Saturday, December 31, 2016

இந்த வார ஆனந்த விகடனில் எனது ஜோக்!

இந்த வார ஆனந்த விகடனில் எனது ஜோக்!

 கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் கழித்து மீண்டும் எனது ஜோக் ஒன்று ஆனந்த விகடனில் இடம்பெற்றுள்ளது. ஆண்டு கடைசியில் மீண்டும் விகடனில் என் பெயர் பதித்தது மட்டற்ற மகிழ்ச்சியினை தந்தது.

  ஜோக்கினை பிரசுரம் செய்த விகடன் குழுமத்திற்கும் பாசுமணி சார், மற்றும் ஜோக்கினை பதிவிட்டு விபரம் சொன்ன தமிழக எழுத்தாளர் குழுவின் பொன் ராஜபாண்டி அண்ணாச்சி, ஏந்தல் இளங்கோ சார், ரவிக்குமார் சார் மற்றும் குழு நண்பர்கள், வலைப்பூ நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!

இந்த ஆண்டு இறுதியில் பிரசுரமான ஜோக் எனக்கு மேலும் ஊக்கம் தந்து இன்னும் நிறைய எழுத தூண்டி உள்ளது. ஆயினும் தந்தையின் உடல்நலக்குறைவு, வேலைப்பளு காரணமாக எழுதுவதற்கான சூழல் சரிவர அமையவில்லை! 

   வர்தா புயல் பாதிப்பினால் பகல் பொழுதில் சரிவர மின்சாரம் இருப்பதும் இல்லை! இதனால் மற்ற நண்பர்களின் வலைப்பக்கம் செல்வதும் படிப்பதும் குறைந்து உள்ளது. என் பதிவுகளும் குறைந்து உள்ளது.
புத்தாண்டில் நிலைமை சீரடையும் என்று எதிர்பார்க்கிறேன்.

அன்பு நண்பர்கள் என்னுடைய சூழலை புரிந்து கொள்ள வேண்டும். விரைவில் நண்பர்களின் வலைப்பக்கங்களை காண விரைந்தோடி வருகின்றேன்! அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

கீழே விகடனில் வெளிவந்த எனது ஜோக்!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

யானைக்கு வந்த நாட்டிய ஆசை! பாப்பாமலர்!

யானைக்கு வந்த நாட்டிய ஆசை! பாப்பாமலர்!

   


முல்லை வனக் காட்டில் விலங்குகள் கூடி இருந்தன. வரப் போகும் புத்தாண்டை எப்படி கொண்டாடுவது என்பதுதான் கூட்டத்தின் நோக்கம். நரியார் தான் முதலில் பேச ஆரம்பித்தார்.
   “ மனிதர்கள் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டை விதவிதமாக கொண்டாடுகிறார்கள். இசை நடனம், விருந்து என்று கேளிக்கைகளில் ஈடுபட்டு சந்தோஷமாக கொண்டாடுகிறார்கள் நமது காட்டிலும் இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட வேண்டும்”என்றது.
   அப்போது குறுக்கிட்ட கரடி, “மனிதர்களின் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நமக்குத் தேவையா? அவர்களுக்கு மற்றவர்களின் கஷ்டத்தை பற்றிய கவலையே கிடையாது. நடு இரவில் வீதியில் பட்டாசு வெடித்து  சத்தமான பாடல்களை பாடவிட்டு குடித்து கும்மாளமிட்டு  அயலாரை துன்பபடுத்துகின்றனர்! இதெல்லாம் காட்டுக்கு தேவையில்லை!” என்றது.
     அப்போது மான் ஒன்று பதில் பேசியது, கொண்டாட்டம் என்றால் ஆட்டம் பாட்டம் இருக்கத்தான் செய்யும்! அது இல்லாமல் விழா இல்லை! அது மற்றவர்களை பாதிக்காத வண்ணம் இருந்தால் நல்லது. யாரோ சிலர் செய்யும் தவறுக்கு ஒட்டு மொத்த மனிதர்களையும் குறை சொல்லக் கூடாது! என்றது.
    இதுவரை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த சிங்கராஜா! “ சரி இதுவரை நாம் புத்தாண்டு கொண்டாடியது இல்லை! இந்த வருடம் கொண்டாடுவோம்! ஆனால் அது மற்றவர்களுக்கு சங்கடம் இல்லாத வகையில் கொண்டாடுவோம்!” என்றது.
   எல்லா விலங்குகளும் மகிழ்ச்சி ஆரவாரம் இட்டன.  புத்தாண்டு அன்று விருந்து தயாரிக்கும் பொறுப்பை புலிக்கூட்டம் ஏற்று கொள்கிறது. விலங்குகளுக்கு தேவையான அனைத்து உணவுகளும் நாங்கள் தயாரிக்கிறோம் என்றது புலி.
   அதைக்கேட்டு பலத்த கரகோஷம் எழுந்தது. அடுத்து குயிலும் மயிலும் எழுந்து இசை நாட்டியம் பொறுப்பை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்றது.
    விளையாட்டு போட்டிகளுக்கான பொறுப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என்றன முயல்களும் மான்களும்
   விழா நடத்த தேவையான இடத்தை தயார் செய்யும் பொறுப்பை நாங்கள் செய்கிறோம் என்றன யானைகளும் கரடிகளும்.
   விழாவில் அனைவருக்கும் இனிப்பான பாணம் வழங்கும் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்றது குரங்குகள்.
   இப்படி அனைவரும் ஒவ்வொரு பொறுப்பை ஏற்றுக்கொள்ள விழா ஏற்பாடுகள் தொடங்கின. ஒத்திகைகள் நடந்தன. புத்தாண்டு அன்று காட்டின் மையத்தில் விழாவுக்கான மேடை அமைக்கப்பட்டது. அதில்  முதல் நிகழ்ச்சியாக குயில் பாட மயில் நடனம் ஆடியது. குரங்குகள் நகைச்சுவை செய்து காட்டின. விளையாட்டு போட்டிகளை மானும் முயலும் நடத்த அனைத்து விலங்குகளும் கலந்து கொண்டன. குரங்கார் இளநீர்களை பறித்து வந்து அனைவருக்கும் வழங்கினார்.புலியாரின் தயாரிப்பில் அறுசுவை உணவுகளை அனைவரும் சாப்பிட்டு முடித்து விழாவை நிறைவு செய்து கிளம்பினர்.
    விழாவில் மயிலின் நாட்டியம் மிகவும் பிரமாதமாக பேசப்பட்டது. அதைக் கேட்ட ஓர் குட்டி யானைக்கு தாமும் அப்படி நாட்டியம் ஆட வேண்டும் என்று ஆசை வந்தது. அது தன் தாயிடம் போய், அம்மா அம்மா! நானும் மயில் போல நடனம் ஆட ஆசைப்படுகிறேன்! என்று கேட்டது.
   தாய் யானையோ, குழந்தாய்! மயில் இயல்பிலேயே நடனம் ஆடக்கூடியது. நாம் உடல் பெருத்தவர்கள் நம்மால் அதைப்போல் ஆட முடியாது உன் ஆசையை விட்டு விடு என்றது.
    “ அப்படியானால் மனிதர்கள் எப்படி நடனம் ஆடுகிறார்கள்?” குட்டி யானை கேட்கவே, “அது எப்படி உனக்குத் தெரியும்?”என்று கேட்டது தாய் யானை.
    காட்டில் தான் மனிதர்கள் அடிக்கடி வருகிறார்களே! ஒருநாள் காட்டிற்குள் வந்தவர்கள் கையில் ஏதோ பொருளை வைத்துக்கொண்டு எதையோ பார்த்துக் கொண்டிருந்தார்கள்.நான் தூர இருந்து கவனித்தேன். அதில் ஒரு பெண் நடனம் ஆடிக்கொண்டிருந்தாள்.”
     “இதற்குத்தான் மனிதர்கள் பக்கம் நெருங்காதே என்று சொல்வது? பார்த்தாயா இப்போது உனக்கு விபரீத ஆசை வந்துவிட்டது?”
   ”நான் ஆடமுடியாதா அம்மா?”
   “மனிதர்கள் பயிற்சி எடுத்து ஆடுகிறார்கள்! உன்னால் அதுபோல பயிற்சி எடுக்க முடியுமா? யார் கற்றுக்கொடுப்பார்கள்?”


  “ மயிலிடம் போய் கற்றுக் கொள்கிறேன்!”
“மயிலாட்டம் உனக்கு வராது! எதற்கும் முயன்று பார்ப்போம்!”
   இரண்டும் மயிலிடம் சென்று தங்கள்  விருப்பத்தைக்கூறின.
   மயில், எனக்கு ஆடத்தான் தெரியும் கற்றுக்கொடுக்கத் தெரியாது. பட்டணத்தில் இந்த நடனம் கற்றுக் கொடுப்பவர்கள் இருக்கிறார்கள் அங்கு சென்று பாருங்கள் என்றது.
       இரண்டும் காட்டை விட்டு நகரத்துக்குள் வந்தன. நிறைய அலைந்து ஓர் நடனப் பள்ளியை அடைந்தன. தங்கள் விருப்பத்தை கூறின. அந்த நடனப்பள்ளியின் ஆசிரியை சொன்னார்.
   உன் விருப்பத்தை தடை செய்ய வில்லை! நாளையே உனக்கு கற்றுக் கொடுக்கிறேன். ஆனால் அதற்கான உடையை அணிந்து வா! என்றார்.
    உடை எங்கே கிடைக்கும்?துணிக்கடைக்கு போய் வாங்கி வாருங்கள் என்றார்.
   இரண்டும் அங்கிருந்து அருகில் உள்ள ஒரு துணிக்கடைக்குச் சென்றன. தாய் யானை குட்டி யானையுடன் வருவதை கண்டு கடைக்காரர் மிரண்டு போனார். நில்லுங்கள் நில்லுங்கள்! உள்ளே வந்து பொருட்களை உடைத்து விடப்போகின்றீர்கள் உங்களுக்கு என்ன வேண்டும்?
    பரதநாட்டிய உடை வேண்டும்!
 உன்னுடைய சைஸுக்கு உடை தயாராக இல்லை! வேண்டுமானால் துணி தருகிறேன்!  தைத்து கொள்ளுங்கள். ஆனால் பணம் யார் தருவார்கள்?
   பணமா? அப்படி என்றால்…
துணியை சும்மா தர முடியுமா? அதற்கு விலை இருக்கிறது! அந்த விலையைத் தான் கேட்கிறேன்!
  சரி அது எங்கே கிடைக்கும்? உழைத்தால் கிடைக்கும்!
உழைப்பதா? அப்படி என்றால்…
   ஏதாவது வேலை செய்தால் பணம் கிடைக்கும்!
சரி நீங்களே ஏதாவது வேலை கொடுங்களேன்!”
 “ சரி இந்த் துணி மூட்டைகளை சுமந்து கடைக்குள் வையுங்கள்!”

 மூட்டைகளை இரண்டும் சுமந்தன.
  “பார்த்து பார்த்து கண்ணாடிகளை உடைத்துவிடப் போகிறீர்கள்!”
மாலை முழுதும் வேலை செய்துவிட்டு இப்போது துணியை தருகிறீர்களா? என்றன யானைகள்.
     இந்தாருங்கள் துணி! இதை தையல் காரனிடம் கொடுத்து தைத்துக் கொள்ளுங்கள்! இரண்டும் தையல் காரனை தேடிச்சென்றன.
     ஒரு தையல்காரனை கண்டு துணியை கொடுத்து தைக்கச் சொல்லின. என் வாழ்நாளில் இதுவரை யானைக்கு துணி தைத்தது இல்லை! இதை தைக்க நிறைய கூலி தேவை! அது உங்களிடம் இருக்கிறதா?
     இரண்டும் முழித்தன. கூலியா அப்படின்னா?
இந்த துணியை சும்மாவா தைச்சு கொடுப்பேன்? அதுக்கு பணம் வேணும்? அது உங்க கிட்ட இருக்கா?  இல்லேன்னா கிளம்புங்க!

    அப்போது அங்கு வந்தான் சர்க்கஸ் கம்பெனி முதளாளி ஒருவன். அவன் தன்னுடைய கூடாரத்துணியை தைக்க வந்தான். அவன் மனதில் ஒரு திட்டம் உருவானது. என்னுடன் வருகிறீர்களா என்று நைச்சியமாக அழைத்தான்.
      இல்லை! இல்லை! நாங்கள் நாட்டியம் கற்க வேண்டும்?
   அதற்குத்தான் கூப்பிடுகிறேன்! நான் நன்றாக நாட்டியம் கற்றுத்தருகிறேன்!
    அதற்கு  உடை தைக்க வேண்டுமே?
   அதெல்லாம் இல்லாமலே நான் கற்றுத் தருகிறேன்!
     அப்படியானால் சரி வருகிறோம்!
  இரண்டையும் கூண்டு வண்டியில் ஏற்றினான் சர்க்கஸ் கூடாரத்திற்கு அழைத்து வந்தான். தினமும் அதற்கு பயிற்சிகளை வழங்கினான். சரியாக ஆடவில்லை என்றால் சவுக்கால் அடித்தான். பெரிய யானைக்கும் பயிற்சிகள் வழங்கினான். இரண்டையும் சங்கிலியால் கட்டிவைத்தான்.

இப்போது குட்டியானை தாயிடம் கேட்டது, அம்மா நாட்டியம் கற்க இவ்வளவு கஷ்டப்பட வேண்டுமா? வேண்டாம் அம்மா நாம் காட்டிற்கே போய்விடலாம்!
  சரி வா முதலாளியிடம் கேட்போம்!
    அய்யா! நாங்கள் எப்போது கானகம் போவது?
   என்னது கானகத்திற்கா? இவ்வளவும் எதற்கு சொல்லிக் கொடுத்தேன்! நான் சம்பாதிக்க வேண்டாமா?
 இன்றுமுதல் ஷோ ஆரம்பம்! நான் சொல்லி கொடுத்ததை எல்லாம் அரங்கத்தில் நீ செய்து காட்ட வேண்டும். ஷோ நிறைய வேண்டும்.
      என்னது? நாங்கள் இவ்வளவு கஷ்டப்பட்டு கற்றது நீ சம்பாதிக்கவா? இல்லை முடியாது…!
     உங்களை யார் விடப்போகிறார்கள்! முடியாது என்பதே கிடையாது! நீங்கள் ஆடித்தான் வேண்டும்.
    அம்மா நாம் தப்பிக்கவே வழி கிடையாதா?
   உண்டு! நான் சொல்வதைக் கேள்! இதுவரை நாட்டியம் கற்கவேண்டும் என்ற ஆசையால் இவன் சொல்வதை கேட்டு அடிமை போல இருந்தோம்! உன் நாட்டிய ஆசையை விட்டுவிடு நம் உடல் பளுவின் மேல் நம்பிக்கை வை! இந்த சங்கிலியை அறுத்தெறிந்து இவனை தூர வீசி நாம் தப்பித்துவிடலாம்.
    உண்மைதான் அம்மா! இயல்புக்கு மாறாக இருந்து துன்பப்பட்டது போதும்! இப்போதே கிளம்புவோம்!
   யானைகள் இரண்டும் ஆக்ரோசம் கொண்டன! சங்கிலிகளை அறுத்தெறிந்து ஓடத்தொடங்கின. தடுக்க முனைந்த பயிற்றுனரை தூக்கி வீசின. அவன் பயந்து ஓடினான்.
    உடல் சோர்ந்து காட்டுக்குள் நுழைந்த யானைகளிடம் மயில் கேட்டது! யானையாரே நடனம் கற்றுக் கொண்டீர்களா?
    நடனம் மட்டும் அல்ல! நல்ல பாடமும் கற்றுக்கொண்டேன்! என்று சொன்னன யானைகள்.

(மீள்பதிவு)


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்!

Friday, December 30, 2016

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

  தளிர் ஹைக்கூ கவிதைகள்!1.   கரையைக் கடக்கையில்
கஷ்டப்படுத்தியது
   புயல்!

2.   வானில் பிறந்தாலும்
மண்ணோடு கலந்தது
மழைநீர்!

3.   பறித்து நடுகிறார்கள்
துளிர்க்கிறது!
திருமணம்!

4.   அரவணைக்கையில்
உதறி தள்ளுகிறோம்!
பனி!

5.   கட்டிய குடிசைகள்!
அகற்றியது சூரியன்!
பனி!

6.   வாடாத பூக்கள்
வரவேற்றன!
வாசலில் கோலம்!

7.   அசைந்தாலும்
நகரவில்லை!
நீரில் நிழல்!

8.   வெளிச்சத்துக்கு வந்தன
நட்சத்திரங்கள்!
அமாவாசை!

9.   தேடிக்கொண்டே இருக்கின்றன
எதையும் தொலைக்கவில்லை!
எறும்புகள்!

10. மொய்த்த கண்கள்!
காசாக்கினாள்
நடிகை!

11. நிஜத்தை தொலைத்து
நிழலில் நிம்மதி காண்கிறாள்
நடிகை!
12.  விரிசல்!
உலர்ந்து போனது!
ஈரம்!

13. பூக்களைப் பறித்தார்கள்!
அழவில்லை!
செடி!

14. திரைவிரித்தது வானம்
இருண்டது பூமி!
அமாவாசை!

15. பிடித்துக் கொண்டது
நகர முடியவில்லை!
மழை!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Sunday, December 25, 2016

இந்த வார பாக்யா டிச30- ஜனவரி 5-2017 இதழில் எனது படைப்புக்கள்!

இந்த வார பாக்யா டிச30- ஜனவரி 5-2017 இதழில் எனது படைப்புக்கள்!

    வாரா வாரம் எது தவறினாலும் பாக்யாவிற்கு ஒரு பத்து ஜோக்ஸ்கள் மெயில் அனுப்பி விடுவேன். ஞாயிறு அல்லது திங்கள் கிழமைகளில் அதில் சில அடுத்த வார பாக்யாவில் வரும். மக்கள் மனசு கேள்வி பதிலும் ஞாயிறு அன்று பதில் அளித்து அடுத்த வாரம் வரும்.

   வர்தா புயல் வீசி எங்கள் ஊரில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு ஒரு வாரம் ஓடிப்போய் இருந்தது. போன சனியன்று இரவு வந்தது. மீண்டும் ஞாயிறன்று காலையில் துண்டிக்கப்பட்டது. போனில் நெட் வொர்க்கும் போய் போய் வந்து கொண்டிருந்தது. சிரங்கு பிடித்தவன் கையும் எழுத்தாளன் கையும் சும்மா இருக்குமா?
    எப்படா கரண்ட் வரும் என்று காத்திருக்கையில் இரவு 8 மணி வாக்கில் மின்சாரம் வந்தது. கம்ப்யூட்டரை ஆன் செய்து ரிலையன்ஸ் ஜியோ கனெக்ட் செய்தால் கனெக்ட் ஆகவில்லை!  முயன்று பார்த்து தோற்று பி.எஸ்.என்.எல் நெட் கனெக்ட் கிடைத்து மெயில் ஓப்பன் செய்து ஒரு பதினைந்து ஜோக்குகள் ஒரு கதை  பாக்யாவிற்கு மெயில் அனுப்பி முடிக்கையில் மணி பதினொன்றை நெருங்கி இருந்தது. இடையிடையே வெவ்வேறு தொல்லைகள் அதனால்தான் இவ்வளவு நேரம். காரிய சித்தி கணபதிக்கு நன்றி சொல்லி படுத்தேன். மின் வழங்கலை சீரமைத்த  கள்ளகுறிச்சி விழுப்புரம் மின் ஊழியர்களுக்கும் மானசீகமாக நன்றி சொல்லி உறங்கிப் போனேன்.

  கஷ்டப்பட்டது வீணாக வில்லை! இந்த வார பாக்யாவில் என்னுடைய கதை எடை  மற்றும் 8 ஜோக்ஸ்கள் வெளியாகி என்னை மகிழ்ச்சியில் திக்குமுக்காட செய்தது. வழக்கமாக செங்குன்றம் சென்று வாங்குவேன். இந்த முறை சகோதரி ஊரில் இருந்து வந்ததால் அவரை வாங்கிவரச் சொன்னேன்.  புத்தகத்தை புரட்டினால் இரண்டாவது பக்கத்திலேயே என் கதை! 

   என் மீது மதிப்பளித்து என் படைப்புக்களை வெளியிட்டு வரும் பாக்யா ஆசிரியர் குழுவினருக்கும் பாக்யா நிறுவனர் பாக்யராஜ் சாருக்கும் பாக்யாவுக்கு எழுதுங்கள் என்று ஊக்கப்படுத்திய பூங்கதிர் சாருக்கும்  இந்த நேரத்தில் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

என் வளர்ச்சியினை பாராட்டி ஆதரித்து வாழ்த்துக்கள் நல்கி வரும் வலைப்பூ நண்பர்களுக்கும் என் படைப்புக்களை வெளியானதும் தமது குழுமத்தில் பதிந்து வாழ்த்துக்கள் தெரிவிக்கும் தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுவினருக்கும் இந்த வாரம் குழுவில் பகிர்ந்து கொண்ட ஜான் ரவி சாருக்கும் மற்றும் என் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது நன்றிகள். படைப்புக்கள் கீழே!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Saturday, December 24, 2016

கிறிஸ்துமஸ் சில சுவாரஸ்ய தகவல்கள்!

கிறிஸ்துமஸ் சில சுவாரஸ்ய தகவல்கள்!  

கதவைத் திறந்து கிறிஸ்துமஸ் வாழ்த்து: பெர்லின் நாடு இரண்டாகப் பிரிந்திருந்த காலத்தில் இரண்டு நாடுகளுக்கும் நடுவே ஒரு சுவர் அமைக்கப்பட்டிருந்தது. சுவரின் நடுவே ஒரு கதவு அமைக்கப்பட்டது. கிறிஸ்துமஸ் அன்று மட்டுமே, இந்தக் கதவு திறக்கப்பட்டு இருநாட்டு மக்களும் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வர். மற்ற நாட்களில் இந்தக் கதவு மூடப்பட்டிருக்கும். 

மின்விளக்கு மரம்

1882ல் முதன் முறையாக கிறிஸ்துமஸ் மின்விளக்கு மரம் பயன்படுத்தப்பட்டது. நியூயார்க்கில் மின்சாரம் கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசனின் நண்பர் ஒருவர் 80 பல்புகளை வைத்து மரத்தை அழகுபடுத்தினார். பின்பு 1903ல் வியாபார ரீதியாக கிறிஸ்துமஸ் மின்விளக்கு மரங்கள் விற்பனைக்கு வந்தன. இரண்டாம் உலகப்போருக்கு முன்னால் பிரிட்டனில், தேவதை வடிவிலான மின்விளக்குகள் கிறிஸ்துமஸின்போது அதிகமாக விற்கப்பட்டன.


கிறிஸ்துமஸ் தீவு

இந்தியப்பெருங்கடலில் உள்ள ஒரு தீவிற்கு கிறிஸ்துமஸ் தீவு என்று பெயர். வில்லியம் மைனர் என்ற பிரிட்டிஷ் மாலுமி 1643ம் ஆண்டு கிறிஸ்துமஸ் என்று இத்தீவை கண்டுபிடித்தமையால் இப்பெயர்.


* இலை இல்லாத மரம்: ஸ்வீடன் நாட்டில் மக்கள் கிறிஸ்துமஸ் மரங்களை நடும்போது பச்சை இலைகளைப் பயன்படுத்துவதில்லை. ஏனெனில், அந்நாட்டில் யாராவது இறந்து போனால் பச்சை மரங்களை சமாதி அருகில் நடுவது உண்டு. இறப்பின் சின்னமாக பச்சை மரம் இருப்பதால் கிறிஸ்துமஸ் மரங்களுக்கு முழுக்க முழுக்க பூக்களையே பயன்படுத்தி அலங்கரிக்கிறார்கள்.

* கிறிஸ்துமஸ் குடில்: இயேசுநாதர் பிறந்ததைப் போல சித்தரிக்கும் கிறிஸ்துமஸ் குடில்கள் விதவிதமான அலங்காரங்களுடன் உலகெங்கும் அமைக்கப்படுகின்றன. இதை முதன்முதலாக புனித பிரான்சிஸ் என்பவர் 1722ம் ஆண்டில் அறிமுகப்படுத்தினார்


பசிலிக்கா ஆலயம்
பசிலிக்கா என்பது கிரேக்க சொல். இதற்கு பெரிய கிறிஸ்துவ ஆலயம் என்று பொருள். கிறிஸ்தவ ஆலயங்களில் பேராலயம் என்ற பெருமைக்குரியதை பசிலிக்கா என்று அழைப்பார்கள்.
இந்தியாவில் 5 பசிலிக்காக்கள் உள்ளன. மும்பை பாந்திராவில் உள்ள மலை மாதா ஆலயம், கோவா போம் ஜேசு ஆலயம், சென்னை மயிலாப்பூர் புனித தோமையர் ஆலயம், வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை ஆலயம், பெங்களுரு ஆரோக்கியமாதா ஆலயம் ஆகியவை பசிலிக்காக்கள் என்றழைக்கப்படுகின்றன.

முதல் வாழ்த்து அட்டை
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஹென்றி என்ற தொழில் அதிபர் இந்த அட்டையை உருவாக்கிய பெருமை பெறுகிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் வசித்த இவர், கிறிஸ்துமஸ் சமயத்தில் உறவினர்களுக்கு கடிதம் எழுத இயலாததால் அட்டையில் படத்தை அச்சிட்டு வாழ்த்தாக அனுப்பினர். ஆயிரம் பேருக்கு அவர் வாழ்த்து அட்டை அனுப்பினார்.
அதன்பிறகு கிறிஸ்துமஸ் சமயத்தில் வாழ்த்து அட்டைகள் அனுப்பும் பழக்கம் ஏற்பட்டது. ஹென்றி அனுப்பிய ஆயிரம் வாழ்த்து அட்டைகளை இப்போதும் ஒருவர் லண்டனில் தன் வசம் வைத்துள்ளார்.

கிறிஸ்துமஸ் தாத்தா வாகனம்

விநாயகருக்கு வாகனமாக எலியும், முருகனுக்கு வாகனமாக மயிலும் இருப்பது போல் கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கும் வாகனம் உள்ளது. இது பறக்கும் மான். கிறிஸ்துமஸ் தாத்தா பறக்கும் மான் மூலம் பறந்து சென்றதாக கதைகள் இருக்கின்றன. மான் எப்படி பறக்கும், என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. கடும் குளிர் நிறைந்த .துருவ பிரதேசங்களில் பறக்கும் மான் வகைகள் உள்ளன. விண்ணில் அவை பறந்து செல்வதை பார்க்கும் போது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இந்த அபூர்வ மான்களை கிறிஸ்துமஸ் தாத்தாவின் வாகனமாக கருதி வழிபடுகின்றனர்.
கனடா நாட்டின் தலை நகரான மான்டிரியலில் மிகப் பிரம்மாண்டமான புனித ஜோஸப் தேவாலயம் உள்ளது. உலகப் புகழ் பெற்ற தேவாலயம் இது. வழிபடவும் பார்த்து மகிழவும் ஆண்டுதோறும் இருபது லட்சத்துக்கு மேல் மக்கள் வருகிறார்கள்.  இந்த தேவாலயத்தில் 56 மணிகள் உள்ளன. இந்த மணிகளின் நாதம் இனிமையானது. ரோமானிய பாணியில் இத்தேவாலயத்தை எழுப்பியவர் சகோதரர் ஆண்ரே என்பவர்.

கிறிஸ்துமஸூக்கு அடுத்த நாள் பாக்ஸிங் தினம் கொண்டாடப்படுகிறது. இதற்கும் குத்துச் சண்டைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.  பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட வழக்கம் இது. கிறிஸ்துமஸ் தினத்தை ஒட்டி சர்ச்சுகளில் ஒரு பெட்டி வைத்துவிடுவார்கள்.  பணம் படைத்தவர்கள் ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் அப்பெட்டிகளில் பணம் போட்டு வருவார்கள்.  வருடத்துக்கு ஒரு முறை கிறிஸ்துமஸூக்கு அடுத்த நாள் பெட்டியை திறந்து பணம் எண்ணப்படும்.  அதைக் கொண்டு ஏழைகளுக்கு பொருளாதார உதவிகள் செய்யப்படும்.
(இணையத்தில் படித்து தொகுத்தது)

அனைவருக்கும் எனது இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

இந்த வார குமுதம் இதழில் 28-12-16 என்னுடைய ஜோக்!

இந்த வாரம் குமுதம் இதழிலும் என் ஜோக் ஒன்று பிரசுரம் ஆனது. குமுதம் இதழின் இணைப்பான லைஃபில் அந்த ஜோக் பிரசுரம் ஆனது. தேர்ந்தெடுத்த ஆசிரியர் குழுவினருக்கும் குமுதம் ஆசிரியர்,நிர்வாகத்தினர் அனைவருக்கும் எனது நன்றி!

  இந்த தகவலை வாட்சப் மூலம் பகிர்ந்து கொண்ட தமிழக எழுத்தாளர்கள் வாட்சப் குழும நண்பர், ஏந்தல் இளங்கோ சாருக்கும் வாழ்த்திய நண்பர்களுக்கும் எனது நன்றி.

   தொடர்ந்து ஊக்கமளித்து வரும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

  ஜோக் கீழே!கார்டூன் ஆன்லைன் மாத இதழில் இரண்டு மாதங்களாக எனது ஜோக் பரிசு பெற்று வருவதை  அறிந்து இருப்பீர்கள். ஜாம்பாவன்கள் கலந்து கொள்ளும் இந்த போட்டியில் நானும் கலந்து கொண்டு நவம்பர் மாதத்தில் மீண்டும் மூன்றாவது முறையாக பரிசு பெற்றேன். இது பரிசுத்தொகை அப்படியே இரட்டிப்பாக முதல் முறை 25,அடுத்து 50 இந்த முறை நூறு என தொடர்ச்சியாக மூன்று முறை வென்ற மகிழ்ச்சி மன நிறைவைத் தந்தது. அந்த ஜோக் கீழே!


தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் கார்டூன் ஆன்லைன் ஆசிரியர் திரு நல்லமுத்து அவர்களுக்கும் தேர்ந்தெடுத்த நடுவர் குழுவினருக்கும் எனது நன்றிகள்.

தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Tuesday, December 20, 2016

இந்த வார பாக்யாவில் டிசம்23-29 எனது ஜோக்ஸ்கள்

இந்த வார பாக்யாவில் டிசம்23-29 எனது ஜோக்ஸ்கள்

 வழக்கம் போல இந்தவாரமும் பாக்யா என்னை ஏமாற்றவில்லை! என்னுடைய ஜோக்ஸ்கள் வெளிவந்து மகிழ்ச்சியைத் தந்தது. வர்த்தா புயல் காரணமாக வாடிப்போயிருந்த எனக்கு இந்த வாரம், குமுதம், பாக்யா, கார்டூன் ஆன்லைன் என்று தொடர் வெற்றிகள் வந்து மகிழ்ச்சியைத் தந்து வாட்டத்தை ஓரளவிற்கு போக்கின.

   மின்சாரம் இரவில் மட்டும் விட்டு விட்டு வருகின்றது. ஜியோ சிம் சிக்னல் நேற்று முழுவதும் போராடிப் பார்த்தேன். கம்ப்யூட்டருடன் கனெக்ட் ஆகவில்லை! இன்றும் அப்படியே! பி.எஸ்.என். எல்.லில் போராடி இணைத்து இந்த பதிவை வெளியிடுகின்றேன்.

   நிலைமை சீரடைந்ததும் வழக்கம் போல நண்பர்களின் பதிவுகளை வாசிக்க வருகின்றேன். இணைப்பு மிகவும் ஸ்லோவாக இருப்பதால் பக்கங்கள் திறக்க நேரம் ஆகின்றது. எனவே பொறுத்துக் கொள்ளுங்கள்.

  பாக்யாவில் என் படைப்புக்களை தொடர்ந்து வெளியிட்டு வரும் பாக்யா ஆசிரியர் குழுவினருக்கும் என்னை உற்சாகப்படுத்தி எழுத தூண்டிய எஸ்.எஸ்.பூங்கதிர் சாருக்கும் தொடர்ந்து ஊக்கப்படுத்தி  பத்திரிக்கையில் வெளிவந்ததை உடனே பகிர்ந்து கொள்ளும் தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுவினருக்கும் எனது குடும்பத்தினர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

  கீழே எனது ஜோக்ஸ்கள்! 
முதல் ஜோக்!  பழசு எதுவானாலும்  வாங்கிக்கிறேன்னுதானே சொன்னீங்க? 
அதுக்காக  உங்க மாமியாரை ஓ-எல்-எக்ஸ்லே எல்லாம் விற்க முடியாதும்மா!

தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Sunday, December 18, 2016

இந்த வார குமுதம் 21-12-16 இதழில் எனது இரண்டு ஜோக்ஸ்!

இந்த வார குமுதம் 21-12-16 இதழில் எனது இரண்டு ஜோக்ஸ்!

நீண்ட நாட்களாகவே குமுதம் இதழில் என் பெயரை காண வேண்டும் என்ற ஆசை.ஒரு வருட காலமாக குமுதம் இதழுக்கு மெயிலில் ஜோக்ஸ்கள் அனுப்பி வந்தேன். ஒன்று கூட தேறவில்லை. தமிழக எழுத்தாளர்கள் வாட்சப் குழுவினர் கார்டில் அனுப்ப சொன்னார்கள் அப்படி ஒரு ஐம்பது கார்டுகள் அனுப்பி பார்த்தேன்.
 போன மாதம் நிறைய எதிர்பார்த்து ஏமாந்தேன். இந்த வாரம் வர்தா புயல் பாதிப்பு. ஞாயிறு முதலே கரண்ட் இல்லை. தகவல் தொடர்பு இல்லை. குடிக்க தண்ணீர் தட்டுப்பாடு. இந்த கஷ்டங்களை எல்லாம் வெள்ளியன்று இரவு வாட்சப் மெசேஜ் கிடைத்தபோது பறந்து புயலாய் அடித்து சென்றுவிட்டது.

 இன்வெர்டர் பேட்டரி மூலம் போன் சார்ஜ் செய்து போய் போய் வந்த சிக்னலில் வாட்சப் பார்க்க குமுதம் ஜோக்ஸ் வாழ்த்துக்கள் என்று குருப் நண்பர்கள் என் பெயரை சொல்லியிருந்த போது மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால் சிக்னல் கிடைக்காமையால் அவர்கள் பதிவிட்டிருந்த இமெஜ் டவுண்லோட் ஆகவில்லை. 
  மறுநாள் சங்கடஹர சதுர்த்தி. விரைவாக பூஜைகள் முடித்து காரனோடை சென்று குமுதம் வாங்கி புரட்டி என் ஜோக்ஸ் படித்தபோது சொல்லவொனா ஆனந்தம்.
    அப்படியே செங்குன்றம் சென்று பாக்யாவும் வாங்கினேன். அதிலும் என் ஜோக்ஸ்கள் மட்டற்ற மகிழ்ச்சியோடு வீடு திரும்பி அனைவரிடமும் சொல்லி புத்தகம் காண்பித்து மகிழ்ந்தேன். இன்னும் முழுமையாக மின்சாரம்வரவில்லை! இரவு வேளையில் மட்டும் வருகிறது. வர்தா புயல் எங்கள் கிராமத்தை புரட்டி எடுத்துவிட்டது. குடிநீர் தட்டுப்பாடு இருக்கிறது. விரைவில் இதில் இருந்து மீண்டுவந்து உங்களை எல்லாம் வலைப்பூ மூலம் சந்திக்கிறேன்.

  குமுதம் இதழ் ஆசிரியர் குழுவினர், தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுவினர், வலைப்பூ நண்பர்கள், மற்றும் என் பெற்றோர் உறவினர்கள், மனைவி குழந்தைகள் அனைவருக்கும் எனது  சிரம் தாழ்ந்த நன்றிகள். குமுதம் ஜோக்ஸ்கள் கீழே!

பாக்யா ஜோக்ஸ் நாளை பதிவிடுகிறேன்! பதிவு தேத்தனும்ல!தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Monday, December 12, 2016

கார்த்திகை தீப வழிபாடு!


கார்த்திகை தீப வழிபாடு!
ஒளி நிறைந்திருக்கும் இடத்தில் இருள் நெருங்காது! அறிவொளி பரவியிருக்கும் இடத்திலே அறியாமை படராது! இறைவன் ஒளிமயமானவன். இயற்கையை கடவுளாக வழிபாடு செய்தார்கள் முன்னோர்கள். சூரியவழிபாடும், வருணவழிபாடும் அப்படி தோன்றியவை!
   சூரியனும் ஒளிவடிவானவன் தானே! விளக்கேற்றி வைக்கும் போது இருள் விலகுகிறது. இறைவனின் ஆனந்தமயமான தரிசனம் கிடைக்கிறது. அப்படியே மனம் உருகி பிரார்த்தனை செய்யும் போது நமது அகத்திலே பிடித்து இருந்த இருள்கள் விலகி ஆன்மா ஒளிபெறுகிறது.

   சிவனின் நெற்றிப்பிழம்பில் இருந்து பிறந்தவர் சுப்ரமண்யக் கடவுள். அவரை வளர்த்தவர்கள் கார்த்திகை பெண்கள். இந்த ஆறு கார்த்திகை பெண்களை ஒன்றாக்கி கார்த்திகை நட்சத்திரமாக்கி வானில் ஒளிவீச செய்தார் முருகர். இந்த கார்த்திகை நட்சத்திர நாளில் தன்னை வழிபடுவோருக்கு வேண்டும் வரம் தருவதாக அருள்பாலித்தார். முருகனுடைய பிறந்தநாள் விசாகநட்சத்திரம், இந்த நட்சத்திரத்தில் விரதவழிபாடு செய்யாமல் கார்த்திகை நட்சத்திரத்தில் வழிபாடு செய்ய இதுவே காரணம்.தன்னை வளர்த்தோருக்கு முருகக் கடவுள் நன்றி செலுத்தியதை உணர்த்தும் அற்புத கதை இது.

  ஒரு சமயம் சிவபெருமானின் முடியையும், அடியையும் காண பிரம்மனுக்கும், விஷ்ணுக்குவும் போட்டி உருவானது. பிரம்மன் அன்ன வடிவம் எடுத்து தலையைக் காண மேலே பறந்து சென்றார். விஷ்ணு வராகம் வடிவம் எடுத்து பூமியை குடைந்து சென்றார். நெடும் தொலைவு கடந்தும் அடியையும் முடியையும் காண முடியவில்லை! திருமால் தோல்வியை உணர்ந்து திரும்பி வந்தார். பிரம்மனோ சிவனின் தலையில் இருந்து உதிர்ந்து வந்த ஒரு தாழை மலரை தனக்கு பொய் சாட்சி கூறுமாறு அழைத்து வந்து சிவனிடம் தான் முடியை கண்டுவிட்டதாக கூறினார். தாழம்பூவும் ஆம் இவர் கண்டார். என்று உரைத்தது.
   அனைத்தும் உணர்ந்த சிவன் பிரம்மனும் தாழம்பூவும் பொய் சொன்னதை அறிந்து கோபித்து தன்னுடைய பூஜையில் தாழம்பூவிற்கு இடமில்லை என்றும், பிரம்மனுக்கு இனி தனி கோயில்கள் கிடையாது. உன்னை தனி வழிபாடு யாரும் செய்ய மாட்டார்கள் என்று சபித்தார். அதுமுதல் பிரம்மனுக்கு கோயில்கள் இல்லாமல் போனது. தாழைமலர் சிவபூஜைக்கு சேர்ப்பது இல்லை! இந்த நிகழ்வு நடந்தபோது சிவன் ஜோதிவடிவமாக காட்சி தந்தார். அதை நினைவு கூறும் வண்ணம் திரு அண்ணாமலையில் ஜோதி ஏற்றப்படுகிறது.
   திருவிளக்கு மஹாலஷ்மியின் அம்சம். கார்த்திகை மாதத்தில் வீட்டில் விளக்கேற்றி வழிபடுவது மிகவும் சிறப்பாகும். கார்த்திகை மாதத்தில் ஆலயங்களிலும் வீடுகளிலும் தீபம் ஏற்றி வழிபட்டால் வீட்டில் ஹோமங்கள் செய்து பெரும் பலன் கிடைக்கும். தினமும் ஏற்ற இயலாதவர்கள் துவாதசி, சதுர்தசி, பவுர்ணமி அன்றாவது ஏற்றுவது சிறப்பாகும்.

தீபத்தின் சுடரில் மகாலட்சுமியும்ஒளியில் சரஸ்வதியும்வெப்பத்தில்பார்வதிதேவியும் எழுந்தருளுவதாக ஐதீகம்எனவேதீபம் ஏற்றி இறைவழிபாடு செய்வதன் மூலம் முப்பெரும் தேவியரின் திருவருளையும் ஒருங்கேபெறலாம்திருக்கார்த்திகை தினத்தன்றுகிளியஞ்சட்டி எனப்படும் களிமண்ணாலான விளக்கில் பசு நெய் கொண்டுபஞ்சு திரியிட்டு விளக்கேற்றச்சொல்வார்கள் பெரியோர்கள்அம்பிகை வாசம் செய்வதாக நம்பப்படும் பசுநெய்யை தீபத்தில் இடும்பொழுதுஅது சிவமாகிய ஜோதியுடன் சேர்ந்துசிவசக்தி சொரூபமாகிறது.
திருவிளக்கில் தேவியர்
திருவிளக்கில் துர்காலட்சுமிசரஸ்வதி ஆகிய சக்திகள் உள்ளனர்தீப ஒளி தீயசிந்தனைகள் ஏற்படாவண்ணம் தடுக்கிறதுஇதன் அடிப்பாகத்தில் பிரம்மா,தண்டு பாகத்தில் மஹாவிஷ்ணுநெய்எண்ணெய் நிறையுமிடத்தில்சிவபெருமான் வாசம் செய்கின்றனர்.

எந்த நேரத்தில் விளக்கேற்றலாம்?

 சூரியோதயத்திற்கு முன்னதான பிரம்ம முகூர்த்த வேளையில் (காலை4.30- 6மணிவிளக்கேற்றினால் பெரும் புண்ணியம் உண்டாகும்முன்வினைப் பாவம் விலகும்மாலை 4.30-6க்கு இடையே உள்ள பிரதோஷ வேளை சிவபெருமானுக்கும்நரசிம்மமூர்த்திக்கும் மிகவும் உகந்தவைஇவ்வேளையில் தீபமேற்றினால் திருமணத்தடைகல்வித்தடை நீங்கும் என்பது ஐதீகம்ஒரு வீட்டில் எந்த நேரத்தில்விளக்கேற்றினாலும்கருக்கல் நேரமான மாலை 6.30 மணிக்கு அவசியம்விளக்கேற்ற வேண்டும்இது அனைவருக்கும் பொதுவான நேரம்விளக்கைகுளிர்விக்கும் போதுகைகளை உயர்த்தி அணைக்கக்கூடாதுபூவால்குளிர்விக்கலாம்தூண்டும் குச்சியால் லேசாக அழுத்தலாம். 

விளக்கு துலக்க நல்ல நாள்
குத்துவிளக்கை ஞாயிறுதிங்கள்வியாழன்சனிக்கிழமைகளில் துலக்குவதுநல்லதுஇதற்கு காரணம் உண்டுதிருவிளக்கில் திங்கள் நள்ளிரவு முதல் புதன்நள்ளிரவு வரையில் தனயட்சணி (குபேரனின் பிரதிநிதியான பதுமநிதியின்துணைவிகுடியிருக்கிறாள்செவ்வாய்புதன் கிழமைகளில் விளக்கை கழுவினால்இவள் வெளியேறிவிடுவாள் என்பது ஐதீகம்வியாழன் நள்ளிரவு முதல் வெள்ளிநள்ளிரவு வரை விளக்கில் குபேர சங்கநிதி யட்சணி (குபேரனின் பிரதிநிதியானசங்கநிதியின் துணைவிகுடியேறுகிறாள்எனவே வெள்ளிக்கிழமை துலக்குவதைத்தவிர்த்துவியாழன் முன்னிரவில் துலக்குவது நல்லது.

தீபமேற்ற பயன்படுத்தும் எண்ணெயின் பலனைப் பொறுத்தும் பலன் கிடைக்கும்.நெய்செல்வவிருத்திநினைத்தது கைகூடும்நல்லெண்ணெய்ஆரோக்கியம் அதிகரிக்கும்தேங்காய் எண்ணெய்வசீகரம் கூடும்இலுப்பை எண்ணெய்சகல காரிய வெற்றிவிளக்கெண்ணெய்புகழ் தரும்ஐந்து கூட்டு எண்ணெய்அம்மன் அருள்

குத்துவிளக்கில் ஒரு முகம் ஏற்றினால் நினைத்த செயல் நடக்கும்.
இருமுகம் ஏற்றினால் குடும்பம் சிறக்கும்
மூன்று முகம் ஏற்றினால் புத்திர தோஷம் நீங்கும்
நான்கு முகம் ஏற்றினால் செல்வம் பெருகும்
ஐந்து முகம் ஏற்றினால்  சகல நன்மையும் உண்டாகும்.

வீட்டின் முன் கதவை திறந்து பின் கதவை சாத்திய பிறகே விளக்கேற்றவேண்டும்.

திருக்கார்த்திகை நாளில் திருவண்ணாமலையில் ஏற்றப்படும் தீபம் சிவ அம்சமாகும். யாராலும் அணுக முடியாத ஞான மலையான அண்ணாமலை தீபத்தினை தரிசித்தால் நமது பாவங்கள் அகலும்.

கார்த்திகை தீப திருநாள் அன்று விரதம் இருந்து வழிபட்டு மாலை வேளையில் வீட்டில் குத்துவிளக்கு ஏற்றி அதனுடன் அகல் விளக்குகள் அவரவர் வசதிப்படி ஏற்றிவைத்து  அவல்பொறி உருண்டை, மற்றும் நெல்பொறி உருண்டை, மற்றும் மாவிளக்கு ஏற்றி வைத்து  அண்ணாமலையாருக்கும், முருகப்பெருமானுக்கும் படைத்து தேங்காய் உடைத்து கற்பூர தீபம் ஏற்றி வழிபடுங்கள். பின்னர் விளக்குகளை வீடு முழுவதும் ஒளிரவிடுங்கள்.
  கார்த்திகை தீபத்தை தொடர்ந்த அடுத்தநாள் விஷ்ணுகார்த்திகை எனப்படும் அன்றும் விளக்கேற்றி வழிபட வேண்டும்.
மூன்றாவது நாள் குப்பைக் கார்த்திகை என்று சொல்வார்கள். இந்த மூன்று தினங்களிலும் விளக்கேற்றி வழிபடுதல் சிறப்பாகும். 

கார்த்திகை தீப திருநாளில் ஆலயங்களிலும்  நமது இல்லங்களிலும் அகல் விளக்கினால் நிறைய தீபங்கள் ஏற்றி இருள் விலகி ஒளி வீசச் செய்வோம்.

 இந்த காலத்தில் மண்பாண்டத் தொழில் நலிவடைந்து வருகின்றது. மண் அகல்கள் நிறைய வாங்கி விளக்கேற்றினால்அவர்கள் தொழில் நசிவடையாமல் இருக்க சிறு உதவி செய்தது போலாகும்.

   எங்கும் நிறைந்து இருக்கும் இறைவனை திருக்கார்த்திகை நாளில் தீபவடிவில் வழிபட்டு நம் அக இருள் போக்கி ஒளி வீசுவோமாக!

(மீள்பதிவு)
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
Related Posts Plugin for WordPress, Blogger...