தாய் மனசு!

தாய் மனசு!


அலுவலகத்தில் இருந்து அசதியாய் வீடு திரும்பிய அசோக் உள்ளே ஏதோ பேச்சுக்குரல் கேட்கவே அப்படியே நின்று அதை காதில் வாங்கினான்.
  “ என்னடி கமலம்! நீ கொடுத்து வைச்சவ! ரெண்டும் பிள்ளையா பெத்துக்கிட்ட! அதுங்களும் நல்லா சம்பாதிக்குது! நான் முத பிள்ளைக்கு அப்புறம் ரெண்டு பொண்ணா போயி ஏமி லேது!ன்னு ஆயிருச்சு வாழ்க்கை!”
   “ உனக்கென்னடி விமலா குறை! ஒரே பிள்ளைன்னாலும் குடும்பத்துல பாசமா இருக்கான். தங்கைகளையும் நல்ல எடத்துல கட்டிக்கொடுத்துட்டான். உனக்கு தேவையானதை வாங்கி கொடுத்து பாசமாத்தானே பாத்துக்கிறான்?”
   “பாசத்துக்கு என்னடி கொறைச்சல்!” ஆனா பணத்துக்குத்தான் கொறைச்சல்”
    “ பணம் ஒன்னும் வாழ்க்கை இல்லைடி!” நீயும் நானும் பணக்கார குடும்பத்திலேயா பிறந்து வளர்ந்தோம்? இல்ல பணக்கார குடும்பத்தில வாக்க பட்டோமா? இப்ப நமக்கு என்ன கொறை சொல்லு?”
    “ உனக்கென்ன கொறைன்னு சொல்லு!”
   “இல்லே தெரியாமத்தான் கேக்கறேன்? உன் பையன் உன்னை கைமேல வச்சு தாங்கறான்? அப்புறம் என்னடி உனக்கு கஷ்டம்?”
    “என்னத்தை பெரிசா தாங்கறான்? உன் மவன் உனக்கு இதுவரைக்கும் நாலு பவுன் நகை வாங்கி கொடுத்து இருக்கான்? இவன் என்ன பண்ணிக் கிழிச்சான்? ஒரு குண்டுமணி தங்கம் எனக்குன்னு வாங்கிக் கொடுத்திருப்பானா?”
  “ தங்கத்தை பார்க்காதடி! உன் பையன் தங்கமான மனசைப் பாரு?” என் பசங்க முன்னே என்னமோ நகை வாங்கி அம்மா அம்மான்னு பாசமா இருந்தாங்க! ஆனா இப்ப தனக்குன்னு ஒருத்தி வந்ததும் என்னை மேல பார்க்கறாங்க! ஆனா உன் மவனும் சரி அவனுக்கு வாய்ச்சவளும் சரி உன் பேச்சை மீறி நடந்துகிட்டு இருக்காங்களா சொல்லு?”
    “போ போ! நீதான் அவனை மெச்சிக்கணும்!”
 வாசலில் ஷூவை கழட்டி விட்டபடி இதைக்கேட்ட அசோக்கின் மனதில் யாரோ ஈட்டியால் குத்தினாற்போல ஒரு வலி!
   அடச்சே! என்ன அம்மா இவள்? கேவலம் நகை வாங்கி போடவில்லை என்று இப்படி பேசுகிறாளே? இந்த குடும்பத்திற்காக எவ்வளவு உழைக்கிறோம்! இரண்டு தங்கைகளின் கல்யாணத்திற்கு என்று எவ்வளவு செலவு செய்தோம். அதுவும் மூத்தவளுக்கு வாய்த்தவன் வகை வகையாய் கேட்டு தொல்லை தந்த போதும் மறுக்காமல் அனைத்தையும் செய்தானே!
   இரண்டாமவளுக்கு வரன் குதிர்ந்தபோதுதான் அவன் ஆசை ஆசையாய் வண்டி வாங்க வேண்டும் என்று ஒரு தொகை சேர்த்து வைத்திருந்தான். இந்த வரன் நல்ல வரன்! போனால் கிடைக்காது. வண்டி இன்னும் ரெண்டுவருஷம் பொறுத்து வாங்கிக்கோடா! என்று சொல்லி அந்த பணத்தை தங்கை கல்யாணத்தில் கரைத்துவிட்டார்கள். இவனும் தன் ஆசையை புதைத்துவிட்டு கல்யாணத்தை சிறப்பாக நடத்தி முடித்தான்.
   அதற்கப்புறம் எத்தனையோ செலவுகள்? அந்த செலவுகளுக்கு செய்த பணத்தை சேர்த்திருந்தால் எத்தனை பவுன் வேண்டுமானாலும் வாங்கி குவித்து இருக்கலாம்? ஆனால் குடும்ப நலனுக்கு என்று செலவிட்டு விட்டேன். கட்டிய பொண்டாட்டிக்கு கூட இதுவரை ஒரு பவுன் வாங்கிப் போடவில்லை! சே! நம்மை போய் இப்படி பேசிவிட்டார்களே! முகம் தொங்கிப்போனது அசோக்கிற்கு.
     இதே நினைவாய் உள்ளே நுழைய பேச்சு தடைபட்டது. என்ன சித்தி! எப்போ வந்தீங்க! தம்பிங்க என்ன பண்றாங்க? சவுக்கியம்தானே? என்று பொத்தாம் பொதுவாய் ஒரு வார்த்தை கேட்டுவிட்டு ரூமிற்குள் சென்று அடைந்துவிட்டான்.
  அவனது மனைவி ரேவதி உள்ளே வந்தாள். “என்னங்க டல்லா இருக்கீங்க?” உடம்புக்கு என்ன? என்றாள்.
   “அதெல்லாம் ஒண்ணும் இல்லே!”
    “பின்ன ஏன் முகம் வாடிப் போய் கிடக்கு?”
    “நீயும் வீட்டுலதான இருக்க? அம்மா பேசுனதை கேட்டிருப்ப இல்லே?”

  “ஓ, அதுவா! விட்டுத்தள்ளுங்க! ஏதோ அவங்க ஆதங்கம் கூடப்பிறந்தவங்க கிட்ட சொல்லி தீர்த்துக்கறாங்க!”
    “நல்ல ஆதங்கம் போ! இந்த வீட்டுக்கு துரும்பா உழைக்கறேன்! என்னை கேவலம் ஒரு நகை வாங்கி தரலைன்னு எப்படி பேசுறாங்க பாத்தியா?”
     “ அதுல என்னங்க தப்பு இருக்கு? அவங்க தங்கை பசங்க தங்கைக்கு வாங்கி கொடுத்திருக்காங்க! நம்ம பையன் நமக்கு எதுவும் வாங்கித்தரலைன்னு இவங்க ஆதங்கப்படறாங்க!”
   “புரியாம பேசாத ரேவதி! அவங்களுக்கு ரெண்டும் ஆம்பளைப் பசங்க! இங்க எனக்கு அடுத்து ரெண்டும் பெண்கள்! அவங்க கல்யாணம் காட்சின்னு ஏகப்பட்ட செலவு! குடும்ப செலவும் என்னோடதுதான்! அவங்க வருமானமே நம்மை விட அதிகம்! இதெல்லாம் யோசிக்க வேண்டாமா?”
     “சரிங்க! எனக்குப் புரியுது! அதையே போட்டுக் குழப்பிக்காதீங்க! விட்டுத்தள்ளுங்க!”
  “நீ என்ன சொன்னாலும் எனக்கு மனசு தாங்கல ரேவதி!”
 “ அப்ப ஒண்ணு பண்ணுங்க! வர்ற அட்சய திரிதியைக்கு அம்மாவுக்கு ஒரு ரெண்டுபவுன் நகை வாங்கி கொடுத்திருங்க!”
     “என்ன விளையாடறியா? என் கிட்ட ஏது பணம்?”
  “இன்னும் முழுசா ஆறுமாசம் இருக்குங்க! இப்பவே பேங்கில ஒரு ஆர்டி கட்டிட்டுவரோம்! அதுவும் இல்லாம் மாசம் கொஞ்சம் மிச்சம் பிடிங்க! எல்லாத்தையும் சேர்த்து அட்சய திரிதியையில அம்மாவுக்கு நகை வாங்கிடலாம்!”
    “நகை வாங்கி கொடுத்தாலும் நல்ல பேரு சொல்லுவாங்களா தெரியலையே!”
    “இப்ப அதைப் பத்தி ஏன் நினைக்கீறீங்க! முதல்ல நகை வாங்க முயற்சி பண்ணுவோம்!”
    ஓடிற்று! முழுசாய் ஆறுமாதங்கள்! ஆர்டியில் சேமித்தது போக கம்பெனியில் கொஞ்சம் கூடுதலாய் வேலை செய்து சிக்கணம் பிடித்து என்று ஒரு தொகையை சேர்த்து வைத்து விட்டு தாயை அழைத்தான் அசோக்.
    “அம்மா!  இன்னிக்கு அட்சய திரிதியை! புதுசா நகை வாங்கினா வளரும்னு சொல்லுவாங்க! வாம்மா உனக்கு ஏதாவது வாங்கி தரேன்!”
     “ எனக்கெதுக்குடா! நகையும் நட்டும்! உன் பெண்டாட்டிக்கு வாங்கிக் கொடு!”
   “ இப்ப இப்படித்தான் சொல்லுவ! அப்புறம் உன் தங்கைகிட்ட புலம்புவ! அதெல்லாம் வேணாம்! உனக்குன்னு பணம் சேர்த்து வைச்சாச்சு! வா நகை வாங்கி கொடுக்கிறேன்!”
    “ ஓ! அன்னிக்கு பேசுனதை சொல்றியா? அது  உன் காதுல விழனும்னே பேசுனது!”
     “என்னது?”

 “ஆமாம்டா! உன் காதுல விழனும்னே பேசினேன்! உனக்கும் ரெண்டு பொண்ணுங்க! ஆனா நீ விவரம் பத்தாம இருக்கியே! இப்பவே விலைவாசி விண்ணை முட்டுது! அதுங்களுக்கு கல்யாணம் காட்சின்னா எவ்வளவு செலவு ஆகும்? சம்பாதிக்கிறது எல்லாத்தையும் வீண் விரயம் பண்ணிக்கிட்டு இருக்கியே! கட்டுனவளுக்காவது ஒரு பவுன் வாங்கி போட்டியா? இல்லையே! அந்தந்த மாசம் சம்பாதிச்சு அப்படியே செலவு பண்ணிடறே! கொஞ்சம் கூட பொறுப்பே இல்லையேன்னுதான் அப்படி பேசனேன். அப்பவாவது ரோசம் வந்து ஏதாவது சேர்க்க மாட்டியான்னு நினைச்சேன். நெனச்சபடி நடந்துருக்கு! சரி எவ்வளவு சேர்த்திருக்க! அதை எடுத்து போய் உன் பொண்டாட்டிக்கு நகை வாங்கு! நல்ல பொண்ணுடா அது! வேற எவளாவது இருந்தா இந்நேரம் உன்னை வளைச்சு குடும்பத்தை பிரிச்சிருப்பா! இவ அப்படியே தாங்கறா? சரி சரி சீக்கிரம் கிளம்பு!”
      “உண்மையாத்தான் சொல்றியாம்மா?”
அடப்போடா! போக்கத்தவனே! உன் அம்மாவை நீ புரிஞ்சிகிட்டது அவ்வளவுதான்! உண்மையாத்தான் சொல்றேன்! நான் அன்னிக்கு கோபமா பேசாக்காட்டி நீ பொறுப்பா இவ்வளவு பணம் சேர்த்திருப்பியா? அட்சய திருதியைக்கு நகை வாங்கணும்னு யோசிச்சிருப்பியா?”  “அதான் சாக்கிட்டு பேசினேன் கோவத்தை தூண்டினேன் இப்ப கைமேல பலன் கிடைச்சிருக்கு! இதே போல கொஞ்சம் கொஞ்சமா சேமிச்சு பிழைக்கப்பாருடா என் மவனே!”

   தாய் மனசு நல்லதைத்தான் சொல்லும்! அதை உணர்ந்து கொண்டான் அசோக்.

 (மீள்பதிவு)

  டிஸ்கி} தங்கை மகன்( மருமான்) காதணி விழாவுக்கு சென்னை சென்றுள்ளேன். இதனால் மீள்பதிவாக இந்த கதை. இரண்டு வருடம் முன் எழுதியது புதிய வாசகர்கள் படித்திருக்க மாட்டார்கள். பழையவர்களும் மீண்டும் படிக்கலாம்.

தங்கள்வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!    

Comments

  1. நல்ல கதை. அம்மான்னா சும்மாவா.....

    ReplyDelete
  2. மனதை தொட்டது கதை

    ReplyDelete
  3. தாய் உள்ளம் பொன்னானது
    அருமையான பதிவு

    ReplyDelete
  4. நல்ல கதை, பல வீடுகளில் நடப்பது தானே!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!