தித்திக்கும் தமிழ்! வாணியன் பாடிட தட்டான் புறப்பட்டான்! பகுதி 14

தித்திக்கும் தமிழ்!  வாணியன் பாடிட தட்டான் புறப்பட்டான்!


   ஊரெங்கும் ஆலயங்களில் பிரம்மோற்சவ வழிபாடுகள் நடக்கும். பத்து நாட்கள் நடக்கும் இந்த பிரம்மோற்சவத்தில் கருவறையில் இருக்கும் சுவாமி விக்கிரக வடிவிலே சர்வ அலங்காரத்துடன் வீதி உலா வருவார்.
ஒவ்வொரு நாளும் ஓர் அலங்காரம். வானவேடிக்கைகள், நாதஸ்வரம், மேளம், கொட்டு வாத்தியங்கள் நாட்டியங்கள் என விமரிசையாக  நடக்க பல்லக்கில் பவனி வருவார் சுவாமி.
 கருவறையில் இருக்கும் இறைவனை நாம் கோயிலுக்குச் சென்று வணங்குகிறோம். அவரது வீட்டுக்கு நாம் விருந்தினராகச் செல்கின்றோம். ஆனால் பிரம்மோற்சவ சமயத்தில் நம்மைக் காண நம் விருந்தினராக நம் இல்லங்களுக்கு வருகின்றார் சுவாமி.
  நம்மைத் தேடி அலங்கரித்துக் கொண்டு வரும் சுவாமியை வரவேற்றுப் பாடி பதிகங்கள் சொல்லி அர்ச்சனைகள் செய்து வழிபட்டு அனுப்புவோம். இப்படியாய் வீதி உலா வருகின்றார் இறைவன். இத்தகைய இறைவனின் வீதி உலா புலவன் ஒருவனின் கண்ணில் படுகின்றது.
 புண் உள்ளவன் கையும் பண் தெரிந்தவன் வாயும் சும்மா இருக்காது என்று ஓர் பழமொழி! இந்த புலவன் உடனே பாடுகின்றான். அவனுக்கு அந்த வீதி உலா இகழ்ச்சியாகத் தோன்றுகிறது. என்னய்யா! எங்கள் சாமியை இப்படி இகழ்ந்து பாடி கேலி செய்கிறாய்? என்றால், நான் எங்கே கேலி செய்தேன்! புகழ்ந்தல்லவா பாடினேன் என்கிறான் அந்த புலவன்.
 ஒரு பாடலில் இகழ்வது போல புகழ்வது வஞ்சப் புகழ்ச்சி அணி எனப்படும். வஞ்சமாய் இறைவனை புகழ்ந்த அந்த புலவன் வேறு யாரும் அல்ல! கவி காளமேகம் தான்.
  இதோ அந்தப் பாடல்!
   வாணியன் பாடிட வண்ணான் சுமக்க வடுகன்செட்டி
   சேணியன் போற்றக் கடற்பள்ளி முன்தொழத் தீங்கரும்பைக்
   கோணியன் வாழ்த்தக் கருமான் துகில்தனைக் கொண்டணிந்த
  வேணிய னானவன் தட்டான் புறப்பட்ட வேடிக்கையே.

இதை மேலோட்டமாக பார்த்தால் இகழ்வது போல இருக்கும். வாணியன் வியாபாரம் செய்பவன் பாட, துணி வெளுப்பவன் சுமக்க, வடுகர், செட்டி, கோணியன் போற்ற கருமானின் துணியணிந்த தட்டான் வீதியில் புறப்பட்டான் என்று தோன்றும்.
சொற்களை பிரித்து பொருள் உணர்ந்தால் இகழ்ச்சி மறைந்து புகழ்ச்சி வெளிப்படும்.
வாணியன் – வாணி- கலைமகளின் கணவனான பிரம்மா
வண்ணான் – வளப்பமான உடலை உடையவன் நந்தி
வடுகன் – பைரவன், செட்டி- முருகன், சேணியன் – இந்திரன்
கடற்பள்ளி- கடலில் பள்ளிகொண்டவன் – திருமால்-
கோணியன் – வளைத்தவன் , வில்லை வளைத்தவன் மன்மதன்,
கருமான் – கரிய மா – யானை- யானையின் தோலாகிய துணி
வேணியன் – வேணி – முடி = சடையணிந்தவன்
தட்டான் – மனம்- வாக்கு- காயங்களுக்கு அப்பாற்பட்டவன்.

விளக்கம்: நான்முகன் வேதம் ஓத நந்திதேவன் சுமந்துவர வயிரவரும் முருகரும் இந்திரனும் மற்றும் பலரும் வணங்க பாற்கடலில் பள்ளிகொண்ட திருமால் வழிபட இனிய கரும்பை வில்லாக வளைத்த மன்மதன் வாழ்த்த யானையின் தோலை ஆடையாக போர்த்திய சடையை உடைய  எவருக்கும் தட்டுப்படாத சிவபெருமான் வீதி உலா வந்தார்.


எத்தனை அழகாக சொற்களை இணைத்து பாடிக் களித்து நம்மையும் களிக்க வைக்கிறார் பாருங்கள்! அதனால் தான் அவர் காளமேகம்.
கோயிலா கோவிலா?  இறைவன் வாழுமிடம் கோயில் என்பது என் கருத்து. கோ – இறைவன். இல்- இல்லம்- கோவாகிய இறைவன் வாழுமிடம் கோயில். இதை பலரும் தவறாக கோவில் என்று எழுதுகின்றனர். இதைப்படிப்பவர்களாவது புரிந்து கொண்டு திருத்தி எழுதினால் நன்று.

மீண்டும் ஓர் சந்தர்ப்பத்தில் இன்னும் ஓர் அழகிய பாடலுடன் சந்திப்போம்! நன்றி!
உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

  1. காளமேக புலவரின் சிலேடை பாடலை மிக சுவையாக விளக்கியுள்ளீர்கள்.

    நண்பரே...

    மிக தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்.

    தனிப்பட்ட காரணங்களால் எனது வலைப்பூ பங்களிப்பு அதிகம் தடைப்படுகிறது....

    தங்களின் வலைச்சரபொறுப்பு அறிந்து மிகவும் மகிழ்ந்தேன். தங்களின் எழுத்துப்பணி மேன்மேலும் சிறக்கட்டும்.

    என்னையும் உங்களின் தொகுப்பில் குறிப்பிட்டு, எனக்கு தகவலும் தந்தமைக்கு நன்றிகள் பல. தாங்கள் அறிமுகப்படுத்திய படைப்பாளிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    நன்றியுடன்

    சாமானியன்

    ReplyDelete
  2. எங்கள் வளையசரத்தை மற்ற நண்பர்களுக்கு அறிமுகம் செய்த தளிா் சுரேஸ் அவா்களுக்கு நன்றி.

    ReplyDelete
  3. களமேக புலவாின் அழகிய பாடலை அழகிய நடையில் விளக்கியுள்ளீர்கள்

    ReplyDelete
  4. அருமையான விளக்கம், காளமேகரின் பாடலும்....

    ReplyDelete
  5. சுவையான பதிவு அருமை! கோவிலா? கோயிலா? என்பதில் மனதில் இருந்த குழப்பம் தீர்ந்தது. மிகவும் நன்றி!

    ReplyDelete
  6. அருமையான பாடல்விளக்கம்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!