Saturday, April 30, 2016

தவளை ராணி! பாப்பா மலர்!

தவளை ராணி! பாப்பா மலர்!

  முன்னொரு காலத்துல வேங்கடபுரி என்ற நாட்டை வேங்கட நாதன் என்ற ராஜா ஆண்டுவந்தாரு. அவருக்கு மூணு பசங்க. இளவரசருங்க மூணு பேரும் குருகுலம் போய் கல்வியும் வில், வாள் பயிற்சியெல்லாம் எடுத்து வாலிபர்களாக வளர்ந்து நின்னாங்க. அவங்களுக்கு திருமணம் பண்ணி வைக்கணும்னு ராஜா நினைச்சாரு.
   அந்த சமயத்துல அந்த நாட்டுக்கு ஒரு முனிவர் வந்தாரு. வந்தவர் ராஜ தர்பாருக்கு வந்து.  “வேங்கடநாதா, நான் தருகிற மூன்று அம்புகளை ஒவ்வொரு மகனிடமும் ஒரு அம்பு கொடுத்து வில்லில் பூட்டி எய்தச் சொல். அந்த அம்பு எங்கே சென்று விழுகிறதோ அங்கு உனக்கு மருமகள் கிடைப்பாள்”  அவளையே நீ உன் மகன்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். இதில் மாற்றம் கூடாது! அப்படின்னு சொல்லிட்டு அம்புகளை கொடுத்துட்டு புறப்பட்டு போயிட்டாரு.
   அரசனும் தன் மகன்கள் கிட்டே அம்புகளை கொடுத்து எய்தச் சொன்னான். முதல் மகன் எய்த அம்பு பக்கத்து நாட்டு அந்தப்புரத்தில் விழுந்தது.  இரண்டாவது மகன் எய்த அம்பு மந்திரி குமாரியின் மடியில் விழுந்தது. மூன்றாவது மகன் எய்த அம்பு ஒரு குளத்தில் இருந்த தவளை மீது விழுந்தது.
  இரண்டு மகன்களுக்கும் இளவரசியும், மந்திரி குமாரியும் மனைவியாக கிடைக்க மூன்றாவது மகனுக்கு தவளையை எப்படி திருமணம் செய்து கொடுப்பது என்று மன்னன் கலங்கினான். ஆனாலும் முனிவரின் சொல்லைத் தட்டினால் ஏதாவது தீங்கு ஏற்படுமோ என்று அஞ்சி தவளையைத் திருமணம் செய்து வைத்துவிட்டான்.
   இரண்டு இளவரசர்களும்  மூன்றாமவனை கிண்டலாக பார்த்தனர். போ! போய் குளத்தில் குடித்தனம் நடத்து! ராத்திரி முழுவதும் பாடல் கச்சேரிதான்! கொர்! கொர்! என்று கிண்டல் பேசினர். மூன்றாவது இளவரசன் வருத்தமாக தனக்கு மட்டும் இப்படி தவளை மனைவியாக அமைந்துவிட்டதே! என்று நினைத்து அழுதபடி சென்று விட்டான்.
   ஒருவாரம் கடந்ததும் அரசன் வேங்கட நாதன் தன்னோட மருமகள்கள் விருந்து செய்யனும் யாரோட விருந்து நன்றாக இருக்கிறதோ அவர்களுக்கு பரிசு வழங்குவேன்னு அறிவிச்சாரு.
   இளவரசியும் மந்திரி குமாரியும் விதவிதமா போட்டி போட்டு சமைச்சு தள்ளிட்டாங்க. மூணாவது இளவரசன் தவளை எப்படி சமைக்கும்? இதிலும் நமக்கு அவமானம்தான்! என்று அழுதபடி அரண்மனையில் அமர்ந்து இருந்தான். அப்போது அவனது நண்பன், ஏன் நண்பா! இப்படி வருந்தி அழுகிறாய்? என்று கேட்டான்.
   என்னுடைய தந்தை மூன்று மருமகள்களில் யார் நன்றாக விருந்து சமைக்கிறார்கள் என்று போட்டி வைத்திருக்கிறார். என் தவளை மனைவி எப்படி அதில் கலந்து கொள்ள முடியும்? அவளை எப்படி நான் சமைக்கச் சொல்ல முடியும்? என்று அழுகிறேன்! என்றான் இளவரசன்.
  இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த தவளை நடு இரவில் நீர் நிலையை விட்டு வெளியே வந்தது. “க்ராக் க்ராக்” என்று கத்தியது. உடனே ஏராளமான தவளைகள் அங்கே வந்துருச்சு. சில நொடியில் அவை அழகான பெண்களா உருமாறிருச்சு. இந்த தவளையும் அவர்களை விட அழகான பெண்ணா உருமாறி  நின்னுச்சு. சில நிமிடங்களில் அவை பிரமாதமான விருந்தை செய்து வைத்துவிட்டு மீண்டும் தவளையாக மாறி குளத்திற்கு சென்றுவிட்டன.
   தவளை ராணியும் மெல்ல கணவனை அழைத்து “நாதா! விருந்து  தயாராஇருக்கு! மாமாவை அழைத்து வாருங்கள் என்று சொன்னது.  தவளை பேசினதும் விருந்து  தயாரா இருக்குன்னு சொன்னதும் இளவரசனாலே நம்பவே முடியலை!  நீ எப்படி பேசுறே? அப்படின்னு தவளையைக் கேட்டான்.
  இன்னும் ஒரு பவுர்ணமி வரைக்கும் பொறுத்திருங்கள். அப்புறம் எல்லாம் சொல்றேன்! முதல்ல ராஜாவை விருந்துக்கு கூப்பிட்டு வாருங்கள் அப்படின்னு சொல்லுச்சு தவளை.
    தவளை ராணி சமைச்ச உணவை சிலாகித்து சாப்பிட்ட ராஜா, தவளையா இருந்தாலும் அருமையா சமைச்சிருக்கா! இந்த சாப்பாடுதான் ஜோரா இருக்குன்னு பாராட்டி ஓர் அட்டிகையை பரிசா கொடுத்துட்டு போயிட்டாரு. இது மத்த ராணிகளுக்கு வருத்தமாயிருச்சு. கேவலம் ஒரு தவளை நம்பளை போட்டியிலே ஜெயிச்சிருச்சே! மனசுக்குள்ளே குமைஞ்சுகிட்டாங்க!

   மேலும் ஒரு வாரம் கழிச்சு, ராஜா! தனக்கு ஒரு அழகான அங்கி வேணும் அது உங்க மனைவியர் கையால் நெய்ததாக இருக்க வேண்டும்!  என்று உத்தரவு போட்டார். வழக்கம் போல மூணாவது இளவரசன். வருத்தப்பட்டு ஒரு தவளையாலே எப்படி அங்கி நெய்ய முடியும்? அப்பா ஏன் இப்படி போட்டி வைக்கிறார்னு புலம்பிக்கிட்டு  இருந்தான்.
  இதைக் கேட்ட தவளை ராணி நள்ளிரவில் பெண்ணா உருமாறி ஒரு புதிய அங்கியை நெய்து தைச்சு வச்சிருச்சு.
   விடிகாலையில் விழிச்ச அரச குமாரனுக்கு அதிசயமா போயிருச்சு! ஒரே இரவில் இத்தனை அழகா பளபளப்பா ஒரு புதிய அங்கியை  தவளை ராணி செய்திருக்கான்னா அவகிட்ட ஏதோ சக்தி இருக்குன்னு நினைச்சுகிட்டான். தவளை ராணிகிட்டேயும் கேட்டான்.
  ஆனா தவளை ராணி, இப்ப எதுவும் கேக்காதீங்க! வரும் பவுர்ணமி அன்னிக்கு என்னோட சுயரூபம் தெரியும். இந்த அங்கியை மாமாவுக்கு கொடுத்திருங்க அப்படின்னு சொல்லிருச்சு.
  தவளை ராணியின் அங்கி தான் பாராட்டு வாங்கிச்சு! அதை பார்த்து மத்த இளவரசனுங்களும் இளவரசிகளும்  மனதில் கருவிக் கொண்டு. ஒரு தவளை நம்மையெல்லாம் ஜெயிச்சிருச்சே! இந்த முறை எப்படியும் அவனை அவமானப் படுத்தனும்னு  நினைச்சிகிட்டாங்க.
  அன்னிக்கு பவுர்ணமி! ராஜா மூணு பசங்களையும் கூப்பிட்டு, பிள்ளைகளே! இன்னிக்கு நம்ம குலதெய்வத்துக்கு பூஜை! உங்க மனைவிகளை கூட்டிக்கிட்டு கோயிலுக்கு வந்திருங்கன்னு சொன்னார்.
 மத்த ரெண்டு பேரும் “ என்னடா! தவளையை எப்படி கூட்டிட்டு வரப் போறே? உன் சட்டைப் பையில் போட்டு கூட்டிட்டு வா! வழியில யாரும் மிதிச்சிடாம பார்த்துக்க! நம்ம குலதெய்வம் வேற நாகராஜா! தவளைங்கன்னா அதுக்கு உசிராச்சே! பாத்து பத்திரமா கூட்டி வா! என்று ஏளனம் செய்தனர்.
    மூன்றாம் இளவரசன் அழுதபடி தன் அறைக்கு சென்றான். அங்கே தவளை ராணி  அவனை ஆறுதல் படுத்தி, இளவரசே கவலைப்படாதீர்கள்! இன்று பவுர்ணமி! நிலா முழுதும் உதயமாகி அதன் கிரணங்கள் என் மீது படுகையில் நான் பெண்ணாக உருமாறி விடுவேன். ஒரு சாபத்தினால் தேவலோக மங்கையான நான் இப்படி தவளையாக உருமாறும்படி ஆகிவிட்டது. கவலைப்படாமல் என்னை அழைத்துச் செல்லுங்கள் என்றது.
   இளவரசன் தவளையை தன் கையில் ஏந்தியபடி கோயிலுக்குச் சென்றான். நிலவு உதித்து அதன் கிரணங்கள் தவளை மீது பட அது அழகிய பெண்ணாக உருமாறியது. தேவலோக மங்கையாக பிரகாசமாக அங்கிருப்பவர்கள் அனைவரும் அவளையே நோக்கும்படி அழகான பெண்ணாக மாறியது தவளை.
   இந்த காட்சியை பார்த்து அரசரும் இளவரசர்களும் அவர்களது மனைவியரும் வியந்தனர்..  தேவலோக மங்கையான தவளை, அரசே ஒரு சாபத்தினால் தவளையாக மாறினேன். முனிவர் அருளினால் இவரை மணந்து சாபவிமோசனம் பெற்றேன். என்று ராஜாவின் காலில் விழுந்து வணங்கினாள்.
அப்போது முனிவரும் அங்கு வந்து எல்லாம் இறைவன் அருள். உன் மூன்றாவது மகன் பொறுமை சாலி! அவனுடைய சகிப்புத் தன்மையினால் தேவலோக மங்கையை மணக்கும் பாக்கியம் பெற்றான். உங்கள் நாடு செழிக்கும் என்று வாழ்த்திச் சென்றார்.
  அது முதல் மூவரும் ஒற்றுமையாக இருந்து நாட்டை சிறப்பாக ஆட்சி செய்து வந்தனர்.
(செவிவழிக்கதை)  
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Thursday, April 28, 2016

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 64.

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 64.


1, தலைவர் போட்டியிடப் போறது இல்லைன்னு சொன்னதும் தொண்டர்கள் எல்லாம் கைதட்டி பாராட்டினாங்களாமே!
  டெபாசிட்டாவது மிஞ்சும்ங்கிற சந்தோஷம்தான்!

2. இப்ப எதுக்கு திடீர்னு உங்க வீட்டுக்காரர் மேல பத்துலட்சத்துக்கு இண்ஷூரன்ஸ் எடுக்கணும் பிடிவாதமா இருக்கிறே!
  எலக்‌ஷன் பிரசார கூட்டத்துக்கு எல்லாம் நிறைய போக ஆரம்பிச்சிட்டாரே!

3. மனைவி பேச்சை கேக்காததாலே வீட்டுல சண்டையா ஆயிருச்சா அப்படி எதை கேக்காம விட்டே?
  அவ ஒரு “கேக்” வேணும்னு கேட்டதை காதில கேக்காம விட்டுட்டேன்!

4. தலைவர் தோத்ததுக்கு காரணம் அவர் வேட்பு மனு தாக்கல் செய்யறப்போ சொத்தே இல்லைன்னு சொன்னதுதான் காரணமா எப்படி சொல்றே?
 சொத்தே இல்லாதவர் எப்படி ஓட்டுக்கு காசு கொடுப்பாருன்னு  அவருக்கு யாரும் ஓட்டு போடலையாம்!

5. தலைவர் எதுக்கு நமத்து போச்சு நமத்துப் போச்சுன்னு புலம்பிக்கிட்டு இருக்கார்?
 நீ வேற நடிகை நமீதா வேறக் கட்சியிலே சேர்ந்ததை தாங்கிக்க முடியாம புலம்பிக்கிட்டு இருக்கார் அவரு…!


6. ஒரு சிக்கலை சொல்ல முடியாம மென்னு முழுங்கிக்கிட்டு இருக்கேன்னு  சொன்னியே அப்படி என்ன சிக்கல்?
  நூடுல்ஸ் தான்!

7. ஹெல்மெட் போட்டுட்டு போனதாலே போலிஸ்கிட்ட மாட்டிக்கிட்டியா ஏன்?
 நாங்க திருட இல்ல  போனோம்!


8. மந்திரியாரே! என் அந்தரங்கத்தை வாட்சப்பில் வீடியோவாக எவனோ போட்டிருக்கிறானாமே!
  குவாலிட்டி சரியாக இல்லை மன்னா! மங்கலாத தெரிகிறது! ஒழுங்காக எடுக்கத் தெரியாத பக்கிப்பயல்….!

9. நம் உளவுத்துறை எதிரியிடம் விலை போய்விட்டது மன்னா?
   இதை விலைகொடுத்து வாங்கும் அளவிற்கு எதிரி பலவீனப்பட்டுவிட்டான் என்பதை நினைக்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறது!

10  தலைவர் புதுசா ஒரு கேப்ஷனை உருவாக்கி இருக்காராமே என்ன அது?
  நோட்டாவை பாக்காதீங்க! நோட்டை பாருங்க!ன்னு சொல்லி அடிக்கிறார்.

11.    சில்லறைக் கட்சிகளை கூட்டணியிலே சேர்த்துக்க மாட்டோம்னு  பெரிய கட்சி சொன்னதும் தலைவர் கோபமாயிட்டார்!
   எங்களை மாதிரி ஆளுங்களை சேர்த்துக்கிட்டாதானே உங்களை மாதிரி கோடிகளை சம்பாதிக்க முடியும்னு புலம்பித் தள்ளிட்டார்.


12.   தலைவருக்கு குடும்ப கஷ்டம் அதிகம் போலிருக்கு…!
   எப்படிச் சொல்றே?
பத்து மணிக்கு மேல பேசக்கூடாதுன்னு மைக்க பிடுங்கினதும்
வீட்டுலதான் பேச முடியலைன்னு பார்த்தா வெளியிலேயும் பேச விடமாட்டீங்கிறீங்களேன்னு புலம்பி தீர்த்துட்டார்.

13.   நைட்டு சாப்பாட்டுல கொஞ்சம் உப்பு அதிகமா இருந்துச்சே ஏம்மா?
  அம்மா வீட்டுக்கு போகனும்னு என் வீட்டுக்காரர் அழுதுகிட்டே சமைச்சார் அதனாலதான்!

14.   டூட்டி நர்ஸ் கூட பழகினது தப்பா போச்சா ஏன்?
  டூட்டி கட்டினாத் தான் வீட்டுக்கே போக அனுமதிக்கிறா!


15.    எதிரி வருகின்றான் என்று தெரிந்தவுடன் நமது நால்வகை சேனைகளும் நாலா புறத்திலும்….
   அணிவகுத்து நிற்கிறதா தளபதியாரே!
 தலைதெறித்து ஓடி மறைந்துவிட்டது மன்னா!

16.   தலைவர் பிரசாரத்திலே அப்படியே அனல் தெறிக்குதாமே…!
  அனல் தெறிக்குதோ இல்லையோ அவர் பேசறப்ப எதிர்ல இருக்கிறவங்க எல்லாம் தெறிச்சு ஓடறாங்க!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
Wednesday, April 27, 2016

வாக்குறுதி!

வாக்குறுதி!

தேர்தல் களை கட்டியிருந்தது. இரண்டு பிரதானக் கட்சிகள் தனித்து நிற்க சில்லறைக் கட்சிகள் என்று நான்கு ஐந்து முனைப்போட்டிகள். இதனால் ஒவ்வொரு வாக்கும் சிதறிப்போகக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தன இரண்டு பிரதான கட்சிகளும்.
  தொகுதிகளுக்கு பார்த்து பார்த்து வேட்பாளர்களை நிறுத்தியிருந்தன இரண்டு கட்சிகளும். ஜாதி, மதம், பணம் என்ற அடிப்படையில்தான் பெரும்பாலான தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவித்து இருந்தன இரண்டு கட்சிகளும்.

   இருப்பதிலேயே பெரிய தொகுதி அது. தற்சமயம் ஆளுங்கட்சி வசம் இருந்தது. எதிர்கட்சிக்கும் அங்கு பெரிய செல்வாக்கு உண்டு. அந்த தொகுதியின் முடிவை நிர்மாணிப்பதில் அந்த தொகுதியில் அடங்கியிருந்த ஒரு பெரிய கிராமத்தின் பங்கு அதிகம். அங்கு எந்த கட்சிக்கு வாக்கு விழுகிறதோ அந்த கட்சிதான் ஜெயிக்கும். எனவே எல்லாக் கட்சிகளும் அந்த கிராமத்தையே சுற்றி சுற்றி வரும். எல்லா தேர்தல்களைப் போல அல்லாமல் இரண்டு தேர்தல்களாய் பணம் வேறு ஓட்டுக்கு விலை பேசப்படுகிறது. சென்ற முறை ஆளுங்கட்சி நோட்டுக்களை அள்ளிவீச வெற்றிக்கனியை சாதாரணமாக பறித்துவிட்டிருந்தது.
  இந்த முறை நிலைமையோ தலைகீழாக இருந்தது. ஒவ்வொரு தொகுதியிலும் ஆளுங்கட்சிக்கு நிகராக போட்டிப் போட்டு பணம் கொடுத்துக் கொண்டிருந்தது எதிர்கட்சியும். தேர்தல் ஆணையம் வியாபாரிகளின் பணங்களை பிடுங்கிக் கொண்டிருந்ததே தவிர இந்த மாதிரி பண விநியோகத்தை பிடித்ததாக தகவலே இல்லை!
    ஆளுங்கட்சி அந்த தொகுதியை தக்க வைத்துக்கொள்ள முடிவெடுத்து அந்த ஊரில் நிறைய இருந்த ஜாதிக்காரரை வேட்பாளராக அறிவித்தது. எதிர்கட்சி சும்மா இருக்குமா? அதே ஜாதிக்காரரை வேட்பாளராக அறிவித்து ஜாதி ஓட்டுக்களை பிரித்தது. இரண்டு கட்சிகளும் அந்த தொகுதியில் வென்றே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டது.
    ஆளுங்கட்சி வேட்பாளரின் வாகனம் அந்த ஊரின் தலைவரின் வீட்டின் முன்னால் வந்து நின்றது. கரை வேட்டி பளிச்சிட கஞ்சிமொடமொடப்பு குறையாத வெள்ளைச் சட்டையோடு மீசையை முறுக்கிவிட்டபடி இறங்கினார் ஆளுங்கட்சி வேட்பாளர்.
   வீட்டின் முன் ஏதோ வாகனம் வந்து நிற்கிறதே என்று வெளியே வந்த தலைவர் ஆளுங்கட்சி வேட்பாளரை பார்த்ததும், புன்னகைத்தவாறே, “ அடடே! நம்ம தம்பி! வாங்க வாங்க!” என்று வரவேற்று சேரை எடுத்துப் போட்டு உட்காரச்சொன்னார். உள்ளே இருந்த மனைவியிடம்,  “ஏலே! தம்பி வந்திருக்காப்பல! குடிக்க ஏதாவது தண்ணி கொண்டா!” என்று சொன்னவர், அப்புறம் தம்பி! என்ன விசயம்?
    “ஐயா! உங்களுக்கு தெரியாதது இல்லை! ஆளுங்கட்சி வேட்பாளரா நம்ம தொகுதியிலே நிக்கிறேன்! நம்ம ஜாதிக்காரன். நீங்க ஒரு வார்த்தை சொன்னீங்கன்னா இந்த ஊரே கட்டுப்படும். எல்லோரும் எனக்கு ஓட்டுப்போடுவாங்க! சுலபமா ஜெயிச்சுருவேன்!”
  “ என்ன தம்பி இப்புடி கேட்டுபுட்டே! நானும் நம்ம கட்சிதானே! உனக்கு செய்யாம வேற யாருக்குச் செய்யப்போறேன்! ஆனா…!”
    “ ஐயா! நீங்க எதுக்கு தயங்கறீங்கன்னு புரியுது! எதிர்கட்சிக்காரன் பணத்தை இறைக்கிறான்! நாம இலவசமா ஓட்டு கேட்டா போட மாட்டாங்கதான்! அவனை விட நான் அதிகமாவே தர்றேன்! ஆனா நிச்சயம் நீங்க எனக்காக நம்ம ஜனங்க கிட்ட பேசனும்!”
    “கண்டிப்பா தம்பி! நம்ம ஊருல ஒரு மூவாயிரம் ஓட்டு இருக்கும்! அதுல எப்படியும் ஒரு இரண்டாயிரம் ஓட்டு நம்ம ஜாதிக்காரங்களுதான்! எதிர்கட்சி காரனும் இதே ஜாதிக்காரனா போயிட்டதாலதான் இப்ப பணச்செலவு! ஜாதியா? பணமா?ன்னு முடிவு பண்ணும் போது பணம் தான் முன்னே நிக்கும்! அவன் தலைக்கு எவ்வளோ கொடுக்கிறானோ அதைவிட அதிகமா கொடுத்துட்டா வெற்றி நம்ம பக்கம்தான்!”
   “ அவன்கிட்ட அந்த அளவுக்கு பணம் கிடையாது ஐயா! நான் ஓட்டுக்கு இரண்டாயிரம் தரேன்! அவன் ஆயிரத்துக்கு மேல தரமாட்டான். இந்தாங்க இரண்டாயிரம் ஓட்டுக்கு நாலு லட்சம்! உங்களுக்கு தனியா ஒரு லட்சம்! அஞ்சு லட்சம் இருக்கு! நீங்கதான் பார்த்து பண்ணனும். ஒரு ப்ரிப் கேஸை காரில் இருந்து எடுத்து வரச் செய்து கொடுக்க தலைவர் பெற்றுக்கொண்டார்.
      “கண்டிப்பா உங்களுக்குத்தான் அந்த ரெண்டாயிரம் ஓட்டும்! நீங்க கவலைப்படாதீங்க! நீங்கதான் ஜெயிக்க போறீங்க!” என்று அவனை அனுப்பி வைத்தார்.
   ஆளுங்கட்சி வேட்பாளர் போனதும், தலைவரின் மனைவி வெளியே வந்தார். “ என்னங்க! இது உங்களுக்கே நியாயமா இருக்குதா? ரெண்டு நாள் முன்னாடிதானே எதிர்கட்சிக் காரங்க கிட்ட இதே மாதிரி அஞ்சு லட்சம் வாங்கினீங்க! அவர் கிட்டேயும் இதே மாதிரி சொன்னீங்க! இப்ப இவர் கிட்டேயும் இதே மாதிரி சொல்றீங்க! நீங்க யாருக்குத்தான் ஓட்டு போடப்போறீங்க?”
   ”பார்த்துட்டே இரு! உனக்கே புரியும்” என்றார் தலைவர் அர்த்த புஷ்டியாக.
   தேர்தல் நாளுக்கு ஒரு வாரம் முன்பு தலைவர் ஊர்க்காரர்களை அழைத்தார். பகிரங்கமாக சொல்லாமல் ஒவ்வொரு குடும்பத்தினரில் ஒருவரை அழைத்து காதில் ஏதோ சொன்னார். உங்க குடும்பத்திலே கலந்து பேசி முடிவெடுத்துட்டு நாளைக்கு வந்து சொல்லுங்க என்றார்.
    அடுத்தநாள் அனைவரும் தலைவர் சொன்னபடி கேட்பதாக சொன்னார்கள். அப்படியே செய்யவும் செய்தார்கள்.
 தேர்தல் முடிந்தது. முடிவுகள் வந்தது. யாரும் எதிர்பார்க்காதபடி அந்த தொகுதியில் ஒரு சுயேச்சை வேட்பாளர் வென்றிருந்தார். ஆளுங்கட்சியும் எதிர்கட்சியும் ஆவேசம் அடைந்தன. ஏனெனில் இரண்டாயிரத்து சொச்சம் நோட்டா ஓட்டுக்கள் பதிவாகி இருந்தன.
   ஆவேசமாக, இருவரும் அந்த ஊர் தலைவரின் முன் வந்து நின்றனர். ”என்ன தலைவரே! இப்படி மோசம் பண்ணிட்டீங்க! ரெண்டு பேருகிட்டேயும் ஒருத்தருக்கு தெரியாம ஒருத்தர்கிட்ட பணம் வாங்கிட்டு இப்படி ரெண்டு பேரையுமே ஏமாத்திட்டீங்களே? ”என்றனர்.
     “இப்படி வாக்கு கொடுத்திட்டு ஏமாத்தலாமா தலைவரே?”
   “அப்ப நாங்க மக்கள் வாக்கு கொடுத்து ஏமாத்த கூடாது! நீங்க மக்கள் பிரதிநிதிகள் வாக்கு கொடுத்திட்டு ஏமாத்தலாமா?”
  ”இந்த ஊரிலே ஒரு பள்ளி கட்டிடம் இடிஞ்சு போற மாதிரி இருக்குன்னு சொல்லி எத்தனை வருசம் ஆச்சு! அதை சரி பண்ணீங்களா ரெண்டு பேரும்! ரோடு வசதிதான் சரியா இருக்கா? ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் வேணும்னு எத்தனை நாளா கேட்டுகிட்டு இருக்கோம்! இது எல்லாம் செஞ்சு தர்ரேன்னு வாக்கு கொடுத்து வாக்கு வாங்கிட்டு போன உங்க ரெண்டு கட்சியும் எதையாவது செஞ்சு கொடுத்திருக்கா? இல்லை இல்லே! எத்தனை தடவை நாங்க ஏமாறது? ஒரு தடவை உங்களை ஏமாத்தினோம்! நீங்கதான் வாக்கு தவறுவீங்களா? நாங்களும் வாக்கு தவறி காண்பிச்சு இருக்கோம்!”
    “நீங்க கொடுத்த பத்து லட்சம் ரூபாயை வச்சி பள்ளிக் கட்டிடம் கட்டப் போறோம்! இந்தாங்க அதுக்கான நன்கொடை ரசீது!   இனியாவது ஜாதி, பணம்னு யோசிக்காம மக்களுக்கு நல்லது செய்ய முயற்சி பண்ணுங்க!”
   தலைவர் ஆவேசமாக பேசி முடிக்க இருவரும் தலையை தொங்கப் போட்டுக் கொண்டனர்.
ஒவ்வொரு ஊரும் இப்படி மாத்தி யோசித்தால் மாறுதல் நிச்சயம்!

(மீள்பதிவு)

இரண்டு வருடங்கள் முன் பாராளுமன்ற தேர்தலின் போது எழுதிய கதை! இப்போதும் தேர்தல் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. ஏதோ நம்மால் ஆனது. இந்த கதையை மீள் பதிவு செய்து கொஞ்சம் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் என்று பதிகிறேன். அன்று பாராட்டியவர்களும் இன்றும் பாராட்டலாம். புதியவர்களும் கருத்துக்கள் பதியலாம்! நன்றி!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Tuesday, April 26, 2016

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 63.

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 63.


1.   சிக்னல் கிடைக்கவே மாட்டேங்குதுன்னு உன் ப்ரெண்ட் புலம்பிக்கிட்டே இருக்கானே எந்த கம்பெனி சிம் யூஸ் பண்றான்?
ஊகும்! நீ வேற அவன் லவ் பண்ற பொண்ணுகிட்டே இருந்து சிக்னல் வரலைன்னு புலம்பிக்கிட்டிருக்கான்!

2.   நீங்க எந்த தொகுதியிலே நின்னாலும் மக்கள் ஒரு முடிவோட இருக்காங்க தலைவரே…!
  வெற்றியை அள்ளிக் கொடுப்பாங்களா?
நீங்க வேற டெபாசிட்டை காலி பண்ணி அனுப்ப ரெடியா இருக்காங்கன்னு சொல்ல வந்தேன்!

3.   கூட்டணி வேணாம்னு சொல்றதுக்கு தலைவர் ஏன் இவ்வளோ நேரம் எடுத்துக்கிட்டார்…?
அணி சேராமலேயே அவரோட “வெயிட்டை” காட்டறாராம்!

4.   எதிரிகள் ஒன்று கூடி விட்டார்களாமே நம் படைகள் எப்படி இருக்கிறது தளபதியாரே!
  ”உதிரிகள்” ஆகி பலகாலம் ஆகிவிட்டது மன்னா!


5.   மன்னர் ஏன் புலவர் மேல் கோபமாய் இருக்கிறார்?
எதிரி மீது போர் தொடுக்கும் வேளையில் “ தேறா மன்னா!” என்று பாட ஆரம்பித்தாராம்!

6.   கூட்டணியிலேதான் நிறைய தொகுதிகளை அள்ளி கொடுத்திட்டாங்களே அப்புறமும் ஏன் தலைவர் சோகமா இருக்கார்?
தொகுதியிலே போட்டியிட வேட்பாளர் கிடைக்கவே இல்லையாமே!

7.   எதிரி மன்னர்  கேலியை பார்த்துக்கொண்டு நம் மன்னர் வாளாவிருந்தாரா? ஏன் அப்படி?
பின்னே வாழாதிருக்க முடியாதில்லையா? அதனால்தான் வாளாவிருந்தார்!


8.   தொகுதிக்குள்ள கிடைச்ச வரவேற்பில் தலைவர் ரொம்பவே திகைச்சுப் போயிட்டாராமே?
பின்ன அஞ்சு வருஷம் கழிச்சு ஆளைப் பார்த்ததும் சும்மா ‘தெறிக்க விட்டுட்டாங்க மக்கள்.

9.   டாக்டர் என்னை பத்தி நாலுபேர் நாலுவிதமா பேசறதை தாங்கிக்கவே முடியலை டாக்டர்!
கவலையே படாதீங்க! ஒரே ஆபரேஷன்! அப்புறம் யார் எது சொன்னாலும் உங்கள் காதுலேயே விழாது!

10.  மந்திரியாரே அரசவை இந்த கோடைக்காலத்தில் முழுதும் நிறைந்திருக்கிறதே என்ன விஷயம்?
  ஏசிக் காற்றை ஓசியில் அனுபவிக்கத்தான் இப்படி கூடி இருக்கிறார்கள் மன்னா!

11. ஒரு டாக்டரை வேட்பாளரா அறிவிக்கணும்னு தலைவர் ஏன் உறுதியா நிக்கிறார்? 
  மக்களோட நாடித் துடிப்பை அவர்தான் அறிஞ்சி வைச்சிருப்பாராம்!

12.  தன்னோட தொகுதிக்கு ஏதாவது நல்லது  நடக்கணும்னு தலைவர் விரும்புறாராமே?
    அப்ப போட்டியிடாம ஒதுங்கிடச் சொல்லு!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Sunday, April 24, 2016

தளிர் சென்ரியு கவிதைகள்!

தளிர் சென்ரியு கவிதைகள்!

அழுக்கு கைகளில்
பளபளத்தது புது நோட்டு!
தேர்தல்!

கட்டிய தோரணங்கள்
கலர் மாறின
அடுத்த கட்சி விஜயம்!

மை பூசிக்கொண்டாலும்
வலிமை காட்டும் தினம்!
தேர்தல் நாள்!

விலை போன வயல்கள்!
விலை உயர்ந்தது
அரிசி!

மரபு மாற்ற பயிர்கள்!
உயிர் இழந்தன
பாரம்பரிய விதைகள்!

விதைகள் அழித்து விவசாயம்!
வியாபாரியான விவசாயி!
மரபு மாற்ற பயிரினங்கள்!

அதிவேகச் சாலைகள்!
அழித்து விட்டன
கிராமத்தின் அடையாளம்!

துரித உணவகங்கள்!
பெருக்கிவிட்டன!
நோயாளிகள்!

உதிரிக் கட்சிகள்
சேர்த்தன சில்லறை!
தேர்தல்!

தேர்தல் குதிரை
கடிவாளமாய் ஆணையம்!
கட்டவிழ துடிக்கும் கட்சிகள்!

கோடிகளில் கோட்டை
கோவணாண்டியிடம் வேட்டை!
வெட்கம் கெட்ட வங்கிகள்!

கலந்து விட்ட இதயங்கள்!
பிளந்து போட்ட ஜாதி!
உலர்ந்து போனது நீதி!

ஒன்று பட்டன கட்சிகள்!
ஒரே கொள்கை!
கிடைக்கும் வரை சுருட்டு!

மின்வெட்டை கண்டித்து போராட்டம்!
கொக்கிப் போட்டு எடுக்கப்பட்டது
மின்சாரம்!

ஓடி ஓடி சேகரித்தார்கள்
வாக்கு!
நிறையவில்லை வாக்காளார்கள்!

கூடி தேர் இழுத்தும்
நகரவே இல்லை!
நூறுநாள் வேலை!

தூண்டிலாய் தனியார் பள்ளிகள்!
சிக்கி விட்ட மீன்கள்
மாணவர்கள்!

நூறு சதவித தேர்ச்சி
நிறையவில்லை பள்ளி!
ஒரே மாணவன்!

கோயில்களில் அன்னதானம்!
வாசலில் பட்டினியோடு
பிச்சைக்காரன்!

விலை போகும் மக்கள்!
வீணாகும்  தேர்தல்!
மரணக்குழியில் ஜனநாயகம்!டிஸ்கி} தென்றலாய் வீசிக்கொண்டிருந்த தளிரின் வாழ்க்கையில் ஒருமாதத்திற்கும் மேலாய் புயல்! மனைவி, குழந்தைகள், தந்தை என உடல்நலம் பாதிப்பு  காரணமாக தளிர் துவண்டு வாடியது. மீண்டும் தன்னம்பிக்கையோடு துளிர்த்தெழ முயற்சிக்கிறது.  விரைவில் வழக்கம் போல பதிவுகளுடன் உயிர்த்தெழுவேன். வாசகர்கள் நண்பர்கள் வாழ்வில் இந்த ஒருமாதத்தில் எத்தனையோ மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை உணர முடிகின்றது. விரைவில் உங்களோடு இணைந்திருப்பேன்.  நன்றி!

சகபதிவர் வைகறை அவர்களின் மரணச் செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றேன். அவரை இழந்துவாடும் நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் எனது இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். வைகறை என பெயர்கொண்டதால் வைகறையாய் இறைவன் அவரை அழைத்துக் கொண்டானோ? பழகியதில்லை என்ற போதும் பதைக்கிறது மனது. அவரது ஆத்மா சாந்தியடையட்டும். அவரது கனவுகள் நினைவாகட்டும்.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Related Posts Plugin for WordPress, Blogger...