Sunday, July 31, 2016

தித்திக்கும் தமிழ்! பகுதி 26 குருடனான திருமால்!

தித்திக்கும் தமிழ்! பகுதி 26 குருடனான திருமால்!

தித்திக்கும் தமிழில் இலக்கியசுவை நிரம்பும் சிலபாடல்களை ரசித்து வந்தோம். இடையில் இப்பகுதி நின்றுவிட்டது. தமிழ்சுவைக்கு ரசிகர்கள் ஒரு சிலரே! அவர்களும் வாசிக்க வராமல் போகவே ஓர் சுணக்கம் ஏற்பட்டு நிறுத்தியிருந்தேன். இன்று பதிவு ஏதும் தேறவில்லை! என்ன செய்யலாம் என்று யோசிக்கையில் தமிழ் கை கொடுத்தது. நின்ற பகுதி தொடர்கிறது.

    எல்லோரும் திருமாலை அழகன் என்று புகழ்வார்கள்! இங்கே சொக்கநாத புலவரோ திருமாலை குருடன் என்கின்றார். எப்படி?
முன்பொரு சமயம் பிரம்மாவிற்கும் விஷ்ணுவிற்கும் யார் பெரியவன் என்ற சண்டை வந்தது. சிவனிடம் வந்து தீர்ப்பு கேட்டார்கள். என்னுடைய முடியையும் அடியையும் கண்டு வந்து சொல்பவர்களே பெரியவன் என்று சொல்லி தீ மலையாக உருவெடுத்தார். பெருமாள் வராகம்( பன்றி ) உருவெடுத்து பூமியை குடைந்து சென்றார். பிரம்மா அன்ன பட்சியாக உருவெடுத்து முடியை காணப்பறந்து சென்றார். எவ்வளவு தூரம் சென்றும் இருவராலும் சிவனது அடி, முடியை காண முடியவில்லை! திருமால் தோல்வியை ஒப்புக் கொண்டார். பிரம்மா தான் முடியை தரிசித்ததாக கூற சிவனது முடியில் இருந்து விழுந்த தாழம்பூவை சாட்சியாக்கினார். பொய் சொன்னதால் கோபம் கொண்ட சிவபெருமான் பிரம்மாவிற்கு பூவுலகில் ஆலயங்கள் இல்லாமல் போகட்டும் என்று சபித்தார். தாழம்பூவை தன்னுடைய பூஜைக்கு உகந்தது இல்லை என்று தள்ளி வைத்தார். இந்த காட்சியைத்தான் புலவர் பாடலாக எழுதுகின்றார்.


   தெள்ளு தமிழில் இதை பாடலாக்கி பெருமாளை குருடனாக்கி வார்த்தை விளையாட்டில் வீடு கட்டுகிறார்  சொக்க நாதப் புலவர்.
இதோ பாடல்!

  காப்பிட்ட பிள்ளைக் கறிக்கிச்சைப் பட்டுவை யைக்கரைமேல்
  மாப்பிட்டு வந்த மயிலேச னேமலை யானநின்னை
  கூப்பிட்டு நின்று குனிந்தொரு கோலக்கொம் பால்தடவிப்
  பூப்பட்ட கண்னிச் சயமாக்கினான் மைப்புயல் வண்ணணே.

காப்பினை கையில் அணிந்த சிறுத்தொண்டர் என்ற சிவனடியாரின் பிள்ளைக் கறிக்கு ஆசைப்பட்டவனே! வைகை நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை அடைக்க கரைபலப்படுத்தும் பணியில் ஈடுபட்டு மாவினால் செய்த பிட்டை விரும்பியவனே மயிலையில் குடிகொண்டுள்ள ஈசனே!

 நீ நெருப்பு மலையாக நின்றபோது உன் திருவடியைக் காண விரும்பிய கரிய மேகம் போன்ற நிறத்தை உடைய திருமால் அழைத்தபடியே நின்று குனிந்து தன் பன்றிக் கொம்பால் தடவி தனக்கு பூப் பட்ட கண் உள்ளது என்று நிரூபித்து விட்டான்.

 ஈசனின் திருவடியைக் காண பன்றிக்கொம்பால் பூமியை தடவினான். இதையே புலவர் பூவிழுந்த கண் உள்ளவன் ஆதலால் திருவடி தெரியாமல் விழுந்து தடவி தான் குருடன் என்று பெருமாள் உறுதிபடுத்திவிட்டதாக நகைச்சுவை ததும்ப கூறுகின்றார்.

பூப்பட்ட கண்கள் = குருடான கண்கள்.
இன்னொரு அர்த்தத்தில் திருமால் தன்னுடைய தாமரைபோன்ற கண்ணினால் ஈசனின் திருவடியை தடவினான் என்று பொருள் படும்.

பூப்பட்ட கண்கள் = தாமரை போன்ற கண்களை உடையவன் = அங்கயற்கண்ணன் என்று திருமாலுக்கு பெயருண்டு.

புலவரின் வார்த்தை விளையாட்டு ரசிக்க வைக்கிறது அல்லவா?

 என்னுடைய நண்பர் வெங்கட் என்பவரை தேடி அவர் அம்மா வந்தார். வெங்கட்டை எங்கேயெல்லாமோ தேடுறேன்! இங்க இருக்கானா என்றார். வெங்கிட்டை அங்கிட்டு இங்கிட்டல்லாம் தேடுனா எப்படி? எங்கிட்டோ கடனை வாங்கிட்டு கூட்டாளிகளோடு பங்கிட்டு திண்டுபிட்டு கடன்காரன்கிட்ட அகப்பட்டுகிடாம இருக்க எங்கிட்ட பணம் கேட்டு தொங்கிட்டு நின்னுகிட்டு     இருக்கான்! என்றேன். இது எப்படி இருக்கு?

மீண்டுமொரு சந்தர்ப்பத்தில் சந்திப்போம்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!                                                                                      


Saturday, July 30, 2016

சிக்கனமே செல்வம்! பாப்பா மலர்!

சிக்கனமே செல்வம்! பாப்பா மலர்!


முன்னொரு காலத்தில் ஓரு ஊரில் அருகருகே இரண்டு சகோதரிகள்  வசித்து வந்தார்கள். அதில்  மூத்தவள் ஐந்து பசுமாடுகளை வைத்து  பால்வியாபாரம் செய்து ஆடம்பரமாக வாழ்ந்து வந்தாள். இன்னொருத்தியிடம் ஒரே பசுமாடுதான் உண்டு. அதில் பால்கறந்து விற்று சிக்கனமாக குடும்பம் நடத்தி வந்தாள்.  மூத்தவள் ஊதாரித்தனமாக செலவு செய்வாள்.
  பால் விற்ற காசை செலவு செய்வதோடு கடனும் வாங்கி ஆடம்பரமாக குடித்தனம் நடத்தி வந்த அவளுக்கு பற்றாக்குறைதான் மிஞ்சியது. நாம் இத்தனை பசுமாடுகள் வைத்து நிறைய பால்வியாபாரம் செய்தும் நமக்கு கடன் தான் மிஞ்சுகிறது ஆனால் பக்கத்து வீட்டுக்காரி ஒரே பசுமாடு வைத்துக் கொண்டு கடனில்லாமல் நிம்மதியாக வாழ்கின்றாளே என்று அவளுக்கு பொறாமை எண்ணம் மேலோங்கியது. அவளிடம் கொஞ்சம் பால் கடனாக கேட்போம் என்ன சொல்கிறாள் என்று பார்ப்போம் என்று ஒரே மாடு வைத்திருந்த பால்காரியிடம் அவள் வந்து  “ தங்கையே! ஐந்து மாடுகள் கறந்தும் எனக்கு பால் போதவில்லை! எல்லோருக்கும் விற்கவே சரியாக போய்விடுகிறது. நீ தினமும் ஒரு அரைபடிப் பால் தருகிறாயா? பின்னர் திருப்பித் தந்துவிடுகின்றேன்!” என்று கேட்டாள்.
   இளையவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. “ அக்கா! ஐந்து மாடுகள் கறந்துமா உங்களுக்கு பால் போதவில்லை! என்னிடம் ஒரே மாடுதான் இருக்கிறது! அதில் விற்றது போக என் தேவைக்கு கொஞ்சம் அதிகமாகவே பால் மிஞ்சுகிறது! அதை உங்களுக்குத் தருகிறேன்! ஆனால் தினமும் அரைபடி கிடைக்காது! எவ்வளவு கிடைக்கிறதோ அதைத் தருகிறேன்! சம்மதமானால் பெற்றுக்கொள்ளுங்கள்! ”என்றாள்.
   இரக்க குணத்தோடு சொன்ன இளையவளிடம் மூத்தவள் சொன்னாள். “ அப்படியே தா! ஆனால் ஒரேயடியாக முடியாது என்று சொல்லிவிடுவாயோ? என்று பார்த்தேன்! நல்லவேளை என் வயிற்றில் பால் வார்த்தாய்! நாளை முதல் தினமும் பால் கொடுத்துவா!  என்று விடைபெற்று சென்றாள்.
  அன்று முதல் தினமும் பால் கொடுத்துவந்தாள் இளையவள். நாட்கள் கடந்தன. ஒரு நாள் இளையவளின் ஒரே பசுமாடும் நோய்வாய்ப்பட்டு இறந்து போனது. என்னசெய்வது என்று தெரியாமல் மூத்தவளிடம் சென்று “அக்கா! நான் இதுவரை உங்களுக்கு ஐம்பதுபடி பால் கொடுத்துள்ளேன். இதுவரை திருப்பிக் கேட்கவில்லை! பணமும் வாங்கிக் கொள்ளவில்லை! இப்போது என் மாடு இறந்துவிட்டது. நீங்கள் தினமும் இரண்டு படி வீதம் திருப்பி தந்தால் அதை விற்று நான் பிழைத்துக் கொள்வேன். கூடியவிரைவில் புதிய மாடும் பிடித்துக் கொள்வேன்!” என்று கேட்டாள்.
   “ நீதான் எனக்கு தினமும் பால் தர ஒப்புக்கொண்டாய்! அதைத் தராமல் என்னிடமே திருப்பி கேட்கிறாயே! நான் தர முடியாது! போ! போ!” என்றாள் மூத்தவள்.
  ”சரி பாலாக வேண்டாம்! ஐம்பது படி பாலுக்கு காசு கொடுத்துவிடுங்கள்! நான் போய்விடுகிறேன்!” என்றாள் இளையவள்.
   ”காசும் கிடையாது! பாலும் கிடையாது! இங்கே நின்றாயானால் இனி உதைதான் கிடைக்கும்!” என்று அடாவடியாக பேசினாள் மூத்தவள்.
  இளையவள் நீதிமன்றத்திற்கு சென்று முறையிட்டாள். இருவரையும் கூப்பிட்டு விசாரித்தார் நீதிபதி!
   பால் பற்றவில்லை என்று என்னிடம் தினமும் பால் வாங்கிக் கொண்ட மூத்தவள் திருப்பி தருவதாக ஒத்துக் கொண்டு இப்போது வாங்கவே இல்லை! திருப்பி தரமுடியாது என்று மறுக்கிறாள் என்று மூத்தவள் மீது குற்றம் சுமத்தினாள் இளையவள்.
   இவளிடம் பால் வாங்கவேண்டிய அவசியமே எனக்கு இல்லை! என்னிடம் ஐந்து மாடுகள் உள்ளது. அவற்றின் பாலே எனக்கு அதிகம். விற்றது போக நிறைய மிஞ்சிக் கிடக்கும். வீணாக என் மீது பழி சுமத்துகிறாள் என்றாள் மூத்தவள்.
   நீதிபதிக்கு எப்படி தீர்ப்பு தருவது என்று யோசனை! நீ பால் கொடுத்தமைக்கு ஏதாவது சாட்சி இருக்கிறதா? என்று இளையவளிடம் கேட்டார். ஏதும் இல்லை என்றாள் அவள்.
   மூத்தவள் மந்தகாசமாக புன்னகைத்தாள். இவளிடம் பால் வாங்க எனக்கு அவசியமே இல்லை! ஐந்து மாடுகள் தரும் பால் எனக்கு இருக்கிறது.  என்று மீண்டும் சொன்னாள்.
நீதிபதி யோசித்தார். பின்னர் இருவரையும் பார்த்து. வெளியே ஐந்து சொம்புகளில் தண்ணீர் வைத்துள்ளேன். இருவரும் சென்று உங்கள் கால்களை கழுவி விட்டு வாருங்கள். பிறகு தீர்ப்பு தருகிறேன் என்றார்.
   மூத்தவள் வேகமாக சென்று ஐந்து சொம்பு நீரையும் கால்களில் அவசரமாக கொட்டிக்கொண்டு ஓடிவந்து நின்றாள். கால்கள் நனைந்து நனையாமலும்வந்து நின்றாள்.
  இளையவள் ஒரு சொம்பு நீரிலேயே சுத்தமாக கால்களை கழுவிவிட்டு மீதி நான்கு சொம்பு நீரை கொண்டுவந்தாள்.
  நீதிபதி சொன்னார்.” கால்களை கழுவவே ஐந்து சொம்பு நீரை வீணடித்தாய்! அப்படியும் கால்கள் சுத்தமாகவில்லை! இளையவளான இவள் சிக்கனமாய் ஒரு சொம்பு நீரில் கால் கழுவி மீதம் வைத்துள்ளாள். நீ ஊதாரி என்பது இந்த ஒரு செயலிலேயே தெரிந்துவிட்டது. உன் ஐந்து மாடுகள் தரும் பால் உனக்கு போதாது! இவளிடம் கடன் கேட்டிருப்பாய் என்று இந்த செயலிலேயே எனக்கு புரிந்துவிட்டது. உண்மையை ஒத்துக் கொள்! இல்லையேல் கடுமையான தண்டணை கிடைக்கும் ”என்று மிரட்டினார்.
   மூத்தவள் தலை குனிந்தாள். நான் ஐம்படி பால் பெற்றுக்கொண்டது உண்மை என்றும் திருப்பி தந்துவிடுவதாகவும் கூறினாள்.
   நீதிபதி அவளை கண்டித்து, பொய் உரைத்ததற்காகவும் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததற்காகவும் கூடுதலாக ஐம்பது படி பால் இளையவளுக்கு வழங்க வேண்டும் என்று தண்டணை விதித்து தீர்ப்பளித்தார்.
  தன்னுடைய செயலே தன்னை தண்டித்துவிட்டதை நினைத்து வருந்தி தண்டணையை ஏற்றுக்கொண்டு நூறு படி பாலை தினமும் ஐந்துபடி வீதம் தருவதாக மூத்தவள் ஒத்துக்கொண்டாள்.
   இளையவளும் மகிழ்ந்தாள். நீதிபதியை வணங்கி விடைபெற்றாள்.


(சாய்பாபா சொன்னக்குட்டிகதை)

டிஸ்கி} சிற்றப்பாவின் அறுபதாம் கல்யாணம் மற்றும் வீட்டில் மின்சாரம் பழுதுபார்ப்பு காரணமாக சில தினங்களாக இணையம் வர இயலவில்லை! ஓய்வு கிடைக்கையில் நண்பர்களின் பதிவுகளை வாசிக்கிறேன்! நன்றி!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Tuesday, July 26, 2016

வேண்டாத மருமகள்!

   
 தன் சிநேகிதி பாக்யத்தின் புது மருமகள் உண்டாகி இருப்பதாக கேள்விப்பட்ட கற்பகம் பை நிறைய பழம் ஸ்வீட்களுடன் அவள் வீட்டிற்குள் நுழைந்தவள் அதிர்ந்து போனாள்.
     கர்ப்பிணி பெண் நித்யாவை வேலை வாங்கிக் கொண்டு ஹாயாக சோபாவில் படுத்து டீவி பார்த்துக் கொண்டிருந்தாள். “ வாடி கற்பகம்! பார்த்து எத்தனை நாளாச்சு? இப்பத்தான் என் வீட்டுக்கு வழி தெரிஞ்சுதா?” என்று வரவேற்கவும் செய்தாள்.
  “ என்ன பண்றது பாக்கியம்? உனக்கு ஒண்ணுக்கு ரெண்டு மருமகள்க! எனக்கு அப்படியா? இன்னும் பசங்களுக்கு கல்யாணம் ஆகலை! புருசனுக்கும் பசங்களுக்கும் பார்த்து பார்த்து செய்யவே நேரம் சரியா இருக்கு! இதுல எங்க வெளியே வர முடியுது சொல்லு!” என்று அலுத்துக் கொண்டாள் கற்பகம்.
   “அதுவும் சரிதான்! ஆனா என்னத்தான் சொல்லு! மருமகளுங்க எவ்வளோ வேலை செய்தாலும் நாம செஞ்ச திருப்தி நமக்கு வர்றதே இல்லை! ஆனா நம்மளாலே இப்ப செய்ய முடியறதும் இல்லே! சிவனேன்னு இருக்க வேண்டியதா போயிருச்சு!”
   “ அதச்சொல்லு! உனக்கு உன் வேலையிலேயே திருப்தி வராது! இதுல உன் மருமக செய்யறது பிடிக்கவா போவுது!”
   “ சரிசரி! என்ன திடீர்னு இந்த பக்கம்?”
   “ஏன் நான் வரக் கூடாதா?”
”வராதவ வந்து இருக்கியே! அதுவும் பை நிறைய பழம் பூ ஸ்வீட்டெல்லாம் வாங்கிகிட்டு அதான் ஆச்சர்யமா இருக்கு!”
  ”நீதான் போன்ல சொன்னியே உன் மருமக உண்டாகியிருக்கான்னு! அதான் பார்த்து விசாரிச்சிட்டு போகலாம்னு வந்தேன்! கர்ப்பிணி பொண்ணை சும்மா பார்க்க வர முடியுமா? அதான் பழம் ஸ்வீட்ஸ்!”
   “ நமக்குள்ளே எதுக்குதி இந்த சம்பிரதாயமெல்லாம்…!”
இருக்கட்டும் இருக்கட்டும்! நீ மறுத்தாலும் எனக்குன்னு ஒரு இது இருக்கில்ல!”
   ”சரி என்னடி நான் வந்து இவ்ளோ நேரம் ஆகுது உன் மருமக கிச்சனை விட்டு வெளியே வரவே இல்லை?”
  ”உள்ளே பருப்புத் துவையல் அம்மியிலே அரைச்சிக்கிட்டு இருக்கா! ஏம்மா நித்யா! இங்க வந்துட்டு போம்மா!” பாக்யம் குரல் கொடுக்க நெற்றி வியர்வையை துடைத்துக் கொண்டு  வந்த நித்யா! வாங்க ஆண்ட்டி! வீட்டுல எல்லோரும் சவுக்கியமா? என்று விசாரித்தாள்.
   ”எல்லோரும் நல்லா இருக்காங்க! நீ விஷேசமா இருக்கேன்னு கேள்விப் பட்டேன்! அதான் உடனே பார்க்க வந்துட்டேன். செக்கப்புக்கு எல்லாம் ரெகுலரா போறே இல்லையா?”
    “போயிட்டிருக்கென் ஆண்ட்டி! உள்ளே அடுப்புலே பருப்பு வைச்சிருக்கேன்! இதோ வந்துடறேன்!  என்று சென்றவள் அப்புறம் திரும்பவில்லை!
   அன்று ஒரு முழுநாள் கவனித்தேன் எந்த ஒரு துரும்பையும் அசைக்கவில்லை பாக்யம்! எல்லாம் நித்யாவே செய்து கொண்டிருந்தாள் வீட்டில் மிக்சி இருக்கையில் அம்மியில் துவையல் அரைக்க சொல்லி இருக்கிறாள். ஏன் இப்படி? நித்யா வேண்டாத மருமகளா? ஏழை வீட்டு பெண் என்பதால் இப்படி செய்கின்றாளோ? இதே பாக்கியத்தின் மூத்த மருமகள் மூழ்காமல் இருந்த போது அவளை கையில் வைத்து தாங்கினாள் இந்த பாக்கியம். அவளை ஒரு வேலை செய்ய விடவில்லை. இவளே பார்த்து பார்த்து எல்லாம் செய்தாள். இப்போது என்னடாவென்றால் தலைகீழாய் மாறிப் போய்விட்டிருந்தாள்.
   பாக்கியத்தின் இந்த திடீர் மாற்றம் எனக்கு கோபத்தை வரவைத்தது மாலையில் கிளம்பும் போது உடன் பேருந்து நிறுத்தம் வரை வருவதாக பாக்கியமும் உடன் வர என் கோபத்தை கொட்டினேன்.
   “ ஏன் பாக்கியம் இப்படி மாறிட்டே?”
     “ வயசானா கொஞ்சம் உடம்பு இளைக்கத்தான் செய்யும்? அதைக்கூட என்னைக் கேட்டுகிட்டு இருக்கே?”
   ”ச்சே!  உனக்கு எப்பவும் விளையாட்டுதான்! நான் அதை கேக்கலை! உன் நடத்தை ஏன் மாறிப்போச்சுன்னு கேக்கறேன்!”
  “ அப்படி என்ன என் நடத்தை மாறிப்போச்சு?”
  “ உன் மூத்த மருமக உண்டாகி இருந்தப்ப கையில வச்சு தாங்கினே! இப்ப இளைய மருமக உண்டாகி இருக்கா! அவளையும் அப்படி தாங்காமா இப்படி  வேலை வாங்கி கொடுமை படுத்தறியே! இவ ஏழை வீட்டுப் பொண்ணுண்னுதானே இப்படி பண்றே? யாரும் கேள்வி கேக்க முடியாதுன்னு நீ பண்ணாலும் நான் கேப்பேன்! மனசாட்சிப்படி நடந்துக்கோ பாக்யம். அவளும் உன் பொண்ணு மாதிரிதான்!”
   “ என் பொண்ணா நினைச்சுதான் இவ்ளோ வேலை வாங்கறேன்!”
  “ என்னடி சொல்றே?”
   ” என் மூத்த மருமக பணக்கார இடம் அதனாலே கைமேலே வச்சு தாங்கினேன்னு சொன்னே இல்லே! நான் அப்படி பணத்துக்கு மதிப்பு கொடுக்கறவ இல்லை. முத முதலா வீட்டுக்கு ஒரு வாரிசை பெத்துக் கொடுக்க போறான்னு அவளை ஒரு வேலையும் செய்ய விடாம தாங்கு தாங்குன்னு தாங்கினேன்! அதுவே விபரீதமா போயிருச்சு! சுகப்பிரசவம் இல்லாம சிசேரியன் ஆகி சில லட்சங்கள் செலவை இழுத்து விட்டுருச்சு! அவ பொறந்த வீடு வசதியானவங்க சமாளிச்சிட்டாங்க! ஆனா…”
   “ சின்னவ வீடு அப்படி இல்லே! நடுத்தரகுடும்பம்! நாள் தள்ளறதே பெரும்பாடு! இவளையும் சொகுசா வேலை செய்ய விடாம தாங்கினா பழையபடி சிசேரியன் அது இதுன்னா அவங்க தாங்குவாங்களா? அட போனா போவுதுன்னு நாமளே பிரசவ செலவை பாத்துக்கலாம்னாலும் அவங்க தன்மானம் இடம் கொடுக்காது.! உண்டா இருக்கும் போது குனிஞ்சு நிமிஞ்சு வேலை செஞ்சா பிரசவம் லேசா சுகப்பிரசவமா முடியும்னு டாக்டருங்க சொன்னாங்க! அதான் இவளை இப்படி வேலை வாங்கிறேன்! அவ வீட்டுக்கு எட்டாம் மாசம் போயிட்டா அவங்க ஒரு வேலையும் செய்ய விடமாட்டாங்க! இங்கேயும் இப்படியே விட்டா அப்புறம் அவளுக்கு மட்டும் இல்லே அவங்க குடும்பத்துக்கும் கஷ்டமாயிரும்! அதான் வேலை வாங்கி அவ சுமையை கொறைக்கறேன்!”
     கொடுமைக்கார மாமியாராகத் தெரிந்த பாக்கியம் இப்போது எனக்கு பாசக்கார அம்மாவாகத் தெரிய  பாக்கியம்! உன்னை பத்தி தப்பா நினைச்சுட்டேன்! என்னை மன்னிச்சிரு! ஆனா உன் மருமக உன்னை தப்பா நினைப்பாளே! என்றேன்.
     ”அவ தப்பா நினைக்க கூடாதுன்னு முன் கூட்டியே இந்த விஷயத்தை சொல்லிட்டேன்! அவளே ஆர்வமா வேலை செய்யறா! அம்மியிலே துவையல் அரைக்கிறது கூட அவ எடுத்த முடிவுதான்!” என்றாள் பாக்கியம்.
  ”அப்படிப் போடு!” எல்லாம் சேந்துதான் இந்த போடு போடறீங்களே! இதப் புரிஞ்சுக்காம நான் எதேதோ கற்பனை பண்ணிக்கிட்டேன்! ஒரு ஆதங்கத்துல ஏதோ கேட்டுட்டேன் தப்பா எடுத்துகாதடி!”
   “ஒரு நல்ல சிநேகிதியா நடந்துகிட்டே இதுல என்ன தப்பு இருக்கு! சந்தோஷமா வீட்டுக்கு போய்வா! என்றவளை வாஞ்சையுடன் அணைத்துக்கொண்டாள் கற்பகம்.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

    

Monday, July 25, 2016

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

   தளிர்  ஹைக்கூ கவிதைகள்!


1.   அடைபட்டது விடுபட்டதும்
அலறியது குழந்தை!
பலூன்!

2.   குழந்தை சோறு உண்கையில்
கூட சாப்பிட்டு மகிழ்கிறது
பூமி!

3.   பொத்தல் விழுந்த வானம்
வெளிச்சம் போட்டு காட்டியது
இரவு!

4.   பிச்சைக்காரனிடம் கையேந்தினார்
நடத்துனர்
சில்லறைக் காசு!

5.   அடங்காப் பசி!
தூக்கத்தை தொலைத்தன
நகரங்கள்!


6.   ஒளிரும் முத்துக்கள்!
ஒளிக்க இடம் தேடின
மின்மினிகள்!

7.   எதையும் தொலைக்காமல்
தேடிக்கொண்டிருக்கின்றன
எறும்புகள்!

8.   புற்று நோய்!
கொல்லப்பட்டன
எறும்புகள்!

9.   ஆட்டுவித்தபடி
ஆடிக்கொண்டிருக்கிறது!
நிழல்!


10. கொப்பளித்தது
ஆற்றுவாரில்லை!
குழந்தையிடம் குறும்பு!

11. உப்பு மூட்டை
கரைந்து போகிறார் தாத்தா
குழந்தை!

12. மாற்றங்களின் பிறப்பிடம்
மாறாமல் இருக்கிறது
பள்ளிக்கூடம்!

13. உயரத்தில் இருந்து விழுந்தாலும்
உயிரை இழக்கவில்லை!
சருகு!
14. ஓட ஓட விரட்டினாலும்
ஒட்டிக்கொள்கிறது
சட்டையில் அழுக்கு!

15. வெயில் இறங்கியதும்
சூடு பிடித்தது
நடைபாதை வியாபாரம்!

16. கயிறே இல்லாமல்
கட்டிப்போட்டது
குழந்தையின் சிரிப்பு!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி


Sunday, July 24, 2016

ஜோதிடப் புலி! பாப்பா மலர்!

ஜோதிடப் புலி! பாப்பா மலர்!


   முன்னொரு காலத்தில்  ஒர் கிராமத்தில் ஏழைத்தம்பதியினர் வசித்து வந்தனர். கணவன் பொறுப்பற்றவன், எந்த வேலைக்கும் செல்லாமல் பொழுதெல்லாம் வீட்டிலேயே அடைந்து கிடந்தான். அவன் மனைவி கூலி வேலைக்குச் சென்று சம்பாதித்து வந்து கணவனுக்கும் சோறு ஆக்கி போட்டுவந்தாள்.
    எத்தனைநாள் தான் அவளும் பொறுப்பாள்? ஒருநாள் ஆவேசம் வந்து எங்காவது சென்று ஏதாவது வேலை வெட்டி செய்து சம்பாதித்து வந்தால்தான் இனிமே உங்களுக்குச் சோறு! என்று சொல்லிவிட்டாள். கணவன் பாவம் படிப்பறிவு கூட இல்லாதவன் யார் என்ன வேலைக் கொடுப்பார்கள் என்று யோசனை செய்தவாறே வெளியே சென்றான். அவன் சென்றபிறகு மனைவி கடைத்தெருவிற்கு புறப்பட்டாள். வழியில் ஓரிடத்தில் ஒளிந்திருந்து மனைவி வெளியே சென்றதை பார்த்த கணவன் அவளுக்குத் தெரியாமல் வந்து வீட்டிற்குள் நுழைந்து பரண் மீது ஏறி ஒளிந்து கொண்டான்.
     மனைவி வீட்டிற்கு திரும்பினாள். அடுப்படியில் தோசை வார்க்க ஆரம்பித்தாள். அவள் வார்க்கும் போதெல்லாம் பரணில் இருந்து ஒரு துடைப்பக் குச்சியை பிடுங்கி கையில் வைத்துக் கொண்டான் கணவன். தோசை வார்த்து முடித்ததும் மனைவி என்னென்ன செய்கிறாள் என்று கவனித்துக் கொண்ட கணவன் மனைவி அசந்த சமயம் பரணில் இருந்து இறங்கி வெளியேறினான். வீதியில் சில பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள் அவர்களிடம் துடைப்ப குச்சிகள் எத்தனை என்று எண்ணிச் சொல்லுமாறு கேட்டு மனதில் வாங்கிக் கொண்டான்.
   இராப்பொழுதில் கணவன் வீட்டுக்கு திரும்பினான். என்ன வேலை செய்து என்ன சம்பாதித்து வந்தீர்கள் என்று கேட்டாள் மனைவி. நான் வேலைக்கு போகவில்லை! ஜோசியம் கற்று வந்தேன். இதைக் கொண்டு நிறைய சம்பாதிக்க போகிறேன் என்றான் கணவன்.
    “அப்படியா? அப்படி என்ன கற்று வந்துவிட்டீர்கள்?” 
” நீ இன்னைக்கு என்னென்ன சமையல் செய்தாய் சொல்லட்டுமா?”
    ” அதெப்படி முடியும்?”
   “ எல்லாம் ஜோஸ்யம்தான்!”
 “ சரி! சொல்லுங்க பார்ப்போம்!”
 நீ இன்னைக்கு பதினோறு தோசை வார்த்து வச்சிருக்கே! அதுக்கு தொட்டுக்க தேங்காய் சட்னியும் அரைச்சிருக்கே! அது மட்டும் இல்லே முருங்கை சாம்பார்! கீரை பொரியல்! என்று பரணில் ஒளிந்து பார்த்ததை அப்படியே ஒப்பித்தான்.
   அவன் மனைவியும் அப்படியே நம்பி விட்டாள். நான் ஜோஸ்யம் கத்துக்கிட்டதை யாருகிட்டேயும் சொல்லிடாதே! அப்புறம் எல்லோரும் ஓசியிலே ஜோஸ்யம் கேக்க வந்துருவாங்க! என்று மனைவியை அதட்டிவைத்தான் அந்த போலி ஜோஸ்யன்.
   அவன் மனைவி வாய் சும்மா இருக்குமா? கிணற்றடியில் நீர் இறைக்கையில் அங்கிருந்த பெண்களிடம் என் கணவர் பெரிய ஜோஸ்ய காரர்! ஒரே நாளில் ஜோஸ்யம் கற்றுவந்து ஜமாய்க்கிறார் என்று பெருமையடித்து வைத்தாள் அங்கு நீர் இறைத்துக்கொண்டிருந்த அந்த ஊர் சலவைத்தொழிலாளியின் மனைவி அதைக்கேட்டுக்கொண்டு போய் தன் கணவனிடம் கூறினாள். அவர்களுடைய கழுதை தொலைந்து போய் இருந்தது. அதற்கு ஜோஸ்யம் பார்க்க கணவனை ஜோதிடக்காரனிடம் அனுப்பினாள்.
      அவன் வந்து கேட்கும் போது ஜோஸ்யக் காரன் மிகுந்த கோபத்தில் இருந்தான். தான் ஏதோ சொல்ல போக மனைவி பிரபல்யப் படுத்தி பெரும் தொல்லை வந்து சேரும் போலிருக்கிறதே என்று ஆத்திரமாக இருந்தான். அப்போது சலவைத்தொழிலாளி என்னுடைய கழுதை எங்கே போயிருக்கும் கொஞ்சம் ஆருடம் பார்த்துச் சொல்லுங்க சாமி! என்று கேட்டான். ஜோதிடம் கோபத்தில் கழுதை கெட்டாச் குட்டிச் சுவரு! போடா! என்று கத்தினான்.
  சலவைத்தொழிலாளி அதையே வாக்காக எடுத்துக் கொண்டு கழுதையைத் தேடினான். ஒரு குட்டிச்சுவரோரம் கழுதை நின்றுகொண்டிருந்தது. அவன் ஆச்சர்யம் அடைந்து ஜோதிடனை பாராட்டி பேசி கழுதையை ஓட்டிச்சென்றான். அவன் அரண்மனை சலவைத்தொழிலாளி அவன் மூலமாக அரண்மனையில் ஜோதிடரின் புகழ் பரவியது. அரண்மனையில் அரசன் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் எண்ணெய்க்கிண்ணம் தொலைந்து போனது அதை கண்டுபிடித்து தர ஜோசியனுக்கு அழைப்பு வந்தது.
  ஜோதிடன் வெலவெலத்துப் போனான். அட இதென்ன வம்பு! தப்பாக சொன்னாலும் மாட்டிக் கொள்வோம்! உண்மையைச்சொல்லி நான் ஜோதிடன் இல்லை என்றும் சொல்ல முடியாதே! என்னடா இது சோதனை என்று யோசித்து ஊர் எல்லையோரம் ஓர் யாகம் வளர்த்துதான் திருடனை கண்டுபிடிக்க முடியும் என்று சொன்னான். இரவோடு இரவாக அப்படியே தப்பித்து போய் விடலாம் என்று திட்டம் போட்டு ஓர் யாக சாலை நிர்மாணித்து அதில் குண்டம் அமைத்து விறகு போட்டு நெய்வார்த்துக் கொண்டிருந்தான். அதில் புகை மூக்கை அடைத்தது. எனவே கண்ணுக்கும் மூக்குக்கும் கிட்டிக்கிச்சு ஸ்வாஹா! என்று சொல்லிக் கொண்டிருந்தான்.
 யாகசாலைக்கு உதவியாக கண்ணம்மா, மூக்கம்மா என்று இரண்டு வேலைக்காரிகள் நியமிக்கப்பட்டு இருந்தார்கள் அவர்கள்தான் வெள்ளி எண்ணெய்க் கிண்ணத்தை திருடியது. ஜோதிடன் சொன்ன கண்ணுக்கும் மூக்குற்கும் கிட்டிக்கிச்சு ஸ்வாஹா! என்ற மந்திரம் அவர்கள் காதில் விழுந்ததும் அவன் நம்மைத்தான் சொல்கிறான் நம்மை கண்டுபிடித்துவிட்டான் என்று நினைத்து ஜோதிடன் காலில் வந்து விழுந்து காப்பாற்றும் படி வேண்டினார்கள்.
   அவனும் பரிதாபப்பட்டு எண்ணெய்க் கிண்ணத்தை எடுத்த இடத்தில் வைத்துவிட்டால்  உங்கள் பெயரை காட்டிக் கொடுக்க மாட்டேன் என்று சொல்ல அவர்களும் கிண்ணத்தை யாருக்கும் தெரியாமல் எடுத்த இடத்தில் வைத்து விட்டார்கள். ஜோதிடனும் அரண்மனைக்குப் போய்  கிண்ணம் அதே இடத்தில் இருக்கும் யாகம் வளர்த்து கிண்ணத்தை திரும்ப வரவழைத்துவிட்டேன் என்று ஜம்பம் விட அரசன் அகமகிழ்ந்து போனான். அரசவை ஜோஸ்யனாக நியமித்துவிட்டான்.
   அந்த சமயத்தில் எதிரி ஒருவன் அந்நாட்டின் மீது போர் தொடுத்தான். எந்த நேரத்தில் போருக்கு சென்றால் வெற்றி பெறலாம் என்று கணித்து சொல்லும் படி மன்னன் உத்தரவிட்டான். மிகவும் அதிர்ந்து போனான் ஜோஸ்யன் எப்படி கணிப்பது? கணிப்பு தப்பானால் விபரீதம் விளையுமே என்று யோசித்து நாளை தனது கணிப்பை கூறுவதாக கூறினான்.

  ஜோஸ்யனின் புகழ் எதிரிக்கும் தெரிந்து இருந்தது. எனவே அவன் ஜோசியனை கடத்திச் சென்றுவிட்டான். அந்த மன்னனுக்கு எந்த தினம் போரிட நாள் குறித்து கொடுத்துள்ளாய்? என்று கேட்டு நச்சரித்தான். ஜோஸ்யன் மிகுந்த எரிச்சலுடன் “ தலையே போனாலும் நாளை சொல்ல எனக்குத் தெரியாது!” என்றான்.
    “ நாளைதான்   படையெடுக்கப் போகிறான் போல என்று எதிரி நினைத்துக் கொண்டான். அங்கிருந்த அரசனின் ஒற்றன் ஜோசியன் எதிரியிடம் மாட்டிக் கொண்டதையும் அவன் விசுவாசமாய் நாளைச்சொல்ல தெரியாது என்று மறுத்து பேசியதையும்  அரசனிடம் வந்து சொன்னான்.
  ஜோஸ்யனின் விசுவாசம் அரசனுக்கு பிடித்துப் போய், இப்போதே எதிரிமீது படையெடுத்து ஜோசியனை மீட்டுவருவோம் என்று எதிரி எதிர்பாரா சமயத்தில் அவன் முகாம் மீது பெரும் படையுடன் சென்று தாக்க எதிரி பிழைத்தால் போதும் என்று ஓடிவிட்டான். ஜோசியன் இன்னும் அரசனின் நம்பிக்கைக்கு உரியவன் ஆகிவிட்டான்.
   ஒருநாள் ஆற்று மேட்டில் அரசனும் ஜோசியனும் உலாவிக் கொண்டிருக்கையில் அரசன் திடீரென கையில் ஒரு பொருளை மறைத்துக் கொண்டு என் கையில் என்ன இருக்கிறது உம் ஜோஸ்யத்தில் கண்டுபிடித்துக் கூறு! என்றான்.
  ஜோஸ்யன் விழித்தான். அங்கேயும் தப்பிச்சிட்டேன்! இங்கேயும் தப்பிச்சுட்டேன்! ஆத்து மேட்டிலே காயா மாட்டிக்கிட்டேன்! ஆத்துமேட்டில காயா மாட்டிகிட்டேன்! என்று புலம்பினான்.
  அரசன் உடனே ஜோசியனை கட்டி அணைத்துக் கொண்டான். சபாஷ்! என் கையில் ஆத்து தும்மட்டி காய் இருக்கிறது என்பதை அட்டகாசமாய் சொல்லிவிட்டீர்களே! பாராட்டுக்கள் என்று கழுத்தில் கிடந்த முத்து மாலையை பரிசாக அளித்தான்.
    ஜோசியன் மன்னரை வணங்கினான். இத்தனை நாள் அதிர்ஷ்டம் எப்படியோ கை கொடுத்துவிட்டது. இனியும் அதையே பயன்படுத்த முடியாது என்று மனதில் நினைத்துக் கொண்டு மன்னா! எனக்கு சொந்த ஊரில் வேலை இருக்கிறது ஒரு ஆறு மாதம் சென்று வர அனுமதி வேணும் என்று விண்ணப்பித்தான். அரசனும் மகிழ்ச்சியோடு இசைவு தர, ஜோசியன் தன் கிராமத்திற்கு வந்தான். அங்கிருந்து தொலை தூரம் சென்று ஜோதிடம் பயின்றுவர தீர்மாணித்தான். பின்னர் அப்படியே சென்று ஜோதிடம் கற்று உண்மையான ஜோதிட அறிஞனாக அரண்மனைக்குத் திரும்பினான்.
(செவிவழிக் கதை)
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
   


Friday, July 22, 2016

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 72

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 72


1.   எங்க தலைவர் கூட்டணி கட்சிகளை சேர்த்து அணைக்கிறதிலே கில்லாடி!
எங்க தலைவர் கூட்டணியை சேர்த்து அழிக்கிறதுல கில்லாடி!

2.   வேலைக்காரிக் கூட என்ன சண்டை?
பத்து பாத்திரம் தேய்க்கணும்னு சொன்னீங்க இப்ப நிறைய பாத்திரங்களை போட்டிருக்கீங்களேன்னு கேக்கறா!

3.   மன்னருக்கு போர் என்றாலே அலர்ஜி…!
அதற்காக “போர்”வையை கூட யூஸ் பண்ண மாட்டேன் என்று அடம்பிடித்தால் எப்படி…?


4.   அந்தப் புரத்தில் இருந்து சீட்டி ஒலி கேட்கிறதே எதற்கு மந்திரியாரே…!
உங்கள் அரசவை டூட்டி முடிந்துவிட்டது என்று ராணியார் சீட்டி அடித்து நியாபகப்படுத்துகின்றார் அரசர் பெருமானே!

5.   தன்னோட ரீலீஸ் தேதியை தள்ளி வைக்கணும்னு கபாலி கேட்டுகிட்டு இருக்கானா எதுக்கு?
கபாலி படம் ரிலீஸ் ஆகறப்போ தானும் ரிலீஸ் ஆனா தனக்கு கூட்டமே சேராதுன்னு நினைக்கறானாம்!

6.    தலைவர் கட்சியை தன் கைக்குள்ளேயே வச்சிக்கிட்டிருக்கிறதா சொல்றியே எப்படி?
விரல் விட்டு எண்ணக் கூடிய அளவுலதான் கட்சியிலே மெம்பர்ஸ் இருக்காங்கன்னு சொல்ல வந்தேன்.

7.   தலைவர் ஏன் கோபமா இருக்காரு?
அவருக்கு வந்திருக்கிற குற்றப்பத்திரிக்கையிலே தன்னோட சமையல் குறிப்பை போட முடியுமான்னு வீட்டம்மா கேட்டு நச்சரிக்கிறாங்களாம்!

8.   இந்த சம்பந்தம் நழுவி போயிட கூடாதுன்னு பொண்ணுவீட்டுக்காரங்க குறியா இருக்காங்க!
அதுக்காக உட்கார்ற சோபாவுல பெவிக்கால் ஊத்தி வைக்கிறது எல்லாம் ரொம்ப ஓவர்!

9.   அந்த பஸ்ல என்னப்பா டைம் பாஸ் ரைடர்னு எழுதி இருக்கு…?
எல்லா ஊருக்குள்ளேயும் புகுந்து புகுந்து நிதானமாத்தான் போய் சேருமாம் அதை சிம்பாலிக்கா போட்டிருக்காங்க!

10.  அப்பா என்னை ஒரு பையன் காதலிக்கிறதா சொல்றான்!
வெட்டிப் போட்டுருவேன்!
அவனும் அதைத்தான் சொல்றான்…!

11. நெருப்புன்னு  படத்தோட டீசரை வெளியிட்டோமே வரவேற்பு எப்படி இருக்கு?
பேஸ்புக்கிலேயும் டிவிட்டர்லயும்  ஊதி ஊதியே பத்தவைச்சுட்டாங்க!


12.   அந்த டாக்டர் பேஷண்ட்ஸ்கிட்ட ரொம்ப வாஞ்சையா இருப்பாராமே!
பின்னே அவர் ஆஞ்சியோ ஸ்பெஷலிஸ்ட் ஆச்சே! அப்பத்தானே பீஸை கலெக்ட் பண்ண முடியும்?

13.  லைசென்ஸ், ஆர்சிபுக், இன்ஷூரண்ஸ், ஹெல்மெட் எதுவுமே இல்லாமா எப்படி வண்டி ஓட்டிக்கிட்டு வர்றே?
  திருடிக்கிட்டு வரும்போது இதையெல்லாம் தேடி எடுத்துகிட்டு வரமுடியுமா சார்?

14.  அந்த ஆள் இப்படி நம்ம மேனேஜரை கழுவி கழுவி ஊத்தறாரே யாரு அவரு?
எதிர்த்த டீக்கடையிலே டீ மாஸ்டரா இருக்காராம்!

15. என்னடா உன்னோட முதுகு இப்படி வீங்கி கிடக்குது…!
நான் எது செஞ்சாலும் என்னோட பொண்டாட்டி தட்டிக் கொடுத்து பாராட்டுவான்னு ஏற்கனவே சொல்லி இருக்கேன் இல்லே…!

16.  அவர் பெரிய ரஜினி ரசிகராம்!
இருக்கட்டுமே! அதுக்காக சிகரெட்டை வாயிலே வச்சிக்கிட்டு கபாலிபெட்டி கொடுங்கன்னு கேக்கறதெல்லாம் ரொம்ப அதிகம்!

17. மன்னர் ஏன் புலவர் மீது கோபமாக இருக்கிறார்?
புறமுதுகிட்டு வந்த மன்னரை “பின்னழகை காட்டி பீடு நடை போட்ட மன்னவா வாழி! என்று பாடிவிட்டாராம்!

18.  ஆனாலும் இந்த பையனுக்கு வாய்க்கொழுப்பு அதிகமா போச்சு சார்!
  ஏன் என்ன ஆச்சு?
பரிட்சையில முட்டை மார்க் போட்டதும் எப்பவும் முட்டையே போடறீங்களே ஆம்லெட் ஆஃப் பாயில்னு போடக் கூடாதான்னு கேக்கறான்!

19. ரிலீஸ் தேதி அறிவிச்சும் இன்னும் ஏன் விடுதலை பண்ணலைன்னு கைதி போராட்டம் பண்றான் சார்!
  அவன் பேரு என்ன?
கபாலி!

20. ராணியார் கிழித்த கோட்டை மன்னர் தாண்ட மாட்டார்!
    ஏன் அப்படி?
தாண்டினால் அவர் தோல் கிழிந்துவிடும் என்ற பயம்தான் காரணம்!


21. சுயம்வரத்துக்கு சென்ற மன்னர் வில்லை வளைத்தாரா?
  இளவரசியை வளைக்கப்போய் முதுகை ஒடித்துக்கொண்டு வந்து விட்டார்!

22. அந்த ஆஸ்பிடல்ல சேருவதற்கு யார் துணையும் தேவை இல்லை ஆனா வெளியே வரனும்னா நாலுபேரோட உதவி தேவை!
      ஏன் அப்படி?
செத்ததுக்கு அப்புறம் தூக்கிறது நாலுபேர் வேணும் இல்லையா?

23. கட்டிக்க போற பொண்ணுகூட வாட்ஸ் அப்ல சாட் பண்ணது தப்பா போயிருச்சு!
       ஏன்?
 லெப்ட் ஆக்கிவிட்டுட்டு போயிட்டா!

24. டிராபிக் கான்ஸ்டபிளை கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பா போச்சுன்னு எதுக்குச் சொல்றே?
   எந்த வழிக்கு போனாலும் குறுக்கே கைய மறிச்சுக்கிட்டு வந்து நிக்கிறாரே!

25. வருமானத்துக்கு அதிகமா சொத்து சேத்த வழக்குலே நீதிபதி தீர்ப்பை படிச்சதும் தலைவர் எதுக்கு வருத்தப்படறார்!
    குறைச்சு எடை போட்டுட்டாங்களாம்!தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Thursday, July 21, 2016

நொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள்! பகுதி 12

நொடிக்கதைகள் பகுதி 12

புழுக்கம்!
   ஆசை மகனுக்கு ஏசி வைத்த கிளாஸ் ரூம் உள்ள ஸ்கூலில் எல்.கே.ஜி அட்மிசன் போட்டுவிட்டு அதற்காக வாங்கிய கடனை எப்படி அடைக்கப்போகிறோம் என்று புழுக்கத்தில் ஆழ்ந்தான் மிடில்கிளாஸ் தகப்பன்.
பசி!
   வேலை முடிந்ததும் அவசர அவசரமாக வீட்டுக்கு வந்து மனைவி சுட்டுப்போட்ட காந்தல் தோசையை ருசித்து சாப்பிட்டான் பிரபல ஓட்டலில் தோசை மாஸ்டராக பணி புரியும் சரவணன்.

திருஷ்டி!
     ஊர் முழுக்க திருஷ்டி கழிக்க பூசணிக்காய் விற்ற வியாபாரி மாலை வியாபாரம் முடிந்ததும் சொல்லிக் கொண்டான். இன்னைக்கு நல்ல வியாபாரம்!  நிறைய திருஷ்டி பட்டு இருக்கும் வீட்டுக்குப் போனதும் அம்மாட்ட சொல்லி சுத்திப்போட சொல்லணும்!

எல்லாமே கையிலே!
     எதுக்கும் எங்கேயும் அலைய வேண்டியதே இல்லை! உலகமே இப்ப நம்ம கையிலே! எதுவேணும்னாலும் என்ன வேணும்னாலும் நொடியிலே தகவல் திரட்டிடலாம். எல்லாம் விஞ்ஞானத்தோட வளர்ச்சி! கடைக்கு போகவேண்டாம் வீட்டுக்கே கடை தேடிவரும். பஞ்சாங்கத்துக்கு ஜோசியர் வேண்டாம்! பணம் எடுக்க பேங்க் வேண்டாம் எல்லாமே கையிலே இருக்கு! எல்லாமே இப்ப நம்ம கையிலே வந்துருச்சு! என்று சொன்னவர் திடீர் என்று மார்பை பிடித்துக் கொண்டார். அப்படியே சுருண்டு விழுந்தார் ஹார்ட் அட்டாக் என்றார்கள் மரணத்தை வெல்ல விஞ்ஞானத்தால் முடியவில்லை!

படையல்!
   குலசாமிக்கு அபிஷேகம் செய்து அலங்கரித்து தலைவாழை இலையில் படையல் போட்ட போது அங்கு வந்த குழந்தை ஒன்று “ எனக்கு பசிக்குதே! என்றபோது விரட்டினார்கள் சாமிக்கு படைச்சதும்தான் பிரசாதம்! போ! போ! என்றார்கள்.கடைசிவரை  சாமி சாப்பிடவே இல்லை படையலை!

ஒளிவு மறைவு!
  பிரபல டைரக்டரோடு கிசுகிசுக்கப்பட்ட கவர்ச்சி நடிகையிடம் பேட்டி எடுத்தார்கள் ”எனக்கு மூடி மறைக்கவே தெரியாது! ஒளிவு மறைவும் கிடையாது” என்றாள்.

பாலம்!
   கிராமத்தில் இருந்து புதிதாக நகருக்குள் நுழைந்த சிறுவன் அப்பாவிடம் கேட்டான்  ஆறுங்களே இல்லை! ஆனா இந்த ஆளுங்க நிறைய பாலங்களை கட்டி வைச்சிருக்காங்களே? ஏம்பா?!

கூட்டல் பெருக்கல்!
   “ எம் பொண்ணுக்கு கூட்டவோ பெருக்கவோ தெரியாது! அவளை அப்படி நாங்க வளர்க்கலை! அவ பெரிய கம்பெனியிலே அக்கவுண்டண்டா இருக்கா! என்று பெருமையாக சொல்லிக்கொண்டாள் பிள்ளைவிட்டுக்காரர்களிடம் பெண்ணுடைய அம்மா.

திருடன் போலீஸ்!
   மும்முரமாக திருடனை விரட்டிக் கொண்டிருந்தார் போலீஸ்! போக்குக் காட்டிக் கொண்டிருந்தாலும் விடாமல் துரத்திக் கொண்டிருந்தார். இன்னும் ஒரே நிமிசம் திருடனை பிடித்து விடலாம்! அப்போது ஸ்விட்ச் ஆஃப் ஆனது செல்போன்! சே! என்று தூக்கி எறிந்தான்.

ரிலீஸ்!
 சிறைக்குள் இருந்தான் செந்தில். அவன் மனதில் புலம்பிக்கொண்டிருந்தான்   ” எப்படியும் நாளைக்கு ரிலிஸ் பண்ணிட்டா நல்லா இருக்கும். எந்த பிரச்சனையும் வரக்கூடாது! யாரும் எந்த அப்ஜெக்‌ஷனும் சொல்லக் கூடாது! ரிலீஸ் பண்ற வரைக்கும் எந்த பிரச்சனையும் வரக்கூடாது முருகா! பழனி ஆண்டவா! இந்த முறையும் என்னை காப்பாற்றுப்பா! உனக்கு மொட்டை போடறேன்! என்று வேண்டிக்கொண்டான்.  ரிலீஸ் ஆனதும் பறந்தான் அவன் தலைவர் நடித்த படத்தின் முதல் காட்சியை பார்க்க.

துக்க விசாரிப்பு!
     அப்பா இறந்துவிட்டார் என்று தகவல் அறிந்ததும் அடித்து பிடித்து சொந்த ஊருக்கு ஓடியவன் அரண்டு புரண்டு அழுதவன் அப்பாவின் விரலை பார்த்தான் அடுத்த நொடி அண்ணன்களிடம் கேட்டான் அப்பாவுக்கு நான் போட்ட மோதிரம் எங்கேடா போச்சு?


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துகளை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
Related Posts Plugin for WordPress, Blogger...