“நீர் பூதம்” பாப்பா மலர்!

நீர் பூதம்”


   “டேய்  ஆகாஷ்! பாத்ரூம் போயி முகம் கழுவிட்டு வந்தியே அங்க தண்ணி குழாயை இறுக மூடிட்டு வர மாட்டியா? இப்ப பாரு எவ்வளோ தண்ணி வீணா போயிருக்கு!”  அம்மா சொன்னபோது
   “ஏம்மா! நமக்கு என்ன தண்ணிக்கா பஞ்சம்! சொந்தமா போர் போட்டு டேங்க் நிறைய நிரப்பி வச்சிருக்கோம்! கொஞ்சம் கீழே போனாத்தான் என்ன? இப்ப உயிரே போனா மாதிரி அலறுரே!” என்று அசால்டாய் பதில் சொன்னான் ஆகாஷ்.
   ”எதுவுமே இருக்குதுங்கிறதுக்கா வீணா செலவழிக்க கூடாதுடா! எப்பவுமே இப்படி நம்ம பூமியிலே தண்ணி சுரந்துகிட்டு இருக்குன்னு சொல்ல முடியாது. தண்ணிங்கிறதுக்காக இப்படி செலவு பண்ண முடியுமா?”
    சரி விட்டுத் தள்ளு! சின்ன பையன் தானே! கொஞ்சம் கவனக்குறைவா இருந்துட்டான்! ஏன் பெரிசு பண்ணிக்கிறே? ஆகாஷின் அப்பா அவனுக்கு சப்போர்ட்டுக்கு வந்தார்.
     “ இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் விட்டுக் கொடுத்துட்டே போயிட்டா அப்புறம் அவன் நாளைக்கு ரொம்ப கஷ்டப்படுவாங்க! கஷ்டமே தெரியாம வளர்க்கலாம்னு பார்த்தா நாளைக்கு அவன் தான் ரொம்ப கஷ்டப்படுவான். ஒரு சொட்டுத் தண்ணிக்கு வழியில்லாம எத்தனையோ ஜனங்க கஷ்டப்படுதுங்க! ஆனா இவன் தினமும் தண்ணியை வீணா செலவழிச்சிட்டே இருக்கான்.”
       ”அப்படி என்ன பண்ணிட போறான்! குளிக்கும் போது ஒரு பக்கெட் எக்ஸ்ட்ரா குளிக்கறான்! இதோ குழாயை மூடாம விட்டுட்டான் அவ்வளவுதானே! வளர வளர தானே தெரிஞ்சுக்குவான்! நீ போயி வேலையைப் பாரு!”
    நல்ல அப்பா! ரொம்ப தேங்க்ஸ்பா! என்று தனது அறைக்குள் சென்று ஹோம் ஒர்க் செய்ய ஆரம்பித்தான் ஆகாஷ்.
    அவன் இப்படித்தான். எதிலும் கொஞ்சமும் பொறுப்புணர்ச்சி கிடையாது. வீட்டில் தண்ணீர் குழாயைத் திறந்து விட்டுவிடுவான். மோட்டார் போட்டுவிட்டு நிரம்பி வழிந்து கொண்டிருக்கும் ஆப் செய்ய மறந்துவிட்டேன் என்பான். குடிக்கும் நீரை இரைத்து விளையாடுவான். கேட்டால் நம்மிடம் தான் நிறைய இருக்கிறதே கொஞ்சம் வீணானால் என்ன என்று கேட்பான்.

     அவனது அம்மா எவ்வளவோ சொல்லியும் திருந்தவில்லை ஆகாஷ். அன்று பள்ளியில் ஒரு டாக்குமெண்டரி திரையிட்டார்கள். அதில் நீர் மேலாண்மை குறித்து பல்வேறு தகவல்களை தந்தார்கள். நீர் மேலாண்மை இன்றி கிடைக்கும் நீரை வீணாக்கிய கிராமம் வறண்டு போயிருப்பதையும் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கிய கிராமம் செழித்து வளர்ந்திருப்பதையும் காட்டினார்கள்.
       தண்ணீர் இல்லாமல் ஒரு குடம் தண்ணீர் எடுக்க நீண்ட தொலைவு செல்லும் மக்களையும் அவர்கள் பருவ மழை சமயம் நீர் சேமித்து இருந்தால் இப்போது கஷ்டப்படத் தேவையில்லை என்றும் அந்த டாக்குமெண்டரி கூறியது.
      அதே நினைவுடன் வீடு திரும்பிய ஆகாஷ் வழக்கம் போல பாத்ரூம் சென்று முகம் கழுவி விட்டு அவசர அவசரமாக ஹொம் ஒர்க் செய்ய ஆரம்பித்தான். பாதி ஹோம் ஒர்க் செய்யும் போது  ஏதோ சொட் சொட் என்று சத்தம் கேட்க என்னவென்று பார்த்தான் பாத்ரூமில் இருந்து சத்தம் வந்து கொண்டிருந்தது. தண்ணீர் குழாயை மூடவில்லையோ? சரி அப்புறம் பார்த்து கொள்ளலாம் என்று நினைத்து மீண்டும் ஹோம் ஒர்க்கில் கவனம் செலுத்துகையில் பவர் கட் ஆனது.
    அப்போது அவனது அருகில் சொட் சொட் என சத்தம் அதிகமாகவே கேட்க ஆகாஷ் வியர்த்துப் போனான். ஒரு பெரிய நீர்க் குமிழி அவனை நோக்கி நகர்ந்து வந்தது.  ஆகாஷுக்கு நாக்கு உலர்ந்து போனது..
   அந்த நீர்க் குமிழி அப்படியே அவனை மூடிக்கொண்டது. அத்துடன் அப்படியே பறக்க ஆரம்பித்தது.  ”ஐயோ! வேணாம்! விட்டுடு!” என்று அவன் அலற வெறும் காத்துதான் வந்தது. அந்த குமிழி அப்படியே அவனை தூக்கிச்சென்று காலையில் அவன் டாக்குமெண்டரியில் பார்த்த கிராமத்தில் இறக்கியது.
    ”ஏய்! ஏய்! என்னை இங்கே ஏன் கொண்டு வந்தே?”
    ” நீதானே! தண்ணியை வீணாக்கின பையன்? இவங்க எவ்ளோ தண்ணிக்காக கஷ்டப்படறாங்க பார்த்துத் தெரிஞ்சிக்க!”
   ”அதான் காலையில ஸ்கூல்ல டாகுமெண்டரியிலே பார்த்தேனே!”
  “பார்த்தும் புத்தி வரலியே உனக்கு?”
   ”ஏன் நான் என்ன தப்பு செஞ்சிட்டேன்!”
”டாக்குமெண்டரியை பார்த்திருக்கே! தண்ணிக் கஷ்டம் பத்தி தெரிஞ்ச நீ திருந்தியிருக்க வேண்டாமா? முகம் கழுவின நீ தண்ணியை திறந்து விட்டுட்டு வந்திட்டே இல்லை!”

      ”இதெல்லாம் கரெக்டா சொல்றீயே! நீ யாரு?”
  ” நானா? ஹாஹா! நீதான் என்னை உருவாக்கினே! ஆனா உனக்கே என்னை தெரியலையா?”
   ”என்னது நான் தான் உருவாக்கினேனா?”
  ”நீன்னா நீ மட்டும் இல்லை! உன்னைப் போல நீரை வீணாக்கிற எல்லோரும் சேர்ந்துதான் என்னை உருவாக்கி  இருக்காங்க!”
   ”நீ… நீ யாரு?”
 ”நான் தான் நீர்ப்பூதம்!”
 ” பூதமா?”
”ஆமாம்! கிடைக்கிற தண்ணியை வீணாக்க வீணாக்க நான் சிறுக சிறுக வளர்ந்து பூதமா மாறி ஒருநாள் உங்க எல்லாரையும் விழுங்கப் போறேன்! இப்ப முதல்ல உன்னை விழுங்கறதுக்குதான் இங்கே கொண்டு வந்திருக்கேன்!”
     ”வேணாம்! வேணாம்! விட்டுரு!”
 ” உலகத்துலே எவ்வளவோ இடத்திலே  நல்ல தண்ணீரே இருக்கிறது இல்லை! ஆனா அவங்க எல்லாம் தண்ணியை சிக்கனமா பயன்படுத்தி நல்ல நிலைமையிலே இருக்காங்க! ஆனா நீங்க கிடைக்கற நல்ல தண்ணியைக் கூட வீணாக்கி விடறீங்க!”
  ” உங்க கொடுமைக்கு பயந்துதான் பூமிக்கு அடியிலே போய் ஒளிஞ்சிக்கிறோம்! அப்பவாவது விடறீங்களா? ஐநூறு அறுநூறு அடி போர் போட்டு சித்தரவதை பண்ணி பம்ப் செட் வைச்சு மேலே இழுத்து வர்றீங்க! அப்புறமாவது ஒழுங்கா யூஸ் பண்றீங்களா? இல்லை! காசுக்கு விக்கறீங்க? நீங்களா என்னை உற்பத்தி பண்ணீங்க விக்கறதுக்கு? நல்ல தண்ணியை எல்லாம் சேமிச்சு வைக்காம உறிஞ்சிட்டு அப்புறம் தண்ணி கிடைக்கலைன்னு காசு கொடுத்து வாங்கி அதையும் சிக்கனமா உபயோகப் படுத்த மாட்டேங்கிறீங்க!  தண்ணிக்காக ஒருத்தரை ஒருத்தர் அடிச்சிக்கறீங்க! பொது சொத்தை நாசம் பண்றீங்க! நீங்க எப்ப திருந்தறது?”
    ”தண்ணியை நீங்க வீணாக்க வீணாக்க நீர் பூதம் கொஞ்சம் கொஞ்சமா வளரும்! அந்த பூதம் அடுத்த உலகப் போருக்கே காரணமா அமைஞ்சிரும்! அப்புறம் நீங்க யாரும் உயிரோடு இருக்க முடியாது.  நீரை வீணாக்கிற எல்லோரையும் அழிக்கிறதா முடிவு பண்ணிட்டேன்! உன்னை விழுங்கப் போறேன்!”
   பூதம் ஆகாஷை அப்படியே விழுங்க.  ”ஆ! ஐயோ வேணாம்! வேணாம்! விட்டுரு! ”  அலறினான் ஆகாஷ்.
      “ஹோம் ஒர்க் எழுதறப்பவே தூக்கமா? தட்டி எழுப்பினா! விட்டுரு விட்டுருன்னு கத்தறே!  அப்படி என்னடா ஆகிப்போயிருச்சு!” அவனை போட்டு உலுக்கினாள் அவனது அம்மா.
    மிரள மிரள விழித்த ஆகாஷ்,  அம்மா! பாத்ரூம் குழாயை மூடிட்டு வந்திடறேன்! என்று பாத்ரூமூக்குள் ஓட வியந்தாள் அம்மா.
     தண்ணீர் பிரச்சனை எவ்வளோ பெரிய பூதமாய் வளர்ந்து நம்மையே முழுங்க காத்திருக்கிறது! தேவையில்லாமல் அதை வளர்த்துவிடக்கூடாது. நீரை வீணாக்க கூடாது. சேமிக்க வேண்டும். நம் நண்பர்களுக்கும் எடுத்து கூற வேண்டும் என்று உறுதி எடுத்தபடி பாத்ரூம் குழாயை அழுந்த மூடினான் ஆகாஷ்.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
   


Comments

  1. பொறுப்புணர்வினை உணர்ந்தவிதம் அருமை.

    ReplyDelete
  2. அருமையான விழிப்புணர்வுக் கதை நண்பரே

    ReplyDelete
  3. அருமையான கதை... வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. நல்லதொரு பகிர்வு. பாராட்டுகள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!