துக்கு ஒண்ணும் கொறைச்சல் இல்லை! பணம் கிடைச்சுதா இல்லையா?”
   “இல்லை” என்று தலையசைத்தேன்!

   ”துப்புக்கெட்ட மனுசன்! தானும் பொழக்க மாட்டாரு! மத்தவங்களையும் பொழைக்க உட மாட்டாருன்னு உங்க ப்ரெண்ட் சொன்னது சரியாத்தான் இருக்கு!”
    “அவன் ஏன் இங்க வந்தான்? ” “அதான் நம்ம பசங்க படிக்குதே ஸ்கூலு! அந்த ஸ்கூலை ஒட்டினாப்பல நிலம் இருக்காம்! அத அந்த ஸ்கூல் காரங்க ஆக்ரமிப்பு பண்ணிகிட்டு இருக்காங்கலாம்! நிலத்து ஓனர் அப்ஜெக்ஷன் பண்ணிக்கிட்டு இருக்காராம்! அது உங்க சரவுண்டிங்கல்ல தான் வருதாமே! பார்த்து கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணி கான்வெண்ட்டுக்கு சாதகமா நடந்துகிட்டா நம்ம  பசங்களுக்கு இந்த வருசம் ப்ரியாவே சீட் தருவாங்களாம்!”
    “ஓ! அப்படியா சங்கதி! என் பசங்களுக்கு ஒரு அப்பாவியை அடிச்சி கல்வி வேணாம்! நான் ரூல்ஸ் படிதான் நடப்பேன்.”

   “ தானாவும் பொழைக்க தெரியாது! சொல்லிக் கொடுத்தாலும் செய்யமாட்டீங்களா?”

   “முடியாது! நான் நேர்மையா நடந்துக்கிட்டாதான் நாளைக்கு நம்ம பசங்க நல்லா இருப்பாங்க!”

     “இப்படி நீங்க முரண்டு பிடிச்சிகிட்டு நின்னா அவங்க எதிர்காலம் பாழாத்தான் போகும்!”

 ” நான் கவர்மெண்ட் ஸ்கூல்லதான் படிச்சேன்! கெட்டா போயிட்டேன்! நல்லாதான் இருக்கேன்! வறட்டு கவுரவுத்தாக என் கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டேன்! அந்த பெரியவர் வந்து கம்ப்ளைண்ட் பண்ணியிருக்கார்! நான் அவர் கொடுத்த எல்லா ஆவணங்களையும் பார்த்துட்டேன்! நாளைக்கு லேண்டை பார்க்க வேண்டியதுதான் பாக்கி! ஆல் மோஸ்ட் எல்லா விசயமும் அந்த பெரியவருக்குத்தான் சாதகமா இருக்கு! அதை மாத்தமுடியாது.”

   “ பாவி மனுசா! பிள்ளைங்களோட எதிர்காலத்தை பாழடிக்கிறியே!”
 நான் மவுனமாய் திரும்பி படுத்தேன்.

   மறுநாள், அந்த பெரியவரின் நிலத்தை போய் பார்த்தேன்! அந்த பள்ளி விதி மீறி அவருடைய நிலத்தை ஆக்ரமித்துக் கொண்டு இருப்பது அப்பட்டமாய் தெரிந்தது. அவருடைய புகாரில் நியாயம் இருந்தது. எனவே அவருக்கு சாதகமாய் ரிப்போர்ட் தயாரித்து  அது அவருடைய நிலம்தான் என்று சான்று கொடுத்துவிட்டேன்.

   அந்த பெரியவர் என் காலில் விழ  வந்தார்.  “ஐயா! நீங்க என் தெய்வம்! என் தாயை காப்பாத்தி கொடுத்து இருக்கீங்க! உங்களுக்கு நான் என்ன கைமாறு பண்ண போறேனே தெரியலையே!” என்றார் கண்கலங்கி.

   ”இதோ பாருங்க பெரியவரே! நான் என் கடமையத்தான் செஞ்சு இருக்கேன்! நீங்க கொடுத்த ரிஜிஸ்டர்ஸை வச்சு நிலம் உங்களுடையதுன்னு விசாரிச்சு உண்மைய சொல்லியிருக்கேன்! அவ்வளவுதான்! நீங்க பயப்படாதீங்க! இன்னும் ரெண்டு நாள்ல அவங்க இடத்தை காலி பண்ணலைன்னா திரும்பவும் ரிப்போர்ட் பண்ணி அவங்க அத்து மீறலை கிளியர் பண்ணிடலாம்!  “என்று சொல்லி அனுப்பினேன்.

       வீட்டிற்கு வந்தேன்! தெருவே பரபரப்பாக இருந்தது! கும்பல் கும்பலாய் கூடி இருந்தார்கள்! அந்த தெருவில் தான் என் சக பணியாளர்  ஒருவர் இருந்தார். அவர் வீட்டின் முன் ஏகப்பட்ட கும்பல்.

      “ என்ன ஆச்சு! ஏன் இப்படி கூடி இருக்கிறீங்க?”
    “அந்த வீட்டுல ஒரு ஆர்.ஐ இருந்தாருல்ல!”
   “ ஆமா! என் கூடத்தான் ஒர்க் பண்றாரு!”
   “அவரை ஒரு லாரிக்காரன் அடிச்சிட்டு போயிட்டான்! கை கால்ல எல்லாம் பலத்த அடி!”
   “அட பாவமே! “ உள்ளே ஓடினேன்.

  அங்கே கை கால் முகமெல்லாம் கட்டுக்களுடன்  அந்த ஆர்.ஐ.
 அவள் மனைவி புலம்பிக் கொண்டு இருந்தாள்.  “எல்லாம் ஊர் சாபம்! எல்லாத்துக்கும் காசு காசுன்னு காசு மேல குறியா இருந்தீங்களே! பாத்தீங்களா? உங்களாலாலெ பாதிக்கப்பட்டவங்க சாபம் என்ன பண்ணுத்துன்னு! ஏதோ நல்ல காலம்! உசுரோட வந்தீங்களே! இனிமேயாவது திருந்துங்க!” என்று புலம்பிக் கொண்டிருந்தாள்.

   அங்கே என் மனைவியும் நின்று கொண்டிருந்தாள். நான் அவளை பார்த்தேன். ஓடி வந்து கட்டிக் கொண்டாள். “ நாளைக்கு நம்ம பசங்களை கவர்மெண்ட் ஸ்கூல்லேயே சேர்த்து விடலாங்க!” என்றாள்.

     நான் அவளை அர்த்தமுடன் பார்த்தேன்.

    (முற்றும்)
(மீள்பதிவு)

டிஸ்கி} கடும் வேலை நெருக்கடி! அதனால் மீள்பதிவு! தீபாவளி முடிந்தவுடன் தான் வேலைப் பளு குறையும் என்று நினைக்கிறேன்! நேரம் கிடைக்கையில் நண்பர்களின் பதிவுகளுக்கு வருகிறேன்! நன்றி!

Monday, October 24, 2016

நொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள் பகுதி 23

நொடிக்கதைகள்! பகுதி 23

1.செல்ஃபி!

கோயிலில் தரிசனத்திற்கு காத்து நிற்கையில்  ”எப்பப்பா வீட்டுக்கு போவோம்?” என்று கேட்டு அழுத பையனை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தவன் சொன்னான் “இன்னும் ரெண்டே நிமிஷம்தான்! கோயில் கோபுர வாசலில் ஒரு செல்ஃபி எடுத்துட்டு உடனே கிளம்பிடலாம்!


2.தண்ணீ!

    ”சுப்ரீம் கோர்ட் ஆர்டரை கூட மதிக்கமாட்டேங்கிறான் கர்நாடகா கவர்மெண்ட்! சுத்த மோசம்! என்று பேப்பரை வீசி எறிந்தவர் வாசலில் காத்து நின்றவனிடம் உன் வயலுக்கு தண்ணி விட முடியாது என் போர்லேயே தண்ணி கொஞ்சம்தான் பாயுது!” என்றார்.

3. புதுப் போட்டி!

   இந்த வருசம் ஆன்வல் டேவுக்கு புதுப்போட்டி வச்சிருக்கோம்!
    என்ன அது? ஸ்டூடண்ட்ஸ் செல்பி எடுத்து காட்டணும் யாரோட செல்பி நல்லா இருக்கோ அவங்களுக்கு ப்ரைஸ்!

4. சுகாதாரம்!
      தெருமுழுக்க கூட்டிப் பெருக்கி ப்ளீச்சிங் பவுடர் போட்டு சுத்தப்படுத்தியவன் வீடு சாக்கடைகளின் நடுவே அமைந்து இருந்தது.

5. தீபாவளி ஃபண்ட்!
    மாசா மாசம் ஃபண்ட் போட்டு தீபாவளிக்கு மளிகை சாமான் வாங்கிட்டோம் என மக்கள் நினைக்க வட்டியில்லாம ரொட்டேஷனுக்கு ஒரு வருசமா பணம் கிடைச்சிட்டிருந்தது இந்தவருஷமும் கண்டினியு பண்ணவேண்டியதுதான் என்று நினைத்தான் ஃபண்ட் போட்டவன்.

6.மகிழ்ச்சி!

   “நாலு நாள் கடைக்கு லீவாண்டா!”
அப்ப இன்னிக்கு ஒரே நாள்ல கலெக்‌ஷனை அள்ளிருவோம்னு சொல்லு!
   மகிழ்ச்சியாக பேசிக்கொண்டனர் டாஸ்மாக் ஊழியர்கள்!

   7.குறுக்கு வழி!
    தர்ம தரிசனவரிசை மெதுவாக நகர ஸ்பெஷல் வரிசை வேகமாக நகர்ந்து கொண்டிருந்தது. பார்த்துக் கொண்டிருந்த குழந்தை கேட்டது. குறுக்கு வழியிலே போகனும்னா நிறைய செலவு ஆகுமாப்பா? 

8. திருட்டு!

    என்னோட கதையை அந்த இயக்குநர்  திருடிவிட்டார் என்றவனிடம் நீ எங்கிருந்து கதையை சுட்டே என்றார் விசாரித்தவர்.


9. விழிப்புணர்வு பிரசாரம்!
          சீனப் பட்டாசுகளை வாங்காதீர்கள்! அது கேடு விளைவிக்க கூடியது என்று விழிப்புணர்வு பிரசாரம் செய்து கொண்டிருந்தனர் சீன மொபைல்களின் வழி பேஸ்புக்கில்.

10. பூமராங்!
     ஒருநாளாவது ஸ்கூலுக்கு நேரத்துக்கு கிளம்பறியா? தினமும் லேட்டு! என்ற அப்பாவிடம் நீங்க ஒருநாளாவது ஆபிஸ்ல இருந்து சீக்கிரம் வீட்டுக்கு வந்திருக்கீங்களா? தினமும் லேட்டு என்றது குழந்தை!
11. ஓசி!

    டெய்லி ஓசி பேப்பருக்குன்னே ஒரு கூட்டம் வருது! இனிமே பேப்பரை நிறுத்திடப் போறேன்! ஜியோ சிம்ல மேகசின் ஆப் டவுன் லோட் பண்ணி படிச்சுக்க போறேன்! என்று மனைவியிடம் சொல்லிக்கொண்டிருந்தார் வீட்டுக்காரர்.

12. இட்ஸ் ஆல் த கேம்!
     பரபரப்பான போட்டியில் ஒரு ரன்னில் வெற்றி பெற்றது அணி. சே! சொதப்பிட்டோம்! தோத்து இருந்தா பெட்டிங்க்ல இன்னும் கொஞ்சம் பணம் அதிகமா கிடைச்சிருக்கும்! என்று நொந்து கொண்டார் அணிக்கேப்டன்.


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்!. நன்றி!

Saturday, October 22, 2016

கோணலானும் கழுதையும்! பாப்பா மலர்!

கோணலானும் கழுதையும்!  பாப்பா மலர்!


கோணங்கிபுரம் என்ற நாட்டைகோணலான்என்ற மன்னன் ஆண்டுவந்தான்.அவனுக்கு அசட்டு நம்பிக்கைகள் அதிகம்! காலையில் கோவேறு கழுதையைப்பார்த்தால் நல்லது என்பதற்காக படுக்கையறையில் ஒரு கோவேறுகழுதையை கட்டி வைத்திருந்தான் என்றால் பாருங்கள். இவனது அசட்டு நம்பிக்கைகளுக்கு அளவே இல்லாமல் போனது. நிறைய போலிச்சாமியார்கள் அறிமுகம் ஆகி நாட்டை கெடுத்து வந்தனர். அவர்களின் பேச்சை தட்ட மாட்டான் கோணலான்.

   அந்த நாட்டின் மந்திரி மன்னனின் கோணல் புத்திக்கேற்ப ஜால்ரா தட்டி பிழைத்துவந்தான். இல்லாவிட்டால் அவனுக்கு பிழைப்பு இல்லாமல் போய்விடுமே! சாமியார்கள் கூறினார்கள் என்று பெரிய யாகம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்த மன்னன் யாகத்திற்கான பொருட்களை மக்களிடம் பிடுங்கி இருந்தான். இந்த சமயத்தில்தான் அவனுக்கு பல்வலி வந்தது.

    வாயெல்லாம் வீங்கி பேசமுடியாமல் இருந்த மன்னனை கண்ட மந்திரி, ”மன்னா! என்ன ஆயிற்று ஏன் இப்படி முகத்தை உம்மென்று வைத்திருக்கிறீர்கள்?” என்றான். பல்வலியின் உச்சத்தில் கோபத்தில் மன்னன் கத்தினான்.    “அடேய் முட்டாள் கழுதையே! நானே பல்வலியில் துடிக்கிறேன்! நீ என்னை உம்மனாம் மூஞ்சி என்கிறாயா? அருகில் நில்லாதே ஓடிப்போ! ”என்றான்.

    பல பேர் முன்னிலையில் தன்னை கழுதை என்று அசிங்கப்படுத்திவிட்டானே இந்த அசட்டு  மன்னன்.இவனுக்கு தக்க தண்டனை  கற்பிக்க வேண்டும் என்று மனதில் கறுவிக் கொண்டான் மந்திரி. உடனே பவ்யமாக “ மன்னா! மன்னிக்க வேண்டும் தங்களுக்கு பல்வலி என்று தெரியாமல் உளறி விட்டேன் பல்வலிக்கு அருமருந்து என்னிடம் உள்ளது. தாங்கள் விரும்பினால்..” என்று இழுத்தான் மந்திரி!

   ”அடேய்! அடேய் முட்டாளே! முதலில் உன் வைத்தியத்தை சொல்
அப்புறம் மன்னிப்பு எல்லாம்!” என்று எரிந்துவிழுந்தான் கோணலான், “ சரி சரி உனக்கு இந்த வைத்தியம் எப்படி தெரியும் அதை முதலில் சொல்!” என்றான்.

  “ மன்னா இந்த சிறுவனுக்கு ஏது அவ்வளவு அறிவு! எல்லாம் தங்கள் குருநாதர் சித்தானந்தா சுவாமிகள் கூறியதுதான் என்றான் மந்திரி. “ குருநாதர் கூறியதா! அப்படி என்ன மருந்து அது? குருநாதரே  நீங்கள் இதுவரை கூறவில்லையே ?”அருகில் இருந்த சாமியாரை கேட்டான் மன்னன்.


  “.. அது…!” இழுத்தான் சாமியார். “ மன்னரே அவருக்கு இருக்கும் வேலையில் இதை என்னிடம் கூறியதை மறந்திருப்பார் என்ன குருநாதரே நான் சொல்வது சரிதானே! அன்று என் பல்வலிக்கு அருமருந்தை சொல்லி குணப்படுத்தினீர்களே! அதை மன்னருக்கு சொல்லலாமா?”என்றான் மந்திரி.
 “எப்போது சொன்னேன் நினைவில்லையே இருந்துவிட்டு போகட்டும் எப்படியோ மன்னரிடம் நல்ல பேர் வாங்கினால்  போதும் அதற்கு இந்த மந்திரி நல்ல வாய்ப்பை தந்திருக்கிறான் என்று மனதிற்குள் நினைத்துக்கொண்ட சாமியார், மந்திரியாரே! நீங்களே அந்த வைத்தியத்தை சொல்லிவிடுங்கள்! வயதாகி விட்டதால் நினைவு மழுங்கி விடுகிறது நினைவுக்கு வரவில்லை! என்றான் சாமியார்.

  என்ன இருந்தாலும் மேன்மக்கள் மேன்மக்களே! தான் கூறிய வைத்தியத்தை கூட மறந்து விடுகின்றனர் பார்த்தீர்களா மன்னரே! நம் குருநாதர் என் பல் வலிக்கு கழுதை வைத்தியம் சொன்னார் அதை இப்போது மறந்து விட்டார்! என்றார் மந்திரி. கழுதை வைத்தியமா? சீக்கிரம் சொல்லுங்கள்! என் பல்வலி உங்களுக்கு விளையாட்டாகிவிட்டது இன்னும் நீட்டி முழக்கி கொண்டு இருக்கிறீர்களே!   மாமன்னா! நான் கூறுகிறேன்!  

 ”மாமன்னா!  பல்வலிக்கு கழுதையின் பால் சிறந்த மருந்து!”
அப்படியானால் உடனே கழுதைப் பாலை கொண்டுவாருங்கள்!”
அங்கேதான் சிக்கலே இருக்கிறது மன்னா?”
“என்னய்யா சிக்கல் விக்கல் என்று…!”

 “கழுதைப்பாலை வலி உள்ளவரே கழுதையின் பின்னங்கால் வழியாகநேரடியாக அதன் மடியில் இருந்து கறந்து அருந்தவேண்டும் என்று குருநாதர் கூறியிருக்கிறார்!”
 “அப்படியா சொன்னீர்கள் குருநாதரே!”
குருநாதரால் மறுக்க முடியவில்லை வேறு வழியின்றி தலை ஆட்டினார்.  

     ” வீர தீர பராக்கிரமசாலியான நீங்கள் ஒரு கழுதையின் பின்னால் சென்று மடியில் பால் கறப்பது நன்றாக இருக்காது என்றுதான்….” இழுத்தான் மந்திரி.
  ”அப்படியானால் என் பல்வலி குணமாவது உனக்கு பிடிக்கவில்லை!...”
  ”நான் அப்படி கூறுவேனா மன்னா!”
 “பின் என்ன என் குருநாதர் சொல்லி எதை மீறி இருக்கிறேன்! உடனே ஒரு பால் கறக்கும் கழுதையை கொண்டுவர ஏற்பாடு செய்யுங்கள்.”

    உடனே ஓர் முரட்டு கழுதைக்கு ஏற்பாடு செய்தான் மந்திரி.

   கழுதை வந்ததும் சாமியாரைப் பார்த்து,” குருநாதரே! தயை செய்து எனக்கு சொல்லிக் கொடுத்தது போல மாமன்னருக்கும் கழுதைப் பால் கறப்பதை சொல்லி தாருங்கள்! பின்னர் மாமன்னர் பால் கறப்பார் ”என்றான்.

 சாமியார் அதிர்ந்து போனார். ”என்னது நான் உனக்கு சொல்லிக் கொடுத்தேனா?”

   ”வரவர உங்களுக்கு ஞாபகமறதி அதிகமாகிவிட்டது குருநாதரே! உங்கள் மந்திரத்தை கழுதையின் மடிக்காம்பில் ஓதினால்தானே அந்த மந்திரம் பாலில் சென்று அரசரின் பல்வலியைப் போக்கும்.?” கழுதையின் பால் கறந்து மன்னரின் துயர் தீருங்கள் நமட்டு சிரிப்புடன் சொன்னான் மந்திரி.

  சாமியார் வேறு வழியின்றி கழுதையின் பின்னங்கால் பக்கமாக சென்று மடியில் கை வைக்க முரட்டு கழுதை எட்டி ஓர் உதை விட்டது. பல் சிதறி விழுந்தது. ”ஆ! என் பல்! பல் போயிற்று!” என்று சாமியார் இரத்த வெள்ளத்தில் கதற

   ”மன்னா! உங்கள் பல்வலியும் போய்விடும்  குருநாதர் உங்களுக்காக பல்லையே இழந்துவிட்டார் நீங்களும் முயற்சியுங்கள்!” என்றான் மந்திரி.

   ”ஆஹா! ”என்று மன்னன் கழுதையின் பின்னங்கால் பக்கம் குனிய கோபம் கொண்ட கழுதை பலங்கொண்ட மட்டும் எட்டி ஓர் உதை விட்டது. அந்த உதையில் கோணலான் என்ற பெயருக்கேற்ப கோணாலாகி போனது மன்னரின் முகம்.  “ஆ! ஐயோ! என்று என் பல் பல்! பல் எல்லாம் உடைந்து போயிற்றே!”

  ”பல் இருந்தால்தானே மன்னா! பல்வலி வரும்! அதனால்தான் பல்லைப் பிடுங்க இப்படியொரு அருமையான வழியை சொன்னார் குருநாதர்.” என்றான்  மந்திரி இருவரையும் பழிவாங்கிய திருப்தியில் உள்ளூர நகைத்துக் கொண்டு…

 (திருத்திய மீள்பதிவு)
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!Related Posts Plugin for WordPress, Blogger...