ஏமாற்றாதே! ஏமாறாதே! பாப்பாமலர்!

ஏமாற்றாதே! ஏமாறாதே! பாப்பாமலர்!


முன்னொரு காலத்தில் அரசர்குளம் என்ற சிற்றூரில்  முனியன் என்பவன் வசித்து வந்தான். அவன் ஒரு விவசாயி. அவனுக்கு முனியம்மா என்ற மனைவியும் இரண்டு பிள்ளைகளும் உண்டு. அவனது வீட்டில் நாய், ஆடு, மாடு, பூனை, முயல், கோழி முதலிய விலங்குகளை வளர்த்து வந்தான்.

முனியனது முன்னோர்கள் விட்டுச்சென்ற நிலம் ஏராளமாக இருந்தது. அந்த நிலத்திலே விவசாயம் செய்து பிழைத்துவந்தான் அவன். கடுமையான உழைப்பாளியான அவன் கொஞ்சம் விவரம் அறியாத ஏமாளி! அப்படி சொல்வதை விட அப்பாவி என்று சொல்லிவிடலாம். யார் எதை சொன்னாலும் அப்படியே நம்பிவிடுவான். விவசாயம் பார்ப்பதைத் தவிர செல்லப் பிராணிகளுடன் பொழுதைக் கழிப்பது அவனுக்கு மிகவும் பிடிக்கும். ஊரே அவனை முட்டாள் என்று நகையாடும். ஆனால் அதனால் எல்லாம் அவன் கோபப்பட்டதே கிடையாது. சிரித்துக் கொண்டே போய்விடுவான்.

முனியனுக்கு ஓர் குதிரை வாங்கவேண்டும், அதன் மீதேறி சவாரி செய்ய வேண்டும் என்று நீண்டநாள் ஆசை. எனவே ஒருநாள் அவன் மனைவியை அழைத்து.” நான் இன்று குதிரைச் சந்தைக்கு போய் குதிரை வாங்கி வருகிறேன். குதிரை இருந்தால் வெளியூர் பயணிக்க வசதியாக இருக்கும். உன்னையும் அழைத்துக்கொண்டு ஊர் பயணம் சென்று வர சவுகர்யமாக இருக்கும்!” என்று சொல்லிவிட்டு சந்தைக்கு சென்றான்.
முனியன் தன்னிடம் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு குதிரைச் சந்தைக்குச் சென்றான். அவன் அங்கு நிறைய பல ரக வாரியான குதிரைகளைக்  கண்டான். அதில் அவனுக்குப் பிடித்த ஓர் வெள்ளைக் குதிரையை பணம் செலுத்தி வாங்கிக் கொண்டான். அந்த குதிரையின் விலை கொஞ்சம் அதிகம் தான். ஆனாலும் விலை கொடுத்து வாங்கிய முனியன் அதன் மீது சவாரி செய்து பழக்கம் இல்லாமையால் குதிரையை இழுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டான்.
குதிரை மீது அமர்ந்து வராமல் இழுத்துக் கொண்டு ஒருவன் செல்வது அங்கிருந்தோருக்கு ஏளனமாக இருந்தது. எல்லோரும் கேலி செய்ய அதை கவனத்தில் கொள்ளாமல் முனியன் சென்று கொண்டிருந்தான். அப்போது இரண்டு மோசடி பேர்வழிகள் முனியனிடம் வந்தனர். அவர்கள் காலை முதல் முனியனை கண்காணித்துக் கொண்டு இருந்தனர். எனவே அவர்கள் முனியனை ஏமாற்ற எண்ணி “ ஏம்பா! இந்த கழுதையோட விலை என்ன?” என்று கேட்டனர்.
  “ என்னய்யா சொல்றே? இது உன் கண்ணுக்கு கழுதையா தெரியுதா? இது குதிரை!” என்றான் முனியன்.
“ அட கழுதையை குதிரைன்னு சொல்றியே! உனக்கு புத்தி மழுங்கிவிட்டதா?” என்றான் இன்னொருவன்.
“ அப்ப இது குதிரை இல்லையா?”
“நான் உன்னை ஏமாற்றவா போகிறேன்! இது கழுதை! யாரோ உன்னை ஏமாற்றி குதிரை என்று சொல்லிவிட்டார்கள் போலிருக்கிறது”
 “அடச்சே! ஏமாந்து விட்டேனே! குதிரைன்னு சொல்லி இதை அதிக விலை கொடுத்து வாங்கிவிட்டேனே! வீட்டுக்குப் போனால் மனைவி ஏசுவாளே! ஊர் ஜனங்கள் பரிகசிக்குமே!” முனியன் குழம்பினான்.
“நல்லா பார்த்து சொல்லுங்க! இது கழுதை தானா?” முனியன் மீண்டும் நம்பிக்கை இல்லாமல் கேட்க,  “அட போப்பா! நாங்க ஆயிரம் கழுதைகளை பார்த்திருக்கோம்! இதுவும் கழுதைதான்!  கழுதை வாங்கி விற்கறதுதான் எங்க தொழில் அதான் என்ன விலைன்னு கேட்டேன்! என்றான் மோசடி பேர்வழி!
  முனியனுக்கு துக்கம் பீறிட்டது! தான் ஏமாந்துவிட்டோம் என்று அவனால் நம்பவே முடியவில்லை! அப்படியே தலையில் கைவைத்து உட்கார்ந்து விட்டான்.
“ஏம்பா தலையிலே கை வச்சி உட்காந்துட்டே! என்ன ஆச்சி?”
 “இது குதிரைன்னு வாங்கிட்டேன்! நீங்க கழுதைன்னு சொல்றீங்க! என் மனைவிக்கு தெரிஞ்சா என்னை திட்டுவாள்! இப்படியும் முட்டாளா இருக்கீங்களே என்று வைவாள். அதான் அப்படியே உட்காந்துட்டேன்! ஒரு உதவி பண்றீங்களா? இந்த கழுதையை வாங்கிக்கீறீங்களா? நீங்கதான் கழுதை வியாபாரின்னு சொல்றீங்களே!”
 “ இது அப்படி ஒன்னும் நல்ல கழுதை மாதிரி தெரியலை! முரண்டு பண்ணுற மாதிரி தெரியுதே!”

“ நல்ல கழுதைதான் ஐயா! நீங்க என்ன விலை கொடுத்தாலும் போதும்! கழுதையை வாங்கிகங்க!”
இருவரும் முனியனை ஏமாற்றி குறைந்த விலைக்கு குதிரையை வாங்கிச் சென்றனர். வீட்டுக்கு சென்ற முனியன் மனைவியிடம் நடந்ததைக் கூறினான்.
“ நல்லா ஏமாந்திட்டியேயா! அவங்க ரெண்டு பேரும் உன்னை ஏமாத்தி இருக்கானுங்க! இப்படி நல்ல குதிரையை குறைந்த விலைக்கு வித்திட்டியே! அதான் ஊரே உன்னை முட்டாளுன்னு சொல்லுது!”
“ நான் முட்டாள் இல்லைன்னு நிருபிக்கிறேன்! இப்ப மறுபடியும் சந்தைக்கு போறேன்! அவங்களை என்னை பண்றேன்னு பாரு!”
முனியன் மறுபடியும் சந்தைக்குச் சென்றான். இரண்டு நாய்களை வாங்கிக் கொண்டான். இரண்டும் ஒரேமாதிரியாக ஒரே நிறத்தில் இருந்தன. அவற்றினை வீட்டுக்கு கொண்டு வந்தான். ஒரே மாதிரியான பொருட்கள் சிலவற்றை இரண்டின் முதுகிலும் கட்டினான். ஒன்றை வீட்டில் கட்டிப் போட்டுவிட்டு இன்னொன்றை ஓட்டிக் கொண்டு காட்டு வழியே சென்றான்.
முனியன் நாயை ஓட்டி கொண்டு வருவதைக் கண்ட மோசடிக்காரன் இன்றைக்கு என்ன கொண்டுவருகிறான். இன்றும் எப்படியும் ஏமாற்றிவிட வேண்டும் என்று முனியன் அருகில் வந்தான்.
” என்ன முனியா! நாய் மேலே எதை கட்டி கொண்டு போறே?”
“ ஓ! இது நாய் இல்லேங்க! கழுதை! வித்தியாசமான கழுதை! விலை அதிகம் கொடுத்து வாங்கி இருக்கேன்!”
“ என்னப்பா சொல்றே! நாயைப் போய் கழுதைன்னு சொல்றே!”
“ ஆமாங்க இது விலை உசந்த கழுதை! இது மேல நாம வாங்கின சாமானுங்களை வச்சி கட்டி ஓட்டி விட்டா நம்ம வீட்டிற்கு தானாக போய்விடும்! அதனாலதான் விலை அதிகம் கொடுத்து இதை வாங்கியிருக்கேன்!”
“ நம்ப முடியலையே!”
“ வேணும்னா நா இப்ப இதை ஓட்டி விடறேன்! நாம கொஞ்ச நேரம் கழித்து வீட்டுக்கு போவோம்! அப்ப இது அங்க இருக்கும் பாருங்க!”
 “சரி அப்படியே செய்! பார்ப்போம்! நீ சொன்னபடி நடந்தா இதை நான் விலை கொடுத்து வாங்கிக்கறேன்!”
முனியன் நாயை விரட்டி விட்டான். அது விட்டால் போதும் என்று ஓட்டம் பிடித்தது. பின்னர் முனியனும் அந்த மோசடிக்காரனும் முனியன் வீட்டிற்கு வந்தனர். அப்போது முனியன் ஏற்கனவே அங்கு கட்டிப் போட்டிருந்த நாய் முதுகில் சாமான்களுடன் நின்று வாலாட்டியது.
 மோசடிக்காரனுக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை! இது போன்ற ஓர் அதிசயத்தை அவன் கண்டதில்லை! இதை வாங்கி விற்றால் நல்ல விலை போகும் என்று உடனே பேரம் பேசினான்.
“நண்பா! முன்பு நீ கொடுத்த கழுதையை விட இதற்கு அதிக விலை தருகிறேன்! எனக்கு இதை விற்றுவிடு!”
”அதெப்படிங்க தர முடியும்! இது எனக்கு உதவியா இருக்கு! வேற கழுதை வாங்க என் கிட்ட பணம் இல்லே!”
“ அந்த கழுதைக்கு நான் கொடுத்த பணம் கம்மிதான்! இதற்கு என்ன விலை சொல்லுகிறாய்? ஓர் ஆயிரம் பொன் தரட்டுமா?”
“ ஆயிரம் பொன்னுக்கு இந்த அற்புத கழுதையைத் தர முடியுமா?”
“ சரி இரண்டாயிரம் பொன்  தருகிறேன்!” இதை கொடுத்துவிடு! 
“ நீங்க கொடுக்கும் இரண்டாயிரம் பொன்னை  வாங்கிக்கொண்டு இந்த கழுதையை கொடுக்கிறேன்!” ஆனா அந்த பணத்தை எடுத்துக் கொண்டு எதில் செல்வது?”
“ சரி! இந்த கழுதைக்கு பதிலாக இரண்டாயிரம் பொன்னுடன் நீ முன்பு கொடுத்த கழுதையையும் கொடுத்துவிடுகிறேன்! இந்த நாயை.. கழுதையை எனக்கே கொடுத்து விட வேண்டும்.
 சரி அப்படியே தருகிறேன். முனியன் நாயை அழைத்துச்சென்று திருடனிடம் விட்டுவிட்டு அவன் கொடுத்த இரண்டாயிரம் பொன்னையும் அவனுடைய இழந்த குதிரையையும் மீட்டுக் கொண்டு வீட்டுக் வந்துவிட்டான்.
மோசடிக்காரன் சந்தைக்கு நாயை அழைத்துச் சென்று சாமான்களை வாங்கி கட்டி வீட்டுக் போ என்று விரட்டி விட்டான். அது விட்டால் போதும் என்று ஓட்டம் பிடித்தது. வீட்டுக்கு வந்த மோசடிக்காரன் ஏமாந்து போனான்.
 (செவிவழிக்கதை தழுவி எழுதியது)
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!



Comments

  1. ஸூப்பர் க(ழு)தை நல்ல நகைச்சுவை.

    ReplyDelete
  2. சிறுவர்க்கான இதுபோன்ற கதைகள் நிறைய வரவேண்டும் என்பது என் எண்ணம்.

    வாசிப்பின் ஆர்வத்தைத் தூண்டவும், அறக்கருத்துகளை வெறும் போதனையாக இல்லாமல் கதைவழி அறியவும் இக்கதைகள் துணைசெய்யும்.

    தங்களின் பணி அற்புதமானது.

    சிறுவர் இதழ்களுக்கு அனுப்பலாமே..!

    நன்றி!

    ReplyDelete

  3. சிறந்த பதிவு
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    ReplyDelete
  4. முதல் முறை படிக்கிறேன் அருமை

    ReplyDelete
  5. வணக்கம்
    ஐயா
    அறிவுக்கு விருந்தாகும் கதை அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
    இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. அருமையான கதை நண்பரே
    நன்றி

    ReplyDelete
  7. எத்தனுக்கு எத்தன் எங்கும் இருப்பான்தானே,,,?

    ReplyDelete
  8. நகைச்சுவையோடு நன்னெறியை போதிக்கும் கவிதை. ஒரு நல்ல கருவை வைத்து அருமையாக கதை எழுதும் தங்களது முயற்சி தொடரட்டும்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!