கணக்கு!

கணக்கு!


காலை பத்துமணி வாக்கில் அந்த சிமெண்ட் கடையில் அத்தனை கூட்டமிருக்கும் என்று நான் நினைத்தும் பார்க்கவில்லை! கடை நண்பருடையதுதான். பணியில் இருந்து ஓய்வு பெற்றபின் சிறு கடையாக துவக்கி இரண்டே வருடத்தில்  கொஞ்சம் பெரிய கடையாக உயர்த்தி இருக்கிறார். நாலைந்து நபர்கள் கூட்டி பெருக்க ஓர் பெண்மணி என்று கடையில் பணியில் இருந்தார்கள்.

    நகரில் மட்டுமல்ல கிராமங்களில் கூட எழும்பும் அடுக்குமாடி வீடுகளின் அதிகரிப்பால் அவருக்கு நல்ல வருமானம்தான். “ என்ன ஜகதீசா! காலையிலேயே பிஸியா இருக்க போலிருக்கே! நான் போயிட்டு அப்புறமா வரட்டுமா?” என்றேன்.

   அதெல்லாம் ஒண்ணுமில்லை “ ராமநாதா! இதோ வியாபாரம் முடிஞ்சதும். காலை வேளையிலே கட்டுமான பணிக்கு வருவாங்க இல்லை! அதனால கொஞ்சம் சூடுபிடிச்சிருக்கும் இன்னும் ஒரு அரைமணி நேரம் அப்புறம் சும்மாத்தான் இருப்பேன்!”

      அங்கிருந்த நாற்காலி ஒன்றை இழுத்துப் போட்டு அமர்ந்தேன். சிமெண்ட் மூட்டைகளை குட்டியானை எனப்படும் வண்டிகளில் ஏற்றி அனுப்பிக் கொண்டிருந்தார்கள் பணியாளர்கள். ஜகதீசன் கணக்கு வழக்குகளில் கில்லாடி! கடன் கொடுத்தாலும் அதை திரும்ப பெறுவதில் ஓர் கண்டிப்பு இருக்கும். விற்கும் பொருளும் தரமானது. பணியாளர்களுக்கும் நல்ல சம்பளம் தந்து இருந்ததால் விசுவாசமாக உழைத்தனர்.

     நாமும் ஓய்வு பெற்று வெட்டியாக பொழுதை போக்கிக் கொண்டிருக்கிறோம்!  கொஞ்சமாவது யோசித்து எதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. கடையில் கூட்டம் குறைந்தது. லாரிகளில் இருந்து சிமெண்ட் மூட்டைகளை இறக்கிய லோட் மேன் ஒருவர் வந்து  “முதலாளி…!  மூட்டையெல்லாம் இறக்கியாச்சு!  கூலி கொடுத்தீங்கன்னா…!”

       “ஏம்பா! நீதான் ஏற்கனவே நிறைய முன்பணம் வாங்கிட்டிருக்கியே! இப்ப ஒண்ணும் இல்லே ..!”

      ” தீபாளி வருது முதலாளி! முன்பணம் கொடுத்ததை அப்புறம் பிடிச்சுக்குங்க! இப்ப கொடுத்துருங்க..! “

      ” எனக்கு மட்டும் தீவாளி இல்லையா? இப்படியே எல்லோருக்கும் கொடுத்துட்டு இருந்தா நான் கடையை இழுத்து மூடிட்டு போவ வேண்டியதுதான். வேணும்னா ஒரு ஐம்பது ரூபா வாங்கிட்டு இடத்தை காலி பண்ணு…!”

       “அவன் சரிங்க முதலாளி.. அப்புறம் உங்க இஷ்டம்” என்றான் தலையை சொரிந்துகொண்டு..   “சரிசரி! இந்தா நூறு… ஏற்கனவே ஆயிரம் வாங்கி இருக்கே.. ஞாபகம் இருக்கா…”

      “இருக்கு முதலாளி! ”அவன் கிளம்பினான்.

     கொஞ்ச நேரம் கழித்து  கடையை கூட்டி பெருக்கும் அஞ்சலை வந்து நின்றாள்.  “ஐயா…! தீபாவளி பண்டிகை! பசங்களுக்கு துணி மணி எடுக்கணும்.. ஸ்கூல் பீஸ் வேற கட்டணும் முன்பணமா ஏதாவது கொடுத்தா நல்லா இருக்கும் “ என்றாள்.

      “சரி முழு சம்பளத்தையும் அட்வான்ஸா கொடுத்திடறேன்! உன் பசங்களுக்கு துணி மணி எடுத்துக்க தனியா ஓர் ஆயிரம் கொடுத்திடறேன் போதுமா?”

      “ நீங்க நல்லா இருப்பீங்க முதலாளி!” அந்த பெண் கை கூப்பினாள்.
 அவள் சென்றதும் கேட்டேன்.  “ஏண்டா ஜகதீசா! கொஞ்ச நேரம் முன்னாடி அந்த லோடு மேனுக்கு ஆயிரம் கணக்கு பார்த்தே… இந்த வேலைக்கார பெண்ணுக்கு உடனே தூக்கிக் கொடுக்கிறே? “

    “இதுல ஒரு கணக்கு இருக்குடா? உனக்கு புரியாது…!”

   “பொண்ணுன்றதாலே இளகிப் போயிருச்சா…!” குதர்க்கமாய் கேட்டேன்.

   “ச்சீச்சீ! வாயை கழுவுடா! அந்த லோடுமேன் மொடாக் குடியன்! தீபாவளிக்குன்னு கேட்டு பணத்தை முழுசும் வாங்கி குடிச்சுருவான்! வீட்டுக்கு பைசா தரமாட்டான். அதனால பணத்தை முழுசா தரலை! மொத்தமா தராவிட்டா சத்தம் போடுவான் வேற கடைக்கு போவான். அதனால அவன் குடிக்கிறதுக்கு மட்டும் பணம் கொடுத்தேன். மீதி பணம் அவன் வீட்டுக்கு போயிரும்.”

   ”இந்த பொண்ணு அப்படி இல்லே! முழு சம்பளம் வாங்கிட்டா இன்னும் கவனமா வேலை செய்வா? தான் படிக்காவிட்டாலும் தன் பிள்ளையை படிக்க வைக்கிறா? அதுக்கு ஏதோ என்னால முடிஞ்ச உதவி! பணம் வாங்கிட்டோமேன்னு நிக்காம வேலைக்கு வருவா ஏமாத்தமாட்டா? இங்க பணம் குடும்பத்துக்கு போவுது! அதனாலே கொடுக்கிறேன்! அங்க குடிக்கு போவுது! அதனால தடுக்கறேன்! அவ்வளவுதான்! ”

   அவரது தெளிவான பதிலில் பிரமித்து நின்றேன் நான்.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி! 

Comments

  1. ஜகதீசனின் வார்த்தைகளில் எத்தனை உண்மை அருமை நண்பரே.....

    ReplyDelete
  2. அருமை நண்பரே! குடும்பத்துக்கு போகுது! குடிக்க போகுது! சரியான வார்த்தை ஜாலம்! நன்றி!

    ReplyDelete
  3. கதை அருமை. உண்மை நிலையும் அப்படித்தான் இருக்கிறது

    ReplyDelete
  4. சொற்றொடர்களை மாறி மாறிப் பயன்படுத்திய விதம் அருமை.

    ReplyDelete
    Replies
    1. மகேசன் போடும் கணக்கு மகா கணக்கு என்பார்கள்
      கதையின் நாயகர் ஜகதீசன் போட்ட கணக்கு
      படி அளக்கும் ஈசனைக் காட்டிலும் ஒரு படி உயரந்த கணக்கு!
      சிறந்த கணக்கு, வாழ்த்துகள் நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete
  5. ஆஹா ... கணக்கு என்ற தலைப்பை பார்த்ததும் நம்ம தொழிலை பற்றியா ரகசியம் ஏதோ சொல்லுவீங்கோன்னு வந்தேன். ஆனால் இங்கே எல்லாருக்கும் அவசியமான ஒன்னை அட்டகாசமா சொன்னீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. கணக்குப் போட்ட முதலாளிக்கு ஒரு சபாஷ்

    வாழ்த்துக்கள் சகோதரரே!

    ReplyDelete
  7. அருமை சுரேஷ் ! முதலாளி செம கணக்குப் போடுறாரு...நல்ல கணக்கு...

    ReplyDelete
  8. ஒவ்வொரு வார்த்தையும் அனுபவம்
    நன்றி நண்பரே

    ReplyDelete
  9. சரியான முடிவு தான் எடுத்து இருக்கிறார் முதலாளி....

    ReplyDelete
  10. அருமையான கதை. முதலாளியின் அனுபவ அறிவு மெய் சிலிர்க்க வைத்தது.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!