புத்திசாலி கழுதை! பாப்பா மலர்!

புத்திசாலி கழுதை! பாப்பா மலர்!



ரொம்ப நாளுக்கு முன்னாலே ஊரைச் சுத்தி ஒரு பெரிய காடு இருந்துச்சு! அதுல உயர உயரமா மரங்களும், நிறைய புதர்செடிகளும் கொடிகளும் மண்டிக்கிடந்தது. அதுல நிறைய விலங்குகளும் இருந்தது. காட்டு விலங்குகள் ஊருக்குள் வராது. மனுஷங்களும் காட்டுக்கு போய் தொந்தரவு செய்ய மாட்டாங்க! எப்பவாவது விறகு சேகரிக்க போய் காய்ந்த மரங்களை வெட்டி வருவாங்க அவ்வளவுதான்!
     அந்த காட்டுல சிங்கம் ஒண்ணு வசிச்சது. சிங்கம்னா சும்மாவா பிடரி மயிர் எல்லாம் வளர்த்து தாடியோட கம்பீரமா இருக்கும். காட்டுக்கே ராஜாவாச்சே! இளமையான வயசுல அது ஓடியாடி வேட்டையாடி நிறைய விலங்குகளை சாப்பிட்டுச்சு! ஆனா பாவம் இப்ப அதுக்கு கொஞ்சம் வயசாயிருச்சு! காட்டு ராஜா பதவி எப்படா கிடைக்கும்னு அவங்க பசங்க ரெண்டு பேரு போட்டிப் போட அதனோட மனசும் வலுவிழந்துப்போச்சு. அதனால முன்ன மாதிரி இரைதேடி வேட்டைக்கு எல்லாம் போறது இல்லே!

    அதனோட இடத்துக்கு வந்து மாட்டுற விலங்குகளை ஏமாத்தி அடிச்சு தின்னுடும் அந்த சிங்கராஜா. கிழட்டு ராஜாவோட தந்திரம் அறிஞ்ச விலங்குகள் அந்த பக்கம் போறது இல்லே! அப்போ அந்த காட்டுல ஒரு கழுதை வந்துச்சு! அது அப்பத்தான் பக்கத்து காட்டுல இருந்து புதுசா இந்த காட்டுக்கு வந்திருக்கு! அதனோட சொந்தக்காரங்களை பாக்கிறதுக்காக இந்த காட்டுக்கு வந்திருக்கு! அது வழி தெரியாமா சிங்கராஜாவோட இருப்பிடம் பக்கம் போயிருச்சு.
    சிங்கராஜா ரொம்பநாளா எதுவும் சாப்பிடாம ரொம்பப் பசியோட இருந்தாரு. கழுதை வருவது தெரிந்ததும் சுறுசுறுப்பாயிட்டாரு அப்படியே பதுங்கி கழுதை மேல பாய்ஞ்சிட்டாரு! ஆனா ஒரு நொடியிலே கழுதை ஆபத்தை உணர்ந்து விலகிடிச்சு! சிங்கம் உறுமியது.
   “ஏய் கழுதையே! நான் உன்னை தின்னப் போறேன்!” அப்படின்னு ஆக்ரோஷமா சொல்லிச்சு.
   வயசான சிங்கம்! அதுங்கிட்ட இருந்து தப்பிச்சிடலாம்னு கழுதை முடிவு பண்ணுச்சு! ஆனா அதை காட்டிக்காம பயப்படறமாதிரி நடிச்சது.
   “சிங்கராஜா! சிங்கராஜா! நான் உங்க அடிமை! உங்களுக்கு உணவாகிறது எங்களோட கடமை! ஆனா ஒருவிண்ணப்பம்!” அப்படின்னு சொல்லுச்சு!
    “ என்ன விண்ணப்பம்?”
 “ரொம்பநாள் கழிச்சு இந்த காட்டுக்கு சொந்தக்காரங்களை பார்க்க வந்திருக்கேன்! அவங்களை பார்த்துட்டு வந்துட்டா நான் உங்களுக்கு திருப்தியா உணவாயிருவேன்! இல்லேன்னா அவங்களை பாக்காம செத்துடறமேன்னு என் மனசு அலைபாயும்! அப்படிப்பட்ட் உணவை சாப்பிட்டா உங்களுக்கும் கெடுதி!” அப்படின்னுச்சு கழுதை.
    “ அதுவும் சரிதான்! ஆனா போன நீ திரும்பிவருவேன்னு என்ன நிச்சயம்?” இப்படிக் கேட்டது சிங்கம்.
     “சத்தியமா ரெண்டே நாள்ள திரும்பி வந்துருவேன் ராஜா! என்னை நம்புங்க! நான் இப்ப ரொம்ப ஒல்லியா இருக்கேன்! சொந்தக்காரங்க விருந்து பண்ணி போடுவாங்க! அப்ப அதை தின்று கொழுத்து வருவேன்! உங்களுக்கும் நல்ல விருந்தா இருக்கும். இப்ப என்னை அடிச்சு தின்னா வெறும் எலும்பும் தோலும்தான் கிடைக்கும்” அப்படின்னுச்சு கழுதை.
    “ சரிதான்! உன்னை நம்பறேன்! இப்ப வத்தலாத்தான் இருக்கே!  நல்லா விருந்து சாப்பிட்டு கொழுத்து வா! ரெண்டுநாள் இல்லே நாலு நாள் கூட எடுத்துக்கோ! ஆனா கண்டிப்பா திரும்பி இங்கே வரணும்!” சிங்கம் சொன்னது.
    “உத்தரவு மகாராஜா! கண்டிப்பா நாலாவது நாள் உங்க முன்னாலே இருப்பேன்!” என்று ஓட்டம் பிடித்தது கழுதை.
    பின்னர் அது உறவினர் வீடுகளுக்குச் சென்று அளவளாவி மகிழ்ந்தது. அவர்கள் கொடுத்த விருந்துகளை வயிறு புடைக்க உண்டது. அதே சமயம் தினமும் சேற்றில் உருண்டு புரண்டு சேற்றை அப்பிக்கொண்டது. அத்துடன் நெருஞ்சி முற்களை அந்த சேற்றில் ஒட்டி வைத்துக் கொண்டது
   “எதற்கு இவ்வாறு சேற்றை அப்பிக்கொள்கிறாய்?” மற்ற கழுதைகள் கேட்டபோது காரணமாகத்தான் என்றது.
       நான்கு நாட்கள் கழிந்தன. இப்போது கழுதை நன்கு கொழுத்து இருந்தது. சேற்றில் புரண்டதால் அதன் முன்பக்கம் எல்லாம் ஓர் அங்குலம் மண் ஒட்டிக்கொண்டு நன்கு காய்ந்து இருந்தது. சரி நான் ஒரு முக்கிய விஷயமாய் சென்று வருகிறேன் என்று சொல்லிவிட்டு சிங்கத்தின் இருப்பிடம் வந்தது கழுதை.

    “அடடே! சொன்னபடி வந்துவிட்டாயே! உண்மையில் அன்றைக்கு இருந்ததை விட இன்று கொழுத்தும் இருக்கிறாய்! உன் வாக்கை காப்பாற்றிவிட்டாய்! இதோ உன்னை அடித்து தின்கிறேன்!” என்றது சிங்கம்.
    இப்போது கழுதை சொன்னது. ”சிங்கராஜா! வாருங்கள்! என்னை சாப்பிடுங்கள்! என்றது. ஆவலுடன் சிங்கம் கழுதை மேல் பாய்ந்து கடித்தது.
   பாவம் நொந்து போனது. கழுதையின் உடலில் ஒட்டியிருந்த மண் தான் அதன் வாய்க்குள் சென்றது.அத்துடன் முள்ளும் குத்த வலியில் துடித்தது. “த்தூ த்தூ! என்று துப்பியது.
     “என்ன சிங்கராஜா துப்பிவிட்டீர்கள்!”
  “ஒன்றுமில்லை! இப்போது பார்!” என்று மீண்டும் கடித்தது. இப்போதும் மண் தான் கிடைத்தது. த்தூ! என்று துப்பியது.
   கழுதை மிகவும் பணிவாக சொன்னது. ”சிங்கராஜா! எனது முன்பக்க உடல் உங்களுக்கு பிடிக்க வில்லை போலிருக்கிறது! இப்படி துப்பி விட்டீர்கள். பின்பக்கமாக வந்து சாப்பிட்டு பாருங்கள்!”
    பசியோடு இருந்த சிங்கம் கழுதையின் பின் பக்கத்தை கடிக்க பாய்ந்தது. அதுவரை சும்மா இருந்த கழுதை சிங்கம் பாயும் நேரத்தை சரியாக கணித்து பின்னங்கால்களினால் அதன் வாயில் நன்கு தாக்கியது.
    அவ்வளவுதான்! சிங்க ராஜாவின் கடைவாய் பல் உடைந்து வாயில் ரத்தம் கொட்டியது. அதற்கு மயக்கமே வருவது போலிருந்தது.
    “ என்ன சிங்கராஜா இது இப்படி கடிக்க கூட சக்தி இல்லாமல் இருக்கிறீர்கள்! வாயை நீட்டுங்கள் நானாகவே ஊட்டி விடுகிறேன்!” என்று நக்கலாக சொன்னது கழுதை.
     இப்போது சிங்கம் ஆவலாக வாயை நீட்டியது! மீண்டும் ஓர் உதை! அவ்வளவுதான் சிங்கம் கிறுகிறுத்து கீழே விழுந்தது. அப்புறம் அது எழவே இல்லை!
   சிங்கத்தினை தன் புத்திசாலித்தனத்தினால் வென்ற கழுதை மிக்க மகிழ்ச்சியுடன் அங்கிருந்து ஓடிப்போனது.

  தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்திக் கொள்ளுங்கள்! நன்றி!



Comments

  1. சூப்பர் கழுதை. புத்திசாலித்தனமாக செயல்பட்டால் எந்த இக்கட்டிலும் இருந்து தப்பிச்சுக்கலாம்.

    அருமையான கதை

    ReplyDelete
  2. குழந்தைகளுக்கு சொல்லி மகிழ ஒரு கதை... நன்றி

    ReplyDelete
  3. குழந்தைகளுக்கு சொல்ல ஒரு நல்ல கதை கொடுத்துவிட்டீர்கள்..நன்றி சகோ

    ReplyDelete
  4. நண்பரே!
    மீண்டும் ஒரு அழ.வள்ளியப்பா
    எங்களுக்கு கவிதையிலிருந்து கதை வடிவில் வந்துள்ளார்.
    பாராட்டுக்கள்.
    குழந்தைகளை குஷி படுத்தும் அறிவுக் கூர்மைமிக்க நல்ல கதை!
    நன்றியுடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com
    ( (நண்பரே குழலின்னிசை தங்களை வரவேற்கின்றது வலைப் பூ நோக்கி! நன்றி!)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!