Tuesday, May 24, 2016

லவ் டிராஜடி!

லவ் டிராஜடி!


வழக்கம் போல இந்த கோடை விடுமுறைக்கும் சொந்த ஊர் போகவேண்டும் என்று சொன்ன போது உமா முறைத்தாள்.” அது என்ன ஊர்? சுத்த பட்டிக்காடு! இன்னிக்கு உலகம் முழுக்க எத்தனையோ வசதிகள் வந்துருச்சு! ஏன் உங்க பட்டிக்காட்டை சுத்தி இருக்கிற ஊரெல்லாம் எவ்வளோ முன்னேறிடுச்சு! ஆனா உங்க ஊர் மட்டும்?  அதிகம் எதுவும் வேணாம்? ஒரு ட்ரான்ஸ்போர்ட் வசதியிருக்கா? ஒரு நெட் வொர்க் கவரேஜ் இருக்கா? என்னால அந்த ஊரிலெ ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாதுப்பா!” என்று மூச்சுவிடாமல் பாடி முடித்தாள்.
   ”சரிசரி!  நீ வேணா சென்னையிலே உங்க மாமா வீட்டுல பசங்களோட தங்கிக்க அங்கே இருந்து ஒரு அம்பது கிலோ மீட்டர்தானே எங்க ஊர் நான் போய் ஒரு ரெண்டுநாள் இருந்துட்டு வந்துடறேன்!” என்று சொன்ன போது பெங்களூர் குளிரிலும் அவள் முறைத்தது சுட்டது.
    “போனவருஷமே இதான் லாஸ்ட்னு சொன்னேன்! சரி சரின்னு தலையாட்டிட்டு இப்ப திரும்பவும் வேதாளம் முருங்கை மரம் ஏறுதே…!”
   “என்னதான் இருந்தாலும் ஊர்ப்பாசம் விட்டுப் போவுதா? நீ உங்க அம்மா வீட்டுக்கு போறதை நான் அப்ஜெக்ட் பண்ணியிருக்கேனா?”
   “ அதுவும் இதையும் கம்பேரே பண்ணாதீங்க!” சுத்த பட்டிக்காடா இருக்கிற அந்த ஊரில இருந்து எப்படித்தான் சாப்ட்வேர் படிச்சு வந்தீங்களோ தெரியலை! நான் உங்ககிட்ட வந்து வசமா சிக்கிட்டேன்!”
     “அந்த பட்டிக்காட்டுல இருந்த ஒரு  வாத்தியாருக்கு படிக்காத வாத்தியாரலாதான் இந்தளவுக்கு நா வளர முடிஞ்சுது! அந்த நன்றிக்காவது அந்த மனுசனை வருசம் ஒரு தடவை போய் பார்த்து வர வேணாமா?”
  வாத்தியாரை மட்டும் பார்த்தா சரி! அப்புறம் உங்க கூடப்படிச்ச சிநேகிதிகளை பார்க்கறேன்னு  முன்னே ஒரு சிறுக்கி வீட்டுக்கு கூட்டிட்டு போய் என் மானத்தை வாங்கினீங்களே அத மாதிரி…
  ”என்ன மானம் போயிருச்சு! அவங்க ஆசையா வெட்டிக் கொடுத்த நுங்கை உரிஞ்சி குடிக்க தெரியாமா நீ முழிக்க அவங்களுக்கு சிரிப்பாயிருச்சு! அதெல்லாம் ஒரு விஷயமா?”
     ”போய் தொலையுங்க! என்னை கூப்பிடாதீங்க! ரெண்டு நாளுல திரும்பிரணும் சரியா?”
     எப்படியோ பர்மிஷன் வாங்கி அடிச்சு புடிச்சு  பூதூர் கிராமத்தில் நுழைகையில் ஊரே எலக்‌ஷன் பரபரப்பில் இருந்தது.  கிட்டா என்ற கிருஷ்ணன் தான் அவ்வூரின் கழகச் செயலாளராம். கொடி கட்டிக் கொண்டிருந்தவனை பார்த்து என்னடா எலக்‌ஷன் எல்லாம் எப்படி போவுது! என்று கேட்ட போது  ”வாடா ராசா! வா! வருஷத்துக்கு ஒரு தரம்தான் ஊர்ப்பக்கம் எட்டி பார்க்குறே! அதுவும் ஒரு நாளோ ரெண்டு நாளோ தங்கறே  இந்த வருஷமாவது ஒரு வாரமாவது தங்கிட்டு போயேண்டா!” என்றான்.
   அமர்த்தலாய் புன்னகைத்தேன். கூரை வேய்ந்திருந்த பாலு டீக்கடையில் இப்போது தகர தகடுகள் வேய்ந்திருந்தார்கள். வழக்கம் போல மாலை இரண்டுமணிக்குத்தான் டீ பத்த வைப்பார்களாம். உள்ளே ரெண்டு பேர் சீட்டாடிக் கொண்டிருந்தனர். ஜீன்ஸும் குளிங்கிளாஸுமாய் என்னைப் பார்த்து  கொஞ்சம் மிரண்டனர்.
     சாலை புதிதாக போட்டிருந்தனர். என்னடா கிட்டா! உங்க தலைவர் இன்னும் கட்சி பதவியையே புள்ளைக்கு கொடுக்க மாட்டேங்கிறார் அவருக்காக உழைச்சிக்கிட்டு இருக்கியே உனக்கு என்னத்தை கொடுக்க போறார்? என்றேன்.
      வேணாம்…! அரசியல் பேசாத.. நாம ப்ரெண்ட்ஸ் வேற ஏதாவது பேசுவோம்  என்றான்.
    அப்படியே ஊரின் கடைசியில் இருந்த கோயிலுக்கு வந்தோம்! எதிரில் இருந்த குளத்தில் நீர் வழிந்து கொண்டிருந்தது. ஒன்றிரண்டு அல்லி பூக்கள் பூத்து இருந்தது.
   இந்த மாதிரி கிராமத்திலேதாண்டா தண்ணியையே பார்க்க முடியுது! கோயில் புணரமைப்பு நடக்கிறா போல தெரியுது! நாம படிக்கிறப்ப ஒரே புதரா இருக்கும். நம்ம டியுசன் வாத்தியாரோட சேர்ந்து புதர் வெட்டி போடுவோமே!  ஆமா அது யாரு? கோவில்ல இருந்து வெளியே வர்றது  ஜனா தானே!
       ஆமாம்டா! ஜனாவேதான்…!
  இப்ப கொஞ்சம் உடம்பு பூசி தலையிலே முடியெல்லாம் வளர்ந்திருக்கு போல…
    ம்ம்..!
   எப்பூடி? அஸ்வினி ஹேர் ஆயில் நிறைய யூஸ் பண்ணியும் முடி வளராம தவிச்சானேடா! இந்த முடி அன்னிக்கு இருந்திருந்தா லவ்வாவது நிறைவேறி இருக்கும்.
      அது அப்ப! இப்ப ஏதோ மெடிசன் எடுத்து கொஞ்சம் வளர்ந்துருச்சு! இப்ப கல்யாணம் கூட ஆயிருச்சு தெரியுமா?
       அந்த பொண்ணையா…?
ஊகும் வேற…!
எனக்கு பழைய நியாபகம் வந்தது. அந்த ஊரின் இந்த கோவில் மண்டபத்தில்தான் டியுசன் எடுப்பார் ரமேஷ் வாத்தியார். அவர் அப்பா கோயிலில் பூஜை செய்து கொண்டிருந்தார். இவர் டிகிரி முடித்து வேலைக்கு போகாமல் டியுசன் எடுத்துக் கொண்டிருந்தார்.
   நாங்கள் எல்லோரும் அங்கே படித்து கொண்டிருந்தோம்! ஜோதி என்ற ஓர் இரட்டை ஜடை பொண்ணும் அதில் அடக்கம். அதற்கு தான் மகா அழகு என்று ஓர் எண்ணம். யாரையும் மதிக்காது. ரமேஷ் சாரை கூட அது சட்டை பண்ணாது.
  பத்தாம் வகுப்பு படிக்கையில் அதுவரை டியுசனுக்கு வராத ஜனா எங்களோட வந்து சேர்ந்தான்.  அஞ்சு வருசமா இவனுங்களுக்கு சொல்லிக்கொடுக்கிறேன் இவங்களை இந்த வருசம் கரை சேக்கறதே கஷ்டம் நீ புதுசா வந்து என்னத்தை படிச்சு கிழிக்க போறே? ரெண்டு வருசமாத்தான் என் டியுசன் நல்ல ரிசல்ட் கொடுக்குது! அதை கெடுக்கறதுக்குன்னு வந்தியா வேண்டாம் ஓடிப்போயிரு என்று ஜனாவை நிராகரித்தார் வாத்தியார்.
   அப்புறம் ஏதோ சிபாரிசு பிடிச்சு வாத்தியாரை தாஜா செய்து டியுசனில் சேர்ந்துவிட்டான். முதல் ஒரு வாரம் ஒழுங்காய்த்தான் இருந்தான். அப்புறம் வாத்தியாரையே இடக்காய் மடக்கி கேள்வி கேட்க ஆரம்பித்தான். அப்போது “க்ளுக்” என்று ஒரு சிரிப்பு ஜோதி சிரிக்க இன்னும் அதிகமாய் கலாய்க்க ஆரம்பித்தான்.
    ஆள் அப்படியே ஓமக்குச்சி நரசிம்மன் போல இருப்பான். உச்சந்தலையில் ஆங்காங்கே ரோமங்கள் முளைத்து செம்பட்டையாக இருக்க மண்டை அப்படியே தெரியும். அவன் பேசும்போதும் ஜலதோஷம் பிடித்தவன் பேசுவது போல இருக்கும் ஆனாலும் ஓவராய் கலாய்த்துக் கொண்டிருந்தான்.
   கோயிலில் பிரதோஷம் போன்றவை நடக்கும் போது பக்திப்பழமாய் வருவான். பிரசாத விநியோகம் அவன் தான் செய்வான். எல்லோருக்கும் கொடுப்பதை விட ஜோதிக்கு ஒரு பிடி அதிகமாய் கொடுப்பான். என்னடா அங்க மட்டும் அதிகம் என்றால் போதும் நீங்களும் அதுவும் ஒண்ணாடா! அது என்னோட ஆளு! அதை நான் கட்டிக்க போறேன் என்று சொல்லுவான்.
     ” நீதான் சொல்றே அதை கட்டிக்கப் போறேன்னு! அது சொல்லுச்சாடா!”
   ”நான் இன்னும் என்னோட லவ்வை அந்த பொண்ணுகிட்டே சொல்லலையேடா!”
      “அப்புறம்? உன் ஆளு அது இதுன்னு பீத்திக்கறே!”
டேய்! நான் பத்தாவது பாஸ் ஆகனுன்னா டியுசனுக்கு வந்தேன்னு நினைக்கிறே? இல்லைடா எப்படியாவது என் ஆளை அசத்தி மடக்கிரணும்னுதான் வந்தேன். இந்த வாத்தியை கலாய்க்கிற போதெல்லாம் அது ஒரு நமட்டு சிரிப்பு சிரிக்குது பாரு! அது ஒண்ணு போதும்டா!”
   இப்படியே சிரிச்சிப்புட்டு இருந்தா போதுமா?  வெங்கி கேட்க
  என்ன பண்ணனுங்கிறே?
 “ஒரு லெட்டர் கொடு! இல்லே ஒரு கிரிட்டிங் கார்ட்  ஸ்மார்ட்டா ஹார்ட் நடுவிலே ரோஸ் தைக்கற மாதிரி கொடு!” வெங்கி ஏத்திவிட்டான்.
     “அப்படி செஞ்சா…!”
 “அப்புறம் உன் ஆளு உன் கிட்ட சிக்கிரும்!”
  ”இல்லேடா! எனக்கு கொஞ்சம் கூச்சமா இருக்கு! அப்படியே ஜனா நெளிந்தான்.”
  ” அடச்சீ! உன்னை போயி… நாங்க… பெருசா…!”
 ”இப்ப என்னடாங்கிறீங்க? நாளைக்கே அந்த பொண்ணுகிட்டே ஒரு ரோஸைக் கொடுத்து ஐ லவ் யூ சொல்றேன் பாருங்க!” நாங்கள் ஏத்தி விட்டதில் ஜனா வீராப்பாக சொல்லிவிட்டு சென்றான்.
   மறுநாள் நாங்கள் ஆவலுடன் காத்திருந்தோம். மாலை டியுசன் ஆரம்பிக்கும் முன்னரே ஜனா ஆஜராகி இருந்தான். நாங்களும்தான். அன்று கொஞ்சம் அழகாகவே ஆடை உடுத்தி வந்திருந்தது அந்த பெண். வழக்கம் போல பெண்கள் கோவிலை சுத்தப்படுத்த துடைப்பம் எடுத்துச் செல்ல கண்காணிக்கும் சாக்கில்  உடன் சென்றான் ஜனா.
      சட்டென்று தன் கையில் இருந்த கார்டை நீட்டினான்  சிம்பு பாணியில்  ஜோதியிடம் ”காதல் வளர்த்தேன்…! காதல் வளர்த்தேன்..! உன்னில் நானும் என்னில் நீயும் சொல்ல காதல் வளர்த்தேன்!” என்று ஸ்டைலாக பாட  ஜோதி அந்த கார்டை வாங்கி சுக்குநூறாக கிழித்து எறிந்து  ராஸ்கல்! முதல்ல உன் தலையில முடியை வளரு! அப்புறம் காதலை வளர்க்கலாம்! என்று கத்தியது உடனிருந்த பெண்கள் கொல்லென்று சிரிக்க முகம் வாடி வெளியேறியவன் தான் அப்புறம் டியுசன் பக்கமே எட்டிப் பார்க்கவில்லை

  நினைவுகளில் இருந்து மீண்டு ”ஹாஹாஹா” வென சிரித்தேன். ”என்னடா பழைய நியாபகமா!” என்றான் கிட்டு.
   ”ஆமாடா! ”என்றேன்.
அப்போது அங்கே இடுப்பில் ஒரு குழந்தையோடு கொஞ்சம் பூசினாற்போல அந்த பெண் எங்களை கடந்தாள்.
  ”இ… இவளை எங்கோ பார்த்தா மாதிரி இருக்கே…!”
  ”இவதாண்டா அந்த ஜோதி…!”
கிட்டா சொல்லி முடிக்கவும்  ”ஜோதி… ஏய் ஜோதி… நில்லுடி! நீ பாட்டுக்கு போய்கிட்டே இருக்க!” என்று ஒருவன் அவளை தொடர்ந்தான். அவன் தலையில் முடியே இல்லை.
  ” இது…!” நான் கேட்க
”அவளோட புருஷன்” என்றான் கிட்டா.
நான் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தேன்.


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!   

Monday, May 23, 2016

தளிர் ஹைக்கு கவிதைகள்!

தளிர் ஹைக்கு கவிதைகள்!


குடியிருப்பு அகற்றம்
வேதனையில் எறும்பு!
விரிசலில் பூச்சு!

பற்றிய கால்கள்
விட மறுத்தது
ஈரநிலம்!

தேடிக் கொண்டே இருக்கின்றன!
தொலைக்காதவாழ்க்கையை!
எறும்புகள்!

கூடி சமைத்து உண்டும்
பசியோடு வருகின்றன குழந்தைகள்!
மண்சோறு!

எழவு வீட்டில்
அன்னியமாக சிரித்துக்கொண்டிருந்தது
தலைவரின் படம்!

மரிக்கையில்
மணந்து கொண்டிருந்தது
ஊதுபத்தி!

சேரும் இடத்தின் சிறப்பை
தனதாக்கிக் கொண்டது!
தண்ணீர்!

வீசப்படும் எச்சில் இலை!
காத்திருக்கும் நாய்கள்!
தட்டிப்பறிக்கிறது காற்று!

பலமுறை படித்து முடிக்கையில்
காணாமல் போய்விடுகிறது!
புத்தகத்தின் புது வாசனை!

பூட்டி வைப்பினும் சேர்த்துவிடுகின்றது
அறையினுள் காற்று!
தூசு!

காற்று சேர்ந்தவுடன்
ஆர்பரிக்கின்றன!
கடல் அலைகள்!

நெல்கொத்தவரும் குருவிகள்!
சிறகடித்து அழுதன!
நொடித்து போன வயல்கள்!


 இருண்ட வீடு!
விளக்கேற்றின மின்மினிகள்!
மரங்கள்!

சுட்டெரிக்கும் சூரியன்!
மீட்டெடுக்கவில்லை  தாகம்!
கானல் நீர்!

எழுதப்படாத பக்கங்கள்!
நிரப்பிக்கொண்டே வருகின்றது!
வாழ்க்கை!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Saturday, May 21, 2016

நான்கு உபதேசங்கள்! பீர்பால் கதை! பாப்பாமலர்!

நான்கு உபதேசங்கள்! பீர்பால் கதை! பாப்பாமலர்!


அக்பரின் அரசவையில் திறமையான அறிஞராகவும் மதியூகியாகவும் இருந்தவர் பீர்பால். ஒரு சமயம் அவர் மன்னர் அக்பரை விட்டு பிரிந்து  டில்லியை விட்டு வெகுதொலைவு கிளம்பினார்.
டில்லிக்கு கிழக்கே இருந்த அந்த ஊரில்  அவர் வசித்து வருகையில் ஒரு நாள் அங்கே ஒருவன் வந்தான். ‘உபதேசம் வேணுமா உபதேசம்! ஒரு உபதேசம் நூறு வெள்ளிக் காசுகள்!’ என்று அவன் கூவிக்கொண்டு இருந்தான்.
பீர்பாலுக்கு அவன் செய்கை வித்தியாசமாக இருந்தது. இதென்ன உபதேசத்தை விலைக்கு விற்கிறான். அப்படி அவன் என்னதான் சொல்லுகிறான் பார்ப்போம்! என்று அவனிடம் சென்று உபதேசத்தைப் பற்றி வினவினார் பீர்பால்.
  அந்த மனிதன், “ என்னிடம் நான்கு அருமையான உபதேசங்கள் உள்ளன! ஒரு உபதேசம் நூறு வெள்ளிக் காசுகள் நான்கும் வேண்டுமானால் நானூறு வெள்ளிக் காசுகள்” என்றான்.
  அவன் அப்படி என்னத்தான் உபதேசிக்கிறான் என்று பார்ப்போமே என்று பீர்பால்  தன்னிடமிருந்து ஒரு நூறு வெள்ளிக் காசுகளை கொடுத்து ஒரு உபதேசத்தை சொல்! என்றார்.
  “ஒரு விஷயம் சிறியதாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும் அதனை சிறியது என்று எண்ணிவிடக் கூடாது!” இதுதான் முதல் உபதேசம் என்றார் அந்த மனிதர்.

பீர்பாலுக்கு அந்த உபதேசம் பிடித்து போகவே தன் பையில் இருந்து மேலும் ஒரு நூறு  காசுகளை கொடுத்து இன்னொரு உபதேசம் சொல்ல சொன்னார்.
“எவரிடமாவது  தாங்கள் குறை குற்றம் கண்டால் அதனை மற்றவர்க்கு வெளிப்படுத்தக் கூடாது!” இதுதான் இரண்டாவது உபதேசம்.
இரண்டுமே பயனுள்ள உபதேசமாக இருக்கிறதே மூன்றாவதையும் கேட்டுவிடுவோம் என்று மேலும் ஒரு நூறு வெள்ளிக் காசுகளை தந்து மூன்றாவது உபதேசத்தை உபதேசியுங்கள் என்றார் பீர்பால்.
  அந்த மனிதர் சொன்ன மூன்றாவது உபதேசம் இதுதான்! “ தங்களை யாராவது விருந்துக்கு அழைத்தால் மறுப்பேதும் கூறாது கையில் எந்த வேலையிருந்தாலும் பின்பு வந்து பார்த்துக்கொள்ளலாம் என்று உடனே விருந்துக்கு சென்றுவிட வேண்டும்.”
  இன்னும் ஒரே உபதேசம் அதையும் கேட்டுவிடுவோம் என்று தன்னிடமிருந்து இன்னுமொரு நூறு வெள்ளிக்காசுகளை தந்து  நான்காவது உபதேசத்தையும்  சொல்லுங்கள் என்றார் பீர்பால்.
  “யாரிடமும் அடிமையாக வேலை செய்யாதே!” இதுதான் நான்காவது உபதேசம் என்று சொல்லிவிட்டு அந்த மனிதர் அகன்று விட்டார். நானூறு வெள்ளிக்காசுகள் கொடுத்து நான்கு அருமையான உபதேசங்களை பெற்றோம் என்ற மகிழ்வுடன் பீர்பால் நினைத்துக் கொண்டிருக்கும் போதே அந்த வழியாக குதிரை மீது ஒரு சிற்றரசன் வந்து கொண்டிருந்தார்.
   அவர் பீர்பாலை பார்த்தவுடன் குதிரையை விட்டு கீழிறங்கி, ‘ஐயா! தாங்கள் பீர்பால் அல்லவா? என்னை தெரிகிறதா? என்று வினவினார்.
  ஏற்கனவே அக்பரிடம் படைத்தலைவராக இருந்து இப்போது சிற்றரசனாக இருக்கும் அவனை அறிந்த பீர்பால் சமயோசிதமாக “ தாங்கள் இந்த நாட்டின் மன்னர் அல்லவா?” என்று கேட்டார்.
பீர்பாலின் மதிநுட்பத்தை அறிந்த அந்த சிற்றரசன், ஐயா! தாங்கள் என் அவையில் முக்கிய பதவியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டான். பீர்பாலும் ஒப்புக்கொண்டு அவருடன் அரசவைக்கு சென்றார்.
  சிலநாட்கள் சென்றது. ஒரு நாள் பீர்பால் அரண்மணை அந்தப்புரத்திற்கு செல்லவேண்டியதாக இருந்தது. அங்கு செல்கையில் அந்தப்புரத்து பணிப்பெண்ணும் காவல் அதிகாரி ஒருவரும் மோசமாக மது அருந்தி சுயநினைவின்றி ஆடை விலகி படுத்துக் கிடந்தனர்.
  பீர்பால் தன்னுடைய மேல் சால்வையை அவர்கள் மீது போர்த்திவிட்டு வந்துவிட்டார். மயக்கம் தெளிந்து எழுந்த காவல் அதிகாரி பீர்பாலின் சால்வை தம்மீது போர்த்தப் பட்டு இருப்பதை அறிந்து பீர்பால் தம்மீது குற்றம் சுமத்தி மன்னரிடம் சொல்லிவிடுவாரோ என்று பயந்தான். அதற்கு முன் தாமே முந்திக் கொள்ள வேண்டும் என்று அந்த பெண்ணிடம் அரசரிடம் சென்று முறையிட சொன்னான்.
     அந்தப் பெண் அரசவைக்கு சென்று, மன்னர் அவர்களே! பீர்பால் அந்தப்புரத்தில் நுழைந்து என்னை மானபங்கப் படுத்திவிட்டு சென்றார் இதோ பாருங்கள் அவரது சால்வை! என்று கூறி அழுதாள்.
  சால்வையை சாட்சியாக வைத்து பணிப்பெண் சொன்ன குற்றச்சாட்டு மன்னருக்கு கோபத்தை ஏற்படுத்திவிட்டது. கொஞ்சமும் யோசனை செய்யாமல் பீர்பாலை அழைத்து ஒரு கடிதம் எழுதி இந்த ரகசிய கடிதத்தை சேனாதிபதியிடம் சேர்த்துவிடுங்கள் என்று கூறி அனுப்பினார்.

  மன்னர் கொடுத்த அந்த கடிதத்தை எடுத்துக் கொண்டு சேனாதிபதியை பார்க்க பீர்பால் சென்று கொண்டிருக்கையில் வழியில் ஒரு நண்பர் பீர்பாலை அழைத்தார். “நண்பரே பீர்பால்! தாங்கள் தயவு செய்து இன்று எனது வீட்டில் விருந்துண்ணவேண்டும்! விருந்துண்டு என்னை சிறப்பித்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்!”என்று அழைத்தார்.
  “ நண்பரே! மிக முக்கியமான அரசாங்க வேலையாக சென்று கொண்டிருக்கிறேனே! இந்த கடிதத்தை சேனாதிபதியிடம் சேர்க்க வேண்டியுள்ளது! என்றார் பீர்பால்.
   அந்த சமயம் அங்கே அந்தப்புரத்தில் அலங்கோலமாக இருந்த காவல் அதிகாரி வந்தார். அவர் பீர்பாலிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்ற நோக்கில், பீர்பால் அவர்களே! நானே இந்த கடிதத்தை சேனாதிபதியிடம் சேர்ப்பித்து விடுகிறேன்! நீர் விருந்து உண்ணச் செல்லுங்கள் என்று சொல்லி கடிதத்தை எடுத்து சென்றார்.
   காவல் அதிகாரி கடிதத்துடன் சேனாதிபதியிடம் சென்றார். பீர்பால் விருந்தில் கலந்துகொண்டார். சேனாதிபதி கடிதத்தை படித்தார். உடனே தன் வாளால்  காவல் அதிகாரியின் தலையை வெட்டி ஓர் தட்டில் வைத்து பீர்பாலிடம் சென்று கொடுத்தார்.
   பீர்பாலுக்கு நிலைமை புரிந்தது. மூன்றாவது உபதேசம் தம்மை காத்தது என்று அறிந்தார். அந்த தலையுடன் அரசவைக்குச் சென்றார்.
  பீர்பால்! தாங்கள் எப்படி? தங்களை கொல்லச்சொல்லி அல்லவா கடிதம் எழுதினேன் வியந்தார் அரசர்.
  ”அரசன் தவறு செய்தாலும் ஆண்டவன் தவறு செய்வதில்லை மன்னர் அவர்களே! பணிப்பெண்ணை மானபங்க படுத்தியவன் இந்த காவல் அதிகாரிதான். தம்மை காத்துக்கொள்ள என் மீது பழி போட்டான். ஆனாலும் அந்தப் பழியில் அவனே சிக்கி மாண்டான்.” பீர்பால் நடந்ததை கூறவும் அரசன் வெட்கி தலை குனிந்தான்.
   “ பீர்பால் அவர்களே! என்னை மன்னியுங்கள்! இந்த தவறை பெரிது படுத்தாமல் தொடர்ந்து என் அரசவையில் அங்கம் வகித்து என்னை சிறப்பியுங்கள்!” என்று கேட்டுக்கொண்டான்.

   காசுகொடுத்த பெற்ற உபதேசமே இன்று என்னைக் காத்தது! இனி எவரிடமும் அடிமை வேலை செய்ய மாட்டேன்! நான் அக்பரின் அவைக்கு செல்ல போகிறேன்! அங்குதான் எனக்கு உரிய மரியாதை கிடைக்கும் என்று சொன்ன பீர்பால்  மீண்டும் டில்லிக்கு வந்தடைந்தார்.
  நீண்டநாள் பீர்பாலை காணாதிருந்த அக்பரும் பீர்பாலை கண்டதும் மகிழ்ந்து அரவணைத்துக் கொண்டார்.


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Friday, May 20, 2016

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 66

 கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 66


1.   தலைவரே மக்கள் நம்பளை ஏமாத்திட்டாங்க!
என்னய்யா சொல்றே?
எல்லா தொகுதியிலும் டெபாசிட் வாங்கிட்டோம் தலைவரே!

2.   தலைவர் எனக்கு முதல்வர் பதவி மேல ஆசை இல்லைன்னு அறிக்கை விட்டது ரொம்ப தப்பாய் போயிருச்சு!
  ஏன்?
இந்த தடவையும் எதிர்கட்சி தலைவரா உக்கார வைச்சிட்டாங்களே!

3.   ஒவ்வொரு ரவுண்ட் முடிவு வரும்போதும் தலைவர் பண்ணுன அட்டகாசம் தாங்க முடியலை…!
  என்ன பண்ணார்?
இவர் ஒரு ரவுண்ட் ஏத்திக்கிட்டே இருந்தார்!

4.   மக்களுக்காக நான்…! மக்களாகிய நான்!...!
  டயலாக் எல்லாம் நல்லா பேசுங்க! ஆனா ஆளும்போது கோட்டை விட்டுடுங்க…!


5.   தலைவரே நாம மூணாவது இடம் பிடிச்சிருக்கோம்…!
  ஆரம்பிக்கும் போதே நாம அங்கத்தானடா இருந்தோம்!

6.   மக்கழே! என்னை வைத்து எத்தனை மீம்ஸ் போட்டு கலாய்த்து சந்தோஷப்பட்டீர்கள்! உங்களை சந்தோஷமாக வைத்த எனக்கு ஓட்டுப் போட்டு சந்தோஷப்பட வைக்காமல் விட்டுவிட்டீர்களே மக்கழே! இது நியாயமா மக்கழே!

7.   தலைவர் எதுக்கு தன்னோட முதுகு காட்டிகிட்டு இருக்கிற பேனரை தொகுதி பூரா ஒட்டி வைக்க சொல்றாரு…!

ஜெயிச்சதுக்கு அப்புறம் யாரும் அவரை திரும்பி பாக்கலைன்னு சொல்லக் கூடாதாம்!

8.   அதிமுக ஜெயிச்சது உன்னோட பொருளாதாரத்தை பாதிச்சிருச்சா எப்படி?
அவங்க ஸ்கூட்டி கொடுக்கப் போறாங்க! அத ஓட்ட பெட்ரோல் நான் இல்லே போடனும்!


9.   என் வொய்ஃபுக்கு சேவையே வாழ்க்கைன்னு ஆயிருச்சு!
நிறைய உதவி செய்யறதை லட்சியமா வச்சிருக்காங்களா கங்கிராட்ஸ்!
 நீ வேற எப்ப டிபன் செஞ்சாலும் சேவை தான் பண்றான்னு சொல்ல வந்தேன்!

10. நம் மன்னருக்கு சகுனத்தில் ரொம்ப நம்பிக்கையா? கால் இடறிவிட்டது என்று போர்க்களத்திற்கு போவதை தவிர்த்துவிட்டாராமே!
ஊகும் அதெல்லாம் ஒன்றும் இல்லை! முதல் நாளே எதிரி தன் தலையை இடறிவிடப்போகிறான் என்ற பயம் தான்!

11.  சாமரம் வீசும் பெண்களிடம் அரசர் இப்போதெல்லாம்சில்மிஷம் செய்வது இல்லையாமே…!
அரசியார் சிசிடீவி கேமரா வைத்துவிட்டாராம்!

12.  தலைவரே தேர்தல்ல தோத்தாலும் நமக்கான வாய்ப்புகள் இன்னும் இருக்கு…!
   எங்கே…? எங்கே…?
 புழல்…! வேலூர்…! திஹார்!

13. அந்த பொண்ணுக்கு லவ் லெட்டர் கொடுத்தது அவ அப்பாவுக்குத் தெரிஞ்சு போயிருச்சு!
அப்புறம்?
நீ இன்னும் பழங்காலத்திலேயே இருக்கே! வாட்சப்லே மெசேஜ் அனுப்பி இருக்கலாம்! இன்பாக்ஸ்லே கூப்பிட்டு சாட் பண்ணியிருக்கலாம்! ஹைக் மெசெஞ்சராவது யூஸ் பண்ணி இருக்கலாம் இதெல்லாம் செய்யாம பழைய பஞ்சாங்கமா இருக்கியேன்னு டோஸ் விடறாரு!

14.  அதிர்ஷ்டம் அவரை ஒட்டிக்கிட்டு விடவே மாட்டேங்குதுன்னு எப்படி சொல்றே?
  ஸ்டிக்கர் வியாபாரம் செய்யறார்!


15. மன்னர் நமது புலவரை போர்க்களத்திற்கு அழைத்து செல்ல போகிறாராமே?
  எதிரியை ஓட ஓட விரட்டுவேன் என்று சொல்லி இருக்கிறாரே!

16.  மூணு மாடி ஏறி குதிச்சு பூட்டை உடைச்சிருக்கியே ஏன்?
லிப்ட் ஒர்க் ஆகலை எஜமான்!

17. மாற்றம் வேணும் மாற்றம் வேணும்னு தலைவர் பிரச்சாரம் பண்ணது தப்பா  போயிருச்சு!
   ஏன்?
எம்.பி யா இருந்தவரை எம்.எல்.ஏவா மாத்தி விட்டுட்டாங்களே!

18.  மன்னர் இப்போதெல்லாம் அதிகாலையில் நடைப் பயிற்சி மேற்க்கொள்கிறாராமே என்ன விஷயம்?
பூங்காவில் விதவிதமான உடைகளில் பெண்கள் உடற்பயிற்சி செய்கின்றனராம்!

19.  மன்னருக்கு நாக்கு நீளம் என்று எப்படி சொல்கின்றாய்?
  எதிரியிடம் மண்ணைக் கவ்வி விட்டு மண் சரியில்லை சுத்த உவர்ப்பாய் இருக்கிறது என்று சொல்கின்றாரே!

20. அந்த டைரக்டர்  கதையை ரொம்ப மெதுவா நகர்த்திட்டு போறார்!
  அப்ப டைம்பாஸ் டைரக்டர்னு சொல்லுங்க!

21. தலைவரே குடியை ஒழிப்போம்னு நாம அறிக்கை விட்டிருக்க கூடாது...!
    ஏன்?
நம்ம குடியை அறுத்துட்டாங்களே!

22. தலைவர் எதுக்கு வித்தியாசமா குனிஞ்சு நிமிஞ்சு எக்ஸர்சைஸ் பண்ணிக்கிட்டு இருக்காரு...?
  ஆளுங்கட்சியிலே அவருக்கு அமைச்சர் போஸ்ட் கொடுக்கிறதா சொல்றாங்களாம்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Thursday, May 19, 2016

நொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள்! பகுதி 7

விளம்பரம்!

 ச்சீ ச்சீ! அசிங்கமப்பா!  திறந்த வெளியில் மலம் கழிக்காதீர்கள்! என்று விளம்பரம் எழுதியவன் எழுந்தான். அவசர அவசரமாக சென்று மரத்தடியில் ஒதுங்கினான்.

கரண்ட் அஃபேர்ஸ்!

   ச்சே! பாழாப் போன மழை! ரெண்டு நாளா கரண்ட்டே இல்லை! ஆளறவங்களுக்கு ரெஸ்பான்ஸே இல்லை! என்றவள் கரண்ட் வந்ததும் போனை சார்ஜரில் சொருகி பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் அப்டேட் செய்தாள் கரண்ட் வந்துருச்சி!

ரிசல்ட்!
   நாளைக்கு ரிசல்ட்! மதிவாணன் பரபரப்பாக இருந்தார். முடிவு என்ன ஆகுமோ? வெற்றியா? தோல்வியா? நினைத்ததற்கு மாறாய்ப் போனால்… அப்புறம் என்ன ஆகும்? முடிவு வந்தது நினைத்தபடி அவர் கூட்டணி தோல்வி அடைந்துவிட்டது. யாருக்கோ போன் செய்து தலைவரே ப்ளான் சக்ஸஸ்! என்றார் சந்தோஷமாக.

சிறப்புதரிசனம்!
   250 ரூபாய் சிறப்பு தரிசனம்! க்யு குறைவாக இருந்தது. பொது தரிசனம் நீண்டு இருந்தது. காசிருந்தா நாமும் சீக்கிரம் கடவுளை பார்க்கலாம்! ராமு சொல்ல,  சும்மா இருடா! காசில்லாவிட்டாலும் கடவுளோட சன்னிதானத்திலே நாமல்லாம் கொஞ்ச நேரம்  நிக்கிறோம்! காசை கொடுத்தும் அவங்க சீக்கிரமா இல்லே துரத்திவிட்டுடாறாங்க! என்றான் சோமு.

டிப்ஸ்!
  ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு டிப்ஸ் கேட்டு தலையை சொரிந்த சர்வரிடம் சம்பளம் வாங்கறே இல்லே! அப்புறம் என்ன தனியா டிப்ஸ்? முதலாளிகிட்டே சொல்லவா என்று கடிந்து கொண்டவர்  வெளியே வந்து செல்லை ஆன் செய்து பேசினார் சார்! உங்க பெண்டிங் வொர்க் முடிச்சிடறேன்! தனியா கவனிச்சிருங்க!


சிரிப்பு!
   தன் நகைச்சுவை எழுத்தால் எல்லோரையும் சிரிக்க வைக்கும் எழுத்தாளரின் மனைவி அவரை சாடிக்கொண்டிருந்தார். எப்ப பாரு மூஞ்சியை ‘உம்’னு வைச்சிகிட்டு ஒரு சந்தோஷம் இருக்குதா? ஒரு சிரிப்பு இருக்குதா? ஏன் தான் இப்படி இருக்கீங்களோ?

போராட்டம்!
   கோவில் எதிரே இருக்கும் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்ற போராட்டம் ஒரு வழியாய் முடிவுக்கு வந்தது. ஆம்… ஹைவேஸ் விரிவாக்கத்தில் கோவிலை இடித்துவிட்டார்கள்.

நவீன அப்பா!
   சதா போனை நோண்டிக்கிட்டு பேஸ்புக்கு, டிவிட்டர், வாட்சப்புன்னு மேய்ஞ்சிகிட்டு இருக்கிறதுக்கு பதிலா  புதுசா நாலு புதுப்படம் டவுண்லோட பண்ணித் தரலாம் இல்லே… நானாவாது பாப்பேன்… என்று கத்திக்கொண்டிருந்தார் அப்பா!

முரண்!
 ப்ளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பீர்! என்ற அழகாக மல்டிக்கலரில் பிரிண்ட் செய்து வைத்திருந்தார்கள் ப்ளாஸ்டிக்  அட்டையில்!

ஏக்கம்!
   சுதந்திரமாய் சுற்றித்திரிந்துக்கொண்டு இருந்த அரசு பள்ளி மாணவர்களை ஏக்கமாய் பார்த்தபடி தனியார் பள்ளி பேருந்தில் சென்று கொண்டிருந்தது அந்த குழந்தை.


காஸ்ட்லி!
     தேர்தலில் ஜெயித்த கட்சித் தலைவர் தன்  சக தலைவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். எல்லாம் ரொம்ப காஸ்ட்லியா போய்க்கிட்டிருக்கு போன தடவை  இருநூறு முன்னூறுக்கு வாங்கின ஓட்டை இப்ப ஐநூறு ஆயிரம்னு கொடுக்க வேண்டியதா இருக்கு! அடுத்த முறை எவ்ளோ ஆகுமோ?

சுதேசி!
    காந்தி வேசம் போட்டு முதல் பரிசை வென்ற குழந்தைக்கு கே.எப். சியில் ட்ரீட் வைத்து கொண்டாடினர் குடும்பத்தினர்.


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!  

Tuesday, May 17, 2016

நொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள்! பகுதி 6

நொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள்! பகுதி 6


தாய்ப்பால்!
  குழந்தைக்கு தாய்ப்பால் தாம்மா நல்லது. அதை நிறுத்தாதே! அப்பதான் குழந்தை வளப்பமா நோய் எதிர்ப்பு சக்தியோடு இருக்கும். அழகு குறைஞ்சிரும்னு தாய்ப்பால் தராம ஒதுக்கி வச்சுடாதே கண்ணு. என்று தன் பெண்ணுக்கு அட்வைஸ் செய்த மீனாட்சி தாயிடம் பால் குடித்துக் கொண்டிருந்த கன்றை பிடித்து இழுத்து தள்ளிக் கட்டினாள்.

நோட்டா!
  மறக்காம ஓட்டுப் போடுங்க! அது ஜனநாயக உரிமை! யாரையும் பிடிக்கலைன்னா கூட நோட்டாவுல ஓட்டு போடுங்க! ஆனா வாக்கு போடாம மட்டும் இருந்திராதீங்க. உங்க ஒரு ஓட்டு கூட ஓர் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று புரட்சி வசனம் பேசிய நடிகர் மறந்துவிட்டார் ஓட்டு போட!

பிடிப்பு:
 வாழ்க்கையிலே ஒரு பிடிப்பு வேணுங்க! எது மேலேயும் பற்று இல்லேன்னா அது சன்னியாசி வாழ்க்கை! ஒரு குடும்பஸ்தனுக்கு இது கூடாதுங்க! புள்ளைங்க மேல பாசத்தை வைங்க! இல்லை பொண்டாட்டி மேல அன்பு காட்டுங்க அப்பதான் வாழ்க்கை இனிக்கும். இப்படி பேசிய சொற்பொழிவாளரின் கார் அதிவேகத்தில் செல்ல ஏம்ப்பா! என்ன ஆச்சு? பிடிப்பே இல்லைங்க!  என்னது?  ப்ரேக் பிடிக்கலைங்க என்றார் ஓட்டுனர்

தாகம்!

 அந்த பெட்டிக்கடையில் கூட்டம் நிறைந்திருந்தது. வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. குளிர்சாதனப் பெட்டியில் இருந்து பெப்சியும் மாஸாவும் போவண்டாவும் காலியாகிக் கொண்டிருந்தது. ஐயா! ஒரு கோக் கொடுங்க! வாலிபன் கேட்க, ஒரு நிமிசம் தம்பி! என்றவர்  கடையைவிட்டு வெளியே வந்து பின்னாலிருந்த வீட்டினுள் நுழைந்து பானையில் இருந்து ஒரு சொம்பு நீர் அருந்தினார்.

 வி.சி.டி!
   பத்துவருடங்கள் அசிஸ்டெண்டாக இருந்து முதல் படம் கிடைத்து இயக்கி அதை வெளியிட்டுவிட்டு வீட்டுக்கு போன் செய்தார் அந்த இயக்குனர். “ அப்பா! படம் பார்த்தீங்களா? எப்படி இருக்கு? வி.சி.டி பிரிண்டே சரியில்லைடா! ஒரே மங்கலா தெரியுது? உன் கிட்டே இருந்தா நல்லதா ஒண்ணு அனுப்பி வைடா! என்ற போது அதிர்ந்தான்.

பிக்ஸிங்!
   இந்த போட்டியில் அந்த அணி ஜெயித்தே ஆக வேண்டிய சூழல்! ஆட்டம் நல்லவிதமாய் இல்லை. முக்கிய விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்துக் கொண்டிருந்தது அணி. அப்போதுதான் அந்த புதிய பேட்ஸ்மேன் அசத்தலாக ஆடினான். கூட இருந்தவன் ஒத்துழைக்க நிமிர்ந்தது அணி. கடைசி பந்தில் ஐந்து ரன்கள் தேவை என்ற போது பதட்டத்தில் பந்துவீச்சாளர் புல்டாஸ் போட சிக்சராக மாற்றினான்  வெற்றி வெற்றி!  பார்த்துக்கொண்டிருந்த ரசிகன் துள்ளிக் குதித்தபோதும் மூலையில் ஓர் எண்ணம் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை “பிக்ஸ் பண்ணியிருப்பாங்களோ?”

வீடு!
  வர வர சிட்டிக்குள்ள மக்கள் தொகை அதிகமாயிருச்சு! எங்க பாரு ஒரே கூட்டம்! குடியிருக்க ஒரு வீடு கிடைக்குதா?  இல்லே கிடைச்சாலும் அங்கே நிம்மதியிருக்குதா? ஒரே இரைச்சல்! ராத்திரி பன்னிரண்டு மணியானா கூட தூங்காம ஒரே சத்தம்! கூச்சல்! சரி புறநகர்ல பாக்கலாம்னா அங்கேயும் நிரம்பி வழியுது கூட்டம்! கொஞ்சம் கூட சரியில்லை!  அட நீ வேற இப்பல்லாம் ஒரு மரம் இருக்குதா? காத்தாட அப்படியே உக்காந்து பேச! அதுக்கு கூட வழியில்லாம போயிருச்சு!  இரண்டு பேய்கள் பேசிக்கொண்டன.

பேஸ்ட்!
   கடுமையான பல் வலி! இத்தனைக்கும் நான் உபயோகிக்கும் பேஸ்ட் பல் டாக்டர்கள் பரிந்துரைக்கும் ப்ராண்ட்தான். உப்பும் இருக்கும் கரியும் இருக்கும். ரெண்டு வேளை ப்ரஷ் செய்கிறேன். ஆனாலும்… ஒரே வலி…! காத்திருக்கையில்தான் கவனித்தேன். விளம்பரத்தில் தோன்றும் அந்த பெண்மணி அவரும் வாயை பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தார்.

முரண்!
   வந்துட்டானுங்கப்பா! ஓட்டு கேட்டு! அஞ்சு வருசத்துக்கு ஒரு தரம் தவறாம வருவானுங்க அப்புறம் எட்டிக்கூட பார்க்க மாட்டானுங்க! நம்ம பொழப்பை பாக்காம இவனுங்களுக்கு ஓட்டு போட்டு என்ன ஆவ போவுது? இப்படி பேசிக்கொண்டிருந்த கிராமத்தான்கள்தான் முதல் ஆளாய் வாக்குச் சாவடியில் நின்று கொண்டிருந்தனர்.

ரிசல்ட்!
   இன்னைக்கு ரிசல்ட் வரப் போவுது! கடவுளே நல்ல பர்சண்டேஜ் கிடைக்கணும். அப்பத்தான் ஸ்கூல்ல தலைநிமிர்ந்து போவ முடியும். ஸ்கூல்ல நம்ம பையன் டாப் மார்க் எடுத்தான்னா நமக்கு தனி கவுரவம் கிடைக்கும். இன்னும் ஒரு மணி நேரத்துல எல்லாம் தெரிஞ்சிரும். ஒரு வருஷ உழைப்பு! வீணா போயிடக் கூடாது கடவுளே! நல்ல பர்சண்டேஜும் ஸ்கூல் டாப்பரும் கிடைச்சா பிள்ளையாரப்பா உனக்கு சிதறு தேங்காய் உடைக்கிறேன்! படபடப்பாய் வேண்டிக்கொண்டிருந்தார் அந்த ஆசிரியர்.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி

Monday, May 16, 2016

மறக்காமல் போடுங்க ஓட்டு!

மறக்காமல் போடுங்க ஓட்டு!


கரை போட்ட வேட்டி கட்டி
கறைபடாத கரங்களுக்கு சொந்தக்காரர் என
கேட்டு வருகின்றார் ஓட்டு!

ஐந்தாண்டுக்கு ஓர் முறை ஆட்சியில் ஓர் மாற்றம்
அதுதானே ஜனநாயகத்தின் தோற்றம்!
ஓர் நபரே அரசாண்டால் அது முடியாட்சி
ஊர் முழுக்க கூடி தேர் இழுத்தால் குடியாட்சி!

மாற்றங்கள் என்று சொல்லி கேப்பாரு ஓட்டு!
தோற்றங்களை உருவாக்கி ஆளுகின்ற நாடு!
இலவசங்கள் என்றே சொல்லி எல்லோரையும் பின்னோக்கி
பல வருசங்கள் தள்ளினது யாரு?
கோடிகளை சேர்த்துக் கொள்ள கொடுக்கிறாங்க சில நூறுகள்!
கேள்விகளை கேக்க முடியுமா யோசித்து பாரு!

உன் ஓட்டு உன்னுரிமை அதை விற்று நோட்டுக்கு
கொடுக்கலாமா முன்னுரிமை?

நோட்டாவுக்கு போட்டாலும் போடு!
நோட்டுக்கு போடாதே ஓட்டு!
நலத்திட்டங்கள் நற்பணிகள் செய்வதிங்கே யாரு?
நல்லாவே நீ யோசிச்சு பாரு!

உன் விரலில் கறை பட்டாலும்
கறைபடாத நபர்களையே நீ  தேடு!
உன் ஒரு  வாக்கும்  உருவாக்கும் ஓர் மாற்றம்!
உன் மனதில் இதை நீ ஏற்று!

வாக்கினை பதிவாக்கி உன் செல்வாக்கினை நீ உயர்த்து!
நம் நாட்டை வழிநடத்த நல்லதொரு தலைவனை
நீ அடையாளம் காட்டு. அதற்காகவேணும் உன் விரலில்
இட்டுக்கொள்ள வேண்டும்  மை அடையாளம்!
இதுதானே சிறந்த வாக்காளரின் அடையாளம்!

மறவாமல் இடுவீர் ஓட்டு! மாநிலம் முழுக்க சிறக்கவேணும் கேட்டு!

   டிஸ்கி: நேற்றே பதிவிட வேண்டியது. டேட்டா கார்டில் பணமில்லாததால் இன்று ரீசார்ஜ் செய்து பதிவிட நேரமாகிவிட்டது.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!Tuesday, May 10, 2016

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

சுழற்சி நின்றதும்
தோன்றியது புழுக்கம்!
மின் விசிறி!

பிரித்து வைத்தாலும்
சேர்ந்து கொள்கிறது
குழந்தைகளிடம் மண்!

தலைகவிழ்ந்ததும்
நிமிர்ந்தான் விவசாயி!
பயிர்கள்!

காலச்சக்கரமில்லை
கடந்தன நாட்கள்
காற்றில் படபடத்தது நாட்காட்டி!

உயர்ந்த இடம்!
உயர்கிறது மதிப்பு!
இளநீர்!

நெடிய கட்டிடங்கள்
தடுத்து நிறுத்தியது
காற்றின் பயணம்!

அடையாளத்தை கொன்று
அகலமாகின சாலைகள்!
மரங்கள்!

விருட்சங்கள் வெட்டுபடுகையில்
விரைகிறது  
குளிர்சாதனப் பேரூந்து!

மிச்சமிருக்கும் வயல்களில்
எச்சங்களை தேடிக்கொண்டிருக்கிறது
வண்ணத்துப் பூச்சி!

கீறினாலும்
இரத்தம் பீறிடவில்லை!
சுடு சொற்கள்!

குப்பையை கிளறி
இரை தேடுகின்றது
கோழி!

கைப்பிடித்து நடத்திச்செல்கையில்
கனவு தேசத்தை காண்பிக்கிறது
குழந்தை!

சிதறும் சிரிப்புக்களால்
சேர்த்து வைக்கிறது குடும்பத்தை
குழந்தை!

குறும்புகள் ரசிக்கப்படுகையில்
கோலோச்சுகிறது
குழந்தை!

சுடும் வெயில்
ஊடுறுவ விடவில்லை!
மரத்தின் நிழல்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்!  நன்றி!Monday, May 9, 2016

வளர்ச்சி தரும் அட்சய திருதியை வழிபாடு!

வளர்ச்சி தரும் அட்சய திருதியை வழிபாடு!

ஒவ்வொரு மாதத்திற்கு இரண்டு பட்சங்கள். சுக்லபட்சம் மற்றும் கிருஷ்ணபட்சம் என்று அவை சொல்லப்படுகின்றது. அமாவாசை முதல் பவுர்ணமி வரையிலான நாள் சுக்லபட்சம். பவுர்ணமி கழித்து அமாவாசை வரை கிருஷ்ணபட்சம்.
    வைகாச மாத சுக்லபட்ச திருதியை திதி அட்சய திருதியை என்று வழங்கப்படுகின்றது. இந்த நாளில் செய்யப்படும் செயல்கள், தானங்கள் குறையாது வளரும் என்பது புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. குசேலர் இந்த நாளில் பகவான் கிருஷ்ணரை தரிசித்து வளம் பெற்றார் என்பது புராணம்.
  க்ஷயம் என்றால் குறைவு என்று பொருள். புற்றுநோயைக் கூட க்ஷய ரோகம் என்று சொல்வார்கள். புற்றானது நமது செல்களை அழித்து ஆயுளை அழிக்கிறது குறைக்கிறது. அக்ஷயம் என்றால் குறைவில்லாத என்று பொருள்.
 அக்ஷய திருதியை அன்று நகைகளை வாங்கி குவிக்க வேண்டும் என்பது தவறான நம்பிக்கை.  அக்ஷய திருதியை அன்று தெய்வங்களுக்கு செய்யப்படும் பூஜைகள், தானங்கள், ஹோமங்கள், ஜபங்கள் குறைவில்லாது இருந்து நம்மை காக்கும் என்று பொருள்.
   நம்முடைய முன்னோர்களுக்கு அன்றைய தினம் தர்ப்பணம் செய்யவேண்டும். இதில் அவர்கள் மகிழ்வடைந்து நம் குடும்பம் செழிக்க குறையில்லாது வாழ அருள்புரிவார்கள்.
   அட்சய திருதியை அன்று ஒரு செப்பு சொம்பில் சுத்தமான நீரை நிரப்பி அதில் ஏலக்காய்,லவங்கம், பச்சை கற்பூரம் போன்ற வாசனை திரவியங்கள் சேர்த்து ஏழை ஒருவருக்கு தானம் செய்ய வேண்டும். இந்த நீர் நிரம்பிய பாத்திரம் பிரம்மா, விஷ்ணு, சிவன் சொருபமானது. அவர்கள் அருளால் நமது விருப்பங்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
   அட்சய திருதியை நாளில் இப்படி தண்ணீரை தானமாக செய்தல் நன்மை பயக்க கூடியது. தண்ணீர் பந்தல் அமைத்து  சுத்தமான குடிநீர்,  மோர் போன்றவற்றை தானம் செய்யலாம். குறைந்தது ஒரு பத்து பேருக்காவது தண்ணீர் தானம் அளிப்பது சிறப்பாகும். முன்னோர்கள் திருப்தி அடைவார்கள்.
 இன்றைய தினம் ஸ்ரீ லஷ்மி குபேரவழிபாடு சிறப்புடையது ஆகும்.
நகைகளை வாங்க வேண்டும் என்பது அவசியம் அல்ல! திருமகள் வீற்றிருக்கும் உப்பு சிறிதளவு வாங்கி வைக்கலாம்.

விஜயராகவ நாயக்கர் ஆட்சியில் மழை இல்லாமல் நாடு வறட்சியில் அல்லல்பட, அச்சமயம் அந்நாட்டிற்கு விஜயம் செய்திருந்த ஸ்ரீ ராகவேந்திரரை அரசர் வேண்ட, நாட்டின் நிலையையும் மக்களின் நிலையையும் நேரில் கண்ட சுவாமிகள், அவர்களை அழைத்துக் கொண்டு, அந்நாட்டின் நெல் களஞ்சியத்திற்குச் சென்று, அங்கிருந்த சிறிதளவு நெல் குவியல் மீது அட்சயம் என்று எழுதி, அதை அங்கு இருந்த மக்களுக்கு தன் திருகரத்தால் தானம் செய்ய, அங்கு ஓர் ஆச்சரியம் நிகழ்ந்தது. ஐந்து பேருக்குக் கூட போதாத அளவில் இருந்த நெல் இருப்பு, சுவாமியின் மகிமையால் ஆயிரக்கணக்கான மக்களுக்கு அள்ளி அள்ளி தந்தும் குறையவில்லை. பிறகு சில மணிநேரத்திலேயே அடைமழை பெய்து வறட்சி நீங்கியது. இந்த அற்புதம் நிகழ்ந்ததும் ஓர் அட்சய திருதியை நாளில்தான்.

அட்சய திருதியையன்று செய்யக்குடிய சுபகாரியங்கள் அனைத்தும் மென்மேலும் வளர்ச்சியடையும். தகுதியான நபர்களுக்கு தான, தர்மம் செய்ய வேண்டும் என்பது நம்பிக்கை. பசுமாட்டுக்குக் கைப்பிடி அளவு புல், வாழைப்பழம் கொடுப்பது மகாலட்சுமியின் திருவருளைப் பெற வழி வகுக்கும். வற்றாத கடலில் இருந்து பெறப்படுகிற, எப்போதும் வீட்டில் இருப்பு வைத்திருக்கக்கூடிய உப்பைத் தானம் செய்வது எல்லோராலும் சாத்தியப்படக்கூடியது அல்ல. காரணம் உப்பை யாரும் தானமாகத் தர விரும்ப மாட்டார்கள். அதனால் உப்பு பயன்படுத்தப்பட்ட உணவை தானமாகக் கொடுத்துவிட்டு, லஷ்மி பூஜை செய்ய வேண்டும். ஏழையாகப் பிறந்த குசேலன், தன் நண்பன் கிருஷ்ணபரமாத்மாவைக் கண்டு செல்வம் பெற்றது இந்த நாளில்தான். பாஞ்சாலி துகிலுரியப்படும் நேரத்தில், குறையாத புடவையைக் கொடுத்து அவள் மானம் காத்தது இதே நாளில்தான். இன்றைய தினத்தில் கிருஷ்ணபரமாத்மாவுக்கு அவல் படைத்து பூஜை செய்தால் அஷ்டலஷ்மி கடாட்சம் கிடைக்கும்.

ராஜ கிரகங்களான சூரியனும் சந்திரனும் உச்சம் பெறும் காலம் சித்திரை மாதம். அமாவாசைக்குப் பிறகு வரும் திருதியை நாள்தான் அட்சய திருதியை எனப்படுகிறது. அமாவாசையன்று மேஷ ராசியில் உச்சம் பெறும் சூரியனுடன் சேரும் சந்திரன், மூன்றாவது நாளில் அதாவது திருதியையன்று ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாகும்போது அங்கும் உச்சம் பெறுகிறார். இங்கு சந்திரனுக்கு வீடு கொடுத்த சுக்கிரனும் இணைந்து பலம் பெறும் அமைப்பு, திருதியை நாளில்தான் நடக்கிறது. தங்கத்தின் காரகன் குரு என்றாலும் அது ஆபரணமாக மாறும்போது சுக்கிரனைக் குறிக்கும்.

ஒரு விஷயத்தை மனதில் இருத்திக் கொள்ள வேண்டும். ஆபரணம் என்று சொல்லும்போது தங்கத்தைத்தான் வாங்க வேண்டும் என்று இல்லை. முந்தைய காலத்தில் வெண்கலம்கூட விலை அதிகமாக இருந்தது. கடந்த சில ஆண்டுகளாகத்தான் பொதுமக்கள் தங்கம் வாங்க முயற்சி மேற்கொள்கிறார்கள். இந்த நாளில் தானம் செய்து, தனவளங்களையும் பெறலாம் என்பது ஜோதிட சாஸ்திரம் கூறும் நிதர்சனமான உண்மை.

 27 நட்சத்திரக் காரர்கள் செய்ய வேண்டிய தானங்கள்

அஸ்வினி: கதம்ப சாதம் தானம். ஏழை மாணவர்கள் படிக்க உதவலாம்.
பரணி: நெய் சாதம் தானம், ஏழை நோயாளிகளுக்கு உதவலாம்.
கிருத்திகை: சர்க்கரைப் பொங்கல் தானம்; பார்வையற்ற ஏழைகளுக்கு உதவலாம். 
ரோகிணி: பால் அல்லது பால் பாயசம் தானம்; ஏழை நோயாளிகளுக்கு உதவலாம். 
மிருகசீரிஷம்: சாம்பார் சாதம் தானம், உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவலாம். 
திருவாதிரை: தயிர் சாதம் தானம்; ஏழை மாணவர்களின் உயர்கல்விக்கு உதவலாம். 
புனர்பூசம்: தயிர் சாதம் தானம்; கால்நடைகளுக்கு கடலை தானியம் கொடுக்கலாம். 
பூசம்: மிளகு கலந்த சாதம் தானம்; கால்நடைகளுக்கு எள்ளுப்புண்ணாக்கு கொடுக்கலாம்.
ஆயில்யம்: வெண்பொங்கல் தானம்; பசுமாட்டுக்கு பச்சைப்பயிறைக் கொடுக்கலாம். 
மகம்: கதம்ப சாதம் தானம்; கால்நடைகளுக்கு கொள்ளு தானியம் கொடுக்கலாம்.
பூரம்: நெய் சாதம்; மன நோயாளிகளுக்கு உதவலாம்.
உத்திரம்: சர்க்கரைப் பொங்கல் தானம்; கால்நடைகளுக்கு கோதுமை அளிக்கலாம். 
அஸ்தம்: பால் பாயசம் தானம்; மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவலாம். 
சித்திரை: துவரம் பருப்பு கலந்த சாம்பார் சாதம் தானம்; விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவலாம்.
சுவாதி: உளுந்து வடை தானம்; வயதானவர்களுக்கு உணவு, உடை வாங்கித் தரலாம்.
விசாகம்: தயிர்சாதம் தானம்; கால்நடைகளுக்கு கடலை தானியம் கொடுக்கலாம். 
அனுஷம்: மிளகு கலந்த சாதம்;வாயில்லா ஜீவன்களுக்கு எள்ளு சாதம் கொடுக்கலாம். 
கேட்டை: வெண்பொங்கல் தானம்; பசு மாட்டுக்கு பச்சைப்பயிறு கொடுக்கலாம். 
மூலம்: கதம்ப சாதம் தானம்; ஏழைகளுக்கு உதவலாம். 
பூராடம்: நெய் சாதம் தானம்; ஏழைத் தம்பதிக்கு உதவலாம்.
உத்திராடம்: சர்க்கரைப் பொங்கல் தானம்; ஏழை நோயாளிகளுக்கு உதவலாம். 
திருவோணம்: சர்க்கரை கலந்த பால் தானம்; வறுமையிலிருப்பவர்களுக்கு நெல் தானம் செய்யலாம்.
அவிட்டம்: சாம்பார் சாதம் தானம்; கால்நடைகளுக்கு துவரை வாங்கித் தரலாம்.
சதயம்: உளுந்துப் பொடி சாதம் தானம்; கால்நடைகளுக்கு உளுந்து தீவனம் தரலாம்.
பூரட்டாதி: தயிர் சாதம் தானம்; பிறருக்கு இயன்ற உதவி செய்யலாம்.
உத்திரட்டாதி: மிளகு சாதம் தானம்; ஏழைகளுக்கு உணவு, உடை தானம் சிறந்தது. 
ரேவதி: வெண் பொங்கல் பிரசாதம் தானம் நல்லது. பறவைகள், விலங்குகளுக்கு உணவளிக்கலாம்.

அட்சய திருதியை என்பது தங்கம் வாங்க வேண்டும் என்பது தவறான நம்பிக்கை! அன்றைய நாளில்  இறைவழிபாடு செய்து தானங்கள், தர்ப்பணங்கள், ஹோமங்கள் முதலியன செய்து வளர்ச்சியை பெறுவோம்! வளமாய் வாழ்வோம்!

(ஆன்மீக நூல்களில் இருந்து தொகுத்து எழுதியது)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!  
Related Posts Plugin for WordPress, Blogger...