Wednesday, September 30, 2015

இளைய தலைமுறை!

இளைய தலைமுறை!

அந்த பேருந்து நிறுத்தத்தின் முன் கல்லூரி மாணவ மாணவியரின் கூட்டம் நிரம்பிவழிந்தது.பக்கத்து பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணி புரியும் எனக்கு அந்த மாணவ கும்பலின் நடத்தை அறுவெறுப்பை உண்டாக்கியது. கும்பலாக நின்று ஆண் பெண் வித்தியாசம் பாராமல் அரட்டை அடிப்பதும் சிரிப்பதும் தொட்டு பேசுவதும் அந்த பஸ் ஸ்டாண்டே அவர்களைத்தான் பார்த்துக்கொண்டிருந்தது.
 
       சக மாணவர்களை வாடா போடா என்று விளித்து பேசி அவர்களை கிண்டலடிப்பதும் அவர்கள் சொன்ன பதிலுக்கு சிரிப்பதுமான அவர்களின் விளையாட்டு எனக்கு எரிச்சலாக இருந்தது. " ச்சே என்ன பெண்கள் இவர்கள்? இது இருபதாம் நூற்றாண்டுதான். புதுமைபெண்களாக இருக்க வேண்டியதுதான் ஆனால் இப்படியா நடு ரோட்டில் நாலைந்து ஆண்களுடன் கும்மாளம் அடிப்பது இவர்களெல்லாம் படித்து நாட்டை திருத்தப் போகிறார்களா என்ன? " மனதிற்குள் முணுமுணுத்துக்கொண்டேன். 
 
 நல்ல வேளையாக பஸ் வரவே முண்டி அடித்து ஏறினோம் நல்ல கூட்டம் பஸ் நிரம்பி வழிந்தது.
 
      இதை பயன்படுத்தி ரோமியோ ஒருவன் அந்த மாணவிகளின் இடையே நுழைந்து உரசவும் விலகி முறைத்தனர் அவர்கள். சற்று பின் வாங்கிய அவன் சற்று நேரத்தில் மாணவியின் இடையை கிள்ள திரும்பி பளாரென அறைந்தாள் அப்பெண். சக மாணவர்களிடம் சகஜமாக தொட்டு பேசிப்பழகிய அவள் இதை கண்டும் காணாமல் விட்டு விடுவாள் என்றுதான் நினைத்தேன். ஆனால்...
 
            "டேய் பொறுக்கி நீ அக்கா தங்கச்சி கூட பொறக்கலியா நாயே! "என்று அவன் சட்டைக்காலரை பிடித்து ஒர் அறை விட அவன் அவமானத்தால் குன்றி பஸ்ஸை விட்டு இறங்கி ஓடினான்.
 
     நான் அந்த பெண்ணிடம் கேட்டேவிட்டேன்  "ஏம்மா பஸ் ஸ்டேண்டில நாலு ஆம்பள பசங்க கூட சிரிச்சு பேசி தொட்டு விளையாடின நீ பஸ்ல இந்த மாதிரி ந்டந்துகிட்டது என்னால புரிஞ்சுக்கவே முடியலயே "

          " அவங்க என் கிளாஸ்மேட்ஸ் தப்பான எண்ணத்தோட பழகமாட்டாங்க தப்பாவும் நடந்துக்கவும் மாட்டாங்க என் மேல என்ன விட அவங்களுக்குத்தான் அக்கறை அதிகம். நான் அவனைத்தொட்டாலும் அவன் என்னை தொட்டாலும் அதுல அசிங்கம் இருக்காது நட்புதான் இருக்கும். ஆனா இந்த தெரு பொருக்கி கேவலமான எண்ணத்தோட என்னை உரசினான் அதான் பத்த வைச்சிட்டேன்."
 
      அவள் தெளிவாக கூறிவிட்டு கிளம்ப இந்த காலத்து பிள்ளைகள் ரொம்பத்தெளிவாக இருக்கிறார்கள் என்பது எனக்கு உறைத்தது.

Monday, September 28, 2015

தளிர் லிமெரிக் கவிதைகள்!

பூத்துச் சிரித்த குளங்கள்!
புதிதாய் உருவாகின குடியிருப்புக்கள்!
புதைந்து போயின நீராதாரங்கள்!

வாகன ஓட்டிகளுக்கு வேண்டும் தலைக்கவசம்
வந்தது ஓர் அவசரச் சட்டம்!
மக்களுக்கு வரணும் விழிப்புணர்வு அவசியம்!

சபையில பாடறாங்க புகழு!
சத்தமே இல்லாம ஒதுங்கறாங்க எதிர்கட்சி!
நித்தமே இதுதான் நிகழ்வு!

ஊருக்கு நாலு மதுக்கடை!
பேருக்கும் கிடையாதாம் மதுவிலக்கு!
குடிப்பவர்கள் இருக்கையிலே விற்க ஏது தடை?

நாடெல்லாம் சுத்தறாரு  பிரதமரு!
நடக்காமல் முடங்குது நாடாளுமன்றம்!
நம்மோட வரிபணத்தை முழுங்க இவங்கயாரு?

 கிராமங்களை இணைத்தன சாலைகள்!
 வயல்களில் விளைந்தன  நோட்டுக்கள்!
 உயர்ந்தன உணவுப்பொருட்களின் விலைகள்!

டெஸ்டுக்கு கில்லி கோலி!
தோனிக்கு ஆனாரு வில்லி!
பதவி ஆடுது கதகளி!

ஊருக்கு ஓர் கல்வித் தந்தை!
 உபயத்துலே ஓங்கிவளர்கின்றன கல்லூரிகள்!
உயரத்துலே நிக்குது கல்வி சந்தை!

நித்தம் நித்தம் பெருகுது வாகனங்கள்!
நெரிசலில் சிக்குது சாலைகள்!
நினைத்து பார்க்க வேணும் பொதுஜனங்கள்!

தொலைக்காட்சி எல்லாமே மெகா தொடர்கள்
தொடர்ந்து வீணாப் போவுது நேரங்கள்!
விட்டொழித்தால் சீர்படுமே பல குடும்பங்கள்!

   குளங்களிலெல்லாம் கட்டினார்கள் வீடு!
   குடியிருந்த நீரெல்லாம் மறைந்து போனது!
   குடிநீருக்கு  வந்துவிட்டது தட்டுப்பாடு!

   ஓடி ஓடி செய்கின்றாரு அரசியலு!
   அள்ளுகின்ற கூட்டமெல்லாம் ஓட்டாகணும்!
    ஆடியிலே வரப்போவுதாம் தேர்தலு!

   காதலுக்கு தடையானது சாதி!
   கழுத்தறுபட்டு மாய்ந்தது பேத்தி!
   அறுபட்டுப் போனது சமூக நீதி!

   உடுப்பெல்லாம் இன்று மாறிப்போச்சு!
   எடுத்து வெளியிடலாமோ ஆபாசக் காட்சி!
   படுத்துப் போனது பத்திரிக்கை மூச்சு!

    அள்ளினார்கள் மணலை ஜோரா!
    துள்ளி ஓடவில்லை தண்ணி  ஆறா!
   கொள்ளி வச்சாச்சு விவசாயிக்கு நேரா!

   மரங்களில் கூடி சப்தமிட்ட பறவைகள்!
   நொடியில் கலைந்து பறந்தன!
   வேடனின் துப்பாக்கியில் வெடித்தன ரவைகள்!
   
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் நிரப்பி ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Sunday, September 27, 2015

சங்கரன் பெற்ற புண்கள்! தித்திக்கும் தமிழ் பகுதி 21


தித்திக்கும் தமிழ்! பகுதி 21


   துன்பங்கள் துரத்தும் போது, கவலைகள் சூழும் போது ஓர் மன ஆறுதலைத் தேடி நண்பர்களிடம் உறவினர்களிடம் போய் கூறி ஆறுதல் அடைவது வழக்கம். சில சமயம் கோயில்களில் போய் ஆண்டவரிடம் நமது குறைகளை சொல்லி , ஏண்டாப்பா சாமி! இப்படி கஷ்டப்படுத்துகிறாயே! கொஞ்சம் காது கொடுத்து என் குறைகளை கேள்! என் கஷ்டங்களை போக்கு என்று வேண்டுவார்கள்.

   இன்றைய நவீன யுகத்தில் துன்பங்களுக்கு பரிகாரங்கள் செய்கிறேன் என்று பல சாமியார்கள் தோன்றி காசு பிடுங்கி சம்பாதிக்கின்றனர் அது வேறு விஷயம். நமக்கு ஓர் துயரம், கஷ்டம் ஏற்படும் போது அதை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்கையில் ஓர் ஆறுதல் அடைகின்றது. நம்மை மீறிய சக்தி ஒன்று இருப்பதை உணர்ந்து அதை இறைவனாக வணங்குகின்றோம். அந்த இறைவனிடத்திலே ஒன்றி தமது குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டி நிற்கின்றோம். அப்போது நமது துன்பங்கள் அந்த பக்தியிலே கரைந்து போகின்றது.

   இதோ இந்த புலவரும் தமக்கு நேர்ந்த துன்பங்களை இறைவன் ஈசனிடம் முறையிட்டாராம். ஈசனோ  புலவரின் குறைகளை களையாமல் அவரின் குறைகளை பட்டியலிட்டாராம். தெய்வத்திடம் சொல்லி அழப்போனால் அங்கு தெய்வமே இப்படி செய்தால் புலவர் பாவம் என்ன செய்வார்?


  சங்கரன் பெற்ற புண்கள்!

  வஞ்சகர்பால் நடந்தலைந்த காலிற் புண்ணும்
     வாசறொரு முட்டுண்ட தலையிற் புண்ணுஞ்
  செஞ்சொல்லை நினைந்துருகு நெஞ்சிற் புண்ணுந்
   தீருமென்றே சங்கரன்பாற் சேர்ந்தே னப்பா
  கொஞ்சமல்ல பிரம்படியின் புண்ணும் வேடன்
    கொடுங்காலா லுதைத்தபுண்ணுங்க் கோபமாக    
  பஞ்சவரி லொருவன்வில்லா லடித்த புண்ணும்
     பாரென்றேகாட்டி நின்றான் பரமன் றானே.

விளக்கம்: வஞ்சனை உள்ளம் உடையவரிடத்து சென்று அலைந்ததால் நடந்து நடந்து காலில் உண்டான புண்ணையும், ஒவ்வொரு வீட்டின் வாசலில் சென்று முட்டிக்கொண்டதால் தலையில் அடிபட்ட புண்ணையும் என்னுடைய நல்ல பாடல்களை கேட்டு ரசிப்பார் இல்லையே என்று ஏக்கத்தால் நெஞ்சில் உண்டான புண்ணையும் நீக்குவீராக என்று வேண்டிக்கொள்ள சிவபெருமானிடம் சென்றேன்.

   ஆனால் அப்பெருமானோ, பாண்டியன் பிரம்பால் அடித்ததால் உண்ட புண் சிறியது அல்ல என்று அதையும், வேடனான கண்ணப்பன் தன் செருப்பணிந்த காலினால் மிதித்த போது உண்டான புண்ணையும் மிகுந்த சினத்துடன் பாண்டவரில் ஒருவனான அர்ஜுனன் வில்லால் அடித்த புண்ணையும் பார்! இவை உன்னுடைய புண்களைவிட பெரியது என்று காட்டினான். என்கிறார்.

   புலவர் நகைச்சுவைக்காக பாடினாலும் இதன் உட்கருத்து என்ன?
துன்பங்களை தாங்கிக் கொள்ளும் பக்குவம் நமக்கு வேண்டும் என்பதுதான் உட்கருத்து. நமக்கு துன்பம் என்று புலம்புகிறோம்! நம்மை விட துன்பப்படுவோர் ஏராளம். அவர்களோடு ஒப்பிடுகையில் நம் துன்பம் கடுகளவாகி போய்விடும். இன்பங்கள் மட்டும் நிறைந்ததல்ல வாழ்க்கை! துன்பங்களும் கலந்தது. இரவும் பகலும் சேர்ந்ததுதான் ஓர் நாள். அதுபோல இன்பமும், துன்பமும் கலந்ததே வாழ்க்கை! துன்பங்களை பார்த்து துவளாமல் எதிர் நீச்சல் போட கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார் புலவர்.

    இந்த பாடலை பாடியவர் இராமச்சந்திர கவிராயர்.
 என்னவொரு சிறப்பான பாடல்! 

மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் நல்லதொரு பாடலுடன் சந்திப்போம்! உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

விபத்து!


விபத்து!

    அன்று காலையே சிறப்பாக துவங்கவில்லை! எழுந்தது சீக்கிரம் என்றாலும் பணிகள் துவங்க தாமதம் ஆகிவிட்டது. இரவு சரியான தூக்கமின்மை! எப்படியோ ஒரு வழியாக நத்தம் கோயில் பூஜைகளை முடித்துவிட்டு வெளியூர் கோயில் பூஜைக்கு கிளம்புகையில் மணி காலை 9.30 ஆகிவிட்டது.

   புரட்டாசி மாத பொன்னுருக காயும் சூரியன் பூமியை உருக்க நானும் வியர்வைத்துளிகளில் நனைய ஆரம்பித்து புறப்பட்டேன். எங்கள் ஊர் சாலையில் இருந்த இரண்டு மூன்று கோயில்களில் பூஜை முடித்து பஞ்செட்டி பிரதான சாலையில் செல்கையில் ஒரே வாகன நெரிசல்! முன்னே செல்லும் வாகனங்கள் மிக மெதுவாக செல்ல மணி பத்தரையைக் கடந்து இருக்க லேசான எரிச்சல். தச்சூரில் மேம்பாலம் கட்டியிருந்தும் இன்னும் திறக்கவில்லை! இருபக்க சர்வீஸ் சாலையில் வலப்புற சாலை மிக மோசமானது.

     வேலம்மாள் பொறியியல் கல்லூரி அருகே மரணப் படுகுழிகள்! ஆளை அச்சுறுத்தும் புதிதாக அந்த பக்கம் வருபவர்கள் மரணத்தின் வாசலை தொட்டுவிட்டு செல்வார்கள். எப்போது மழை பெய்தாலும் அந்த குழியில் விழுந்து எழுந்து சென்றால் காசிக்கு போய்வந்த புண்ணியம்! நெடுஞ்சாலைத்துறையோ அதை பராமரிக்கும் பொறுப்பில் உள்ள எல். அன் . டி நிறுவனமோ ஒன்றும் கண்டுகொள்ளாது. ராத்திரியில் சிறு தூறல் போட்டால் கூட அந்த சாலையில் முழங்கால் அளவு தண்ணீர் சேர்ந்துவிடும் வடிகால்கள் அடைந்து போயிருக்க சாலை குழிகாடாக மாறிவிடும்.

    பஞ்செட்டியில் இருந்து தச்சூர் செல்ல இடது புற சர்வீஸ் சாலையை பயன்படுத்துகையில் எதிர்ப்புறத்தில் வாகனங்கள் வந்து கொண்டிருந்தது அதனால் வாகனத்தை வேகமாக இயக்க முடியவில்லை! மெதுவாக ஊர்ந்து கொண்டு எதிர்புறத்தில் வந்த வாகனங்களை சபித்தபடி சென்று கொண்டிருந்தேன். தச்சூர் கூட்டுச்சாலையில் மேம்பாலத்தின் உள்ளே நுழைகையில்தான் நெரிசலின் காரணம் புரிந்தது. வலது புறசாலையில் ஏதோ வாகனம் பழுதாகி நின்றுவிட ஏகப்பட்ட நெரிசல் காவல் துறையினர் வண்டிகளை மறுபுறம் திருப்பி விட ஏகப்பட்ட நெரிசல். 

   திரும்பி வருவதற்குள் சரியாகி விடும்! என்று சமாதானித்து பொன்னேரிசாலையில் பயணிக்கையில் அங்குள்ள பெட்ரோல் பங்க் அருகே ஒரு டாரஸ் லாரியின் அடியில் பைக் சரண் அடைந்து இருந்தது. கூட்டம் கூடி இருந்தது. அடிபட்டது யாருக்கு என்று தெரியவில்லை! இல்லை அடிபட்டவரை மருத்துவ மணைக்கு அனுப்பி விட்டார்களா என்று புரியவில்லை! அங்கும் சாலை படுகுழியாக இருக்கும். யாருக்கு என்ன ஆயிற்றோ என்று யோசித்தபடி சென்று தச்சூர் சிவாலயத்தில் பூஜை செய்துவிட்டு பிள்ளையார் கோயிலிலும் பூஜை முடிக்கையில் மணி பதினொன்றே கால் ஆகிவிட்டது.

    அங்கிருந்து தச்சூர் கூட்டுச்சாலை வருகையில் நெரிசல் குறையவில்லை! வலது புற சாலை வழியே பஞ்செட்டி செல்வது இயலாத காரியமாக தோன்றியது. வாகனங்களும் எதிர்புற சாலைவழியே சென்று கொண்டிருக்க முட்டாள் தனமான காரியம் செய்தேன். ஆப்போசிட் டைரக்‌ஷனில் சென்றுவிட்டேன். எதிரே வாகன நெரிசல் எப்படியோ கடந்து வாகனங்கள் குறைந்ததும் அந்த சாலையின் வலதுபுறமாக மெதுவாக சென்றேன். சுபலஷ்மி காம்ப்ளக்ஸ் அருகே குறுக்கே ஓர் டிவிஎஸ் எக்செல்லில் ஒரு வயதானவர் வருவதை பார்த்து அவர் மீது மோதுவதை தவிர்க்க ப்ரேக் அழுத்தினேன். சாலையில் மணல் பதற்றத்தில் முன் பிரேக்கையும் பிடித்துவிட்டேன் போல வண்டி சரிந்தது. ‘அம்மா… என்று கத்தியபடியே வண்டியிலிருந்து கீழே விழுந்தேன். முகம் தரையில் பதிய சமாளித்து எழுந்தேன். 

   என்னைவிட எதிரில் வந்தவர் பதற்றத்தில் இருந்தார். அவர் தூக்கும் முன் நானே எழுந்துவிட்டேன். நடுசாலையில் விழுந்திருந்தேன்! நல்ல வேளையாக வாகனங்கள் எதுவும் பின்னாலோ முன்னோ வரவில்லை. கைகள் இரண்டிலும் முட்டியிலும் சிராய்த்திருக்க தாடை கொஞ்சம் கிழித்துக் கொள்ள முன் பல் சிறிது உடைந்து உதட்டில் குத்த துணியெங்கும் ரத்தம்!

       டிவிஎஸ் பிப்டி காரர் என் வண்டியை தூக்கி ஓரம் கட்டினார். காம்ப்ளக்ஸில் இருந்த கடையில் கொஞ்சம் காட்டன் வேஸ்ட் கொடுக்க அதை தாடையில் ஒற்றி இரத்தம் நிறுத்த சொன்னார். அவர்களிடம் தண்ணீர் கேட்டு வாங்கி முகம் கழுவி குடிக்கச் சொன்னார். தாடையில் இரத்தம் ஒழுகுவது நிற்கவில்லை!

        அப்படியே ஓர் ஐந்து நிமிடம் கழிய, ஹாஸ்பிடல் போலாம் போய் ஓர் டிடி இஞ்செக்‌ஷன் பண்ணிடலாம்! நான் கூட்டிப் போறேன் என்றார்.
    நான் வேண்டாம் என்று மறுத்தேன். கடையில் இருந்த தெரிந்த பெண்மணியும் டிவிஎஸ் காரரும் இல்லே இஞ்செக்‌ஷன் பண்ணிக்கிட்டா நல்லது! என்றார்கள். இறுதியில் அவர் டிவிஎஸில் மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றார். தச்சூரில் உள்ள ஸ்விப்ட் கிளினிக்கில்  காயத்திற்கு மருந்து போட்டு டிடி இஞ்செக்‌ஷன் போட்டார்கள். தையல் தேவையில்லை டிரெஸ்சிங்க் பண்ணினால் போதும் என்று சொல்லிவிட்டார்கள். 

     இதற்குள் டிவிஎஸ் காரரே கட்டணத்தை செலுத்திவிட்டார். நான் எவ்வளவு சொல்லியும் கட்டணம் வாங்க மறுத்துவிட்டார். மீண்டும் அந்த கடையருகே கொண்டு வந்து டிராப் செய்தார். வீட்டில் விடுவதாக சொன்னார். நான் வேண்டாம் நானே மெதுவாக போய் கொள்கிறேன்! என்று சொல்லிவிட்டேன்.

   மதுரைக் காரராம்! வேலம்மாள் பள்ளியில் அவர் மகன் படிக்கிறாராம். மகனுக்கு புரொஜெக்ட் விஷயமாக ஏதோ மோட்டார் வாங்க வந்தவர் என் வண்டிக்கு குறுக்கே வர நான் விழுந்து அவருக்கும் அசகவுர்யம் ஆகிவிட்டது. தலைக்கவசம் ரெகுலராக அணிந்திருந்த நான் அன்று அணியாமல் போனதும், ஆப்போசிட் டைரக்‌ஷனில் வந்ததும் ஆபத்தானதாக ஆகிவிட்டது.

      தலை தப்பியது தம்பிரான் புண்ணியமாக இதோ உங்களுக்கு இந்த கதையை கைவலியோடு டைப் செய்கிறேன்! 

   அந்த டிவிஎஸ் காரர் மீது தவறில்லை! அப்படியே சென்றுவிட்டிருக்கலாம்! இருந்தும் எனக்கு முதலுதவி செய்து மருத்துவமனையில் சேர்த்து கட்டுப்போட்டு கட்டணமும் அவரே கொடுத்தார். இறுதியில் அவர் பெயரைக் கூட பதட்டத்தில் கேட்க மறந்துவிட்டேன். நன்றி சொல்லி விடைபெற்றேன்.அந்த நல்ல மனிதரிடம். இப்போதும் நன்றி சொல்லுகின்றேன்!

   நான் கீழே விழுந்தது பகல் பதினொன்றரை மணி வாக்கில்! அதே சமயம் என் அப்பாவின் மீது யாரோ குரங்கு வடிவில் அமர்வது போல தோன்றியிருக்கிறது. உடனே என் நினைவும் வந்திருக்கிறது. வீட்டில் கொஞ்சம் பயந்துவிட்டார்கள். நேற்று முழுவதும் பயங்கர வலி! இன்று பரவாயில்லை!

     உங்களோடு இன்னும் பழக பகவான் விட்டு வைத்திருக்கிறான்! அவருக்கும் நன்றி!


Related Posts Plugin for WordPress, Blogger...