ஊமை ஊரைக் கெடுக்குமா?

ஊமை ஊரைக் கெடுக்குமா?

   தலைப்பை இப்படி வைத்ததிற்கு முதலில் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்! எந்த ஒரு மாற்றுத் திறனாளியையும் குறை கூற அவர்களின் ஊனத்தை பழித்துப் பேசுவது எனக்கு பிடிக்காது. சிலர் அப்படி பேசும்போதும் வருத்தப்படுவேன். ஆனால் இன்று வாய் பேசாத ஒருவர் என்னை ஏமாற்ற பார்த்தவுடன்  எனக்கு கோபம் அதிகம் ஆகிவிட்டது. என் முகத்தில் என்ன இளிச்சவாயன் என்றா எழுதி ஒட்டி இருக்கிறது. ஆளாளுக்கு ஏமாற்றித் திரிகிறார்கள். 

     எங்கள் ஊரில் ஏறக்குறைய 50 வருடங்களுக்கு மேலாக எங்கள் குடும்பம் வசித்து வந்த போதும் சொந்த மனை கிடையாது. குடியிருக்கும் மனை கோயில் மனை, மேற்கூறை மட்டுமே எங்களுடையது. இந்த நிலையில் மிகவும் கஷ்டப்பட்டு கொஞ்சம் கடனும் பட்டு எங்கள் தெருவிலேயே ஓர் மனை வாங்கினேன். சதுர அடி 250 ரூபாய். எங்கள் ஊர் மெயின் ரோட்டில்  சதுர அடி 700 முதல் 1000 வரை விற்கிறது. இந்த இடம் பள்ளம். பக்கத்தில் ஏரி ஓடை செல்கிறது. பட்டா இல்லை. இதனால்தான் இவ்வளவு குறைச்சலாக கிடைத்தது.

    பதிவு செய்த பிறகு பள்ளத்தை மேடாக்க  ஓர் ஐந்து லோடு சவுடு மணல் வைத்தேன். அப்போதுதான் பிரச்சனை ஆரம்பித்தது. எங்கள் தெரு குறுகிய தெரு அதில்  வீட்டுக்கு செல்லும் குடிநீர் பைப் லைன் ஓர் இரண்டு பேருடையது உடைப்பெடுத்துவிட்டது. ஆனால் அந்த உடைப்பு என் மனைக்கு மண் வரும் முன்னேயே வேறு நபருக்கு  மண் ஓட்டிய போது ஏற்பட்டது. என்னிடம் அதனால் எதுவும் கேட்கவில்லை. அந்த நபர் அப்புறம் சரிசெய்து கொடுத்துள்ளார்.

    ஐந்து  லோடு  மண் கொட்டியும் பள்ளம் நிறையவில்லை! இன்னொரு ஆறு லோடு தேவைப்பட்டது. இந்த வாரத்தில் மீண்டும்  மண் கொட்டினேன். ஐந்து லோடுகள் லாரி வருகையில் கிட்டே இருந்து கொட்டினேன். பைப் உடைப்பெடுக்க வில்லை. ஆறாவது லோடு வருகையில் சாப்பிட சென்று விட்டேன். பின்னர் சென்று பார்த்தேன். ஒன்றும் பிரச்சனை இல்லை. ஆனால் மறுநாள் காலை அங்கு பைப் உடைத்து சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்தது. உங்களுக்கு மண் வைத்த லாரிதான்  உடைத்து விட்டது என்றார்கள்.

   ஆழமாக தோண்டி போட வேண்டியதுதானே! யார் வீட்டுக்கு செல்லும் பைப்? என்று கேட்ட போது இரண்டு பெயர்களை சொல்லி அவர்கள் வீட்டுக்கு செல்கிறது என்றார்கள் அங்கிருந்தவர்கள். சரி அவர்கள் வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்து விட்டேன். தண்ணீர் கஷ்டம் தான்! வீணாகித்தான் செல்கிறது. ஆனாலும் நாம் தான் உடைத்தோம் என்று என்னால் நம்ப முடியவில்லை! ஏனென்றால் ஆறு  தடவை லாரி வந்த போது அங்கு ஏதும் உடைப்பு ஏற்படவில்லை! இரவில் வேறு யாருக்காவது லோடு வந்திருக்கும் என்ற ஒரு சந்தேகம் இருந்தது.

 இரண்டு நாள் சும்மா இருந்தார்கள் தமிழ் புத்தாண்டு அன்று அந்த வழியே வருகையில் அந்த வீட்டுச் சொந்தக்கார பையன் உடைப்பை சரி செய்து கொண்டிருந்தான். அவனுடைய  தாய் உங்களால்தான் உடைப்பு ஏற்பட்டுவிட்டது பக்கத்து மனைக்காரர்கள் சண்டைக்கு வருகிறார்கள் என்று சொன்னார்.  கொஞ்சம் ஆழமாக தோண்டி போட்டிருக்க கூடாதா? என் மனைக்கு மண்  எடுத்துச்செல்லக் கூட எனக்கு உரிமையில்லையா? இதற்கு நான் என்ன செய்ய முடியும்?  என்றேன்.

    அவ்வளவுதான் அந்த பையன் வித்தியாசமாக பேச ஆரம்பித்துவிட்டான். ஜாதிப்பெயரைச் சொல்லி வசை பொழிய எனக்கு ஆத்திரம் அதிகம் ஆகிவிட்டது. ஆனாலும் எதுவும் பேசாமல் வந்துவிட்டேன். உண்மையில் ஆகும் செலவில் பாதியை கொடுத்துவிடலாம் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். அவன் அவ்வாறு பேசியதும் சும்மா இருந்துவிட்டேன். அந்த பையனால் உடைப்பை சரி செய்ய முடியவில்லை. நீர் வீணாகிக் கொண்டிருந்தது.

  இன்று காலையில் எனக்கு மண் ஓட்டிய லாரி ஓனர் (அவரும் எங்கள் ஊர்க்காரர்தான்)  வந்தார். தலைவரிடம் சொல்லி பெஸ்ட் போடச்சொல்லிவிடுங்கள் அவர்கள் வீட்டில் வந்து பேசுகிறார்கள் என்றார். நான் வீட்டுக் குழாய் இணைப்புக்கு பஞ்சாயத்தில் சரி செய்ய மாட்டார்கள் என்றேன். சரி அப்போ யாரையாவது பார்த்து குழாய் உடைப்பை சரி செய்யுங்கள் நானும் ஏதாவது பணம் கொடுக்கிறேன். பிரச்சனையை பெரிதாக்க வேண்டாம் என்றார். இதைத்தான்  நானும் செய்ய இருந்தேன் என்று  குழாய்  இணைப்பை சரி செய்யும் ஆட்களை வரவழைத்து சரி செய்தேன். அவர்களுக்கு பணம் கொடுத்தேன். 

   அப்போது நான் சொன்ன அந்த மாற்றுத் திறனாளி ( ஊமை) வந்து என்னிடம் ஜாடை காட்டினார். என்ன என்றேன். போன முறை பெஸ்ட் ஆன போது நான் தான் செலவு செய்தேன் அறுநூறு  ரூபாய் ஆனது அதைக் கொடு! என்றார். நான் ஏன் கொடுக்க வேண்டும்? என்றேன். இதற்கு கொடுக்கிறாயே! அப்போதும் உனக்கு மண் ஓட்டிய போதுதான் என்னுடைய குழாய் உடைந்து போனது அதனால் எனக்கும் கொடு! என்றார்.

     பொது வழியில் உங்கள் குழாய் செல்கிறது! இந்த வழியில் எனக்கு மண் எடுத்துச்சென்றதால் உடையும் குழாய்க்கெல்லாம் நான் பணம் தர முடியுமா? என்று கோபத்துடன் கூறிவிட்டு சென்றேன். வழியில் முன்பு உடைப்பெடுத்த போது சரி செய்தவரை பார்த்தேன்.  அவரிடம் ஊமை உனக்கு எவ்வளவு பணம் கொடுத்தார் உடைப்பை சரி செய்ய? என்னிடம் பணம் கேட்கிறார் என்றேன்.

   அவர் எதற்கு பணம் கொடுத்தார்? ஒரு பைசா கூட  கொடுக்கவில்லை! உடைந்து போன பைப்பை சரி செய்து மாட்ட புதுசு பைப் கப்ளிங் வாங்க மட்டும் 85 ரூபாய் கொடுத்தார் அவ்வளவுதான்  என்றார்.

 அப்போது உன் கூலி யார் தந்தது? என்றேன். அந்த வழியில் யாருக்கு மண்  சென்றதோ அவர்தான் கொடுத்தார் அதுவும் ரூ 500 தான். அதில் பாதி சாமான் வாங்கவே சரியா போச்சு என்றார் அந்த பஞ்சாயத்துத் தொழிலாளி.

 ஒரு மாற்றுத்திறனாளி ஆன ஊமையார் கூட என்னிடம் ஏமாற்றி பணம் பறிக்க முயல்கிறார் என்று புரிந்து போனது. இப்படிப்பட்ட நல்லவர்கள் வாழும் பூமியில்தான் வாழ்கிறோம் என்று நினைக்கையில் மனம் வெறுத்துப் போனது.

 கொஞ்சம் அசந்து இருந்தால் குறைந்த பட்சம் 500 ரூபாய் இழந்திருப்பேன்! எரிகிற வீட்டில் பிடுங்கினதுவரை லாபம் என்று இருக்கும் இவர்கள் இன்னும் வளர்ந்து கொண்டே இருப்பதுதான் நாட்டின் மிகப்பெரிய சாபக்கேடு! 

இன்னும் ஏமாளியாகவே இருப்பது என்னுடைய பெரிய சாபக்கேடு! இந்த மொக்கையெல்லாம் படிக்க வேண்டியிருப்பது உங்களின் பெரிய சாபக்கேடு!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. இது மொக்கை இல்லை சகோ,
    உங்கலால் சிலராவது விழித்துக்கொண்டால் சரி.
    காலத்திற்கு தேவையான பதிவு தான் இது. இது போன்ற சமுக ஆக்கபூர்வமான பதிவுகள் வரட்டும்.

    ReplyDelete
  2. ஏமாற்றுபவரும் எமாறுபவரும் சரிசமமாகவே உலவிக் கொண்டிருகிறார்கள் எல்லாம் நேரம் என்றும் சொல்ல முடியாது இல்லையா உங்கள் அறிவினால் தானே தப்பினீர்கள் அது நல்ல விடயம் தானே. இப்படி யாவரும் யோசித்து செயல்பட வேண்டும் ம்..ம். இது விழிப்பை ஏற்படுத்தும் பதிவு தான் அதுவும் அன்றி உங்கள் மனப் பாரமும் குறைந்ததல்லவா. பதிவுக்கு நன்றி !

    ReplyDelete
  3. ஏமாற்றுகிறவர்கள் அனைத்து இடங்களிலும் இருக்கிறார்கள் நண்பரே
    நாம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
    நல்ல வேலை தப்பினீர்கள்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. வணக்கம்
    உலகத்தில் பலர்இதைத்தான் தொழிலாக செய்கிறார்கள்... அருமையாக சொல்லியுள்ளீர்கள்.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. பலருக்கும் பலன் தரும் தகவலைத்தாளே பதிவாக்கினீர்கள் நன்றி நண்பரே

    ReplyDelete
  6. ஊமை ஊரைக் கெடுக்குமா? என்ற தலைப்பைப் பார்த்ததும் சற்றே எனக்கு யோசனை. பதிவின் முதல் சொற்றொடரில் காரணத்தைக் கூறிவிட்டீர்கள். நல்ல பதிவு.

    ReplyDelete
  7. அமைதியாக இருந்து கொண்டு ஆட்டைய போடுபவர்கள் அனைவரும் ஊரைக் கெடுப்பவர்கள் தான்...

    ReplyDelete
  8. கொஞ்சம் அசந்தால் போதும் சுரேஷ் நண்பரே! ஆட்டையை போட்டுருவாங்க...நாம்தான் விழிப்போடு இருக்கணும். இது மொக்கை அல்ல.

    ReplyDelete
  9. இன்று யாரையும் நம்பும்நிலையில்லை! நாம்தான் கவனமாக இருக்க வேண்டும் உங்கள் ஆதங்கம் புரிகின்றது.

    ReplyDelete
  10. மற்றவர்களுக்கு பாடம் தரும் அனுபவம். நாம் இரக்க சுபாவம் உள்ளவர், பொதுநலம் விரும்பி என்று தெரிந்தால் போதும் , நம்மிடம் பணம் கறக்க என்றே சிலர் வந்து விடுவார்கள். மாற்றுத் திறனாளி என்பது சரியான விளக்கம் இல்லை. எனவே நீங்கள் ஊமை என்று குறிப்பிட்டது சரி.

    ReplyDelete
  11. ஏமாற்ற எத்தனை எத்தனை வழிகள்..... :(

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!