Saturday, March 28, 2015

ஏண்டா பொய் சொன்னே? பாப்பாமலர்!

“ஏண்டா பொய் சொன்னே?”

கணேஷ் எட்டாவது படிக்கும் சிறுவன், அவனது குடும்பம் நடுத்தர குடும்பம். அவனது பள்ளி அவன் வீட்டிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலலவில் இருந்தது. இத்தனை வருடமாக கணேஷ் பள்ளிக்கு நடந்துதான் செல்வான். பிறகு இலவச பயண சீட்டு வரும் அதன் மூலம் சென்று வருவான்.
   இந்த வருடம் பள்ளி தொடங்கி ஒரு வாரம் கூட ஆகவில்லை! இலவச பயணச்சீட்டும் இன்னும் வழங்கவில்லை!  “என்னால் பள்ளிக்கு நடந்து போக முடியாது” என்று அடம்பிடித்தான் கணேஷ்.

   இது அவனது தாய்க்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. தினமும் பஸ்ஸில் சென்று வருவதானால் பத்துரூபாய் தேவைப்படும். இது அவர்களை பொறுத்தவரை முடியாத காரியம் இல்லைதான். ஆனாலும் திடீரென கணேஷ் ஏன் இப்படி பிடிவாதம் பிடிக்கிறானே என்று யோசித்தாள் அவள்.

  “ஏண்டா என்ன ஆச்சு! இத்தனை வருசம் பாஸ் கொடுக்கறவரை நடந்துதானே போனே? இப்ப என்ன திடீர்னு!” என்றாள்
 “அம்மா என்னால நடக்க முடியலை! கால் ரெண்டும் செமயா வலிக்குது தினம் பஸ்ஸிக்கு காசு கொடுத்தாதான் போக முடியும்” என்றான் பிடிவாதமாய் கணேஷ்!

        “ சரி சரி! இதுக்காக எல்லாம் ஸ்கூலுக்கு போகாம இருக்காதே! நாளையிலிருந்து பஸ்ஸிலேயே போய்வா! காசு தரேன்!” என்றதும் கணேஷின் முகம் மலர்ந்தது. 

      நாட்கள் வேகமாக நகர்ந்தன. அன்று எங்கோ சென்றுவிட்டு மாலை நேரம் பஸ்சில் திரும்பிக் கொண்டிருந்த மரகதம் மற்ற பிள்ளைகள் பஸ்ஸில் ஏறவும் தன் மகனை தேடினாள். காணவில்லை.பஸ் கிளம்பியதும் உள்ளே விசாரித்தாள் . ”கணேஷா! அவன் நடந்து இல்ல வருவான்!” என்றான் பக்கத்து தெரு மணி. 

    அவளுக்கு கவலை பிடித்துக் கொண்டது. “ தினமும் கொடுக்கும் பத்துரூபாய் என்ன ஆகிறது? தினமும் பஸ்சுக்கு என்று வாங்கி வேறு என்ன செய்கிறான்? வீட்டுக்கு வரட்டும் பார்த்துக்களாம்” என்றுஅதே நினைப்புடன் வீடுவந்து சேர்ந்தாள் மரகதம்.

   பள்ளியில் இருந்து திரும்பிய கணேஷ், “ அம்மா பசிக்குது சோறு போடு! ”என்று சொல்ல மரகதம் அவன்முன் வந்துமுறைத்தாள். “தொரை நடந்து வந்தாரே! அதனாலே அதிகமாத்தான் பசிக்கும்!” என்றாள் கோபமாக. அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த கணேஷ் தலைகுனிந்து நின்றான்.
     “ஏண்டா பொய் சொன்னே? காசை என்ன பண்றே? உண்மையைச் சொல்லு!”
   “ அம்மா அது அது வந்து காசு தொலைஞ்சு போச்சு!”

‘பளார் என்றுஅறை ஒன்று அவன் கன்னத்தில் விழுந்தது! “ஏண்டா மறுபடியும் பொய் சொல்றே? பக்கத்து வீட்டு மணி நீ தினமும் நடந்து போய்வரதா சொல்றான்!” ஏண்டா! உனக்கு என்னடா ஆச்சு? என்றாள்கண்ணீருடன் மரகதம்.

   அதைக்கண்ட கணேஷின் கண்களிலும் கண்ணீர்! ”அம்மா என்னை மன்னிச்சிருங்கம்மா? நான் நடந்துதான் ஸ்கூலுக்கு போய்வரேன்! ஆனா காசை வீணாக்கலைம்மா! உதவிதான் செய்யறேன்!” 

   ”உதவியா?” மரகதத்தின் கண்கள் விரிந்தன.  “ஆமாம்மா! மோகன் தெரியும் இல்லை உங்களுக்கு மேலத்தெரு ஜானகி அம்மாவோட பையன். கால் ஊனமானவன்”.  “ஆமாம் தெரியும்!” 
    “அவன் நல்லா படிப்பான். என் வகுப்புதான். கால் ஊனமா இருக்கறதாலே அவனாலே நடந்து வர முடியலை. அவங்க வீட்டுல காசு கொடுக்கிற அளவுக்கு வசதி இல்லையாம். ஒரு மாசம் பள்ளிக்கு வரமுடியாதுடா! பஸ் பாஸ் வந்தப்புறம்தான் வர முடியும்னு” சொன்னான்

   . “ பாடங்களும் வீணாகிடும். ஒருமாசம் லீவ் போட்டா ஸ்கூல்ல சேர்த்துக்கவும் மாட்டாங்களாம்! அதான் என்ன பண்றதுன்னு யோசிச்சேன்.அவனுக்கு உதவி பண்ணனும்னுதான் உங்க கிட்ட காசு கேட்டு அடம்பிடிச்சேன்.தினம் உங்க கிட்ட காசு வாங்கி அவனுக்கு கொடுத்திட்டு நான் நடந்து போயிட்டு வந்துடுவேன்”. முதல்ல இதுக்கு மோகன் மறுத்தாலும் நான் வற்புறுத்ததனாலே ஒத்துக்கொண்டான் என்றான் கண்ணீருடன்.

    அவனை அணைத்துக்கொண்ட மரகதம்   “நான் தான் உன்னை அவசரப்பட்டு அடிச்சிட்டேன்!இத நீ மொதல்லேயே சொல்லியிருக்கலாம்! நான் மறுத்திருக்க மாட்டேன். ஏதோ நம்மளாலே முடிஞ்ச சின்ன உதவி இனி தினமும் உனக்கு பத்து ரூபாய் கிடைக்கும்! வா முதல்ல சாப்பிடலாம்” என்றாள் மன நிறைவுடன் அந்த தாய்!

   “நல்ல அம்மா! ”என்று தாயை கட்டிக்கொண்டான் கணேஷ்.

 

(மீள்பதிவு)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்தகருத்துக்களை பகிரலாமே!

Thursday, March 26, 2015

நூறு கோடி இந்தியர்களின் கலைந்த கனவு!


    ஒட்டுமொத்த இந்தியாவும் ஏன் உலகமே கூட இன்று இந்திய அணியின் வெற்றியை எதிர்பார்த்து இருக்க மிகச்சாதாரணமான முறையில் தோற்று நூறு கோடி இந்தியர்களின் கனவை  அசாதாரணமாக கலைத்துவிட்டது இந்திய அணி. விளையாட்டில் வெற்றியும் தோல்வியும் சகஜம்தான். இதற்காக எல்லாம் கவலைப்படுவது கோஷம்போடுவது உயிரைமாய்த்துக் கொள்வது எல்லாம் வீண் தான். கிரிக்கெட் ஓர் விளையாட்டு. அதில் சிறப்பாக விளையாடுபவர்கள் ஜெயிக்கிறார்கள். மோசமாக ஆடுபவர்கள் தோற்கிறார்கள். அதை உணர்வுப் பூர்வமாக அணுகக் கூடாது என்பதெல்லாம் சரிதான். 

        ஆனால் இதையெல்லாம் உலக கிரிக்கெட் ரசிகர்களோ இந்திய கிரிக்கெட் ரசிகர்களோ ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இந்த உலகக் கோப்பை ஆரம்பிக்கும் வரையில் இந்திய அணியின் மீது யாருக்கும் நம்பிக்கை இல்லை. ஆனால் போட்டியின் முதலிலேயே பாகிஸ்தான், தென் ஆப்ரிக்காவை வென்றதும் ஓர்  எதிர்பார்ப்பு ஏற்பட ஆரம்பித்துவிட்டது. ஜிம்பாப்வே , வெஸ்ட் இண்டீஸ், வங்க தேசத்துக்கு எதிராக கொஞ்சம் தடுமாறினாலும் சுதாரித்து வெற்றியை தன் வசமாக்கி தொடர்ந்து ஏழு வெற்றிகளை பெற்றிருந்த இந்திய அணி இன்று ஆடிய ஆட்டம் மகா மோசம்.

      உலகக் கோப்பை அரையிறுதி என்ற ஒரு முக்கியமான போட்டியில் எந்தவித கேம் ப்ளானும் இந்திய அணியில் இல்லை. சிட்னி பிட்ச் சுழலுக்கு சாதகம் என்று  மீடியாக்கள் வரிந்து கட்டி எழுதின. அது கடைசியில் ப்ளாட் விக்கெட்டாக பரிமளித்தது. கொஞ்சமும் சிரமபடாமல் ஸ்டீவன் ஸ்மித் முதல் மிட்செல் ஜான்சன் வரை அதில் ரன் குவித்தார்கள்.  அதே பிட்சில் இந்திய அணி ரன் குவிக்க தடுமாறியது உலகத்தரம் வாய்ந்த இந்திய பேட்ஸ்மேன்களின் தரத்தை சோதித்து பார்க்க வேண்டிய கட்டாயத்தினை உணர்த்தியது.

          முதல் விக்கெட் விழுந்த பின் பின்ச் -ஸ்மித் பார்ட்னர் ஷிப்  இந்த போட்டியில் ஆஸ்திரேலியா வெல்ல முக்கிய காரணம். அந்த ஜோடியை பிரிக்க தோனி எதையும் செய்யவில்லை பார்ட் டைம் பவுலர்கள் யாருக்காவது கொடுத்து கொஞ்சம் முன்னதாக விக்கெட் எடுத்து இருந்தால் ஆஸ்திரேலியா முன்னூறு ரன்களை எட்டியிருக்காது. உமேஷ் யாதவ் நன்கு வீசினாலும் ரன்களை வாரி வழங்கிவிட்டார். அஸ்வின் கட்டுக்கோப்பாக வீசினாலும் விக்கெட்களை வீழ்த்த வில்லை. ஷமி விக்கெட் எடுக்க வில்லை ஆஸ்திரேலியாவின் ஏழு விக்கெட்டுக்களை மட்டுமே நம்மால் கைப்பற்ற முடிந்தது எனும் போதே தோல்வி உறுதியாகிவிட்டது.

       ஆனால் உணவு இடைவேளைக்குப் பின் இந்திய அணியின் துவக்க வீரர்கள் சிறப்பான தொடக்கத்தை தந்தனர். 75 ரன்கள் வரை முதல்விக்கெட் பார்ட்னர் ஷிப் அருமையாக இருந்த போது தேவையற்ற ஷாட் அடித்து தவாண் வீழ்ந்தார்.  ஓர் அரையிறுதிப் போட்டியில் தவாண் இப்படி ஆடியிருக்க கூடாது. பார்ம் இன்றி தவித்து வரும் கோஹ்லியை மூன்றாவதாக இறக்கியது பெரும் தவறாகி விட்டது. ஷார்ட் பிட்ச்சில் தவறான ஷாட் அடித்து அவர் அவுட்டானபோதே தோல்வி உறுதியாகிவிட்டது. கொஞ்ச நேரத்தில் ரோகித், ரெய்னா என்று கிளம்ப அஜின்கியா பந்துகளை தடவ ஆரம்பித்துவிட்டார்.  விஜய் டீவி  வர்ணனையாளர்கள் தோனி தோனி என்று சொன்னாலும் அவரும் எவ்வளவு ரன்களை அடிக்க முடியும் ஓவருக்கு பதிமூன்று ரன்னுக்கும் மேல் எடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கும் போது  ரஹானே, ஜடேஜா என்று அவுட் ஆக தோல்வியை தவிர்க்க முடியவில்லை. இரண்டு சிக்சர்களை வீசி ஆறுதல் தந்த தோனியும் நடையைகட்ட இந்தியாவும் இந்த போட்டித் தொடரில் இருந்து நடையைக் கட்டிவிட்டது.

     ஆஸ்திரேலியர்கள் அப்படி ஒன்றும் பிரமாதமாக பந்துவீசிவிடவில்லை! ரோஹித்- தவான் கூட்டணி ஒரு இருபத்தைந்து ஓவர்கள் வரை தாக்கு பிடித்து இருந்தாலோ அல்லது விராத் கோலி இன்னும் ஒரு பத்து ஓவர் தாக்கு பிடித்து இருந்தாலோ  வெற்றியை எட்டிப் பறித்து இருக்கலாம். போட்டிக்கேற்ப வியூகங்களை மாற்ற வேண்டியது அவசியம். ஆஸ்திரேலிய அணியில் வாட்சன் ஒன் டவுன் இறங்குவார் இன்று ஸ்மித் இறங்கினார். அதே போல ஸ்மித் அவுட்டானதும் பவர் பிளேவில் ரன் அடிக்க வேண்டும் என்று மேக்ஸ்வெல் களமிறக்கப்பட்டார். அது நன்கு பலனும் அளித்தது. 

   ஆனால் இன்று தோனி அப்படி ஏதும் பரிட்சார்த்தங்கள் செய்யவில்லை! போட்டி நம் கையை விட்டு நழுவாமல் இருக்க சில யுக்திகளை கையாளவேண்டும். சென்ற உலக கோப்பை இறுதி போட்டியில் கூட தோனி முன்னதாக களம் இறங்கி வெற்றிக்கு வழி வகுத்தார். ஆனால் இந்த முறை அப்படி ஏதும் செய்யவில்லை. ஷமியின் பந்து வீச்சு கடைசியில் எடுபடாமல் போனது. இன்று புவனேஸ்வர் குமாருக்கு ஒரு வாய்ப்பு தந்து இருக்கலாம். அதே போல அம்பாதி ராயுடு, அக்சர் படேல் போன்றவர்கள் ஒரு மேட்ச் கூட ஆடாமல் வீடு திரும்புகிறார்கள். இவர்களை சில போட்டிகளில் களமிறக்கி இருக்கலாம்.

         எப்படியோ  இந்தியர்களின் கனவு கலைந்து போய்விட்டது. இன்னும் நான்கு ஆண்டுகள் அடுத்த கனவிற்கு காத்து இருக்க வேண்டியதுதான். மொத்தத்தில் இந்தியாவைவிட இன்று சிறப்பாக ஆடிய ஆஸ்திரேலியா வென்றுவிட்டது. அதே சமயம் தொடர்ச்சியாக வென்ற இந்தியா இன்று படுதோல்வி அடைந்தது ஏதோ சந்தேகத்தை கூட எழுப்புகிறது. இன்னும்  சூதாட்ட காரர்களின் பிடியில் இருந்து கிரிக்கெட் தப்பவில்லை என்று மட்டும் இந்த உலகக் கோப்பை போட்டிகளின் முடிவுகளில் இருந்து  உணர்ந்து கொள்ள முடிகிறது.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Wednesday, March 25, 2015

பொதுத்தேர்வு மோசடிகள்! கதம்ப சோறு பகுதி 57

கதம்ப சோறு பகுதி 57

இந்த பகுதி எழுதி சில மாதங்கள் ஆகிவிட்டது. புதிய மாற்றம் செய்தபின் ஒரு பதிவுதான் எழுதினேன். அதன் பின் தொடர முடியவில்லை. இன்று எப்படியும் எழுதிவிட வேண்டும் என்று முயற்சித்து எழுதுகிறேன்.


பொதுத்தேர்வு  மோசடிகள்:

          தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் டூ தேர்வுகள் தொடங்கி நடந்துவருகின்றது. எந்த ஆண்டும் இல்லாதவகையில் இந்த ஆண்டு நிறைய குழப்பங்கள், முறையீடுகள், விதி மீறல்கள் என சம்பவங்கள் அதிகரித்து உள்ளது. ஆசிரியர்களே வாட்ஸ் அப்பில் கேள்வித்தாளை அனுப்பி உள்ளார்கள் அது ப்ளஸ் ஒன் பொது தேர்வுக்கு. ஒரு பள்ளியில் சரியாக படிக்காத ஆறு மாணவர்களை தலைமை ஆசிரியர் தேர்வெழுத அனுமதிக்க வில்லையாம். அது ஏதோ தனியார் பள்ளி அல்ல. அரசாங்க பள்ளியே! ஏன் இப்படி? 100 சதவித தேர்ச்சி என்ற அழுத்தம் தான் காரணம். இப்போது ஆசிரியர்களை குறை கூறி எந்த பிரயோசனமும் இல்லை. எட்டாம் வகுப்புவரை ஆல் பாஸ் ஆக்கிவிட்டார்கள். மக்கு மாணவர்களும் பத்தாம் வகுப்பு வந்துவிடுகிறார்கள். அப்புறம் தேர்ச்சி காட்ட வேண்டும். குறைந்த தேர்ச்சி என்றால் அதற்கும் பதில் சொல்ல வேண்டும். மாணவர்களை அடிக்கக் கூடாது முறைக்கக் கூடாது, கண்டிக்க கூடாது. ஆனால் தேர்ச்சி மட்டும் வந்துவிட வேண்டும் என்றால் எப்படி வரும்? இப்போதெல்லாம் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பதை பார்த்தால் கூட சந்தேகமாக இருக்கிறது. ஒன்றுமே தெரியாதவன் கூட 200 மதிப்பெண்கள் எடுத்து பாஸ் ஆகிவிடுகிறான். இப்போது தேர்ச்சி கிடைத்துவிடுகிறது ஆனால் எதிர்காலம்? அரசு என்ன செய்யும்? முட்டாள் தனமான கல்விமுறை நம்முடையது! இதை நினைத்து வருத்தப்பட மட்டுமே நம்மால் முடியும்.

   நிலம் கையகப்படுத்தல் மசோதா:

                 இந்த மசோதாவை விரைவில் கொண்டுவர அரசு திட்டமிட்டுக் கொண்டுள்ளது. சாமனியனுக்கு ஏற்கனவே நில உரிமை இல்லை. அவனது வாழ்வாதாரம் பற்றி கவலைப்படாமல் அரசு நிலத்தை கையகப்படுத்திக் கொள்கிறது. இந்த சட்டத்தின் மூலம் அது இன்னும் விரிவு படுத்த படும் போலிருக்கிறது. இதைப்பற்றி விரிவாக இன்னும் படிக்கவில்லை! ஆனால் இப்போதே விவசாய நிலங்கள் குறைந்துவருகின்றன. இந்த மசோதாவால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்களா என்றால் பாதிக்கப்படுவார்கள். கூடுதல் விலைக்கு நிலத்தை விற்க முடியாமல் அரசு கொடுக்கும் விலைக்கு விற்று குறைந்த லாபம் ஈட்டுவதால் மட்டுமே என்று தோன்றுகிறது. பா.ஜ அரசு கொண்டுவரும் இத்திட்டம் எதிர்ப்புகள் இருந்தாலும் நிறைவேறி விடும் என்றே தோன்றுகிறது.

    வீறுகொண்ட இந்திய கிரிக்கெட் அணி:

                     உலகக் கோப்பையில் இந்திய அணி புதிய எழுச்சி கண்டிருக்கிறது. தொடர் தோல்விகளில் இருந்து மீண்டு ஏழு போட்டிகளை தொடர்ச்சியாக வென்று அரையிறுதிக்குள் நுழைந்து இருக்கிறது. அதுவும் அனைத்து அணிகளையும் ஆல் அவுட் ஆக்கியிருக்கிறது. ஆனால் இந்தியா ஒரு முறை கூட ஏழு விக்கெட்டுகளுக்கு மேல் இழக்க வில்லை. பந்துவீச்சில் ஷமி, யாதவ், அஸ்வின், மோகித் என்று அசத்த பேட்டிங்கும் ஒருவரையே நம்பாமல் அனைவரும் சம அளவிற்கு கை கொடுக்கிறார்கள். பீல்டிங்கும் சிறப்பாக இருக்கிறது. இதுவரை அணியில் இருந்த குழப்பங்கள் களையப்பட்டிருக்கிறது. அணியில் ஓர் ஒற்றுமை காணப்படுகிறது. தோனியின் வழி நடத்துதலில் இந்த முறையும் கோப்பை வென்றால் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.

தேசியவிருது பெற்ற தமிழ் படம்:

       பிரம்மா இயக்கிய குற்றம் கடிதல் என்ற திரைப்படம் தேசிய விருது பெற்றிருக்கிறது. பல திரைப்பட விழாக்களில் திரையிடப் பட்டாலும் இன்னும் திரையரங்குகளில் வெளியிடப்பட வில்லை என்பது வருத்தமான ஒன்றாகும். விருதுபெற்ற படங்கள் திரையரங்குகளுக்கு வருவதில்லை. வந்தாலும் நீண்ட நாட்கள் ஓடுவதில்லை என்பது வேதனையான விஷயம். இப்படி நல்ல படங்களை மக்கள் கைவிடும் போதுதான் மசாலா படங்கள் கோலொச்சுகின்றன. அப்புறம் தரமான படங்கள் வருவதில்லை என்று கூப்பாடுகள் எழும். நல்ல படங்களை நல்ல இயக்குனர்களை ரசிகர்கள் ஆதரிக்க வேண்டும். இந்த மாதிரி படங்களை திரையரங்குகள் திரையிட்டு ஆதரவு வழங்க வேண்டும். அப்போதுதான் நல்ல திரைப்படங்கள் வித்தியாசமான படங்கள் தமிழ் திரையுலகிற்கு கிடைக்கும்.

மன்மோகனுக்கு சம்மனும்: சவுதாலாவுக்கு சிறையும்.
         நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் மன்மோகன் சிங்கிற்கு சம்மன் அனுப்பி உள்ளது நீதிமன்றம். காங்கிரஸ் தலைவி சோனியா நேரில் சென்று மன்மோகனுக்கு ஆதரவு தெரிவித்தாலும் தலையாட்டி பொம்மையாக செயல்பட்டதிற்கு இப்போது பதில் சொல்லவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் மன்மோகன். பத்தாண்டு காலத்தில் நாட்டை படுகுழியில் தள்ளிய ஊழல்களில் இதுவும் ஒன்று. இதில் சம்பந்தம் ஏதும் இல்லை என்று மன்மோகன் ஒதுங்கிவிட முடியாது. ஜெண்டில் மேன் பிரதமர் என்ற இமேஜ் எதுவும் அவரைக் காப்பாற்றாது. பதில் சொல்லவேண்டிய கட்டத்தில் அவர் இருக்கிறார். அதே சமயம் ஹரியானா முன்னால் முதல்வர் சவுதாலாவிற்கு  உயர்நீதிமன்றம் வழங்கிய தண்டணையை உறுதி செய்து இருக்கிறது உச்ச நீதிமன்றம். இது ஆட்சி நம் கையில் இருக்கிறது என்று ஆட்டம் போடுபவர்களுக்கு ஒரு பாடமாகவே அமைந்து இருக்கிறது. நம்ம ஊர் தீர்ப்பு எப்படி வருமோ ஒத்தி வைத்து இருக்கிறார்கள்  எப்படியோ நீதி கிடைத்தால் சரிதான்.

வேளாண் துறை அதிகாரி தற்கொலை!

        அமைச்சர்களின் ஊழலுக்கு பலியாவது அப்பாவியான அரசு ஊழியர்கள்தான். இவர்கள் சாமர்த்திய சாலிகளாக இருந்தால் அமைச்சரையும் பகைக்காமல் தானும் மாட்டாமல் தப்பித்துக் கொள்கிறார்கள். ஆனால் சிலர் அமைச்சர்களின் நெருக்கடிக்கு ஆளாகி  மாள்கிறார்கள். வேளாண்மைத் துறை அதிகாரியும் அப்படித்தான். இவர் தலைமைச்செயலருக்கு உறவாம். எனவேதான் அமைச்சரின் பதவி பறிக்கப்பட்டு இப்போது சிபிஐ விசாரணை வேண்டும் என்று கோரப்பட்டு உள்ளது. அமைச்சர்களின் கைப்பிள்ளைகளாக செயல்படும் அதிகாரிகள் இனியாவது கவனமாக இருக்க வேண்டும். இந்த அதிகாரியின் குடும்பத்திற்கு என்ன பதில் சொல்லப்போகிறார் அமைச்சர்?

பந்த்:
   முழு அடைப்பு என்பது எனக்கு ஒவ்வாத ஒன்று. தேவையில்லாமல் மற்றவர்களுக்கு இடையூறு செய்யும் இந்த மாதிரி போராட்டங்களை நான் வெறுப்பவன். ஆனால் விவசாயிகள் மற்றும் எதிர்கட்சிகள் இணைந்து நடத்தும் இந்த முழு அடைப்பு போராட்டம் வெற்றி பெற வேண்டும் என்றே தோன்றுகிறது. காவிரியின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவதை தடுத்தும் விவசாய நிலங்களின் ஊடே  எண்ணெய் குழாய்கள் எடுத்து செல்வதை எதிர்த்தும்  நடத்தப்பட உள்ள இந்த அடைப்பு போராட்டம் மிக முக்கியமானது. எவ்வளவுதான் எதிர்ப்புக்கள் எழுந்தாலும் அண்டை கர்நாடக அரசு தமிழக விவசாயிகளின் நலனுக்கு புறம்பாகவே தன்னுடைய செயல்களை நியாயப்படுத்தி வருகிறது. தட்டிக்கேட்கவேண்டியவர்களும் சும்மா இருக்கின்றனர் ஓட்டுக்கு பயந்து. இந்த நிலையில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு இந்த முழு அடைப்பை விவசாயிகள் அறிவித்து உள்ளார்கள். இது வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

பதிவர் அறிமுகம்: பாலமகி பக்கங்கள்:
 மகேஸ்வரி பாலச்சந்திரன்.
கரந்தை ஜெயக்குமார் அவர்களை தன்னுடைய வலையுலக ஆசானாக கூறும் இந்த பதிவர் பல்சுவை பதிவுகளை அள்ளித்தருகிறார். கடந்த ஆண்டு இறுதியில் எழுத ஆரம்பித்த இவர் இதுவரை 26 பதிவுகள் எழுதி உள்ளார். இவர் ஓர் ஆசிரியர் என்று நினைக்கிறேன். கடந்தவாரம் முதல் இவரது பதிவுகளை படித்து வருகிறேன். அதில் பீச்சாங்கை என்ற பதிவு என்னை மிகவும் பாதித்த பதிவு. சிறப்பான அந்த பதிவு இப்போது நீக்கப்பட்டுள்ளது ஏனென்று தெரியவில்லை. இணைப்பு அந்த பதிவுக்கு கொடுக்கலாம் என்று நினைத்தேன். நீக்கப்பட்டதால் இந்த பதிவுக்கு இணைப்பு தருகிறேன்! இதுவும் அந்த பதிவுக்கு சளைத்தது அல்ல! படித்து வலைப்பூவில் இணைந்து புதிய பதிவரை வளர வாழ்த்துங்கள்!  பாலமகி பக்கங்கள்!புட்ச கவிதை!

//அக்கரையில் தாயாய் என்னைப்பெற்றவள்!
இக்கரையில் என்னைத் தாயாய்ப் பெற்றவள்!
தலைமுறைப் புரிதல்களுக்கிடையில்
தடுமாறுகின்றன உறவுகள்!
கரைகளை இணைக்கும்
கவின்மிகுபாலமாய் இடையில் நான்!
நேற்று பாலமாயிருந்தவள்தான் 
இன்று அக்கரையேகியுள்ளாள்
ஏனோ அதை மறந்துபோனாள்!
இன்று இக்கரையானவளே 
நாளை பாலமாகுவாள்
பாவம் அதை அவள் அறியாள்!

இற்றுப்போகா வரம்பெற்றுவந்த பாலங்களால்
இறுக்கமாகும் இடைவெளிகள் யாவும்
இன்னும் பல தலைமுறைகள் கடந்தும்!//


  திருமதி கீதா மதிவாணன். அவர்கள் எழுதிய கவிதை என்று  நான் பேச நினைப்பதெல்லாம் சென்னை பித்தன் ஐயா அவர்கள் தன்னுடைய பக்கத்தில் பதிந்து இருந்தார். படிச்சதும் பிடிச்சது நானும் பகிர்ந்து கொள்கின்றேன்!

Tuesday, March 24, 2015

சுரேஷ்பாபு ஒரு பத்து ரூபா கொடேன்!

   கடந்த  ஞாயிறன்று  உள்ளூர் பூஜைகள் முடித்து வெளியூர் கோயில் பூஜைக்கு செல்லும்போதே தாமதம் ஆகிவிட்டது. முன்பெல்லாம் உள்ளூர் கோயில் தவிர வெளியூர் கோயில் எனக்கு ஒன்றிரண்டுதான். ஆனால் இப்போது அரைடஜனுக்கு கொஞ்சம் அதிகம் ஆகிவிட்டது. டியுசன் எடுப்பதை நிறுத்தியதால் வருமானத்திற்கு இப்படி அதிகப்படுத்திக் கொண்டேன். கொஞ்சம் சிரமம்தான். ஆனால் சிரமப்படாமல் துட்டு வருமா என்ன?
 
               ஒன்றிரண்டு கோயிலாக இருந்த போது உள்ளூர் பூஜை முடித்து வெளியூர் சென்று அதிகபட்சம் பத்து மணிக்கெல்லாம் வீடுதிரும்பிவிடுவேன். அப்புறம் வெட்டி ஆபிசர்தான். மாலையில் டியுசன் அதற்கு கொஞ்சம் பிரிப்பேர் செய்வேன். டீவி. அரட்டை என ஜாலியாக பொழுது போகும். இப்போது குடும்பஸ்தன் ஆகிவிட்டதால் கூடுதல் பளு பகல் பொழுதில் டீவி பார்ப்பது குறைந்துவிட்டது. வெளியூரில் இருந்து வருவதற்கே பன்னிரண்டு மணி ஆகிவிடுகிறது.

                ஞாயிறன்று   தச்சூர் சிவன் கோயில் பூஜை செய்துகொண்டிருந்தேன். கொஞ்சம் தாமதமாக சென்றதால் பதட்டம் வேறு. அதுவும் இல்லாமல் இரண்டு நாட்களாக படுத்திய ஜலதோஷம் அதிகமாகி தும்மல் மூக்கில் ஒழுகிக்கொண்டு வேலையை தாமதப்படுத்திக் கொண்டு இருந்தது. தச்சூர் கூட்டுச்சாலையில் ஒரு ஹோமியோபதி மருத்துவர் உண்டு அவரிடம் வைத்தியம் செய்து கொள்ளலாம் என்று வேக வேகமாக பூஜை முடித்துக் கொண்டு கோயில் கதவை தாழிட அப்போது வெளி மண்டப ஓரமாக  மொட்டைத்தலையோடு அழுக்குச் சட்டை அணிந்து பார்க்கவே பரிதாபமாக நின்றது ஓர் உருவம்.

                     அடடா! இவன்  இங்கு எதற்கு வந்தான்? சும்மா போக மாட்டானே! என்று  யோசித்தபடியே கதவை பூட்டி வெளியே வந்தேன். அவனும் பின்னாலேயே வந்தான். வண்டியில் பையை மாட்டியபடியே  வண்டியில் ஏற ஆயத்தம் ஆனேன்.  “சுரேஷ்பாபு ஒரு பத்து ரூபா கொடேன்!”  உரிமையாக கேட்டான் அவன்.  “இல்லபா” என்றேன் “ ரொம்ப நாள் ஆயிருச்சு கொடுத்து! ப்ளீஸ்! ஒரு பத்து ரூபா கொடு!” என்றான் அவன் மீண்டும் உரிமையுடன். பையில் பணமிருந்தும் மனதைக் கல்லாக்கிக் கொண்டு வண்டியை ஸ்டார்ட் செய்தபடி  “ என்கிட்ட காசு எதுவும் இல்லே! தொந்தரவு பண்ணாதே!” என்று  பறந்தேன். பின்னாலேயே கொஞ்ச தூரம் வந்தவன் நின்றுவிட்டான். “ அப்பாடா! என்று ஒரு நிம்மதி!

               அவன்   என்னுடன் ஒன்றாய் படித்தவன். அவன் தந்தை பெரிய மளிகைக் கடை வைத்திருந்தவர். பஞ்செட்டி பள்ளியில் அவன் உட்கார்ந்த இடத்தை நான் பறித்துக் கொண்டது நினைவுக்கு வந்தது. அதற்காகவாது ஒரு பத்து ரூபாய் கொடுத்து இருக்கலாம். ஆனால் ஏற்கனவே சீர்கெட்டு இருக்கும் அவன் மேலும் கெட்டுப் போகவேண்டாம் என்று கொடுக்கவில்லை! காலையில் இருந்து எத்தனை பத்து ரூபாய் சேர்த்து வைத்து இருப்பானோ? இந்த பத்து ரூபாய் கொடுத்தால் அதனுடன் சேர்த்து ஒரு குவார்ட்டர் அடிக்க கிளம்பி விடுவான். 

                படித்த மனைவி, நன்றாக படிக்கக் கூடிய மகள் இவைகள் இருந்தும் குடி அவனைக் கெடுத்து விட்டது. என்ன ஒன்று கவுரவமாய் தெரிந்தவர்களாய் பார்த்து பிச்சை எடுக்கிறான். ஒரு மளிகைக் கடை வைத்துக் கொடுத்தார்கள். அதை ஒழுங்காக நடத்துவது கிடையாது. பெண்டாட்டி பிள்ளைகளுக்கு எதுவும் வாங்கிக் கொடுப்பது கிடையாது. மாமனார் வீட்டினர் ஏதோ உதவ அதில் அவன் மனைவி குடும்பம் நடத்தி வருகையில் இவன் இன்னும் திருந்தாமல்  குடித்துக் கொண்டிருக்கிறான். சற்று மனநலமும் பாதிக்கப் பட்டு இருக்கிறது.

     ஒரு முறை பிள்ளையார் கோயில் மண் உண்டியலை திருடும் போது பிடிபட்டு உதைபட்டு மனநல ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள்.  இப்போது திரும்பி வந்திருக்கிறான். ஆனால் இன்னமும் திருந்தவில்லை.  ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் வஞ்சித்தவன் வாழ்வான் வஞ்சித்தவன் மகன் வாழான்! என்ற பழமொழிகள்   உண்டு. அவை பற்றி நிறைய பேருக்கு நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஆனால் நான் கண்டு இருக்கிறேன். எங்கள் ஊரிலேயே சிலரை பார்த்தும் இருக்கிறேன். இவனும் அந்தவகையில் ஒருவன் தான்.

     இவனுடைய தந்தை மளிகை வைத்திருந்தார் அல்லவா? அப்போது மது விலக்கு அமலில் இருந்த நேரம். எம். ஜி. ஆர் ஆட்சி  கள்ள மார்க்கெட்டில் சாரா வெல்லம்  விற்பார். எங்கெங்கு ஊரல்கள் இருக்குமோ அங்கெல்லாம் இவன் தான் சைக்கிளில் கட்டிக் கொண்டு சென்று போடுவான். நல்ல விலை வைப்பார்கள் ஒன்றுக்கு இரண்டாக அவர்களும் வாங்கிக் கொள்வார்கள். வியாபாரம்தான் இல்லையென்று சொல்லவில்லை! ஆனால் சட்டத்துக்கு புறம்பான தொழில் அதிலும் நேர்மை இல்லை. கள்ளசாராயம் குடித்து எத்தனை குடும்பங்கள் பாதிக்கப் பட்டதோ? அந்த சாபம் எல்லாம் சேர்ந்திருக்கும் அல்லவா?

        அன்று இப்படி விற்று நிறைய லாபம் சம்பாதித்து வீடு வாசல் என்றெல்லாம் வாங்கி குவித்திருக்கலாம் அவனுடைய அப்பா. நன்றாக வாழ்ந்தார்தான். ஆனால் அவனுடைய பிள்ளை இன்று வாழவில்லை! அதே குடி அவனை கெடுத்துக் கொண்டிருக்கிறது. இதெல்லாம் இப்போது யாரும் உணர்வது இல்லை. இப்போது வாழ்ந்தால் போதும் வசதி கிடைத்தால் போதும் என்று நினைக்கிறார்கள். இவனைப் பற்றி ஒரு முறை பேஸ்புக்கிலும் கலாகுமரனுடன் பேசி இருக்கிறேன்.

         அமைதியானவன்! யார் சொன்னாலும் கேட்டுக் கொள்பவன், நல்ல உழைப்பாளி அன்று. ஆனால் இன்றோ  ஊதாரி! பிச்சை எடுக்கிறான், குடும்பத்தை கவனிக்காதவன். இதெல்லாவற்றிற்கும் முதற் காரணம் குடி!  குடிதான் இன்று கோலொச்சுகிறது இல்லையென்று சொல்லவில்லை! ஆனால் எத்தனை குடும்பங்களை அழித்து இப்படி கோலொச்சுகிறது? கணக்கில் இல்லை! 

    நேற்று மாலை! ஒரு 6.30 மணி அளவில் பஜார் வரை சென்று திரும்புகிறேன். டாஸ்மாக் எல்லாம் நிறைந்திருக்கிறது. குடித்துவிட்டு வாகனத்தை தடுமாறி ஓட்டி வருவபர்களிடம் வருமானத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது ஒரு கோஷ்டி. சம்பாதித்ததில் பாதியை குடித்து மீதியை இவர்களிடம் இழந்து மீண்டும் நாளைக்கு குடிக்க எதை சம்பாதிக்கலாம் என்று யோசனையோடு  செல்கிறது ஒரு கோஷ்டி. இன்னும் சில நிலவரம் புரியாமல் சாலையில் விழுந்து கிடக்கின்றது. இப்படியொரு அலங்கோலமான தமிழகத்தை என் முப்பத்தொன்பது வயதில் காண்பேன் என்று கனவிலும் கூட நினைக்கவில்லை.

        மது விலக்கு அமலில் இருந்து கள்ளச்சாராயம காய்ச்சி விற்ற காலத்தில் கூட இது போன்ற காட்சிகளை நான் கண்டதில்லை. குடி ஒரு மனிதனை எப்படியெல்லாம் அடிமைப் படுத்துகிறது பார்த்தீர்களா? கூடப்படித்த ஒருவனிடம் உரிமையாக பிச்சை எடுக்க வைக்கிறது?  முகம் தெரியாதவர்களிடம் கூட கையேந்த வைக்கிறது. சம்பாதித்த காசை தமிழக அரசுக்கு மொய்யெழுத வைக்கிறது. இப்படி மக்களை வஞ்சித்து வாழும் தமிழக அரசு எத்தனை நாளைக்கு நன்றாக இருக்குமோ? என்ற ஓர் பயமும் உள்ளூர இருக்கத்தான் செய்கிறது.

       கொள்ளை, கொலை, தகாத உறவுகள், அடிதடி சண்டை, விபத்துக்கள், இன்னும் என்னவெல்லாமோ அதற்கெல்லாம் மூல காரணம் இந்த குடிதான். என் நண்பன் கெடவும் காரணம் குடிதான். நண்பன் மட்டுமல்ல என் சித்தப்பா ஒருவரும் இந்த குடியால் கெட்டழிந்தார். குடிப்பதனால் சில மணி நேர மகிழ்ச்சி கிடைக்கத்தான் செய்யும் சில மணி நேர மகிழ்ச்சிக்காக வாழ்நாள் மகிழ்ச்சியை இழக்கும் மூடர்களை என்னத்தான் செய்வது.?

       ஆண்டார்குப்பத்தில் ஓரு பழக்கடைக்கு சென்றிருந்தேன். ஒரு மனிதன் மனநலம் பாதிக்கப் பட்டவன் போல  சார்! டீ குடிக்கணும் ஓர் அஞ்சு ரூபா இருந்தா கொடுங்க என்று அருகில் இருந்தவரிடம் கேட்டார். அவரும் இரக்கப்பட்டு கொடுத்துவிட்டார். கடைக்காரர் தலையில் அடித்துக் கொண்டார்! ஏன் சார்? என்றேன்.

        சார்! இவனெல்லாம் பைத்தியமா? இப்படியே ஒரு பத்து பதினைஞ்சு பேருக்கிட்ட அஞ்சும் பத்துமா வாங்கி சேர்த்துக்குவான். டாஸ்மாக் போய் ஊத்திக்குவான். ஏதாவது கடை வாசல்ல வந்து  படுத்துக்குவான். போதை தெளிஞ்சதும் திரும்பவும் இப்படி வசூலுக்கு கிளம்பிடுவான். இதே பொழப்பா போச்சு இவனுக்கு தினமும் பார்த்துக்கிட்டுதானே இருக்கோம்! என்றார்.

       அதே மாதிரிதான் என் கூடப்படித்தவனும் என்று நினைக்கும் போது கொஞ்சம் வருத்தம்தான். ஒரு நாள் புத்தி மதியும் சொல்லி பார்த்தேன். எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டான் அமைதியாக அப்புறம் சரி சுரேஷ்பாபு ( என்னை முழுப்பெயர் சொல்லி அழைப்பவன் இவன் மட்டும்தான்) நீ சொல்றதெல்லாம் சரி!  ஒத்துக்கறேன்! ஆனால் இப்ப ஒரு பத்து ரூபா கொடு! என்றான். தலையில் அடித்துக் கொண்டேன்.  இதுதான் கடைசி என்று அன்று  கொடுத்ததோடு சரி  இதுவரை கொடுக்கவில்லை!

     அன்றும் மறுத்துவிட்டேன்! ஆனால் சுரேஷ்பாபு ஒரு பத்து ரூபா கொடேன்! என்ற அவன் குரல் மட்டும்  ஒலித்துக் கொண்டே இருக்கிறது.


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Friday, March 20, 2015

சிந்தனைப் பஞ்சம்!

கிட்டத்தட்ட ஓரிரு மாதங்களாகவே ஓர் தடுமாற்றம், தடைபட்டது போன்ற உணர்வு எனக்கு, பதிவுலகில் வழக்கம் போல இயங்கமுடிவதில்லை! என்ன ஆயிற்று என்று தெரியவில்லை! அப்படி ஓர் சிந்தனைப் பஞ்சம் வந்துவிட்டது. முன்பெல்லாம் இப்படி வந்தால் எதையாவது வெட்டி ஒட்டிப் போட்டு பதிவு தேத்திவிடுவேன். ஆனால் இப்போது நல்ல பையன் ஆயிட்டேன் இல்லையா? அதனால் அப்படி எதுவும் செய்ய தோன்றுவது இல்லை.
   
     பொதுவாக  பதிவு எழுத நான் ரொம்ப மெனக்கெடுவது எல்லாம் இல்லை! பிறரைப்போல பல நூல்களை ஆராய்ந்தோ நெட்டில் தேடியோ ஆதாரங்களை எல்லாம் பிரிப்பேர் செய்தோ நான் பதிவு எழுதுவது கிடையாது. அப்படியே இணையத்தில் அமர்ந்து பிறரின் பதிவுகளை படித்து கொண்டிருப்பேன். திடீர் என எதாவது ஸ்ட்ரைக் ஆகும். அதை பில்டப் செய்து அப்படியே பதிவு தேத்திவிடுவேன்.
  
      ஒரு டைம் டேபிள் வைத்திருந்தேன், திங்கள் கவிதை, செவ்வாய் கதை, புதன், கதம்பசோறு, வியாழன், ஜோக், வெள்ளி ஆன்மீகம், சனி, பாப்பாமலர், ஞாயிறு, தமிழ் அறிவு என்று. 

    அதன்படி அன்றைய தினம்  கணிணியை ஓப்பன் செய்து  உட்கார்ந்து அதற்கேற்ப யோசிப்பேன். அப்படியே தோன்றுவதை வேர்டில் டைப்பி ப்ளாக்கரில் ஒட்டி விடுவேன். படங்களை மட்டும் இமேஜஸில் சுட்டுக்கொள்வேன். இதுவரை எந்த பாதிப்பும் இல்லாமல்தான் போய்க்கொண்டு இருந்தது. ஆனால் இப்போது  ஓர் இருமாதமாக பார்ம் இல்லாத பேட்ஸ்மேன் போல கொஞ்சம் தடுமாற்றம். 

     அதுவும் இல்லாமல் கம்ப்யூட்டர் முன் அமரவே கொஞ்சம் கடுப்பாகவும் இருக்கிறது. அப்படி ஓர் கற்பனை பஞ்சம் உருவாகிவிட்டிருக்கிறது.என்னதான் செய்வது என்று தெரியாமல் பலநாள் பதிவுகளை தவிர்த்துவிடுகிறேன். இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது. பத்தி எழுதலாம் என்று  கொஞ்சம் முயன்று கொண்டிருக்கிறேன். சில பத்திக் கட்டுரைகள் நல்ல பேஜ் வியு கண்டிருக்கிறது. அதே சமயம் பழைய பாணியை விடவும் முடியவில்லை! பெரிய பெரிய எழுத்தாளர்களுக்கு எல்லாம் பதிவர்களுக்கு எல்லாம் இது நடந்து இருக்கலாம். ஆனால் எனக்கு ஏன் நடக்கிறது? என்று தெரியவில்லை!


   ஒரு நல்ல தாட்( எண்ணம்) கிடைத்தாலும் அதை சிறப்பாக முடிக்க முடியாமல் தடுமாறுகிறது. இன்றைக்கு பாகிஸ்தான் ஆட்டக்காரர்களுக்கு நல்ல தொடக்கம் அமைந்தும் வீணாக கோட்டை விட்டார்களே அதுமாதிரித்தான் செவ்வாய்க் கிழமை அன்று கூட   ஒரு நல்ல சிறுகதைக்கான கரு உதித்தும் அதை சரிவர எழுத முடியாமல் திருப்தி இல்லாமல் போய் பழைய பதிவு ஒன்றை மீள்பதிவு செய்து விட்டேன்.

    இது எத்தனை நாள் நீடிக்கும் என்று தெரியவில்லை! அதுவரை எனது வழக்கமான பதிவுகளுக்கு பதில் இப்படி சுயபுராணம், பத்திக்கட்டுரைகள், கிரிக்கெட் என்று எதாவது எழுதலாம் என்று நினைக்கிறேன். பொறுத்துக் கொள்ளுங்கள். விரைவில் மீண்டும் எனது வழக்கமான பதிவுகளை தருவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.  ஒரு வகை சோர்வு என்னை ஆட்கொண்டு இருக்கிறது அதில் இருந்து  மீண்டுவரக் காத்திருக்கிறேன் அதுவரை உங்கள் ஆதரவினை நாடுகின்றேன்! நன்றி!

 தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

இந்தியாவின் வெற்றியும் பாகிஸ்தானின் தோல்வியும்!

இந்தியாவின் வெற்றியும் பாகிஸ்தானின் தோல்வியும்!


          உலகக் கோப்பை  காலிறுதி போட்டியில் நான்கு ஆசிய அணிகள் தகுதி பெற்றன. அதில் மூன்று அணிகள் அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறிவிட்டன.  பாகிஸ்தான்  அணி மீது அதிக  நம்பிக்கை கொடுத்து அது அரை இறுதியில் இந்தியாவுடன் மோதும் என்று காலிறுதி போட்டிகள் துவங்கும் முன்னரே  ஊகங்கள் கிளம்பின. அவைகள் வெறும் கனவுகளாகிவிட்டது.

     உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியாவின் எழுச்சிமிகு ஆட்டம் வியக்க வைக்கிறது. தொடர்ந்து  ஏழு போட்டிகளில் வெற்றி என்பது மட்டும் அல்ல இதுவரை மோதிய ஏழு அணிகளின் எழுபது விக்கெட்டுக்களையும் சாய்த்து உள்ளது இந்திய பந்துவீச்சு. இதே பந்து வீச்சுதான் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரிலும் முத்தரப்புத் தொடரிலும் எடுபடாமல் போனது. ஆனால் இன்று  அதே பந்து வீச்சு பட்டையைக் கிளப்புகிறது.

    நேற்று வங்க தேசத்துடன் ஆன போட்டியில் இந்தியாவின் திட்டமிடல் நன்கு தெரிந்தது. துவக்கத்தில் நிதானமாக ஆடி விக்கெட்டை இழந்துவிடாமல் இருந்தால் கடைசியில் ரன்களை குவித்துவிடலாம். அதே போல் எதிரணி விளையாடும் போது  முதல் பத்து ஓவர்களுக்குள் சிக்கனமாக பந்து வீசி  இரண்டு அல்லது மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்திவிட வேண்டும். பின்பு சீரான இடைவெளியில் விக்கெட் வீழ்த்த பந்து வீச்சை சிக்கனமாக வீச வேண்டும்.

     பீல்டிங்கில் துடிப்பாகவும் வரும் கேட்ச் வாய்ப்புக்களை வீணாக்காது பிடிக்கவும் செய்ய  வேண்டும். இதைத்தான்  கடந்த ஏழு  போட்டிகளிலும் சரியாக செய்து வருகிறது இந்தியா.   அதுபோல பேட்டிங் ஒருவரை மட்டும் நம்பி இராமல் ஒவ்வொரு ஆட்டத்திலும் ஒருவர் என்று பரவலாக்கப்பட்டு உள்ளது. தவான், கோலி, தோனி, சர்மா, ரெய்னா, ரகானே என்று அனைவருமே ஒவ்வொரு போட்டியில் ஒருவர் என சிறப்பாக பேட் செய்துவிடுகின்றனர்.

    இது பந்து வீச்சாளர்கள் மீதான சுமையினைக் கொஞ்சம் குறைத்துவிட அவர்களும் ரிலாக்ஸ்டாக  பந்து வீசுகின்றனர். நேற்றைய போட்டியிலும்  இருபத்தைந்து ஓவர் வரை பெரிதாக ரன் இல்லை. விக்கெட்டும் மூன்று விழுந்து விட்டது. அப்புறம் உள்ளே வந்த ரெய்னாவும்  நிதானமாக  பத்து ஓவர் வரை ஆடினார். பின்னர் ரன் ரேட்டை உயர்த்தி 300 ஐ எட்டினர்.

    பந்து வீச்சில் ஷாட் பால்களை நேர்த்தியாக வீசுகின்றனர். ஸ்பின்னர்களும் சிறப்பாகவே வீச எதிரணி ரன் சேர்க்க தடுமாறுகிறது. இந்திய அணியின் பீல்டிங்க் மிகவும் மாறுபட்டு துடிப்பாக காணப்படுகிறது. இதற்கு ஷிகர் தவான் நேற்று பிடித்த கேட்ச் மற்றும் தோனி பிடித்த கேட்ச்கள் சிறந்த உதாரணம்.

இப்படி  அனைத்து துறைகளிலும்  அசத்துவதால்  உலகக் கோப்பையினை  இந்திய  அணி நெருங்கி விட்டதாகவே நான் நினைக்கிறேன். 2003 பைனலில்  இப்படி நெருங்கிய அணி பதட்டத்தால் கோட்டை விட்டது. அந்த பதற்றம் இப்போதைய அணியில்  காணப்படவில்லை! எனவே ஏதாவது தவறு  செய்தால் மட்டுமே கோப்பை  கை நழுவும். நிச்சயமாக அதற்கு இப்போதைய நிலையில் வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.


     அதே சமயம்   அதிர்ஷ்டத்தினால் காலிறுதியில் நுழைந்த பாகிஸ்தான்  இன்று ஆஸ்திரேலியாவிடம்  மரண அடி வாங்கியது. மிஸ்பா உல் ஹக் கை எப்படி கேப்டனாக தேர்வு செய்தார்கள் என்றே தெரியவில்லை! சுத்தமாக அவருக்கு வியூகம் வகுக்கவே தெரியவில்லை. நன்றாக ஆடிக்கொண்டிருக்கும் போது வீணாக தேவையில்லாத ஷாட் அடித்து அவுட் ஆனார்.  அவர் மட்டும் அல்ல  இன்னும் சிலரும்.

   குறைந்த ஸ்கோர்  அதை டிபெண்ட் பண்ணுகையில்  துவக்கத்தில் சரியான பந்து வீச்சாளர்களை பயன்படுத்தவில்லை. அப்படியும் மூன்று விக்கெட்டுக்கள் விரைவில் விழுந்தன. அப்பொழுது நன்றாக வீசிக்கொண்டிருந்த் வஹாப் ரியாஸுக்கு  ஸ்பெல் கட் செய்தார். இதில் இன்னொரு விஷயம் வாட்சன் ரியாஸீன் பந்துகளில் தடுமாறி ஒரு புல் ஷாட்  அடித்து கொடுத்த கேட்ச்சை  கோட்டை விட்டார் அவரது சக பவுலர். அதற்கப்புறம் மேக்ஸ் வெல் கொடுத்த கேட்ச்சும் கோட்டை விடப் பட்டது.

        நிறைய பீல்டிங்க் ஓட்டைகள்! எனவே எளிதாக வென்றுவிட்டது ஆஸ்திரேலியா. ஆனால் நங்கூரமாக நின்ற ஸ்டீவன் ஸ்மித்தினை பாராட்ட வேண்டும்.
         
     ஆஸ்திரேலியாவின் வேகப்பந்தினை நம்மவர்கள் சமாளித்து   ஒரு முன்னூறை எட்டினால் அவர்களை சாய்த்துவிடலாம் என்றே தோன்றுகிறது. இன்றைய போட்டியில் பாகிஸ்தானின் வலுவில்லாத பீல்டிங் வியுகத்திலேயே அவர்கள் தடுமாறினார்கள். ஸ்மித் தவிர மற்ற வீரர்கள் அதிரடி ஆட்டக்காரர்களே தவிர  பாண்டிங், பெவன், கிளார்க் போன்று தொழில்நுட்பத் திறமை வாய்ந்தவர்கள்  அல்ல. எனவே இவர்களை சாய்த்து விடலாம் என்றே தோன்றுகிறது.


    இன்றைய போட்டியில் வஹாப் ரியாஸ், வாட்சன்  மோதல் சுவாரஸ்யமாக  இருந்தது. நேற்று  ரூபல் ஹொசைன் கோலியை சீண்டினார். இது போன்ற சீண்டல்கள் சுவாரஸ்யமாக இருந்தாலும் ஓரளவுக்கு மேல் அதிகமானால் தண்டனை கிடைக்கும். மேலும் வாய் மோதலை விட  பந்துவீச்சு  அல்லது பேட்டிங்கில் பேசுவதுதான் இந்தியர்களுக்கு மிகவும் பிடிக்கும். 
     எனது கணிப்பின் படி நியுசிலாந்துடன் இந்தியா பைனலில் மோதும் என்று தோன்றுகிறது.  பார்ப்போம்!

Wednesday, March 18, 2015

இலங்கை அணி தோற்றுவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா?


    உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியில் இன்று இலங்கை அணி படு தோல்வியை சந்தித்ததும் சில பேருக்கு பயங்கர சந்தோஷம்! உணர்ச்சி வசப்பட்டு பட்டாசு எல்லாம் வெடித்து கொண்டாடுகிறார்கள். ஏதோ எதிரியை வீழ்த்திவிட்ட சந்தோசம் சிலருக்கு. இதனால் ஆகப்போவது என்ன?

    96 உலகக் கோப்பை தொடரில் இலங்கையுடன் அடி வாங்கிய பின்னர் இந்திய அணி கொஞ்சம் சுதாரித்துக் கொண்டது என்று சொல்லலாம். அதுவரை இந்திய அணி இலங்கையை ஒரு கத்துக் குட்டி அணியாகவே கருதியது. அப்புறம்தான் இந்திய அணியின் அணுகுமுறையில் ஒரு மாற்றம் உண்டானது. ஆனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்களும்  தமிழ் உணர்வாளர்களும் இன்னும் இலங்கை அணியினரை மன்னிக்கத் தயாராக இல்லை! அவர்களை பொறுத்தவரை இலங்கை தோற்றால் கொண்டாட வேண்டும். அது  ராஜபக்சேவாக  இருக்கட்டும் அல்லது மாத்யூஸ் தலைமையிலான கிரிக்கெட் அணியாகட்டும் தோற்றால் மகிழ்ச்சி.
        
              வெடி எல்லாம் வெடித்து கொண்டாடுகிறார்கள். எனக்கு வருத்தம்தான். இலங்கை அணியின் இப்படிப்பட்ட சரணாகதி நிலையை நான் கூட எதிர்பார்க்கவில்லை! டுமினியின் ஹாட்ரிக்கும் தாஹிர் மற்றும் மோர்கலின் பந்துவீச்சும் சுத்தமாக இலங்கை அணியை நிலை குலைய வைத்துவிட்டது. முக்கியமான போட்டியில் சோதனைகள் வேறு செய்து சொதப்பிவிட்டது இலங்கை. தோற்றும் போனது. இதனால் தமிழர்களுக்கு ஏதாவது நல்லது ஏதாவது நடந்து விடப் போகிறதா? ஒன்றும் கிடையாது. அப்புறம் ஏன் இந்த வெற்று சந்தோஷம் என்று  தெரியவில்லை!

         
     நம்மவர்களிடையே இந்த மனப்பான்மை இன்று நேற்றல்ல! ரொம்ப காலமாய் தொடர்கிறது. நம்முடைய எதிரியை எவனாவது அடித்துவிட்டால் அவனை தூக்கி வைத்து கொண்டாடுவது. இது மிகவும் மோசமான பழக்கம் ஆகும். அண்டை வீட்டுக்காரனுடன்  சண்டை என்றால் நாம்தான் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். மூன்றாம் நபர் அண்டை வீட்டுக்காரனை அடிக்கையில் கைகொட்டி ரசித்து மகிழ்வது என்பது  வக்கிரமான ஒன்று. இதைத்தான் நம்மவர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள்.

      நாம் தோற்றாலும் பரவாயில்லை! எதிரியும் தோற்கவேண்டும் என்று எண்ணுவது எந்தவித மனோநிலை என்று எனக்குப்புரியவில்லை! அதுவும் இல்லாமல் விளையாட்டுக்கும் அரசியலுக்கு இந்தியாவில் இருக்கும் வினோதமான சம்பந்தம் போல் எங்கும்  இருக்குமா என்று தெரியவில்லை!

       விளையாட்டை விளையாட்டாக பார்க்காமல் அதில் அரசியலை புகுத்தி ஆட்டக் களத்தை ரணகளமாக்குவதில் தேர்ந்தவர்கள் நம்மவர்கள். தமிழக மீனவர்கள் தாக்கப்பட்ட போது இலங்கை வீரர்களை தமிழகத்தில் விளையாட விடாமல் தடுத்தது ஓர் அரசியல். அதே போல இலங்கை இந்தியாவிடம் விளையாட்டில் தோற்கும் போதெல்லாம் இந்திய மீனவர்கள் மீது அவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்துவது மகா கேவலமான ஒன்று.

        இப்படி விளையாட்டையும் அரசியலையும் ஒன்றாக்கி பலகோடிகளை குவித்துவிடுவார்கள் அரசியல்வாதிகள். இதில் மயங்கி குரல் கொடுத்து ஏமாந்து போவது சாதாரண ரசிகர்களே! விளையாட்டை விளையாட்டாக பார்க்கக் கற்றுக்கொள்ளுங்கள்! அது சாதாரணமான ஓர் போட்டிதான் போர் அல்ல! இரு நாடுகளுக்கான போர் மாதிரி ஊடகங்களும் செய்தித்தாள்களும் சித்தரிப்பது அதைவிட மகா கொடுமை!

     இன்று இதோ இலங்கை படுதோல்வி அடைந்துவிட்டது. இதனால் இலங்கை இந்தியா உறவில் ஏதாவது மாற்றம் வந்துவிடுமா? இல்லை அங்குள்ள தமிழர்கள் வாழ்வில்தான்  ஏற்றம் உதித்துவிட்டதா? அதெல்லாம்  ஒன்றும் நடக்காது. அப்புறம் எதற்கு இந்த ஆர்பாட்டம். நமக்கு பசி எடுக்கிறது என்றால்  அடுத்தவன் வீட்டில் எவனோ கொள்ளையடித்துப் போனால் மகிழ்ந்து போவது என்பது என்னவிதமான கொடுமையான மனோநிலை?

      சங்ககாரா, மகிளா ஜெயவர்தனே போன்ற சிறந்த வீரர்களின் கடைசிப் போட்டி தோல்வியில் முடிந்ததில் எனக்கு வருத்தமே! கொண்டாடும் ரசிகர்கள் கொலைவெறியை உதறிவிட்டு ஸ்போர்ட்டிவாக சிந்திப்பார்களே ஆனால் அவர்களுக்கும் இலங்கை அணியின் வெளியேற்றம்  வருத்தத்தையே தரும்.

              துவக்க வீரராக திசாரா பெரோராவை இறக்கியது முதல் புது சுழல் பந்து வீச்சாளரை அறிமுகம் செய்தது என்று துணிச்சலாக முடிவு எடுத்தாலும் இன்று இலங்கை வீரர்களிடம் கொஞ்சம் கூட தன்னம்பிக்கை காணப்படவில்லை! தனி ஒருவராக அணியினை கரை சேர்க்கும் அரவிந்தா போன்ற ஜாம்பாவான்கள் இப்போது அணியில் இல்லை! மிடில் ஆர்டர் பேட்டிங் வலுவற்று போய் விட்டது. மலிங்காவின் காயத்தினால் பந்துவீச்சும் பலவீனமாக சுத்தமாக சரணாகதி அடைந்துவிட்டது.

     நாக் அவுட் போட்டிகளில் தடுமாறிக்கொண்டிருந்த தென்னாப்பிரிக்கா முதல் முறையாக வெற்றி கண்டுள்ளது. அதே சமயம் காயங்களால் பலவீனப்பட்ட இலங்கை அணி இப்போது தடுமாறத் துவங்கி உள்ளது. 96க்கு அப்புறம் இரண்டு முறை பைனல் வரை வந்து கோட்டை விட்ட இலங்கை இந்த முறை காலிறுதியோடு நடையைக் கட்டிவிட்டது. இது இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டுமல்ல பொதுவான எல்லா கிரிக்கெட் ரசிகர்களுக்கும் ஓர் ஏமாற்றமே!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Tuesday, March 17, 2015

எனது என்றால் எதுவும் இல்லை!

எனது என்றால் எதுவும் இல்லை!

                          படித்து ரசித்த குட்டிக்கதை!

ஒரு கிழவி கொடும் பாவங்களையே செய்து கொண்டிருந்தாள். அக்கிழவி இறந்தபின், யம தூதர்கள் எரியும் நரகக் குழியில் இட்டார்கள். பெரும்துன்பங்களை அனுபவித்த கிழவி ‘ஓ’ என்று அலறி அழுதாள்.
   அப்போது கருணை நிறைந்த கந்தர்வன் ஆகாய மார்கமாகச் சென்றான். கிழவியின் குரலைக்கேட்டு இரக்கத்தோடு சிறிது கீழிறங்கி விசாரித்தான்.
   கந்தர்வன், ‘பாட்டி! உன்னை தூக்கி கரை சேர்ப்பேன். ஆனால் நீ ஏதாவது புண்ணியம் செய்திருந்தால்தான் அது முடியும் என்றான்.
  கிழவி, ‘ஐயா! ஒருமுறை நான் வாழைப்பழங்களை உண்டு கொண்டிருந்தபோது பசியோடு வந்த சிவயோகி ஒருவருக்கு என்னிடமிருந்தவற்றில் அழுகிய பழத்தைக் கொடுத்தேன். அந்த மகான், அதில் அழுகாத பாதி வாழைப்பழத்தை ‘சிவார்ப்பணம்’ என்று கூறி உண்டு விட்டுச் சென்றார். இதுதான் என் வாழ்நாளில் செய்த ஒரே தர்மம்” என்றாள்.
    கந்தர்வன் சிரித்தான். அப்போது அந்த அடியார்க்குத் தந்த பாதிவாழைப்பழம் அங்கே வந்தது.
“பாட்டி! இந்த பழத்தின் ஒரு பாதியை நான் பற்றிக் கொள்வேன்! மற்றபாதியை நீ பற்றிக்கொள். இதனைக்கொண்டு உன்னை நரகிலிருந்து மீட்டு சுவர்கத்திற்கு சேர்க்கிறேன்” என்றான்.
   அப்படியே கிழவி பாதி வாழைப்பழத்தின் அடிப்பகுதியைப்பற்றிக் கொண்டாள்.மற்ற பாதியை தேவதூதன் பற்றிக் கிழவியைத் தூக்கினான். நரகில் கிடந்த பாவ ஆத்மாக்கள் கிழவியின் காலைப்பற்றிக் கொண்டார்கள். மெல்ல மெல்ல தேவதூதன் கிழவியை தூக்கிக்கொண்டு போனான்.
   நரகம் கடந்து சுவர்கம் நெருங்கியது. இப்போது கிழவி பெருமூச்சு விட்டாள். தன் காலை நான்கு ஐந்து பேர் பற்றிக்கொண்டிருப்பதை நோக்கினாள்.அவளுக்கு வந்ததே கோபம்! ‘அடேய்! என் வாழைப்பழத்தைப் பற்றிக்கொண்டு நான் சுவர்கம் வந்தேன். நீங்கள் யார் என் காலைப் பிடிப்பவர்கள்? என்று கூறிச் சீறினாள்.
 கந்தர்வன் கிழவியின்கொடுங்குரலைக் கேட்டான். “ஏ கிழவியே மகானுக்குத் தந்துவிட்ட பழம் உன் வாழைப்பழமா?உன் வாழைப்பழத்தை நீயே பிடித்துக் கொள்! என்று கூறி விட்டுவிட்டான். கிழவி பழையபடி நரகத்திடையே வீழ்ந்தாள்.
   “எனது என்று எண்ணுபவர்களுக்கு புண்ணிய உலகிலே இடம் கிடையாது.”
 
  அன்னை சாரதா தேவியின் கதையமுதிலிருந்து.

(மீள்பதிவு)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே!

Monday, March 16, 2015

புகைப்பட ஹைக்கூ 81

புகைப்பட ஹைக்கூ 811.      மேகம் கறுக்காமல்
பெய்தது மழை!
பனி!

2.      வெள்ளை பூசிய
வீதிகள்!
பனிமழை!

3.      உறைந்து போனது
ஊர்!
பனிமழை!

4.      உருகி வழிவிட்டதும்
உதயமானது சூரியன்!
பனிமழை!

5.      நனைந்த மரங்கள்!
உறைந்தன!
பனிமழை!

6.      விதவையாகாமலே
வெள்ளுடை தரித்தன மரங்கள்!
பனிமழை!

7.      எதிரியே இல்லை!
நடுங்கிக் கொண்டிருந்தனர்!
பனிமழை!

8.      உதிர்ந்த பூக்கள்!
உருகிக் கரைந்தன!
பனிமழை!

9.      வெண்குடையானது
வெறும் குடை!
பனிமழை!

10.  படையெடுத்து வந்தது
தடைபட்டது இயல்பு வாழ்க்கை!
பனிமழை!

11.  மழை பொழிந்தும்
நீரோடவில்லை!
பனிமழை!

12.  வெள்ளை உடுத்திய பூமி!
வெட்கத்துடன் வெளிப்பட்டான்
சூரியன்!

13.  தடுப்பரண்கள் கட்டியும்
தடையைமீறி புகுந்தது
குளிர்!

14.  வெண்பஞ்சு பொதிகள்!
வீதியில் சிதறின!
பனிமழை!

15.  கண்கள் குளிர்கையில்
காட்சி மறைந்தது!
பனிமழை!

16.  மூடுபனியில் சிக்கி
முடி இழந்தன மரங்கள்!
பனிமழை!

17.  கொட்டித் தீர்த்ததும்
வாரி இறைத்தார்கள்!
பனி மழை!

18.  அள்ளித் தந்த வானம்!
துள்ளவில்லை மக்கள்!
பனிமழை!

19. கிளைத்த மரங்களில்
     துளிர்த்தது 
       பனி!

20. பஞ்சுமெத்தையான வீதிகள்!
     பாதங்களை சுட்டன!
     பனி மழை!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்தவும்! நன்றி!


Saturday, March 14, 2015

நரி சொன்ன நல்ல தீர்ப்பு! பாப்பா மலர்!

தீப்பிடித்த கடல்!    ஒரு பையன் ஓட்டல்ல வேலை செஞ்சுகிட்டிருந்தான். அந்த ஓட்டலோட சமையலறையில அவிச்ச முட்டைங்க எப்பவும் குவியலா இருக்கும். அப்பப்ப அந்த முட்டைக் குவியல்ல இருந்து ஒரு முட்டையை எடுத்து தின்பான் அந்த பையன்.
    ஒரு நாள் பையன் முட்டைய எடுத்து தின்றதை அந்த ஓட்டல் முதலாளி பார்த்துட்டாரு.
   டேய்! எத்தனை நாளா இந்த திருட்டு வேலை நடக்குது? ன்னு அதட்டலா அவனை பிடிச்சு மிரட்டினாரு முதலாளி. பையனும் மறைக்காம “;ரொம்ப நாளாவே நடக்குது முதலாளி” பசியெடுத்தா ஒரு முட்டை சாப்பிடுவேன்! என்று தவறை ஒத்துகிட்டான்.
   முதலாளிக்கு கோவம் ஜாஸ்தியாயிருச்சு! அட எவ்வளவு தைரியம் இருந்தா திருடனுதும் இல்லாம தினமும் திருடனேன்னு ஒத்துக்கவும் செய்யறியா? இத்தனைநாளா நீ எவ்வளவு முட்டைகளை தின்னு தீர்த்தாயோ தெரியலையே! அத்தனை முட்டைகளும் இருந்து குஞ்சு பொறிச்சிருந்தா எனக்கு எவ்வளவு லாபம் கிடைச்சிருக்கும்? நீ சாப்பிட்ட முட்டை எல்லாத்தையும் கக்கு! இல்லாட்டி இன்னும் ஒரு மாசத்துக்கு சம்பளம் வாங்காம வேலை செய்! ன்னு மிரட்டினாரு முதலாளி.
  அந்த பையன் அவரோட மிரட்டலுக்கு பயப்படலை! பசிக்கு ஒரு முட்டை எடுத்து சாப்பிட்டது தப்பா? நீங்க சொல்றதை ஒத்துக்க முடியாது. பஞ்சாயத்து கூட்டுங்க! அவங்க சொல்றதை ஒத்துக்கறேன்ன்னு சொல்லிபுட்டான்.
   அந்த ஊரில எந்த பஞ்சாயத்தா இருந்தாலும் நரிதான் தலைமை தாங்கி தீர்ப்பு சொல்லும். இந்த பிரச்சனைக்கும் நரிக்கிட்டேயே போனாங்க! நரியும் வழக்கை விசாரிச்சது. சரி தீர்ப்பை நாளைக்கு சொல்றேன்னு சொல்லிட்டு போயிருச்சு!
        மறுநாள் பஞ்சாயத்து கூடிருச்சு! நரி என்ன தீர்ப்பு சொல்ல போவுதுன்னு ஊர்ஜனம் முழுக்க கூடியிருந்துதுங்க! அந்த பையனும் ஓட்டல் முதலாளியும் வந்து எதிரும் புதிருமா நிக்க நேரம் போய்க்கிட்டே இருந்துச்சு! தலைவர் நரி ஆளையே காணோம். ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம்னு ஓடிப்போய் அரை நாள் கடந்தப்ப நரி மூச்சிறைக்க ஓடி வந்தது.

   எல்லோரும் என்னை மன்னிக்கனும் ஓர் அவசர வேலைக்கு போயிருந்ததாலே தாமதம் ஆயிருச்சுன்னு நரி சொல்லுச்சு!
   அப்படியென்ன வேலை தலைவரே! ன்னு  ஒருத்தர் கேட்டாரு!
  என்னன்னு சொல்லுவேன்! காலையிலேயே பஞ்சாயத்துக்கு கிளம்பிகிட்டு இருந்தேனா? அப்ப கடல் தீப்பிடிச்சு எரியறதா ஓடி வந்து சொன்னாங்க! நீங்கதான் அதை வந்து அணைக்கணும்னு சொன்னாங்க!  அதனால வைக்கோல் விறகு இதெல்லாம் கொண்டுபோய் கடல்ல வீசி அதை அணைச்சிப்பிட்டு  தீய தணிச்சி முடிச்சுட்டு இதோ இப்ப வந்து சேர்ந்தேன்! சலிப்பா சொன்னது நரி!
   இதைக்கேட்டு எல்லோரும் சிரித்தார்கள்! என்ன தலைவரே! விளையாடாதீங்க! நாங்க என்ன முட்டாளா? கடல் எப்படி தீப்பிடிக்கும்னு  கேட்டார்கள் சபையினர்.
   சரி! அப்படியே தீப்பிடிச்சு இருந்தாலும் வைக்கோலும் விறகும் கொண்டுபோய் போட்டா தீ அதிகமாத்தானே பத்திக்கும்! அதை கொண்டு இவரு அணைசாராமே! எப்படி இது? என்று எல்லோரும் கசமுசாவென பேசிக் கொண்டனர். கூட்டத்தில் சலசலப்பு கூட நரி கனைத்துக் கொண்டு பேசியது.
   அப்ப! கடல் தீப்பிடிக்காது இல்ல!
  பிடிக்காது!
பிடிச்சாலும் வைக்கோலும் விறகும் கொண்டு அணைக்க முடியாதுன்னு சொல்றீங்க!
  ஆமாம் தலைவரே! நீங்க விளையாட்டுக்குத்தானே! சொல்றீங்க!
அவிச்ச முட்டை குஞ்சு பொறிக்குமுனு இவரு சொல்றதை நம்பி பஞ்சாயத்தை கூட்டறீங்க! நான் கடல் தீப்பிடிச்சதுன்னு சொன்னா மட்டும் நம்ப மாட்டேங்கிறீங்களே!
  அப்போதுதான் மக்களுக்கு தவறு புரிந்தது! அனைவரும் தலை குனிந்தனர்.
நரி சொல்லியது.ஓட்டல்கள்லே சின்ன பசங்களை வேலையிலே சேர்க்கறதே தப்பு! அப்படி சேர்த்ததுக்கப்புறம் ஒழுங்கா சம்பளமும் சோறும் போட்டிருந்தா இவன் ஏன் ஒரு முட்டை எடுத்து தின்னப் போறான். பசிக்கு ஒரு முட்டையை தின்னத பஞ்சாயத்துக்கு கொண்டு வந்துட்டாரு! இந்த முதலாளி.
      ஏம்பா! ஓட்டல் காரரே! இதுதான் தீர்ப்பு! சின்னபையனை வேலைக்கு சேர்த்ததும் இல்லாம அவன் மேல பஞ்சாயத்தும் வைச்சதுக்கு உனக்கு தண்டனை உடனடியா இரண்டுமாச சம்பளத்தை கொடுத்து இந்த பையனை வீட்டுக்கு அனுப்பனும் இனிமே சின்ன பசங்களை வேலையில சேர்த்தா உன் கடையை இழுத்து மூடிருவோம் இதுதான் தீர்ப்பு கிளம்புங்க! என்றது.
   தன் தலையில் தானே மண்ணைவாரி போட்டுக் கொண்டோமே என்று முதலாளி பையனுக்கு இரண்டு மாத சம்பளத்தை கொடுத்து வேலைக்கு ஆளையும் இழந்து நின்றார்.
நரியின் நல்ல தீர்ப்பை கண்டு மகிழ்ந்தான் சிறுவன்.

(செவி வழிக் கதை தழுவல்)
(மீள்பதிவு)
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
Related Posts Plugin for WordPress, Blogger...