Saturday, February 28, 2015

சாலி வாகனனும் விக்கிரமாதித்தனும்! பாப்பாமலர்!

 
முன்னொரு காலத்தில் புரந்தரபுரி என்றொரு நகரம் இருந்தது. அங்கே மிகப்பெரிய வசதி படைத்த செல்வந்தனான வியாபாரி ஒருவர் வசித்துவந்தார். அவருக்கு நான்கு மகன்கள். அவர் முதுமை எய்தி இறக்கும் தருவாயில் தன் மகன்களை அழைத்து,
                     “ மைந்தர்களே! என்னுடைய மரணத்திற்கு பின் உங்களுக்குள் சச்சரவு வரக்கூடாது. என்னுடைய சொத்துக்களை நீங்கள் பாகம் பிரித்துக் கொள்ள ஏதுவாக நான்கு பாகங்களாக பிரித்து என்னுடைய கட்டிலின் கீழே நான்கு அடி ஆழத்தில் நான்கு கால்களின் அடியில் புதைத்து வைத்து உள்ளேன். பெரியவனிலிருந்து சிறியவன் வரை முறைப்படி எடுத்துக் கொள்ளுங்கள்!” என்று கூறினார்.

     சிலநாட்களில் வியாபாரி இறந்துவிட்டார். அவர் சொல்லியபடி  கட்டிலின் அடியில் தோண்டியபோது நான்கு கால்களின் அடியிலும் நான்கு செப்புக் குடங்கள் இருந்தன. ஆனால் அவர்கள் எதிர்பார்த்தபடி அந்த குடங்களில் பொன்னோ நகையோ வைர வைடூரியங்களோ எதுவும் இல்லை. முதல் குடத்தில் மண்ணும் இரண்டாவதில் வைக்கோலும் மூன்றாவதில் எலும்புத்துண்டுகளும் நான்காவதில் கரியும் இருந்தன.

    இதை வைத்துக் கொண்டு எப்படி பாகம் பிரிப்பது என்று அவர்களுக்குப் புரியவில்லை. எனவே பஞ்சாயத்தார் வசம் சென்று பிரித்துத் தரும்படி கூறினர். அவர்களுக்கும் இதை எப்படி பாகம் பிரிப்பது என்று புரியவில்லை! எனவே விக்கிரமாதித்த மன்னனிடம் அனுப்பினர்.

    விக்கிரமாதித்தனுக்கும் அவனது சபையில் இருந்தோருக்கும் கூட இந்த வழக்கின் தீர்ப்பை சொல்ல முடியவில்லை! கரி, மண், வைக்கோல், எலும்புத்துண்டுகள் இதை எப்படி பாகம் பிரிப்பது என்று அறிஞர்களும் கைவிரித்துவிட நான்கு சகோதரர்களும் மிகவும் விசனத்துடன் ஊர் திரும்பினர்.
   
     அவர்கள் திரும்பி வரும் வழியில் பிரதிஷ்டானம் என்ற ஊரில் தங்கினார்கள். அங்கே ஏழை மண்பாண்டத்தொழிலாளி ஒருவனுடைய வீட்டில் சாலிவாகனன் என்பவன் இருந்தான். அவன் சிறந்த அறிவாளி. அவனிடம் தங்கள் வழக்கைக் கூறினர் நால்வரும்.

    அவன், உங்கள் தந்தை செலவந்தர் மட்டுமல்ல! அறிவாளியும் கூட, அதனால்தான் இவ்வாறு பிரித்து வைத்துவிட்டு போய் உள்ளார். தன்னுடைய சொத்துக்களை உங்கள் நால்வருக்கும் அவரவருக்கு தகுந்தவாறு பிரித்து வைத்துவிட்டுச் சென்றுள்ளார்.

       வயதில் மூத்தவன் மண் நிறைந்த குடத்தையும், இரண்டாமவன் வைக்கோல் இருந்த குடத்தையும், மூன்றாமன் எலும்புதுண்டுகள் இருந்த குடத்தையும், கடைசிநபர் கரித்துண்டுகள் நிறைந்த குடத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் பொருள் என்ன வென்றால், மண் என்பது நிலத்தையும், வைக்கோல் என்பது தானியத்தையும், எலும்புத்துண்டுகள் கால்நடைகளையும், கரி என்பது தங்கள் வெள்ளி வைரங்களையும் குறிக்கிறது.

       இதன்படி மூத்தமகன் நிலத்தையும் இரண்டாமவன் அவர் சேமித்த தானியங்களையும் மூன்றாமவன் கால்நடைகளையும் நான்காமவன் நகை ஆபரணங்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னான். சாலிவாகனனது தீர்ப்பால் மகிழ்ந்த நால்வரும்  அவனிடம் விடைபெற்று அவன் சொன்னபடி பங்கீடு செய்து கொண்டார்கள்.

    இந்த விஷயம் விக்கிரமாதித்த மன்னனை சென்றடைந்தது. அவன் அறிவாளியான சாலிவாகனனை சந்திக்க விரும்பி பிரதிஷ்டான நகரத்திற்கு சேவகன் ஒருவனை அனுப்பி சாலிவாகனனை அழைத்துவரச் சொன்னான். ஆனால் சாலிவாகனன் அந்த அழைப்பை நிராகரித்துவிட்டான். விக்கிரமாதித்தன் பேரரசனாக இருந்தாலும் அவனும் மனிதன் தானே! அவனை பார்க்க நான் போகமாட்டேன். அவனுக்கு காரியம் ஆகவேண்டுமானால் இங்கு வரட்டும்! நான் வரமாட்டேன்! என்று சொல்லிவிட்டான் சாலி வாகனன்.

     தன்னுடைய அழைப்பை சாலிவாகனன் நிராகரித்தமையால் கோபம் கொண்ட விக்கிரமாதித்தன் பிரதிஷ்டான நகரம் மீது படையெடுத்துச் சென்று கோட்டை வாயிலில் நின்று மீண்டும் சாலிவாகனனுக்கு எச்சரிக்கை அனுப்பினான். ஆனாலும் சாலிவாகனன் தானும் படையுடன் சந்திப்பதாக சொல்லி மண்ணினால் சேனைகளை பொம்மைகளாக உருவாக்கினான். தன்னுடைய அதிசய சக்தியால் அவைகளுக்கு உயிர் கொடுத்தான்.

    மண் பொம்மைகளாக இருந்த வீரர்கள், ரதம், யானை, குதிரை உயிர்பெற்று எழுந்து படையெடுத்தன. சாலிவாகனன் தலைமையில் வந்த படையை எதிர்த்து விக்கிரமாதித்தன் படைகள் மோதின. இருபுறத்து சேனைகளும் ஆக்ரோஷமாக மோதிக்கொண்டதில் பல்லாயிரக் கணக்கானோர் மடிந்தனர். இறுதியில் சாலிவாகனனது சேனைகள் நிர்மூலம் ஆயின. 

   சாலிவாகனன் தன் தந்தை ஆதி சேஷனை நினைத்து வழிபட்டு ஆயிரக்கணக்கான பாம்புகளை  வரவழைத்தான். அவை விக்கிரமாதித்தனின் படைகளை கடித்து  வைக்க அனைவரும் மாண்டு போயினர். விக்கிரமாதித்தன் மட்டும் உயிர் தப்பி தன்னுடைய நகரான உஜ்ஜைனி  திரும்பினான்.

    தன்னுடைய படை வீரர்களை உயிர்ப்பிக்க வாசுகியை குறித்து தவம் செய்தான். இடுப்பளவு தண்ணீரில் இறங்கி ஒரு வருஷம் தவம் இயற்றியதன் பலனாய் வாசுகி அவர் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் என்று வினவினார்.

     விக்கிரமனும் தன்னுடைய படை வீரர்கள் உயிர்பெற்றெழ வேண்டும் என்று கேட்டான். வாசுகி ஓர் அமுத கலசத்தைக் கொடுத்து இதனால் உன் வீரர்கள் உயிர் பிழைப்பார்கள் என்று சொன்னார். விக்கிரமன் அந்த கலசத்தை எடுத்துக் கொண்டு அவைக்குத் திரும்பினான்.

   அப்போது அவைக்கு வந்த ஒருவன் விக்கிரமாதித்தனை வாழ்த்தினான். விக்கிரமாதித்தன் அவனை எங்கிருந்து வருகிறாய்? என்ன விஷயம்? என்று வினவினான்.  அவன் தான் பிரதிஷ்டான நகரில் இருந்து வருவதாகவும் தாங்கள் நான் எதுகேட்டாலும் இல்லை என்று சொல்லாது கொடுப்பதாக வாக்களித்தால் கேட்பதாகவும் தெரிவித்தான்.

   “நீ எதைக் கேட்டாலும் அதை மறுக்காது தருகிறேன்! தயங்காமல் கேள்!” என்று வாக்களித்தான் விக்கிரமன்.

      “அரசே! வாசுகியிடம் இருந்து தாங்கள் பெற்ற அமுத கலசத்தை எனக்குத் தாருங்கள் !”என்று கேட்டான் வந்தவன்.

         அப்போதுதான் விக்கிரமனுக்கு சந்தேகம் எழுந்தது. நீ யாரால் அனுப்பப் பட்டு வருகிறாய்? என்று கேட்டான். நான் சாலிவாகனனால் அனுப்பப்பட்டு வருகிறேன்! என்றான் வந்தவன்.

   “ முதலில் எதைக்கேட்டாலும் தருவதாக வாக்களித்துவிட்டேன்! இப்போது அதை நிறைவேற்ற வேண்டியது என் கடமை! அதை நிறைவேற்றாவிட்டால் நான் வாக்குத் தவறியவன் ஆவேன்! அது எனக்கு அகௌரவம் ஆகும்! பாபத்தையும் தரும்!” என்று மனதிலே நினைத்தான் விக்கிரமன்.

  இதற்குள் விக்கிரமன் தயங்குவதை தவறாக எடுத்துக் கொண்ட வந்தவன். மன்னா! தாங்கள் நேர்மையானவர்! நேர்மைதவறி நடந்து கொள்ளாதீர்கள் சூரியன் மேற்கே உதித்தாலும் தாமரை மலர் பாறையின் உச்சியில் பூத்தாலும் கூட நேர்மையான மனிதர்கள் தங்கள் வார்த்தையில் உறுதியாக இருப்பார்கள்! ஒப்புக்கொண்டதை நிறைவேற்றுங்கள்!” என்று கேட்டான்.

  “ ஐயா! நீங்கள் உண்மையையே சொன்னீர்கள்! இந்த அமுதம் நிறைந்த குடத்தை எடுத்துச்செல்லுங்கள்! என்று சொல்லி குடத்தை வந்தவனிடம் தந்துவிட்டார் விக்கிரமாதித்தன்.

    வந்தது தன் எதிரியின் ஆள் என்று தெரிந்தும், தன்னுடைய படை வீரர்களை உயிர்ப்பிக்கும் அமுத கலசத்தையும்  எதிரிக்கு வாக்களித்த காரணத்தால் பரிசாக கொடுத்து அனுப்பிய விக்கிரமாதித்தனின் உயர்ந்த குணம் போற்றக் கூடியதன்றோ!

(விக்கிரமாதித்தன் கதை செவி வழியில் கேட்டதை தழுவி எழுதியது)


டிஸ்கி} சுட்டி கணேஷ் பதிவிற்கு போதிய வரவேற்பு இல்லை! ஓவியங்களும் யாரும் அனுப்பவில்லை! எனவே தற்காலிகமாக அந்தத் தொடரை நிறுத்தி வைத்துவிட்டு வழக்கம் போல கதைகள் எழுத ஆரம்பித்துவிட்டேன்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Friday, February 27, 2015

மசால் தோசை 38 ரூபாய்! டேஸ்ட் ரொம்ப சூப்பர்!


   எழுத்தாளர் வா. மணிகண்டன் அவர்களின் எழுத்துக்களை விகடன் மற்றும் வெகுஜன ஏடுகளில் படித்து இருந்தாலும்  இணையத்தில் அவர் எழுதுவது எனக்கு தெரியாமல் இருந்தது. சென்ற வருடத்தில் மணிமாறன் அவர்கள் வலைச்சர ஆசிரியராக இருந்த போது நிசப்தம் தளம் பற்றி சொல்லியிருந்தார். அதன் பின்னர் அந்த தளத்தினை தொடர ஆரம்பித்தேன்.

      அதற்கு முன்னரே  அவரது சிறுகதை தொகுப்பான லிண்ட்ஸே டேவன் போர்ட் w/o மாரியப்பன் பற்றி வலையில் பரவலாக பேச்சு இருந்தது. சென்ற வருட புத்தகக் கண்காட்சியில் (2013) இந்த நூல் வாங்கலாம் என்று நினைத்தும் அப்போதைய பற்றாக்குறை நிதியினால் வாங்கவில்லை.
    
    வா. மணிகண்டன் கதைகள் கவிதைகள் படித்திருந்த எனக்கு நிசப்தம் தளத்தில் எழுதும் பத்தி எழுத்துக்கள் மிக சுவாரஸ்யமாக இருந்தன. நானும் அதே போல சுவாரஸ்யமாக எழுத வேண்டும் என்ற உணர்வையும் தந்தன. நிசப்தத்தில் இந்த புத்தக வெளியீடு பற்றி சொல்லி இருந்த போதே புத்தகம் வாங்க நினைத்திருந்தேன். புத்தக சந்தையில் வாங்கியும் விட்டேன். முதலில் இது சிறுகதைத் தொகுப்பாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் வாங்கி படிக்க ஆரம்பித்தபின் தான் தெரிந்தது. நிசப்தத்தில் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு என்பது. அதனால் என்ன? சிறுகதைகளை விட சுவாரஸ்யமாக சென்றது நூல்.

      படித்து முடித்ததே தெரியாமல் ஒரு ஒன்றரை மணி நேர வாசிப்பில் 128 பக்கங்களை வாசித்துவிட்டேன். ஒவ்வொரு கட்டுரையும் நம்மை அந்த சம்பவம் நடந்த இடத்திற்கே அழைத்துச்சென்று காட்டுகிறது. அன்றாட வாழ்க்கையில் காணும் சாமான்யர்களையும் அலுவலக  சூழல்களையும் அவரது இளமைக்கால நினைவுகளையும் அவர் சுவாரஸ்யமாக பகிர்வது அழகு.

       நட்சத்திரங்கள் சரியாத வானம் என்ற முதல் கட்டுரையில் விபத்தில்  அடிபட்ட ஒரு இஸ்லாமிய பெண்ணுக்கு வடகிழக்கு மாநிலப் பெண் எந்த பிரதிபலனும் இல்லாமல் உதவி மருத்துவமனையில் பசி தாகம் கூட இல்லாமல் கண்முழித்து காத்திருப்பதை விவரிக்கையில் மனிதம் இன்னும் செத்துவிடவில்லை என்று உணர முடிகிறது.

 சல்மான்கான் என்ற குழந்தை தொழிலாளி அவனது கனவுகள் திடீரென அவன் காணாமல் போவது. அவனது தந்தை வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்வதால் அவன் அம்மா தூக்கு மாட்டிக் கொண்டது என்று  சொல்லி மனதை கனக்க வைக்கிறார். தினமும் பாஸ்ட் புட் கடையில் எத்தனையோ சிறுவர்களை பார்ப்போம் அவர்களின் வாழ்க்கையின் பின்புலம்  அறிய இந்த ஒரு கட்டுரையே போதுமானது.

 மரங்களை காதலிக்கும் ஒரு மனிதர், சின்னவயதில் பள்ளியில் உதைபட்டு நடத்திய நாடகம் பஸ்ஸில் கூட வரும் பயணி மகள் தூக்கில் தொங்கி விட்டாள் என்று சொன்னது, தாத்தாவின் ஈரமனசு, குழந்தை கடத்தல், ஹீரோவாக தோன்றியவர் மளிகைக் கடையில் பொட்டலம் கட்டுவது என ஒவ்வொரு கட்டுரையும் ஒரு பரிமாணத்தில்  நமக்கு ஏதோ ஒரு செய்தியை சொல்கையில் நம் பக்கத்து வீட்டில் நடைபெற்றதை போன்றே உணர்கின்றோம்.

  பூனைப்பூட்டான் செடியினால் வாத்தியாருக்கு தண்டணை கொடுத்தது, சாலையில் அடிப்பட்டு விழுந்த மூதாட்டியின் பரிதாபம், கல் ஒட்ட வந்த முஸ்லீம்கள் அவர்களின் கஷ்டங்கள் போலீஸ்காரர்களின் இரும்பு குணம், நிமான்ஸ் மருத்துவமனையில் ஒரு குழந்தையின் அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் திணறியது, பாப்பாத்திக் கிழவி, வெங்கிடு அண்ணன் எல்லா மனிதர்களும் மனதில் நிற்கிறார்கள்.

  அனுமந்தா என்ற மனிதரின் வித்தியாசமான குண நலன்கள். கட்டிட வேலை முடியும் தருவாயில் அவருக்கு மூவாயிரம் கொடுக்க அதை அவர் கடவுள் படம் வாங்கி கொடுத்து குடித்து சாவான் என்று எல்லோரும் சொன்னதை பொய்யாக்க அவருக்கு இவர் சாப்பாடு போட அவர் குவார்ட்டர் அடிக்க நூறு ரூபாய் கேட்க இவர் பையில் இருந்த சில்லறைகளை அப்படியே கொடுக்க அவர் உங்க பையனுக்கு மசால் தோசை வாங்கிக் கொடுங்க சார் என்று காசை திருப்பித்தருகிறார் அது முப்பத்தெட்டு ரூபாய் இந்த  கட்டுரை அப்படியே ஒரு கவிதையாக கண்முன்னே நிற்கிறது.

    இப்படி ஒவ்வொரு கட்டுரை பற்றியும் சொல்லிக் கொண்டே போகலாம்.  கந்தப்ப ஆசாரியின் பேயோட்டு  பற்றிய கட்டுரை மிகவும் என்னை கவர்ந்தது. விழுந்து விழுந்து சிரித்தேன் புது மேனேஜரின் கண்டிப்பும் அவர் மேல் இவர்களின் வருத்தமும் திடீரென அவர் வேலையை விட்டு விலகுவதாக சொன்னதும் அதற்கு அவர் சொன்ன காரணமும் அந்த மேனேஜர் இதுவரை எதிரியாக பார்த்தவர்களுக்கு பாசமுள்ள ஓர் அப்பாவாக தெரிவது மனதை பிழிந்த ஓர் உண்மை சம்பவம்.

      இந்த புத்தகம் வாங்கி வந்திருக்கிறேன் என்று நண்பர்களிடம் சொன்னபோது நண்பர் சொன்னார். செமையா எழுதறாண்டா! என்று! அது உண்மை! வா. மணிகண்டன் எழுத்துக்கள் நம்மை கட்டிப்போடுவதோடு மட்டும் அல்லாமல் கொஞ்சம் மனிதத் தன்மைக்கு  மாற்றி அவசர உலகில் இயந்திரர்களாக இருக்கும் நம்மை மனிதர்களாக மாற்றுகிறது என்றால் மிகையில்லை.

    
    நூல் ஆரம்பிக்கையில் நன்றி என்று சொல்லி ஒரு 20 நபர்களின் பெயர் சொல்லப்பட்டுள்ளது நிசப்தம் வாசகர்கள் என்று சொல்லி இருக்கிறார். அதில் சுரேஷ் என்ற பெயரும் இருக்கிறது. அது நான் தானா என்று தெரியவில்லை!  முன்னுரை, அணிந்துரை எதுவும் இல்லை நல்ல நூலூக்கு அது தேவையும் இல்லை! அந்த சுரேஷ் நானாக இருப்பினும் இல்லாவிட்டாலும் எனக்கு ஓர் மகிழ்ச்சியை தந்தது. நூலை வாசித்து முடிக்கையில் மன நிறைவைத் தந்தது. 


   இந்த நூல் விற்றுக் கிடைக்கும் தொகை நிசப்தம் அறக்கட்டளை சார்பில் ஏழை எளிய மக்களுக்கு பயன்பட உள்ளதால் தாராளமாக வாங்கி ஆதரிக்கலாம். புத்தகமும் சுவாரஸ்யமாக இருப்பதால் வீண் செலவு செய்தோம் என்ற எண்ணமும் எழாது.


நூல்விலை 110 ரூபாய். பக்கங்கள் 128

கிடைக்குமிடம் : டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே நகர், சென்னை 78

வெளியிட்டோர்: யாவரும் பப்ளிசர்ஸ்

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Thursday, February 26, 2015

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 31

   கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 31

 1. மாப்பிள்ளை எப்பவும் முறுக்கோட இருப்பாருன்னு சொன்னீங்களே ரொம்ப கோபக்காரரா?
நீங்க வேற எப்பவும் முறுக்கை சாப்பிட்டுகிட்டு இருப்பார்னு சொன்னேன்!

 1. என் மனைவிக்கு கோவம் வந்துருச்சுன்னா வீட்டுல இருக்கிற எல்லா பொருளையும் தூக்கி வெளியே எறிஞ்சிருவா!
பரவாயில்லையே என் மனைவிக்கு கோவம் வந்துச்சுன்னா என்னையே தூக்கி வெளியே எறிஞ்சிருவா!

 1. சீட்டு கம்பெனி நடத்தறவனை காதலிச்சியே என்ன ஆச்சுடி?
சீட்ட கலைக்கிறது மாதிரி என்னையும் கலைக்க வச்சு சீட் பண்ணிட்டு போயிட்டாண்டி!

 1. எதிரியிடம் மன்னரின் பேச்சு எடுபடவில்லையாமே!
எதிரியை பார்த்ததும் மன்னருக்கு மூச்சே வரவில்லை! பேச்சு எப்படி எடுபடும்?

 1. தலைவர் இன்னும் பழசை மறக்கலைன்னு எப்படி சொல்றே?
உண்டியல் குலுக்கி முடிச்சதும் வசூல்ல இருந்து ஒரு அஞ்சு ரூபா காயினை எடுத்து பாக்கெட்ல போட்டுக்கிறாரே!

 1. அந்த டாக்டர் போலின்னு எப்படி சொல்றே?
எனக்கு பைபாஸ் சர்ஜரி பண்ணியிருக்குன்னு சொன்னா எந்த ஊரு பைபாஸ்லன்னு கேக்கறாரே!

 1. இன்று அரசவையில் ஒரே அரட்டையாக இருந்தது!
அப்புறம்?
அப்புறம் என்ன? அரசரின் குறட்டை சத்தம் அரட்டையைக் கலைத்துவிட்டது!

 1. இவர்தான் என்னோட பாய் ஃப்ரெண்ட்!
ரீச்சார்ஜ் பண்ண ஓர் இளிச்ச வாயன் கிடைச்சிருக்கான்னு போன்ல சொன்னியே அவன் தானா இது!

 1. சமைக்கிறப்ப பேசினா என் மனைவிக்கு பிடிக்காது!
 நல்ல விஷயமாச்சே!
  என்ன நல்ல விஷயம்? பேச்சு சுவாரஸ்யத்துல சமையல்ல உப்பை ஒரு பிடி அதிகமா போட்டுருவேன்ற பயம்தான்!

 1. தலைவர் தேர்தல்ல ஜெயிச்சும் டெபாசிட் காலியாயிருச்சா எப்படி சொல்ற?
பேங்க்ல அவர் போட்டிருந்த டெபாசிட் காலியாயிருச்சுன்னு சொல்ல வந்தேன்!

 1. பட்டப்பகலில் பூட்டியிருந்த வீட்டை உடைச்சிருக்காயே என்ன சொல்கிறாய்?
 இருட்டுன்னா எனக்கு பயம் எசமான்! அதான் பகல்ல உடைக்க வேண்டியதாயிருச்சு!

 1. காலம் பூரா உன் மடியிலேயே படுத்துக் கிடக்கலாம்னு தோணுது டார்லிங்!
ஆனா நான் நாளைக்கு குமாருக்கு டேட் கொடுத்திருக்கேனே!

 1. கல்யாணம் நிச்சயம் பண்ண உடனேயே போய் புக் பண்ணிட்டு வந்துட்டோம்!
மண்டபத்தையா?
 ஸ்கூல் அட்மிசனுக்கு ஒரு சீட்டைத்தான்!

 1. கல்யாண மண்டபத்துல பாரம்பரியத்தை பின்பற்ற மாட்டேங்கிறாங்கன்னு ஏன் வருத்தப்படறே?
    எல்லோரும் செருப்புக் காலோடேயே அலைஞ்சிக்கிட்டிருந்தா எனக்கு எப்படி புதுச்செருப்பு கிடைக்கும்!

 1. அந்த டாக்டர்கிட்ட அட்மிசன் வாங்கிறது ரொம்ப கஷ்டம்!
    அடடே!
    அட்மிஷன் கிடைச்சுதுன்னா பேஷண்ட் பாடு ரொம்ப கஷ்டம்!

 1. ஒரு கண்ணோடு என்னால் ஆட்சி செய்ய முடியாது அமைச்சரே!
    ஏன் மன்னா உங்களுக்குத்தான் இரண்டு கண்ணும் நன்றாக இருக்கிறதே!
    நன்றாகத்தான் இருக்கிறது! ஆனால் எதிரிமீது ஒரு கண்ணை வைத்திருங்கள் என்று நீங்கள்தானே சொன்னீர்கள்!

 1. தலைவர் எதற்கு திடீரென அன் டிராயர் வேண்டும் என்று கேட்கிறார்?
    அன் டிராயர் இல்லே ஆண்ட்ராய்டு போனைத்தான் அவர் அப்படிச் சொல்கிறார்!


 1. டிராபிக் கான்ஸ்டபிளை கல்யாணம் பண்ணிக்கிட்டியே எப்படி போகுது வாழ்க்கை!
சிக்னல் விழறதுக்குள்ளே பொழுது விடிஞ்சு போகுது!

 1. என் மனைவிக்கு தங்க நகைன்னாலே அலர்ஜி!
     பரவாயில்லையே இந்த காலத்திலேயும் இப்படி ஒரு பொண்ணா!
   நீ வேற பிளாட்டினமா வாங்கி தரச்சொல்லி அடம்பிடிக்கிறா!

 1. அரசியல்வாதியோட பையனை கிளாஸைவிட்டு வெளியே அனுப்பிச்சது தப்பா போயிருச்சு!
    ஏன் என்ன பண்றான்?
  மீடியாவை கூட்டி வைச்சு பிரஸ் மீட் கொடுக்கிறான்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!Wednesday, February 25, 2015

நீங்க நீக்கு போக்கோட நடந்துக்கறீங்களா?

நீங்க நீக்கு போக்கோட நடந்துக்கறீங்களா?

  வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் கொஞ்சம் நெளிவு சுளிவு தேவை என்று பெரியோர்கள் சொல்வார்கள். அப்படியே முறுக்கிக்கிட்டு நில்லாம கொஞ்சம் வளைஞ்சு நெளிஞ்சு கொடுத்தாத்தாம்பா வாழ்க்கை என்பார்கள்.

     வீடாகட்டும் அலுவலகம் ஆகட்டும் எல்லாவற்றிலும் சட்டத்திட்டங்களை அப்படியே பின்பற்றி அப்படியே நடந்துகொள்ளவேண்டும் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் வாழ்க்கை நரகம்தான். கொஞ்சம் விட்டுக் கொடுத்துப்போவதில் தான் இன்பம் இருக்கிறது.

   இதற்காக லஞ்சத்தை ஆதரிக்கிறேன்! என்று பொருள் அல்ல! சிவாஜி படத்தில் ரஜினி எல்லாவற்றையும் சட்டப்படி ஒழுங்காக வைத்துக் கொண்டு கல்லூரி ஆரம்பிக்க முயற்சித்தால் நடக்காது. அப்புறம் கொடுக்க வேண்டியவர்களுக்குக் கொடுத்து வேலையை முடிப்பார். இப்படி ஆகிவிட்டது நாட்டின் நிலை.

     ஒரு கதை ஒன்றை நான் ப்ளஸ் ஒன் படிக்கையில் படித்தேன். ஆங்கிலக் கதை. ஏ.ஜி. கார்டினர் எழுதியது. ஒரு முன்னிரவு நேரம் குளிர் காதை அடைக்கும் சமயத்தில் அந்த ஊரின் கடைசி பேருந்து கிளம்பும். இரண்டு மாடிகள் கொண்ட பேருந்து அது. கண்டக்டர் அனைவருக்கும் டிக்கெட் கொடுத்து வரும்போது கடைசி இருக்கையில் ஒரு பெண்மணி தனது வளர்ப்பு நாயுடன் அமர்ந்திருப்பார்.
 
      கண்டக்டர் வளர்ப்பு பிராணிகளை இந்த அடுக்கில் ஏற்றிவரக்கூடாது மேல் அடுக்குக்கு செல்லுங்கள் என்பார். அந்த பெண்மணி பனிக்காற்று வீசுகிறது. மேலும் தனக்கு உடல்நலம் சரியில்லை! இந்த முறை நான் இங்கேயே அமர்ந்து கொள்கிறேன் என்று கேட்பார். கண்டக்டர் மறுப்பார். விசிலை ஊதி பெண்மணியை கீழே இறங்கச் சொல்வார். பெண்மணிக்கும் அவருக்கும் விவாதம் நடக்கும். நேரம் கடக்க பயணிகள் பொறுமை இழப்பர். அந்த பெண்மணி மேல் அடுக்குக்கு செல்ல சம்மதித்து மேலே சென்றதும் பஸ் புறப்படும்.
 
     அப்புறம் கொஞ்ச நேரம் கழித்து அந்த பெண்மணி மீண்டும் கீழே வந்துவிடுவார். இதை கண்டக்டர் கவனித்து அந்த பெண்ணை மேலே செல்லும்படி வற்புறுத்துவார். அப்பெண்மணியும் கெஞ்சி கேட்டுக் கொள்வார். பனிக்காற்று வீசுவதால் மேலே அமரமுடியவில்லை! இந்த முறை சற்று பொறுத்துக் கொள்ளுங்கள் என்பார். கண்டக்டர் விடாப்பிடியாக மீண்டும் பஸ்ஸை நிறுத்தி விடுவார். மீண்டும் விவாதம் தொடங்கும். நேரம் கடந்துகொண்டிருக்க பயணிகள் ஆளுக்கொன்று சொல்ல  அந்த பெண்மணி மீண்டும் மேலே சென்றுவிடுவார். பேருந்து புறப்படும்.

   இறுதியில் பஸ் கடைசி நிறுத்தத்தை அடையும் போது அரைமணிநேரம் தாமதமாகி இருக்கும். பஸ்ஸில் நடத்துனர் ஓட்டுனர், எழுத்தாளர் மட்டுமே இருப்பார்கள். நடத்துனர் நான் கடமை தவறவில்லை என்பது போல எழுத்தாளரை பார்ப்பார். அப்போது எழுத்தாளர் சொல்வார். கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று சிலவிதிகள் இருக்கிறது. உதாரணமாக சாலையில் இடப்புறம் செல்ல வேண்டும் என்றால் அப்படித்தான் செல்ல வேண்டும். செல்லாவிடில் விபத்து ஏற்படும். சிலவிதிகளுக்கு விதிவிலக்குகள் உண்டு. அந்த விதிவிலக்குகளுக்கு உதாரணம் இன்று அந்த பெண்மணியைப் போல் உடல் நலம் இல்லாதவர்கள் கீழடுக்கில் பயணிக்க அனுமதித்து இருக்கலாம்.இதனால் யாருக்கும் நஷ்டம் ஒன்றும் ஏற்படப் போவது இல்லை! குறிப்பாக பயணிகள் யாரும் ஆட்சேபிக்கவில்லை!
   
     நீங்கள் விடாப்பிடியாக விதியை கடைபிடிப்பதாக போராடியதால் அரைமணி நேரத்திற்கும் மேலாக தாமதம் அனைவருக்கும் ஏற்பட்டது. அந்த பெண்மணிக்கும் உடல் சுகவீனம் அதிகமானது. இது போன்று விதிகளுக்கு விலக்கு அளித்து மனிதாபமானத்துடன் நடந்துகொண்டால் உங்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் நல்லது என்பார். நடத்துனரும் புரிந்துகொள்வார்.

    இதைத்தான் நீக்கு போக்கு! என்று சொல்வது. கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றால் கடைபிடித்து ஆகவேண்டும். சிலவற்றிற்கு விதிவிலக்குகள் இருக்கலாம். எங்கள் ஊரில் ஒரு நண்பர் டூ வீலரில் சென்றவர் மீது மந்திரியின் கார் மோதிவிட்டது. நண்பர்தான் போதையில் விட்டுவிட்டார் என்கிறார்கள். பலத்த அடி கால்களில் முறிவு. கூட்டம் கூடிவிட்டது. அந்த மந்திரி சமரம் பேசுகிறார். சிகிச்சைக்கான செலவு முழுவதையும் ஏற்றுக் கொள்கிறேன். பத்திரிக்கை டீவிக்களில் இதை சொல்லாதீர்கள் என்கிறார். அதைப்போலவே மிகப்பெரிய மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையும் அளிக்கிறார்.

    இதற்குள் ஊடகங்களுக்கு செய்தியை யாரோ கசியவிட பத்திரிக்கை டீவிக்களில் மந்திரி கார் மோதி இளைஞர் படுகாயம் என்று வந்துவிட்டது.  பல லட்சங்கள் சிகிச்சைக்கு செலவாகும் அதை அவர் ஏற்றுக் கொள்கிறேன் ஊடகங்களுக்கு நியுஸ் வேண்டாம் என்றார். இந்த இளைஞரின் குடும்பமும் பெரிய வசதி இல்லை நடுத்தரக் குடும்பம்தான். இவ்வளவு செலவு செய்ய முடியாது கடன் பட வேண்டிய நிலை.

     இப்போது மந்திரியை எதிர்க்கிறேன் என்று ஊடகங்களுக்கு செய்தி அனுப்பியதால் மந்திரி கோபத்துடன் உள்ளாராம். நான் சொன்னதை கேட்கவில்லையே? நான் ஏன் உதவ வேண்டும் என்றால் இவர்கள் என்ன செய்வார்கள் தர்ம சங்கடத்துடன் உள்ளார்கள்.

   இளைஞரின் நண்பர்கள் நீக்கு போக்கு இல்லாமல் நடந்து கொண்டமையால் இளைஞருக்கு கிடைக்க விருந்த நன்மை கூட தீமையாகி போகிறது பாருங்கள்.

  அதனால்தான் சொல்கிறேன் சில விஷயங்களில் நீக்கு போக்கு தேவை!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கபடுத்துங்கள்! நன்றி!


Tuesday, February 24, 2015

டிப்ஸ்!

டிப்ஸ்!


நகரின் அந்த பெரிய உணவு விடுதியின் முன் டாடா இன்னோவா கார் வந்து நின்றது. செக்யூரிட்டி வந்து பார்க் செய்ய உதவ பார்க் செய்துவிட்டு உணவு விடுதியினுள் நண்பருடன் நுழைந்தார் வேதநாயகம்.

   வேதநாயகம் வளர்ந்து வரும் தொழிலதிபர். தூய்மையான வெள்ளை வேட்டிச்சட்டை மடிப்பு கலையாமல் அணிந்து நெற்றியில் சந்தனப்பொட்டு கமகமக்கும்  செண்ட் மணத்துடன் உள்ளே நுழையும் போதே உணவு விடுதியின் சிப்பந்திகள் முகம் மலர வரவேற்று இருக்கையில் அமர்த்தினர்.

      சூப்பர்வைசர்ஓடிவந்து,ஓர்  சர்வரை அழைத்து ஐயாவுக்கு என்ன வேணுமோ கேட்டு கிட்ட இருந்து கவனி! என்று சொல்லிவிட்டு வணக்கம் வைத்துவிட்டு நகர வேதநாயகம் வேர்வையை துடைத்தபடி மேலே அண்ணாந்தார். உடனே அங்கிருந்த மின்விசிறி சுழலவிடப்பட்டது.
    வேதநாயகம் ஒவ்வொன்றாய் கேட்க ஓடிவந்து பறிமாறினார்  சர்வர். கூடவே நின்று கவனித்துக்கொண்டார். நண்பரும் தேவைப்பட்டதைக் கேட்டுச் சாப்பிட்டார்.
      சர்வர் பளபளக்கும் அட்டையினுள்  பில்லினைகொண்டுவந்து வேதநாயகம் முன் வைத்து காத்திருந்தான். வேதநாயகம் பளபளக்கும் ஆயிரம் ரூபாய்த் தாளை உள்ளே வைத்து அனுப்ப மீதம் சில்லறை வந்தது. சில்லறையில் கணிசமான தொகை  டிப்ஸ் கிடைக்கும் என்று சில்லறையாக மாற்றியே எடுத்து வந்து வைத்தார்  சர்வர்.

வேதநாயகம் மொத்த சில்லறையையும் எடுத்துக் கொண்டார். டிப்ஸ் எதுவும் வைக்கவில்லை! சர்வரின் முகம் வாடிப்போனது. தலையை சொறிந்து பார்த்தார். வேதநாயகம் மசியவில்லை!

    அருகில் கிளீனிங் செய்து கொண்டு வந்து அவரது டேபிளைத் துடைத்துக் கொண்டிருந்த கிளீனரை அழைத்தார். இந்தாப்பா! என்று புத்தம் புது ஐம்பது ரூபாய் தாளை அவன் கையில் திணித்தார்.


    அவனுக்கு ஆனந்த அதிர்ச்சி! கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை! ஐயா! நீங்க நல்லா இருக்கணும்! என்று கண்ணீர்மல்க வார்த்தைகளை உதிக்க புன்சிரிப்புடன் அகன்றார் வேதநாயகம்.

    வெளியே வந்த நண்பர் கேட்டார். ஏம்பா வேதநாயகம்! அந்த சர்வர் தலையை சொரிஞ்சிக்கிட்டு நின்னப்ப நீ ஒண்ணுமே கண்டுக்கவே இல்லை! நான் கூட நீ இப்படி கஞ்சத்தனமா இருக்கியே ஒரு பத்து ரூபா கொடுத்தா என்னன்னு யோசிச்சேன்! ஆனா கிளீனருக்கு ஐம்பது ரூபா தூக்கி கொடுக்கிறே? என்றார்

   வேதநாயகம் அமர்த்தலாக புன்னகைத்தார். இந்த சர்வரை பார்த்தியா! உள்ளே நுழைஞ்சதுல இருந்து ஒரு எதிர்பார்ப்போடு என்னையே சுத்தி சுத்தி விசாரிச்சு பரிமாறினான். ஆளு வசதியானவன் நல்லா டிப்ஸ் கிடைக்கும்னு நினைச்சுத்தான் அவன் அப்படி சுத்தி வந்தான்.  பக்கத்து பெஞ்ச் ஆளுங்களை அந்த சர்வர்கள் கண்டுக்கவே இல்லை! நாலு குரல் கொடுத்தபிறகுதான் பதில் கொடுத்தார்கள். அவர்களுக்கு சம்பளம் கொடுக்கிறாங்க! போதாக் குறைக்கு இப்படி டிப்ஸும் கொஞ்சம் தேத்திடுவாங்க! ஆனா இந்த மாதிரி கிளினருங்க மத்தவங்க சாப்பிட்ட எச்சிலை எடுத்து சுத்தம் பண்றாங்க! நாம சாப்பிட இடம் சுத்தம் பண்ணிக் கொடுக்கிறாங்க! இவங்களுக்கு சம்பளமும் கம்மி! டிப்சும் யாரும் கொடுக்க மாட்டாங்க! எந்த எதிர்பார்ப்பும் இல்லாம எல்லாரையும் ஒரே மாதிரி நினைச்சு எல்லா டேபிளையும் சுத்தம் பண்றாங்க! அவங்களுக்குத்தான் நியாயமா நாம உதவணும்னு எனக்குத் தோணிச்சு!
          அதனால நான் எங்க சாப்பிட்டாலும் கிளினருக்குத்தான் டிப்ஸ் கொடுப்பேன்! இப்படி உதவறது எனக்கு மனசு திருப்தி தருது. வாய்ப்பே இல்லாதவங்களுக்கு உதவறதனாலே எனக்கு ஒரு மகிழ்ச்சி! அவங்களுக்கும் ஒரு சந்தோஷம்! நான் செய்யறது சரிதானே! என்றார்.

   ஆமாம்பா! நானும் இனிமே உன்னை பின்பற்றலாம்னு இருக்கேன்! என்றார் அவர் நண்பர்.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


புகைப்பட ஹைக்கூ 80

புகைப்பட ஹைக்கூ 80

போர் ஆனது
கார்!
வைக்கோல் சுமை!

மாடுமகிழ
பொதிசுமந்தது
மகிழுந்து!

விதிகள் மாறியதால்
விதிமீறல்
பொதிசுமந்த கார்!

சுகமான சுமை!
சொகுசான பயணம்!
வைக்கோல்!

ஜீவனத்திற்கு
பயணமானது தீவனம்!
காரில் வைக்கோல்!

சொகுசுப்பயணம்
சுமைக்கூலி அதிகம்!
வைக்கோல்!

புடவையணிந்த
வெளிநாட்டு மங்கை!
காரில் வைக்கோல்!

இடம் மாறி ஏறியது
தடம் மாறவில்லை!
வைக்கோல்!

ஆடுகால்பணம்!
சுமைக்கூலி முக்கால்பணம்!
வைக்கோல்!

கால்நடைகள் சுமந்தது
கார் சுமக்கிறது
காலமாற்றம்!

விளைச்சல் வீழ்ந்ததும்
உயரத்தில் அமர்ந்தது
வைக்கோல்!

முடிசூடிய கார்
மொய் கேட்பாரோ
போலீஸ்கார்?

வாழ்க்கைப்போராட்டம்
பொதிசுமந்தது
கார்!

சுமைகளை இறக்க
சுமை சுமந்தது
கார்!

உருமாறவில்லை!
பொருள்மாறியது!
சுமையுந்தான சீருந்து!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Monday, February 23, 2015

காதல் போயின் காதல்! என்னுடைய பார்வையில்!

காதல் போயின் காதல்! என்னுடைய பார்வையில்!


கோவை ஆவி தயாரித்து ஷைனிங் ஸ்டார் சீனுவின் நடிப்பில் உருவாகி வெளியாகியுள்ள காதல் போயின் காதல் குறும்படத்தைப் பற்றி முகநூலிலும் வலைப்பூக்களிலும் படப்பிடிப்பு துவக்க நாளில் இருந்தே பரபரப்பாக பல நண்பர்கள் பதிவுகள் செய்து பேசிக்கொண்டாலும் நான் அமைதியாகவே இருந்தேன்.

     பொதுவாகவே எனக்கு சினிமா அறிவும் ரசனையும் கொஞ்சம் குறைவுதான். கொஞ்சம் என்ன நிறைய என்றுகூடச் சொல்லலாம். அதனால் எந்த படமாக இருந்தாலும் முதல் ஆளாய் முட்டி மோதிப் பார்ப்பதில் எல்லாம் விருப்பம் இல்லாதவன். பதிவுலக நண்பர்கள் நடித்த இந்த படத்தைக் கூட இவ்வளவு சீக்கிரம் பார்ப்பேன் என்று நான் நினைக்கவில்லை!

    காலையில் சீக்கிரமே எழுந்துவிட்டேன். பல் துலக்கி காபியும் அருந்தியாகிவிட்டது. என்ன செய்யலாம்? மொபைலை எடுத்து நெட்டை ஆன் செய்தேன். முந்தின இரவில் போட்ட பதிவுக்கு என்ன பின்னூட்டங்கள் வந்திருக்கிறது என்று ஜிமெயில் போய் பார்ப்பது என் வழக்கம். அதன்படி ஜிமெயில் சென்று பார்த்தேன் என் கிரிக்கெட் பதிவிற்கு மொத்தம் மூன்றே கமெண்ட் மட்டுமே வந்திருந்தது எனக்கு ஏமாற்றம் தந்தது. ச்சே! இந்த பதிவில் எங்கோ குறை இருக்கிறது! என்று ஏமாற்றத்துடன் பேஸ் புக் ஆன் செய்தேன்.

             இரண்டாவது பதிவே சீனுவின் குறும்பட பதிவுதான்! லிங்கும் கொடுத்திருந்தார். மணி 5.45 தான் ஆகியிருந்தது. மொபைலில் இணைய வேகம் நன்றாக இருக்க யூ டியுப் ஓபன் ஆகி படம் தடங்கலின்றி ஓடியது. அது மேலும் ஆர்வத்தை தூண்டியது. இப்போது கணிணியில் ஓபன் செய்தால் இன்னும் வளையம் சுழன்றுகொண்டே இருக்கிறது ஐந்து நிமிடமாய்! ஆனால் காலையில் அப்படி தடங்கல் இல்லை!

     டைட்டில் ஆரம்பிக்கும் போதே ஆவியின் குரலில் கவிதை ஒன்று சொல்ல என்று கீதா மேடம் இணைந்து பாடி அசத்திவிட்டனர் டைட்டில் பாடலை!
கோவை ஆவியும் அரசனும் சேர்ந்து எழுதியுள்ள அந்த பாடல் நான்கும் நான்கும் எட்டுவரிதான் என்றாலும்  அருமையாக உள்ளது.

    கதை ஒன்றும் புதிது இல்லைதான்! வழக்கமான காதல் தோல்வி கதைதான்! ஆனால் அதை சொல்லிய விதம் அசத்தல். ரிஷ்விக்காக சீனுவும், ரேஷ்மாவாக மதுவந்தியும் சிறப்பாகவே நடித்து இருக்கிறார். அதிலும் எல்லோரும் சொல்லுவது போல நடிப்பில் சீனுவை மதுவந்தி ஓவர் டேக் செய்தாலும் சீனுவின் பர்ஃபார்மென்ஸை குறைச்சொல்ல முடியாது. வசனங்கள் குறைவாக பேசினாலும் அண்டர் ப்ளே பண்ணி அசத்தி விடுகிறார்.


    காதலித்த பெண் திடுமென வெட்டிங் கார்ட் கொடுக்கும் போதும் அந்த பெண்ணின் நினைவாக அவளின் பொருட்களை சேகரிக்கும் போதும் அசத்தி இருக்கிறார் சீனு.

   குட்டிப்பையன் ரக்‌ஷித்  (பதிவர்கார்த்திக் சரவணன்அவர்களின்மகன்) சித்தி இல்லே அம்மா என்று சொல்லும் போது எல்லோரையும் ஓவர் டேக் ஆக்கிவிடுகிறார். மதுவந்திக்கு குரல் யார் கொடுத்தார்கள் அவருடைய சொந்த குரலாகவே இருக்குமென்று ஊகிக்கிறேன்.நன்றாகவே டப் செய்துள்ளார்.

    முல்லை வேந்தனின் படத்தொகுப்பு படத்தை விறுவிறுப்பாக காட்டுகிறது. தமிழ்வாசி குரல் ஒலி சரியில்லை என்று சொல்லியிருந்தார். ஆனால் என் ப்ரவுசரில் காதைப் பிளக்கிறது ஒலி! ஆகையால் ஒலிப்பதிவிலும் குறை இல்லை!

    காதலை எதற்கு தியாகம் செய்கிறார் மதுவந்தி என்பதை கடைசி சீனில் சொல்லாமல் சொல்லி டிவிஸ்ட் அடித்திருக்கிறார் ஆவி. ஆனாலும் காதல் போயின் காதல் என்ற பெயர் பொருத்தம் எனக்கு புரியவில்லை!

   காதலுடனான காதல் போய் பிள்ளையுடனான காதல் என்று அர்த்தம் கொள்ளவேண்டுமா? என் சிற்றறிவுக்கு விளங்க வில்லை! இதற்கு மேல் எனக்கு சினிமா அறிவு இல்லாததால் நிறைய சொல்லி உங்களை வெறுப்பேற்ற விரும்பவில்லை!

    கோவை ஆவியின் டைரக்‌ஷன் டச் சிறப்பு! இவர் மேலும் பல சிறப்பான குறும்படங்களையும் சினிமா படங்களையும் தந்து நம்மை மகிழ்விப்பார் என்று நம்பலாம். மகிழ்விக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

    குடந்தையார், துளசிதரன், சீனுவின் நண்பர்களான அனைவருமே இயல்பாகவே நடித்து உள்ளார்கள். முதல் படத்திலேயே அசத்தி உள்ள சீனு எனக்கு நடிக்கத் தெரியாது என்று இனி சொல்ல முடியாது. அது போல மதுவந்தியும் மிக இயல்பாக நடித்து பாராட்டை பெறுகிறார்.

     பத்துநிமிடம் ஜாலியாக ரசித்து பார்க்க ஏற்ற குறும்படம்! கடைசி கட்டத்தில் மனதில் அப்படியே பதிந்துவிடுவதும் டைட்டில் பாடல் மீண்டும் மீண்டும் ஹம் செய்ய வைப்பதும் படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட்.

ஆக மொத்தத்தில் அனைவரும் ரசிக்கக் கூடிய ஆகச்சிறந்த குறும்படம் காதல் போயின் காதல்! அனைவரும் கண்டு ரசியுங்கள்! வாழ்த்துங்கள்!

கோவை ஆவி டீம் நண்பர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்!


குறும்படத்திற்கான யூ டியுப்  லிங்க் இதோ! படத்தை தரவிறக்கி தர நினைத்தாலும் இணைய வேகம் ஒத்துழைக்க வில்லை!  இதோ லிங்க்  காதல் போயின் காதல்- குறும்படம்

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Sunday, February 22, 2015

உலகக் கோப்பையில் இந்தியாவின் எழுச்சி!

உலகக் கோப்பையில் இந்தியாவின் எழுச்சி!


யாரும் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள் உலகக் கோப்பையில் இந்தியாவின் இத்தகைய ஆட்டத்தை! தொடர்ச்சியாக பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளை வீழ்த்தி இருக்கிறது. உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக இந்தியா தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இருக்கிறது. இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டத்தை கொடுத்து இருக்கிறது.

      ஆரம்பகாலத்தில் அதாவது 1987ல் இருந்து 2003 வரை கிரிக்கெட் வெறியனாக இருந்த என்னை கிரிக்கெட் சூதாட்டங்களும் ஐ.பி.எல் அரசியல்களும் கிரிக்கெட்டின் உள் அரசியல்களும் கொஞ்சம் கசப்படையச் செய்து கிரிக்கெட்டில் இருந்து விலக்கி வைத்தன.
   
     2011ல் இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டிகளைக் கூட காலிறுதியில் இருந்துதான் பார்த்தேன்! மற்றவற்றை செய்தித்தாளில் படித்து முடிவு தெரிந்து கொண்டதோடு சரி. அந்த வருடம்தான் வலைப்பூ தொடங்கி இருந்தேன். அப்போது இதைப்பற்றி எதுவும் எழுதவும் இல்லை.

   இந்த ஆண்டு தொடக்கம் முதலே ஏன் கடந்த ஆண்டு இறுதி முதலே இந்திய அணியின் ஆட்டம் சொல்லிக் கொள்ளும்படி இல்லை! தொடர்ச்சியான தோல்விகள். அணியில் பிளவு! கேப்டன் பதவி குறித்த சர்ச்சைகள். அணி வீரர்களின் காயங்கள் என ஏகப்பட்ட பிரச்சனைகள். இதில் கோப்பை வெல்லக் கூடிய அணியில் இரண்டாவது அணியாக இந்திய அணியை ஒரு நாளிதழ் கணித்தபோது எனக்கு வியப்புதான் மேலோங்கியது. அட காலிறுதியை தாண்டினாலே அதிகம் என்று நினைத்து இந்தியா பாகிஸ்தான் போட்டியைக் கூட முதலில் பார்க்க வில்லை! பிழைப்பை கவனிக்கப் போய்விட்டேன்.

     ஆனால் பெண்ணின் மீது காதல் கொண்டவனையும் கிரிக்கெட் மீது காதல் கொண்டவனையும் திருத்த முடியாது என்று நிரூபணம் ஆகிவிட்டது. இரண்டு பேருமே பைத்தியங்கள். ஒருவனை பைத்தியமாக்குவது பெண் என்றால் மற்றவனை பைத்தியம் ஆக்குவது கிரிக்கெட். இந்திய கிரிக்கெட் இப்படி எத்தனையோ முறை ஆசை காட்டி மோசம் செய்திருக்கிறது. 2003 உலகக் கோப்பை அதற்கு சரியான உதாரணம். அப்படி இந்த முறை நிகழக்கூடாது என்பதே கோடானுகோடி இந்தியர்களின் விருப்பமாக இருக்கக் கூடும்.


     எல்லோரும் இந்திய அணியின் பந்துவீச்சைத்தான் பலவீனமானது என்று சொல்லுவார்கள். மட்டையாளர்கள் உலகத்தரம் வாய்ந்தவர்கள் என்று சொல்லுவார்கள். இருமுறை இரட்டைச்சதம் கண்ட ரோகித் சர்மா, கோஹ்லி, ரஹானே, ரெய்னா, தவான், தோனி என மட்டை வலு அதிகம் என்றே எல்லோரும் கணிப்பார்கள். இதில் ஒருவர் நிலைத்து நின்று ஆடிவிட்டாலே போதும் என்பார்கள். அதே சமயம் பந்து வீச்சில் யாரும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. வேகப்பந்தும் சரி, சுழல்பந்தும் சரி யாரும் குறிப்பிட்டுச் சொல்லும்படி வீசவில்லை என்றார்கள்.
 

       இந்த கூற்றை இந்த இரண்டு போட்டிகள் மாற்றி அமைத்துவிட்டது. பாகிஸ்தானைக் கூட விட்டு விடுங்கள். அது ஒரு செத்தபாம்பு என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் தென்னாப்பிரிக்கா அணியில் ஆம்லா, டிவில்லியர்ஸ், டுபிளசிஸ், டுமினி, மில்லர் என்ற உலகத்தரம் கொண்ட ஆகச்சிறந்த மட்டையாளர்கள் உள்ளனர். அதே சமயம், மோர்கல், ஸ்டெயின், பிளண்டர் என்ற உலகத்தரம் கொண்ட ஆகச்சிறந்த பவுலர்கள் உள்ளனர். இவர்களை எதிர்கொண்டு ஒரு போட்டியை வெல்வது என்பது கடினமான ஒன்று.

      ஆஸ்திரேலிய மண்ணில் வேகப்பந்துக்கு ஒத்துழைக்கும் ஆடுகளங்களில் உலகின் ஆகச்சிறந்த பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு ஓட்டங்கள் சேகரிப்பது அதுவும் முன்னுறை கடப்பது என்பது பெரிய விஷயம். இதை இந்த முறை சாதித்துக் காட்டியது இந்தியா. ஷிகர் தவான் தம்மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை இந்த ஒரு போட்டியில் விளையாடி பதில் சொல்லிவிட்டார். இறுதிகட்டத்தில் ரஹானேயின் இன்னிங்க்ஸ் இந்தியா முன்னூறு ரன்களை கடக்க பெரிதும் உதவியது.

    பந்துவீச்சிலும் களத்தடுப்பிலும் இன்று கனல் பறந்தது இந்தியாவிடம். டிவில்லியர்ஸை அவுட்டாக்கிய அந்த மோகித் சர்மாவின் த்ரொவாகட்டும் உமேஷ் யாதவின் த்ரோவில் அவுட்டாக்கிய டுமினியின் அவுட்டாகட்டும் கண்ணைவிட்டு அகலவில்லை. இதற்கு முன் கவர் திசையில் ஒரு பீல்டிங் ரஹானே அருமையாக பந்தை பாய்ந்து தடுத்தார் அதுவும் சிறப்பான ஒன்று.

   அது மட்டும் இல்லாமல் உமேஷ், மோகித், ஷமி, அஸ்வின், ஜடேஜா அனைவருமே சிறப்பாக பவுல் செய்தார்கள். ஆகச்சிறந்த தென்னாப்பிரிக்க அணியை ஒரு கட்டத்தில் இரண்டு விக்கெட்டுக்கு 130 ரன்கள் என்ற வலுவான நிலையில் இருந்த அணியை 177 ரன்களில் சுருட்டியது 47 ரன்களுக்குள் மீதமுள்ள விக்கெட்டுக்களை கைப்பற்றியது இந்த கூட்டணி என்பதை நாம் மறுப்பதற்கில்லை.
    
   முதல் ஓவரில் பத்து ரன்கள் கொடுத்தாலும் இரண்டாவது கட்ட பந்து வீச்சில் சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுகளை அள்ளிய அஸ்வின் தன் மீதுள்ள குற்றச்சாட்டுகளை பந்துவீச்சில் பொடியாக்கிவிட்டார்.


    இந்த இரண்டு போட்டிகளையும் முதல் பகுதி அதாவது இந்தியாவின் பேட்டிங்கை நான் பார்க்கவில்லை! சம்பாதிக்க போய்விட்டேன். இந்திய வீரர்களுக்கு கோடிக்கணக்கான சம்பளம் வென்றால் பரிசுகள் கிடைக்கும் பார்க்கும் நமக்கு என்ன கிடைக்க போகிறது வெறும் மகிழ்ச்சிதானே! அதை தியாகம் செய்தால் கொஞ்சம் குடும்பத்திற்கு பணம் ஈட்டலாமே என்ற எண்ணம் தான் காரணம்.
 
    மாலையில் ஓய்வு கிடைக்கையில் போட்டியை பார்த்தேன். இந்தியாவின் எழுச்சி மிக்க ஆட்டம் மீண்டும் என்னை கிரிக்கெட்டை காதலிக்க வைத்துவிட்டது. இந்த ஆட்டம் தொடருமானால் கோப்பை கைக்கெட்டும் தூரம்தான்! வாய்க்கு எட்டுமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Saturday, February 21, 2015

சுட்டி கணேஷ்! (பகுதி 1) பாப்பா மலர்!

    சுட்டி கணேஷ்! (பகுதி 1)  பாப்பா மலர்!


தாளபுரி என்றொரு நாடு! அதை மன்னர் ஆதித்யவர்மா ஆண்டு வந்தார். அந்த நாட்டைச்சுற்றி ஒரு ஏரி அமைந்து இருந்தது. ஏரியின் நடுவில் அமைந்த கோட்டையில் ராஜாவின் அரண்மனை இருந்தது. அந்த ஏரியின் நீர் சுவையாக இருக்கும். தெள்ளத்தெளிவாக பளிங்கு போல் ஓடிக்கொண்டிருக்கும் நீரின் சுவையே அலாதி. அந்த நீரை மக்கள் குடிநீராகவும் பயன்படுத்தினார்கள். அந்த ஏரியின் நீரை பாசனத்திற்கு பயன் படுத்தி விவசாயமும் செய்து வந்தார்கள்.
       
            அந்த ஏரிக்கு நீர் அந்த நாட்டில் இருந்த ஓர் மலையில் இருந்த வற்றாத அருவி மூலம் வந்தது. அந்த அருவியை சுற்றியிருந்த மூலிகை மரங்கள் அந்த ஏரியின் நீரை சுவை கூட்டின.

     தாளபுரியின்  ராஜ வீதியின் கடைசியில் ஒரு சிறுவன் வசித்து வந்தான். அவன் பெயர் கணேஷ். ரொம்பவும் சுட்டியான சிறுவன் வயசு பத்துதான் இருக்கும். மிகுந்த பலசாலி மட்டுமல்ல புத்திசாலியும் கூட.  அவனோட செல்லப் பிராணி  மூஷிக்! என்ன முழிக்கிறீங்க? அது ஒரு சுண்டெலிதான்.  அவனோட  இன்னும் ரெண்டு கேர்ள் பிரண்ட்ஸ் சித்தி, புத்தி. அது மட்டும் இல்லாமா அவனோட குட்டி  தம்பி ஷண்ணு! இவங்க எல்லாம் எப்பவும் ஒண்ணா சேர்ந்து அங்கிருக்கிற மாந்தோப்புல விளையாடுவாங்க!

        அந்த ஊரிலே ஒரு குட்டி பயில்வான் இருந்தாரு. அவரு பேரு கஜா! இவருக்கு வயசு அதிகம் இல்லை பன்னிரண்டுதான்! ஆனா ஆளு கொழுக் மொழுக்குன்னு பயில்வான் மாதிரி இருப்பாரு. இவர்கூட எப்பவும் ரெண்டு வாலுங்க சுத்திட்டு திரியும். அவங்க பேரு நீலு- வாலு. இவங்களுக்கு கணேஷை வெறுப்பேத்தி அவன்கிட்ட அடிவாங்கிறதே வேலை!.

  சித்தி- புத்தியோட அம்மா கொழுக்கட்டை நல்லா செய்வாங்க! கணேஷுக்கு அந்த கொழுக்கட்டைன்னா ரொம்ப உசிரு! அது ஒண்ணு சாப்பிட்டான்னா அவனுக்கு யானை பலம் வந்துரும்னா பாத்துக்கங்களேன்! அதனால சித்தியும் புத்தியும் கொழுக்கட்டைகளை நிறைய கொண்டுவந்து கணேஷ்கிட்ட கொடுத்துக்கிட்டே இருப்பாங்க.

   தாளப்பூர் நாட்டுக்கு பக்கத்து நாடு மேளப்பூர். இந்த நாட்டு ராஜா தந்திரவர்மா. இவருக்கு தாளப்பூர் மேல ஒரு கண்ணு. அந்த நாட்டோட வளம் அவர் கண்ணை உறுத்திக்கிட்டே இருந்துச்சு. அதனால அந்த நாட்டை தன் நாட்டோட இணைச்சிக்கணும்னு அவருக்கு ஆசை. ஆனா அவர்கிட்ட படைபலம் இல்லே! எப்ப எதிரியோட பலம் குறையும்னு காத்துக்கிட்டு இருந்தாரு.

      ராஜா ஆதித்யவர்மா மேல மக்களுக்கு அதிருப்தி ஏற்படுத்திட்டா நாம இடையில புகுந்து மக்களை தன் பக்கம் திருப்பி அந்த நாட்டோட ராஜாவா ஆயிடலாம்னு திட்டம் போட்டாரு.

     அதுக்கு என்ன செய்யலாம்னு யோசிக்கும் போது அவருக்கு ஒரு சூனியக்காரியோட நினைப்பு வந்தது. அவபேரு சூர்ப்பனகா! அவளோட உதவியால தாளப்பூரை அடைஞ்சிடலாம்னு அவளைத் தேடிப்போய் பார்த்தாரு.

     சூர்ப்பனகா இருந்தது தாளப்பூருக்கும் மேளப்பூருக்கும் இடையில இருக்கிற ஒரு வனத்திலே. அங்கே போய் அவளை சந்திச்சாரு தந்திர வர்மா.

       "சூர்ப்பனாகா! நான் தந்திர வர்மா வந்திருக்கேன்! உன்னோட உதவியைத் தேடி! நீ தான் எனக்கு உதவி என் ஆசையை பூர்த்தி செய்யனும்னு சூர்ப்பனகா காலில் விழுந்தாரு."

     "தந்திரவர்மா! உன்னோட ஆசை எது?ன்னு எனக்குத் தெரியும். தாளப்பூர் மேல நீ ஆசைப்படறே! ஆனா அது சுலபத்துல கிடைக்காது.
    அதனாலத்தானே உன்னைத் தேடி வந்திருக்கேன்!"

    "தாளப்பூர் மக்கள் இப்ப வளமையா இருக்காங்கன்னா அதுக்கு காரணம் அந்த நாட்டை சுத்தி ஓடுற அந்த ஏரிதான். அந்த தண்ணிதான் அவங்க வளமைக்கு காரணம். அந்த ஏரியில தண்ணி வறண்டுச்சுன்னா அவங்க தாளம் தப்பிடும்! ஹாஹாஹா!" சூனியக்காரியின் சிரிப்பில் அந்தக் காடே அதிர்ந்தது!

     "இது நடந்தா எனக்கும் மகிழ்ச்சிதான்! ஆனா அந்த ஏரிதான் வற்றாத ஏரியாச்சே! எப்படி வத்தும்? எப்படி தாளம் தப்பும்?" தந்திரவர்மா கேட்டான்.

     "அந்த ஏரிக்கு தண்ணியை கொடுக்கிறது அந்த ஊருலே இருக்கிற மலையில இருந்து கொட்டுற அருவியாலேதான்! அந்த அருவி கொட்டுறதை நிறுத்திட்டா..."

     "நல்ல யோசனைதான்! ஆனா அருவியிலே தடுப்பணை கட்டறது எப்படி?"

    "அதை என் மந்திரக் கட்டால் கண்ணுக்குத் தெரியாதபடி கட்டித் தரேன்! படிப்படியா தண்ணி குறைந்து போய் ஏரியே வத்திப் போயிரும் அப்புறம் மக்கள் போராட ஆரம்பிச்சிருவாங்க! அப்ப நீ போய் தண்ணி தருவதா சொல்லு! மக்கள் உன் மேல பாசம் காட்டுவாங்க! தக்க சமயம் பாத்து ஆட்சியை கவிழ்த்து நீ ராஜாவாயிடு!"

     "ஹாஹாஹா! நல்ல யோசனை! "

"ஆனா இந்த திட்டம் நிறைவேறினா நீ என்ன தருவே?"

 "உனக்கு என்ன வேண்டும்? கோடி கோடியா பொன் வேண்டுமா? நிலம் வேண்டுமா? உன் மந்திர சக்திக்கு பலியிட ஆடுமாடு நரன்கள் வேண்டுமா? எது வேண்டுமானாலும் கேள் தருகிறேன்!"

    "இதெல்லாம் வேண்டாம்! தாளப்பூரை நீ பிடித்ததும் அந்த நாட்டில் இருக்கும் சுட்டி கணேஷை என்னிடம் ஒப்படைத்துவிட வேண்டும்."

      "போயும் போயும் ஒரு சிறுவனையா கேட்கிறாய்?"

    "அவன் சாதாரணச் சிறுவன் இல்லை! அவனிடம் எனக்கு ஒரு பழைய கணக்கு பாக்கி இருக்கிறது!"

     "என்ன கணக்கு அது?"

சூனியக்காரி சொல்ல ஆரம்பித்தாள்.
                          தொடரும் (1)

டிஸ்கி}  சோட்டா பீம் மாதிரி ஒரு கதை சொல்லு என்று கேட்ட என் பெண்ணுக்கு சொன்ன கதையை கொஞ்சம் மாற்றி இங்கே தொடராக எழுத உள்ளேன். இந்த தொடரை படித்து ரசிக்கும் குழந்தைகள்இந்த கதையில் வரும் கதாபாத்திரங்களை தங்கள் கற்பனையில் ஓவியமாக வரைந்து thalir.ssb@gmail.com க்கு அனுப்பலாம். குழந்தைகளின் ஓவியங்கள் அவர்களின் பெயர்களோடு தொடரில் பதிவாகும். எந்த குழந்தையின் ஓவியத்தினையும் நிராகரிக்கும்  எண்ணம் இல்லாததால் எல்லா ஓவியங்களும் பதிவாகும். மேலும் அவர்களுக்கு என்னால் இயன்ற ஒரு சிறு பரிசும் அனுப்பி வைக்கப்படும். ஓவியங்கள் அனுப்பும் குழந்தைகள் தங்கள் முழு முகவரியினையும் அலைபேசி எண்ணையும் பகிர்ந்தால் தொடர்புகொள்ள வசதியாக இருக்கும். வாசகர்கள் இந்த முயற்சியினை ஊக்கப்படுத்தி தங்கள் குழந்தைகளின் ஓவியங்களை அனுப்பி ஆதரவளித்தால் மகிழ்வேன்!  மிக்க நன்றி!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Friday, February 20, 2015

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

தளிர் ஹைக்கூ கவிதைகள்!


சிறைபிடித்தது
விலங்கிடவில்லை!
பூமியில் நிழல்!

உயர உயர
இறங்கிவந்தது நிழல்!
சூரியன்!

எச்சரிக்கை ஒலி!
பாதுகாத்தது திருடனை!
போலீஸ் ஸைரன்!

வலுவிழந்தாலும்
வலுகூட்டியது!
உரமான சறுகுகள்!

அழுக்கை விரட்ட
அழுக்கானது
துடைப்பம்!


பேசாத மொழிக்கு
ஆயிரம் அர்த்தங்கள்!
குழந்தையின் பேச்சு!

பிம்பங்களை
பிரதிபலித்து தன்னை இழக்கிறது
கண்ணாடி!


மஞ்சள் பூசியதும்
அழகாயின மரங்கள்!
மாலைவெயில்!

கல்லும் மண்ணும்
கைப்பக்குவத்தில் உணவாகின!
குழந்தைச் சமையல்!

அணிவகுப்பில்
கலவரம்!
கலைந்தன எறும்புகள்!

உடைபட்டதும்
அடித்துச்செல்லப்பட்டது
தன்னம்பிக்கை!

அடித்ததும்
போர்த்திக்கொண்டார்கள்!
குளிர்!

உள்ளம் உருகியதும்
விழியில் சிந்துகிறது!
கண்ணீர்!

குளுமை அணைத்ததும்
போர்த்திக்கொண்டது பூமி!
இருட்டு!

கருப்புச்சேலையில்
கண்ணாடி சரிகைகள்!
இரவில் சாலை!

ஒளி மறைகையில்
ஓலமிட்டன பறவைகள்!
மாலைப்பொழுது!


ஒளிந்து விளையாடினாலும்
ஒளிவு மறைவில்லை!
குழந்தைகள்!

கற்பனைசிறகுகள்!
கலையாது விரிகின்றன!
குழந்தைகள்!

அடித்துப்போட்டார்கள்!
அழகாய் வெளுத்தது!
வேட்டி!

பெற்றெடுக்க
உயிரைவிட்டனமரங்கள்!
காகிதம்!தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்

Tuesday, February 17, 2015

பாபங்கள் போக்கி பரமன் அருள் அளிக்கும் மஹா சிவராத்திரி!"மகா சிவராத்திரி" எனும் புனிதமான விரதம் ஒவ்வொரு வருடமும் மாசி மாதம், கிருஷ்ண பக்ஷம், சதுர்த்தசி திதியன்று திருவோணம் நக்ஷத்திரம் கூடிய புண்ணிய தினத்தன்று  அனுஷ்டிக்கப் பெறுகின்றது. மஹா சிவராத்ரியன்று சிவபெருமான் எழுந்தருளும் ராத்திரி, சிவனை அர்ச்சிக்க வேண்டிய ராத்திரி, சிவனோடு ஐக்கியமாக வேண்டிய ராத்திரி, தேவர்களும் முனிவர்களும் வணங்கி நிற்கும் ஒப்பற்ற ராத்ரியாகும். எம்பெருமானுக்கு உகந்த விரதங்களாக எட்டுவிரதங்களை கந்தபுராணம் குறிப்பிடுகிறது. சோம வார விரதம், திருவாதிரை, உமா மகேசுவர விரதம், மகா சிவராத்திரி விரதம், கேதார விரதம், கல்யாண விரதம், சூல விரதம் , ரிசப விரதம் என்பன அவையாகும்.             மகா சிவராத்திரியின் மகிமையை ஆகமங்கள், சிவமகா புராணம், ஸ்காந்தம், பத்மம் உள்ளிட்ட பத்து புராணங்களும் குறிப்பிடுகின்றன.  மகாசிவராத்திரியானது சிவனுக்கு உரிய இரவு என பொருள்படும். மாசி மாதம் கிருஷ்ணபக்ஷ சதுர்தசி திதியன்று வருவது மஹா சிவராத்திரி. வேதங்களில் சாமவேதமும், நதிகளில் கங்கையும், பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாகிய சிதம்பரமும் எப்படி உயர்ந்ததோ அதே போல விரதங்களில் உயர்ந்தது மஹா சிவராத்திரி விரதம் என சாஸ்திரங்கள் போற்றுகின்றன.


சிவனுக்குரிய விரதங்களாக நித்ய சிவராத்திரி, மாத சிவராத்திரி, பக்ஷசிவராத்திரி, யோக சிவராத்திரி, மஹா சிவராத்திரி என்று வருடம் முழுவதும் கொண்டாடப்பெற்று வந்தாலும் மஹா சிவராத்திரி விரதம் எல்லா சிவராத்திரிகளிலும் சிறப்பானது என புராணங்கள் கூறுகின்றன.

நித்ய சிவராத்திரி:

ஒவ்வொரு மாதமும் தேய்பிறை, வளர்பிறை, சதுர்த்தசி திதிகள் ஆகியன நித்திய சிவராத்திரி எனப்படும். 
ஒவ்வொரு சதுர்தசியிலும் சிவனை நான்கு காலங்களிலும் முறைப்படி பூஜை செய்ய வேண்டும். இப்படி ஒரு வருஷத்தில் இருபத்தி நான்கு சதுர்தசியில் இரவில் பூஜை செய்து வழிபடுவதற்கு நித்திய சிவராத்திரி என்று பெயர்.
பட்ச சிவராத்திரி:

தை மாதம் தேய்பிறை பிரதமையன்று தொடங்கித் தொடர்ந்து பதின்மூன்று நாட்கள் இரவில் சிவபூஜை செய்ய வேண்டும். பின்னர் சதுர்த்தசியில் பூக்ஷையை நிறைக்க வேண்டும். நான்கு காலத்திற்குப் பதில், பக்ஷ சிவராத்திரியில் ஒரு காலம் பூஜை செய்தால் போதுமானது என்பது கொள்கை. ரோகங்கள் விலகவும், உன்மத்த ரோக சமனம் ஏற்படவும், இது துணையாவது. இதை ரோகிகளுக்காக மற்றவர்கள் கூடச் செய்யலாம். 
மாத சிவராத்திரி:

ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திதியில் இந்த விரதம் வரும். சித்திரையில் தேய்பிறை அஷ்டமி, வைகாசியில் வளர்பிறை அஷ்டமி, ஆனியில் வளர்பிறை சதுர்த்தி, ஆடியில் தேய் பிறை பஞ்சமி, ஆவணியில் வளர்பிறை அஷ்டமி, புரட்டாசியில் வளர்பிறை திரயோதசி, ஐப்பசியில் வளர்பிறை துவாதசி, கார்த்திகையில் வளர்பிறை சப்தமி, மார்கழியில் வளர்பிறை சதுர்த்தசி, தை மாதம் வளர்பிறை திருதியை, மாசியில் தேய் பிறை சதுர்த்தசி (மகா சிவராத்திரி), பங்குனியில் வளர்பிறை திரிதியை ஆகிய நாட்களில் இந்த விரதம் இருக்க வேண்டும். 
சிவலோகத்தையும், சிவசாயுஜ்யத்தையும் அடைவார்கள். மாத சிவராத்திரிகளில் சிவபூஜை செய்பவர்களுக்கு சுகவாழ்வும் பரத்தில் கைவல்யமும் கிட்டும்.
யோக சிவராத்திரி:

திங்கட்கிழமையன்று அறுபது நாழிகையும் அமாவாசையாக இருந்தால் அந்த அமாவாசை யோகிகளுக்கு மிகவும் உயர்ந்தது. சித்தர்களுக்கு மிகவும் சிறந்தது. இது யோக சிவராத்திரி எனப்படும்.
யோக சிவராத்திரியில் யோகியானவன் யோக பூஜை செய்ய வேண்டும். யோக சித்தியை இது வழங்கும். யோகியர் அல்லாத மற்றவர்கள் யோக சிவராத்திரியில் பூஜித்தால் ஆத்ம ஜோதியில் சிவத்தைத் தரிசனம் காண ஏதுவாகும்.
மகா சிவராத்திரி : 

மாசி மாதம் கிருஷ்ணபக்ஷ சதுர்தசியன்று வருவது மஹா சிவராத்திரி மற்ற எல்லா சிவராத்திரிகளை விடவும் இதுவே சிறப்புடையது. பல்வேறு வகையான பெரிய நலன்களை இது வழங்குவது. மற்ற சிவராத்திரிகளில் பெறும் எல்லா பேற்றையும் இது ஒரு சேர வழங்குவதால் இது மஹாசிவராத்திரி என்று போற்றப்படுகிறது. மஹா சிவராத்திரியில் நான்கு காலங்களிலும் இரவில் பூஜை செய்ய வேண்டும். சிவபஞ்சாயதனம் கைக்கொண்டவர்கள் இரவில் பூஜையைத் தரித்து நற்பலன் பெற வேண்டும்.

சிவராத்திரி என்ற சொல்லே மோக்ஷம் தருவது என பொருள் பெறும். சிவ வசீகரண மந்திரத்தை ருத்திர பூமியில் இந்தப் புண்ணிய நாளில் ஜெபம் செய்து தேவதா வஸ்யம் முதல் பல லாபங்களை அடையலாம். குருவான சிவபெருமான் இதற்கு அருளுவார்

ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு திதி உண்டு. ஈஸ்வரனுக்குரிய திதி இறுதி திதியான சதுர்த்தசி திதி ஆகும். சிவன் அழிக்கும் கடவுள். எல்லா உயிர்களும் தங்கள் வாழ்வின் இறுதியில் அவரையே அடைகின்றன என்பதால் இந்த இறுதி திதியை அவருக்கு ஒதுக்கினார்கள். அதில் மாசி மாதம் தேய்பிறையில் வரும் சதுர்த்தசி இரவே மகிமை மிக்க "மகா சிவராத்திரி ஆகும்.

  அம்பிகைக்கு சிவன் அருவுருவில் (உத்பவம்) உபதேசம் செய்த ஆகம உபதேச புண்ணிய காலமான மகா சிவராத்திரி விரதம் கடை பிடிக்கும் போது புத்திசாலி குழந்தைகள் அமைவர். குபேரனிடம் இருப்பது போல் வற்றாத செல்வம் கிடைத்து நிலைக்கும். ஒரு வருடம் முழுவதும் ஐந்து பிரிவு சிவராத்திரி விரதம் கடைபிடித்தால் அசுவமேத யாகம்செய்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

சிவராத்திரி விரத முறை :

சிவராத்திரிக்கு கண் விழிப்பது ஏன்? 

சிவராத்திரி அன்று கண் விழித்திருந்து விரதமிருந்து இறைவனை வணங்கும்போது முழுமையான இறைவன் அருள் கிடைக்கும். தியானம் நிலைக்கும். நினைத்த காரியம் நடக்கும். 

விரதம் கடைப்பிடிப்போர் (விரதம் பிடிப்போர்) முதல்நாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்யவேண்டும். அடுத்தநாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி (பாரணை செய்து) விரத்தை நிறைவு செய்தல் வேண்டும். சிவராத்திரிக்கு மறுநாள் சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ, பகல் பொழுதைக் கழிக்க வேண்டும்.

அதன் பின் உபதேச‌ம் தந்த குருவைப் பூஜை செய்து விட்டு, உடைகள் மற்றும் உணவினை அந்தணர்க்கு தானமாக அளித்து விரதத்தை நிறைவு செய்யும் விதமாக உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி நாளில் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதோர், ஒவ்வொரு ஜாமப் பூஜை முடித்த பிறகும் தண்ணீர், பால், பழங்களை உண்ணலாம்.

சிவ ராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப் போகும்.

இவர்தான் சிவராத்திரி விரதம் இருக்கலாம். இவர் இருக்கக் கூடாது என்ற விதியெல்லாம் கிடையாது. யார் வேண்டுமானாலும் சிவராத்திரி விரதத்தை மேற்கொள்ளலாம்.

     சிவராத்திரியின் போது இரவு நான்கு யாமங்களாகப் பிரிக்கப்படுகிறது. அந்த நான்கு யாமங்களிலும் சிவலிங்கத்துக்கு விசேடமாக அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன. அந்த யாமப் பூசைகளின் போது எவையெவற்றால் வழிபடவேண்டும் என்பதை புனித நூல்கள் எடுத்துக் கூறுகின்றன.

முதல் சாமம்: இந்த முதல்கால பூஜை, படைக்கும் தேவன் "பிரம்மா" சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும். இந்த கால பூஜையில் "பஞ்ச கவ்வியத்தால்" (பசும்பால், பசுந்தயிர், பசுநெய், கோமயம், கோசாணம்) அபிஷேகம் செய்து, மஞ்சள் நிற பொன்னாடை அணிவித்தும், தாமரைப் பூவால் அர்ச்சனையும், அலங்காரமும் செய்து, பாசிப் பருப்பு பொங்கல் நிவேதனமாக படைத்து, நெய் தீபத்துடன் முதல் கால பூஜை ரிக் வேதபாராயணத்துடன் நடத்தப்படுகின்றது. இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் நம் பிறவி கர்மாக்களில் இருந்து விடுபட்டு நற்பலன்களை அடையலாம்.

இரண்டாம் சாமம்: இந்த இரண்டாவது காலை பூஜையை காக்கும் தேவன் "விஷ்ணு". சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும். இந்த காலத்தில் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தும், சந்தன காப்பு சாற்றியும், வெண்பட்டு ஆடை அணிவித்து அலங்காரம் செய்தும், அர்ச்சனைகள் செய்தும், இனிப்பு பாயசம் நிவேதனமாக படைத்து, நல்லெண்ணை தீபத்துடன், இரண்டாவது கால பூஜை யஜுர்வேத பாராயணத்துடன் நடத்தப்படுகின்றது. இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் தன தானிய சம்பத்துக்கள் சேரும்.

மூன்றாம் சாமம்: இந்த பூஜை சக்தியின்
 வடிவமாக அம்பாள் பூஜிப்பதாகும். இந்த காலத்தில் தேன் அபிஷேகம் செய்தும் பச்சை கற்பூரம் மற்றும் வில்வ இலையைக் கொண்டு அலங்காரம் செய்தும், சிவப்பு வஸ்திரம் அணிவித்தும், ஜாதி மல்லி பூவைக் கொண்டு அர்ச்சனைகள் செய்து "எள் அன்னம்" நிவேதனமாக படைத்து, இலுப்பை எண்ணை தீபத்துடன் சாமவேத பாராயணத்துடன் பூஜை முடிக்கப்படுகிறது. இந்த காலத்திற்குரிய சிறப்பு என்றால் இதை லிங்கோத்பவ காலம் என்றும் இந்த காலத்தில் சிவபெருமானின் அடி முடியைக் காண வேண்டி பிரம்மா அன்ன ரூபமாக மேலேயும், மகாவிஷ்ணு வராக ரூபமாக பாதாள லோகத்தையும் தேடிய சிறப்புடையது இந்த காலம். இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் எந்தவித தீய சக்தியும் நம்மை அண்டாமல் இருக்க சக்தியின் அருள் கிடைக்கும்.

நான்காம் சாமம்: இந்த நான்காவது கால பூஜை முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூதகணங்களும், மனிதர்களும் அனைத்து ஜீவராசிகளும் சிவபெருமானை பூஜிப்பதாக கருதப்படுகிறது. குங்குமப்பூ சாற்றி, கரும்பு சாறு & பால் அபிஷேகம் செய்தும், நந்தியாவட்ட பூவால் அலங்காரமும், அர்ச்சனையும் செய்து அதர்வண வேதப் பாராயணத்துடன் சுத்தான்னம் நிவேதனமாகப் படைத்தும், தூப தீப ஆராதனைகளுடன் 18 வகை சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் செய்யப்படுகிறது. மிக உயர்வான இந்த மகா சிவராத்திரி விரதத்தை இருந்து சிவபெரு மானை வழிபட்டு அனைத்து செல்வத்தையும், வாழ்வில் மகிழ்ச்சியையும் அடைவோமாக!

சிவராத்திரி சமயத்தில் மட்டும் கிடைக்கும் சிவகரந்தை எனும் பத்ரம் (இலை) கொண்டு அர்ச்சனை செய்வது மிகப் பெரும் பலன்களையும் அருளையும் தரக் கூடியது.

சிவராத்திரி நாள், சிவபிரான் இலிங்கத்தில் தோன்றியருளிய நாள்; பிரமா, விட்டுணு ஆகியோரிடையே சோதிமயமாகத் தோன்றிய நாள்; புனர் உற்பத்திக்காக அம்மை அப்பனைப் பூசித்த நாள்.

ஒரு சமயம் பிரளயத்தில் எல்லா உயிரினங்களும் அழிந்து பிரபஞ்சமே சூனியமாகி விட்டது. உயிர்கள் அனைத்தும் திரும்பவும் தோன்றி, வாழ்ந்து ஈடேறும்பொருட்டு ஐந்தொழில்களையும் அப்பனே ஏற்று நடத்துவான்வேண்டி, இரவில் நான்கு சாமங்களிலும் அம்மை, அப்பனை உளமுருகி வேண்டிய நாளே சிவராத்திரி.

    சிவராத்திரியில் முக்கியமான லிங்கோத்பவ காலம்:
சிவராத்திரியில் மூன்றாம் காலத்தை லிங்கோத்பவ காலம் என்பார்கள். மிகச் சிறப்பு வாய்ந்த தருணம் அது. இதுவே, சிவபெருமான் சிவலிங்கத்தினின்று திருவுருவம் கொண்டு வெளிப்பட்டு, அருவுருவமாக நின்று அன்பர்களுக்கு அருள்பாலித்த நேரமாகும். இந்த வேளையில் சிவபூஜை செய்வது அதிக சிறப்புத் தருவதாகும்.


லிங்கோத்பவ காலத்தில், இறைவனுக்கு நெய்பூசி வெந்நீரால் அபிஷேகம் செய்து, கம்பளியால் நெய்த ஆடைகளை அணிவித்து, மலர்களினால் அலங்கரிக்க வேண்டும். நெருப்புச் சுடரின் மையத்தில் தோன்றிய பெருமானை பிரமனும் திருமாலும் ஆயிரம் ஆயிரம் நாமங்களைச் சொல்லி அர்ச்சித்தார்கள். அதனை நினைவுகூரும் வகையில், உருத்திரருக்கு எண்ணில்லாத வணக்கங்களைக் கூறும் ருத்திரத்தை ஓத வேண்டும்.

மேலும் சிவ சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்ய வேண்டும். தமிழ் வேதமான தேவாரத்தில் உள்ள ”இருநிலனாய் தீயாகி” எனும் பதிகத்தையும், லிங்கபுராணக் குறுந்தொகையையும் தவறாது ஓதி வழிபடலாம்.
நிகழ்வுகள்:
நாம் அறிந்தோ, அறியாமலோ, தெரிந்தோ, தெரியாமலோ, எம்வாழ்வில் செய்த தீய செயல்களின் பாவங்களில் இருந்து விமோசனம் தந்து எம்மை பாவத்தின் பிடியில் இருந்து மீட்டெடுத்து பத்திவழி நடத்திட இப்புனித தினத்தில் பக்திசிரத்தையுடன் ஆன்மீக சீலராக சிவனடியில் சேர்ந்திடுவோம். 

(பனிப்புலம்.காம் இணைய தளத்தில் இருந்து பகிரப்பட்டது)
நன்றி: பனிப்புலம்.காம்.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
Related Posts Plugin for WordPress, Blogger...