சுகங்கள் நல்கும் கார்த்திகை சோமவார விரதம்!

சுகங்கள் நல்கும் கார்த்திகை சோமவார விரதம்!


 தமிழ் மாதங்களில் கார்த்திகை மாதம் சிறப்பு வாய்ந்தது. கார்த்திகையில் சுபகாரியங்கள் நடத்துவது சிறப்பாகும். விரதங்கள் கடைபிடிக்கவும் கார்த்திகை மாதம் உகந்ததாகும். சங்க இலக்கியங்களிலும் கார்த்திகை மாதம் சிறப்பித்துக் கூறப்படுகின்றது.

   கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமைகள் ஈஸ்வரனுக்கு மிகவும் உகந்த நாளாகும். சோகங்களைப் போக்கி சுகங்களை தரவல்லது கார்த்திகை சோமவார விரதமாகும்.

     கார்த்திகை மாத சுக்ல பட்ச அஷ்டமி திதியில் தோன்றியவர் சோமன் எனக்கூடிய சந்திரன். இவருக்கு தட்சன் தன்னுடைய இருபத்தேழு பெண்களையும் திருமணம் செய்து கொடுத்தார். அவர்களில் ரோகிணியிடம் மட்டும் சந்திரன் அதிக அன்பு பாராட்டினான்.

   மற்ற பெண்கள் தந்தையிடம் முறையிட்டார்கள். தட்சன் வெகுண்டு போய் சந்திரனை தேய்ந்து போகும் படி சாபம் இட்டார். தன்னுடைய ஒளி தேய்ந்து போவதை கண்டு வேதனையடைந்த சந்திரன் சிவபெருமானை சரணடைந்தார். சிவபெருமானும் சந்திரனை தன்னுடைய தலையில் சூடி பாதி நாள் வளர்ந்தும் பாதி நாள் தேய்ந்தும் இருக்கும்படி சாபத்தை மாற்றி அமைத்தார்.

    இவ்வாறு சந்திரன் சிவனை சரணடைந்த நாள் கார்த்திகை சோமவாரம் ஆகும். சந்திரனின் சோகம் போக்கி சுகமருளச்செய்த சிவபெருமானிடம் சந்திரன் இந்த சோமவார விரதத்தை கடைபிடிப்பவர் வாழ்வில் சுகங்கள் பெருகவேண்டும் என்று வேண்டினான். சிவபெருமானும் அவனது வேண்டுதலை ஏற்று சோமவார விரதம் அனுஷ்டிப்பவர்களுக்கு சுகங்களை நல்குவதாக வாக்களித்தார். இதுவே கார்த்திகை சோமவார விரதக் கதையாகும்.

   கார்த்திகை மாதத்தில் நான்கு அல்லது ஐந்து சோமவாரங்கள் வரும். முதல் சோமவார தினத்தில் விரதம் துவங்க வேண்டும். அதுமுதல் தம் விருப்ப படி அந்த மாதம் மட்டுமே அல்லது 16 வாரங்கள் அல்லது ஆண்டு முழுவதும் என விரதம் இருக்கலாம்.

சோமவார விரதம் மூலம் சிவனை வழிபடுவது மிகவும் எளிதானது. உத்தமமான விரதங்களுள் ஒன்று சோமவார விரதம் என்று வேத நூல்கள் கூறும்.   அதிலும் சிவனுக்குரிய சோமவாரத்தில் கார்த்திகை மாதச் சோமவாரம் மிகவும் உத்தமம்.
கார்த்திகை சோமவார வழிபாடு பல்லாண்டுகளாக சிவாலயங்களில் சிறப்பாக நடத்தப்படுகிறது. 

கார்த்திகை சோமவார தினத்தன்று அதிகாலையில் எழுந்து நீராடி அன்றாட அனுஷ்டானங்களை முடித்து சிவ பூஜை செய்ய வேண்டும். ஓரு வேதியர் தம்பதியினரை அழைத்துவந்து உபசாரங்கள் செய்து அவர்களுக்கு தங்களால் முயன்ற அளவு தானங்கள் அளித்து ஆசி பெற வேண்டும். அன்று பகல்பொழுது உண்ணாமல் இருந்து மாலையில் சிவதரிசனம் செய்து முன்னிரவில் சிறு உணவு உண்டு உபவாசம் முடிக்க வேண்டும்.

  இவ்வாறு செய்ய முடியாதவர்கள் அன்று நீராடி சிவ ஆலயங்களுக்கு சென்று அங்கு நடைபெறும் அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொண்டு தங்களால் இயன்ற அபிஷேகதிரவியங்களை சமர்பித்து வழிபடலாம்.

  கார்த்திகை மாதத்தில் சிவபெருமான் அக்னிப்பிழம்பாக இருப்பதாக புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. எனவே அவரை குளிர்விக்க சங்காபிஷேகம் செய்யப் படுகின்றது. 108 சங்குகளில் நீரினை நிரப்பி வாசனைத் திரவியங்களை அதில் போட்டு சந்தனம் முதலிய அலங்காரத் திரவியங்களை சமர்பித்து இறைவனை அதில் ஆகர்ஷணம் செய்து பூஜைகள் செய்து பின் அந்த நீரையும் கலச நீரையும் இறைவனுக்கு அபிஷேகம் செய்வது சங்காபிஷேகம் ஆகும்.

 ஒவ்வொருவர் வீட்டில் உள்ள நீரிலும் கார்த்திகை மாதத்தில் திருமால் குடியிருக்கிறார். சங்கு லஷ்மியின் அம்சமாகும். எனவே சங்காபிஷேகம் சிவ வைணவ ஒற்றுமையையும் பறை சாற்றுகின்றது. கார்த்திகை சோமவார  விரதத்தை கடைபிடிப்பவர்கள் எனக்கு விருப்பமானவர்கள். அவர்களை என்னோடு இணைத்துக் கொள்வேன் என்று சிவபெருமான் கூறுவதாக புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது.

கார்த்திகை சோமவார தினத்தில் சிவனையும் விஷ்ணுவையும் வில்வ இலைகளால் அர்சித்து வழிபாடு செய்தால் லஷ்மி கடாட்சம் உண்டாகும்.

கார்த்திகை மாதத்தில் விடியற்காலையிலும் அந்திப்பொழுதிலும் வாசல் தெளித்து கோலமிட்டு விளக்கேற்றி வழிபட துன்பங்கள் அகலும்.

பல்வேறு கிராமங்களில் பழமையான சிவாலயங்கள் வழிபாடு இன்றி புதர் மண்டிக் கிடக்கின்றது. கார்த்திகை மாத சோமவார தினத்தில் பழமையான சிவாலயங்களுக்குச் சென்று ஒருவேளை பூஜைக்கு உதவி விளக்கேற்றி வழிபடலாமே!

சிறப்பு வாய்ந்த கார்த்திகை சோமவார விரதம் அனுஷ்டித்து சிவதரிசனம் செய்து வாழ்வில் ஏற்றம் பெறுவோம்!


Comments

  1. சோகங்களைப் போக்கி சுகங்களை தரவல்ல கார்த்திகை சோமவார விரதம் குறித்த செய்திகள் அறிந்து ஆன்மீக சிந்தை அறிவுறப் பெற்றேன். நன்று! நன்றி நண்பரே!
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  2. எங்கள் வீட்டில் சிறுவயதில் இருந்தே எல்லோரும் கடைபிடித்து வருகிறோம். படங்கள் செய்திகள் எல்லாம் அருமை.

    ReplyDelete
  3. வணக்கம்
    ஐயா
    விரதம் பற்றி அற்புதமான விளக்கம் தந்தமைக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. விரதம் குறித்த அறியாத தகவல்கள் அறிந்தேன் நன்றி நண்பரே..

    ReplyDelete
  5. சோம வாரம் பற்றி அறியாதன அறிந்தேன். தாங்கள் கூறியவிதம் பக்தியை மேம்படுத்தியது. நன்றி.

    ReplyDelete
  6. அருமையான பகிர்வு... நன்றி...

    ReplyDelete
  7. நல்ல பகிர்வு,
    நன்றி.

    ReplyDelete
  8. நமேஸ்தே அஸ்து பகவன் விச்வேச்வராய மஹாதேவாய த்ர்யம்பகாய த்ரிபுராந்தகாய த்ரிகாக்னிகாலாய காலாக்னி ருத்ராய நீலகண்டாய ம்ருத்யுஞ்ஜயாய ஸர்வேச்வராய ஸதாசிவாய ஸ்ரீமந் மஹாதேவாய நம:
    கார்த்திகை சோமவாரம் சங்காபிஷேகம் பார்ப்பதே புண்யம்

    ReplyDelete
  9. சுகமான நடை. நன்கு எழுதியிருக்கிறீர்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2