இனியவை நாற்பது! இன்று எனது பிறந்த நாள்!

இனியவை நாற்பது! இன்று எனது பிறந்த நாள்!


தளிர் வாசக அன்பர்களே மீண்டும் ஓர் சுயபுராணந்தேன்! கோச்சுக்காதீங்க! இன்று எனது பிறந்தநாள் நாற்பதை நிறைவு செய்கின்றேன். 3-7-75ல் ஓர் நள்ளிரவில் என் அம்மாவை மிகவும் தொந்தரவு செய்து பிறந்த நான் இன்று நாற்பதைக் கடந்துவிட்டேன் என்பது எனக்கே ஆச்சர்யமாக இருக்கின்றது. பிறந்தநாள் கொண்டாட நானெல்லாம் பெரிய ஆள் இல்லை என்றாலும் நினைவு தெரிந்தது முதல் பிறந்தநாள் கொண்டாடித்தான் வருகின்றேன். என் இருபத்தைந்தாவது வயதில் தொடங்கி ஓர் பத்துவருடம் என் டியுசன் மாணவர்களுடன் பிறந்தநாள் கொண்டாடி அவர்களுக்கு பரிசளிப்பேன். பெரியதாய் எதுவும் கிடையாது பேனா,பென்சில் ரப்பர் போன்றவைகள்தான் ஆனால் அதில் கிடைத்த மகிழ்ச்சி பெரிதானது.

    இந்த வருட பிறந்தநாள் மேலும் சிறப்பானது. என் தங்கைக்கு திருமணம் ஆகி குழந்தைப்பேறு பத்து ஆண்டுகள் தள்ளிப் போனது. தற்போது ஆண் குழந்தை பிரசவித்து அதற்கு இன்று பெயர்சூட்ட உள்ளோம். மாமனின் பிறந்தநாளன்று மருமகனுக்கு பெயர் சூட்டுவிழா! இரட்டைக் கொண்டாட்டங்கள். இதனால் இன்று இணையப்பக்கம் தலைக்காட்ட மாட்டேன். அனைவரும் பொறுத்துக் கொள்ளுங்கள்.

   அதென்ன இனியவை நாற்பது என்கிறீர்களா? இந்த நாற்பது வயதில் நமது வாழ்க்கையில் பிடித்ததும் பிடிக்காததுமாய் எத்தனையோ நடந்து இருக்கும். பிடிக்காமல் போனதை விட்டுத் தள்ளுவோம். பிடித்ததை மனதிற்கு இனியதை பிடித்துக் கொள்வோம்.  சின்னவயதில் அம்மா எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டி புது டிரெஸ் போட்டு( சில சமயம் இருக்காது) பாயசம் வைத்து சாமி கும்பிட்டது ஓர் இனிய அனுபவம். அந்த நாட்கள் மீண்டும் திரும்பாது.

   ஜூலை மாதத்தில் 93ம் வருடம்  என்று நினைக்கிறேன் எனது முதல் சிறுகதை கோகுலத்தில் வெளியானது.  ஜூலை 94 ல் பொன்னேரியில் கம்ப்யூட்டர் படித்தது மறக்க முடியாத ஒன்று. 95,ம் வருடம் நடந்த அக்காவின் திருமணம், திருப்பதி சென்றது  ஆகியவையும் இனிமையான நினைவுகள்.  96 ஆம் வருடம் ஆடிய கிரிக்கெட், 97 ல் நண்பர்கள் சங்கத்தில் விழா நடத்தியது. 99ம் வருடம் கோயிலில் நடந்த பங்குனி உத்திரத் திருவிழா,2000 ஆண்டில் டெலிபோன் பூத் வைத்தது 2001ல் நடைபெற்ற தங்கையின் திருமணம், குமுதம் பக்தியில் எங்கள் ஊர் கோயில் பற்றி எழுதியது, 2004ல் டியுசனில் படித்தவர்கள் பத்தாம் வகுப்புத்தேர்வில் பள்ளியில் முதல்மாணவர்களாக வந்தது. முதலில் வாங்கிய டிவிஎஸ் பிப்டி! 
         2005ல் தங்கையுடன் சென்ற இராமேஸ்வரம் சுற்றுலா, மீண்டும் கம்ப்யூட்டர் டீச்சர் கோர்ஸ் படித்தது, 2006-07களில் சில பள்ளிகளில் ஆசிரியர் வேலை செய்தது, 2008ல் திருமணம், 2009ல் வேதஜனனி பிறந்தது என்று எத்தனை எத்தனை நல்ல நினைவுகள்! 2011 ல் முதல் முதலாய் தளிர் வலைப்பூ தொடங்கியது, வலைச்சரத்தில் திரு மேலையூர் ராஜாவால் அறிமுகம் ஆனது. தமிழ்தோட்டம் என்ற கருத்துகளத்தில் நானூறுக்கும் மேல் ஹைக்கூ கவிதைகள் எழுதி நண்பர்களை பெற்றது.2012ல் எங்கள் ஊர் கோவில் கும்பாபிஷேகம் முன் நின்று நடத்தியது, மாலைமலரில் வெளிவந்த கட்டுரை, 2013ல் பதிவர் சந்திப்பில் கலந்துகொண்டது, பாக்யா வார இதழில் வந்த  என் படைப்புக்கள் புதிதாக வாங்கிய ஹீரோ ஹோண்டா பைக் 

  இப்படி இந்த நாற்பது வருடங்களில் நிறைய இனிமையான நினைவுகள் சேர்ந்திருக்கும் அந்த நினைவுகளோடு சென்றவருடம் ஒன்று சொல்லியிருந்தேன்.சொந்தமாக ஓர் வீட்டு மனை வாங்க வேண்டும் என்று. உங்களின் ஆசியினால் அது நிறைவேறிவிட்டது.  இனி வீடு கட்ட வேண்டும்.

குறைந்த பட்சம் எனது சில படைப்புக்களையாவது மின் நூலாகவாது வெளியிட வேண்டும். இது இரண்டும் இந்த வருட ஆசைகள். வலைச்சரத்தின் ஆசிரியராக இரண்டாவது முறை பணியாற்ற உள்ளது இந்த வருடத்தின் நிறைவேறிய ஆசை!

     அச்சு ஊடகங்களில் என்னுடைய படைப்புக்கள் சிலவற்றை இந்த வருடம் அரங்கேற்றிவிட வேண்டும் என்பது ஓர் தீராத ஆவல். நிறைவேறும் என்று நினைக்கின்றேன்.

   மற்றபடி தளிர் தளம் இன்னும் மெருகேற்றி வெளியிட ஆவல் உள்ளது. வலைதளத்தில் எழுதி எழுதாமல் உள்ள அனைத்து நண்பர்களும் மீண்டும் எழுதவேண்டும் வலையுலகம் செழிக்க வேண்டும் என்பதும் விருப்பம்.

  இவையெல்லாம் நிறைவேறவேண்டும்! அதோடு கொன்றைவனத் தம்பிரான் மீண்டும் வந்து தளிரின் மாறுதல் பற்றி ஓர் கருத்து வைக்க வேண்டும் என்பதும் விருப்பம். இதெல்லாம் நிறைவேற இறைவனை பிரார்த்தித்துக் கொள்கின்றேன்.

   மருமகனுக்கு பெயர் சூட்ட சென்னை செல்கின்றேன்! மாலையில் முடிந்தால் வலையில் சந்திக்கின்றேன்! மருமகனுக்கும் உங்களின் வாழ்த்துக்களை சேர்த்து சொல்லுங்கள்! நன்றி!


Comments

  1. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சகோ. இனியவை நாற்பதோடு இன்னும் இனியவை அறுபது சேரட்டும்!
    //இனி வீடு கட்ட வேண்டும்.

    குறைந்த பட்சம் எனது சில படைப்புக்களையாவது மின் நூலாகவாது வெளியிட வேண்டும். இது இரண்டும் இந்த வருட ஆசைகள். // உங்கள் இந்த இரண்டு ஆசைகளும் இவ்வாண்டில் நிறைவேற மனமார்ந்த வாழ்த்துகள் சகோ.
    உங்கள் மருமகனுக்கும் உங்கள் தங்கைக்கும் அன்பின் வாழ்த்துகள். என்ன பெயர் வைத்தீர்கள் என்று சொல்லுங்கள்.

    ReplyDelete
  2. மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். பதிவைப் படிக்கும்போது நேரில் உரையாடுவது போல் உள்ளது. விழா சிறக்க வாழ்த்துக்கள்.
    தினமணியில் வெளியான எனது முதல் பேட்டியை http://www.ponnibuddha.blogspot.com/2015/07/blog-post.html என்ற இணைப்பில் காண அழைக்கிறேன்.

    ReplyDelete
  3. உங்கள் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேற மனமார்ந்த நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
  4. ஐயா வணக்கம்.

    எண்ணும் செயலெல்லாம் எட்டிப் பிடித்துவிடும்
    வண்ணக் கனவுகளில் வாழ்வினிக்க - வானத்
    தொளிரும் மதிபோல்‘எம் உள்ளிருள் நீக்கித்
    தளிர்சுரேஷ் வாழ்க தழைத்து.

    உங்களை விட இளையவன் என்றாலும் மனமாற வாழ்த்துகிறேன்.

    எல்லா நலமும் பெற்று நீடு வாழ்க.

    பக்குவம் பெற்ற தங்கள் எழுத்துகள் பல்லோரைச் சென்றடையட்டும்.

    நன்றி.


    நன்றி.

    ReplyDelete
  5. வலையுலகில் சுறுசுறுப்பான பதிவர் நீங்கள் .உங்கள் அனுபவங்கள் அனைத்தும் எல்லோரும் படிக்கும் வண்ணம் எளிமையாய் பதிவுகளாய் தருவதில் வல்லவராய் விளங்குகிறீர்கள்.
    மனமார்ந்த வாழ்த்துகள்

    ReplyDelete
  6. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  7. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்! இறையருளால் நலமும் வளமும் தொடர பிரார்த்திக்கிறேன்.

    ஞாபகம் இருக்கின்றதா தோழரே!

    ReplyDelete
  8. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் நண்பரே..
    தங்களின் ஆசைகள் நிறைவேறவும் வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் சகோ,
    தங்கள் மருமகப்பிள்ளைக்கும்,
    தங்களின் நினைவுகள் எல்லாம் ஈடேறட்டும்,
    வாழ்த்துகளுடன்,
    நன்றி.

    ReplyDelete
  10. தளிர்

    மனம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    எண்ணங்கள் நிறைவேற இனிமைகள் வழிந்தோட வாழ்த்துக்கள்.
    கோ

    ReplyDelete
  11. தங்களின் எண்ணங்கள் அனைத்தும் ஈடேற இந்த இனிய நாளில் வாழ்த்துக்கிறேன்.

    ReplyDelete
  12. இனியபிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் நண்பரே
    நல் எண்ணங்கள் இனிதே நிறைவேறும்

    ReplyDelete
  13. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்....

    முக நூல் மூலம் ஏற்கனவே சொல்லிவிட்டாலும் இங்கேயும் இன்னுமொருமுறை!

    ReplyDelete
  14. வாழ்த்து சொன்ன அனைத்து நண்பர்களுக்கும் எனது இனிய நன்றிகள்! நேற்று மருமானின் நாமகரண வைபவத்தில் சென்னையில் இருந்ததால் உடனடி நன்றி செலுத்த முடியவில்லை! இன்றும் நாளையும் கூட பிசியான செட்யூல்! உங்கள் ஆசிகளுடன் மருமானுக்கு கௌசிக் என்ற பெயர் சூட்டியுள்ளோம்! நன்றி!

    ReplyDelete
  15. தாமதமான பிறந்தநாள் வாழ்த்துகள். மருமகனுக்குப் பெயர் சூட்டு விழா இனிதே நிறைவேறி இருக்கும் என எண்ணுகிறேன். உங்கள் ஆசைகள் எல்லாம் நல்லபடி நிறைவேற மனமார்ந்த வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!