Tuesday, June 30, 2015

இந்திக்காரன் எடுத்த வாந்தி!

சென்ற சனிக்கிழமையன்று சென்னைக்கு பிரயாணம் செய்யும் பாக்கியம் வாய்த்தது எனக்கு. திருமணமாகி பத்துவருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த தங்கை ஆண் மகவை வெள்ளியன்று பெற்றெடுத்ததால் மாமா ஆனேன். மருமகனைப் பார்க்க சென்னை பயணம்.

   முன்பெல்லாம் எங்கள் ஊரில் இருந்து சென்னைக்கு செல்ல அதிகபட்சம் நாற்பத்தைந்து நிமிடங்கள் பிடிக்கும். மாலை டிராபிக் நெரிசல் என்றால் கூட ஒன்றேகால் மணிநேரத்தில் சென்னையை அடைந்துவிடலாம். இது நான் சென்னைக்கு பேருந்து ஏறும் இடத்தில் இருந்து பாரிமுனை சென்றடைய ஆகும் நேரமாகும்.

   ஆனால் இப்போதெல்லாம் இரண்டரை மணிமுதல் மூன்று மணிநேரம்வரை சென்னை செல்ல நேரம்செலவிட வேண்டியதாகின்றது. சென்னை மாநகரமும் முன்பைவிட நெரிசல் அதிகமாகி சாலைகள் குறுகிப்போய் கிடக்கின்றது.

   முன் தினமே அடையாறு மலர் மருத்துவமனைக்கு சென்று வந்திருந்த என் தந்தை சொன்னார் 50 ரூபாய் டிக்கெட் தான் பெஸ்ட் என்று. காலையில் கிளம்ப முடியவில்லை! பதினோறு மணி அளவில் கிளம்பி வண்டியை சர்வீஸ் செய்ய மெக்கானிக் ஷெட்டில் விட்டுவிட்டு பெரியபாளையம் கூட்டுரோட்டில் மெக்கானிக்கையே டிராப் செய்ய சொல்லி இறங்கியபோது மணி 11.45. மாநகர பேருந்துகள் ஏதும் உடனே வரவில்லை! வந்த தனியார் பேருந்தில் ஏறி செங்குன்றம் வந்தபோது 12 ஐ கடந்திருந்தது மணி. புறப்பட்டுக் கொண்டிருந்த 242 என்ற மாநகரப்பேருந்தில் ஏறியது பெருந்தவறு ஆகிப்போய்விட்டது. முன் இருக்கைகள் நிரம்பி விட்டதால் பின்னால் இருந்த இருக்கையில் அமர்ந்தேன். வண்டி நிரம்பியிருக்க அதில் யாரும் அமரவில்லையே ஏன் என்று அப்புறம்தான் தெரிந்தது. டயர்மீது அமைந்த இருக்கை அது.

       மாநகரப்பேருந்து தனக்கே உரிய லட்சணங்களுடன் இருந்தது. ஓவராக சத்தம் போட்டு வண்டியின் அத்தனை அங்கங்களும் ஆடியதோடு என்னையும் ஆட்டுவித்தது. மனைவி போட்டுக் கொடுத்த ஹார்லிக்ஸ் வெளியே வந்துவிடும் போலத்தோன்றியது. 50 ரூபாய் டிக்கெட் ஒன்று வாங்கிக் கொண்டேன். எனக்கு பின் இருக்கையில் இரண்டு வாலிபர்கள் பான் மசாலாவை வாய் நிறைய வைத்திருந்தனர். அவர்கள் செண்ட்ரலை  செஹ்ண்ட்ரல்.. என்று சொல்லும்போதே கண்டக்டர் மீது பன்னீர் தெளித்தனர். வடமாநில இளைஞர்கள் அவர்கள். வாய் நிறைய பாக்குப் போட்டுட்டு எங்க போறன்னு கேட்டா சொல்ல முடியாத அளவுக்கு இருக்கீங்க?  செண்ட்ரலா! இந்தா டிக்கெட்! நமக்குன்னு வந்துவாய்க்குது பாருங்க! என்று புலம்பினார் கண்டக்டர்.

      இன்னும் கொஞ்சம் நகர்ந்து செல்கையில் ஆதித்தனார் நிறுத்தத்தில் இன்னொரு வட இந்தியர் தன் மனைவி இரண்டு குழந்தைகளுடன் ஏறினார். அவர்கள் ஊருக்குச் செல்கிறார் போல லக்கேஜ் நிறைய இருந்தது. பெண்கள் இருக்கையில்  மனைவியையும் குழந்தைகளையும் அமர்த்திவிட்டு லக்கேஜ் வைக்க இடம் தேடினார். கண்டக்டர் டிரைவர் இருக்கை அருகே இருந்த ஒருநபர் இருக்கையில் அவரை அமர்த்தி அங்கே லக்கேஜ்களை வைக்கச் சொன்னார். 
டிக்கெட்டும் கொடுத்து முடித்தார். இதற்கிடையில் அவர் மனைவியிடம் அமர்ந்திருந்த பையன் அவரிடம் சென்று அமர்ந்தான்.

     வண்டி புழலைக் கூட நெருங்கவில்லை! அந்த வட இந்திய வாலிபரின் மகன் வாந்தி எடுத்துவிட்டான். அந்த வாலிபரின் பேண்ட் மட்டுமின்றி அந்த இருக்கை முழுக்க பாழ்!  உடனே  டிரைவருக்கு கோபம் பொத்துக்கொண்டுவந்துவிட்டது. “ஏய்! இதெல்லாம் யார் கழுவறது? துடைடா! என்று ஏக வசனத்தில் பேச அந்த வட இந்தியர், மவுனித்தார். டிரைவருக்கு கோபம் அதிகரித்துவிட்டது. இப்படி பஸ்ல வாந்தி எடுத்தா எப்படி? அடுத்தவங்க வர வேண்டாம். குழந்தைக்கு கண்டதை ஏன் வாங்கி கொடுத்து கூட்டி வர்றீங்க!  மரியாதையா வாஷ் பண்ணு!  லக்கேஜ் பேக்ல ஏதாவது துண்டு இருந்தா எடுத்து க்ளீன் பண்ணு என்றார்.

      அந்த வட இந்தியர் முழித்தார்.  இதையெல்லாம் கேட்டுக்கொண்டு அந்த இளைஞரின் மனைவியும் எதுவும் பேசமுடியாமல் அமர்ந்திருந்தனர்.  ஏய் சும்மா இருக்கே! உன் வீடா இருந்தா இப்படியே விட்டுருவியா? ஏதாவது பேப்பர் போட்டு துடைடா! மீண்டும் கத்தினார் டிரைவர். உன்னை செண்ட்ரல்ல இறங்க விடமாட்டேன்! வண்டியை சுத்தம் பண்ணிட்டுதான் போகனும்.  உன் சட்டைப் பையில் கர்சீப் இருக்குது இல்லே அதுல துடை! சொல்லிக் கொண்டே போனார்.

     அந்த வட இந்தியருக்கு பாதி புரிந்தும் புரியாத நிலை! இதற்குள் இந்தி தெரிந்த ஒருவர் நியுஸ்பேப்பர் போட்டு துடை! என்று அவருக்கு இந்தியில் சொன்னார். அந்த வாலிபனோ பேப்பர் இருந்தா கொடுங்கள் துடைத்துவிடுகின்றேன்! என்று சொல்ல இவர் மொழிபெயர்த்தார். பேப்பர் கொடுத்தா துடைச்சிடறேன்னு சொல்றான்.

   உடனே கண்டக்டர் கேலியாக சொன்னார். ஏம்பா டிரைவர்! தினத்தந்தி, தினமலர் ஏதாவது வாங்கிக் கொடு! தம்பி துடைச்சிருவாரு! வர்றப்ப அப்பாவியாதான் வர்றானுங்க! சென்னை தண்ணி குடிச்சதும் கொழுப்பு அதிகமாயிருது! என்றார்.

    இடையில் ஒரு டிராபிக்கில் பஸ் மாட்ட இந்தி வாலிபரை கீழே இறங்கி மண் கொண்டுவந்து வாந்தி மீது கொட்ட சொன்னார்கள். அவரும் செய்தார். இதையெல்லாம் பார்த்துக் கொண்டு நான் உட்பட அனைவருமே அமைதியாகத் தான் இருந்தோம். பின்னர் யோசித்தபோதுதான் தவறு உரைத்தது.

   பஸ்ஸில் ஒவ்வாமையினால் சிலருக்கு வாந்தி வருவது சகஜம்தான். நம்மவர்கள் இதே போல வாந்தி எடுத்தால் கண்டக்டரும் டிரைவரும் இதே போல ஏசுவார்களா? ஏசினால்தான் சும்மா இருப்பார்களா? மொழி தெரியாதவன் பிழைக்கவந்தவன் என்பதால் இத்தனை கேவலமாக நடத்துவதா?

     எத்தனையோ குடிகாரர்கள் குடித்துவிட்டு நாற்றமெடுக்க பஸ்ஸில் வாந்தி எடுத்து வைக்கிறார்கள். நான் கண்டிருக்கிறேன். இது ஓர் சிறுவன் எடுத்த வாந்தி. மற்றவர்களுக்குத் தொந்தரவுதான் ஆனால் இதை நாகரீகமாக சொல்லி துடைக்க சொல்லி இருக்கலாம். அருகில் டீக்கடை இருந்தால் நிறுத்தி தண்ணீர் வாங்கி கழுவி இருக்கச் சொல்லலாம் அதை விடுத்து இப்படி வசை பாடி மிரட்டி அவரை  பணிய வைத்தது  தவறாகவேத் தோன்றுகின்றது.
    இப்படி  கடமை வீரர்களாக இருக்கும் கண்டக்டர்கள் யாராவது டிக்கெட் வாங்கினார்களா என்று கண்டுகொள்வது கூட கிடையாது இருந்த இடத்தைவிட்டு நகர்ந்துவருவது கிடையாது. அன்று 50 ரூ டிக்கெட் வாங்கி பையில் வைத்துவிட்டேன். திரும்பி வரும் வரையில் ஒரு கண்டக்டர் கூட நீ டிக்கெட் எடுத்தாயா? என்று கேட்கவே இல்லை. இந்திக்காரன் எடுத்த வாந்தி என்பதால் இவர்களுக்கு இளப்பம் ஆகிவிட்டது போல!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Monday, June 29, 2015

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

1.இறங்கிவராவிட்டால்
ஏறிவிடுகிறது விலைவாசி!
மழை!

2.சவலையான பூமி!
பெய்ய வில்லை!
மழை!

3.குளிரெடுத்த மேகத்தால்
குளிர்ந்துபோனது பூமி!
மழை!

4.விதைத்தவன் சும்மா இருக்க
அறுவடை செய்தது பூமி!
மழை!

5.கடல்நீரை
குடிநீராக்கியது
மழை!

6.மேகப்பூக்கள் பூத்ததும்
மணத்தது மண்!
மழைத்தூறல்!

7.மிதிபட்டதும்
ஓலமிட்டன!
சருகுகள்!

8.உதிரும்வரை இறகானது!
உதிர்ந்தபின் உரமானது!
சருகுகள்!

9.பூத்துக் கொட்டியது
பொறுக்கமுடியவில்லை!
மத்தாப்பூ!

10.கால் ஒடிந்ததும்
தூக்கி வீசினார்கள்!
நாற்காலி!

11.மண்சோறு படைத்தது
நிறைவில் கடவுள்!
குழந்தை!

 12. மறைத்துக்கொண்டது
  நீர்!
  ஆழம்!

 13. இலைகள்
   அசைகையில் பிறந்தது
   காற்று!

 14. கற்பனைச்சிறகுகள்!
  கட்டிவைக்கிறது தொலைக்காட்சி!
  குழந்தைகள்!

 15. குழந்தைக்கு சோறுட்டுகையில்
    குழந்தையாகிறாள்
    அம்மா!

  தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்!


Sunday, June 28, 2015

விநாயகர் தியாகி ஆனது எப்படி? தித்திக்கும் தமிழ்! பகுதி 12

விநாயகர் தியாகி ஆனது எப்படி? தித்திக்கும் தமிழ்! பகுதி 12


இன்று யாராவது ஒரு பத்து ரூபாய் கொடுத்துவிட்டால் போதும் வள்ளல் என்றும் கொடையாளர் என்றும் பாரி என்றும் பலவிதமாக துதி பாடுகின்றனர்.  அன்றும் புலவர்களுக்கு கொடையளித்த பல புரவலர்கள் புகழ்ச்சியை விரும்பினர் புலவர்களும் புரவலர்களை விதவிதமாக புகழ்ந்து பாடி அவர்களை மகிழ்வித்து கொடை பெற்று மகிழ்ந்தனர். இவ்விதம் புகழ்கையில் அப்புலவர்களின் தமிழ் அறிவு மட்டும் இன்றி புரவலர்களின் தமிழ் அறிவும் நம்மால் அறிய முடிகின்றது. பொருத்தமானவரை பற்றியே புகழ்ந்தார்களே அன்றி எல்லோரையும் புகழவில்லை. 

  துரிதகவி திருமலைக் கொழுந்து கவிராயர் என்று ஒருவர். அவரை ஆதரித்த வள்ளல் விநாயக வள்ளல். விநாயக வள்ளலைப் பாடி சிறப்பித்துள்ளார் இந்த கவிராயர். விநாயக வள்ளல் கட்டிய சத்திரத்தைப் பற்றியும்  பாடுகின்றார். சிவபெருமான், முருகன் போன்றோருக்கு பல கண்கள் உண்டானது இந்த விநாயக வள்ளல் கட்டிய சத்திரத்தின் அழகை  பார்க்கவே என்று உயர்வு நவிற்சியில் சிறப்பிக்கின்றார்.
விநாயக வள்ளலை  கர்ணன், பாரி, காரி என்றெல்லாம் சிறப்பிக்க முடியாது. அவர் ஓர் தியாகி என்று சொல்லுகின்றார் வள்ளல் எப்படி தியாகி ஆனார்? அவர் செய்த தியாகம் தான் என்ன? இந்த பாட்டிலே  படித்து ரசியுங்கள்!

    எல்லார்க்கும் கன்னம் இருந்திட, இவனைக்
      கன்னன் என இசையாது; ஓர்ந்து
   வில்லாரும் காரிஎனில், வடுகனையும்
      சனியனையும் விளக்கும்; கீர்த்திச்
   செல்லாரு பாரி எனில் இல்லா
      ளாம்காளத் தீச்சுட்டுக் கொல்லும்;
  பல்லாரும் புகழ் மயிலை விநாயகனைத்
    தியாகிஎனப் பகரலாமே!

அனைவருக்கும் ‘கன்னம்’ என்ற முகத்தின் ஓர் உறுப்பு அமைந்துள்ளது. ஆதலால் விநாயகவள்ளலை கன்னன் என்று சொல்ல முடியாது. வில் வீரரான காரி என்று அழைக்கலாம் என்றால் அந்தச்சொல்  பைரவரையும் சனீஸ்வரரையும் குறிக்கும். ஆதாலால் இதுவும்பொருந்தாது. புகழ் மிக்க பாரி வள்ளல் என்று அழைக்கலாம் என்றால் அச்சொல்லுக்கு “இல்லாள்” என்ற பொருள் உண்டு. அப்படியானால் பொருள் இல்லாதவன் என்றாகி வறுமை என்னும் கொடுமையான விஷமான தீ சுட்டுக் கொல்லும். எனவே விநாயக வள்ளலை தியாகி என்று அழைக்கலாம். அப்படி அழைத்தால் கொடையாளி என்று பொருளாவதால் பொருத்தமாக இருக்கும் என்கிறார்.

 இந்த விநாயக வள்ளல் சென்னை மயிலையில் வசித்தவர் என்று அறிய வருகின்றது.

சென்றவாரம் ஓர் விடுகவி பார்த்தோம். அதற்கான விடை மதுரை. நண்பர்கள் திண்டுக்கல் தனபாலன், பகவான் ஜி உள்ளிட்ட பலர் சரியாக கணித்து அசத்தி இருந்தனர். விடுகவி என்றால் என்ன என்று ஊமைக்கனவுகள் தளத்தில் அருமையாக விளக்கம் கொடுத்திருந்தார் நண்பர் விஜி அவர்கள். இன்று மீண்டும் ஓர் விடுகவி பார்ப்போமா?

விடுகவி:
ஆன்நெய்தனைப் பூனை அருந்தினதும் அல்லாமல்
பூநெய்தனை ஈஎடுத்தும் போனது வும்- மான் அனைய
கண்ணார் தலைஅதனில் காய்காய்த்து அறுத்ததுவும்
நண்ணா அறிந்து நவில்.

ஆனையைப் பூனையானது உண்டது. அந்த பூனையை ஈ தூக்கிச்சென்றது.  மான் போன்ற பெண்களின் தலையில் காய் காய்த்ததும் அறுத்தார்கள். இவற்றை என்னவென்று நன்கு அறிந்து சொல்வாயாக!
விடைகளை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்!

மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் இனிய இலக்கியச் சுவையுடன் சந்திப்போமா?


தங்கள் வருகைக்கு நன்றி! உங்களின் கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Saturday, June 27, 2015

ராணியின் முத்துமாலை! பாப்பா மலர்!

ராணியின் முத்துமாலை! பாப்பா மலர்!


அலங்காபுரி என்ற நாட்டின் ராணி நகைமுத்து. பெயருக்கேற்றார்போல நகைகள் அணிவதில் அளவற்ற ஆசை கொண்டவளாக இருந்தாள். உச்சி முதல் உள்ளங்கால் வரை ஆபரணங்களாக பொன், வெள்ளி, நவரத்தினங்களாக சூடிக்கொண்டு தன்னை அலங்காரம் செய்துகொள்வாள் அந்த ராணி.

   ஒரு சமயம் அரண்மனை நந்தவனத்து தோட்டத்தில் உள்ள குளத்தில் நீராடச் சென்றாள் நகைமுத்து. அப்போது தான் அணிந்திருந்த ஆபரணங்களை கழற்றிவைத்துவிட்டு நீராடினாள். நீராடி முடித்து கரை ஏறியதும் மீண்டும் ஆபரணங்களை அணியத் துவங்கினால் முத்து மாலை ஒன்றைக் காணவில்லை. அரசிக்கு ஆச்சர்யமாக இருந்தது. சேடிகள் நாலாபுறமும் தேடியும் முத்து மாலை கிடைக்கவில்லை. மாயமாக மறைந்த அந்த முத்து மாலையைத் தேடச்சொல்லி கணவனான ராஜாவிடம் சொன்னாள்.
  
   அந்த ராஜாவும் மனைவியின் சொல்லைத் தட்டாது காவலர்களை அனுப்பி முத்துமாலையைத் தேடச்சொன்னார். காவலர்கள் ஊரெல்லாம் அலசி தேடினர். கிடைத்தபாடில்லை.அப்போது ஓர் வழிப்போக்கன் காவலர்களை கண்டு மிரண்டு ஓடினான். அவன் தான் முத்துமாலையை எடுத்திருக்க வேண்டும் என்றெண்ணி அவனை பிடித்து மிரட்டினர் காவலர்கள்.

   வழிப்போக்கன் என்ன சொல்லியும் அவர்கள் நம்பத்தயாராக இல்லை! அவர்களின் அடி தாங்க முடியாது நான் தான் எடுத்தேன் என்று ஒத்துக்கொண்ட வழிப்போக்கன் அதை நகைக் கடை காரரிடம் கொடுத்துவிட்டேன் என்று சொன்னான்.

   உடனே காவலர்கள் ஓடிச்சென்று அந்த ஊரில் இருந்த நகைக்கடை காரனை பிடித்துவந்து விசாரித்தார்கள். அவன் இந்த வழிப்போக்கனை பார்த்ததே இல்லை என்று சொல்லியும் காவலர்கள் நம்பவில்லை. அவனை துன்புறுத்தினர். அதை தாங்க இயலாத நகைக்கடை காரன். வழிப்போக்கன் தன்னிடம் கொடுத்த மாலையை கோயில் பூஜாரியிடம் கொடுத்துவிட்டதாக கூறினான்.

உடனே கோயில் பூஜாரியை பிடித்துவந்து விசாரித்தார்கள். மரியாதையாக அரசியின் மாலையை கொடுத்துவிடு! என்று மிரட்டினார்கள். பூஜாரிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை! இல்லாத முத்துமாலைக்கு எங்கே போவது? பைத்தியம் பிடித்து போனது போல் ஆளான அவர் தப்பிக்க என்ன வழி என்று யோசித்து, நகைக்கடைக்காரர் தன்னிடம் கொடுத்த முத்து மாலையை அவ்வூர் நாட்டியக் காரியிடம் கொடுத்துவிட்டதாக கூறினார்.

  காவலர்கள் நாட்டியக்காரியை பிடித்து இழுத்துவந்து விசாரித்தனர். அவளுக்கு தூக்கிவாரிப்போட்டது. இந்த முத்து மாலையை கண்ணால் கூட காணவில்லை என்று சொன்னாள். பூசாரி தன்னிடம் எதுவும் கொடுக்கவில்லை என்று சத்தியம் செய்தாள்.

  இதனால் நால்வரையும் ஒன்றாக சிறையில் அடைத்தனர் காவலர்கள்.  சிறைக்குள் நால்வரும் பேசிக்கொண்டனர். என் மீது எதற்கு வீணாக பழிபோட்டாய்? என்று பூசாரியிடம் நாட்டியக்காரி கேட்டாள்.

  “ நகைக் கடைக்காரன் என் மீது பழிபோட்டதாலேயே நான் தப்பிக்க அவ்வாறு செய்ததாக பூசாரி சொன்னான்.
   வழிப்போக்கன் என்னை வீணாக மாட்டிவிட்டான்! அதனால்தான் நான் தப்பிக்க பூஜாரிமீது பழி போட வேண்டியதாகிவிட்டது என்று நகைக் கடைக்காரன் கூற
வழிப்போக்கனோ, வழியே சென்ற என்னை காவலர்கள் திருடன் என்று பிடித்து உதைத்து மிரட்டினர். அவர்களிடம் இருந்து தப்பிக்கவே இவ்வாறு சொன்னதாக கூறினான்.
   நால்வருக்குமே நாம் திருடர் இல்லை என்று தெரிந்தது. வீணாகவந்து அகப்பட்டுக் கொண்டோமே! என்ன செய்வது என்று யோசித்தனர். அந்த ஊர் நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.

   ஊர்ப்பெரியவர் வழக்கை விசாரித்தார். அவருக்கு நால்வரும் திருடர்கள் இல்லை என்று தெரிந்துவிட்டது. அப்படியானால் முத்துமாலையை எடுத்தது யார்? நந்தவனத்துக்கு உள்ளேயே திருட்டு நடந்திருக்கிறது! வெளியார் யாரும் உள்ளே வர முடியாது. திருடனும் உள்ளேயேத்தான் இருக்க வேண்டும் என்று ஊகித்த அவர் நந்தவனத்தை நன்கு கண்காணிக்க உத்தரவிட்டார்.

   நந்தவனத்து குளத்தின் அருகில் ஓர் ஆலமரம் இருந்தது. அதில் குரங்கு குடும்பம் ஒன்று இருந்தது. அந்த குரங்குகள் சண்டைப்போட்டு கீச் கீச் என சத்தம் எழுப்ப அதை விரட்ட காவலர்கள் சென்றனர்.
  அப்போது மரத்தின் அடியில் அமர்ந்திருந்த குரங்கு ஒன்று முத்து மாலையை அணிந்து அழகுபார்த்துக்கொண்டிருப்பதை கண்டனர். அது அரசியின் முத்துமாலைதான் என்று தெரிந்து போயிற்று.

  அரசி நகைகளை கழற்றிவைத்து குளத்தில் இறங்கிய சமயம் இந்த குரங்குதான் அதை எடுத்து சென்றிருக்க வேண்டும் என்று முடிவுக்கு வந்தனர். காவலாளிகளைக் கண்ட குரங்கு தன் கழுத்தில் அணிந்த முத்து மாலையை கழற்றி வீசிவிட்டு ஓடிவிட்டது. அதை எடுத்து சென்று அரசரிடம் ஒப்படைத்தனர் காவலர்கள்.
  முத்துமாலை கிடைத்ததும் நிரபராதிகள் விடுவிக்கப்பட்டனர். இதற்கு ஆலோசனை சொன்ன ஊர் பெரியவர் கவுரவிக்கப்பட்டார். அவசரகதியில் செயல்பட்ட காவலர்களை அரசன் கடிந்து கொண்டான். அரசியின் நகைப்பைத்தியமும் தெளிந்தது.

(செவிவழிக்கதை)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Friday, June 26, 2015

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 39

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 39


1.   உங்க பெண்ணோட கவுரவம் மூழ்கிப் போயிரப்போவுது மாமா வந்து காப்பாத்துங்கன்னு மாப்பிள்ளை சொன்ன போது புரியலை போனப்புறம்தான் புரிஞ்சிது!
  என்ன ஆச்சு?
பொண்ணோட நகை எல்லாத்தையும் அடகுவைச்சு மூழ்கி போற ஸ்டேஜ்ல இருக்குது!

2.   தலைவருக்கு மருத்துவ அறிவு கம்மின்னு எப்படி சொல்றே?
டாக்டர் உங்களுக்கு சுகர் கம்ப்ளைண்ட் இருக்குன்னு சொன்னதும் யாரு அவன் சுகர் எம்மேல கம்ப்ளைண்ட் கொடுக்க எவ்வளவு தைரியம்னு கேக்கறாரு!

3.   வீட்டுக்கு வந்த திருடன் உங்க பெண்டாட்டியை மிரட்டறதை பார்த்துக்கிட்டு சும்மாவா இருந்தீங்க?
நம்மளாலே முடியாததை மத்தவங்க செய்யறப்ப ஏற்படற ஒரு சின்ன சந்தோஷத்துல திகைச்சு நின்னுட்டேன் சார்!

4.   மாப்பிள்ளைக்கூட நெருங்கிப் பழக முடியலைன்னு சொல்றீங்களே என்ன காரணம்?
அவர் கொஞ்சம் “தூரத்து உறவா” போயிட்டாரே!


5.   இந்த படத்தோட கதையை திருடி எடுத்திருக்கேன்னு ஒருத்தன் வந்து நிற்க முடியாது!
  எப்படி?
பலரோட கதைகளை உருவி எடுத்திருக்கேனே!

6.   தலைவர் எதுக்கு இப்ப நூறு லிட்டர் பெவிக்காலுக்கு ஆர்டர் கொடுக்க சொல்றாரு?
கட்சியில பிளவு அதிகம் ஆயிருச்சாம்! ஒட்டிவைக்க பார்க்காராம்!

7.   மன்னர் வேட்டைக்கு போனபோது சேடிகளோடு சொக்கட்டான் ஆடியது ராணிக்குத் தெரிந்துவிட்டதாம்!
அப்புறம்!
அந்தப்புரத்தில் ராணி பல்லாங்குழி ஆடிவிட்டாராம்!

8.   அந்தக் ஸ்விட் கடையில கூட்டம் மொய்க்கும்னு சொன்னாங்க ஒண்ணும் காணோமே!
நல்லா பாருங்க! எல்லா ஸ்விட்லயும் எறும்பு மொய்க்கும்! அதைத்தான் சொல்லியிருப்பாங்க!

9.   வரவர நம்ம தலைவர் எதுக்கு அறிக்கை விடறதுங்கிறதுக்கு விவஸ்தை இல்லாம போயிருச்சு!
என்ன செய்தாரு?
குளிர்கால கூட்டத்தொடர்ல கலந்துக்கிற எம்.பிக் களுக்கு இலவசமா ஸ்வெட்டர் வழங்கனும்னு அறிக்கை விடறாரு!


10.  தரகரே! பையன்  ஒரு இடத்திலே ஸ்டெடியா நிக்க மாட்டான்னு சொல்றீங்களே! குடிப்பாரா?
நீங்க வேற! பையன் பஸ் கண்டக்டரா இருக்கான்றதைத்தான் அப்படி சொன்னேன்!

11. மன்னர் ஏன் வாயில் காப்போனை முறைக்கின்றார்?
புவனாதிபதி என்று சொல்லுவதற்கு பதில் வாய் குழறி புண்ணாதிபதி என்று உளறி விட்டானாம்!

12. வங்கியிலே போய் பயிர் கடன் கேட்டா இல்லைன்னு சொல்லிட்டாங்களா ஏன்?
  நான் அரைபடி பாசிப்பயிரு இல்ல கடனா கேட்டேன்!

13. சேனலை மாத்தி மாத்தி சீரியல்களை பார்க்கிறியே எப்படி கதை புரியும்?
எல்லா சீரியலும் ஒரே  கதையத்தானே எடுக்கிறாங்க! என்ன ஆக்டர்ஸ் மாறி நடிக்கிறாங்க அவ்வளவுதான்!


14. அந்தப் புரத்தில் நுழைந்த எதிரியை அரசர் மன்னித்துவிட்டாராமே!
ஆம்! அந்த தண்டணை ஒன்றே போதும் என்று விட்டுவிட்டாராம்!

15. காது குத்துவிழாவிற்கு தலைவரை கூப்பிட்டது தப்பா போச்சு!
  ஏன்?
புதுசா தானும் கடுக்கண் போட்டுக்கணும்னு ஆசைப்படறாரே!

16. அந்த டீக்கடை ஓனர் ஓர் முன்னாள் கவர்ச்சி நடிகைன்னு எப்படி சொல்றே?
ஆடையே இல்லாம டீ தர்றாங்களே!

17. தலைவர் தள்ளாமையினாலே அவதிப்படறாருன்னு சொல்றியே அப்படி ஒண்ணும் வயசாயிடலையே!
அவருடைய கார் அடிக்கடி நின்னு போயிடறது இறங்கி தள்ள ஆளில்லைன்னு சொன்னேன்!


18. அவரு இந்த ஆஸ்பத்திரியிலே சேரும் போது கோடீஸ்வரனா இருந்தார்!
  இப்ப எப்படி இருக்கார்!
லட்சாதிபதியா ஆயிட்டார்!

19. தலைவர் அடிச்ச பல்டியிலே நீதிபதி அசந்துட்டாரா எப்படி?
சொத்தே இல்லாம வந்து இவ்ளோ சொத்தை எப்படி சேர்த்தீங்கன்னு கேட்டதுக்கு சொத்தை இல்லாமத்தான் வந்தேன் ஆனா இப்போ பல்லுப்பூரா சொத்தையா ஆயிருக்கே அப்படித்தான்னு சொல்றாரு!

20. நம்ம ராப்பிச்சைக்கு ரொம்பவுந்தான் திமிரு அதிகமா போயிருச்சு!
ஏன் என்ன ஆச்சு?
சாப்பாடு ஒருமாதிரி இருக்கே இன்னிக்கு உங்க வீட்டுக்காரு சமைக்கலையான்னு கேக்கறான்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!Wednesday, June 24, 2015

தோனி விலக வேண்டுமா? கதம்ப சோறு! பகுதி 62

கதம்ப சோறு! பகுதி 62

மேகியைத் தொடர்ந்து காம்ப்ளான்!

         மேகிநூடுல்ஸில் தீங்கு விளைவிக்கும் பொருள் இருக்கிறது என்று தடைசெய்யப்பட்டது விற்பனைக்கு வைத்திருந்த பாக்கெட்டுகள் அழிக்கப்பட்டது. இத்தனை நாள் சும்மா இருந்த சுகாதாரத்துறை திடீரென விழித்துக்கொண்டு நடவடிக்கை எடுக்கின்றது. இதில் என்னென்ன உள்குத்துக்கள் இருக்கின்றன என்பது அவர்களுக்கே வெளிச்சம். இதைத்தொடர்ந்து இப்போது உ.பி யில் ஒருவர் வாங்கிய காம்ப்ளான் பவுடரில் புழுக்கள் நெளிந்தது என்று பகீர் பட வைக்கின்றார். அதே போல குளுக்கான் டி யிலும் புழுக்கள் இருந்தது அதையும் தடை செய்ய வேண்டும் என்று சொல்கிறார் ஒருவர். பையில் அடைக்கப்பட்ட உணவுப்பொருட்கள் எதுவுமே பாதுகாப்பானது அல்ல என்ற ஓர் விழிப்புணர்வு இப்போது மக்களுக்கு வந்திருக்கிறது அந்த வகையில் இந்த சம்பவங்கள் நல்லதுதான். அதே சமயம் இந்தப் பொருள் உடல்நலனுக்கு தீங்கானது என்று பாக்கெட்டில் பொறித்துவிட்டு விஷத்தைக் கூட விற்றுக் கொள்ளலாம் என்ற இந்திய சட்டம் வினோதமானது. சிகரெட், பீடி, குட்கா, பான், சாராயம் போன்றவை இந்தியச் சந்தையில் பொருளாதார அளவில் பெரிய இடத்தை பிடித்துள்ளன. இவற்றை முழுவதுமாக தடை செய்ய ஓர் அரசும் முன் வரவில்லை என்பது வெட்கமான விஷயம்.

உங்க ரூபாய் நோட்டுக்களை மாற்றிவிட்டீர்களா?

      2005க்கு முன் வெளியான ரூபாய் நோட்டுக்களை இந்திய ரிசர்வ் வங்கி திரும்பப்பெற்று அழித்து வருகின்றது. பாதுகாப்பு குறைபாடு மற்றும் கருப்பு பணப் புழக்கத்தை மட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. கடந்த டிசம்பர் மாதம் வரை இந்த நோட்டுக்களை மாற்ற வழங்கப்பட்ட அவகாசம் நீடிக்கப்பட்டது. அந்த அவகாசம் இந்த ஜூன் மாதம் 30ம் தேதியுடன் முடிகின்றது. இந்த நோட்டுக்களை வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம்.அல்லது நமது கணக்கில் டெபாசிட் செய்து கொள்ளலாம். ஜூன் மாதம் 30ம் தேதிக்குப்பின் இவ்வகை நோட்டுக்கள் இருந்தால் அவை செல்லாக்காசாகிவிடும். ரூபாய் நோட்டின் பின்புறம் மையத்தில் புதிய நோட்டாக இருப்பின் அந்த ஆண்டு அச்சிடப்பட்டிருக்கும். இந்த மாதிரி நோட்டுக்களே இனி செல்லுபடியாகும்.

மீண்டும் மவுசுக்கு வரும் வணிகவியல் படிப்புக்கள்!

     ஒருகாலத்தில் கல்லூரிகளில் ஓஹோவென்றிருந்த பி.காம் எனப்படும் வணிகவியல் படிப்புக்கள் மவுசிழந்து எடுப்பார் இல்லாமல் போயின. இஞ்சினியரிங் படிப்புக்களில் மாணவர்கள் கவனத்தை செலுத்தினர். இப்போது நிறைய இஞ்சினியர்கள் உருவாகி வேலைவாய்ப்பற்ற சூழ்நிலையில் கல்லூரிகளில் பிகாம் படிப்புக்கு கிராக்கி அதிகரித்து வருகின்றது. நூறு சீட் இருந்தால் மூவாயிரம் வரை விண்ணப்பங்கள் இந்த படிப்பிற்கு குவிகின்றது. இந்த துறையில் நிறைய வேலைவாய்ப்பு இருப்பதும் மேற்படிப்புக்கள் படிக்கையில் பொறியியல் துறையைவிட அதிக சம்பாத்தியம் பெறமுடியும் என்ற சூழ்நிலையில் அனைவரும் இந்த துறையை நாடுகின்றனர். வணிகவியலிலும் இப்போது பாடப்பிரிவுகள் பிரிக்கப்பட்டு மூன்று வகையில் பிகாம் பொது, பி.காம் கார்பரேட் செக்ரெட்டரிஷிப், பி.காம் கணிணி அறிவியல் என படிப்புக்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

தோனி விலக வேண்டுமா?

    வங்காள தேசத்திற்கு எதிராக தொடரை இழந்ததும் மீண்டும் தோனி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. அணியிலும் பிளவு இருப்பதாக சொல்கின்றனர். ஆஸ்திரேலியா போன்று நமது அணிக்கு இரட்டை கேப்டன்கள் என்ற பாணி சரிபட்டு வராது. ஓர் உறையில் இரண்டு வாட்கள் என்பதெல்லாம் இந்தியாவுக்கு பொருந்தாது. இந்த தொடரை பொறுத்தவரை தோனியின் தலைமை மீது குறை சொல்ல ஒன்றும் இல்லை என்றே தோன்றுகின்றது. விரைவாக ரன்களை சேர்க்கவில்லையே தவிர பொறுப்பில்லாமல் அவர் ஆடவில்லை. மிடில் ஆர்டரில் யாரும் சிறப்பாக ஆடி அணியை கரை சேர்க்கவில்லை. துவக்கத்திலும் ரோகித் சோபிக்கவில்லை! பந்துவீச்சிலும் அஸ்வினைத் தவிர யாரும் சிறப்பாக வீசவில்லை. இப்படி ஓர் அணியைவைத்துக் கொண்டு கத்துக்குட்டி அணியைக் கூட வெல்ல முடியாதுதான். இப்போது அனைவருக்கும் கோஹ்லி மீது ஓர் நம்பிக்கை ஏற்பட்டு அவரை தலைவராக்க முயல்கின்றனர். என்னைக் கேட்டால் கோஹ்லிக்கு டெஸ்ட் கேப்டன் பதவி கொடுத்தது கூட சரியில்லை. எளிதில் உணர்ச்சிவசப்படும் ஒருவருக்கு இந்திய அணியின் கேப்டன் பதவியை கொடுத்து நிறைய வாங்கிக் கட்டிக்கொண்டுள்ளது இந்திய அணி நிர்வாகம். தோனி தலைமையில்தான் நிறைய வெற்றிகளை குவித்துள்ளது. கேப்டனாகவும் அவர் ஜொலித்துள்ளார். பேட்ஸ்மேன் விக்கெட் கீப்பராகவும் நிறைய சாதனைகள் படைத்துள்ளார். இந்த ஒரு தோல்வி அவரது சகாக்கள் சரியாக விளையாடாமையால் நிர்வாகத்தினரின் ஒத்துழையாமை கொள்கையால் ஏற்பட்டிருக்கிறது. அதே சமயம் ரவீந்திர ஜடேஜா போன்றோருக்கு அவர் தரும் அதிக வாய்ப்புகள் சந்தேகத்தை உண்டாக்குகின்றன.ஆனாலும் இவர் ஒரு வீரரின் மேல் வைக்கும் நம்பிக்கை வியக்கவைக்கிறது தொடர்ந்து பலவாய்ப்புகள் வழங்கி திறமையை மெருகெற்றுவார். இந்திய அணிக்காக பல வெற்றிகளையும் கோப்பைகளையும் தந்த இவரை வெறுக்காமல் இன்னும் ஓர் வாய்ப்பை அவருக்குத் தரலாம் என்பது என் கருத்து.

 டீவி கார்னர்:

  டீவி பார்ப்பது வெகுவாக குறைந்து போய்விட்ட சூழலில் மே மாத இறுதிவாரத்தில் தங்கை வீட்டிற்கு வந்திருந்தார். அவர் ஜி தொலைக்காட்சியில் ஜோதா அக்பர் வைத்து பார்த்துக் கொண்டிருந்தார். நானும் ஓர் ஆர்வத்தில் பார்க்க அப்படியே மூழ்கிப் போனேன். அக்பராக நடிப்பவர் மிகச்சிறப்பாக நடிக்கின்றார். தூயதமிழில் வசனங்கள் காட்சியமைப்புகள் வெகு ஜோராக இருக்கின்றன.  அதே போல பாலிமரில் ஒளிபரப்பாகும் இருமலர்கள்.  போன்ற மொழிமாற்றத்தொடர்கள் ரசிக்கவைக்கின்றன. ஜெயா டீவியில் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஜெய் வீர ஹனுமான் மற்றும் அதைத்தொடர்ந்து ஒளிபரப்பாகும் ராமாயணம் போன்றவையும் சிறப்பாக இருக்கின்றன. இதே போன்ற தொடர்களை நம் டீவிக்கள் வழங்காமல் இன்னும் பழிவாங்குதல் போன்ற அரதபழசான கதைகளையே அரைத்துக் கொண்டிருப்பது வேதனை.

டிப்ஸ்! டிப்ஸ்! டிப்ஸ்!

பூத்த முருங்கை பூக்கள் உதிர்ந்து காய்கள் காய்க்க வில்லையா? பெருங்காயம் சிறிதளவு எடுத்து வேரின் அடிப்பாகத்தில் தோண்டி புதைக்கவும். நீரூற்றிவிடவும். கூடியவிரைவில் காய்க்க ஆரம்பிக்கும்.

பிரம்பு நாற்காலிகள் தொய்ந்து போகாமல் இருக்க முதலில் சிறிது சோப்பு நீரால் நன்கு துடைத்து பிறகு இளஞ்சூடான உப்பு நீரால் துடைத்து வெயிலில் காய வைத்தால் பழைய நிலைக்கு வந்துவிடும்.

மேசைகளில் உள்ள இழுப்பறைகளை சுலபமாக திறந்து மூட ஓரங்களில் சிறிது சோப்பு அல்லது மெழுகைத் தேய்த்தால் சுலபமாக திறந்து மூடலாம்.

கண்ணாடிகளை ஒரு துண்டு உருளைக்கிழங்கைக் கொண்டு நன்கு தேய்த்து துடைத்தால் கண்ணாடி பளபளக்கும்.

கைகளில் பெயிண்ட் கரையா? சமையல் எண்ணையால் நன்கு தேய்த்தால் கறை மறைந்து போகும்.

ஊசியில் நூல் கோர்ப்பதற்கு முன் நூலின் முனையை நகபாலிஷில் நனைத்து பின் கோர்த்தால் ஊசியில் எளிதாக நூல் நுழையும்.

கிச்சன் கார்னர்!

வெஜ் பணியாரம்

 தேவையானவை:  இட்லிமாவு 2கப், துருவிய கேரட் கால் கப், நறுக்கிய வெங்காயம் 2 டேபிள் ஸ்பூன், தனி மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன்
கடுகு உளுந்து, கடலைப்பருப்பு- தாளிக்க, கறிவேப்பிலை கொத்துமல்லி சிறிதளவு. எண்ணெய்- உப்பு- தேவையான அளவு.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு உளுந்து, கடலைப்பருப்பு கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். துருவிய கேரட வெங்காயம் மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து வதக்கவும். இந்தக் கலவையை இட்லி மாவில் கொட்டி கலக்கவும். 
பணியாரச் சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் குழி கரண்டியில் மாவை எடுத்து ஊற்றவும். நன்றாக வேகவிட்டு எடுத்தால் சுவையான வெஜ் பணியாரம் ரெடி
  எழுதியவர்: ஆதிரை வேணுகோபால். (தி. இந்துவில் படித்தது)

இவர்களை அறிந்து கொள்வோம்!

அமெரிக்காவில் விருது வாங்கிய இந்திய மாணவர்களை பற்றி அறிந்து கொள்ள இங்கே சொடுக்குங்கள்!  அமெரிக்க விருது வென்ற இந்திய மாணவர்கள்பதிவர் அறிமுகம்:
  மரபுக் கனவுகள்
பதிவரின் பெயர் : ந.உ. துரை. 

எ,.பி. ஏ படித்துள்ள இவர் மரபுக் கவிதைகளை எளிய தமிழில் தருகின்றார். குறள் வடிவில் இவர் எழுதும் கவிதைகள் ரசிக்க வைக்கின்றது 2009 முதல் எழுதி வரும் சீனியர் வலைப்பதிவர் என்றாலும் நிறைய பேருக்கு இவரைத் தெரியவில்லை. மரபுக் கவிதைகள் விரும்புவோர் இந்த தளம் செல்லலாம் இதோ மரபுக் கனவுகள்!


படிச்சதில் பிடிச்சது!
கவிஞர் கண்ணதாசன்


கண்ணதாசனும் , அறிஞர் அண்ணாதுரையும் 60 களில் , (கண்ணதாசன் தி.மு.க. வில் இருந்த போது) நெருங்கி பழகி வந்தனர் ! அவர்கள் உறவு அண்ணன் - தம்பி உறவு
போல் இருந்தது. அனேக மேடைகளில் ஒன்று சேர காணப்பட்டனர் ! பின்னர் வந்தது பிளவு !

கணணதாசன் தி.மு.க . வை விட்டுப் பிரிந்தாரா அல்லது அந்த கட்சியை விட்டு நீக்கப்பட்டாரா என்பது தெரியவில்லை ! எனினும் கண்ணதாசன் மனதில் அண்னா செய்த செயல்கள் அவரது மனதைப் பாதித்தன ! எப்போது சமயம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார் ! வேளை வந்தது !

சிவாஜி நடித்த " படித்தால் மட்டும் போதுமா ? " என்ற படத்தில் ஒரு பாடல் :

" என்ன " சிச்சுவேஷன் " ? --- கண்ணதாசன்.

' அண்ணே, அண்ணன் ( கே.பாலாஜி ) , தம்பிக்கு ( சிவாஜி ) ஒரு துரோகம் செய்கிறான். இதை நினைத்து தம்பி மனம் உடைகிறான் ! ஆனால் நடந்த உண்மையை வெளியே சொல்ல முடியாத நிலைமை தம்பிக்கு ! இது தான் " சிச்சுவேஷன் " " ---- எம்.எஸ். விஸ்வநாதன்.

கண்னதாசனுக்கு கேட்கவா வேண்டும் ! மனதில் இருந்த காயததை ஆற்ற இதை விட வேறு சந்தர்ப்பம் ஒரு கவிஞனுக்கு வேண்டுமோ ? எழுதினார் !

"அண்ணன் காட்டிய வழியம்மா - இது

அன்பால் விளைந்த பழி அம்மா !

கண்ணை இமையே பிரித்ததம்மா - என்

கையே என்னை அடித்தம்மா ! "

என்று பேனா வை வைத்து அண்ணாவை அடித்தார் ! அது மட்டுமா,

" அவனை நினைத்தே நான் இருந்தேன் - அவன்

தன்னை நினைத்தே வாழ்ந்திருந்தான் - இன்னும்

அவனை மறக்கவில்லை - அவன்

இத்தனை செய்தும் நான் வெறுக்கவில்லை "

என்று தன்னிலை விளக்கமும் கொடுத்தார் !

இந்த பாடல் படத்திற்கும் பொருந்தியது என்று சொல்லவும் வேண்டுமோ !


(ஈகரை தமிழ் களஞ்சியத்தில் படித்தது)


பாடம்! சிறுகதை!


பாடம்
       
டிகிரி முடித்து வேலைக்கு அலைந்த்து அலைந்து கால்கள் கூட தேய்ந்து விட்டது ஆனால் வேலைதான் கிடைத்தபாடில்லை. வேலைக்குச் செல்பவர்களை கண்டு பொறாமைப்படத்தான் முடிந்ததே தவிர வேலைக்கு போக வாய்ப்பு கிடைக்கவில்லை!.

இன்னும் எத்தனை நாள்தான் வீட்டில் இண்டர்வியுவிற்கும் அப்ளிகேசன் போடவும் காசு கேட்டுக் கொண்டிருப்பது. வெளியில் சென்றால் பார்ப்பவர்களின் பார்வையே நக்கலாக தென்பட்டது கணேஷிற்கு.

   இன்று கூட கம்பெனி ஒன்றிர்கு இண்டர்வியுவிற்கு போய் ஏமாந்து திரும்பினான். நூற்றுக்கணக்கான நபர்களை வரவழைத்தவர்கள் எம்.எல்.ஏ சிபாரிசோடு வந்தவனுக்கு வேலைக் கொடுத்துவிட்டு மற்றவர்களை திருப்பி அனுப்பிவிட்டார்கள். ச்சே இதென்ன பிழைப்பு ஃபைலை தூக்கிக் கொண்டு வேலை கிடைக்குமா என்று அலைந்து கொண்டு அனைவரும் கேலியாக பார்க்கிறார்கள்.

 இன்று தான் கடைசி. இனி வேலை தானே கிடைத்தால் கிடைக்கட்டும். இல்லாவிட்டால் போகட்டும்! நாமாக அலைந்தால் கிடைக்கவில்லையே தாமாக எங்கே கிடைக்கப்போகிறது? என்று சிந்திக்காமல் சலித்துக் கொண்டான் கணேஷ்.

     அப்போது ராமசாமி தாத்தா எங்கோ சென்று திரும்புவதை பார்த்து, எங்க தாத்தா போய் வர்ரீங்க? வெயில்ல அலைஞ்சி திரிஞ்சி வர்ரீங்களே? என்று விசாரித்தான்.

   நான் வேலை பார்த்த ஆபிசுக்குத் தான் தம்பி பென்ஷன் கேட்டு போயிட்டு வரேன்!.

   என்ன தாத்தா அவங்கதான் ஒரேப்பிடியா பென்ஷன் எல்லாம் தரமுடியாதுன்னு சொல்லிட்டாங்களே அப்புறம் எதுக்கு வெட்டியா அலைஞ்சிட்டு வர்ரீங்க?

      ராமசாமித் தாத்தா வேலைப் பார்த்தது ஒரு தனியார் கம்பெனி ரிட்டையர் ஆனதும் டாட்டா காண்பித்து விட்டது. இவர் பென்சனுக்கு நடையாக நடக்கிறார். இவரைப்போல பலர். ஆனாலும் கம்பெனி அசைந்து கொடுக்க மறுக்கிறது.அதனால் தான் அப்படி கேட்டான் கணேஷ்.

   என்ன தம்பி இப்படி சொல்லிட்டீங்க? கம்பெனி ரூல்ஸ்படி அவங்க கட்டாயம் பென்சன் தந்து ஆகனும் முடியாதுன்னு சொல்ல முடியாது.

   தாத்தா உங்களுக்கு இருக்கிற வசதிக்கு இந்த பென்சன் பிச்சை காசு. வந்தா வருது வராவிட்டால் போகுதுன்னு விடாமா இந்த வயசான காலத்தில வெயில்ல அலைஞ்சிகிட்டு இருக்கீங்களே?

    தம்பி சிறுதுளிதான் பெரு வெள்ளம்! நாற்பது வருசமா சம்பாதிச்சதாலே இப்ப வசதியா இருக்கேன்! நான் வசதியா இருக்கிறதாலே எனக்கு சேரவேண்டியதை விட்டுக் கொடுத்திட முடியுமா? தானா எதுவும் கனியாது தம்பி! நாலுகல்லு அடிச்சாத்தான் ஒரு கல்லுல மாங்கா விழும்! அதான் விடாம முயற்சி பண்ணிகிட்டு இருக்கேன்! எனக்கு நம்பிக்கை இருக்கு தம்பி! நான் கட்டாயம் பென்சனை வாங்கிடுவேன்! அது வரை முயற்சியை விடமாட்டேன்! ஆமாம் தம்பி இன்னிக்கு இண்டர்வியுவிற்கு போனியே என்ன ஆச்சு? என்றார்.

   இன்னிக்கு தோல்விதான் தாத்தா! ஆனா நாலைக்கு வெற்றிதான் என்றான் கணேஷ் பாடம் கற்றவனாக.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து உற்சாகப்படுத்துங்கள் அன்பர்களே!

(மீள்பதிவு)
Related Posts Plugin for WordPress, Blogger...