தித்திக்கும் தமிழ்! பகுதி 20 வெள்ளாங்குருகே தூது செல்லாயோ?

தித்திக்கும் தமிழ்! பகுதி 20  வெள்ளாங்குருகே தூது செல்லாயோ?

இன்றைய அவசர யுகத்தில் தூது என்பது மருவி விட்டது. அன்று போர் என்றாலும் தூதுதான். காதல் என்றாலும் தூதுதான். மற்போருக்கு முன்னே சொற்போர் நடக்கும். வாட்சப்பிலும் குறுஞ்செய்திகள் பரிமாற்றத்திலும் இன்று காதல் வளர்கின்றது. எல்லோரிடமும் ஓர் அலைபேசியும் அதன் செவிவாங்கி கருவியும் இருக்கிறது. அதை காதில் சொருகி விட்டால் அவர்கள் உலகமே தனியாகிவிடுகின்றது. வெளி உலகமே அவர்கள் கண்ணுக்குப் புலப்படுவது இல்லை. இந்த மாதிரி பெண்களை திருமணம் செய்யும் ஆண் தான் பாவம்! காது மந்தமாகி போன மனைவியிடம் கத்தி கத்திப் பேசி தொண்டைப் புண் வந்து அவஸ்தைப்படப் போகின்றான்.

     சங்க காலத்தில் இப்படி காதலுக்கு தூது செல்ல செல் போன்கள் இல்லை! ஆனால், மரங்கள், பறவைகள், பூக்கள், விலங்கினங்கள் எல்லாம் இருந்தன. இயந்திர உலகில் இவையெல்லாம் காணாமல் போய் நாடு வெறும் சுடுகாடாகிக் கிடக்கின்றது. இன்றைய கவிஞர்கள் எந்த பறவையை தூது அனுப்புவார்கள் பாவம் அவைகளே இருக்க இடம் இல்லாமல் அலைந்து கிடக்கின்றன. தூது போ என்றால் போகுமா என்ன? ஆனால் நற்றிணையில் இந்த காதலி ஓர் பறவையை தூதாக்குகின்றாள். வெள்ளாங்குருகு அவள் காதலுக்கு தூது போகின்றது. தூது சென்ற பறவை என்ன சொன்னது? பாடலுக்குச் செல்வோமா?

நற்றிணை  - திணை: மருதம்

காமம் மிக்க கழிபடர் கிளவி, நாரையை நோக்கித் தலைவி கூறியது

சிறு வெள்ளாங்குருகே! சிறு வெள்ளாங்குருகே!
துறை போகு அறுவைத் தூ மடி அன்ன
நிறம் கிளர் தூவிச் சிறு வெள்ளாங்குருகே!
எம் ஊர் வந்து, எம் உண்துறைத் துழைஇ  
சினைக் கெளிற்று ஆர்கையை அவர் ஊர்ப் பெயர்தி;
அனைய அன்பினையோ பெரு மறவியையோ –
ஆங்கண் தீம் புணல் ஈங்கண் பரக்கும்
கழனி நல் ஊர் மகிழ்நர்க்கு என்
இழை நெகிழ் பருவரல் செப்பாதோயே?
                    வெள்ளி வீதியார்.

விளக்கம்: சிறிய வெள்ளை நாரையே! சிறிய வெள்ளை நாரையே! துணிவெளுக்கும் நீர்த் துறையில் காயும் வெளுத்த வெள்ளாடை போன்ற சிறகுகளை உடைய வெண்மை நிறமுடைய சிறிய நாரையே! நீ என்னுடைய ஊருக்கு வந்து எங்களுடைய நீர்த் துறைகளில் துழாவித் தேடி நிறைய கெளிற்று மீன்களை கவ்வி உண்கின்றாய். பிறகு என் தலைவனுடைய ஊருக்குத் திரும்பிச்செல்கின்றாய். அவ்வூர் வழி ஓடும் தேன் சுவையுடைய நீர் இங்கே பரவிக்கிடக்கின்றது. நிறைய வயல்களை உடைய நல்ல செழிப்பான ஊரையுடைய எம்முடைய தலைவருக்கு நீ எனது அணிகள் கழன்ற பசலை நோயினை சொல்லாது இருக்கின்றாயே! நீ என்மீது வைத்திருக்கும் அன்பு இவ்வளவுதானா? அல்லது மறதியுடைய  பறவையா? விளங்கவில்லை என்கின்றாள் தலைவி.

  தலைவன் தலைவி இருவர் ஊர்களும் அருகருகே அமைந்துள்ள மேலூர் கீழூர் ஆகும். மேலூரில் விழும் நீர் கீழே கீழுரில்வந்து விழுகின்றது. அத்தகைய நீரிலே புனலாடி மகிழ்கிறாள் தலைவி. அங்கே சில நாரைகள் பறந்து நீரிலே துழாவி கெளிற்றுவகை மீன்களை கொத்தி உண்கின்றன.

    தலைவன் வராமையால் மெலிந்து அவள் அணிந்திருந்த வளையல்களும் கொலுசுகளும் கழன்றுவிழும் நிலையில் இருக்கின்றாள் தலைவி. அங்கு மேயும் நாரைகளிடம் தன் நிலையை கூறி மேலூர் செல்லும் நாரைகளே! அங்கு வாழும் தலைவனிடம் என்னுடைய இந்த பசலை நோயைப்பற்றி சொல்ல மாட்டேன் என்கிறீர்களே! என்மேல் உள்ள அன்பு இவ்வளவுதானா? என்று கோபித்துக் கொள்கின்றாள்.

  மேட்டு நிலத்திலிருந்து நீர் பள்ளத்தில் விழுவதும் அங்கு நாரைகள் இரைதேடுவதும் இயல்பான ஒன்று. இந்த இயல்பான காட்சியை தன்னுடைய அருமையான கற்பனைத் திறனால் அழகான பாடலாக்கிய புலவனின் சிறப்பை பாராட்டாமல் இருக்க முடியாதுதானே!  எளிமையான இனிமையான இந்த பாடலை ரசித்துப்படியுங்கள்!

பின்குறிப்பு: சத்தி முத்துப்புலவர் எழுதிய நாரைவிடு தூது பாடலும் ஏறக்குறைய இதே போன்ற ஓர் கருத்துடைய பாடல். அதில் தலைவன் தூது போகச்சொல்லுவான். இந்தப்பாடலை சகோதரர் ஊமைக்கனவுகள் விஜு அவர்கள் சிறப்பாக விளக்கியிருப்பார்.அந்த பதிவை தேடினேன்.  இதோ  சிதைக்கப்பட்ட சித்திரங்கள்!

மீண்டும் அடுத்த வாரம் நல்லதொரு பாடலுடன் சந்திக்கின்றேன்! நன்றி!

உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

  1. நடைமுறை வாழ்க்கையோடு இணைந்து கொண்டு சென்ற விதம் அருமை நண்பரே...

    ReplyDelete
  2. காதில் செவிவாங்கி கருவியுடன் ஒரு பெண் எப்பொழுதும் இருக்கிறாள் என்றால் அந்த முனையில் ஒரு ஆண் இருக்கிறான் அல்லவா சகோ? இதில் பெண்ணை மட்டும் தாங்கள் குறை சொல்வது தகுமோ? :-)

    பாடல் விளக்கம் அருமை சகோ..எனக்குப் பிடித்தப் பாடல். செல்லக் கோபத்தைக் குருகிடம் சொல்லும் அழகே அழகு!!

    ReplyDelete
  3. எத்தனை நாசூக்காக நளினமாக இலக்கியப் பாடல்களில்
    உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர்! மிக மிக அருமை!
    மனம் லயித்துப் படித்தேன் சகோதரரே!

    அருமையான பகிர்வு. மிக்க நன்றியுடன் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. தூதினை அதிகம் ரசித்தேன். விளக்கமும் படங்களும் அருமை

    ReplyDelete
  5. அருமையான பாடல்...அதன் விளக்கம்...மிகவும் ரசித்தோம்..

    ReplyDelete
  6. வணக்கம்,
    அது என்ன இந்த மாதிரி பெண்கள்,,,,,,,,,, அது சரி தானாக பேசி மகிழம் சுழலுக்கு தள்ளப்படும் பெண்கள்,,,,,,,,
    சரி, தங்கள் பாடல் விளக்கம் மிக அருமை, வாழ்த்துக்கள். நன்றி.

    ReplyDelete
  7. அருமையான விளக்கம்.நன்று

    ReplyDelete
  8. உங்கள் தமிழார்வம் வியப்பாக இருக்கிறது. நாரை விடு தூதுக் கவிதையும் அருமை! இதே போல் தான் நாராய், நாராய் செங்கால் நாராய் என்னும் சத்திமுற்றப் புலவரின் கவிதையும் நாரை விடு தூதில் வரும் என எண்ணுகிறேன்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!