தித்திக்கும் தமிழ்! பகுதி 25 பண்பில்லா மேகம்!

தித்திக்கும் தமிழ்! பகுதி 25

இந்த பகுதியை தொடர்வதில் கொஞ்சம் இடைவெளி ஏற்பட்டுவிட்டது. பணிச்சுமையும் அதற்கு ஓர் காரணம். இடைவெளியின்றி தொடர இனி முயல்வோம்.


   காலையில் அலுவலகம் சென்ற கணவன் மாலையில் திரும்ப வேண்டும். மனைவி காத்திருப்பாள். குழந்தைகள் காத்திருக்கும். பொழுது மறைந்து இருள் பரவத் தொடங்கியதுமே காத்திருப்பின் வேதனை அதிகரிக்கும். நேரம் கூடக் கூட கணவன் வரவே இல்லையே என்ன ஆயிற்றோ என பதை பதைப்பாள் மனைவி. இது கணிணி யுகம். வேலை அதிகரித்துவிட்டது, தீடீர் சந்திப்பு அதனால் வர தாமதம் ஆகும் என்று ஒரு குறுஞ்செய்தி அனுப்பியோ அலைபேசியில் தொடர்புகொண்டோ சொல்லி விட முடியும். அப்படியும் சிலர் எந்த தகவலும் சொல்லாமல் நிதானமாக தன் வேலையெல்லாம் முடித்துக் கொண்டு வீடு திரும்புவர். பாவம் மனைவி! கணவர் வருவார் என்று காத்திருந்து காத்திருந்து பொறுமை இழந்திருப்பார். அதற்கப்புறம் வார்த்தைகள் வெடிக்கும் சண்டைகள் சகஜம்! இதெல்லாம் இக்காலத்தில் சங்க காலத்தில் இதே மாதிரி நடந்திருக்கிறதா?  இதோ பாடலை படியுங்கள்!

பாடல்: நற்றிணை: பாடியவர்| காப்பான் கீரனார்.

   சிறு வீ முல்லைத் தேம் கமழ் பசு வீ
   பொறி வரி நல் மான் புகர் முகம் கடுப்ப
   தண் புதல் அணிபெற மலர் வண் பெயல்
   கார் வரு பருவம்’ என்றனர் மன் இனி,
   அன்பு இன்மையின் பண்பு இல பயிற்றும்
   பொய் இடி அதிர் குரல் வாய் செத்து ஆலும்
   இன மயில் மடக் கணம் போல,
   நினை மருள்வேனோ வாழியர், மழையே.

தலைவன் வேலை நிமித்தம் தலைவியை பிரிந்து செல்ல நேர்கிறது. தலைவி பிரிவாற்றாமையோடு,  “எப்போது வருவீர் நாதா?” என்று கண்களில் கண்ணீர் மல்க கேட்கிறாள்.

  ஆறாக பெருக்கெடுக்கும் அவளது கண்ணீரைத் துடைத்து தலைமகன், ”கலங்காதே கண்மணியே! நல்ல யானையின் புள்ளிகளையும் வரிகளையும் உடைய புகரமைந்த முகம் போன்ற பச்சைப் போர்த்திய புதர்களில் சிறிய பூவான முல்லை பூத்து தேன் மணம் கமழும்.. அவ்வாறான கார்ப் பொழுதில் யான் திரும்பி வருவேன்!” என்று உறுதி அளிக்கின்றான்.

  தலைவியும் கார்பருவத்திற்காக காத்து நிற்கிறாள்  கோடை முடிந்து கார் உதித்துவிட்டது. இடியோடு மழைபொழிந்து மயில்களும் அகவல் ஒலி எழுப்பி ஆனந்த நடனம் பயில்கிறது. கார்ப் பருவம் வந்துவிட்டது. ஆனால் தலைவனைக் காணவில்லை. தலைவி துடித்துப் போகின்றாள்.
 வினை முடிக்கச் சென்ற காதலன் என்ன ஆனானோ? என்று கலங்கி நிற்க, அவள் தோழி தலைவியை தேற்றுகின்றாள். தலைவி இது கார் காலம் அன்று! இந்த மேகமானது உன்பால் அன்பில்லாமையால் பண்பில்லாத இந்த செயல்களை செய்கின்றது. நீ படும் துன்பத்தை கண்டு ரசிக்க ஆவல் கொண்டு பொய்யாக இடித்து மழை பொழிவிக்கின்றது. அந்த பொய் இடியைக் கண்டு மயில் கூட்டம் உண்மை என்று நம்பி கூவி ஆடுகின்றது. அது போல நாமும் மயங்கி நிற்க கூடாது. அந்த மேகம் வாழட்டும்! என்று தேற்றுகின்றாள்.

விளக்கம்: கார்காலத்தில் திரும்பி வருவதாக சொன்ன தலைவன் வராமல் போக தலைவி துன்புறுகின்றாள். தலைவியின் துன்பம் நீக்க தோழி இது கார் பருவம் அன்று. மேகம் பொய்யாக இடிக்கிறது. மயிலும் அதற்கு மயங்கி அகவுகின்றது. கலங்கவேண்டாம் என்று சொல்கின்றாள்.
  மேகத்திற்கு தலைவி மீது பொறாமையாம்! எனவே அவள் கலங்க வேண்டும் என்றே இடி இடித்து மழை பொய்விக்கிறதாம்! கார்காலம் வந்துவிட்டது போன்ற ஓர் உணர்வை ஏற்படுத்தி அவளை வருத்துகின்றதாம். அன்பு இல்லாதவர்கள்தான் இதுபோன்ற பண்பில்லாத செயல்களை செய்வார்களாம். தலைவி மீது அன்பில்லா மேகமே நீ நன்றாக வாழ்க என்று புகழ்வது போல பழிக்கின்றாள் தோழி.

தோழி தலைவியின் துயரை ஆற்ற பருவமே உதிக்க வில்லை என்று மேகத்தை பழித்து ஆறுதல் கூறும் அழகே தனி. அன்பு இல்லாதவரிடம் பண்பும் இருக்காது என்று பொருள் வரும் அன்பு இன்மையின் பண்பு இல என்ற தொடரும் சிறப்பு.

பாடலை ரசித்து படியுங்கள்! மீண்டும் ஒருமுறை நல்லதொரு பாடல் விளக்கமுடன் சந்திப்போம்! நன்றி!


Comments

  1. சங்க காலத்தையும் தற்காலத்தையும் எங்கள் முன்கொண்டு வந்து பகிர்ந்த விதம் அருமை. நன்றி.

    ReplyDelete
  2. மிக மிக அழகான ஒரு பாடல்...தலைவியைச் சமாதானம் செய்ய மேகத்தைப் பழித்துக் கூறிச் செல்வது அழகுதான்...பாடலும் விளக்கமும் அருமை...

    ReplyDelete
  3. பொருத்தம் புரிந்து கொண்டேன் நண்பரே...

    ReplyDelete
  4. விளக்கம் ரொம்பவே ரசித்தேன்... அருமை...

    ReplyDelete
  5. அழகிய பாடலுக்கு அழகான விளக்கம் சகோ, ரசித்தேன். தொடருங்கள்...நன்றி

    ReplyDelete
  6. தமிழ்த் தேனை ரசித்தேன்!

    ReplyDelete
  7. அருமை ...அருமை... நண்பரே!

    ReplyDelete
  8. பாடல் - பொருள் படித்து அறிந்தேன். மீண்டும் பாடல் படிக்க இன்னும் ரசித்தேன் சகோ

    ReplyDelete
  9. நற்றிணை பாடலும் படமும் அருமை ஐயா..!
    பாடலுக்கு பொருளுணர்த்திடும் முயற்சிக்கு நன்றி.

    ReplyDelete
  10. மிக அருமை. உங்கள் தமிழ் ஆர்வம் மெச்சத்தக்கது.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!