Tuesday, August 30, 2016

நொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள் பகுதி 17

நொடிக்கதைகள்!   பகுதி 17


வாஸ்து!
    பிரபல அடுக்குமாடி குடியிருப்புக்கள் கட்டுவதற்கு ப்ளான் போட்டுத்தரும் இஞ்ஜினியர் குமார் தன் புது வீட்டிற்கு ப்ளான் போட்டுத் தரும்படி வாஸ்து ஜோஸியரிடம் கேட்டுக்கொண்டிருந்தான்.

ஓசி!
    எவ்வளவு நேரம் காத்திருக்கிறது? காலையிலே வந்து கடையை திறந்தாத்தானே வியாபாரம் நல்லா நடக்கும்? சலூன் கடை வாசலில் காத்திருந்தவன் கோபத்துடன் கேட்டுவிட்டு சரி சரி அந்த பேப்பரை இப்படிக் கொடு என்று பேப்பரை விரித்து வாசிக்க ஆரம்பித்தான்.

பழங்கதை!
       இப்படித்தான் போனவருஷம் விடாது அடை மழை பேய்ஞ்சது….! என்று ஆரம்பித்த அப்பாவிடம் சரி சரி! அதெல்லாம் பேஸ்புக் மெமரீஸ்லே பார்த்து ஷேர் பண்ணிட்டேன்! விடு விடு! உன் பழங்கதையை என்றான்.

மடிப்பு!

     ”ஒரு நாளைக்கேனும் உங்க துணிகளை நீங்க மடிச்சு வைச்சுக்க கூடாதா?” என்றவளிடம் ”அப்புறம் நீ எதுக்கு இருக்கே? ”என்று கெத்தாக கேட்டவன் துணிக்கடையில் நுழைந்ததும் மடித்து வைக்க ஏராளமான புடவைகள் காத்து இருந்தன.

க்ளீன் போல்ட்!
   சாக்லெட் நிறைய சாப்பிட்டா பல் சொத்தையாயிரும்னு சொல்லி எனக்கு மட்டும் சாக்லெட் வாங்கி வரமாட்டேங்கிற! ஆனா ஸ்மோக் பண்ணா லங்ஸ் ஓட்டையாயிரும்னு தெரிஞ்சும் நீ மட்டும் தினமும் ஸ்மோக் பண்றியேப்பா! என்று மகள் கேட்டபோது பதில் கூற முடியாமல் முழித்தான் அசோக்.

பீப்புள் மைண்ட்!
     வரிசையாக ஜெயித்துக்கொண்டிருந்த அணியை பாராட்டிக்கொண்டிருந்தவர்கள் ஒருநாள் திடீரென தோற்கவும் “ மச்சி பிக்ஸிங்க்”டா என்று தூற்ற ஆரம்பித்தார்கள்.


ரிடையர்மெண்ட்!
    ரிடையர்மெண்ட் வயதை 60 ஆக அதிகரிக்க எதிர்ப்பு தெரிவித்த அமைச்சர் 80 வயதிலும் விடாப்பிடியாக பிடித்துக் கொண்டிருந்தார் அமைச்சர் பதவியை..

 ஒழுங்கு!
    நடக்க கூட இடம் இல்லாம ப்ளாட்பார்ம் முழுக்க கடை விரிச்சிடறாங்க! ஒரு டிஸிப்ளின் கிடையாது. ஜனங்க கிட்டே!  தடுக்க வேண்டிய போலீஸ் காசு வாங்கிட்டு வேடிக்கை பார்க்குது! புலம்பிக் கொண்டே நடந்தவன் சுரங்கப்பாதையை தவிர்த்துவிட்டு  சாலையை வேகமாக கடந்தான்.

சாபம்!
    வி.ஐ.பி தரிசனம் என்று சிபாரிசோடு குறுக்கே புகுந்து ஃப்ரியாக சாமி தரிசனம் செய்து ஆசி பெற்றவர் சாபம் வாங்கிக் கொண்டிருந்தார் நீண்ட வரிசையில் கால் கடுக்க நின்ற பக்தர்களிடம்!

பெவி குயிக்!
     அப்பா! நாளைக்கு வரும்போது பெவி குயிக் வாங்கிட்டு வர்றியா? என்ற குழந்தையிடம் எதுக்குப்பா அது? என்று கேட்டான் பிஸினஸ்மேன் சுதாகர். அது உடைஞ்சதை ஒட்டுமாமே நீதானே அம்மாக்கிட்டே நம்ம உறவு உடைஞ்சு போச்சுன்னு சொன்னியே என்றது குழந்தை.


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்!

Monday, August 29, 2016

தளிர் ஹைக்கூ கவிதைகள்!புதிய வீட்டில்
கண்ணீர் சிந்தினர்
ஹோமப் புகை!

வெள்ளம் பாய்ந்தது
மகிழ்ந்தார்கள்!
ஒளி!

எல்லா ரகசியங்களும்
உறங்குகின்றன
இருட்டு!

கேள்விக்கணைகள் துளைக்கிறது
சிதறுகின்றது அறிவு!
குழந்தையின் வினா!


விழிகள் மூடியதும்
விரிந்தது காட்சி!
கனவு!

காதலி வருகை!
கனிந்தது சூரியன்!
மேகம்!

தடம் புரண்டது தொடர்வண்டி!
பாதையில் மனிதன்!
எறும்புகள்!


தென்றல் வந்ததும்
தேய்ந்து போனது
சூரியன்!

ஒளிந்து கொண்டதும்
ஓடிப்போனது தூக்கம்!
காற்று!

 ஆடும் வீடுகள்
ஆனந்தமானது மனசு!
தூக்கனாம்குருவி கூடு!


மறைந்த சூரியன்!
காட்டிக் கொடுத்தன
பறவைகள்!

உச்சியில்
உதயமானது உப்புநதி!
வியர்வை!

அலுக்கவில்லை
பயணம்!
குழந்தைகள் உலகம்!


துகில் உரித்தார்கள்
பசி அடங்கியது!
வாழைப்பழம்!

சிதறிய மணிகளை
சேகரித்தன சிப்பாய்கள்!
வயலில் பறவைகள்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Sunday, August 28, 2016

அமேசான் காடுகளும் சஹாரா பாலைவனங்களும் எப்படித் தோன்றின? நூல் விமர்சனம்

 அமேசான் காடுகளும் சஹாரா பாலைவனங்களும் எப்படித் தோன்றின?


இந்த புத்தகத்தை வாங்கி வாசித்து இரண்டு ஆண்டுகள் கடந்திருக்கும். நண்பர் பி. கருணாகரன் அவர்களை முகநூல் மூலம் அறிந்து நட்பு பாராட்டி அவரது இரண்டு நூல்களை வாங்கினேன் ஒன்று அவர் நிருபராய் பணியாற்றியபோது ஏற்பட்ட பரபரப்பான அனுபவங்களை சொல்லும் காகிதப் படகில் சாகசப் பயணம். இப்போது இதழியல் படிக்கும் நிருபர்களாய் இருக்கும் பலருக்கும் பாடமாய் அமைய வேண்டிய புத்தகம். மற்றொன்று அமேசான் காடுகளும் சஹாரா பாலைவனங்களும் எப்படித் தோன்றின? என்னும் குழந்தை இலக்கியம்.

குழந்தைகளே உலகின் முதல் விஞ்ஞானிகள் என்று எழுதி கையோப்பம் இட்டு அனுப்பி இருந்தார் பெ. கருணாகரன். அது எவ்வளவு பெரிய உண்மை! அத்தகைய குழந்தைகளுக்கு கதை சொல்லுவது என்றால் எவ்வளவு பெரிய விஷயம். ஆனால் அதை அவ்வளவு எளிமையாக சொல்லி முடிக்கின்றார் பெ. கருணாகரன். அரும்பு என்னும் சிறுவர் இதழில் வெளிவந்த கதைகளை தொகுத்து நூலாக்கி இருக்கிறார். இதில் மற்றொரு மகிழ்ச்சியான ஆச்சர்யமான விஷயம்.இந்த நூலில் உள்ள பதிமூன்று கதைகளுக்கும் படங்கள் வரைந்தவர்கள் குழந்தைகளே!

 நீண்ட முன்னுரையில் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்றும் நமது கனவுகளை குழந்தைகள் மேல் திணிக்காமல் அவர்களின் கனவுகள் மெய்ப்பட ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர்களின் சிறு சிறு திறமைகளை ஊக்குவிக்க வேண்டும் அவர்களின் கற்பனைத்திறனை வளர்க்க வேண்டும். தன்னம்பிக்கை விதையை ஊன்ற வேண்டும் என்று சொல்கிறார் ஆசிரியர்.

    இப்புத்தகத்தில் உள்ள கதைகள் குழந்தைகளுக்கு அறிவுரை சொல்லும் கதைகளாக இல்லாமல் பேண்டசியாக மட்டும் இல்லாமல் அவர்களின் கற்பனைத்திறனை விரிவாக்கும் வகையில் அமைந்துள்ளது கூடுதல் சிறப்பு.

  கதைகளின் ஊடே சமகால அறிவியலை புகுத்தியிருப்பது அவரின் திறமையை பறை சாற்றுகின்றது.

 தவளை ஒன்று காட்டில் நடக்கும் பாட்டுப்போட்டியில் வெல்வதற்காக மற்ற விலங்குகளை ஏமாற்றி ஐஸ்கிரிம் கொடுத்து குரல் கெட்டுப்போக செய்து பாட்டுப் போட்டியில் ஜெயிக்கிறது. பரிசும் பெறுகின்றது. ஆனால் கடவுள் சும்மா இருப்பாரா? நீ இப்படி செய்தது தவறு என்று சொல்லி தவளையின் குரல் கர்ண கடூரமாக இருக்கும்படி சபிக்கிறார். அன்றுமுதல்தான் தவளையின் குரல் யாரும் கேட்க முடியாத அளவுக்கு கடூரமாக மாறிவிட்டதாம். என்னவொரு கற்பனை பாருங்கள்.

ஓசோன் படலம் ஓட்டையாகிவிட்டது என்று நாமெல்லாம் புலம்புகிறோம். ஆனால் ஓர் சிறுவன் அதை தைக்க புறப்படுகின்றான் அதற்கு உதவும் சிலந்தி, முள்ளம்பன்றி, ஒட்டகச்சிவிங்கி, மான் இவற்றை பற்றி அறிய வேண்டுமா? உடனே புத்தகம் வாங்கி படியுங்கள் அசந்து போவீர்கள்.

புத்தகத்தின் தலைப்பான அமேசான் காடுகளும் சஹாரா பாலைவனங்களும் எப்படித் தோன்றின? அருமையான கற்பனை! மரங்களை வெட்டி குடியிருப்புக்கள் தொழிற்சாலைகள அமைப்போருக்கு சரியான சவுக்கடி! மனிதர்களுக்கு எதிராக மரங்கள் கடவுளிடம் வேண்டி ஓட கால்களை பெற்றுக் கொள்கின்றன. மனிதர்கள் அண்ட முடியாத இடத்திற்கு சென்று விடுகின்றன அதுதான் இப்போதைய அமேசான் காடுகள் என்றும் மரங்கள் முன்பு இருந்த இடம்தான் இப்போதைய சஹாரா பாலைவனம் என்றும் சொல்லி அசர வைக்கிறார்.

 காட்டில் அரசாட்சியை ஒழித்து மிருகநாயகம் அமைத்த முயலின் புத்திக் கூர்மையை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை. வஞ்சக நரியின் வேஷம் கலைந்து அது பயத்திலேயே இறப்பதாகட்டும் சரி கரடி சொன்ன புரட்சி தீர்ப்பாகட்டும் சரி ஒவ்வொரு கதையும் ஓ போட வைக்கின்றது.
நிலங்களை விற்று வீட்டுமனைகளாக்கும் வியாபாரிகளுக்கு சவுக்கடியாக உணவளிக்கும் தாயை அழிக்கலாமா என்ற கதை உப்பு வியாபாரிக்கு பாடம் புகட்டும் கதை மிஸ்டர் பாரஸ்ட் போட்டி நடக்கும் கதை எல்லாமே சுவாரஸ்யம்.

 பொதுவாக குழந்தைகளுக்கு விலங்குகள் பேசுவது, அதன் தந்திரம், புத்திசாலித்தனமாக நடந்து கொள்வது எல்லாம் மிகவும் பிடிக்கும். குழந்தைகள் எதை ரசிக்குமோ அதை உணர்ந்து சுவைபட எழுதுவது ஓர் கலை. அந்த கலை பெ. கருணாகரன் சாருக்கு இயல்பாக வருகின்றது. இன்னும் சில குழந்தை இலக்கியங்கள் எழுத அவர் முயற்சிக்கலாம். இவரது இந்த நூல் பற்றி சமீபத்தில் முகநூலில் ஒரு நிலைத்தகவல் போட்டிருந்தார். இந்த புத்தகம் பற்றி பெரிதாக நினைக்கவில்லை! ஆனால் அதற்கு தற்போது விருது கிடைத்துள்ளது என்று. மேலும் பல விருதுகள் கிடைக்க வேண்டிய புத்தகம் இது.

   எல்லா பள்ளிகளிலும் உங்கள் வீட்டு குழந்தைகளிடமும் இருக்க வேண்டிய அருமையான புத்தகம்.

வெளியீடு: குன்றம் பதிப்பகம், 73/31 பிருந்தாவனம் தெரு, மேற்குமாம்பலம், சென்னை 33. அலைபேசி: 9940010830
விலை ரூ 45.00


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Saturday, August 27, 2016

நன்றி கொன்ற விலங்கு! பாப்பாமலர்!

நன்றி கொன்ற விலங்கு! பாப்பாமலர்!


ரொம்ப காலத்துக்கு முன்னாலே ஒரு அடர்ந்த காடு இருந்தது. அந்த காட்டில வேடன் ஒருத்தன் இருந்தான். அவன் வில்லில் இருந்து அம்புகள் புறப்பட்டால் எந்த விலங்கும் செத்துவிடும். குறி தவறாமல் எய்யக் கூடியவன். கருணையே இல்லாத கொடியவன்.
  ஒரு நாள் அவன் வேட்டைக்குப் புறப்பட்டான். அன்னிக்கு அவனுக்கு நேரமே சரியில்லை! பகல் முழுதும் அலைந்தும் ஒரு விலங்கும் அவனுக்கு சிக்கவே இல்லை! உணவில்லாமல் பசி வேறு அவனை கொடுமைப் படுத்தியது. வெயிலில் அலைந்தமையால் தாகம் வேறு. கையில் கொண்டுவந்திருந்த நீரெல்லாம் காலியாகிவிட்டது. பொழுதும் இருட்ட மிகவும் சோர்வோடு தன்னோட இருப்பிடத்துக்கு புறப்பட்டான்.
  அந்த நேரம் பார்த்து திடீர்னு மேகங்கள் சூழ்ந்துகிச்சு! இடி முழங்கிச்சு! “சோ’ன்னு மழை கொட்ட ஆரம்பிடுச்சு. அவன் மழையில் முழுக்க நனைந்து விட்டான். கையில் இருந்த வில் அம்பு எல்லாம் அடித்த சூறாவளி மழையில நழுவிடுச்சு! ஒதுங்கக் கூட இடம் இல்லை. குளிருல நடுங்கிட்டு இருந்தான். அந்த சமயம் “பளிச் பளிச்”னு இருட்டுல ரெண்டு புள்ளிகள் மின்னுச்சு! அது ஒரு புலி! அது வேடன் மேல பாய தயாரா நின்னுச்சு!
   வெலவெலத்துப் போன வேடன் பக்கத்துல இருந்த ஒரு பெரிய மரத்துமேல மடமடன்னு ஏறிட்டான். புலிக்கு மரம் ஏறத் தெரியாது. அது மரத்தையே சுத்தி சுத்தி வந்தது “ வேடனே! எப்படி இருந்தாலும் நீ கீழே இறங்கித்தானே வரவேண்டும்! நான் பசியோடு இருக்கிறேன்! உன்னை சாப்பிடாமல் விடமாட்டேன்!” சீறியது புலி.
 வேடன் அஞ்சினான். இன்னும் கொஞ்சம் மேலே ஏறினான். அங்கே அவனுக்கு அதிர்ச்சி! கரடி ஒன்று அங்கே படுத்திருந்தது. இருதலைக் கொள்ளி எறும்பு போல வேடன் தவித்துப் போனான். அப்போது கரடி சொன்னது. வேடனே! அஞ்சாதே! நீ என்னுடைய விருந்தாளி! என்னுடைய வசிப்பிடத்திற்கு வந்து இருக்கிறாய். விருந்தாளியான உன்னை நான் கொல்ல மாட்டேன்! நீ என் பகைவனே ஆனாலும் என்னை அண்டிவந்துவிட்டாய் உன்னை காப்பது எனது கடமை நீ பயப்படாமல் இந்த இரவை இங்கே கழிக்கலாம்!” என்று சொன்னது.
   உடனே கீழேயிருந்த புலி சொன்னது, கரடி தம்பியே! நீ செய்வது முறையோ? இவன் கொடூரமான வேடன்! நம் இனத்தை அழிப்பதற்கென்றே பிறந்தவன். இரக்கம் இல்லாத இவனுக்கு நீ இரங்கலாமா? நம் இனமில்லாத இவனுடன் கூட்டுச் சேர்ந்து என்னை பட்டினி போடலாமா? இவனை கீழே விரட்டி விடு! நான் உண்ட பிறகு உனக்கும் உணவு ஆவான்” என்றது

   கரடி சொன்னது, “புலியாரே! நீர் சொல்வது அனைத்தும் உண்மைதான்! ஆனால் இவன் என்னை அடைக்கலம் தேடி வந்து இருக்கிறான். அடைக்கலம் ஆனவனை விரட்டுவது தப்பு! நான் அந்த தவறை செய்யமாட்டேன்!” என்றது.
இரவு பொழுது கடந்து கொண்டிருந்தது. நள்ளிரவை நெருங்குகையில் வேடன் தூக்கத்தில் மயங்கினான்.  அப்போது கரடி சொன்னது. வேடனே! நீ தூக்கத்தில் மயங்கி கீழே விழுந்தால் புலி உன்னை கொன்றுவிடும்! நீ என் தொடையில் தலை வைத்து உறங்கு! நான் உன்னை பற்றிக் கொள்கிறேன்! என்றது.
  வேடனும் கரடியின் தொடைமீது தலை வைத்துப் படுத்துக் கொண்டான். உடனே புலிக்கு கோபம் வந்து கரடியை வசை பாடியது. இனத் துரோகியே! உன் பகைவனுக்கு உதவுகிறாயே! இப்போது கூட ஒன்றுமில்லை! உறங்கும் அவனைத் தள்ளிவிடு! போதும்!” என்று சொன்னது.
    “ நம்பி வந்தவனை கைவிட மாட்டேன்! வேடன் ஆயிரம் கொடியவனாக இருந்தாலும் இன்று அவன் என் விருந்தாளி. அவனை தள்ளிவிட முடியாது ”என்று மறுத்தது.
  நேரம் கடந்தது இப்போது வேடன் முழித்துக் கொண்டான். கரடிக்கு அசதியாக இருந்தது. வேடனே! இரவெல்லாம் கண் விழித்ததில் அசதியாக இருக்கிறது. நான் உன்மீது தலைவைத்து படுக்கிறேன்! என்னைப் பிடித்துக் கொள்! கவனம்! கொஞ்சம் சிதறினாலும் புலி கொன்றுவிடும்! என்று சொன்னது.
  வேடன் மடியில் கரடி படுத்துக் கொண்டது. தூங்கியும் விட்டது. புலி இப்போது வேடனிடம் சொன்னது.

  “ வேடனே! நான் மிகுந்த பசியோடு உள்ளேன்! எனக்கு கட்டாயம் உணவு தேவை! அது நீயாக இருந்தால் என்ன? கரடியாக இருந்தால் என்ன? இந்த கரடி உன்னை கொல்லாமல் இருக்கும் என்பதற்கு என்ன உத்திரவாதம்! விடிந்த பிறகு உன்னை கொன்றுவிட்டால் என்ன செய்வாய்? உன்னிடம் ஆயுதம் எதுவும் இல்லை அல்லவா? பசியோடு இருப்பவனுக்கு பழையது கிடைத்தால் என்ன பலகாரம் கிடைத்தால் என்ன? எல்லாம் ஒன்றுதான்! நீ கரடியைத் தள்ளிவிடு! நான் அதை தின்றுவிடுகிறேன்! அப்புறம் சென்று விடுவேன். நீயும் காலையில் தைரியமாக வீட்டுக்கு போகலாம்” என்றது.
 வேடன் நன்றி மறந்தான். அவன் தான் கொலைக்காரனாச்சே! தனக்கு இடம் கொடுத்து உதவிய கரடியை அதன் உதவியை மறந்தான். புலியின் மயக்க பேச்சில் மதி மயங்கி கரடியை பிடிச்சு கீழே தள்ளினான்.
  கீழே விழுகையில் கரடி சுதாரித்துக் கொண்டது. பக்கத்து கிளையை தாவிப் பற்றிக் கொண்டது. பின்னர் விடுவிடுவென மேலே ஏறியது.
  வேடனுக்கு இப்போது கால்கள் நடுங்கின. கீழே புலி! கரடி வேறு மேலே வருகிறது! அதை நாம் கீழே தள்ளி விட்டிருக்கிறோமே! அந்த கோபத்தில் அது நம்மை கொன்றுவிடும் என்று அஞ்சி நடுங்கினான்.
    மேலே வந்த கரடி, வேடனைப் பார்த்து சொன்னது, நண்பா! அஞ்சாதே! நீ வேண்டுமானால் நன்றி மறந்திருக்கலாம்! நம்பிய என்னை நன்றி மறந்து புலிக்கு உணவாக கீழே தள்ளினாய்! அது உனது குணம். என் குணம் அதுவன்று. நீ என் இருப்பிடம் வந்த அடைக்கலப் பொருள்! விருந்தாளி! உன்னைக் கொல்லவும் மாட்டேன்! புலிக்கு விருந்தாக அனுப்பவும் மாட்டேன்! விடியும் வரை தைரியமாக நீ இங்கே  தங்கலாம்! நீ செய்த பிழையை நான் மன்னித்துவிட்டேன்! நீ பயப்படாதே! என்றது.
    வேடன் அப்போதே செத்துப் போய் விட்டான். தலை குனிந்தவாறே!  கரடியாரே! கொடூரமான கொலைக்காரனான என்னையும் காத்து மன்னித்து அருளினீர்! நான் சிறியவன் ஆனேன்! என்று கதறினான்.
புலி ஏமாந்து போனது! விலங்கானான் மனிதன்! மனிதனானது கரடி!

(செவிவழி கதை)
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

    

Thursday, August 25, 2016

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 76

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 76


1.   மன்னா! நம் சிப்பாய்கள் எதிரியிடம் விலை போய்விட்டார்கள்!
”சீப் பாய்கள்” ஆகிவிட்டார்கள் என்று சொல்லுங்கள்!


2.   தலைவர் தன் வாழ்நாள்ல போலீஸ் ஸ்டேஷன் படி ஏறினது இல்லையாமே!
ஆமாம்! எப்பவும் குண்டு கட்டா தூக்கிட்டுதான் போவாங்க!
3.   மன்னர் ரொம்ப செல்பிஷ்ஷா இருக்கிறார்னு தளபதியார் புலம்பறாரே!
நாட்டிய பெண்களோடு செல்ஃபி எடுக்கும்போது தளபதியை உடன் சேர்த்துக்கொள்வதில்லையாம்!

4.   தலைவர் ரெகுலரா பாட்டுக்கிளாஸ் போறார்னு சொல்றியே எங்கே?
சட்ட சபைக்குத்தான்!

5.   தலைவர் கையில கிடாரோட எங்க கிளம்பிட்டார்…?
சட்ட சபைக்குத்தான்!

6.   நகைக் கடன் தரோம்னு சொன்னோம் அதுக்காக நீங்க உங்க சொந்தக்காரங்க வீட்டு கல்யாணத்துக்கு போட்டுகிட்டு போறதுக்கெல்லாம்  நகை இரவல் கேக்கிறது கொஞ்சம் கூட நல்லா இல்லை!

7.   திருடனை பிடிக்காம விடமாட்டேன் என்று மன்னர் கர்ஜிக்கிறாரே எந்த திருடன்?

         மன்னர் கிரிமினல் கேஸ் விளையாடுகிறார் அதைத்தான்
        சொல்கிறார் 


8.   தலைவர் ஏன் ரொம்ப வருத்தமா இருக்கார்?
  போட்டி சட்டசபையிலே கூட அவருக்கு முதல்வர் போஸ்டிங் கொடுக்க மாட்டேங்கிறாங்களாம்!

9.    என் மனைவி விருப்பப்பட்ட ஸ்கூல்லே பையனுக்கு எல்கேஜி சீட் வாங்கிட்டேன்!
அப்ப இத்தனை நாளா கஷ்டப்பட்டு சேர்த்த பணமெல்லாம் நஷ்டப்பட்டு போச்சுன்னு சொல்லு!

10. அந்த டாக்டருக்கு நக்கல் அதிகம்!
எப்படிச் சொல்றே?
அவரு ஆபரேஷன் பண்ண போற பேஷண்ட் டெட் லைன்ல இருக்கிறதா சொல்றாரே!

11. மன்னர் போர் என்றதும் முதல் ஆளாய் நிற்பார்!
போர்க்களத்திலா…
 ஊகும்! பதுங்கு குழியில்! 

12. புலவர் ஏன் எகிறி குதித்துக் கொண்டு இருக்கிறார்?
மன்னர் கொடுத்த செக் பவுண்ஸ் ஆகிவிட்டதாம்!


13. எங்கள் தலைவர் அடிக்கடி வெளிநடப்பு செய்வார்தான்! அதற்காக அவருக்கு சபையில் இருக்கை ஒதுக்காத ஆளுங்கட்சியினரை வன்மையாக கண்டிக்கிறேன்!

14.  பொண்ணு பார்க்க நல்லாத்தான் இருக்கும் வாய் மட்டும் கொஞ்சம் செவந்திருக்கும்…!

  அப்ப ”செவ்”வாய் தோஷம்னு சொல்லுங்க!

15. எதிரி அசரும் நேரம் பார்த்து நம் மன்னர்…!
  புகுந்து தாக்கிவிட்டாரா?
இல்லை! மீம்ஸ் போட்டுத் தாக்கிவிட்டார்!

16.   அவர்கிட்ட எப்ப கடன் கேட்டாலும் டைட்டா இருக்கு அப்புறம் பார்க்கலாம்னு சொல்றாரே
  அவர் போட்டிருக்கிற பாண்ட் ரொம்ப டைட்டா இருக்காம் பணம் எடுக்க முடியாதாம்!


17. செல்போன் மணி அடித்தவுடன் மன்னரை காணவில்லையே என்ன ஆச்சு?
எதிரி மிஸ்டு கால் கொடுத்தவுடன் மன்னர் மிஸ் ஆகிவிட்டார்!

18. தலைவர் கட்சிக்காக மாடுமாதிரி உழைச்சார்…!
அப்புறம்!
கறக்கற வரைக்கும் கறந்துட்டு விரட்டி விட்டுட்டாங்க!
19. தலைவர் ரொம்ப சோகமா இருக்காரே ஏன்?
இப்பல்லாம் அவரை நக்கல் பண்ணி யாரும் மீம்ஸ் போட மாட்டேங்கிறாங்களாம்!

20.  ஆடி போய் ஆவணி வந்தா மாற்றம் வரும்னு ஜோஸ்யன் சொன்னது பலிச்சிருச்சு தலைவரே!
   என்ன என்ன?
உங்களை புழல்ல இருந்து வேலூருக்கு மாத்திட்டாங்க!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

     

கனவு மெய்ப்பட்டது! இந்த வார விகடனில் எனது ஜோக்!

ஏறக்குறைய எனது இருபது வருட கனவு இன்று பலித்துள்ளது. குறைந்தது என்னுடைய பன்னிரண்டாவது வயதில் இருந்து ஆனந்தவிகடன் வாசிக்கிறேன். அதில் வரும் படைப்புக்களை பார்த்து பிரமித்துப் போயிருக்கிறேன்! பின்னாலில் நான் கையெழுத்துப் பிரதி எழுத ஆரம்பித்த போது விகடனில் ஏதாவது ஒருவகையில் நம் பெயர் இடம்பெற வேண்டும் என்று நினைத்து இருக்கிறேன். ஆனால் சிறுவர் கதைகள் எழுதியமையால் விகடனுக்கு ஏதும் அனுப்பியது இல்லை! இடையில் எழுத்து வாசம் மறந்து போய் ஒரு கேப் வந்துவிட்டது.

2011 முதல் வலைப்பூவில் மீண்டும் எழுதினாலும் பத்திரிக்கைகளுக்கு எழுத முயற்சித்தது இல்லை! பாக்யா எஸ்.எஸ் பூங்கதிர் சார் ஊக்கத்தினால் பாக்யாவிற்கு சில ஜோக்ஸ் எழுதி அனுப்ப பிரசுரம் ஆனது. அதைத் தொடர்ந்து வாரமலரில் ஒன்றிரண்டு பிரசுரம் ஆனது. ஆனால் எனது கனவு ஆனந்தவிகடனில் எனது ஜோக் வரவேண்டும் என்பதுதான்.

கடந்த நவம்பர் மாதம் முதல் தொடர்ந்து முயற்சித்து கொண்டு இருந்தேன். இதுவரை இருநூறுக்கும் அதிகமான ஜோக்ஸ் அனுப்பி இருப்பேன்! ஒன்று கூட பிரசுரம் ஆகாமல் இருந்தது. வாராவாரம் நமது ஜோக் கண்டிப்பாக வரும் என்று விகடன் வாங்கி புரட்டி பார்ப்பேன்! ஒன்றும் வந்திருக்காது. இருந்தாலும் முயற்சியை கைவிடவில்லை!

இந்த வாரம் இன்று விகடன் வாங்க கடைக்குச் செல்ல முடியவில்லை! கொஞ்சம் வேலை! கிருஷ்ண ஜெயந்தி கோயில் பணி அதிகம். ஏழு மணிக்கு பேஸ்புக் ஓப்பன் பண்ணிணால் புதுவண்டி ரவீந்திரன் சார் இன் பாக்ஸில் விகடனில் ஜோக் பிரசுரம் ஆனதிற்கு வாழ்த்துக்கள் என்று காலையிலேயே மெசேஜ் அனுப்பி இருக்கிறார்.
என்னால் நம்பவே முடியவில்லை! இப்படியே பதில் அனுப்பினேன். நம்ப முடியவில்லை! வாழ்த்தியமைக்கு நன்றி என்றேன். உடனே அவர் ஜோக் வந்த பக்கத்தை ஸ்கேன் செய்து அனுப்பியதோடு எனது வாட்சப் எண் விசாரித்து தமிழக ஜோக் எழுத்தாளர்கள் வாட்சப் குழுவிலும் இணைத்துவிட்டார். அத்துடன் அலைபேசியிலும் தொடர்பு கொண்டு வாழ்த்தினார். இந்த நாளை என்னால் மறக்க முடியாது.

என் கால் நூற்றாண்டு கனவு பலித்து இருக்கிறது! கனவை மெய்ப்பட வைத்த விகடன் குழுமத்திற்கும் ஆசிரியர் குழுவினருக்கும் மேலும் தொடர்பு கொண்டு வாழ்த்திய புதுவண்டி ரவீந்திரன் சாருக்கும் என்னுடைய எழுத்துக்களை ஊக்கப்படுத்தி வரும் வலையுலக நட்புக்கள் மற்றும் எஸ். எஸ். பூங்கதிர் சார் அவர்களுக்கும் எனது கோடானுகோடி நன்றிகள்!

Wednesday, August 24, 2016

அவசர அவசரமாய் நொடிக்கதைகள்! நொடிக்கதைகள் பகுதி 16

நொடிக்கதைகள்! பகுதி 16.

அவசரம்!

இன்னும் ஐந்து நிமிடம் தான் இருக்கிறது! பாடவேளை முடியப்போகிறது..! அவசர அவசரமாக அந்த கணக்கை போர்டில் போட்டு முடிக்கவும் மணி அடிக்கவும் சரியாக இருந்தது. டீ எடுத்து வந்த சேட்டனிடம் புன்னகையுடன் ஒரு நிமிஷம் என்று சொல்லிவிட்டு காப்பி பண்ணிக்கோங்க! என்று மாணவர்களிடம் சொன்னவர் டீ அருந்த சென்றார்.

அவசரம்!
     சிவப்பு விளக்கு ஒளிர்வதை முறைத்துப்பார்த்துக் கொண்டிருந்த வாகனங்கள் பச்சை ஒளிர்ந்ததும் சடுதியில் பறந்தன அவசரமாய்!

அவசரம்!
    தேர்தல் அவசரம் என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வேகமாக சென்ற வாகனங்கள் ஒதுங்கி வழிவிட்டன ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு!

அவசரம்!
   அவசரமாய் ரத்தம் தேவைப்படுவதாக வந்த பேஸ்புக், வாட்சப் தகவல்களைஅவசரமாய் ஷேர் செய்த பலரும் தங்கள் இரத்தத்தை ஷேர் செய்ய விரும்பவில்லை!


அவசரம்:
       சர்வதேசப் போட்டியில் வென்றவன் தம் ஜாதிக்காரனாக இருக்க வேண்டும் என்று அவசரமாய் தேடிக்கொண்டிருந்தார்கள் கூகுளில்

அவசரம்!
   அவசர அவசரமாய் பந்தல் போட்டு சாமி சிலை வைத்தார்கள் அவசரத்திற்கு உதவும் என்று ஆக்ரமித்த அரசு நிலத்தில்!

அவசரம்!
     நிலைகொள்ளாமல் தவித்தது மனசு! ஆபீஸ் நேரம் முடியவில்லையே! மணி எப்போது ஐந்தை தொடும் என்று பரபரக்க பார்த்து கொண்டிருக்க முள் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது.நேரம் தவறிப்போனால் நிறைய மிஸ் ஆகிவிடுமே! திருப்தி இருக்காதே! என்று கலங்கியவன் ஒருவழியாக ஐந்து அடித்ததும் பரபரவென கிளம்பி தன் அபிமான நடிகரின் சினிமா பார்க்கச் சென்றான்.


அவசரம்!
       அவசரம் அவசரமாய் வீட்டில் இருந்து ஆட்டோ பிடித்து ஆபீஸ் வந்தவன் தன் இருக்கையில் அமர்ந்தான். பசி வயிற்றை கிள்ளியது. இன்னும் பத்து நிமிடம் இருக்கிறது! சாப்பிட்டு முடித்துவிடலாம் என்று லஞ்ச் பேக்கை எடுத்தான் பேக் காணவில்லை! அவசரத்தில் ஆட்டோவில் தவறவிட்டிருக்கிறான்.

அவசரம்!
    அவசரப்படாமல் ஆலோசித்து ஒரு மாதம் முன்பே முன்பதிவு செய்து தரிசன நேரம் வாங்கி டிரெயினில் முன்பதிவு செய்து திருப்பதி புறப்பட்டனர்
வரிசையில் சென்று தரிசனம் பார்க்கையில் “ஜருகண்டி! ஜருகண்டி” என்று அவசரப்படுத்தி விரட்டி விட்டனர்.


அவசரம்!
     டிக்கெட்டுக்கு கவுண்டரில் காத்திருக்கையில் “ கொஞ்சம் எமர்ஜென்சி! அவசரமா போகணும்! கொஞ்சம் வழி விடறீங்களா? என்று கேட்டு முன்னேறி முன்கூட்டி டிக்கெட் வாங்கியவர் நடை மேடையில் ரொம்ப நேரமாய் காத்திருந்தார். அவர் செல்ல வேண்டிய வண்டி தாமதமாய் வந்துகொண்டிருந்தது.

அவசரம்!
    அவசர அவசரமாய் சாலையைக் கடந்தவனை தூக்கிச் செல்ல அவசர அவசரமாய் புறப்பட்டது ஆம்புலன்ஸ்!

அவசரம்!
    அவசரமாய் ஒரு பத்தாயிரம் ரூபா கைமாத்து வேண்டும் என்று கடன் கேட்டவரிடம் சொல்ல அவசர அவசரமாக உதித்தன ஆயிரம் கற்பனை செய்திகள்!

அவசரம்!
     இன்னும் பத்தே நிமிடங்கள்! அதற்குள் போய்விட வேண்டும்!  இல்லையென்றால் அப்புறம் கிடைக்காது என்று சொல்ல முடியாது! ஆனால் கொஞ்சம் அதிகம் செலவாகும். அவசரத்திற்கு போக முடியுதா? எத்தனை டிராபிக்? எவ்வளவு சிக்னல்கள்!  அவசர அவசரமாய் சந்து பொந்துகளில் நுழைந்து சென்றவனை எல்லோரும் முறைத்தார்கள் அவன் அவசரம் அவனுக்கு! சரியாக கடை மூடும் முன்  சென்று ஒரு குவாட்டர் ப்ளீஸ்! என்றான்.

டிஸ்கி} இரண்டு நாட்களாக உடல் அசதி, வேளைப்பளு காரணமாக இணையம் வரவில்லை! இரண்டு நாட்களுக்கான பதிவை இன்றே வெளியிட முயன்று முதலில் சில ஹைக்கூக்கள் பதிவிட்டேன். அடுத்து நொடிக்கதைகள் எழுதி விடலாம் என்று முடிவோடு முதல் கதை எழுதினேன். அவசரம் என்ற தலைப்பில். இதே தலைப்பில் பல கதைகள் உருவாக்கலாமே என்று அவசரமாய் ஒர் எண்ணம் உதிக்க அவசர அவசரமாய் உருவாகின இந்த கதைகள்! குறையிருந்தால் சுட்டுக! நிறையிருந்தால் வாழ்த்துங்கள்! நன்றி!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்!

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

தளிர் ஹைக்கூ கவிதைகள்!


1.கொஞ்சி கொஞ்சி
அழைத்தன பறவைகள்!
தாமதமான நிலவு!

2. மறைந்து போனது
  கடமைக்குவியலில்
  கற்பனை!

3. முத்தமிட்டும்
  சத்தம் கேட்கவில்லை!
  எறும்புகள்!

4. எவ்வளவு குடித்தாலும்
   திருப்பித் தருகிறது பூமி!
   தண்ணீர்!

5. தகிக்கும் கோடை!
  தடுத்து நிறுத்தின
   மரங்கள்!

6. உணர்வால்
   உயிர் பெறுகின்றது
  காற்று!

7. பகலும் இரவும்
  கூடியதில் பிறந்தது
  வெண்ணிலா!

 8. துளைத்து எடுத்தும்
   வலிக்கவில்லை!
   விழிகள்!

9. வளர வளர
  கேள்விகள் கூடுகிறது!
  குழந்தை

10. தொலைதூர இசை!
    கடத்தி வருகிறது!
     காற்று!

11. எண்ணி சலித்தன பறவைகள்!
    வானில் மின்னிய
    நட்சத்திரங்கள்!

12  . பூத்தன
     மணக்கவில்லை!
      நட்சத்திரங்கள்!

13.  குளித்துக் கொண்டே இருந்தாலும்
     குளிரவில்லை!
    கடலில் சூரியன்!

 14.  கறுத்த மேகங்கள்
     விரட்டி அடித்தன காற்று!
     குளிரவில்லை பூமி!

15. வீழ்வதை
    ரசித்தது கூட்டம்
    அருவி!

16.காதல்தூதுவன் ஆனது
  காற்று
 பூத்தன பூக்கள்!
 

1.   மரங்களின் பின்னால்
மறைந்திருக்கின்றன
ஊர்கள்!

2.    வெள்ளுடை தேவதை விஜயம்
   கண் சிமிட்டி களித்தன நட்சத்திரங்கள்!
    நிலா!

3.   துரத்தி வருகிறது!
தெரிந்தும் தொலைந்து போகிறோம்!
 காலம்!

4.   கொள்ளை போனது
நஷ்டப்படவில்லை!

குழந்தையின் சிரிப்பு!
Related Posts Plugin for WordPress, Blogger...