உஷாரா இல்லேன்னா நிஜாரைக் கூட உருவிடுவாங்க!

உஷாரா இல்லேன்னா நிஜாரைக் கூட உருவிடுவாங்க!

  இந்த உலகமே ஒருவித நம்பிக்கையில் தான் இயங்கி கொண்டு இருக்கிறது. இரவு தூங்கப் போகும் போது நாளை எழுந்து இந்த வேலைகள் செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொள்கின்றோம்! எழுவோம் என்பதற்கு எத்தனை சதவீத சாத்தியக் கூறுகள் இருக்கின்றது? நிச்சயம் எதுவும் இல்லைதானே! ஆனாலும் நம்புகின்றோம்! நாளைய வேலைகளை பட்டியல் இடுகின்றோம்.
    பிள்ளைகள் படிப்பு, திருமணம், வீடு, என்று எத்தனையோ கனவுகள்! எல்லாமே ஒரு நம்பிக்கைதான். ஆனால் இந்த நம்பிக்கை எந்த அளவிற்கு இருக்கலாம்? என்பதில்தான் நம் வாழ்க்கையின் உயர்வு இருக்கிறது.
    எல்லாவற்றையும் எல்லோரையும் கண்ணை மூடிக்கொண்டு நம்பி விடலாமா? பஜாரில் உஷாரா இல்லேன்னா நிஜாரைக் கூட உருவிடுவாங்க! என்ற ஓர் சொலவடை உண்டு. அது உண்மைதான். உஷாராக விழிப்புணர்வுடன் சில சமயம் இருக்க வேண்டியது அவசியம் ஆகின்றது.
     எங்களது பூர்வீக சொத்து விற்பதில் எனது தந்தைக்கும் தாத்தாவிற்கும் ஓர் தகறாரு. இதுஒரு முப்பத்தைந்து வருடங்களுக்கு முந்தையது. நிலத்தை விற்க எனது தந்தை ஒத்துக் கொள்ளவில்லை! அந்த நிலத்திற்காக வழக்கு எல்லாம் போட்டு மீட்டவர் என் அப்பா. இல்லாவிட்டால் அவரது அத்தை அதை விற்று முழுங்கிவிட்டிருப்பார். அதை விற்க வேண்டும் என்று இப்போது அவரது அப்பா முடிவெடுத்துவிட்டார். இவர் மறுக்க ஏதேதோ மத்தியஸ்தம்! நான் வழக்கு போட்டேனே அந்த செலவு என்னாவது என்று கேட்க அதை கொடுத்து விடுகிறேன் என்று சொல்லி கையெழுத்து வாங்கிவிட்டார்கள். ஹைவேஸ் ஓரம் நிலம் அன்று ஐந்தரை ஏக்கர் அன்று வெறும் முப்பத்தி ஐந்தாயிரம் மட்டும்.
     கையெழுத்து போட்டு பின்னர் காசு கேட்க போய் அதான் கையெழுத்து போட்டுட்டியே இனி ஒரு பைசா கிடையாது! என்று சொல்லிவிட்டார் தாத்தா! வழக்காடிய செலவு பெரிய சுமையாக இவர் தலையில் விழ கடனாளி ஆகி பின்னர் மீண்டது பெரிய கதை! இப்போது அந்த நிலம் கோடிக்கணக்கில் விலை போகிறது! அன்று கொஞ்சம் ஏமாந்ததால் நாங்கள் கோடீஸ்வரர்கள் ஆக முடியாமல் போய்விட்டது! போனால் போகிறது என்று விட முடிகிறதா? அந்த பக்கம் செல்லும் போதெல்லாம் மனசு வலிக்கிறது!
    எங்கள் ஊரில் அண்ணன் தம்பிகள் மூவர்! முதல் நபரும்- கடை நபரும் ஓரளவுக்கு நல்ல நிலை! இடையில் இருப்பவர் சம்பாத்தியம் குறைவு. ஒரு பதினைந்து இருபது வருடங்கள் முன்பு மூவரின் பூர்விக நிலத்தில் தனது பங்கை மற்ற இருவருக்கும் விற்றுவிட்டார். அதில் பெண்ணின் திருமணத்தையும் நடத்திவிட்டார். அன்று அந்த நிலம் செண்ட் 100 ரூபாய் கூட போகாது. தம்பி பெண் திருமணத்திற்காக நிலத்தை விற்கிறான் என்று அண்ணன் இருபது செண்டிற்கு முப்பத்தைந்தாயிரம் கொடுத்து இருக்கிறார். ஒரு தாளில் எழுதி வாங்கி சாட்சிகள் முன்னிலையில் கையெழுத்திட்டு பணம் கொடுத்து இருக்கிறார். பதிவு ஏதும் செய்யவில்லை!
    ஒரு நாலைந்து வருடங்கள் முன்பு தம்பி மீண்டும் தலையை சொறிந்துகொண்டுவந்து மீண்டும் நின்றிருக்கிறார் பிள்ளைக்குத் திருமணம் என்று மீண்டும் ஒரு பத்தாயிரம் கொடுத்து இருக்கிறார். இவ்வளவும் வாங்கிக் கொண்ட அந்த தம்பி இப்போது வழக்கு தொடுத்துவிட்டார். என்னை ஏமாற்றி நிலத்தை வாங்கிவிட்டார்கள் அண்ணனும் கடைசி தம்பியும் என்று.
    இவர்கள் பாவம் அரண்டு போய்விட்டார்கள்! அவர் இப்போது முப்பது லட்சம் கேட்கிறார்  சந்தை விலை அப்படி! அப்புறம் மத்தியஸ்தம் வைத்தார்கள் தாளில் கையெழுத்து போட்ட சாட்சிகள் வந்து காறி உமிழ அவர் பக்கம் பேச வந்தவர்களும் தம்பி பக்கம் நியாயம் இல்லை என்று சொன்னார்கள். ஆனாலும் நிலத்தை பதிவு செய்ய வேண்டுமே!
   தம்பிக்கு ஒன்றரை லட்சம் கொடுப்பதாக முடிவு செய்து அதைக் கொடுத்து பத்திரபதிவு செலவுகள் வேறு செய்து இரண்டு லகரங்கள் காலியானது.
    தம்பிக்கு ஒன்றரை லட்சம் கிடைத்தாலும் பாசமான அண்ணனும் தம்பியும் இனி கிடைப்பார்களா?
    இதே உல்டாவாக இன்னொரு சம்பவமும் உண்டு! அவன் மகா குடிகாரன்! தன்னுடைய நிலத்தை அடமானம் வைத்து அவ்வப்போது நூறு , இருநூறு, ஐநூறு என்று ஒரு பதினெட்டாயிரம் கடன் வாங்கிவிட்டான். பத்திரம் கடன் கொடுத்தவரிடம் இருக்க அவர் நிலத்தை பேரம் செய்து விட்டார் ஒரு லட்சத்திற்கு! பதினெட்டாயிரம் எங்கே? ஒரு லட்சம் எங்கே? இவனையும் இவன் தாயையும் கையெழுத்து போட அழைத்தார் கடன் கொடுத்தவர் மறு பேச்சு பேசாமல் வந்து கையெழுத்து போட்டுக் கொடுத்தாராம் குடிகாரர்.
    அவர் நினைத்தால் கையெழுத்து போட மறுத்திருக்கலாம்! கந்துவட்டி என்று புகார் கொடுத்திருக்கலாம்! ஆனால் மனசாட்சியோடு நடந்து கொண்டார். அவரது நேர்மையை பாராட்டி  நிலம் விற்ற பணத்தில் ஒரு தொகையை அவருக்கு தந்தாராம் கடன் கொடுத்தவர். இன்று குடிகாரர் குடிப்பதை விட்டு கொத்தனார் தொழில் செய்து நல்ல நிலைமையில் இருக்கிறார். ஒரு குடிகாரனுக்கு இருக்கும் நேர்மை ரத்த உறவில் அண்ணன் தம்பிகளுக்கு இல்லாமல் போகிறது?
     நம்மை சுற்றி எதுவேண்டுமானாலும் நடக்கலாம்! நம்பிக்கை நம் மீது இருக்க வேண்டியதுதான்! அது அதீத நம்பிக்கை ஆகும்போதுதான் வாழ்க்கை கேள்விக் குறி ஆகிவிடுகிறது! உஷாரா இருங்க மக்களே!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. //நம்மை சுற்றி எதுவேண்டுமானாலும் நடக்கலாம்!//

    உண்மை. நாம் நல்லவராக வாழ்ந்தால் மட்டும் போதாது; வல்லவராகவும் இருத்தல் வேண்டும்.

    நல்ல அனுபவப் பதிவு சுரேஷ்.

    ReplyDelete
  2. சரி தான்... சமயோசிதம் இன்றைக்கு அதிகம் தேவை தான்...

    ReplyDelete
  3. எதிலும் முன்யோசனை அவசியமே நண்பரே...

    ReplyDelete
  4. உண்மைததான் நண்பரே
    உஷாராக இல்லாவிட்டால் நிஜாரை உருவிவிடுவ்ர்ர்கள்தான்
    நன்றி நண்பரே

    ReplyDelete
  5. மிகவும் எச்சரிக்கை தருகின்ற, பயனுள்ள பதிவு. நன்றி.

    ReplyDelete
  6. ஆம்! சரிதான். நாம் கொஞ்சம் முழித்துக் கொண்டுதான் இருக்க வேண்டும்..இல்லையென்றால் சைக்கிள் கேப்ல ஏமாத்த ஆள் இருக்காங்க...இதுதான் உலகம்.

    ReplyDelete
  7. யாரையும் நம்புவதற்கில்லை.....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!