Monday, August 31, 2015

குரோதம் கொண்ட குரோம் பிரவுசர்!


குரோதம் கொண்ட குரோம் பிரவுசர்!

கடந்த வெள்ளியன்று வரலஷ்மி விரதம். நிறைய பேர் வீடியோ பகிர்கின்றார்களே நாமும் இன்று வீடியோ பகிர்வு ஒன்று இடலாம் என்று நினைத்தேன். ஏற்கனவே கொஞ்சம் சிரியுங்க பாஸ் பதிவு போட்டிருந்தேன். வரலஷ்மி மா இண்டிக்கு ராவம்மா…! என்ற பாடலை யூடியுபில் பார்த்தேன். இன்றைய தினத்திற்கு இது பொருத்தமாக இருக்கும் என்று யூ டியுப் டவுன் லோடரில் தரவிறக்கினால் கொஞ்சத்தில் தரவிறங்க வில்லை.

   ஏதோ எரர் காட்டிக் கொண்டே இருந்தது. நான் பாட்டுக்கு விட்டுவிட்டு அடுத்தவேலையை பார்க்க போயிருக்க வேண்டும். அங்கேதான் என் கை சும்மா இருக்கவில்லை. கூகுளில் சர்ச் செய்து வேறு ஒரு யு டியுப் டவுண்லோடரை இன்ஸ்டால் செய்து அந்த பாடலை டவுண்லோடிட்டுவிட்டேன்.

      மாலையில் ஏழு மணி அளவில் பதிவிட்டு கொள்ளலாம் அதுவரை சக பதிவர்களின் பதிவுகளை படிக்கலாம் என்று எண்ணி பதிவுகளை வாசித்து கருத்திட ஆரம்பித்தேன். அப்படியே யாதோ ரமணி அவர்கள் தளம் சென்றதும் விளம்பரம் ஒன்று குறுக்கிட்டது. இவர் தளத்தில் இப்படி ஆகாதே என்று அடுத்த தளம் சென்றாலும் படிப்பதற்குள்ளேயே விளம்பரம் ஆக்ரமித்து அதை குளோஸ் செய்தால் அடுத்த பக்கத்தில் திறக்க ஆரம்பித்துவிட்டது. 

   என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. பயர்பாக்ஸ் பிரவுசருக்குச் சென்று ஓப்பன் செய்தால்  இப்படி விளம்பரம் குறுக்கிடவில்லை. பிரவுசரில்தான் கோளாறு என்று குரொம் பிரவுசர் செட்டிங் சென்று எதை எதையோ மாற்றியும் ஒன்றும் சரியாகவில்லை. இரண்டு ஜீ.பி வேறு செலவாகிவிட்டது. எப்படி என்றே தெரியவில்லை. வருத்தமுடன் குளோஸ் செய்துவிட்டு படுக்கப் போய்விட்டேன்.

   சனியன்று மீண்டும் இணையத்தை திறந்து பிரவுசர் ஓபன் செய்கையில் விளம்பரம் குறுக்கிடவில்லை! அப்பாடா என்று ஒர் பதிவு போட்டுவிட்டு அடுத்த பதிவுகளுக்கு சென்றால் மீண்டும் விளம்பரத் தொல்லை. அதுவும் டேட்டிங்க் விளம்பரங்கள், ரம்மி என்று அநாகரிகமான விளம்பரங்கள். குரோம் செட்டிங்ஸ் சென்று எதை எதையோ குடாய்ந்து குக்கிஸ்களை நீக்கிய பின் விளம்பரம் சிறிது நேரம் நின்றது. ஆனால் என் ஐடியில் கருத்திட முடியவில்லை.

   வெறுத்துப் போய் பயர் பாக்ஸில் சிலரது தளங்களுக்கு மட்டும் சென்று கருத்திட்டு வந்தேன். உடல் அசதியாக இருந்தமையால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை. இறுதியாக குரோம் பிரவுசரை என் கம்ப்யூட்டரில் அன் இன்ஸ்டால் செய்தேன். இன்று சீ கிளினரில் டியுன் அப் செய்துள்ளேன். நாளை மீண்டும் தரவிறக்கி பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.

    இன்றைய பதிவுகள் படிப்பது, இடுவது எல்லாம் பயர்பாக்ஸில்தான். முதலில் இதைத்தான் பயன்படுத்தினேன். குரோம் வந்தபின் இதில் பயன்படுத்துவது கஷ்டமாக இருக்கிறது.

   வேறு யாராவது ஊடுருவி விட்டார்களா என்றும் பயம்! ஆனால் செக் செய்தபோது அப்படி எதுவும் கிடைக்கவில்லை! அதனால் ஓர் நிம்மதி! இந்த குழப்பத்தில் நேற்று பதிவும் இடவில்லை. யாருடைய தளத்திற்கும் வரவில்லை! நாளையும் சங்கட ஹர சதுர்த்தி இருப்பதால் இணையம் பக்கம் வர முடியுமா என்று தெரியவில்லை.
குரோம் பிரவுசர் மீண்டும் தரவிறக்கலாமா? அல்லது பழைய தறவிறக்கையதையே பயன்படுத்தலாமா?  இல்லை பயர் பாக்ஸிலேயே தொடரலாமா? உங்கள் ஆலோசனைகளை சொன்னால் நன்றாக இருக்கும்.
தரவிறக்கிய வீடியோ டவுன் லோடர் ytd video downloader.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்! நன்றி!

மனக்கவலைகள் அகற்றிடும் மஹா சங்கட ஹர சதுர்த்தி!


மனக்கவலைகள் அகற்றிடும் மஹா சங்கட ஹர சதுர்த்தி!


    அகஜானன பத்மார்க்கம் கஜானனம் அஹர்நிசம்
அநேகதம்
தம் பக்தாநாம் ஏகதந்தம் உபாஸ்மஹே

கஜாநநம் பூத கணாதி ஸேவிதம் கபித்தஜம்பூபல ஸாரபக்ஷிதம்
உமாஸுதம்
சோக விநாச காரணம் நமாமி விக்நேச்வர பாதபங்கஜம்

முழு முதற்கடவுளாம் தும்பிக்கையான் விநாயகருக்கு உகந்த விரதங்கள் பதினொன்று உள்ளன. அவற்றுள் மிகச்சிறப்பானதும் எல்லோரும் பின்பற்றக்கூடியதும், எளிமையானதுமான ஓர் விரதம் சங்கட ஹர சதுர்த்தி விரதம் ஆகும்.  இந்த விரதம் இருந்து இழந்த நிம்மதியை, பொருளை, ஆரோக்கியத்தை, ஐஸ்வர்யத்தை, லஷ்மிகடாட்சத்தை பலர் அடைந்ததாக புராணங்கள் கூறுகின்றன.

    ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தி திதி சங்கடஹர சதுர்த்தி ஆகும். தேய்பிறை சதுர்த்தி தினம் செவ்வாய்க் கிழமையில் வந்தால் மிகவும் விஷேசமாகும். ஒவ்வொரு ஆண்டும் உத்தராயணம், மற்றும் தட்சிணாயண காலத்தில் மாசி, மற்றும் ஆவணி மாதங்களில் வரும் தேய்பிறை சதுர்த்தி மஹா சங்கடஹரசதுர்த்தி என்று சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.

      விரதத்தில் மிகச் சிறந்ததும், பழமையானதும், சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் அளவு கடந்த ஆனந்தத்தை அடையலாம். சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்.
ஒவ்வொரு
மாதமும் வரும் "சங்கடஹர சதுர்த்தி" நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும், தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும்.

"
ஹர" என்ற சொல்லுக்கு அழித்தல் என்று பொருள். சங்கடங்களை அழிக்கும் சதுர்த்தி தினம் சங்கடஹர சதுர்த்தி ஆகும். ஆவணி மாத தேய்பிறையில் வரும் சதுர்த்தி நாளில் இவ்விரதத்தை கடைப்பிடிக்க துவங்க வேண்டும். செவ்வாய் கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதை "மகா சங்கடஹர சதுர்த்தி" என்று அழைக்கின்றனர்.

பிள்ளையார் வழிபாடு மிகவும் எளிமையானது. கல், மண், மரம், செம்பு முதலியவற்றால் இறைவனின் திருவுருவங்களைச் செய்ய வேண்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றன. ஆனால், மண், பசுஞ்சாணம், மஞ்சள், மரக்கல், கருங்கல், பளிங்குக்கல், தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள், முத்து, பவளம் போன்ற ரத்தினங்கள், தந்தம், வெள்ளெருக்கு வேர், அத்திமரம், பசு வெண்ணெய், அரைத்த சந்தனம், வெண்ணீறு, சர்க்கரை, வெல்லம் ஆகியவற்றால் விநாயகர் வடிவத்தை அமைக்கலாம். இதனைத் தான் பிடித்து வைத்தால் பிள்ளையார் என்று வேடிக்கைப் பழமொழியாக நாட்டுப்புறத்தில் சொல்லுவர். புற்றுமண், அரைத்தமாவு, சாளக்கிராமம்(நர்மதை நதிக்கல்) ஆகியவற்றை ஒரு கைப்பிடி பிடித்தாலே அது பிள்ளையாராகி விடும் என்பதால் இவ்வாறு கூறினர். கும்பத்திலும், கூர்ச்சத்திலும், ஓமாக்கினியிலும் விநாயகப்பெருமானை ஆவாஹனம் செய்து வழிபடுவர். விநாயகப்பெருமானை மிக எளிமையாக வடிவமைத்துவிடலாம்.


   இத்தனை எளிமையானவரான பிள்ளையாரை சங்கட ஹர சதுர்த்தி தினத்தன்று எளிமையாக அருகம் புல் சார்த்தி அர்ச்சனை செய்து வழிபட அனைத்துப் பாவங்களும் அகலும். சங்கடஹர சதுர்த்தி உபவாசம் என்பது அன்று முழுவதும் உணவருந்தாமல் வெறும் பால், மற்றும் பழம் மட்டும் அருந்தி விரதம் இருந்து, இடைவிடாத கணேச தியானம் மனதினில் செய்து மாலையில் அருகில் உள்ள விநாயகர் ஆலயத்திற்கு சென்று  அருகம்புல், வெள்ளெருக்கம் பூ, வாசனை புஷ்பங்கள் சார்த்தி தேங்காய், பழம், முதலியவை நிவேதனம் செய்து அர்சித்து வழிபடலாம்.

    அன்று இரவு 9.00 மணி வாக்கில் உதயமாகும் சந்திரனை தரிசித்து தீபம் காட்டி வழிபாடு செய்து விரதத்தை முடிக்க வேண்டும். இரவில் எளிய உணவாக சிற்றுண்டி மட்டும் உண்ண வேண்டும். இவ்வாறு ஆவணி சதுர்த்தியில் துவங்கி அடுத்த ஆடி மாதம் வரை 12 சதுர்த்திகள் விரதம் இருந்தால் நினைத்தது கை கூடும் என்பது நம்பிக்கை.

சதுர்த்தியன்று விநாயகர்  அகவல், விநாயகர் கவசம், காரிய சித்திமாலை பாடல்களைப் பாடி அவரை வழிபடலாம். இதில் எடுத்த செயல் வெற்றி பெறச் செய்யும் தனிச்சிறப்புடையது  காரிய சித்திமாலை கேட்ட வரம் தரும் தனிச்சிறப்புடைய இத்துதியை விநாயகர் முன்பு அமர்ந்து உள்ளம் ஒன்றிப் பாராயணம் செய்பவர்களின் மனவிருப்பம் எளிதில் நிறைவேறும். சிறப்பு மிக்க இத்துதியை மூன்று வேளைகளிலும் (காலை, மதியம், மாலை) உரைப்பவர்கள் நினைத்த  காரியங்கள் கைகூடும். அனைத்து வகைகளிலும் வெற்றி  உண்டாகும். எட்டு நாட்கள் ஓதிவர மனதில் மகிழ்ச்சி உண்டாகும். சங்கடஹர சதுர்த்தி திதிகளில் (தேய்பிறை சதுர்த்தி) எட்டுமுறை ஓதினால் அஷ்டமாசித்தி கைகூடும். தினமும் 21 முறை இப்பாடலைப் பாராயணம் செய்வோரின் சந்ததி கல்வியிலும், செல்வத்திலும் மேம்பட்டுத் திகழும் என்பது ஐதீகம். கபிலநாயனார் இத்தகவலை எழுதியுள்ளார்.


விநாயகருக்குரிய 11 விரதங்கள்

1.வெள்ளிக்கிழமை விரதம்
2. செவ்வாய்க்கிழமை விரதம்
3. சதுர்த்தி விரதம்
4. குமார சஷ்டி விரதம்
5. தூர்வா கணபதி விரதம்
6. சித்தி விநாயகர் விரதம்
7.துர்வாஷ்டமி விரதம்
8. நவராத்திரி விரதம்
9.வெள்ளிப்பிள்ளையார் விரதம்
10. செவ்வாய்ப்பிள்ளையார் விரதம்
11. சங்கட ஹர சதுர்த்தி விரதம்

இவ்விரதங்களில்
ஆவணி மாதத்தில் வரும் சதுர்த்தி விரதம் மிகவும் முக்கியமானதாகும்

விநாயகர் துதிகள்:
 
ஐந்து கரத்தனை யானை முகத்தனை

இந்தின்
இளம்பிறை போலும் எயிற்றனை

நந்தி
மகன்றனை ஞானக்கொழுந்தினைப்

புந்தியில்
வைத்து அடிபோற்று கின்றேனே.
                                                                                        திருமூலர்

விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்:
விநாயகனே வேட்கை தணிவிப்பான் - விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்
கண்ணில் பணிமின் கனிந்து
                                            11ஆம் திருமுறை
பிடி அதன் உரு உமை கொளமிகு கரியது
வடிகொடு தனது அடி வழிபடும் அவர் இடர்
கடிகணபதி வர அருளினன் மிகு கொடை
வடிவினர் பயில்வலி வலம் உறை இறையே. 
                           சம்பந்தர்
திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர விண்மனி யாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவோம்.  
                          கச்சியப்பர் 


குள்ளக் குள்ளனைக் குண்டு வயிறனை
வெள்ளைக்
கொம்பனை விநாயகனைத் தொழு
வெள்ளைக்
கொம்பன் விநாயகனைத் தொழு
துள்ளி
யோடும் தொடரும் வினைகளே
கருணை
வள்ளல் கணபதியைத் தொழ
அருமைப்
பொருள்கள் அனைத்தும் வருமே
முப்பழம்
வெல்லம் மோதகம் தின்னும்
 தொப்பை யப்பனைத் தொழவினை இல்லை
வேழ
முகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுந்து வரும்.
                                                                                நாட்டுப்புறப்பாடல்

இது போன்ற தமிழ் துதிகளை பாடியும் விநாயகரை வழிபாடு செய்யலாம்.

விநாயகர் அகவல் பற்றி காஞ்சிப் பெரியவர் கருத்து


மற்ற கிழமைகளில் மறந்து விட்டாலும் விநாயகரை வெள்ளிக்கிழமை மற்றும் சதுர்த்தி திதிகளில் மறக்காமல் வணங்க வேண்டும். அவ்வாறு, விநாயகரை வணங்கும்போது உங்கள் நினைவிற்கு வரவேண்டிய இன்னொருவர் அவ்வையார். அவர் சீதக்களப செந்தாமரைப்பூம் என்று துவங்கும் விநாயகர் அகவல் என்னும் பாமாலையை எழுதியவர். இதை சதுர்த்தியன்று  பாடினால், நீங்கள் பிள்ளையாரிடம் ஏதாவது வேண்டினால், அவர் இரட்டிப்பாகத் தருவார். விநாயகர் அகவல் படிப்பது வீட்டுக்கும், நாட்டுக்கு மட்டுமல்ல, உலகுக்கே நல்லது. காஞ்சிப்பெரியவர் இது பற்றி கூறும்போது, நமக்கும், நாட்டுக்கும், <லகத்துக்கும் நன்மை உண்டாவதற்கு அவ்வையார் மூலம் பிள்ளையாரைப் பிடிப்பதே வழி, என்கிறார்.
  விநாயகர் அகவல் படிக்க இங்கே சொடுக்குங்கள்!  விநாயகர் அகவல்

சங்கட ஹர சதுர்த்தி தினம் நாளை 1-9-2015 செவ்வாய்க் கிழமை வருகின்றது. விநாயகருக்கு உகந்த செவ்வாய் கிழமையில் வரும் இந்த நாளில் அருகில் உள்ள விநாயகர் ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வாழ்வில் வளம் பெறுவோமாக!

(படித்தது தொகுத்தது)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Saturday, August 29, 2015

செல்லும் செல்லாதததுக்கு செட்டியாரைக் கேள்! பாப்பாமலர்!

செல்லும் செல்லாதததுக்கு செட்டியாரைக் கேள்! பாப்பாமலர்!


 ஓர் ஊர்ல ஒரு செட்டியாரு இருந்தாரு. பெரிய வியாபாரி, அதோட பணத்தை வட்டிக்கும் விடுவாரு. அவர் பேரு சக்கரை செட்டியார். நூறு ரூபாய் பணத்துக்கு ஆறு ரூபாதான் வட்டி அதிகமில்லை. மாதா மாதம் பத்துரூபாய் கட்டிவிட வேண்டும். பத்து மாசத்தில் கடனை தீர்த்துவிட வேண்டும்.

   பத்துமாச வட்டி அறுபது ரூபாய், பத்திரம் எழுத கூலி முக்கால் ரூபாய், பத்திர மகமைப்பணம் ஒண்ணேகால் ரூபாய் என மொத்தம் அறுபத்திரண்டு ரூபாய் முதலிலேயே பிடித்தம் ஆகிவிடும். மீதி முப்பத்தெட்டு ரூபாய்தான் கொடுப்பார். அதை பத்து மாதங்களில் நூறு ரூபாயாக திருப்பிட வேண்டும். கொடுப்பது முப்பத்தெட்டு ரூபாய். பத்திரம் நூறுரூபாய்க்கு எழுதி வாங்கிவிடுவார்.

    வட்டியை இப்படி வறுமையாளர்களிடம் கசக்கி பிழிந்து எடுத்து எடுத்து கொழுத்துப்போன செட்டியார் வெளியூர்களில் கொடுத்த பணத்தை வசூலிக்க ஒரு நாளு அயலூருக்கு போனாரு.

    அங்க வசூல் பண்ண பணம் ஒரு ஐம்பதாயிரம் தேறுச்சு! இந்த கதை நடக்கிற காலத்துல நோட்டு எல்லாம் கிடையாது. தங்கக் காசுதான். அதனால இந்த பணத்தை எல்லாம் ஓர் துணிப்பையில் போட்டு இடுப்பிலே கட்டிக்கொண்டார். ஊர் திரும்பணும் பொழுது போயிருச்சு! அவருக்குத் துணையா ஓர் காவலாளு இருப்பான். அன்னிக்குன்னு பார்த்து அவனுக்கு உடம்புக்கு சுகமில்லாம போயிருச்சு. அதனால அவனும் வரலை. செட்டியாருக்கு அசலூர்ல தங்கறதுக்கு அச்சமா இருந்துச்சு! ஆனது ஆவட்டும்னு கிளம்பிட்டாரு.

   பத்துமைல் நடக்கணும் வழியிலே ஆளரவம் இல்லாத காடு வேற துணைக்கு ஓரு ஆளு இருந்தா தேவலைன்னு அவருக்குத் தோணிச்சு. வழியிலே ஓர் வாலிபன் வாட்டசாட்டமா செக்கு உலக்கையாட்டம் நின்னுக்கிட்டு இருந்தானாம். செட்டியாரு அவனை பார்த்து, யாரப்பா நீ! நான் பக்கத்து ஊருக்கு போவணும் துணைக்கு வர்றியா?ன்னு கேட்டாரு.

 அவனும் சாப்பாடு போட்டா வாரேன்னு சொன்னான். சரிப்பா! உனக்கு சாப்பாடு போட்டு கூலியும்  தரேன்! என்னோட துணைக்கு வா!ன்னு கூட்டிக்கிட்டாரு. அவன் சுத்த மூடன். ஆள் உசந்த அளவுக்கு அறிவு உசராத ஆளு! நல்ல சாப்பாட்டு ராமன். அவனைக்கூட்டிக்கிட்டு செட்டியாரு நடந்தாரு.

   வழியிலே ஓரு  கடையில இட்டிலி வித்துக்கிட்டிருந்தாங்க! துணைக்கு வந்தவன் பசிக்குதுன்னு சொன்னான். செட்டியாரு ஓர் எட்டணா காசை கொடுத்து சாப்பிட்டுவான்னு சொல்லி அனுப்புனாரு. அவன் ரெண்டனாவுக்கு வயிறு புடைக்க இட்டிலி சாப்பிட்டு மீதி ஆறணாவை கொண்டுவந்து செட்டியார் கிட்டே கொடுத்தான்.

   செட்டியாருக்கு என்ன தோணிச்சோ தெரியலை! நீயே வச்சுக்கன்னு சொல்லிட்டாரு. மூடனுக்கு ரொம்ப சந்தோஷம் அதை மடியிலே கட்டிக்கிட்டான். ரெண்டுபேரும் நடந்தார்கள். வழியிலே பெரிய காடு வந்தது. காட்டை பார்த்ததும் மூடனுக்கு பயமா போயிருச்சு!

   செட்டியாரே! உன்னோட நா வரலை! நீ வாங்கி கொடுத்த இட்டிலியைக்கூட கக்கிடறேன்! இந்தா நீ கொடுத்த ஆறணா! ஆளை விடு! அப்படின்னுட்டு மூடன் ஓடப் பார்த்தான்.

   செட்டியாருக்கு தர்ம சங்கடமா போயிருச்சு! அடடா! இந்த முட்டாளைப்போய் துணைக்கு கூட்டி வந்தோமே! என்று வருந்தி, இளைஞனே! உனக்கு ஒன்றும் நேராது! நான் துணைக்கு இருக்கிறேன்! பயப்படாதே என்று சமாதானப்படுத்தி அழைத்துக் கொண்டு காட்டுக்குள் நுழைந்தார்.

   கொஞ்ச தூரம் போனதும் யாரோ நடமாடும் சத்தம் கேட்கவே, செட்டியார் அங்கே இருந்த ஓர் புதருக்குள்ளே பதுங்கினார். மூடனையும் பதுங்கச் சொன்னார். அங்கே திருடர்கள் கூட்டம் ஒன்றுசென்று கொண்டிருந்தது. பதுங்கிய மூடன் நேரம் ஆகவும் உறங்கிப் போய் உருண்டு போய் பாதையில் விழுந்தான்.

   கும்மிருட்டு! திருடர்கள் கருப்புத் துணி கட்டிக்கிட்டு ஈட்டியும் வாளும் எடுத்துட்டு அவ்வழியே வந்தார்கள் அவங்க மொத்தம் முப்பத்திரண்டு பேர்கள். புதரிலே மறைஞ்சிருந்த செட்டியாருக்கு குலை நடுங்கிச்சு! ஆஹா! இவங்க கிட்ட மாட்டினா அதோகதிதான்னு நினைச்சாரு.

  வழியில் உறங்கிக் கிடந்த மூடனை ஏதோ மரத்துண்டு என்று அந்த திருடனுங்க தாண்டி தாண்டி போனாங்க! கடைசியா வந்த ஒரு திருடன், இதென்ன மரத்துண்டு வழியிலே கிடக்குது என்று காலால் உருட்டினான். அவன் கூட வந்தவனோ, டேய், அது பணந்துண்டு! காலாலே உதைக்காதே! காலில் சிறாய் குத்திக்கொள்ளப் போகிறது! என்றான்.


  இதைக்கேட்ட மூடனுக்கு ஆத்திரமாய் வந்தது, உடனே துள்ளி எழுந்து, ஆறடி மனுசன் படுத்து கிடந்தா உருட்டி தள்ளிட்டு பனந்துண்டுன்னு சொல்றீங்களே! எந்த பணந்துண்டு மடியிலேவாவது ஆறணா துட்டு இருக்குமா?ன்னு கத்தினான்.

    திருடர் தலைவனுக்கு கோபமாய் வர மூடனின் கன்னத்தில் ஒன்று வைத்தான். மூடனோ, என்னை அடி! பொருத்துக்கிறேன்! ஆனா பனந்துண்டுன்னு சொல்லாதே! ஏன்னா பனந்துண்டு மடியிலே ஆறனா இருக்காது! அப்படின்னு சத்தம் போட்டான்.

    அடடா! இவன் ஆறணா, ஆறணான்னு திருப்பித் திருப்பிச் சொல்றானே! இருக்குதா பாப்போம்னு அவன் மடியில் துழாவி ஆறணாவைப் பிடுங்கிக் கொண்டான். அது ஒரணாக்காசுகளா! ரெண்டணாக் காசுகளான்னு இருட்டில் துழாவிப் பார்த்தான்.

   மூடனுக்கு கோவம் வந்துருச்சு! என்னய்யா! பணத்தை தடவி தடவி பாக்கிறீங்க? செல்லுமா செல்லாதாதான்னு பாக்கிறீங்க? செல்லும் செல்லாததற்கு செடி மறைவில் இருக்கும் செட்டியாரைப் போய் கேளும்யா! என்றான்.

     அவ்வளவுதான்! செட்டியாரை சூழ்ந்துகொண்டனர் திருடர்கள். மூடனை துணைக்கு கொண்டுவந்தது செட்டியாருக்கு வினையாகிவிட்டது. ஊரார் வயிற்றெரிச்சலை வட்டியாக வாங்கிக் கொட்டிக் கொண்டார் இல்லையா! இப்ப வட்டியும் முதலுமா ஐம்பதாயிரம் பொன்னை இழந்து விதியேன்னு வீடு வந்து சேர்ந்தார்.

 (செவிவழிக்கதை)
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Related Posts Plugin for WordPress, Blogger...