தித்திக்கும் தமிழ்! பகுதி 13 வேகமில்லா குதிரை!


    அன்பார்ந்த நண்பர்களே! நாம் எங்காவது அவசரமாக பேருந்தில் பயணித்துக் கொண்டிருப்போம். வண்டி நகராது. அப்படியே முக்கி முனகிச் செல்லும் வழியெங்கும் நெரிசலில் வண்டிச் சிக்கிக் கொள்ளும். நம் எண்ண ஓட்டம் எங்கோ கடந்து கொண்டிருக்க பேருந்தோ நின்ற இடத்திலேயே நின்றிருக்கும். நமக்கோ ஆத்திரம் மிகும்.
      
   “ என்னப்பா டிரைவர் இவர்! பஸ் ஓட்டறாரா? இல்லை  கட்டை வண்டி ஓட்டறாரா? ஆமை கூட வேகமா போவும் போல! இவர் இவ்வளவு வேகமே இல்லாம ஓட்டறார்!” என புலம்புவோம்.
   
    சாதாரண மனிதர்கள் நாம் இப்படி என்றால், காதலர்கள் நிலை! காதலன் ஒருவன் காதலியை சந்திக்க அவசரமாக செல்லும் போது நெரிசலில் சிக்கிக் கொண்டால் அவன் நிலை என்ன? இன்றைய நிலையில் காதலி அவனை கழட்டி விட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லைதான்! 
   
  அப்படித்தான் அன்றும் தலைவன் தலைவியைச் சந்திக்க ஆவலோடு குதிரை பூட்டிய ரதத்தில் பயணிக்கின்றான். ரதமோ வேகமாக சென்றாலும்மெதுவாக செல்வதாகவே அவன் மனதிற்கு தோன்றுகின்றது. ரத ஓட்டியை கடிந்து கொள்கின்றான். அப்படி கடிந்துகொள்கையில் அவன் கையாளும் உவமைகள் மிகவும் ரசிக்கத் தக்கதாக  உள்ளது.

          இதோ பாடல்!


கடுவளைக்கும் கண்ணி கார் என்ற போதினில் கை கழன்று
விடுவளைக் குள்ள விசையிலை யேமிதி லைச்சிலையே.
நடுவளைக்  கும்கொண்டல் நாரணன் கேரள நாட்டில் அண்டத்
தொடுவளைக் கும்பரித்  தேர்வல வா! நமது ஊர்பரிக்கே.


விளக்கம்: மிதிலை  நகரத்தில் சனகனிடம் இருந்த வில்லை நடுவில் பற்றி வளைத்து ஒடித்த மேகம் போன்ற வண்ணமுடைய திருமாலின் சேர நாட்டில், உலகம் முழுவதும் சுற்றிவரும் இயல்புடைய  குதிரைப் பூட்டப்பட்ட தேரை ஓட்டும் தேர்வலவனே!  நஞ்சினை தன்னிடத்தில் கொண்ட  கண்ணையுடைய தலைவி, “கார்” என்றதும்  (கார்= அச்சம்) அவளுடைய கைகளில் இருந்து கழன்றுவிழும் வளையலின் வேகம் கூட நமது  தேரில் பூட்டிய குதிரைகளுக்கு இல்லையே ! 

   தன்னுடைய வேலையை முடித்து திரும்பும் தலைவன் தலைவியை சந்திக்க ஆவலாக இருக்கின்றான். ஆனால் தேர் வேகமாக செல்லவில்லை என்று அவன் மனம் சொல்கின்றது. அவனுடைய மனோவேகத்திற்கு தேர் வேகம் இல்லை! அதற்காக  இப்படி சொல்கிறான் பெண்களின் கைகளில் இருந்து கழன்று விழும் வளையல்களின் வேகம் கூட நம்முடைய குதிரைகளுக்கு இல்லையே? இன்னும் விரைவாக குதிரைகளை செலுத்து என்கின்றான் தலைவன்.

   சிறப்பான உவமைகள் அல்லவா?

சென்றவாரம் கேட்டிருந்த விடுகவிக்கான விடை: பசுவினுடைய நெய்யை பூனை குடித்தது. தேனை உண்ட ஈ அதில் விழுந்து மயங்கி கிடந்தது.  கன்னியின் கூந்தலில் பூத்த காயை வெட்டினார்கள் அது வாழை ஆகும்

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவுகுறித்த கருத்துக்களை  பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. #பெண்களின் கைகளில் இருந்து கழன்று விழும் வளையல்களின் வேகம் கூட நம்முடைய குதிரைகளுக்கு இல்லையே?#
    தலைவன் இரத்தமும் என் இரத்தமும் சேம் பிளட் ,யோசிச்சா இப்படியில்லே யோசிக்கணும் :)

    ReplyDelete
    Replies
    1. பகவான் ஜீ நீங்களுமா?
      சொல்லவேயில்லை சேம் பிளட் செம்,,,,,,,,
      நன்றி.

      Delete
  2. வலைச்சர ஆசிரியரானதற்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. கார் என்றால் காலத்தைக் குறிப்பதாக நினைத்தேன். இப்படியும் ஒரு பொருள் உள்ளதை தற்போதுதான் அறிந்தேன். நல்ல பதிவு. நன்றி.

    ReplyDelete
  4. அழகான விளக்கம்... விடையைக் காண ஆவலுடன் இருந்தேன்... இன்று அறிந்தேன்... நன்றி...

    ReplyDelete
  5. அருமையானதோர் பாடலை அறிமுகம் செய்ததற்கு நன்றி.

    பாடலின் சுவையை ரசித்து ருசித்தேன்.

    ReplyDelete
  6. சுவாரஸ்யமாகவே இருந்தது நன்றி ! அழகான உவமை!நன்றி பதிவுக்கு !

    ReplyDelete
  7. வணக்கம்,
    வாழ்த்துக்கள், அருமையான விளக்கம்,
    வலைதள ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துக்கள்,
    நன்றி.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!