விபத்து!


விபத்து!

    அன்று காலையே சிறப்பாக துவங்கவில்லை! எழுந்தது சீக்கிரம் என்றாலும் பணிகள் துவங்க தாமதம் ஆகிவிட்டது. இரவு சரியான தூக்கமின்மை! எப்படியோ ஒரு வழியாக நத்தம் கோயில் பூஜைகளை முடித்துவிட்டு வெளியூர் கோயில் பூஜைக்கு கிளம்புகையில் மணி காலை 9.30 ஆகிவிட்டது.

   புரட்டாசி மாத பொன்னுருக காயும் சூரியன் பூமியை உருக்க நானும் வியர்வைத்துளிகளில் நனைய ஆரம்பித்து புறப்பட்டேன். எங்கள் ஊர் சாலையில் இருந்த இரண்டு மூன்று கோயில்களில் பூஜை முடித்து பஞ்செட்டி பிரதான சாலையில் செல்கையில் ஒரே வாகன நெரிசல்! முன்னே செல்லும் வாகனங்கள் மிக மெதுவாக செல்ல மணி பத்தரையைக் கடந்து இருக்க லேசான எரிச்சல். தச்சூரில் மேம்பாலம் கட்டியிருந்தும் இன்னும் திறக்கவில்லை! இருபக்க சர்வீஸ் சாலையில் வலப்புற சாலை மிக மோசமானது.

     வேலம்மாள் பொறியியல் கல்லூரி அருகே மரணப் படுகுழிகள்! ஆளை அச்சுறுத்தும் புதிதாக அந்த பக்கம் வருபவர்கள் மரணத்தின் வாசலை தொட்டுவிட்டு செல்வார்கள். எப்போது மழை பெய்தாலும் அந்த குழியில் விழுந்து எழுந்து சென்றால் காசிக்கு போய்வந்த புண்ணியம்! நெடுஞ்சாலைத்துறையோ அதை பராமரிக்கும் பொறுப்பில் உள்ள எல். அன் . டி நிறுவனமோ ஒன்றும் கண்டுகொள்ளாது. ராத்திரியில் சிறு தூறல் போட்டால் கூட அந்த சாலையில் முழங்கால் அளவு தண்ணீர் சேர்ந்துவிடும் வடிகால்கள் அடைந்து போயிருக்க சாலை குழிகாடாக மாறிவிடும்.

    பஞ்செட்டியில் இருந்து தச்சூர் செல்ல இடது புற சர்வீஸ் சாலையை பயன்படுத்துகையில் எதிர்ப்புறத்தில் வாகனங்கள் வந்து கொண்டிருந்தது அதனால் வாகனத்தை வேகமாக இயக்க முடியவில்லை! மெதுவாக ஊர்ந்து கொண்டு எதிர்புறத்தில் வந்த வாகனங்களை சபித்தபடி சென்று கொண்டிருந்தேன். தச்சூர் கூட்டுச்சாலையில் மேம்பாலத்தின் உள்ளே நுழைகையில்தான் நெரிசலின் காரணம் புரிந்தது. வலது புறசாலையில் ஏதோ வாகனம் பழுதாகி நின்றுவிட ஏகப்பட்ட நெரிசல் காவல் துறையினர் வண்டிகளை மறுபுறம் திருப்பி விட ஏகப்பட்ட நெரிசல். 

   திரும்பி வருவதற்குள் சரியாகி விடும்! என்று சமாதானித்து பொன்னேரிசாலையில் பயணிக்கையில் அங்குள்ள பெட்ரோல் பங்க் அருகே ஒரு டாரஸ் லாரியின் அடியில் பைக் சரண் அடைந்து இருந்தது. கூட்டம் கூடி இருந்தது. அடிபட்டது யாருக்கு என்று தெரியவில்லை! இல்லை அடிபட்டவரை மருத்துவ மணைக்கு அனுப்பி விட்டார்களா என்று புரியவில்லை! அங்கும் சாலை படுகுழியாக இருக்கும். யாருக்கு என்ன ஆயிற்றோ என்று யோசித்தபடி சென்று தச்சூர் சிவாலயத்தில் பூஜை செய்துவிட்டு பிள்ளையார் கோயிலிலும் பூஜை முடிக்கையில் மணி பதினொன்றே கால் ஆகிவிட்டது.

    அங்கிருந்து தச்சூர் கூட்டுச்சாலை வருகையில் நெரிசல் குறையவில்லை! வலது புற சாலை வழியே பஞ்செட்டி செல்வது இயலாத காரியமாக தோன்றியது. வாகனங்களும் எதிர்புற சாலைவழியே சென்று கொண்டிருக்க முட்டாள் தனமான காரியம் செய்தேன். ஆப்போசிட் டைரக்‌ஷனில் சென்றுவிட்டேன். எதிரே வாகன நெரிசல் எப்படியோ கடந்து வாகனங்கள் குறைந்ததும் அந்த சாலையின் வலதுபுறமாக மெதுவாக சென்றேன். சுபலஷ்மி காம்ப்ளக்ஸ் அருகே குறுக்கே ஓர் டிவிஎஸ் எக்செல்லில் ஒரு வயதானவர் வருவதை பார்த்து அவர் மீது மோதுவதை தவிர்க்க ப்ரேக் அழுத்தினேன். சாலையில் மணல் பதற்றத்தில் முன் பிரேக்கையும் பிடித்துவிட்டேன் போல வண்டி சரிந்தது. ‘அம்மா… என்று கத்தியபடியே வண்டியிலிருந்து கீழே விழுந்தேன். முகம் தரையில் பதிய சமாளித்து எழுந்தேன். 

   என்னைவிட எதிரில் வந்தவர் பதற்றத்தில் இருந்தார். அவர் தூக்கும் முன் நானே எழுந்துவிட்டேன். நடுசாலையில் விழுந்திருந்தேன்! நல்ல வேளையாக வாகனங்கள் எதுவும் பின்னாலோ முன்னோ வரவில்லை. கைகள் இரண்டிலும் முட்டியிலும் சிராய்த்திருக்க தாடை கொஞ்சம் கிழித்துக் கொள்ள முன் பல் சிறிது உடைந்து உதட்டில் குத்த துணியெங்கும் ரத்தம்!

       டிவிஎஸ் பிப்டி காரர் என் வண்டியை தூக்கி ஓரம் கட்டினார். காம்ப்ளக்ஸில் இருந்த கடையில் கொஞ்சம் காட்டன் வேஸ்ட் கொடுக்க அதை தாடையில் ஒற்றி இரத்தம் நிறுத்த சொன்னார். அவர்களிடம் தண்ணீர் கேட்டு வாங்கி முகம் கழுவி குடிக்கச் சொன்னார். தாடையில் இரத்தம் ஒழுகுவது நிற்கவில்லை!

        அப்படியே ஓர் ஐந்து நிமிடம் கழிய, ஹாஸ்பிடல் போலாம் போய் ஓர் டிடி இஞ்செக்‌ஷன் பண்ணிடலாம்! நான் கூட்டிப் போறேன் என்றார்.
    நான் வேண்டாம் என்று மறுத்தேன். கடையில் இருந்த தெரிந்த பெண்மணியும் டிவிஎஸ் காரரும் இல்லே இஞ்செக்‌ஷன் பண்ணிக்கிட்டா நல்லது! என்றார்கள். இறுதியில் அவர் டிவிஎஸில் மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றார். தச்சூரில் உள்ள ஸ்விப்ட் கிளினிக்கில்  காயத்திற்கு மருந்து போட்டு டிடி இஞ்செக்‌ஷன் போட்டார்கள். தையல் தேவையில்லை டிரெஸ்சிங்க் பண்ணினால் போதும் என்று சொல்லிவிட்டார்கள். 

     இதற்குள் டிவிஎஸ் காரரே கட்டணத்தை செலுத்திவிட்டார். நான் எவ்வளவு சொல்லியும் கட்டணம் வாங்க மறுத்துவிட்டார். மீண்டும் அந்த கடையருகே கொண்டு வந்து டிராப் செய்தார். வீட்டில் விடுவதாக சொன்னார். நான் வேண்டாம் நானே மெதுவாக போய் கொள்கிறேன்! என்று சொல்லிவிட்டேன்.

   மதுரைக் காரராம்! வேலம்மாள் பள்ளியில் அவர் மகன் படிக்கிறாராம். மகனுக்கு புரொஜெக்ட் விஷயமாக ஏதோ மோட்டார் வாங்க வந்தவர் என் வண்டிக்கு குறுக்கே வர நான் விழுந்து அவருக்கும் அசகவுர்யம் ஆகிவிட்டது. தலைக்கவசம் ரெகுலராக அணிந்திருந்த நான் அன்று அணியாமல் போனதும், ஆப்போசிட் டைரக்‌ஷனில் வந்ததும் ஆபத்தானதாக ஆகிவிட்டது.

      தலை தப்பியது தம்பிரான் புண்ணியமாக இதோ உங்களுக்கு இந்த கதையை கைவலியோடு டைப் செய்கிறேன்! 

   அந்த டிவிஎஸ் காரர் மீது தவறில்லை! அப்படியே சென்றுவிட்டிருக்கலாம்! இருந்தும் எனக்கு முதலுதவி செய்து மருத்துவமனையில் சேர்த்து கட்டுப்போட்டு கட்டணமும் அவரே கொடுத்தார். இறுதியில் அவர் பெயரைக் கூட பதட்டத்தில் கேட்க மறந்துவிட்டேன். நன்றி சொல்லி விடைபெற்றேன்.அந்த நல்ல மனிதரிடம். இப்போதும் நன்றி சொல்லுகின்றேன்!

   நான் கீழே விழுந்தது பகல் பதினொன்றரை மணி வாக்கில்! அதே சமயம் என் அப்பாவின் மீது யாரோ குரங்கு வடிவில் அமர்வது போல தோன்றியிருக்கிறது. உடனே என் நினைவும் வந்திருக்கிறது. வீட்டில் கொஞ்சம் பயந்துவிட்டார்கள். நேற்று முழுவதும் பயங்கர வலி! இன்று பரவாயில்லை!

     உங்களோடு இன்னும் பழக பகவான் விட்டு வைத்திருக்கிறான்! அவருக்கும் நன்றி!


Comments

  1. இனியெனும் கவனமாக இருங்கள் நண்பரே இவ்வகையில் உதவும் மனிதர்கள் இன்னும் பூமியில் இருக்கத்தான் செய்கிறார்கள்

    ReplyDelete
  2. கவனமாக இருங்கள் தம்பி! வண்டி ஓட்டுகையில் மற்றச் சிந்தனைகளை ஒதுக்கிவிட்டு வண்டி ஓட்டுவதில் மட்டும் கவனம் செலுத்தவும். இறைவன் அருளால் தப்பினீர்கள். அந்த நிமிடத்துப் படபடப்பை உணர முடிகிறது. :(

    ReplyDelete
  3. வழக்கமான கதை என்றல்லவா நினைத்தேன் ?உதவிய அந்த மதுரைக் காரரின் விலாசத்தை அறிந்து ,சொல்லி இருந்தால் ,நேரில் சென்று நானும் வாழ்த்தி இருப்பேனே !

    ReplyDelete
  4. வாகனங்கள் ஓட்டுகையில்... அதுவும் சாலை சரியில்லாத நிலையில் எவ்வளவு கவனமாக இருக்கவேண்டும். தலைக்கவசத்தின் அவசியம் தெரிந்திருந்தும் தவிர்த்திருப்பது நல்லதில்லையே... அனுபவம் தந்த பாடத்துக்கான விலை அதிகம் என்றாலும் வாசிப்போர்க்கும் எச்சரிக்கை தரும் ஒரு பதிவு. உடல்நலனைக் கவனித்துக்கொள்ளுங்கள் சுரேஷ்.

    ReplyDelete
  5. இவர் போன்ற நல்ல உள்ளங்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்
    ஆனாலும் நாம் கவனமுடன் செல்ல வேண்டிய காலகட்டம் இது நண்பரே.
    விரைவில் முழு நலம் பெறுவீர்கள்

    ReplyDelete
  6. வணக்கம் நண்பரே! எப்பவும் போல சுவராஸ்சியமாக படித்துவந்தேன்..முடிவில்.,..
    விரைவில் குணமாவிர்கள்! நன்றி

    ReplyDelete
  7. அட தலைகவசம் அணியாமலா சென்றீர்கள்.ம்ம். இனிமேல் கவனமா இருங்கள்.நல்ல மனிதர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள் இல்லையா. விரைவில் நலம் பெற வேண்டுகிறேன். நன்றி !

    ReplyDelete
  8. விபத்து என்றாலே எதிர்பாராததுதான். இறைவன் அருளால் பெரிதாக ஒன்றும் நேரவில்லை என்னும்போது ஒரு வகையில் ஆறுதல்தான். உடல்நலம் பேணவும்.

    ReplyDelete
  9. கதை என்று நினைத்து தொடந்தேன்,,,,
    உடல் நலன் பாத்துக்கொள்ளுங்கள், விரைவில் குணம் அடையவேண்டுகிறேன்.இவர் போன்றோரும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
    கவனமாக இருங்கள். தலைக்கவசம் அணிந்துச் செல்லுங்கள்.

    ReplyDelete
  10. பொதுவாகவே வாகனங்களில் செல்லும் நம் எண்ண ஓட்டங்கள் சாலையில் இருப்பதில்லை.
    கண் பார்த்துக் கொண்டிருந்தாலும் மனதில் அசையிடும் நிகழ்வுகள் அதிமுக்கிய தருணங்களில் ஏமாற்றி விடுகிறது.
    உங்கள் எதிரில் வந்தவர் உருவில் சற்று மனிதாபிமானம் மிச்சமிருக்கிறது.

    உடல்நலனைக் கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்.

    நன்றி.

    ReplyDelete
  11. வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. ஜாக்கிரதையாக இருங்கள் சுரேஷ்.

    அந்த நல்ல மனிதருக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  12. சுரேஷ் தயவாய் கவனமாக இருங்கள்....இப்போது எப்படி உள்ளீர்கள்...உடல் நிலை பரவாயில்லையா? இனி இது போல்நிகழாமல் பார்த்ஹ்டுக் கொள்ளுங்கள். குழந்தைகள் வேறு சிறியவர்கள் இல்லையா...

    ஏதோ கொஞ்சமேனும் மனிதாபிமானம் இருக்கின்றது...இன்னும்...நல்ல விஷயம்...அந்த மனிதருக்கு எங்கள் சார்பிலும் வாழ்த்துகள்...
    கவனமாக இருங்கள்..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!