Wednesday, February 25, 2015

நீங்க நீக்கு போக்கோட நடந்துக்கறீங்களா?

நீங்க நீக்கு போக்கோட நடந்துக்கறீங்களா?

  வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் கொஞ்சம் நெளிவு சுளிவு தேவை என்று பெரியோர்கள் சொல்வார்கள். அப்படியே முறுக்கிக்கிட்டு நில்லாம கொஞ்சம் வளைஞ்சு நெளிஞ்சு கொடுத்தாத்தாம்பா வாழ்க்கை என்பார்கள்.

     வீடாகட்டும் அலுவலகம் ஆகட்டும் எல்லாவற்றிலும் சட்டத்திட்டங்களை அப்படியே பின்பற்றி அப்படியே நடந்துகொள்ளவேண்டும் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் வாழ்க்கை நரகம்தான். கொஞ்சம் விட்டுக் கொடுத்துப்போவதில் தான் இன்பம் இருக்கிறது.

   இதற்காக லஞ்சத்தை ஆதரிக்கிறேன்! என்று பொருள் அல்ல! சிவாஜி படத்தில் ரஜினி எல்லாவற்றையும் சட்டப்படி ஒழுங்காக வைத்துக் கொண்டு கல்லூரி ஆரம்பிக்க முயற்சித்தால் நடக்காது. அப்புறம் கொடுக்க வேண்டியவர்களுக்குக் கொடுத்து வேலையை முடிப்பார். இப்படி ஆகிவிட்டது நாட்டின் நிலை.

     ஒரு கதை ஒன்றை நான் ப்ளஸ் ஒன் படிக்கையில் படித்தேன். ஆங்கிலக் கதை. ஏ.ஜி. கார்டினர் எழுதியது. ஒரு முன்னிரவு நேரம் குளிர் காதை அடைக்கும் சமயத்தில் அந்த ஊரின் கடைசி பேருந்து கிளம்பும். இரண்டு மாடிகள் கொண்ட பேருந்து அது. கண்டக்டர் அனைவருக்கும் டிக்கெட் கொடுத்து வரும்போது கடைசி இருக்கையில் ஒரு பெண்மணி தனது வளர்ப்பு நாயுடன் அமர்ந்திருப்பார்.
 
      கண்டக்டர் வளர்ப்பு பிராணிகளை இந்த அடுக்கில் ஏற்றிவரக்கூடாது மேல் அடுக்குக்கு செல்லுங்கள் என்பார். அந்த பெண்மணி பனிக்காற்று வீசுகிறது. மேலும் தனக்கு உடல்நலம் சரியில்லை! இந்த முறை நான் இங்கேயே அமர்ந்து கொள்கிறேன் என்று கேட்பார். கண்டக்டர் மறுப்பார். விசிலை ஊதி பெண்மணியை கீழே இறங்கச் சொல்வார். பெண்மணிக்கும் அவருக்கும் விவாதம் நடக்கும். நேரம் கடக்க பயணிகள் பொறுமை இழப்பர். அந்த பெண்மணி மேல் அடுக்குக்கு செல்ல சம்மதித்து மேலே சென்றதும் பஸ் புறப்படும்.
 
     அப்புறம் கொஞ்ச நேரம் கழித்து அந்த பெண்மணி மீண்டும் கீழே வந்துவிடுவார். இதை கண்டக்டர் கவனித்து அந்த பெண்ணை மேலே செல்லும்படி வற்புறுத்துவார். அப்பெண்மணியும் கெஞ்சி கேட்டுக் கொள்வார். பனிக்காற்று வீசுவதால் மேலே அமரமுடியவில்லை! இந்த முறை சற்று பொறுத்துக் கொள்ளுங்கள் என்பார். கண்டக்டர் விடாப்பிடியாக மீண்டும் பஸ்ஸை நிறுத்தி விடுவார். மீண்டும் விவாதம் தொடங்கும். நேரம் கடந்துகொண்டிருக்க பயணிகள் ஆளுக்கொன்று சொல்ல  அந்த பெண்மணி மீண்டும் மேலே சென்றுவிடுவார். பேருந்து புறப்படும்.

   இறுதியில் பஸ் கடைசி நிறுத்தத்தை அடையும் போது அரைமணிநேரம் தாமதமாகி இருக்கும். பஸ்ஸில் நடத்துனர் ஓட்டுனர், எழுத்தாளர் மட்டுமே இருப்பார்கள். நடத்துனர் நான் கடமை தவறவில்லை என்பது போல எழுத்தாளரை பார்ப்பார். அப்போது எழுத்தாளர் சொல்வார். கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று சிலவிதிகள் இருக்கிறது. உதாரணமாக சாலையில் இடப்புறம் செல்ல வேண்டும் என்றால் அப்படித்தான் செல்ல வேண்டும். செல்லாவிடில் விபத்து ஏற்படும். சிலவிதிகளுக்கு விதிவிலக்குகள் உண்டு. அந்த விதிவிலக்குகளுக்கு உதாரணம் இன்று அந்த பெண்மணியைப் போல் உடல் நலம் இல்லாதவர்கள் கீழடுக்கில் பயணிக்க அனுமதித்து இருக்கலாம்.இதனால் யாருக்கும் நஷ்டம் ஒன்றும் ஏற்படப் போவது இல்லை! குறிப்பாக பயணிகள் யாரும் ஆட்சேபிக்கவில்லை!
   
     நீங்கள் விடாப்பிடியாக விதியை கடைபிடிப்பதாக போராடியதால் அரைமணி நேரத்திற்கும் மேலாக தாமதம் அனைவருக்கும் ஏற்பட்டது. அந்த பெண்மணிக்கும் உடல் சுகவீனம் அதிகமானது. இது போன்று விதிகளுக்கு விலக்கு அளித்து மனிதாபமானத்துடன் நடந்துகொண்டால் உங்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் நல்லது என்பார். நடத்துனரும் புரிந்துகொள்வார்.

    இதைத்தான் நீக்கு போக்கு! என்று சொல்வது. கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றால் கடைபிடித்து ஆகவேண்டும். சிலவற்றிற்கு விதிவிலக்குகள் இருக்கலாம். எங்கள் ஊரில் ஒரு நண்பர் டூ வீலரில் சென்றவர் மீது மந்திரியின் கார் மோதிவிட்டது. நண்பர்தான் போதையில் விட்டுவிட்டார் என்கிறார்கள். பலத்த அடி கால்களில் முறிவு. கூட்டம் கூடிவிட்டது. அந்த மந்திரி சமரம் பேசுகிறார். சிகிச்சைக்கான செலவு முழுவதையும் ஏற்றுக் கொள்கிறேன். பத்திரிக்கை டீவிக்களில் இதை சொல்லாதீர்கள் என்கிறார். அதைப்போலவே மிகப்பெரிய மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையும் அளிக்கிறார்.

    இதற்குள் ஊடகங்களுக்கு செய்தியை யாரோ கசியவிட பத்திரிக்கை டீவிக்களில் மந்திரி கார் மோதி இளைஞர் படுகாயம் என்று வந்துவிட்டது.  பல லட்சங்கள் சிகிச்சைக்கு செலவாகும் அதை அவர் ஏற்றுக் கொள்கிறேன் ஊடகங்களுக்கு நியுஸ் வேண்டாம் என்றார். இந்த இளைஞரின் குடும்பமும் பெரிய வசதி இல்லை நடுத்தரக் குடும்பம்தான். இவ்வளவு செலவு செய்ய முடியாது கடன் பட வேண்டிய நிலை.

     இப்போது மந்திரியை எதிர்க்கிறேன் என்று ஊடகங்களுக்கு செய்தி அனுப்பியதால் மந்திரி கோபத்துடன் உள்ளாராம். நான் சொன்னதை கேட்கவில்லையே? நான் ஏன் உதவ வேண்டும் என்றால் இவர்கள் என்ன செய்வார்கள் தர்ம சங்கடத்துடன் உள்ளார்கள்.

   இளைஞரின் நண்பர்கள் நீக்கு போக்கு இல்லாமல் நடந்து கொண்டமையால் இளைஞருக்கு கிடைக்க விருந்த நன்மை கூட தீமையாகி போகிறது பாருங்கள்.

  அதனால்தான் சொல்கிறேன் சில விஷயங்களில் நீக்கு போக்கு தேவை!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கபடுத்துங்கள்! நன்றி!


12 comments:

 1. வணக்கம்
  ஐயா.
  100 வீதம் உண்மைதான் கதை ஒன்றை சொல்லிஇறுதியில் சொல்லி முடித்த விதம் நன்று... இன்றைய இளைஞர்களின் நிலை இதுதான்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 2. சொல்லி முடித்த விதம் அருமை நண்பரே,,,,,

  ReplyDelete
 3. நாம் நீக்கு போக்குடன் இருந்தாலும் நண்பர்கள் கெடுத்து விடுகிறார்களே!

  :))))))))))))

  ReplyDelete
 4. நல்ல பதிவு..நீக்குப் போக்கு தேவைதான் சகோ

  ReplyDelete
 5. செய்தியை விட வதந்தி தீ போல...

  ReplyDelete
 6. நீக்குபோக்கு விஷயத்தில் கவனம் தேவை. நீக்குபோக்கு என்று சொல்லி அனைத்தையும் நாம் பலவற்றை எதிர்மறைச் சிந்தனையில் எடுத்துச்செல்கிறோம். இதில் நாம் நீக்குபோக்காக இருக்கவேண்டும் என்பதே சரி.

  ReplyDelete
 7. என்னாங்க சார் மோடீயை வறுத்தெடுப்பீங்கன்னு வந்தா ஏமாத்தீப்புட்டிங்கோ.
  நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் விவசாயம் நலம் பாதிக்கும்-ங்கிறதுக்கு பதிலா அதுக்கு ஒரு மைனாரிட்டி டச் கொடுத்தாங்காட்டிக்கு போதுமே அய்யோ இந்த மைனாரிட்டிங்களை இப்படி மோடி அடிக்கப் பார்கிறாரேன்னு சொல்லிக்கலாமே. அது பற்றி விஷயம் தெரிலைன்னு மெளனமாயிட்டீங்களா , அப்படி பார்த்தால் பதிவே போட முடியாது. நமக்கு வெளியுறவுக் கொள்வை புரியாது அதுங்காட்டிக்கு அத்த அப்படியேவா விட்டுக்கினோம், இந்த மோடீ சும்மா பூட்ட கேசு பாரீன் டூர் விட்டுக்கினேகிராருன்னு எகிறனோம் இல்லையா? எவானாவது இன்னா சார் இப்படி சப்ஜெகட் புரியமா எழுதிக்கீரன்னு கேட்டானா, சார் அருமையான பதிவு, சொன்ன விதம் சூப்பர் அன்பரேன்னு தானே சொன்னாங்க இல்லையா?. அப்பாலே எதுனா ஒரு அல்லக்கை கேட்டான்னு வச்சுக்கோ “நான் முழுதும் தெரிந்தவனும் அல்ல ஒன்னுங்காட்டியும் விளங்காதவனும் அல்லா” -ன்னு ஒரு பஞ்ச் வச்சிக்கினுகீரோமே அத்தாலேயே அவனை சாத்திரலாம். புரியுது புரியலையோ எல்லா மேட்டரிலும் நாம் அறிவுரை சொல்லக் புஸ்கினு கிளம்பீரனும். நடிகைங்கிற ரீஜனுக்காகவே பொன்னூங்களை தவறாவும் அசிங்கமாகவும் வக்கிரமாவும் பல பதிவு எழுதுனீங்க, அப்போ எல்லாம் அய்யோ நம்ம பார்கிற வேலைக்கு இது அப்பீட் ஆயிடுமேன்னு நினைக்கா ம தானே தைரியமா போட்டீங்க. அத்தோட இல்லாது அதெல்லாம் ஹிட்டுக்காக எழுதினது தவறு தான் என்று பிற்காலத்தில் ஒத்துகிட்ட தன்மான சிங்கம் என்ற இமேஜ் இருக்கே அப்புறம் என்னாத்துக்கு தலைவா இப்படி ஜெனரல் பதிவு போட்டுக்கினு குந்திங்கினுகீரே. மின்சார விலையைக் குறைக்க நினைக்கும் கேஜ்ரிவாலும் விலையை கூட்ட நினைக்கும் மோடீயும்னு எழுதுங்க சார், படிக்க நாங்க ரெடி ...நல்ல நேர்மையான பதிவு நண்பரே......என்ற கமெண்ட் நிறைய கிடைக்கும். கார்பரேட் எஸ்பினேஜ் அது இதுன்னு சில அரெஸ்ட் செய்து தன் கையாளாகத தனத்தை மறைக்கும் மோடீ, பெரும் முதாலாளிகளை உடனே கைது செய்தாதிலிருந்தே தெரிகிறது, இது மதவாதத்தை மறைக்கும் முயற்ச்சி என்று எழுதலாம். இந்த அரஸ்டை ஏன் ஆட்சிக்கு வந்த அன்றே செய்யவில்லை இந்த ஊழல் பெருச்சாளிகள் என்று சொல்லிச் சிரிக்கலாம், நிறைய கமெண்ட்ஸ் கிடைக்கும்

  செந்தில் வாமனன்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் செந்தில் வாமனன், வருகைக்கும் நீண்ட கருத்துரைக்கும் முதலில் நன்றிகள், மோடியை குறை சொல்வது ஒன்றே என் வேலை என்று நினைத்துவிட்டீர்கள் போல! மோடியின் ஆட்சியின் மீது அதீத எதிர்ப்பார்ப்பு கொண்டு ஏமாந்தவர்களில் நானும் ஒருவன். அவர் செய்யும் எல்லாவற்றையும் பாராட்ட முடியாது. அவர் செய்யும் செயல்களில் எனக்கு தவறெனப்பட்டவற்றை சுட்டினேன். ஆம் ஆத்மியினர் செயல் தவறானாலும், காங்கிரஸ், மற்றும் அதிமுக தவறுகளையும் பல முறை சுட்டி எழுதியிருப்பேன். உங்களுடைய கருத்துரையில் இருந்து நீங்கள் என்னுடைய பதிவுகளை நீண்ட நாட்களாக இல்லை இல்லை வருடங்களாக வாசிப்பவர் என்று அறிந்துகொண்டேன். இதனால் என்னுடைய பதிவுகள் யாரையும் ஆதரித்து எழுதப்படுவதில்லை என்று உணர்ந்திருக்கலாம். இல்லாவிடினும் சொல்கின்றேன். நான் எந்த கட்சி ஆதரவாளனும் இல்லை! யார் ஆண்டாலும் எனக்கு ஒன்றும் கிடைக்க போவதில்லை! யாருக்கும் நான் காவடி தூக்க ஆசைப்படுபவனும் இல்லை. மேலும் நீங்கள் சொல்வது போல பெரிய அளவில் பொருளாதாரம் பற்றியோ அரசியல் பற்றியோ அறிந்தவனும் இல்லை! எனது மனதுக்கு பட்டதை எழுதுகிறேன் அவ்வளவே! ஆரம்ப காலத்தில் நடிகைகளை பற்றிய கிசுகிசுக்களை பதிந்தேன் என்பது உண்மைதான் அது என் சொந்தப்பதிவு அல்ல! பிற தளங்களில் இருந்து வெட்டி ஒட்டிய பதிவுகள் அது.ஹிட்ஸுக்காகத்தான் அப்படிச் செய்தேன் என்று ஒத்தும் கொண்டேன். இப்போது சுத்தமாக சினிமா செய்திகளையே பகிர்வது இல்லை. அதைப்பற்றிய புரிதல் இன்றி எதற்கு பிறர் தளத்தில் இருந்து பகிரவேண்டும் என்று நிறுத்தி விட்டேன். என்பதிவுகளில் குறை இருப்பின் தாரளமாக விமர்சிக்கலாம். சுட்டிக் காட்டலாம். தரக்குறைவாக திட்டி எழுதப்படும் விமர்சனங்களைத்தான் ஏன் இப்படி என்று கேட்டேன். இப்பொழுதும் என்னுடைய வழக்கமான பதிவுகள் குறைந்து போனதற்கு காரணம் பணிச்சுமை! சிந்திக்க போதுமான அவகாசம் இல்லாததால் அப்பதிவுகளை எழுதவில்லை! பத்தி எழுத்துக்கள் மீது ஓர் ஆர்வம் ஏற்பட்டமையால் நிசப்தம் தளம் படித்து வருவதால் அதே போல் எழுத ஓர் ஆர்வம் ஏற்பட்டு முயன்று பார்க்கிறேன் அவ்வளவே! நீங்கள் மோடி ஆதரவாளர் என்றால் மோடி நல்லது செய்கையில் நான் கண்டிப்பாக ஒரு நாள் பாராட்டுவேன். அப்போதும் இதே போல கருத்திடுங்கள்! கமெண்ட் மற்றும் ஹிட்ஸ்க்காக இப்போது எழுதுவது இல்லை! அப்படி எழுதுவதாக இருந்தால் பழையபடி சினிமா செய்திகளை பகிர்ந்து இருப்பேன். இப்போது என் திருப்திக்காகவே எழுதுகிறேன்! யாரையும் திருப்தி படுத்த அல்ல! புரிந்து கொள்ளுங்கள்! அல்லது என்னை காயப்படுத்துவதுதான் உங்கள் நோக்கம் என்றால் தொடர்ந்து காயப்படுத்துங்கள் ஆனால் ஒரு விண்ணப்பம் உங்கள் சொந்தப்பெயரில் கருத்திடுங்கள்! நான் ஒன்றும் கோபித்துக் கொள்ள மாட்டேன்! மாற்று கருத்து கொண்டவராக இருந்தாலும் தொடர்ந்து வாசிப்பதற்கும் கருத்திடுவதற்கும் மிக்க நன்றி நண்பரே!

   Delete
 8. அய்யோ இன்னா சார் இப்புடி பேஜார் ஆக்கீட்டே! நானும் நடுனிலையாளன் தான். மோடிய எங்கினாச்சும் பாராட்டுங்கன்னு சொல்லிகினுகீரனா என்னா ? திட்டு திட்டுன்னு தானே கூவிக்கிரேன். பாராட்டினா நான் மெயாலுமே காண்டாய்டுவேன். அப்புறம் மெர்சலாயிடுவேன். நான் உன்ற பதிவை ஒரு டூ மாசம் தான் லுக்கினு கீரேன்! எங் கூட ஒரு வரலாறு விரும்பி எயிதற பதிவுரு தோஸ்த் ஆய்கின பொறம் தான் இந்த பதிவு கஸ்மலாம் எல்லாம் கீதுன்னே தெர்ஞிதுன்னா பாரேன். நடிகைப் பதிவெல்லாம் அவர் சொல்லி சொல்லி என்னாண்ட சிரிச்சது தான்......... நான் இன்னாத்தைப் படிச்சுகினேன். ?/ அய்யோ நம்ம பார்கிற வேலைக்கு இது அப்பீட் ஆயிடுமேன்னு நினைக்கா ம தானே தைரியமா போட்டீங்க.? இது தான் குற்றச்சாட்டே அப்பு. தப்பை ஒத்துக்கிறவன் மனிதன் ஆனா தெரிந்தே தப்பை செஞ்சிக்கினு அது தப்பு தான் ஒத்துகிறேன்னு சொன்னவுடன் அந்த அசிங்கம் உடனே ஒடீட்டதா நினைக்கப்படாது. ஓத்துக்கினாலும் தப்பு தப்பு தான் போகவே போகது . உன்னைப் போன்றவர் அந்த மாதிரி எழுத்துக்களை படிப்பதே சமூகத்தின் அவலம்


  நீ பாட்டுக்கு எயிதுது நைனா..... நான் பாட்டுக்கும் பட்சிக்கிறேன். நானும் நடுநிலைதான் நல்லா பார்த்துங்கோங்க......கமெண்ட்ஸ் புடிக்க சொல்லிலைன்னா வுட்டுக்கோ !

  உங்களுக்கு கமெண்ட்ஸ் போடுற பெருமகனார் தம் தளங்களைப் பார்த்தேன் உங்க தளம் ஆயிரம் தபா மேலுப்பா......தனபால் சாரு பதிவு தவிர மீதிங்கோ எல்லாம் அய்யோ .... அய்யோ என்னைக் கொல்றானுங்களே. அதனால நீ எயிது

  செந்தில் வாமனன் ( என் சொந்தப் பேரு தானுங்க ) உங்களுக்கு புடிக்கலைன்னா பால் பாண்டின்னு படிங்க..

  ReplyDelete
  Replies
  1. நன்றி செந்தில் வாமனன்! நீங்கள் இரண்டுமாதமாய் என் பதிவுகளை வாசிப்பதற்கும் என்னுடைய குற்றங்களை வெளிப்படையாக விமரிசித்தமைக்கும் மிக்க நன்றி! உண்மையில் நீங்கள் சொன்ன மாதிரி என்னை மாதிரி ஆட்கள் அந்த மாதிரி பதிவுகளை வாசிப்பதும் பகிர்வதும் கூடாதுதான்! ஓர் ஆர்வக் கோளாறில் நடந்துவிட்ட அசிங்கம்தான் அது! இன்னும் ஒட்டிக்கொண்டு இருப்பதை நான் உணர்கிறேன்! வலையுகம் பற்றிய புரிதல் இல்லாமல் நடந்த தவறு அது. அதை திருத்திக்கொண்டு எனக்குத் தெரிந்ததை தற்போது எழுதி வருகிறேன். நீங்களும் நடுநிலையாளர் என்பதில் மகிழ்ச்சி! நீங்கள் பதிவுகளை படிப்பது கமெண்ட்ஸ் போடுவதில் எனக்கொன்றும் ஆட்சேபணை இல்லை! எல்லோருமே பாராட்டிக்கொண்டிருந்தால் குறைகள் கண்ணில் படாது. குறைகளை தயங்காமல் சுட்டுங்கள் திருத்திக் கொள்ள முயல்கிறேன். ப்ளாக்கர் ஐடியில் கருத்திடாமல் தனிப்பெயரில் கருத்திட்டதால்தான் சொந்தப்பெயரில் கருத்திடவும் என்று சொன்னேன். நீங்கள் சொன்ன குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்கிறேன் குற்றம் என்று உணர்ந்திருப்பதனால். நன்றி!

   Delete
 9. நீக்கு போக்கு! சரியாத் தான் சொல்லி இருக்கீங்க!

  ReplyDelete
 10. நீக்கு போக்கு இடம் பொருள் ஏவல் அறிந்து சரியாக உபயோகித்தால் சரியாகவே இருக்கும்.... அந்த எழுத்தாளர் சொன்னது போல

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...