Thursday, April 30, 2015

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 35

  கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 35


1.   தலைவர் எதுக்கு ரூபாய் நோட்டுல மாலை போட வேண்டாம்னு சொல்றார்?
  கள்ள நோட்டா அடிச்சு கோர்த்து போட்டுடறாங்களாம்!

2.   தலைவர் முன்னெ வச்ச காலை பின்னே வைக்க மாட்டார்!
  அதுக்காக மூணு மாடி ஏறி வந்தப்புறம் இறங்க மாட்டேன்! தூக்கிக்கிட்டு போங்கன்னு சொல்றது கொஞ்சம் கூட நல்லா இல்லே!

3.   அந்த டாக்டர் பேஷண்ட் கிட்ட அதிர்ச்சி தர மாதிரி எதுவும் சொல்ல மாட்டாராமே!
ஆமா! பீஸைக் கூட இவ்ளோன்னு சொல்லமாட்டாரு எழுதித்தான் வாங்குவாரு!

4.   மாப்பிள்ளைக்கு சர்க்கரை நோய் இருக்குன்னு சொல்லவே இல்லையே தரகரே!
நான் அப்பவே சொன்னேனே மாப்பிள்ளை கட்டிக் கரும்புன்னு!


5.    இவ்ளோ மருந்து எழுதிக் கொடுக்கறீங்களே டாக்டர் உங்களுக்கு கை வலிக்காதா?
  அதுக்குத்தான் கீழே ஆயிண்ட்மெண்ட் எழுதியிருக்கேன்! அதை வாங்கி என்கிட்டே கொடுத்திட்டு போங்க!

6.    மன்னா! எதிரியிடம் இருந்து ஓலை வந்திருக்கிறது!
அப்படியானால் ஓடி ஒளியவேண்டிய வேளை வந்துவிட்டது என்று சொல்லுங்கள்!

7.   அந்த ஸ்டேஷன்ல மாமூலே  கேட்க மாட்டாங்க!
பரவாயில்லையே! அவ்வளவு சுத்தமா?
நீங்க வேற! பையிலிருந்து அவங்களாவே எடுத்துக்குவாங்கன்னு சொல்ல வந்தேன்!

8.   எலெக்‌ஷன் தேதி அறிவிச்சதும் தலைவர் சுறுசுறுப்பாயிட்டாரு!
பிரசாரத்துக்கு போக ப்ளான் பண்ண ஆரம்பிச்சிட்டாரா?
கள்ள ஓட்டு எத்தனை போட முடியும்னு ப்ளான் பண்ண ஆரம்பிச்சிட்டாரு!

9.   துணி துவைக்கிற வேலையெல்லாம் என் மனைவி என்கிட்ட கொடுக்க மாட்டா?
பரவாயில்லையே!
காயப்போடற வேலையும் மடிச்சு அயர்ன் பண்றதும்தான் என் வேலை!

10.  பையன் எங்கேன்னு கேட்டா மாமியார் வீட்டுக்கு போயிருக்கான்னு சொல்றீங்க! எப்ப கல்யாணம் பண்ணீங்க?
  நீங்க வேற! போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கான்னு சொன்னேன்!


11.  மாப்பிள்ளை ரொம்பவும் சுய மரியாதைக் காரர் தாலி எல்லாம் கட்ட மாட்டேன்னு ஸ்டிரிக்டா சொல்லிட்டார்!
அடடே! அப்புறம்!
தாலிக்கு பதிலா ரெண்டு பவுன்ல மோதிரம் போட்டுடச் சொல்லிட்டார்!

12.  அவர்கிட்ட சில்லறைத் தனமா பேசவே முடியாது!
  அப்படியா? என்ன வேலை செய்யறார்?
பஸ் கண்டக்டரா இருக்கார்!


13.  தலைவர் அந்த பள்ளிக் கூடத்திலே ஏடா கூடமா பேசி மாட்டிக்கிட்டாரு!
எப்படி?
என்னைப் போல படிக்காத மேதைகள் பலரை உருவாக்கிய பள்ளி இதுன்னு பேசிட்டாரு!

14.  பிரசவத்துக்கு ஆஸ்பத்திரியிலே சேர்த்து மூணு மாசமாச்சு! இன்னும் ஒரு முடிவும் தெரியலை!
  என்னப்பா சொல்றே? பிரசவத்துக்கு மூணுமாசமா?
நான் சொல்றது டீவி சீரியல்லே!

15.  எதிரியின் வருகை அறிந்ததும் முறுக்கேறிய மன்னர்…
  அறைக்கூவல் விடுத்தாரா?
முருங்கை மரம் போல முறிந்து விழுந்துவிட்டார்!

16.  என் மனைவி அதிர்ந்து ஒரு வார்த்தை பேச மாட்டாங்க!
பரவாயில்லையே!
அட நீ வேற பேசறது எல்லாமே அதிர்ச்சியாத்தான் இருக்கும்னு சொல்ல வந்தேன்!

17. மன்னர் எட்டடி பாய்ந்தால் இளவரசர் பதினாறடி பாய்கிறார்?
அவ்வளவு வீரமா?
போரில் தப்பி ஓடி வருவதைச் சொன்னேன்!

18.  அந்த கிரிக்கெட் ப்ளேயரை நம்பி கோடிகளை வாரி இறைச்சாங்க!
இப்போ!
புழுதியை வாரி இறைக்கிறாங்க!

19.  ஒரு வாரம் தொடர்ந்து என் கிட்டே ட்ரிட்மெண்ட் எடுத்துக்கிட்டா சமாளிச்சிடலாம்னு சொல்றீங்களே டாக்டர் சரியாயிருமா?
  என் கடன் பிரச்சனையை சமாளிச்சிருவேன்னு சொன்னேன்!

20.  எல்லா நாட்டையும் பைசா செலவில்லாம சுத்தி பார்க்கணும்னு எனக்கு ரொம்ப நாளா ஆசைடா!
  ஏன் இப்படி சுத்தி வளைச்சி பேசறே? நம்ம நாட்டோட பிரதமர் ஆகணுன்னு டைரக்டாவே சொல்லேன்!

21. எதிரியின் மண்ணை நம் மன்னர் கவர்ந்துவந்துவிட்டாராமே?
  அட நீ வேறு? அவர் போரில் மண்ணைக் கவ்வி வந்ததைத்தான் அப்படி கவுரவமா சொல்லிக்கிறார்!

22. எண்டரண்ஸ் வரைக்கும் வந்தவன் கடைசியிலே கோட்டை விட்டுட்டான்னு சொல்றியே எந்த காலேஜ்ல சேர்க்க போறே?
அட சும்மாயிருப்பா? நான் சொல்றது என் பையனோட எல்.கே.ஜி அட்மிசனுக்கு!

23. மாமியாருக்கு தொண்டையில புண் வந்திருக்குன்னு தெரிஞ்சதும் தவிச்சு போயிட்டியாமே அவங்க மேல அத்தனை பாசமா?
அவங்களாலே இனிமே கத்தி பேசி சண்டை போட முடியாதே! எனக்கு போர் அடிக்குமே!

24.  பொண்ணு உங்களுக்குத் தூரத்து உறவுன்னு சொல்றீங்களே எந்த முறையிலே!
பொண்ணு மும்பையிலே தூரமா இருக்குதுன்றதைத்தான் அப்படிச் சொன்னேன்!

25. இலவசமா எதைக் கொடுத்தாலும் நம்ம தலைவர் வாங்க மாட்டார்!
  நல்ல கொள்கையாச்சே!
கூடவே தட்சணை வச்சி கொடுக்கணும்னு சொல்ல வந்தேன்!

 26. அந்த கிரிக்கெட் ப்ளேயர் முன்னெல்லாம் பந்தை சிக்சருக்கு பறக்க விடுவாரு!
 இப்ப ?
பெயில்ஸை பறக்க விடறாரு!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Wednesday, April 29, 2015

நேபாள பூகம்பமும் சர்ச்சை வாரமும்! கதம்ப சோறு பகுதி 59

கதம்ப சோறு பகுதி 59

நேபாள பூகம்பம்:

         அண்டைநாடான நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பம் பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலிகொண்டுவிட்டது சோகம். இன்னும் அதிகாரப்பூர்வமாக இத்தனைபேர் என்று தகவல் வராவிடிலும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என்ற அதிர்ச்சியான தகவலை அந்த நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார். இயற்கையின் சீற்றங்கள் எப்போது வரும் என்று சொல்லவும் முடியாது கணிக்கவும் முடியாது. இயற்கையை மாசு படுத்துகையில் அது பொங்கி எழும்போது நம்மால் தாங்கமுடிவதில்லை! நேபாளத் தலைநகரையே இந்த சீற்றம் மாற்றிப் போட்டுவிட்டது. பல்லாயிரக் கணக்கான மக்கள் உணவின்றி உடையின்றி இருப்பிடம் இன்றி அடிப்படைவசதிகள் இன்றி தவித்துவருகின்றனர்.தமிழர்கள் 37 பேரின் நிலை தெரியவில்லை. தொலைதொடர்பு நிறுவனங்கள் சில சலுகைகளை மனிதாபிமானத்துடன் அறிவித்துள்ளதும் இந்திய அரசு உதவ முன் வந்திருப்பதும் பாராட்டுக்குரியது. இயற்கையின் சீற்றத்தில் இருந்து மீண்டுவர பிரார்த்திப்போம்!

மீண்டும் ஆச்சார்யா!

    கர்நாடாகவில் நடைபெற்றுவரும் அம்மா வழக்கில் அரசு வழக்கறிஞராக பவானிசிங் நியமிக்கப்பட்டது தவறு என்று உச்ச நீதிமன்றம் முதல் அடியைக் கொடுத்தது. இரண்டாவது அடியாக இப்போது பழைய அரசு வழக்கறிஞர் ஆச்சார்யாவை மீண்டும் அரசுவழக்கறிஞராக நியமித்துள்ளது. இது அம்மாவிற்கு மிகவும் பின்னடைவே! வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளிவந்துவிடும் என்றே தோன்றுகிறது. தீர்ப்பு எதிராக அமைந்தாலும் உச்ச நீதிமன்றம் செல்லலாம். ஆனால் அதற்குள் அரசியல் நிலைமைகள் மாறிவிடும். இந்த வழக்கின் தீர்ப்பு அரசியல் கபட வேடதாரிகள் பலருக்கும் ஓர் எச்சரிக்கையாக அமையும் என்றே தோன்றுகிறது. ஓர் தைரியமான பெண்மணியின் அரசியல் வாழ்க்கையை இறுதி செய்யக் கூடிய தீர்ப்பாக இந்த வழக்கு அமைந்துவிட்டிருப்பது வேதனைக்குரியது. அதிமுகவின் எதிர்காலமும் இந்த வழக்கின் முடிவை பொறுத்துதான் அமையும். பார்ப்போம்!

விஜயகாந்த் காமெடி அரசியல்!

         தமிழக அரசியலில் விஜயகாந்த் ஓர் ஜோக்கராகவே பார்க்கப் படுகின்றார். தன்னுடைய வாய்ப்புகளை அவராகவே கெடுத்துக் கொள்கிறார். திடீரென எதிர்கட்சிகளை போய் சந்தித்தது. மேகதாது அணை கட்டுவதை தவிர்க்க எதிர்கட்சிகளோடு சென்று பிரதமரை சந்தித்து மனுகொடுத்தது என்று ஏகத்திற்கு பில்டப் செய்து டெல்லிக்கு போன விஜயகாந்த் செய்தியாளர் சந்திப்பில் தனது வழக்கமான பாணியில் செய்தியாளர்களை ஏகவசனத்தில் தாக்கி தன் முகத்திரையை கிழித்துக் கொண்டுள்ளார். புதிய கட்சியாக இருந்தாலும் இந்த பிரதமர் சந்திப்பு விஷயத்தில் விஜயகாந்திற்கு முக்கியத்துவம் கொடுத்து உடன் கலந்து கொண்ட திமுகவிற்கும் பெருத்த அவமானம் ஆகிப்போனது. இது பா.ஜ.கவின்  சதியோ என்று எண்ணும் அளவிற்கு அது யோசிக்கத் துவங்கியுள்ளது. அரசியலில் அனுபவமற்ற போக்கையே விஜயகாந்தின் அணுகுமுறை காட்டுகின்றது. விரைவில் தேர்தல்வரவுள்ள நிலையில் நல்லதொரு வாய்ப்பை விஜயகாந்த் இழந்துவிட்டார் என்றே தோன்றுகிறது.

தாலி சர்ச்சை!

   கருஞ்சட்டைக் காரர்கள் தீடீர் என்று தாலி சர்ச்சையை கையில் எடுத்துக் கொண்டு களத்தில் குதித்துள்ளார்கள். தாலி ஆரியர்கள் வழக்கம் தமிழர் பண்பாட்டில் தாலி இல்லை. தாலி அகற்றப் போகிறோம்! தமிழ் பெண்களே தாலி அணியாதீர்கள் என்று களத்தில் குதித்துள்ளார்கள். அது அவர்கள் விருப்பம். தமிழர்களுக்கு தமிழர்கள் வேண்டுகோள் விடுக்கிறார்கள்.அதை ஏற்பதும் விடுவதும் தமிழர்களின் விருப்பம். இதோடுவிட்டால் பரவாயில்லை! பிராமணர்களை வம்புக்கு இழுக்கிறார்கள். ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி என்றொரு பழமொழி உண்டு. பிராமணர்கள்தான் எல்லாவற்றுக்கும் காரணம்.என்று அவர்கள் மேல் பொங்கி வழிகிறார்கள். அத்தோடும் விடவில்லை! பூணுல் அணிந்த வயதான பிராமணர் ஒருவரை வழிமறித்து தாக்கி பூணூலை அறுத்து எறிந்து இருக்கின்றனர். இதன் மூலம் என்ன சொல்கிறார்கள் பூணூல் அறுத்துவிட்டால் அவன் பிராமணன் இல்லாது போய்விடுவானா? அல்லது அப்படி செய்துவிட்டால் மூடப்பழக்கங்கள் எல்லாம் ஒழிந்துபோய்விடுமா? பிராமணன் செய்வது சொல்வது எல்லாம் மூடப்பழக்கம் என்றால் மற்றவர்கள் மூடப்பழக்கங்களுக்கு அடிமையாகவில்லையா? ஆதியில் ஆடையில்லை! மொழியில்லை! வெந்த உணவில்லை! பிறகு நாகரிகம் வளர ஒவ்வொன்றாய் வந்தது. அப்படி வந்த ஒன்றாக தாலி இருக்கலாம். விரும்பியவர்கள் அணியட்டும். வேண்டாதவர்கள் மறுக்கட்டும். இதை பிரசாரம் செய்யுங்கள் மறுக்கச் சொல்லுங்கள். அதைவிட்டு எதற்கு பார்ப்பணர்களை வம்புக்கிழுக்க வேண்டும். உங்கள் இயக்கத்தினர் வழிபாடு கூடாது என்ற கருத்தினர்.ஆனால் இன்று வழிபாடு செய்பவர்களே உங்களது இயக்கமாக இருக்கிறார்கள். உங்கள் இயக்கத்தில் பிரிந்த தலைவர்கள் வழிபாட்டை விரும்புகின்றனர். இன்னொரு இயக்கத்தில் யாகங்கள் ஹோமங்கள் எல்லாம் விமரிசையாக கொண்டாடப் படுகிறது. இதெல்லாம் செய்தால் பார்ப்பானுக்குத்தானே லாபம்? ஏன் செய்கிறீர்கள் என்று அந்த தலைவர்களிடம் கேட்கத் துணிவில்லாத உங்கள் பகுத்தறிவு அப்பாவி கிழ பிராமணன் பூணூலை அறுக்க மட்டும் வந்துவிட்டதா? பார்ப்பாணையும் பாம்பையும் ஒருசேரக் கண்டால் பாம்பை விட்டுவிட்டு பார்ப்பானை அடிக்க வேண்டுமாம். பார்ப்பானை அடித்துவிட்டு பாம்பைபிடித்து கொஞ்சிப் பாருங்கள் கடிக்கிறதா கொஞ்சுகிறதா என்று தெரியும். பகுத்தறிவு வாதிகளே உங்களுக்கு உண்மையிலேயே பகுத்தறியும் திறன் இருப்பின் பகுத்து அறிந்து பாருங்கள்! பார்ப்பணனை திட்டிப் பேசி பகுத்தறிவாளர்கள் என்று மார்தட்டிகொள்ளாதீர்கள்! அதே சமயத்தில் இந்து முன்னனிக்காரர்களே! நீங்களும் முடிந்தால் அவர்களின் பகுத்தறிவை விளக்க பாருங்கள் அதைவிட்டு பெரியார் படத்தை விளக்குமாற்றால் அடிப்பது? செருப்பால் அடிப்பது? சிறுநீர் கழிப்பது, கொடும்பாவி எரிப்பது போன்றவற்றை செய்து இழிவு படுத்தாதீர்கள்!   கொள்கைகளை எதிர்க்கலாம் விவாதங்கள் நடந்தால் தெளிவு பிறக்கும். உங்களின் சண்டையினால் தேவையற்ற  விரோதங்கள்தான் பிறக்கும். உங்களுக்கு பெரியாரை பிடிக்க வில்லை என்றால் நாகரிகமாக அவரை அவரின் கருத்துக்களை விமரிசியுங்கள்! கீழ்த்தரமாக இறங்கி தரம் தாழ்ந்து போகாதீர்கள். பெரும்பாலும் இதைச்செய்வது கூலிக்கு மாரடிப்பவர்களாகத்தான் இருக்கும். கூலிக்கு என்றாலும் கொஞ்சம் பகுத்தறிந்து செயல்படுங்கள் தாய்மார்களே!

கிச்சன் கார்னர்:
அவல் கிரஞ்சி

தேவையான பொருட்கள்: வேர்க்கடலை 1 கப், வெள்ளை அவல் 1 கப், உருளைக்கிழங்கு 4, பச்சைமிளகாய் 6,  இஞ்சி சிறுதுண்டு, கறிவேப்பிலை, கொத்துமல்லி சிறிதளவு, உப்பு, எண்ணெய், தேவையான அளவு.
அவலை ஊறவைத்து பிழியவும், வேர்க்கடலையை வறுத்து மாவாக பொடிக்கவும், உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரிக்கவும். அதனுடன் இஞ்சி, பச்சைமிளகாய் வேர்க்கடலைபொடி, ஊறிய அவல், கறிவேப்பிலை, கொத்துமல்லி உப்பு சேர்த்து நன்றாக பிசையவும். பிசைந்த மாவை சிறு சிறு வடைகளாகத் தட்டி சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும். அவல் கிரஞ்சி தயார்.
ரெசிபி உபயம்: வரலட்சுமி முத்துசாமி, கிழக்கு முகப்பேர், நன்றி: தி இந்து தமிழ் நாளிதழ்.

டிப்ஸ்! டிப்ஸ்! டிப்ஸ்!
இனிப்பு பண்டங்கள் வைத்திருக்கும் டப்பியில் எறும்பு சுற்றுகிறதா? அந்த டப்பியைச் சுற்றி மஞ்சள் பொடி தூவி வைத்தால் எறும்பு அண்டாது.
சுளுக்கு ஏற்பட்டால் குளிக்கும் முன் சுளுக்கு உள்ள இடத்தில் விளக்கெண்ணை விட்டு நீவி பதமான வெந்நீரால் கழுவி விட்டால் சுளுக்கு போயே போச்!
பாலித்தீன் பைகளால் சுற்றுச் சூழல் கெடுகிறது. கடைகளில் பொருட்கள் வாங்குகையில் பாலிதீன் பையில் வாங்காமல் நம் இல்லத்தில் இருந்து துணிப்பை அல்லது நார்ப்பை கொண்டு சென்று வாங்கலாமே!
அப்பளத்தை ப்ரிட்ஜில் வைத்து எடுத்து பொரித்தால் எண்ணெய் அதிகம் குடிக்காது.
குளிர்சாதனப் பெட்டியில் கரித்துண்டுகளை போட்டு வைத்தால் துர்நாற்றம் மறைந்துவிடும்.

பதிவர் அறிமுகம்:
  விசு ஆவ் செம் மின் துணிக்கைகள். 
அமெரிக்காவில் வசிக்கும் இந்த தமிழ்பதிவர் ஓர் பேராசிரியர்! நகைச்சுவை மிளிர பதிவுகள் எழுதுவதில் சமர்த்தர். தற்சமயம் ஒரு புத்தகமும் வெளியீடு செய்ய உள்ளார். சமீப காலமாக இவரது பதிவுகள் என் டேஷ் போர்டில் வரவில்லை! அதனால் படிக்கவில்லை! இந்த அறிமுகத்திற்காக தேடுகையில் அவரது தளம் மாற்றம் அடைந்துள்ளதை காணமுடிந்தது. இவரது தளத்தில் இந்த பதிவை படித்துப் பாருங்களேன்!  விசு ஆவ்செமின் மின் துணிக்கைகள்!

திரிஷாவும் திருமண முறிவு சர்ச்சையும்!

    தமிழ் சினிமாவில் த்ரிஷா எப்போதுமே சர்ச்சைக்குரிய ஓர் நடிகைதான்! நம்பர் ஒன் நடிகையாக இருந்த போதே ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கினார். அவரோடு பலர் கிசுகிசுக்கப்பட்டனர். தெலுங்கு நடிகர் ராணாவுடன் நெருக்கமாக பழகினார் இருவருக்கும் திருமணம் என்றெல்லாம் சொல்லப்பட்டது. அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் தொழிலதிபர் வருண் மணியனுடன் ஜனவரி மாதம் நிச்சயதார்த்தமும் நடந்தேறியது. இருவரும் இணைந்து பல நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றனர். இதற்கிடையில் இருவரும் திருமணத்திற்கு முன்னரே பிரிந்துவிட்டதாக செய்தி பரவி வருகிறது. இருவருமே இதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியிடா விட்டாலும் டிவிட்டரில் இந்த விஷயம் பெருமளவில் பரப்பப்பட்டு வருகிறது. திறமையான நடிகையாக இருந்தாலும் அவரது சொந்த விஷயமான இதை கிண்டல் பண்ணுவது வேதனையான ஒன்று. பிரபலங்களாக பிறந்துவிட்டாலே தொல்லைதான். வதந்தியோ உண்மையோ அது அவர்களுக்குத் தெரியும். அடுத்தவர் வாழ்வில் மூக்கை நுழைக்கும் மீடியாக்களுக்குத் தெரியுமா அவர்களின் வலி?

வைரமுத்து- ஜெயக்காந்தன் சர்ச்சை!

    காலஞ்சென்ற எழுத்தாளர் ஜெயகாந்தன் ஓர் இலக்கிய ஆளுமை என்பதில் நுனியளவும் சந்தேகம் இல்லை! முற்போக்கு சிந்தனைகளுடன் வாழ்ந்து மறைந்த அந்த எழுத்தாளர் மறைந்து போனதன் ஈரம் காயும் முன்னரே பப்ளிசிட்டிக்காக அவர் கடைசியாக எழுதிய எழுத்து என்று குமுதம் வார இதழ் ஓர் கடிதம் வெளியிட்டது. அதில் அவர் வைரமுத்து குமுதத்தில் எழுதிவரும் சிறுகதைகளை பாராட்டி எழுதி இருந்தார். வைரமுத்துவிற்கு பப்ளிசிட்டி கிடைக்கும் என்றோ குமுதம் பப்ளிசிட்டிக்காகவோ இந்த கடிதம் வெளியிட்டிருக்கிறது என்றொரு சர்ச்சை. ஜெயக்காந்தனின் மகள் கடந்த ஒருவருடமாகவே தன் தந்தை பேச எழுத ஆற்றல் இல்லாமல் இருந்தார். அந்த கடிதம் அவர்களாகவே எழுதிக்கொண்டு என் தந்தையின் கையோப்பம் வெட்டி ஒட்டியிருக்கின்றனர் என்று சொல்லுகிறார். வைரமுத்துவிற்கு இது போன்ற ஆசைகள் அதிகம். கவியரசு பட்டம் கண்ணதாசனுக்கு என்றால் தான் கவிப்பேரரசு என்றார். குமுதமும் இது போன்ற குறும்புகள் செய்வதில் எப்போதும் சமர்த்து. இந்த சர்ச்சையினால் குமுதம் பிரதிகள் விற்பனை கூடியிருக்கும் எல்லாம் வியாபாரத் தந்திரம். விஜய் டீவி டி. ஆர்பிக்காக ரியாலிட்டி ஷோவில் செய்யும் தில்லு முல்லுகளின் ஆரம்பமே இப்படி பத்திரிக்கைகள் செய்வதுதான். இதையெல்லாம் வாசகர்கள் பெரிது படுத்தாமல் இருந்தாலே காலப்போக்கில் மறந்து போகும்.

படிச்சதில் பிடிச்சது:

காகங்களின் கணக்கு!
ஒருநாள் மாலை அக்பர் பீர்பால் மற்றும் அமைச்சரவை சகாக்கள் மாலைப்பொழுதை ஜாலியாக போக்கிக் கொண்டிருந்தனர். அப்போது வானில் ஏராளமான காகங்கள் பறந்தன.
அக்பருக்கு திடீரென ஒரு சந்தேகம் எழுந்தது. “ நம் ஊரில் எத்தனை காகங்கள் உள்ளன என்று உங்களால் மிகச்சரியாக கூற முடியுமா? என்று அமைச்சரவை சகாக்களைப் பார்த்துக் கேட்டார்.
“ அது சாத்தியமில்லை” என்று மற்றவர்கள் மறுத்துவிட்டனர்.
“பீர்பால் உங்களால் சொல்ல முடியுமா?”
“ஒருநாள் அவகாசம் கொடுங்கள்”
மறுநாள் பீர்பால் அவைக்கு வந்து 83 ஆயிரத்து 575 காகங்கள் என்று கணக்குச் சொன்னார்.
“ இது சரிதானா? கூடுதலாக இருந்தால்?”
“பக்கத்து ஊர் காகங்கள் நம் ஊருக்கு வந்திருக்கும்” என்றார் பீர்பால்.
“குறைவாக இருந்தால்?”
நம் ஊர் காகங்கள் வெளியூருக்குச் சென்றிருக்கும் என்றார் பீர்பால்!
அக்பர் பீர்பாலின் சாமர்த்தியமான பதிலைக் கேட்டு மகிழ்ந்து பரிசளித்து மகிழ்ந்தார்.
(சிட்டுக்களுக்கான குட்டிக்கதைகள் என்ற நூலில் இருந்து)

தங்கள் வருகைக்குநன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்!


Tuesday, April 28, 2015

ஆடுகளம்!

ஆடுகளம்!


உச்சி வெயில் மண்டையை பிளந்து கொண்டிருந்தது. ஆங்காங்கே இருந்த ஒற்றை பனைமரங்களின் நிழல்களில் சிலர் இளைப்பாற ஆட்டம் களைகட்டியிருந்தது. கிராமத்தான்களின் கிரிக்கெட் ஆட்டம் அது. சச்சின் டெண்டுல்கராகவும், கபில்தேவாகவும், விராத் கோலியாகவும், தோனியாகவும் தம்மை கற்பனை செய்து கொண்டு அவர்கள் ஆடிக்கொண்டிருந்தார்கள்.

    புல் மைதானம் அல்ல அது! அப்போதுதான் அறுவடை முடித்திருந்த வயல்! பிட்ச் வரை கொஞ்சம் சமனப்படுத்தி இருந்தார்கள். மற்ற இடங்கள் வெயிலில் வெடித்து துருத்தி நின்றன. காலில் ஷு இல்லை! ஜெர்கின்ஸ் இல்லை! எந்த பாதுகாப்பு அரணும் இல்லை! தேய்ந்து போன ஒரு மட்டை! கிழிந்து போகும் பந்துகள்! ஆனால் அவர்கள் ஆட்டத்தில் ஓர் உத்வேகம் இருந்தது. பந்தயம் தொகை கோடிகள் அல்ல! ஆனாலும் வென்றே ஆகவேண்டும் என்ற கொள்கையோடு ஆடிக்கொண்டிருந்தார்கள்.

    அதோ பாருங்கள்! குள்ளமான ஒருவன்! சச்சின் மாதிரி நாசுக்காக புட்வொர்க் வைத்து பந்துகளை விளாசிக்கொண்டிருக்கின்றானே அவன் தான் மகி! செல்லமாக தாத்தா என்பார்கள். இவனை நம்பியே இந்த அணி இருக்கிறது. ஓப்பனிங் ஆடுவான். சுழல்பந்தும் வீசுவான். துடிப்பான பீல்டர்! தேவைப்பட்டால் கீப்பிங்கும் செய்வான். ஆல்ரவுண்டரான இவனை அந்த ஊரின் சீனியர் டீம் கூட போட்டிக்கு அழைத்து சென்றிருக்கிறது. அத்தனை ஸ்டார் ப்ளேயர் அவன். அவன் அவுட்டானால் மொத்த டீமூமே ஆடிப்போய்விடும். அவன் ஆடினால் டீம் ஜெயித்துவிடும். அன்று இந்திய டீமுக்கு டெண்டுல்கரோ அதே போலத்தான் மகி.

    இதோ ஒரு நான்கை விளாசி தனது அணிக்கு வெற்றி தந்துவிட்டான் மகி. இந்த கதை அவனைப்பற்றியதுதான். மகிக்கு பெரிதாக அப்படி ஒன்றும் வயதாகிவிடவில்லை! பதினொன்றாம் வகுப்புதான் படிக்கிறான். அரும்பு மீசை முளைக்கும் வயதில் அப்படியே காதலும் முளைத்துவிட்டது. எல்லாம் இனக்கவர்ச்சிதான் என்று அவனது டீமின் ஆலோசகர் சாமி சொன்னாலும் அதை அவன் காதில் வாங்கிக் கொள்ளவில்லை!

    சுற்றுவட்டாரத்தில் சாமியின் டீம்தான் தாதா! சாமிதான் இந்த டீமை உருவாக்கினார். முதலில் நிறைய தோல்விகளை கண்டு இன்று அசைக்க முடியாத அணியாகிவிட்டது. சாமிக்கு வயதாகி போக ஆலோசகர் ஆகிவிட்டார். மகிதான் கேப்டனாகவேண்டியது ஆனால் சாமிக்கு என்ன தோன்றியதோ மகியின் நண்பன் பாலாவை கேப்டனாக்கி விட்டார். மகி துணைக் கேப்டன்.

    அதே ஊரில் எதிரணி ஒன்று இருந்தது. கந்தா அதன் கேப்டன். மகியும் அவனும் நண்பர்களும் கூட! ஆனால் போட்டி என்று வந்துவிட்டால் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். இதுவரை மகி அணியை அவன் மண்ணில் வைத்து கந்தா அணி வென்றதில்லை! அதே போல மகி அணியும் அவர்கள் கிரவுண்டில் அவர்களை சாய்த்தது இல்லை! இந்தியா- பாகிஸ்தான் ஆட்டம் போல இவர்கள் ஆட்டத்தில் அனல் பறக்கும்.
      அந்த வருட கோடை விடுமுறை! டோர்ணமெண்ட் அறிவித்துவிட்டார்கள். போட்டிகள் தொடங்கும் போதே தெரிந்துவிட்டது மகி அணியும் கந்தா அணியும் தான் பைனலுக்கு வரும் என்று. இந்த முறை எப்படியும் மகி அணியை மண்ணை கவ்வ வைக்க வேண்டும் என்று கந்தா நினைத்தான். அவன் மனதில் ஓரு பக்காவான ப்ளான் உருவானது. மகி ஏற்கனவே பெண்கள் என்றான் கொஞ்சம் வழிவான். சிரித்து சிரித்து பேசும் இவனைக் கண்டால் பெண்களுக்கும் பிடிக்கும். இது போதாதா கந்தாவுக்கு! அடேய்! மகி! இந்த வருஷம் கப்பு எங்களுக்குத்தாண்டா! என்றான்.

  “கனவுல கூட உங்களுக்கு கப்பு கிடைக்காதுடா மச்சான்!”

    “பார்ப்போமா?”
 “பார்ப்போம் மச்சி! வேணும்னா பாத்திரக் கடையில உஙகளுக்கு ஒரு டீ கப்பு வாங்கித் தரட்டுமா?” மகி கிண்டலாக சொல்ல
”யாருக்கு டீ கப்பு! யாருக்கு கிரிக்கெட் கப்புன்னு பார்க்கத்தானே போறே! ஓவரா நக்கல் பண்ணாதே நாளைக்குவருத்தப்படுவே!” கந்தா சொல்ல, “தோடா! கொழந்தைக்கு கோவத்தை பாரேன்!” மகி சிரிக்க கந்தாவின் முகம் கறுத்துப் போனது.


      அன்று பள்ளிவிட்டு திரும்புகையில் பஸ்ஸில் ஒருநாள் மகியின் பக்கத்தில் வந்து அமர்ந்தாள் மணிஷா. சேட்டுவீட்டு பெண். அவள் வசதிக்கு இந்த பள்ளியில் படிக்க வேண்டியது இல்லை! ஆனால் என்னவோ இந்த பள்ளியில் படித்துவந்தாள். இங்கிலிஷ் மீடியம் நைந்த் ஸ்டேண்டர்ட். அவள் அமரவும் கூட இருந்தவர்கள்  என்ன மச்சி நாங்கள்லாம் தூண்டில் போட்டாலும் மீனுங்க சிக்க மாட்டேங்குது! உனக்கு வாலண்டியரா வந்து விழுது!” கூட இருந்தவர்கள் கலாய்க்கஅந்த பெண்ணின் முகம் கூடுதலாய் வெட்கத்தில் சிவக்க மகியை ஏறிட்டு பார்த்தாள். ”நீங்க தப்பா நினைக்காதீங்க! பசங்க எப்பவும் இப்படித்தான்! கலாய்ப்பானுங்க! மனசுல ஒண்ணும் வெச்சுக்காதீங்க” என்றான். அவள் புன்னகைக்க மகி முகத்தில் வெட்கம் படர்ந்தது அப்படியே கிறங்கி போயிருந்தான்.
  
   அப்புறம் அவர்கள் அடிக்கடி சந்தித்துக் கொண்டார்கள். மகி கிரிக்கெட் ஆடும் போதெல்லாம் அவள் அங்கு இருப்பாள். பள்ளியின் இடைவேளையில் இருவரும் ஒன்றாய் சுற்றினார்கள். பாலாவுக்கு விஷயம் தெரிந்தது. என்னடா! ஓவரா போவுது? என்றான்.
     “எதுடா மச்சான்?”
  “அந்த பொண்ணுக்கூட சுத்திக்கிட்டு திரியறே?”
 “ நாங்க லவ் பண்றோம் மச்சி!”
 “டேய்! அது பணக்காரவூட்டுப் பொண்ணு! அதை நம்பி..”
  “காசு, பணம், ஜாதி, மதம் எல்லாம் காதலுக்கு முன்னாடி தூசிடா தம்பி”
  “யாரு! நான் உனக்குத் தம்பியா? தேவைதான்! ஒன்னைவிட ஒரு வயசு பெரியவன்! ஒருவருசம் பெயிலானதால ஒண்ணா படிக்கிறேன்! காதல் வந்தாலே பசங்களுக்கு நிலவரம் தப்பிடுது!”
  ‘சாரி அண்ணா! பிள்ளையார் முருகர் காதலை சேர்த்து வச்சமாதிரி எங்க காதலை நீ சேர்த்து வைக்க மாட்டியா?”

  “ அண்ணான்னு சொல்றே! அப்புறம் மாமா வேலை பார்க்கச்சொல்றே! உன்னை புரிஞ்சிக்கவே முடியலைடா! இதெல்லாம் வயசுக்கோளாறுடா தம்பி! ஏதோ பழகறே! கூட சுத்தறே! அத்தோட நிறுத்திக்க! காதல் கல்யாணம் அப்படின்னு கனவு கூட காணாதே!”
     “என்னடா பாலா! நீயே இப்படி சொன்னா?”
 “நான் எப்பவும் உனக்கு நல்லதுதான் சொல்லுவேன்! அப்புறம் உன் இஷ்டம்! அந்த பொண்ணுக்கூடவே சுத்திகிட்டு இருக்காமே நாளைக்கு மேட்ச் இருக்குது வந்துரு!”  பாலா சென்றுவிட்டான்.

     . அந்த பெண் இருக்கும் ஊரில்தான் கந்தாவின் உறவினர்கள் இருக்கிறார்கள்.மகி அந்த பெண்ணுடன் சுத்துவது தெரிந்ததும் அப்படியே  மகியை அங்கு அழைத்துச் சென்றான். அந்த பெண்ணின் உறவுப் பெண் ஒன்றை சிநேகம் பிடித்து அந்த பெண்ணின் வீட்டிற்கு மகியை அழைத்துச் சென்றான்.எப்படியொ இருவரையும் அடிக்கடி சந்திக்க வைத்தான். அந்த பெண்ணும் மகியை சுற்றி வந்தது. சின்னவயசுதான் அல்லவா? மகியின் கவனம் சிதறிக் கிடந்தது. அந்த பெண் ஒரு கைக்கடிகாரம் வாங்கி கொடுத்தது. அதை கட்டிக் கொண்டு இப்போது தோனி கிளவுசை கழட்டி மாட்டுவது போல ஒவ்வொரு ஷாட்டுக்கும் ஒரு முத்தம் அந்த வாட்ச்சுக்கு கொடுப்பான். பாவம் அதற்கு வாயிருந்தால் அழுதே விட்டிருக்கும்.
    
      அவனால் முன்பு போல ஆட முடியவில்லை! அந்த பெண் நினைவாகவே இருந்தான். அந்தவருட டோர்ணமெண்டில் முதல் போட்டியிலேயே தோற்றுவிட்டது மகி அணி. கவனச்சிதறல்!
பாலாவுக்கு மிகவும் வருத்தம். எப்போதும் அனைத்து போட்டியிலும் வென்று இறுதிப் போட்டிக்கு வரும். இந்த முறை முதல் போட்டியிலேயே தோல்வி. மகியை அழைத்தார். "ஏன் மகி? நீ ஆடலைன்னா நம்ம டீம் அவ்ளோதான்! உன்னை நம்பி இருக்கிறோம்! இன்னிக்கு சொதப்பிட்டியே!" என்றான். மகியின் முகம் இருண்டு போனது. ”சாரிடா மச்சி! என் பிகர்கூட ஒரு சின்ன சண்டை! அதான் கவனமா ஆடமுடியலை!”
“நான் அப்பவே சொன்னேன்! உனக்கு இந்த விஷயம் சரிபட்டு வராதுன்னு!” “ இல்லேடா! அதுக்கும் இதுக்கும் எதுவும் சம்பந்தம் இல்லை! நம்ம டீப் எப்படியும் கப் வாங்கும் கவலைப்படாதே!” “சரி சரி! அடுத்த மேட்ச்சாவது ஒழுங்கா ஆடு!” எப்படியோ அடுத்த ரெண்டு போட்டியில் வென்று பைனல்சுக்கு தகுதி பெற்றுவிட்டது.   எதிர்பார்த்தது போல கந்தா அணி பைனல்ஸுக்கு வந்துவிட்டது.

    பைனல்ஸ் விளையாடும்  முன் ப்ராக்டீஸ் செய்கையில் மகிக்கு அழைப்பு வந்தது மணிஷாவிடம் இருந்து, இன்னிக்கு என் கூட சினிமாவுக்கு வரவேண்டும் என்று. எனக்கு மேட்ச் இருக்குது!
  ” மேட்ச்தான் முக்கியமா? நான் முக்கியம் இல்லையா?” “இல்லை! நான் நாளைக்கு ஒழுங்கா ஆடனும்! இல்லேன்னா எங்க டீமோட கவுரவமே போயிரும்.”
    “நீ தான் டீம் டீம்னு உசுரை விடறே! அதனால உனக்கு என்ன பிரயோசனம்? அட்லீஸ்ட் உனக்கு கேப்டன் போஸ்டாவது கெடச்சுதா!”
      “ என் ப்ரெண்ட்தானே கேப்டன்! அவனுக்காக நான் ஆட வேண்டாமா?”
     “ நான் உன் லவ்வர்! எனக்காக சினிமாவுக்கு வரமாட்டியா?”

மகியால் பதில் பேச முடியவில்லை! ”இன்னிக்கும் நாளைக்கும் கொஞ்சம் விட்டுரு! அப்புறம்?”
     “இப்ப என் கூட சினிமாவுக்கு வரமாட்டே!”
மகி பதில் பேசவில்லை!  ஆடுகளத்தில் இருந்து அவள் புயலாக வெளியேற மகி தடுமாறிப் போனான்.
   அடுத்தடுத்து ஸ்டம்ஸுகளை சிதறவிட்டான். அப்படியே சோகமாக வந்து அமர்ந்தான்.
      மகி! இப்ப என்ன ஆகிப்போச்சு! இப்படி தடுமாடறே! ஓக்கே! நீ சினிமாவுக்கு போ! நாளைக்கு மேட்ச்சுக்கு வந்துடு! ப்ராக்டீஸ் உனக்கு வேண்டாம். சாமி சொல்ல மகி சைக்கிளில் விரைந்தான்.

   சினிமா தியேட்டரில் நுழைந்தான். அங்கே மணிஷா கந்தா அணியின் பவுலர் குருவுடன் இவனை பார்த்து கை அசைத்தாள்.
  “எங்க வந்தே?” உன் டீமையே கட்டிக்கிட்டு அழறதுதானே! இதோ பார் குரு நான் கூப்பிட்டதுமே வந்தான். இவனுக்கும் நாளைக்கு மேட்ச் இருக்குது! ஆனா நான் கூப்பிட்டதும் மறுக்கவே இல்லை! ரெண்டு டிக்கெட் தான் இருக்கு! ஒன்ணு அவனுக்கு! இன்னொன்னு எனக்கு!”
   “ அப்ப நான்!”
போய் கிரிக்கெட் விளையாடு!”  ஹாஹா ஏளனமாக சிரித்தாள் மணிஷா.
 “மணிஷா! நான் உன்னோட ரொம்ப நாள் ப்ரெண்ட்! இவன் இப்ப வந்தவன்! உனக்காக ப்ராக்டீஸைக் கூட விட்டுட்டு வந்துருக்கேன்!”
 “சரி பார்த்தா பாவமா இருக்கு! ஒரு கண்டீஷன்! அதுக்கு ஒத்துக்கிட்டா இவனை அனுப்பிச்சிட்டு உன் கூட படம் பார்க்கிறேன்!”
   “என்ன கண்டீஷன்!”
 “ கிட்டே வா சொல்றேன்!”
அவள் சொல்லவும் அதிர்ந்தான் மகி. ”இதுதான் உன் கண்டீஷனா! அது என்னால முடியாது!”
 “அப்ப போ! போய் விளையாடு! நான் குரு கூட போய்க்கிறேன்!”
 “வேண்டாம் மணிஷா!”
“அப்ப நான் சொல்ற கண்டீஷனுக்கு கட்டுப்படு!”
“ஓக்கே! உனக்காக கண்டிஷனை ஏத்துக்கறேன்!”
“ குரு நீ போ!” நான் மகியோட படம் பார்த்துக்கிறேன்!”

    “கந்தா! நீ சொன்ன மாதிரியே மணிஷா சொல்லி சத்தியம் வாங்கிட்டா! நாளைக்கு மகி டீம் அவுட்டு! நமக்குத்தான் கப்பு!” குரு மகிழ்ச்சியுடன் சொல்லிக் கொண்டிருந்தான்.

     “சாமி! பாலா! நாம மோசம் போயிட்டோம்! நாளைக்கு டீம்ல மகி சரியா ஆட மாட்டான்! டக் அவுட் ஆயிருவான்” ஷங்கர் ஓடிவந்து சொன்னான்.
    “என்னடா சொல்றே?”
“நான் இன்னிக்கு தியேட்டருக்கு போனேனா! அங்க மணிஷா இருந்தா கூடவே குரு அப்ப மகி வந்தான்.”
 “ நான் தான் அனுப்பி வச்சேன்! அதுக்கென்ன?”
  “அந்த மணிஷா நாளைக்கு மகி டக் அவுட் ஆகனும்னு சொல்லி சத்தியம் வாங்கிட்டா! அப்பத்தான் அவன் கூட படம் பார்ப்பேன்னு அடம் பிடிச்சு சத்தியம் கேட்டா! இவனும் பண்ணிக் கொடுத்திட்டான்!”
   “ என்னடா சொல்றே! மகி அப்படி எல்லாம் பண்ண மாட்டானே!”
  தற்செயலாக அங்கே வந்த குரு,  “ஆமா சாமி! மகி சத்தியம் பண்ணிட்டான்! காதல் அவன் கண்ணை மறைச்சிருச்சு!” என்றான்.

“ நாளைக்கு  மகியை டீம்ல சேர்க்காதீங்க! நான் ஓப்பன் பண்றேன்! கப்பு நமக்குத்தான்!” என்றான் ஷங்கர்.
அவனுக்கு மகியின் மீது பொறாமை! அவன் நன்றாக ஆடுவதால் இவனை அணியில் சேர்ப்பது இல்லை! ப்ராக்டீஸ் மேட்ச்சில் ப்ரெண்ட்லி மேட்சில் சேர்ப்பார்கள் டோர்ணமெண்ட்டில் சேர்ப்பது இல்லை! எப்படியாவது மகியை ஓரம் கட்ட வாய்ப்பை நாடியிருந்தான்.

“ அதை நாளைக்கு முடிவு செய்வோம்!” என்றார் சாமி.

குரு கந்தாவிடம் இந்தவிஷயத்தை சொல்ல ஓடினான். “கந்தா! நாளைக்கு மகியை இறக்கினா டக் ஆயிருவான். அதே சமயம் அவனுக்கு பதில் ஷங்கர் இறங்கினா நாமலே அவனை டக் பண்ணிருவோம்! கலகலத்து போயிருக்கு பாலா டீம்! இந்த வருஷம் நமக்குத்தான் கப்பு!”

கந்தா குதுகலித்தான்.

மறுநாள் டோர்ணமெண்ட், மகி சாமியிடம் வந்தான். ”சாமி! எனக்கு உடம்பு முடியலை! ஷங்கரை இறக்கி விளையாடுங்க! நான் ஆடலை!”
  “ என்னடா சொல்றே!  இது பைனல்!”
“ அதான் நான் வேண்டாம்னு சொல்றேன்!”
மகி மவுனித்தான்.
சாமி சொன்னார்.  “மகி உன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு! யார் சொன்னாலும் நம்ப மாட்டேன்! நீயே சொன்னாலும் நம்ப மாட்டேன்! பேடை கட்டு! நீ இறங்கறே! நாம ஜெயிக்கிறோம்! கப்பை வாங்கறோம்!”

  என்ன நினைத்தானோ தெரியவில்லை! உடனே பேட் அணிந்து களம் இறங்கிய மகி முதல் பாலில் இருந்தே விளாசத் துவங்கினான். பவுண்டரிகளும் சிக்சர்களும் பறக்க பலமான ஸ்கோரை எட்டியது மகி அணி.

அந்த ஸ்கோரை எட்ட முடியாமல் தோற்றுப்போனது கந்தா அணி!

”எப்படிடா! அவன் டக் அவுட் ஆயிருவான்னு சொன்னியே! மணிஷா அவன் கிட்டே சத்தியம் வாங்கினதை பார்த்தியா?”

 “இதோ மணிஷாவே வந்திருக்கு! கேட்டுக்கங்க!”
”என்கிட்டே சத்தியம் பண்ணான்! ஆனா இப்படி செய்வான்னு எதிர்ப்பார்க்கலை!”
 மகி அப்போது அங்கே வந்தான்! “ என்ன மணிஷா! டக் அவுட் ஆயிருவேன்னு நினைச்சு ஏமாந்து போயிட்டியா? கிரிக்கெட்னா எனக்கு உசுரு! உனக்காக அதை விட்டுறுன்னு சொன்னாக் கூட விட்டுறுப்பேன்! இனிமே நீ கிரிக்கெட் ஆடாதேன்னு சொல்லியிருந்தா ஆடாம விட்டுருப்பேன்! ஆனா நீ கொலை இல்லே பண்ண சொல்றே! பிக்சிங் பண்றே! என்னை நம்பறவங்களை கொலை பண்ண சொல்லிட்டியே!  இதெல்லாம் தெரிந்தும் என்னை டீம்ல சேர்த்துகிட்டு ஓபன் பண்ண சொன்ன எங்க டீமை ஏமாத்த நான் விரும்பலை! இத்தனை நாளா நீ என்னை ஏமாத்தியிருக்கலாம்! முதல் முறையா நான் உன்னை ஏமாத்தி இருக்கேன்! இந்த ஏமாத்தம் உனக்கு காலம் பூறா நினைவு இருக்கும். வரட்டுமா?” என்றான்.
   மணிஷா முகம் இருண்டு போக, எதிரியை நேர்மையா தோற்கடிக்க முயற்சிக்கணும் மச்சி! டீ கப்பு வாங்கிட்டு வரேன்! ரெண்டுபேரும் ஆத்தி ஆத்தி குடிங்க! என்றான்.
அங்கிருந்த டீம் முழுக்க ஆ..ஹா!.. குரல் கொடுக்க மகி ஒர் ஹீரோவாக அங்கிருந்து அகன்றான்.
     
 தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


   

Monday, April 27, 2015

புகைப்பட ஹைக்கூ 82

புகைப்பட ஹைக்கூ


உடைபட்டதும்
உருக்குலைந்தது நாடு!
பூகம்பம்!

ஆடியதும்
ஆட்டம் முடிந்து போனது
பூகம்பம்!

இடிந்த கட்டிடங்கள்
ஒடித்தன நம்பிக்கை!
பூகம்பம்!

சிலநொடி கோபம்!
சிதறுண்டது நாடு!
நேபாளபூகம்பம்!

சீறியதும்
சிறகொடிந்தது நாடு!
பூகம்பம்!

பசியெடுத்த பூமி!
பலியாகின உயிர்கள்!
பூகம்பம்!

இயற்கையின் பாடம்
ஈடில்லா விலை!
பூகம்பம்!

சிலநொடிகள் குலுங்கியதும்
சிதைந்து போனது நகரம்!
பூகம்பம்!

சுமந்தவர்களை
சுவைத்துப்பார்த்தது பூமி!
பூகம்பம்!

தாங்கமுடியாத துயரம்
உருவாக்கிய தாங்கமுடியா
துயரம்!

ஆசையே துன்பத்திற்கு காரணம்!
அழிகையில் அறிவித்தது
புத்தரின் பூமி!

பாரம் இறக்கிய பூமி!
பாரமாயின நெஞ்சங்கள்!
பூகம்பம்!


வெடிபட்ட நிலம்
விழுங்கியது கட்டிடங்கள்!
பூகம்பம்!

வீடே பகையானது
வீணர்களான மக்களுக்கு!
பூகம்பம்!

அழிகையில்
பிறப்பெடுக்கிறது மனிதம்!
முரணாண உண்மை!

மலைபோல நம்பியும்
சிலையாக நின்றது!
பூகம்பம்!

இடிபாடுகள்
இரைத் தேடின!
பூகம்பம்!நடுங்கியதும்
நடுங்கிப் போனார்கள் மக்கள்!
பூகம்பம்!

ஆட்டம் அடங்கியதும்
அடக்கம் செய்யப்பட்டது நகரம்!
பூகம்பம்!

எண்ணிலா உயிர்கள்
மண்ணிலே மறைவு
கண்ணிலா பூமி!

தாய் பூமியில்
அகதிகளான மக்கள்!
பூகம்பம்!

தாயின் கோபம்
தாங்க வில்லை பிள்ளைகள்!
பூகம்பம்!

சரித்திரத்தையும்
சரித்துப் போட்டது பூமி!
பூகம்பம்!

மண்ணுக்கு பசியெடுக்கையில்
கண்ணுக்குத் தெரிவதில்லை மனிதர்கள்!
பூகம்பம்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Sunday, April 26, 2015

எமகாதகர்கள்!


  நான் பூஜை செய்யும் கோயில் உள்ள ஊரில் வயதான பெரியவர்  ஒருவர் தள்ளுவண்டியில் காய்கறிகள் விற்பார். எப்படியும் எழுபதை கடந்த வயதிருக்கும். கருத்த தேகம், குரல் கணீரெண்று ஒலிக்கும், தள்ளுவண்டியில் காய்கறிகளை  கூர் கட்டி கொண்டுவந்து விற்பார். சில சமயம் எடைக்கு விற்பார். பெரிதாய் லாபம் ஒன்றும்  அவருக்கு கிடைக்காது என்றுதான் எனக்குத் தோன்றியது. 
       ஏழ்மை! முதுமை, இந்த தள்ளாதவயதில் இப்படி சம்பாதிக்க வேண்டுமா? என்று தோன்றும். இந்த பெரியவரிடம் பேரம் பேசாமலே காய்கறிகள் வாங்கலாம். ஆனால் அவர் சொல்லும் விலையில் ஒன்றோ இரண்டோ குறைத்துதான் கேட்பார்கள் மக்கள். அவரும் சொல்லிப் பார்ப்பார். கடைசியில் கொடுத்துவிட்டுப் போய்விடுவார். குறைவான காய்கறிகளே கொண்டுவருவார். இதில் விற்று என்ன கிடைக்கும் என்று பலமுறை எண்ணியதுண்டு. 

     இவர் இப்படி என்றால் ஓர் முதியவர் எங்கள் ஊருக்கு  வருவார் தலையில் அல்லது இடுப்பில் ஒரு மூட்டை சுமந்து வருவார். அது முழுக்க தலையணை உறைகள், குழந்தைகளுக்கான சிறிய உடைகள், ஜாக்கெட்டுகள், உள்பாவாடைகள் என்று அடைத்து எடுத்து வருவார். வியாசர்பாடியில் இருந்து வருவார். இவருக்கும் எழுபதைக் கடந்த வயதிருக்கும். இதை விற்று தம் சொந்த செலவு போக முதலீட்டிற்கும் சேர்த்துவிடுவார். இத்தனைக்கும் இரண்டு பிள்ளைகள் நல்ல சம்பாதியத்தில் இருந்தார்கள். இவரை அவர்கள் தடுத்த போதும் உடம்பில் வலு இருக்கும் வரை உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்று சொல்லுவார்.

     இதில் தருமம் வேறு, எங்கள் ஊர் சிவாலயத்திற்கு மாதம் தவறாமல் கால்கிலோ நல்லெண்ணெய் வாங்கித் தருவார். அப்போது ஆலயத்தில் விளக்கேற்றவே எண்ணெய் இருக்காது. இவர் தரும்  எண்ணெய் மிகவும் உபயோகமாக இருக்கும்.  நடந்தே வந்து வியாபாரத்தை கவனித்துவிட்டு  ஆலயத்தில் தேவாரம் திருவாசகம் பாடிவிட்டு மதிய பொழுதில் உணவு உண்டுவிட்டு மாலையில் தான் கிளம்புவார். எப்படியும் மாதத்தில் பத்து பதினைந்து நாட்கள் இப்படி வருவார். இப்போது வருவதில்லை இறந்துவிட்டிருப்பார் என்று நினைக்கிறேன். கடைசியாக பார்த்தபோது மிகவும் உடல் நலம் குன்றி இருந்தார்.

    இப்படி உழைத்து சாப்பிட நினைக்கும் உத்தமர்கள் இருக்கும் உலகில்தான் எமகாதர்களான விற்பனையாளர்களும் இருக்கிறார்கள். அதிலும் இந்த பரிசுச் சீட்டு என்று ஏமாற்றி விற்கும் விற்பனையாளர்களை கண்டால் எனக்கு பற்றிக் கொள்ளும். ஒரு ஐந்தாறு வருடங்கள் முன்பு இப்படித்தான் காலையில் ஏதோ ஓர் கம்பெனி பெயரை சொல்லிக் கொண்டு இருவர் வந்தனர். இந்த மாதிரி கம்பெனி உங்கள் பெயரை சொல்லுங்கள் மாலையில் குலுக்கல் இருக்கிறது உங்களுக்கு பரிசு விழுந்தால் சொல்லுவோம் என்றார்கள்.

     குலுக்கலில் பரிசு எங்கே விழப்போகிறது? நம் அதிர்ஷ்டம்தான் நமக்குத் தெரியுமே என்று சும்மாவாச்சும் பெயர் கொடுத்துவைத்தேன். ப்க்கத்து வீட்டினரும் கொடுத்தார்கள். மாலையில் அந்த நபர்கள் மீண்டும் வந்தார்கள் உங்கள் பெயர் குலுக்கலில் தேர்வாகி இருக்கிறது இந்த ஊரில் வெற்றி பெற்றது நீங்கள் மட்டும் தான்  என்று மூன்று பொருட்கள்  குக்கர் மற்றும் மிக்சி இன்னும் ஏதோ ஒன்றை காண்பித்து இதன் உண்மை விலை இது ஆனால் நீங்கள் இரண்டாயிரம் கொடுத்தால் போதும் என்று சொன்னார்கள்.

     அவர்களின் ஏமாற்றுத் தனம் புரியாமல் இரண்டாயிரம் கொடுத்து வாங்கிவிட்டேன். அப்புறம்தான் தெரிந்தது . என்னைப் போலவே ஊரில் பலருக்கும் பரிசு விழுந்த ரகசியம். சிலர் ஏமாந்து இருந்தார்கள் சிலர் உஷாராக இருந்திருக்கிறார்கள். அந்த குக்கரும் மிக்சியும் ரொம்ப நாள் உழைக்கவில்லை! கம்பெனி பொருள் இல்லை! விரைவிலேயே பழுதாகிவிட்டது. அட இப்படி ஏமாந்துவிட்டோமே என்று வயிற்றெரிச்சல்தான் மிச்சப் பட்டது.

    அதற்கடுத்த வருடம் இதே மாதிரி சொல்லிக் கொண்டு வந்தவர்களை விரட்டிவிட்டேன். அதே போல இயற்கை கொசுவிரட்டி என்றும் லிக்விட் பொறுத்த வேண்டாம். இதை பொருத்தி சுவிட்ச் ஆன் செய்தால் போதும் கொசு மட்டும் அல்ல எந்த பூச்சியும் வராது என்று சொல்லி ஒரு மெசினை  விற்றுக் கொண்டிருந்தார்கள். இயற்கை ஆர்வலராக  திகழ விரும்பி ஒன்றை ரூ 100 கொடுத்து வாங்கினேன். அதற்கு பரிசாக கேஸ் லைட்டரும் கொடுத்தார்கள் என்று நினைவு. அதை பொருத்தியதும்  ஏதோ இரைச்சல் ஒன்று வந்தது. அதனால் கொசுவுக்கு எந்த பாதிப்பும் வரவில்லை! வழக்கம் போல வந்து ரத்தம் சேகரித்துக் கொண்டு போய்க் கொண்டிருந்தது.

    இதே போல கேஸ் சேமிப்பு என்று சிலிண்டர் வடிவில் ஒரு பொம்மையை கேஸ் டியுபில் பொருத்தினால் கேஸ் குறைவாக செலவாகும் என்று ஏமாற்றி ஒரு 100 ஏமாற்றி சென்றார்கள்.
          
    இப்படித்தான்  நேற்றும் ஒரு வாலிபன் வந்து  பைலட் சோப் அறிமுக சலுகையாக ஒரு சோப் பத்து ரூபாய்க்கு தருகிறோம் என்று வாங்கிக் கொள்ள வேண்டினான். சரி என்று ஓர் இரண்டு சோப் வாங்கி கொண்டதும் சென்றவன் மீண்டும் திரும்பி வந்தான். சோப்பை பிரித்து பாருங்கள் அதன் உறையில் பரிசு எழுதி இருக்கும். அப்படி எழுதி இருந்தால் அந்த பொருளின் பாதி விலையில் நீங்கள் வாங்கி கொள்ளலாம் என்றான்.

       இந்த வகையில் பலமுறை அனுபவப்பட்ட என் தந்தை, யோவ்! சோப் வித்தியா? போய்கிட்டு இரு! எங்களுக்கு எப்படி பிரிக்கணும்? எப்ப பிரிக்கணும்றது தெரியும்! இப்பத்தான் பிரிக்கணும்னு சொன்னா இந்தா சோப் எடுத்துக்கிட்டு இருபது ரூபாயைக் கொடுத்திட்டு போய்க் கிட்டே இரு என்றார்.
    
     இல்லே சார்... ப்ரைஸ் அடிச்சா நல்லதுதானே... என்று இழுத்தான்.

யோவ்! எங்களுக்கு ப்ரைஸ் எதுவும் வேணாம்! உனக்கு சோப்புக்கு ப்ரைஸ் கொடுத்தாச்சுல்ல கிளம்பு என்று விரட்டவும், மனசே இல்லாமல் கிளம்பிவிட்டான்.

      இப்படி ஏமாற்றி சம்பாதிக்கும் எமகாதகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். தள்ளாத வயதில் உழைத்து பிழைக்கும் பெரியவர்களுக்கு நேர் எதிரிகள் இவர்கள். அந்த பெரியவர்களைவிட அதிகமாக சம்பாதித்தும் விடுகிறார்கள் ஆனால் அது அன்று மாலை வரைக் கூட அவர்களிடம் நிலைத்திருக்காது என்றே தோன்றுகிறது. ஊரை ஏமாற்றும் இந்த ஏமாற்றுக்கார எமகாதகர்கள் பல்வேறு வடிவுகளில் நூதனமாக மாறிக் கொண்டேதான் இருக்கிறார்கள். எவ்வளவோ பேப்பர்களிலும் இணையத்திலும் டீவிக்களிலும் இதைப்பற்றி செய்திகள் வந்தாலும் இன்னும் மக்கள் ஏமாந்துகொண்டேதான் இருக்கிறார்கள்.

    இப்படி கொள்ளை அடிப்பவர்கள் மத்தியில் உழைத்து பிழைக்கும் வர்கங்கள் காணாமல் போவது கலியுகத்தின் முரண்பாடு போலும்!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள் ! நன்றி!

Saturday, April 25, 2015

ஆசை… ஆசை… ஆசை..! பாப்பாமலர்!

ஆசை… ஆசை… ஆசை..!


  கோடை விடுமுறை துவங்கிவிட்டது. தெரு முழுவதும் சிறுவர் பட்டாளம் நிறைந்துகிடந்தது. ஆளுக்கு ஒரு சைக்கிளை எடுத்துக்கொண்டு சுற்றிவந்தனர். பட்டங்கள் விடுவதும், கிரிக்கெட் விளையாட்டு என தெருவே களைகட்டி இருந்தது. சைக்கிள் கடை வைத்திருக்கும் ராமுவும் விடுமுறை வந்ததும் இதுதான் சமயம் என புதிதாக சிறுவர்களுக்கான சிறிய சைக்கிள்கள் சிலவற்றை வாங்கி வாடகைக்கு விட்டிருந்தார்.

   அந்த குட்டி வண்ண வண்ண சைக்கிள்கள் அனைவரையும் கவர்ந்தது. சிறுவர் சிறுமியர்களுக்கு மிகவும் பிடித்துப் போனது. ஆளாளுக்கு வாடகைக்கு எடுத்து சைக்கிளில் ரவுண்ட் வந்தனர். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஐந்தாவது முடித்து ஆறாம் வகுப்பு செல்லும் கோமதிக்கு அழுகையாக வந்தது.

  அன்று காலையில்தான் அவளுடைய அம்மாவிடம் வாடகை சைக்கிளுக்கு பணம் கேட்டாள் கோமதி. “சைக்கிள் ஓட்டி என்னத்தை பெரிசா கிழிக்க போறே?அந்த பத்து ரூபா இருந்தா இன்னிக்கு குழம்புக்கு கறிகாய் வாங்க ஆகும்! போய் வேலையைப்பாருடி போக்கத்தவளே!” என்று கூறிய அவள் தாய் கூலி வேலைக்குக் கிளம்பிவிட்டாள்.

  அவள் சொன்னதும் வாஸ்தவம்தான் கோமதியின் குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம். சிறுவயதிலேயே தந்தையை இழந்த கோமதியை தாய் கமலா இந்த அளவிற்காவது வளர்த்து படிக்க வைத்து காப்பாற்றி வருவது பெரிய விஷயம். படிப்பறிவற்ற அவள் கூலி வேலைக்குச் சென்றும் பத்து பாத்திரம் கழுவியும் கால்வயிற்று கஞ்சி குடித்துவந்தாள். மகளையும் அரசுப்பள்ளியில் சேர்த்துவிட்டிருந்தாள். இதில் கோமதி வாடகை சைக்கிளுக்கு ஆசைப்படவே அவளுக்கு கோபம் வந்து பொங்கிவிட்டாள்.

  பாவம் சிறுபெண் கோமதி! அவளுக்கும் வீட்டின் கஷ்டம் தெரியும்தான்! ஆனால் ஆசை யாரைவிட்டது? தன்னொத்த பிள்ளைகள் கண் முன்னே சைக்கிளில் வலம் வருகையில் அந்த பிஞ்சுமனதில் கொஞ்சம் சஞ்சலம் ஆசை தோன்றும்தானே! பொதுவாகவே குழந்தைகள் பிற குழந்தைகள் ஒன்று வைத்திருப்பதை பார்த்தால் தனக்கும் வேண்டும் என்று அடம்பிடிக்கும். கிடைத்தபின்னரோ ஒரு ஐந்து நிமிடம் விளையாடிவிட்டு தூக்கி எறிந்துவிடும். எல்லாம் ஓர் ஆசைதான்.

 சைக்கிள் ஓட்ட முடியவில்லையே என்று கோமதி அழுது  கொண்டிருக்கையில் அவள் தோழி மேகலா சைக்கிளோடு வந்தாள்.
“ஏய்! ஏய் மேகலா! நான் ஒரு ரவுண்டு ஓட்டறேனே! ப்ளிஸ்! ஒரேவாட்டிப்பா! எனக்கு ரொம்ப ஆசையா இருக்குப்பா! ப்ளிஸ்! ஒரு ரவுண்ட் கொடுப்பா!” கோமதி கெஞ்சினாள்.

 “நான் தரமாட்டேண்டி! எங்க அம்மா வைவாங்க! அவங்க கிட்ட அடம்பிடிச்சு அழுது பத்து ரூபா வாங்கி சைக்கிள் எடுத்து வந்திருக்கேன்! நான் ஓட்டாம நீ ஓட்டறதை பார்த்தாங்க கொன்னே போடுவாங்க!” மேகலா மறுத்தாள்.

  “ உங்க அம்மா கண்ணுல படாம ஒரே ரவுண்ட் போய் வந்துடறேண்டி! உங்க தெருபக்கம் போகமாட்டேன்! ரொம்ப ஆசையா இருக்குடி! ப்ளிஸ்டி!” கோமதி கெஞ்சினாள்.

  “ சரி! சரி!  எங்க அம்மா கண்ணுல பட்டுடாதே!  இந்தா!”
மேகலா சைக்கிளைத் தர அப்போதுதானே அங்கே மேகலாவின் அம்மா வர வேண்டும்.” ஏண்டி மேகலா  இதுதானாடி! நீ சைக்கிள் ஓட்டற லட்சணம்! சைக்கிளை வாடகைக்கு எடுத்துட்டு இப்படி இவகிட்ட பேசிக்கிட்டு நிக்கறே! பணம் என்ன உங்கப்பன் வீட்டுல காய்க்குதா?”

 அவ்வளவுதான் மேகலா சைக்கிளை எடுத்துக்கொண்டு ஓடியே போய் விட்டாள். கோமதியால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை! அழுது கொண்டே நிற்கையில் அங்கே புத்தம் புது சைக்கிளில் கையைசைத்தபடி வானதி வருவதைக் கண்டாள். அதைப் பார்த்தவுடன் அழுகையுடன் கோபமும் கலந்துகொண்டது கோமதிக்கு.

 வானதி அவ்வூரில் உள்ள ஓர் செல்வந்தரின் மகள். காண்ட்ராக்டரான அவர் மகள் கேட்கும் எதையும் தட்டாமல் வாங்கிக் கொடுப்பார். செல்வம் கொழிக்கையில் எல்லாமே கிடைக்கும்தானே! அப்படித்தான் வானதி எது கேட்டாலும் மறுக்காமல் உடனே அவள் ஆசையை நிறைவேற்றி வைப்பார் அவளது தந்தை சோமநாதன். பெரிய தனியார் பள்ளியில் படிக்கிறாள். ஒரே தெருவில் வசித்தாலும் அவளோடு  பழகியதில்லை கோமதி. பணக்கார பொண்ணுங்களோடு எதுக்கு சிநேகம்! என்று அவள் அம்மா தடுத்துவிடுவாள்.

“ அடியேய்! உன் பணக்காரத் திமிரை காட்டறியா? இரு உன்னைக் கவனிச்சுக்கறேன்!” கோமதியின் உள்ளத்தில் பொறாமைத் தீ கொழுந்துவிட்டு எறிந்தது. நிறைவேறாத ஆசை அவளது மனதில் சைத்தானை புகுத்திவிட்டது.

வன்மத்துடன்  வானதியின் வீட்டிற்குள் நுழைந்தாள் கோமதி! நல்ல வேளை வாட்ச் மேன் எங்கோ போயிருந்தான். வாசலில் புன்னை மர நிழலில் அந்த புத்தம் புதிய சைக்கிள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தான் கொண்டு வந்திருந்த ஆணியை எடுத்து சுற்றும் முற்றும்  யாராவது பார்க்கிறார்களா என்று பார்த்தபடி டயர்களில் குத்தினாள். ‘புஸ்’ என்று காற்று வெளியேறவும் தன்னை யாரும் பார்க்கவில்லை என்று நிம்மதி பெருமூச்சுடன் ஓடிவந்துவிட்டாள் கோமதி.

    வீட்டுக்கு வந்தபின் தான் தான் செய்தது தவறு! என்று தோன்ற ஆரம்பித்தது கோமதிக்கு. பாவம் வானதி! எவ்வளவு மகிழ்ச்சியோடு புது சைக்கிளில் வந்தாள். அவள் மனது இப்போது என்ன பாடுபடும்? தனக்கு சைக்கிள் ஓட்ட கிடைக்கவில்லை என்று அவளது சைக்கிளை பஞ்சர் ஆக்கிவிட்டோமே!  இது அவளது தந்தைக்கு தெரிந்தால் என்ன ஆகும்? என்று பலவாறு யோசித்தவாறு திண்ணையில் அமர்ந்திருந்தாள் கோமதி.

 அப்போது சைக்கிளை உருட்டியபடி வந்தாள் வானதி. கோமதிக்கு திக்கென்று இருந்தது. அடடா! பஞ்சரான சைக்கிளை தள்ளிக் கொண்டு நம்மிடம் வருகிறாளே! ஒருவேளை நாம் பஞ்சர் பண்ணது தெரிந்துவிட்டதோ? என்ன சொல்வாளோ? அம்மாவிடம் சொல்லிவிட்டால் அப்புறம் அம்மா நம்மை அடி பின்னிவிடுவார்களே! என்று பலவாறு சிந்திக்கையில்,

 “ என்ன கோமதி! அப்படி பார்க்கறே! சைக்கிளை ஏன் தள்ளிகிட்டு வரேன்னா? பஞ்சர் ஆயிருச்சு! காலையிலேயே நீ சைக்கிள் ஓட்ட ஆசைப்பட்டதையும் மேகலா கிட்ட கெஞ்சி கேட்டதையும் பார்த்தேன்! அப்பத்தான் புதுசா சைக்கிள் வாங்கி ஓட்ட ஆரம்பிச்சதாலே உடனே உன் கிட்டே கொடுக்க தோணலை! கொஞ்ச நேரம் ஓட்டிவிட்டு அப்புறம் கொடுக்கலாம்னு நினைச்சேன்! அதுக்குள்ள எங்க அம்மா கூப்பிட்டதாலே வீட்டுக்குப் போயிட்டேன்! சாயந்திரமா உன்கிட்ட கொடுத்து ஓட்டச் சொல்லலாம்னு நினைச்சேன்! ஆனா பாரு பஞ்சர் ஆயிருச்சு! ரோட்டுல நிறைய ஆணிங்க கிடக்குது போல கவனமா ஓட்டனும்னு எங்க அப்பா சொன்னாரு. வா ரெண்டு பேருமா சேர்ந்து பஞ்சர் கடையில பஞ்சர் ஒட்டிக்கிட்டு சைக்கிள் ஓட்டுவோம்!”  வானதி சொல்ல சொல்ல விம்மி அழுதாள் கோமதி.

   “ஏன்..? என்னடி ஆச்சு? ஏன் இப்படி அழுவுறே?”

“என்னை மன்னிப்பாயா வானதி!” உடைப்பெடுத்த குரலில் தான் செய்த தவறை சொல்லி, ”உன் உயர்ந்த குணத்தை புரிஞ்சிக்காம இப்படி பண்ணிட்டேன் வானதி! ப்ளீஸ்! என்னை மன்னிச்சிரு வானதி என்னை மன்னிச்சு ப்ரெண்டா ஏத்துப்பே இல்லே வானதி!” கோமதி விசும்பலுடன் கேட்டாள்.

   “ எதையுமே செய்ய நினைச்சதும் செய்து முடிச்சிடனும்னு எங்க அப்பா சொல்லுவார்! ஒரு நிமிடம் தாமதித்தாலும் மனசு மாறிடும். உனக்கு சைக்கிள் ஓட்ட கொடுக்கணும்னு நினைச்சேன்! ஆனா புது சைக்கிள் இன்னும் ஒரு ரவுண்ட் வரணும்னு ஆசையாலே தவிர்த்தேன்! அது உன் மனசுல பொறாமையை உண்டு பண்ணிருச்சு! இதுக்கு ஒரு வகையில நானும் காரணம்தான் கோமதி! தப்பு உன் கிட்ட மட்டும் இல்லை! அழாதே! உன்னை நான் மன்னிக்க வேண்டிய அவசியமே இல்லே! ஏன்னா நாம ரெண்டு பேரும் ப்ரெண்ட்ஸ்! என்று கோமதியின் அழுத கண்களை துடைத்துவிட்டாள் வானதி.


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
Related Posts Plugin for WordPress, Blogger...