Saturday, January 31, 2015

குளவி நண்பன்!

குளவி நண்பன்!


மானூர் என்னும் அழகியசிற்றூரில்  விக்ரமன் என்னும் சிறுவன் வசித்து வந்தான். தாய் தந்தையரை இழந்த அவனுக்கு வயதான பாட்டி மட்டுமே துணை.  விக்ரமன் சுறுசுறுப்பானவன். புத்திசாலி. நன்றாக உழைப்பவனும் கூட பாட்டிக்கு கூட மாட ஒத்தாசையாக இருந்து வேலைகளில் உதவி செய்வான்.
   ஒரு நாள் அவன் தன் குடிசை வீட்டில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தபோது குளவி ஒன்று அவனை சுற்றி சுற்றி வந்துகொண்டிருந்தது. அது சுவற்றில் கூடு கட்ட முனைந்து கொண்டிருந்தது. எரிச்சல் அடைந்த  விக்ரமன் அதை விரட்டினான். ஒரு அட்டையை எடுத்து அதை அடிக்க முயன்றான்.
    அப்போது அந்த குளவி பேசியது "நண்பா! என்னை அடிக்காதே!" என்றது. விக்ரமன்ஆச்சர்யத்துடன் "யாரது குளவியா பேசுவது?" என்றான். "ஆம் குளவிதான் பேசுகிறேன். நண்பா என்னை அடிக்காதே! என்னுடைய உதவி உனக்கு ஒரு சமயத்தில் தேவைப்படும் என்னை விட்டுவிடு!" என்றது.
 விக்ரமனும்குளவிதானே என்று எண்ணாமல் "குளவியாரே உன்னை கொல்வதால் எனக்கும் ஒன்றும் இல்லைதான்! ஆனால் என்னை தொந்தரவு செய்யாமல் போய்விடு!" என்றான்.
    குளவியும் " நண்பரே! உனக்கு உதவி தேவைப்படும் நேரத்தில் என்னை நினைத்து குளவி நண்பா என்று அழை நீ எங்கிருந்தாலும் உன் முன் வந்து உனக்கு உதவுவேன். நான் ஒரு கந்தர்வன் ஒரு ரிஷியின் சாபத்தால் குளவியானேன்.இதனால்தான் உன்னோடு பேச முடிந்தது" என்று கூறி பறந்து சென்று விட்டது.
   நாட்கள் நகர்ந்தன. ஒருநாள்  விக்ரமனனின் பாட்டி, "பேரா எனக்கோ வயதாகிறது. முன்பு போல ஓடியாடி வேலை செய்ய முடியவில்லை! பக்கத்து நாட்டுக்கு சென்று ஏதாவது வேலை தேடி பிழைத்துக் கொள்! உனக்கும் வயது ஏறிக் கொண்டே போகிறது. என்னுடனே இருந்தால் உலக அனுபவங்கள் கிடைக்காது. நான் எப்படியாவது பிழைத்துக் கொள்கிறேன். நீ வேலை தேடு!" என்று அவனை பக்கத்து தேசத்திற்கு செல்லுமாறு கூறினாள்.
    விக்ரமனும்பாட்டி சொல்படி பக்கத்து தேசத்திற்கு கிளம்பினான். கையில் கட்டுச் சோற்றுடன் இரண்டு நாட்கள் பயணித்த அவன் மூன்றாம் நாள் இரவுஒரு காட்டை அடைந்தான். அதை கடந்தால் தான் பக்கத்து நாட்டினை அடைய முடியும். நடுக்காட்டில் ஒரே இருள் பாதை புலப்படாமல் அவன் அங்கேயே தங்க முடிவு செய்தான். உடனே அருகில் இருந்த மரத்தின் மீது ஏறிப் பார்த்தான்.
    மரத்தின் மேலிருந்து பார்த்த போது தூரத்தில் ஓர் வெளிச்சம் தென்பட்டது. எனவே அங்கு ஏதாவது தங்குமிடம் இருக்கும் நமக்கும் உணவில்லை கொண்டுவந்த உணவு காலியாகிவிட்டது. அங்கு சென்று பார்ப்போம் என்று அந்த வெளிச்சத்தை நோக்கி நடக்கத் தொடங்கினான்.ஒரு பத்து நிமிடத்தில் அந்த வெளிச்சத்தை அவன் நெருங்கினான். அது ஒரு அழகிய மாளிகை! ஆச்சர்யத்துடன் அதனுள் நுழைந்தான். மாளிகையில் யாரும் இல்லை. மாளிகை முழுவதும் பாறாங்கற்கள் இரைந்து கிடந்தன.
    இவ்வளவு அழகிய மாளிகையில் மனிதர்களே வசிக்க வில்லையா? ஏன் பாறாங்கற்கள் இரைந்துகிடக்கிறதுஎன்று யோசித்தவாறே மேலும் உள்ளே நுழைந்தான். அப்போது உப்பரிகையில் இருந்து ஒரு பெண்ணின் அழுகுரல் விசும்பலாக வெளிவந்தது.  விக்ரமன்அங்கு சென்றான்.
   அங்கு ஒரு அழகிய இளவரசி பஞ்சணையில் அமர்ந்த படி அழுது கொண்டிருந்தாள்.  விக்ரமன் "பெண்ணே நீ யார்? ஏன் அழுகிறாய்?" என்றான்.  விக்ரமனை கண்டு திடுக்கிட்ட அவள்," நீங்கள் யார்? எப்படி இதனுள் வந்தீர்கள் அதை முதலில் சொல்லுங்கள்?" என்றாள்.
     விக்ரமன் தன்னுடைய விவரங்களை சொல்லி முடிக்க, அவள் "நான் ஒரு இளவரசி இந்த மாளிகை ஒரு அரக்கனுடையது. அவன் என்னை கடத்திக் கொண்டு வந்து இங்கு அடைத்து வைத்துள்ளான்.என்னை திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று முயன்று வருகிறான். நான் ஏதாவது ஒரு காரணம் சொல்லி தட்டிக் கழித்து வருகிறேன். என் விருப்பம் இல்லாமல் என்னை தொட்டால் இறந்துவிடுவேன் என்று மிரட்டியதால் என்னை விட்டு வைத்திருக்கிறான். வெளியில் கற்களாக இருப்பவர்கள் என்னை மீட்க வந்தவர்கள். அரக்கனைஎதிர்க்க முடியாமல் கல்லாக மாறிவிட்டார்கள். அவன் எதிரில் வந்தாலே கல்லாக்கி விடுவான்" என்று கூறி முடித்தாள்.
   "பெண்ணே கலங்காதே நான் உன்னை மீட்கிறேன்!" என்ற விக்ரமன் என்ன செய்யலாம் என்று யோசித்தான். பின் இளவரசி எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. இரவில்அரக்கன் வரும் சமயம் விளக்கை அணைத்துவிடுங்கள் அவன் கண்ணால் பார்த்தால்தானே கல்லாக்க முடியும். நான் பாறை மறைவில் அமர்ந்து சவால் விட மற்றதை என்னுடைய நண்பன் பார்த்து கொள்வான் என்று சொன்னான்.
   "நண்பரா அது யார்?" என்றாள் இளவரசி "இப்போதுவருவான் பாருங்கள்!” என்று குளவியை நினைத்து அழைத்தான் விக்ரமன். உடனே அங்கு குளவி தோன்றியது. குளவியிடம், “இளவரசியை மீட்க வேண்டும் இரவில் இருட்டில் நான் பாறை மறைவில் அமர்ந்து அவனோடு பேசுவேன். நீ அவன் கண்கள் இரண்டையும் கொட்ட வேண்டும். அப்புறம் உன் படை வீரர்கள் அவன் உடல் முழுதும் கொட்டினால் அவன் தீர்ந்தான்.” என்றான் விக்ரமன்.
   அன்றைய இரவில் அரக்கன் நுழைந்ததும் விளக்கை அணைத்து விட்டாள் இளவரசி. “ இளவரசி! என்ன இது மாளிகை இருட்டாகிவிட்டதே!” என்று அரக்கன் குரல் கொடுக்கும் போதே, “ உன் முடிவு நெருங்கி விட்டது அதனால்தான் இருட்டாகிவிட்டது” என்று குரல் கொடுத்தான் விக்கிரமன். இருளில் ஆள் தெரியாமல் ”யார் யார் அது?” என்று அரக்கன் தேடவும்  “நான் உன் முன்னால் தான் நிற்கிறேன் என்னை தெரியவில்லையா?” என்று பாறை பின்னால் ஒளிந்து குரல் கொடுத்தான் விக்ரமன்.
    “யாரடா நீ என் பலம் தெரியாமல் மோதுகிறாய்! இதோ விளக்கு ஏற்றிவிட்டு உன்னை கவனிக்கிறேன்!” என்று விளக்கை ஏற்றமுயன்ற அரக்கன் கண்ணில் குளவி கொட்டியது மாற்றி மாற்றி கொட்ட வலியால் துடித்தான் அரக்கன்.  “ஆ அம்மா! என் கண் போயிற்றே!” என்று அவன் சொல்லி முடிக்கும் முன் ஏராளமான குளவிகள் அரக்கனை சூழ்ந்து கொண்டன.
   குளவிகளின் கடி தாளாது அலறிய அரக்கன் உடல் முழுவதும் விஷம் ஏறி வீங்கிப்போய் உயிரை விட்டான்.  .அரக்கன் மறைந்ததுமே அவனது மந்திரசக்தியும் மறைந்துபோனது. கல்லானவர்கள் உயிருடன் வந்தார்கள்.இளவரசியை அவர்களிடம் ஒப்படைத்தான் விக்ரமன். குளவி நண்பணுக்கு நன்றி சொன்னான். இளவரசி விக்கிரமனை தன்னுடைய நாட்டிற்கு அழைத்தாள். விக்கிரமனும் சென்றான். அங்கு
    இளவரசியை மீட்ட விக்ரமனுக்கு அந்த நாட்டில் பலத்த வறவேற்பு செய்தார்கள். இளவரசியை அவனுக்கு திருமணம் செய்து வைத்தார்கள். அந்த நாட்டின் இளவரசன் ஆன விக்ரமன் தனது பாட்டியை அழைத்து வந்து வைத்துக் கொண்டு சுகமாக வாழ்ந்தான்.

மீள்பதிவு)

டிஸ்கி} சொந்த அலுவல்கள் அதிகமாக இருப்பதால் பதிவுகள் எழுதவும் படிக்கவும் நேரம் கிடைக்க வில்லை! நாளை வேலூர் கிளம்புகிறேன்! செவ்வாய் அல்லது புதன் கிழமைக்கு பின்னர் வழக்கமான பதிவுகள் நண்பர்களின் பதிவுகளுக்கு வருகை புரிவேன்! நண்பர்கள் பதிவுகளை படிக்க வரவில்லையே என்று கோபித்து கொள்ள வேண்டாம். நன்றி!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Friday, January 30, 2015

செய்யற வேலையில உங்களுக்கு ஈடுபாடு இருக்கா?

செய்யற வேலையில உங்களுக்கு ஈடுபாடு இருக்கா?

 எந்த வேலையாக இருந்தாலும் அதில் ஈடுபடுபவர்கள் ஓர் அர்ப்பணிப்புடன் ஈடுபாட்டுடன் செய்தால் அந்த வேலை கஷ்டமாகவோ செய்ய முடியாததாகவோ தோன்றாது. வேலையும் கஷ்டமாக இருக்காது. ஈடுபாடு இன்றி ஓர் வேலையில் என்னால் ஒட்டிக்கொண்டு இருக்க முடியாது. அதே போல என்னை நம்பி ஓர் வேலையைக் கொடுத்துவிட்டால் அதில் தலையீடு இருப்பதை நான் விரும்ப மாட்டேன். இப்படி செய்! அப்படி மாற்று! இங்கே குறை! அங்கே கூட்டு! என்பதெல்லாம் எனக்கு பிடிக்காது.
     இதனாலேயே நான் பிறரிடம் பணிபுரியவில்லை! சொந்தமாகவே தொழில் என்ற எண்ணத்திற்கு வந்துவிட்டேன்! அந்த சொந்த தொழிலிலும் கூட ஈடுபாடு குறைந்தால் தொழிலை விட்டுவிட்டேன்.
      2000 மாவது வருஷத்தில் எங்கள் ஊர் பக்கம் எஸ்.டீ.டீ பூத்கள் கொள்ளையாக வசூலை அள்ளின. அப்போது நானும் ஓர் எஸ்.டீ.டீ பூத் வைத்தேன். எனக்கு போட்டியாக மூன்று பேர் அதே ஊரில் பூத் வைத்தனர். அதுவும் எனக்கு பின் அப்ளிகேஷன் போட்டு எனக்கு முன்னதாகவே லைன் வாங்கிவிட்டனர். விபரம் தெரிந்து தொலைபேசி அலுவலகத்தில் சத்தம் போட்டபின் ஒருவழியாக இணைப்புத் தந்தனர்.
    மற்ற இருவரை விடவும் எனக்கு அதிக கஸ்டமர்கள். நல்லவியாபாரம் நடந்தது. அதில் டீக்கடை மற்றும் எஸ்.டீடீ வைத்திருந்த ஒருவருக்கு என் மீது ஏகப்பட்ட பொறாமை! வெளியூரில் இருந்துவந்து நம்ம ஊரில் இவன் சம்பாதிக்கிறானே என்று ஏகப்பட்ட வயிற்றெரிச்சல்! என்னன்னோமோ  தொல்லைகள் தந்து பார்த்தார். நான் அசரவில்லை! இரண்டு வருடங்கள் தொழில் செய்தேன். அப்புறம் அதன் மீது ஈடுபாடு குறைந்து போனது. எதற்கு இப்படி அடுத்தவனோடு போட்டி! விட்டுவிடலாம்! நமக்குத்தான் வேறு தொழில் இருக்கிறதே என்று அந்த எஸ்.டி.டீ பூத்தை விற்றுவிட்டேன்.
   அப்போதே டியுசன் நடத்தி வந்தேன். அதை விரிவு படுத்தி சிறப்பாக செய்ய ஆரம்பித்தேன். 2004ல் எனது டியுசன் செண்டரில் பக்கத்து பள்ளியில் படித்தவர்கள் நல்ல மதிப்பெண்கள் மற்றும் பள்ளி முதல்வனாக வர என் டியுசன் கிட்டத்தட்ட ஓர் மினி பள்ளி மாதிரியே உருவானது. கிட்டத்தட்ட 12 வருடங்கள் நடத்திய டியுசனை 2011ம் வருடத்தோடு நிறுத்திவிட்டேன். காரணம் ஈடுபாடு குறைந்து போனதுதான் காரணம்.
      பெயருக்கு ஏதாவது ஓர் தொழில் ஓர் வேலை என்று செய்வதில் எனக்கு உடன்பாடில்லை! கடனே என்று வேலை செய்வதில் உடன்பாடில்லை! கடமையை கருத்தாய் செய்வதே பிடிக்கும்.
    இதெல்லாம் எதற்கு சொல்கிறேன்! நம்ம இந்தியன் கிரிக்கெட் டீம் ஆஸ்திரேலியாவில் கடனே என்று விளையாடி அடிமேல் அடிவாங்கிக் கொண்டிருக்கிறதே அதைப்பார்த்ததும் இதெல்லாம் தோன்றியது.
     ஒரு பிளெயர் கூட அர்ப்பணிப்பு உணர்வுடன் விளையாடவில்லை! ஏதோ கடமைக்கு விளையாடுகிறார்கள். ஆடினாலும் பணம்! ஆடாவிட்டாலும் பணம்! கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது! அப்புறம் எதற்கு ஆடவேண்டும்? அப்படித்தான் இருக்கிறது இவர்கள் ஆட்டம். கொஞ்சம் கூட  சுதாரிக்காமல் ஆடிக்கொண்டு இருக்கிறார்கள்.
   இந்த ஆட்டத்தை பார்க்கும் போது நான் ஒன்பதாவது படிக்கும்போது ஆடிய ஆட்டங்கள் நினைவுக்கு வருகிறது. அப்போது எனக்கு கிரிக்கெட் பற்றி பெரியதாக ஒன்றும் தெரியாது. எங்கள் கோயில் வளாகத்தில் நானும் என் தங்கைகள், என்னுடைய நண்பர்கள் இரண்டுபேர் என பந்தை உருட்டிவிட்டு விளையாடுவோம்.
    ஒருநாள் எங்கள் ஊரைச்சேர்ந்த கர்ணா என்பவன் என்னை அணுகி, சாமி! உங்க டீமுக்கும் எங்க டீமூக்கும் இந்த ஞாயிற்றுக்கிழமை பெட் மேட்ச் வைச்சுக்கலாமா என்றான்.
    ஏதோ ஓர் ஆர்வத்தில் சரி என்று சொல்லிவிட்டேன். எங்கள் டீமில் மொத்தமே  ஐந்து பேர்தான். ஒருத்தருக்கும் பந்துவீசத் தெரியாது. மட்டையை ஏதோ சுழற்றுவோம் அவ்வளவுதான். எங்கள் மட்டையும் கூட தென்னை மட்டைதான்.
      அன்றைய ஞாயிற்றுக்கிழமை மதியம் குளத்தங்கரை மேட்டில் மேட்ச். இரண்டுமணிக்கு சென்றோம். எதிர்வெயில் கொளுத்தி எடுக்க எவ்வளவு பெட் என்றான் கர்ணா.
   ஐந்து ரூபாய் வைச்சுக்கலாமா? என்றேன் தயக்கத்துடன்!
  அவனுக்கு வாயெல்லாம் பல்! ஓக்கே! அஞ்சுரூபா என்றான். அப்போதெல்லாம் எட்டணாவுக்கு எல்லாம் பெட் மேட்ச் வைத்து ஆடுவார்கள் இது எனக்கு அப்போது தெரிந்திருந்தால் நாலரை ரூபாய் மிச்சம் ஆகியிருக்கும். ஓர் கவுரவத்திற்கு அஞ்சு ரூபாய் என்று சொல்லிவிட்டேன். அவனும் இளிச்சவாயர்களிடம் அகப்பட்ட வரை லாபம் என்று தலையாட்டிவிட்டான்.
     உங்க கிட்ட பவுலர் யாரும் இல்லை! ராஜி மாங்கா பால் போடறான்! பரவாயில்லை! எங்க சைட்லருந்து நாகராஜை அனுப்பறேன்! பத்து பத்து ஓவர் என்றான். ஏதேதோ சொன்னான். எல்லாவற்றிற்கும் தலையாட்டினோம். டாஸில் வென்றான் பேட்டிங் எடுத்துக் கொண்டான்.
     எங்கள் ஐவரோ அங்கே குளத்து மேட்டில் இருந்த சிலரை சேர்த்து டீமூக்கு எட்டு பேர் என்று பிரித்து ஆடினோம். அவங்க டீம் நாகராஜுக்கு எங்க டீமில் வந்து ஆடவே பிடிக்கவில்லை! வேண்டா வெறுப்பாக ஏதோ வீசினான். பவுண்டரிகள் சிக்சர்கள் பறந்தன. மாங்கா பால் போட்ட ராஜி சில விக்கெட் எடுக்க நானும் ஏதோ என்பங்கிற்கு ஓவர் வீசினேன். பத்து ஓவர்களில் எழுபது ரன்களை விளாசி விட்டார்கள்.
   நாங்கள் விளையாட ஆரம்பித்தோம். அவர்கள் கொண்டுவந்திருந்த பேட்டை எங்களால் தூக்கவே முடியவில்லை! அதை தூக்குவதற்குள் பந்து ஸ்டம்ப்ஸை பதம் பார்த்தது. அப்புறம் எங்கள் தென்னை மட்டையிலே ஆடுகிறோம் என்று அதிலேயே விளையாட ஆரம்பித்தோம்! அதுவரை உருட்டி போட்டு விளையாடியவர்கள் நாங்கள். பவுலிங்கை எதிர்கொள்ள ரொம்பவே சிரமப்பட்டோம்! ஜெயேந்திரகுமார் ரொம்பவும் நன்றாக ஆடினான். பத்து ஒவர்கள் முழுமையாக ஆடவில்லை! எட்டு ஓவர்களில் 45 ரன்களில் சுருண்டுவிட்டோம். நான் எப்படி ஆடினேன் என்று கேட்கிறீர்களா? வீசிய பந்தை பவுண்டரிக்கு அடித்ததோடு ஸ்டம்ப்ஸையும் தட்டி ஹிட் விக்கெட் ஆகிவிட்டேன்! ஐந்து ரூபாய் தண்டம் ஆனதுதான் மிச்சம். ஆனாலும் பெரிதாக எதையோ சாதித்துவிட்டதாக மனதில் ஒவ்வொருவருக்கும் எண்ணம் இருந்தது. நம்மாலும் ஆட முடியும் என்று ஒன்றுமே தெரியாமல் ஆடப்போனாலும் குறிப்பிட்ட அளவிற்கு ஸ்கோர் செய்தோம்.
    அதன் பின்னர் வளர்ந்து அந்த பகுதியிலேயே எங்கள் அணிதான் சிறந்த அணியாக இருந்தது. அந்த அணியில் இருந்த நாகராஜும் எங்கள் அணிக்கு வந்துவிட்டான். அவனது ஸ்பின் பவுலிங்கை எல்லொரும் விளாசி அவன் புகழ் மங்க ஆரம்பித்த சமயம் ஒரு முக்கிய போட்டியில் முதல் ஓவரை அவனை வீசச் சொன்னேன். நானா…? வேண்டாம் என்றான்.
    இல்ல நீ தான் போடனும் என்றேன். முதல் பந்தையே தூக்கி அடித்தான் எதிரணி பேட்ஸ்மேன். பந்து நடுமட்டையில் படாமல் முனையில் பட்டு உயரே எழும்பி நாகராஜிடமே கேட்ச் ஆனது.
துள்ளிக் குதித்தான். அப்போது அவன் என்னை பார்த்த பார்வையில் ஓர் நன்றி தெரிந்தது. முன்பு அவன் செய்த தவறு அவனை உறுத்தி இருக்க வேண்டும்.
     ஒரு கேப்டன் தன் அணியில் உள்ள வீரர்களை நம்பவேண்டும். கடைசிவரை வெற்றிக்கு போராட வேண்டும். அப்படியே சரண்டர் ஆகக் கூடாது. இது எதுவும் இப்போதைய இந்திய அணியிடம் இருப்பதாக தெரியவில்லை!
    சொன்னால் நம்ப மாட்டீர்கள்! ஓவராக அல்டாப் விடுவதாக கூட நினைத்துக் கொள்வீர்கள். ஆனாலும் சொல்கிறேன். எங்கள் கோயில் வளாகத்தில் பந்தை குத்திப்போட்டு கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்தோம் இரண்டு அணிகள் அணிக்கு 6 பேர். எங்கள் அணியில் ஆறு பேரும் சேர்ந்து எடுத்த ரன்கள் ஆறுதான். எதிர் அணியிலோ அந்த ஆறு ரன்களை ஒரே ஷாட்டில் எடுக்ககூடிய பலமான வீரர்கள் இருக்க நான்கே ரன்களில் அவர்களை சுருட்டி வென்றுவிட்டோம். மூன்று ஓவர்கள் மூன்றே ரன்கள் ஐந்துவிக்கெட் எடுத்து அவர்களை தோற்கடிக்க செய்தேன். ஐந்து விக்கெட் நான் எடுத்தாலும் உதவியது மற்ற ஐந்து நபர்கள். அவர்களை நான் நம்ப அவர்களும் நம்பினார்கள் ஜெயித்தோம். இந்த நம்பிக்கையும் அர்ப்பணிப்பும் இன்றைய  கிரிக்கெட் மட்டும் அல்ல வேறு எதிலும் இருப்பது போல தெரியவில்லை!
    அப்புறம் எப்படி உயர்வுகள் வரும்? வெற்றிகள் குவியும்? கொஞ்சம் அல்ல! நிறையவே யோசிக்க வேண்டிய விசயம்தான் இல்லையா?

டிஸ்கி} பத்தி எழுத்துக்கள் பற்றி நீண்ட நாளாகவே ஓர் ஆர்வம்! எனவே முயன்று பார்த்துள்ளேன்!  உங்கள் கருத்துக்களை அறிந்து இதை தொடர்வதா விடுவதா என்று முடிவு செய்வேன்!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Wednesday, January 28, 2015

சிரிச்சுக்கிட்டே இருக்கணுமா! சரிதாயணம் படிச்சுகிட்டே இருங்க!

சிரிச்சுக்கிட்டே இருக்கணுமா! சரிதாயணம் படிச்சுகிட்டே இருங்க!

வலைப்பூ தொடங்கி ஒரு வருடம் கடந்த பின் தான் பாலகணேஷ் அவர்களின் மின்னல் வரிகள் தளத்தினை படிக்க ஆரம்பித்தேன். அதில் அவர் எழுத்தாளர்களுடனான தனது அனுபவத்தினை சுவைபட சொன்னவிதம் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. நகைச்சுவையாக எழுதவும் செய்வார் என்பது அவர் முதல் புத்தகமான சரிதாயணம் வெளியிட்ட போதுதான் தெரிந்தது.
அப்போது அந்த புத்தகத்தை வாங்கி படித்து மகிழ்ந்தேன்! இரண்டாம் ஆண்டு பதிவர் சந்திப்பில் அவரை சந்தித்தாலும் என்னை அவர் அறிந்திருக்கவில்லை! அவரிடமே அன்று வெளியான பதிவர்களின் நூல்களை வாங்கினேன். தளிர் சுரேஷ் என்று அறிமுகம் செய்து கொண்டு! ஆனால் அவரின் பரபரப்பான பணிகள் காரணமாக அதை மறந்திருக்கலாம்.
பின்னர் எனது வலைப்பூவில் சிறுகதை ஒன்றை எழுதி அவர் மதிப்பீடு செய்தால் நன்றாக இருக்கும் என்று கருத்திட்டேன்! அவரும் வந்து சில திருத்தங்களை தந்தார். அவ்வப்போது வலைப்பக்கம் வந்தாலும் சில கதைகளுக்கு அவரது பின்னூட்டம் இல்லையே என்று வருந்தி இருக்கிறேன்!
     இதற்கிடையில் அவரது இந்த இரண்டாவது நூல் வெளியீடு நடந்தபோது கலந்து கொள்ள வேண்டும் என்று விரும்பியும் போக முடியாத சூழல்! தற்போது புத்தக கண்காட்சியில் அவரை சந்தித்தேன். அவரது புத்தகத்தை கேட்டு வாங்கினேன். நான் வாங்கிய நூல்களில் சங்கதாராவுக்கு அடுத்து இதைத்தான் படித்து முடித்தேன்.
     வித்தியாசமாக இந்த தொகுப்பில் உள்ள சிறுகதைகளை பிரசுரிக்காத பத்திரிக்கைகளுக்கு நன்றி என்று சொல்லி அசத்தி இருக்கிறார் வாத்தியார். சரிதா என்ற ஒற்றை கதாபாத்திரத்தை இந்த நூலின் நாயகியாக்கி புகுந்து விளையாடி இருக்கிறார் வாத்தியார். ஒவ்வொரு கதையும் நகைச்சுவை விருந்தை படைக்கிறது. அதுவும் முதல் கதையில் வரும் வைதீக பிராமணர் நரசிம்ம சாஸ்திரிகள் பாத்திரப்படைப்பு வெகு ஜோர்! அதற்கு விவியன் ரிச்சர்ட்ஸுக்கு கட்டுக்குடுமி வைத்த கிராபிக்ஸ் அசத்தல்! அந்த கதையை படித்து வயிறு வலிக்க சிரித்து மகிழ்ந்தேன்! அத்தனை நகைச்சுவை விருந்து! ஏரோப்ளேன் இப்போ இறங்கோ ப்ளேன் ஆகப்போறதாம்! என்ற வரிகளை எரிச்சலுடன் சொன்னாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை!
   நகைச்சுவை கதையாயினும் சரிதாவின் சபதத்தில் அனுமன் சீதையை கண்ட காட்சியை விவரிக்கையில் அனுமன் கண்ணுக்கு வெள்ளைப்பூ சிவப்பாக தெரிந்ததற்கு அவர் தரும் விளக்கம் அருமை!
   சரிதாவை பயமுறுத்த மோகினிப்பிசாசு ஐடியா செய்து உண்மையான மோகினி பிசாசிடம் மாட்டிக்கொள்வது பின்னர் சரிதாவே அந்த பிசாசை விரட்டுவது செம காமெடி ஸ்டோரி!
     சீரியலில் நடிக்கும் சரிதா வேண்டுமென்றே ரீடேக் வாங்கி நடிகையை அறைவது செம கலாட்டா! செல்போன் வாங்கித்தரச்சொல்லி அதில் சரிதா செய்யும் கலாட்டா அனைத்தும் சிரிப்புக்கு கியாரண்டி! இவர் சொல்லும் உவமைகள் சிரிக்க மட்டுமல்ல ரசிக்கவும் வைக்கிறது. சொத்தை கடலையை மென்னுட்ட மாதிரி ஆயிருச்சு சரிதாவோட மூஞ்சி! அதற்கோர் உதாரணம்.
   இறுதியாக எம்.பி ஆக ஆசைப்பட்டு சரிதா கலைஞருக்கு போன் செய்து கலைஞர் தாத்தாவா எனக்கு ஒரு சீட் வேணும் என்று கேட்பது செம ஹைலைட்! இந்த கதையை இரண்டு முறை படிச்சு ரசித்தேன்!
  இப்படி 64 பக்கங்களுக்கு சிரிக்க வைத்த வாத்தியார் புத்தகத்தை திருப்பி புரட்டச்சொல்லி அடுத்த 64 பக்கங்களுக்கு வித்தியாசமான கதைகளாக தருகிறார். நான் இருக்கிறேன் அம்மா!  என்பது தலைப்பு! கதையும் அசத்தல்! அமானுஷ்யம் கலந்த இந்த கதை முதலில் சாதாரணமாக சென்று இறுதியில் முடிக்கையில் நம்மை அசத்துகிறது. க்ரைம் கதை அசத்தலாக எழுதுகின்றார் வாத்தியார் கிளி, கிலி, கிழி என்ற ஒரு கதையே அதற்கு உதாரணம்!கொன்னவன் வந்தானடி! நானும் ஒரு கொலைக்காரனும் கதைகள் சுவாரஸ்யமான நடையில் நம்மை வசீகரிக்க குழந்தை என்ற கதை திருமணமாகி குழந்தை இல்லாத ஒரு மருமகள்- மாமியார் மனப்பாங்கை விவரித்து மருமகள் – மாமியாரிடம் ராசியாக அந்த குழந்தையே காரணமாக அமைவது நெகிழ்ச்சியாக இருந்தது. பெற்றோர்களின் விருப்பங்களை குழந்தைகளிடம் திணிக்க கூடாது என்று சொல்லும் எனக்கொரு மகன் பிறப்பான் கதை பெற்றோர்களுக்கு சரியான அறிவுரை கூறும் வகை கதை. அமைதியின் பின்னே என்ற கதை இன்றைய சமூக அவலத்தை நச்சென்று சொல்லி செல்கிறது.

   இப்படி ஒரு எழுத்தாற்றல் மிக்கவர் பணிவுடன் சக பதிவர்களையும் மதித்து நட்பு பாராட்டி அவர்களை ஊக்குவிப்பது என்பது மிகவும் போற்றத்தக்க ஒன்று. நான் பெரிய பிஸ்தா என்று பந்தா இல்லாமல் தோழமையுடன் பழகும் வாத்தியார் பாலகணேஷ் இன்னும் பல படைப்புக்களை தந்து நம்மை மகிழ்விக்க வேண்டும்.
 நகைச்சுவை    பொழுது போக்குக்காக மட்டுமன்றி நல்ல தகவல்களையும் கதைகளின் ஊடே தரலாம் என்று வாத்தியார் இந்த நூலில் நிரூபித்து இருக்கின்றார். ஒரே மணி நேரத்தில் விறுவிறுவென வாசித்து முடிக்க கூடிய வகையில் அமைந்த கதைகள் அனைத்துமே சிறப்பு.

சரிதாயணம்@ சிரிதாயணம், நான் இருக்கிறேன் அம்மா!
 எழுதியவர் பால கணேஷ்
வெளியிட்டோர்:
ஸ்ரீ பால கங்கை பப்ளிகேஷன்ஸ், 32/1 கங்கையம்மன் கோயில் தெரு, வடபழனி, சென்னை 26
பக்கங்கள் 128
விலை ரூ 70


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Tuesday, January 27, 2015

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

தளிர் ஹைக்கூ கவிதைகள்! 9

தூக்கில் தொங்கவிட்டு
வேடிக்கை!

குளிர்பான பாட்டில்கள்!


எழுதிவிட்டு 
அழிக்க முடியாது!
வாழ்க்கை!

வண்ணப் பூக்கள்
வண்டுகள்மொய்க்கவில்லை!

வாசலில் கோலம்!

மிதிக்க மிதிக்க
உருண்டு ஓடியது!

மிதிவண்டி!

விரட்ட விரட்ட
 துரத்துகிறது
தூக்கம்!

ஆட்டம் நின்றது
விடைபெற்றது
காற்று!

காத்து நிற்கையில்
பொறுமை இழக்கிறது
மனசு!

கன்று ஈன்றது
பாலூட்டவில்லை!

வாழை!

விரியாத இதழ்களில்
குடிகொண்டது
மவுனம்!

கீறல் விழுந்ததும்
 கீச்சிட்ட வானம்!
இடி மின்னல்!

ஆடை விலக்கியதும்
ருசிக்கவில்லை!

பால்!

சிறகு விரித்தன
வெண் தாமரைகள்
வயலில் கொக்குகள்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே!

(மீள்பதிவு)


Saturday, January 24, 2015

நினைவில் நிற்கும் நெய்க்குள தரிசனம்!

நினைவில் நிற்கும் நெய்க்குள தரிசனம்!வழிபாடு எத்தனையோ விதம்! நம்மை படைத்து ஆட்டுவிக்கும் இறைவனுக்கு விதவிதமாய் அபிஷேகங்கள் அலங்காரங்கள் செய்து நிவேதனங்கள் படைத்து ஆராதித்து மகிழ்வது தமிழர் பண்பாடு.
    விதவிதமான மலர்கள், பட்டாடைகள், காய் கனிகள் என்று வகைவகையாக அலங்காரங்கள் செய்வதுண்டு. அதே போல படையலும் விதவிதமான அன்னங்களுடனும் பட்சணங்கள் பழங்களுடன் படைப்பது உண்டு.
     அதில் வித்தியாசமான ஒன்றுதான்! படைக்கும் படையலில் ஆண்டவன் பிம்பத்தை காண்பது. சர்க்கரை பொங்கலை குளமாக்கி அதனுள் நெய்யை உருக்கி விட்டு அதில் சுவாமியின் பிம்பத்தை கண்டு வழிபடுவது ஓர் மரபு.
    இதை அன்னப்பாவாடை, மஹா நைவேத்தியம், பள்ளயம், என்று பலவாறாக சொல்லுவர். பெயர் வேறு வேறாக இருந்தாலும் செயல் ஒன்றுதான். ஆண்டவன் தரிசனமும் அவனது கருணையும் பெறுவதுதான் நோக்கம்.
        அன்னம் விஷேசமான ஒன்று. எத்தனைதான் பொருளும் பணமும் கொடுத்தாலும் மனம் நிறையாது. அன்னத்தை தானம் அளிக்கும் போது மனசு மட்டுமல்ல வயிறும் நிறைகிறது. அரிசி லிங்க வடிவில் அமைந்துள்ளது. அதை சமைத்து இறைவனுக்கு படைத்து உண்ணும் போது சாதம் பிரசாதம் என்ற பெயர் பெறுகின்றது.
    நம்மையும் உலகையும் படைத்து காக்கும் இறைவனுக்கு நாம் செய்யும் ஒரு சிறு நன்றியே படையல்! இறைவன் என்று சொல்லும் போது சிவனும் சக்தியும் சேர்ந்தே நினைவுக்கு வரும். உமையொரு பாகனான இறைவனை சேர்த்தே வழிபடுவது சிறப்பு.
     அம்பிகைக்கு மிகவும் பிடித்த அன்னம் சர்க்கரை பொங்கல். குடான்ன ப்ரீத மானசாய நம : என்று ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமாவில் வருகின்றது. அத்தகைய சர்க்கரை பொங்கலில் நெய்யை உருக்கிவிட்டு குளம் செய்து அதில் அம்பிகையின் உருவை காணும் போது மெய் உருகி நிற்போம்!
    இத்தகைய நெய்க்குள தரிசனம் தமிழகத்தில் திருமீயச்சூர் ஸ்ரீ லலிதாம்பிகை ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறுகிறது.
    வட தமிழகத்தில் பொன்னேரி அருகே அமைந்துள்ள ஸ்ரீ காரிய சித்தி கணபதி, ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பிகை சமேத ஸ்ரீ வாலீஸ்வரர் ஆலயத்தில் நான்காவது வருடமாக இந்த முறை 26-1-2015 அன்று கும்பாபிஷேக மூன்றாவது வருட நிறைவையோட்டி காலையில் நவகலச பூஜை, விஷேச திரவிய ஹோமம், விஷேச திரவிய அபிஷேகம், பூர்ணாஹுதி நடைபெற்று கலச அபிஷேகம் நடைபெறும்.
     அன்று மாலை ஆறு மணி அளவில், ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பிகைக்கு சிறப்பு அலங்காரம் செய்விக்கப்பட்டு அன்னப்பாவாடை எனப்படும் மஹா நைவேத்தியம் படைக்கப்படும்.
   இதில் சர்க்கரை பொங்கல், புளியோதரை, தயிரன்னம், வடை, பாயசம், பலவகை கனிகள், பட்சணங்கள், இளநீர், பானகம் போன்றவை படைக்கப்படும்.
    சர்க்கரை பொங்கலில் நெய்க்குளம் செய்து நெய் உருக்கி விடப்பட்டு அதில் அம்மனின் பிம்பம் தோன்றும்.
     நெய்க்குளத்தில் அம்மனின் தரிசனம் காண்பது ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமாவளி பாராயணம் செய்த பலனை நல்கும். இந்த நெய்க்குளத்தில் அம்மனை சர்வலங்கார பூஷிதையாக காணுகையில் நம் மெய் சிலிர்க்கும்.
      ஆண்டுக்கு ஒரு முறையே இத்தகைய காட்சியை காண முடியும். இதனால் ஆலய சுற்றுவட்டார கிராம மக்களும் பக்தர்களும் திரளாக வந்திருந்து இந்த காட்சியை கண்டு அம்பிகையை வழிபட்டு மகிழ்வர்.

   இந்த ஆலயம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையானது. பரிகாரஸ்தலம், திருமணத்தடை, ராகு-கேது- சர்ப்ப தோஷ நிவர்த்தி ஸ்தலமாகும்.


  சென்னை- கும்முடிபூண்டி மார்க்கத்தில் பஞ்செட்டி பேருந்து நிலையத்தில் இருந்து மேற்கே செல்லும் சாலையில் மூன்று கிலோமீட்டர் தொலைவில் ஆலயம் அமைந்துள்ளது. பேருந்து ஆட்டோ வசதிகள் இல்லை!
      ஆலயம் காலை 7. மணி முதல் 12 மணிவரை மாலையில் 5 மணி முதல் 7 மணி வரையிலும் திறந்து இருக்கும்.

சிறப்பான இந்த நினைவில் நிற்கும் நெய்க்குள தரிசனத்தை கண்டு ஸ்ரீ ஆனந்த வல்லி அம்பிகையின் அருளினை பெற்றுய்யுவோமாக!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Friday, January 23, 2015

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 30

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 30

 1. குருவி மாதிரி கொஞ்சம் கொஞ்சமா சிட் பண்டுல பணம் சேர்க்கறதா சொன்னியே என்ன ஆச்சு?
    மொத்தமா கொத்திக்கிட்டு போயிட்டான்!

 1. தலைவர் ஏன் இடைத்தேர்தல்ல நிக்க மாட்டேன்னு சொல்றாரு?
இத்தனை வயசுக்கு மேல ‘இடை”த் தேர்தல்ல போட்டியிடறது அசிங்கம்னு சொல்றாரு!

 1. ஏ.டி. எம். ல நுழைஞ்ச தலைவர் எதுக்கு பின்னால திரும்பி பார்த்து நம்பரை சொல்ல சொல்றார்?
மிசின் பின் நம்பர் கேட்டுச்சாம்!

 1. யோவ்! எதுக்குயா ஸ்பேனர் கொண்டுவந்து பஸ் சீட்டை கழட்டுற?
நீங்கதானே சீட்டு வாங்கிக்கன்னு சொன்னீங்க! வாங்கின சீட்டை எடுத்துட்டு போக வேண்டாமா?

 1. டாக்டர் எனக்கு தூக்கத்துல நடக்கிற வியாதி இருக்கு! தூக்கத்திலேயே நடந்து வெளியே வந்துடறேன்!
அது ஒண்ணும் பிரச்சனை இல்லை! உங்க கட்டில்ல காலை கட்டிட்டு தூங்குங்க!
 ஆபிஸ்ல கட்டில் எல்லாம் கொண்டுபோக அனுமதிக்கமாட்டாங்க டாக்டர்!

 1. கடையில என்ன கலாட்டா?
சுகர் பிரி பிஸ்கெட்ட வாங்கிட்டு ஃபிரியா சுகர் வேணும்னு இவர் அடம்பிடிக்கிறாரு சார்!

 1. உன் மனைவிக்கு கோவம் வந்தா உன்னோட பர்ஸ் லேசா போயிருமா? எப்படி சொல்றே?
கோவம் வந்தா எல்லா பொருளையும் போட்டு உடைச்சிருவா! புதுசா வாங்கணும் இல்லே!

 1. நான் விக் வைத்திருப்பது எதிரிக்கு தெரிந்துவிட்டதா அமைச்சரே?
    ஏன் மன்னா?
   முடிசூடா மன்னர் என்று நக்கல் அடிக்கிறானாமே!

 1. இந்த வரன் ஏன் உங்களுக்கு ஒத்து வராதுன்னு சொல்றீங்க!
நீங்கதானே சொன்னீங்க பொண்ணு செப்பு சிலையாட்டம் இருக்கும்னு! பீதாம்பரி பவுடர் எவ்வளவு வாங்கிறதுன்னுதான் வேணாம்னு சொல்றோம்!

 1. நம் மன்னருக்கு இதுதான் கன்னிப் போர்!
ஓ!  அதனால்தான் உடலெல்லாம் கண்ணிப்போய் விட்டிருக்கிறதா?

 1. வேண்டாம் வேண்டாம்னு தடுத்தும் என் பொண்டாட்டி கேக்கவே இல்லை!
    அப்புறம்?
    அப்புறம் என்ன? பொங்கலுக்கு வாங்கின ஒரே சர்ட்டும் அவ அடிச்ச அடியில கிழிஞ்ச போயிருச்சு!

 1. தலைவருக்கு குடும்பத்தை விட கட்சிதான் பெரிசு!
     அதனாலதான் கட்சிக்குள்ளேயே குடும்பத்தை வைச்சிருக்காரு!

 1. அந்த டாக்டர் இதுக்கு முன்னாடி கம்பவுண்டரா இருந்திருப்பாருன்னு எப்படி சொல்றே?
ரெண்டு மருந்துகளை எழுதி கலக்கி கலக்கி குடிக்கச் சொல்றாரே அதை வைச்சுதான்!

14. புத்தக சந்தைக்கு எதுக்குய்யா நீ மாட்டை கூட்டிக்கிட்டு வர்றே?
   நீங்கதானே சொன்னீங்க! புத்தகத்தை எல்லாம் பிரிச்சு மேய்ஞ்சிடலாம்னு!

15. ஆ.. ஊண்ணா என் பொண்டாட்டி அவங்க அப்பா- அம்மாவுக்கு போன் பண்ணி வரச்சொல்லிடறா...
    அப்புறம்?
   வேற விதி...! அவங்களுக்கும் சேர்த்து நானே சமைக்க வேண்டியதா போயிடிது!

16. மன்னர் அவர் வெட்டிய குழியில் அவரே விழுந்துவிட்டாரா? எப்படி?
    அவர் வெட்டிய பதுங்குக் குழியில் கால் தவறி அவரே விழுந்துவிட்டார் என்று சொல்கிறேன்!

17. உங்களுக்கு சுகர் இருக்கிறதனாலே கூட்டத்திலே கலந்துக்க மாட்டீங்களா ஏன்?
   நீங்கதானே சொன்னீங்க அந்த பேச்சாளர் இனிக்க இனிக்க பேசுவாருன்னு!

18. நான் பண்ண புண்ணியம்தான் நீங்க என் கணவரா வாய்ச்சி இருக்கிறது!
    ஆனா நான் என்ன பாவம் பண்ணிணேன்னு தெரியவே இல்லையே!

 19. மன்னா! மன்னா! யாரோ நம் ஆராய்ச்சி மணியின் நாவை அறுத்துவிட்டார்கள்!
   பதறாதீர்கள் மந்திரியாரே! எல்லோரும் பொசுக்கென்று அந்த மணியை அடித்து விடுவதால் நான் அதை டிஸேபிள் செய்ய சொன்னேன்!

20. இவ்வளவு வேகமா எங்க போறீங்க?
    ஃபாஸ்ட் புட் கடைக்குத்தான்!

டிஸ்கி} வீடு, மற்றும் கோயிலில் நிறைய வேலைப்பளு! வீட்டில் தங்கைக்கு ஐந்தாம்மாத பூச்சூட்டுவிழா, கோயில் கும்பாபிஷேக ஆண்டுவிழா என்று பிஸியாக இருப்பதால் பதிவுகள் எழுதுவதிலும் படிப்பதிலும் கொஞ்சம் சிரமம். பொறுத்தருள்க!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்!

Wednesday, January 21, 2015

ஆதித்த கரிகாலனை கொன்றது யார்? அதிர்ச்சித் தகவல்!

ஆதித்த கரிகாலனை கொன்றது யார்?


இந்த முறை சென்னை புத்தகக் கண்காட்சிக்கு கொஞ்சம் முன்னதாகவே சென்றுவிட்டேன். வழக்கமாய் பொங்கல் கழித்து செல்வேன். இந்த முறையும் தந்தை உடன் வர 13ம் தேதியே சென்றேன். போன முறை போல் அல்லாது புத்தகம் வாங்குவதற்கென்றே  ஒரு சிறு தொகை தனியாக சேமித்து வைத்திருந்ததால் கொஞ்சம் அதிகமாகவே வாங்கிவிட்டேன். சிறுவர் இலக்கியங்களும், நாவல்களும்தான் அதிகம் வாங்கினேன்.
    இலக்கிய பதிப்பகங்களான காலச்சுவடு, உயிர்மை போன்ற இன்னபிற ஸ்டால்களை கவனித்ததோடு சரி! இலக்கியம் படிக்கிறேன் என்று சொல்லி அப்புறம் வேதனைப்பட நான் தயாராக இல்லை!
   சரி தலைப்புக்கு வருவோம்! பொன்னியின் செல்வன் படித்த எல்லோருக்குமே அதில் ஆதித்த கரிகாலன் மர்மமாக  கொல்லப்பட்டது தெரியும். அந்த கொலையை யார் செய்தார்கள் என்று இறுதி வரை சொல்லாமலேயே கதையை முடித்து இருப்பார் கல்கி. ஆனாலும் யார் கொன்றிருப்பார்கள்? என்ற கேள்வி நாவலைப்படித்த எல்லோருக்கும் ஓர் மூலையில் உட்கார்ந்து அரித்துக் கொண்டிருக்கும்.
   சோழர்களின் இணையற்ற வீரனாக கருதப்பட்ட ஆதித்த கரிகாலன் ஓர் முரடனாகவும் ஈவு இரக்கம் இல்லாதவனுமாகவே வரலாற்று ஆசிரியர்களாலும் புனைக்கதையாசிரியர்களாலும் சித்தரிக்கப் படுகிறான். அவனது மரணமும் மர்மமாகவே இருக்கிறது. அதற்கு விடை தேடி பலர் புறப்பட்ட போதும் இன்னும் சரியான விடை கிடைத்த பாடில்லை!
    அந்த வகையில் சென்ற வருடம் கலைமாமணி விக்கிரமனின் நந்திபுரத்து நாயகி நாவல் வாங்கி நான் ஏமாந்து போனேன். பதிவர் திரு வெங்கட்நாகராஜ் தன் பதிவில் ஒரு நாவலை குறிப்பிட்டுச்சொல்லி அதில் ஆதித்த கரிகாலனை கொன்ற கொலையாளியை இந்த நாவல் ஆதாரங்களோடு சொல்கிறது என்று எழுதி இருந்தார். அந்த நாவலின் பெயர் சங்க தாரா. சென்றவருடம் பெயர் நினைவில்லாதமையால் நந்திபுரத்து நாயகி வாங்கி ஏமாந்தேன்.  அப்புறம் அந்த நாவலை மின் நூலாய் தரவிறக்கி வைத்திருந்தும் படிக்கவில்லை! என்ன இருந்தாலும் மின் நூல்கள் வாசிப்பது எனக்கு அவ்வளவாய் ஒத்துவரவில்லை! இந்த வருடம் புத்தக கண்காட்சியை சுற்றிவரும்போது டிஸ்கவரி புக் பேலசில் இந்த நாவலை பார்த்ததும் உடனே வாங்கி விட்டேன்.
   வாங்கி வந்த மறுநாளே படித்து முடித்தும் விட்டேன்! அவ்வளவு விறுவிறுப்பாக நாவல் இருக்கிறது. எழுத்தாளர் குடும்பத்தை சேர்ந்தவர் காலச்சக்கரம் நரசிம்மா. இவரது இயற்பெயர் டி.ஏ. நரசிம்மன். இந்து பத்திரிக்கையில் பணியாற்றி வரும் இவரின் தந்தை திரைப்பட இயக்குனர் சித்ராலாயா கோபு, தாய் நாவலாசிரியை திருமதி கமலா சடகோபன்.
   பொதுவாக சரித்திர கதைகளில் விரிவான வர்ணணைகள் நம் வாசிப்பை கொல்லும். வர்ணணைகள் அழகென்றாலும் ஓரளவிற்கே என்னால் சகித்துக் கொள்ளமுடியும். நாவலாசிரியர் தன் முன்னுரையிலேயே இதைப்பற்றி ஓர் குறிப்பு கொடுக்கிறார். ஒரு பத்தி அழகான வர்ணணை செய்து இது மாதிரி எழுத என்னாலும் முடியும் ஆனால் அப்படி எழுத நான் விரும்பவில்லை! என்று அடித்துச்சொல்கிறார். இன்றைய தலைமுறை விரும்பும் வண்ணம் அவர்கள் படிக்கும் எழுத்து நடையில் எழுதியிருப்பதாக சொல்லுகிறார்.
   முகவுரையில் ஆதித்த கரிகாலன் பேசுகிறேன்! என்று ஆதித்த கரிகாலன் பேசுவதாய் அவனைப்பற்றியும் அவன் கொலையைப்பற்றியும் எப்படி திரித்துக்கூறப்பட்டுள்ளது என்று விவரிக்கின்றார்.
     கி.பி 1025ல் இராஜேந்திர சோழன் காலத்தில் அவனது அத்தையார் புத்த துறவி தவமணி அடிகள் இறந்ததில் ஆரம்பிக்கிறது கதை. அவர் எழுதியுள்ள ஓர் டைரி போன்ற நூல்தான் சோழ அரசின் மர்ம முடிச்சுக்களை அவிழ்க்கின்றது.56 அத்தியாயங்கள் ஒவ்வொன்றும் நடந்த ஆண்டுகளோடு ஆங்காங்கே சரித்திர ஆதாரங்கள். குந்தவை ஆதித்த கரிகாலன் அன்பு, குந்தவையின் அதிகார ஆசை, பழுவேட்டறையரின் இருதலைக்கொள்ளியான நிலைமை. அன்றைய அரசியல் சூழல்கள். அருண்மொழிவர்மனின் பிறப்பு, அதன் பின் குந்தவையிடம் வந்த மாற்றம், சுகோதயச்சோழன், ஆதித்த கரிகாலனின் பாண்டியநாட்டுப்போர், சாம்பவி என்ற கண்டராதித்த சோழர் போன்ற பாத்திரங்கள் நம் கண் முன்னே நடமாடுகின்றன.
    ஆதித்த கரிகாலன் கொலையுண்ட காட்சியை விவரிக்காமல் விட்டாலும் கடம்பூர் மாளிகையை அவர் விவரிக்கும் விதமும் அதில் ஆதித்த கரிகாலன் இறந்ததை காட்டும் காட்சியும் கண் முன்னே விரிகின்றன.ஒவ்வொரு அத்தியாயத்திலும் நிறைய அடிக்குறிப்புக்கள் வரலாற்று சான்றுகள். பன்னக தத்தர் ஓலைச்சுவடி பாடல் மூலம் இவர்தான் கொலையாளி என்று நமக்கு அடையாளம் காட்டும் போது நமது புருவங்கள் உயர்கின்றன.
    சோழவம்சத்தினரான அவர் ஏன் ஆதித்த கரிகாலனை கொன்றிருக்க கூடும் என்ற நம் கேள்விக்கு தேவையான ஆதாரங்களையும் தந்து கொலையாளி அவர்தான் என்று அடித்து கூறுகின்றார். புனைவில் அதை கொலையாளியும் ஏற்றுக் கொள்கிறார்! நம்மையும் ஏற்றுக்கொள்ள வைக்கும்போது கதாசிரியரின் வெற்றியை சிலாகிப்பதை தவிர வேறொன்றும் சொல்வதற்கில்லை!
      இந்த நாவலில் அறிந்து கொண்ட தகவல் ஒன்று பலாசம் என்று அழைக்கப்படும் முருக்கன் மரம். இது இருவகை உண்டு என்றும் முருங்கல் என்பது தானாக முறியும் முருக்கல் என்பது வெட்டி பிளக்கப்படும் என்றும் சொல்கிறார். இந்த நாவலில் வரும் பைத்தியக்கார அரசி தேவியம்மன் இந்த முருக்கன், முருக்கன் சொற்களை கையாள்கின்றார். நாவலின் கொலையாளியை கண்டுபிடிக்க இந்த சொல் மிகவும் உதவுகின்றது
 பெரிய பழுவேட்டரையரின் பெயர், கண்டன் அமுதன் என்பதையும் இந்த நூலில் அறிந்துகொள்ள முடிகிறது. மேலும் ஆதிசோழர்கள் புரச இலையையும் தலைச்சங்கத்தையும் கொண்டு அபிஷேகம் செய்து முடிசூடிக்கொண்டனர். கிள்ளி சகோதர்கள் காலத்தில் அந்த தலைச்சங்கு சங்கேஸ்வரர் கோயிலில் வைக்கப்பட்டது என்று வரலாற்று தகவலை அறிய முடிகிறது. நூலகம் என்பதற்கு பண்டாரச்சாலை என்ற ஒரு சொல்லையும் அறிய முடிகின்றது. ஆதிசோழ இளவரசி சங்கவை ஸ்ரீ விஜய அரசனை மணந்துகொண்டு ஆதித்யபதி என்ற மகனை பெற்றெடுத்தாள். அவன் உருவாக்கிய நாடு புரசங்க நாடு இன்றைய மலேயாவில் கங்காநகரா என்று அழைக்கப்படுகிறது என்ற வரலாற்றுத் தகவல்கள் கிடைக்கின்றது. இந்த நாவலின் இன்னொரு திருப்பு முனை இராஜ ராஜ சோழனைப் பற்றியது. அவனது பிறப்பின் ரகசியத்தை அவன் யாருடைய பிள்ளை என்பதையும் நாவலாசிரியர் சொல்லும்போது வியப்பின் உச்சிக்கே செல்கின்றோம்.
   இவரது நூல்களை இதுவரை நான் வாசித்தது இல்லை. இந்த நூலை வாசித்தபின் அவரது காலச்சக்கரம் என்ற நூலையும் வாசிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. புத்தகத்தை எடுத்தால் கீழே வைக்க தோன்றாத அளவிற்கு வேகமாகவும் விறுவிறுப்பு நிறைந்ததாகவும் மன நிறைவை தருவதாகவும் அமைந்துள்ள நாவல். அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று. நூல் வடிவமைப்பும், கட்டமைப்பும் அழகாக அமைந்துள்ளது. 100 பக்கங்கள் உள்ள நூல்களுக்கே 100 ரூபாய் தாண்டி விற்கப்படுகையில் இந்த நூலின் விலை மிகவும் குறைவுதான்! குறைந்த விலையில் இப்படி ஒரு பொக்கிஷத்தை தந்த வானதி பதிப்பகத்தாரை பாராட்ட வார்த்தைகள் இல்லை.

 இவ்வளோ சொன்னீங்க ஆதித்ய கரிகாலனை கொன்றது யாருன்னு சொல்லாம விட்டுட்டீங்களேன்னு கேக்கறீங்களா? புத்தகத்தை வாங்கி படியுங்க கண்டிப்பா நீங்க அதிர்ச்சி ஆகிடுவீங்க! ஏன்னா? ஆதித்ய கரிகாலனை கொன்றது யாருன்னா? பொன்னியின் செல்வனை படிச்ச படிக்காதவங்க எல்லோரும் கொண்டாடும் ஒரு கதாப்பாத்திரம்! அவங்க இல்லாம சோழர்குல வரலாறே இல்லை! 
நூல்: சங்கதாரா
வெளியிட்டோர்: வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 17.

பக்கங்கள்: 450  விலை: ரூ 180.

டிஸ்கவரி புக் பேலஸ் கே.கே நகரிலும் இந்த புத்தகம் கிடைக்கும்.

கொசுறு:
    கன்னிமாடம், கோட்டைபுரத்துவீடு, மசால் தோசை 38 ரூபாய், எரியும் பனிக்காடு,சரிதாயணம் கடல் வேந்தன், மாதவியின் மனம், கொலையுதிர்காலம், செப்பு பட்டயம், அகல்யா, விரும்பிச்சொன்ன பொய்கள், ஆ, சிறுகதை எழுதுவது எப்படி? சுஜாதா பதில்கள், டாலர் நகரம், அனுபவ வைத்திய முறை 2 பாகங்கள் இவையெல்லாம் நான் வாங்கிய சில புத்தகங்கள்!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து  ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Monday, January 19, 2015

தளிர் சென்ரியு கவிதைகள் 12

தளிர் சென்ரியு கவிதைகள் 12 1. வேட்பாளர்கள் போட்டி
வெற்றிபெற்றது துட்டு!
 இடைத்தேர்தல்!

 1. வேலைகொடுத்தார்கள்
ஓய்வு எடுக்கிறார்கள்
நூறுநாள் வேலை!

 1. கதைவிட்டதும்
உதைபட்டார்கள்!
மாதொருபாகன்!

 1. கண் பார்க்கையில்
வலி!
திருநங்கையர்!

 1. முடங்கிய அரசு இயந்திரம்!
தொடங்கியது
   கொசு உற்பத்தி!


 1. கொடிகட்டிப்பறந்தன வயல்கள்!
கொட்டப்பட்டன வயிற்றில் மண்!
வீட்டுமனைகள்!

 1. உத்தரவின்றி உள்ளே வந்தன
மெத்தனமில்லாது அழிந்தது பொருளாதாரம்!
அந்நிய ஏற்றுமதி!

 1. காப்பதற்குபதில் எடுக்கின்றன
உயிர்காக்கும் மருந்துகள்!
 விலை!

 1. அடங்காப்பசியில் மருத்துவம்!
விழுங்குகின்றன பணத்தோடு
பல உயிர்கள்!

 1. புகையில்லா போகி!
கொசுவர்த்தியோடு கழிந்தது
இரவு!


 1. கடையான பாதைகள்!
வியாபாரம் செழித்தது!
காவல்துறை!

 1. திருடி எடுக்கிறார்கள்!
திருட்டு போகிறது!
தமிழ் சினிமா!

 1. விலைபோகும் அறிவு!
பெருமிதத்தில் படைப்பாளி!
புத்தகச் சந்தை!

 1. அள்ளிக்குவித்தார்கள்!
வறண்டுபோனது
   விவசாயம்!


 1. மலையை முழுங்கினார்கள்!
செரிக்கவில்லை!
 சகாயம்!

 1. இலவசமாய் கொடுத்தாலும்
கசக்கிறது!
அரசுபள்ளியில் கல்வி!

 1. நூலறுந்தாலும்
விடவே இல்லை பிடி!
 தமிழக அரசு!

 1. நத்தையாய் நகரும் வாகனங்கள்!
களவாடின நேரங்கள்!
வாகன நெரிசல்!

 1. காரணமில்லாமல் கூடி
சத்தம் போட்டன!
சாலை நெரிசலில் வாகனங்கள்!

 1. குடிப்பெயர்ச்சி ஆகையில்
கூட்டிவந்தது சனி!
டாஸ்மாக்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

  

Saturday, January 17, 2015

ஈர்க்குச்சி மனுசன் கதை! பாப்பாமலர்.

ஈர்க்குச்சி மனுசன் கதை!  பாப்பாமலர்.

முன்னொரு காலத்தில் ஒரு நாட்டை ஒரு ராஜா ஆண்டு வந்தாராம். அவர் நாட்டுல ஒரு பெரிய மலை இருந்துச்சாம். அந்த மலை அடிவாரத்துல  சின்ன பசங்க எல்லாம் சந்தோஷமா விளையாடிக்கிட்டு இருந்துச்சாம். அவங்க கூட ராஜாவோட பொண்ணும் மந்திரி குமாரனும் விளையாடுவாங்களாம். மந்திரியோட குமாரனுக்கு ஒரு ஈர்க்குச்சி மனுசன் ஃப்ரெண்டாம். இது என்னாடா இது ஈர்க்குச்சி மனுசன்னு பேரே வித்தியாசமா இருக்குன்னு நினைக்கிறீங்களா? அந்த பையன் ரொம்ப ஒல்லியா குச்சி மாதிரி இருந்ததாலே அந்த பேரை வச்சிட்டாங்க! ஒல்லியா இருந்தாலும் புத்திசாலி பையனாம் ஈர்க்குச்சி மனுசன்.
    ஒரு நாளு எல்லோரும் விளையாடிகிட்டு இருக்கும் போது அந்த மலை மேல ஒரு பெரிய பூதம் ஒண்ணு வந்துச்சாம்! பெருத்த வயிறு! பெரிய பெரிய கை கால்கள் கோரமுகமாய் அந்த பூதம் வரவும் எல்லோரும் அலறியடிச்சிட்டு ஓடிட்டாங்களாம். அந்த பூதம் அவங்களை துரத்திய போது இளவரசி மாட்டிகிட்டாங்களாம் பூதத்து கிட்ட! அந்த பூதம் இளவரசியை அப்படியே தூக்கிக்கினு போயி ஒரு குகையில அடைச்சி வச்சிடுச்சாம்.
  பூதம் இளவரசியை தூக்கிகிட்டு போனது தெரிஞ்சதும் ராஜா மந்திரியை கூப்பிட்டு என் பொண்ணை பூதத்துகிட்ட இருந்து மீட்டுகிட்டு வா! அப்படின்னு சொன்னாராம். மந்திரியோ! ராஜா எனக்கு வயசு ஆயிடுச்சு! என்பையன் உங்க பொண்ணை காப்பாத்திட்டு வருவான்னு சொன்னாராம். ராஜாவும் சம்மதிச்சாராம்.
   வீட்டுக்கு வந்த மந்திரி குமாரனுக்கு இந்த சேதி தெரிஞ்சதும் துள்ளி குதிச்சானாம் ஆகாசத்துக்கும் பூமிக்குமா? இந்த அப்பா ஏன் இப்படி ஒத்துகிட்டு வந்தாரு! அந்த பூதத்தை ஜெயிக்க முடியுமா? அதுங்கிட்ட போயி சாக வேண்டியதுதான் என்னால முடியாதுன்னு சொன்னானாம். மந்திரியோ, நீ இளவரசியை காப்பாத்தி வராவிட்டால் ராஜா  கொன்று போடுவார் அதனால ராஜா கையில சாவா? இல்ல பூதத்து கிட்ட  சாவான்னு நீயே முடிவு பண்ணிக்கன்னு சொல்லிட்டாராம்!
  அப்ப மந்திரி குமாரனோட ப்ரெண்ட் ஈர்க்குச்சி மனுசன், நண்பா! நான் உன் கூட வரேன்! நான் பூதத்தை சாகடிச்சு இளவரசியை மீட்டு தரேன்னு சொன்னானாம்! அதைக்கேட்ட மந்திரி குமாரன் பலசாலியான என்னாலேயே முடியாத காரியம் உன்னால முடியுமா? வீணா நீயும் எதற்கு உயிரை விட போறே இங்கேயே இருன்னு சொல்லி சிரிச்சானாம்!
  பலசாலியால முடியாத காரியங்களை புத்திசாலி சாதிப்பான்! நீ என் நண்பன் உனக்கு ஒரு ஆபத்து வரும்போது நான் உன் கூட இருப்பேன் என்னையும் கூட்டிகிட்டு போ! என்று சொன்னானாம் ஈர்க்குச்சி மனுசன். மந்திரி குமாரணும் ஒத்துகிட்டு ரெண்டு பேருமா கிளம்பி போனாங்களாம்! அப்ப வழியிலே ஒரு ஏத்தகொம்பு இருந்துச்சாம். ஈர்க்குச்சி மனுசன் அதை எடுத்துக்க சொன்னானாம். இத வேற சுமக்கணுமான்னு மந்திரி குமாரன் அலுத்துகிட்டே அதை  எடுத்துகிட்டானாம்.
   இன்னும் கொஞ்ச தூரம் போனதும் ஒரு வண்ணான்சால் இருந்துச்சாம் அதையும் எடுத்துக்க சொன்னானாம் ஈர்க்குச்சி மனுசன். முனகிகிட்டே அதை எடுத்துகிட்டானாம் மந்திரி குமாரன். இன்னும் கொஞ்ச தூரம் போனதும் நிறைய கட்டெரும்புங்க மேய்ஞ்சுகிட்டிருந்துச்சாம்! அதையும் எடுத்து ஒரு சுறுக்குபையில் போட்டுகிட்டானாம் ஈர்க்குச்சி மனுசன்.
அப்படியே நடந்து போன போது ஒரு கழுதை எதிர்ல வந்துச்சாம்! நாங்க ராஜா பொண்ணை காப்பாத்த போறோம்! நீ எங்க கூட வர்றீயான்னு கேட்டாங்களாம்! கழுதையும்வரேன்னு சொல்லிட்டு அவங்க கூட வந்துருச்சாம். அப்படியே நடந்து போகும் போது எருமை ஒண்ணும் மேய்ஞ்சிகிட்டிருந்துச்சாம்! அதையும் ராஜா பொண்ணை காப்பாத்த எங்க கூட வர்றியா?ன்னு கேட்டாங்களாம். அதுவும் அவங்க கூட கிளம்பிடுச்சாம்.
   இப்படி ஏத்த கொம்பு, வண்ணான் சால், கட்டெறும்பு, கழுதை, எருமைன்னு எல்லாத்தையும் எடுத்துகிட்டு இவங்க பூதம் இருந்த குகைக்கு போனாங்களாம்! அங்க குகை மூடி இருந்துச்சாம். எருமை தன்னோட கொம்பால அந்த பாறையை நெம்பி திறந்துச்சாம். எல்லாரும் உள்ளே போனாங்களாம். அங்க ராஜா பொண்ணு நடுங்கி கிட்டே அழுதுகிட்டே உக்காந்திருச்சுச்சாம். ஈர்க்குச்சி மனுசன் அந்த பொண்ணு கிட்ட போயி இளவரசி அழாதீங்க! நாங்க உங்களை காப்பாத்த வந்திருக்கோம்! அப்படின்னு சொன்னானாம்.
  அப்ப வெளியே ஏதோ சத்தம் கேட்டுதாம்! பூதம் வருது நீங்க ஒளிஞ்சிக்கோங்க! என்றுஇளவரசி சொன்னாளாம். இவங்க எல்லாம் ஒரு பாறை இருட்டுல மறைஞ்சிகிட்டாங்களாம்! பூதம் கோவத்தோட உள்ள வந்திச்சாம்! யாருடா என் குகை கதவை திறந்தது!  மரியாதையா வெளியே வாங்கடா! என்று சத்தம் போட்டதாம்.
      அப்ப ஈர்க்குச்சி மனுசன், கொஞ்சம் உரக்க கரகரத்த குரலில் நான் பூதங்களை சாப்பிடற பூதம்! இதுவரைக்கும் 99 பூதங்களை சாப்பிட்டு இருக்கேன்! இப்ப நூறாவது பூதமா உன்னை சாப்பிட வந்திருக்கேன்! அப்படின்னு சொன்னானாம்.
   என்னடா உளற்றே! என்னை நீ சாப்பிட்டு விடுவாயா? அவ்வளவு பெருசா உன் வயிறு என்று பூதம் கேட்டதாம்! நீ நம்ப மாட்டே இல்லே இப்ப என் வயிறை காட்டறேன் பாருன்னு வண்ணான் சாலை எடுத்து காண்பிச்சானாம் ஈர்க்குச்சி மனுசன். பூதத்துக்கு கொஞ்சம் பயமாயிடுச்சாம்! இவ்வளவு பெரிய வயிறா? நம்மளை சாப்பிட்டு விடுமோ? என்று சந்தேகத்துடன் உன் வயிறை காண்பிச்சே ஆனா உன் கால்களை காண்பிக்கலையே?  என்றதாம்.
  அடே முட்டாள்! என் கால்களையும் வயிறையும் ஒன்றாக நீ பார்க்க முடியாது! இதோ பாரு என் கால்கள் என்று ஏத்த கொம்புகளை காண்பிச்சானாம் ஈர்க்குச்சி மனுசன்.  பெரிய பெரிய கொம்புகளை கால்கள்னு நம்புன பூதம், சரி உன் நம்பறேன்! ஆனா உன் குரல் ஏன் இப்படி சன்னமா இருக்குது அப்படின்னு கேட்டதாம்!
  ஏய் முட்டாள் பூதமே ஏதோ உன் கிட்ட சாந்தமா பேசினா? இதுதான் என் குரல்னு நினைச்சிட்டியா இரு என் குரலை காட்டறேன் அப்படின்னு கழுதை காதில கட்டெறும்புகளை விட்டானாம் ஈர்க்குச்சி மனுசன். கழுதை வலி தாங்காமல் “காள் காள்” என கத்தவும்  பூதத்துக்கு ஜண்ணியே கண்டிருச்சாம்.
  இப்பவாவது நம்பறீயா? இதோ என் முகத்தை பார்க்கணுமேஎன்று எருமையின் முகத்தை  காட்டினானாம்  ஈர்க்குச்சி மனுசன். எருமை முகம், ஏத்த கொம்பு கால்கள், வண்ணான் சால் வயிறு கழுதை குரல் என வித்தியாச உருவத்தை கற்பனை செய்த பூதம் வெளவெளத்து போனதாம். அய்யோ என்னை விட்டுடு! என்னை சாப்பிட்டுடாதே! நான் இந்த பக்கமே தலைவச்சி படுக்க மாட்டேன்னு அலறி அடிச்சிகிட்டு ஓடிடுச்சாம்.
  அப்புறம் இளவரசியை கூட்டிகிட்டு மந்திரி குமாரனும் ஈர்க்குச்சி மனுசனும் ராஜாகிட்ட வந்தாங்களாம். ராஜா மகிழ்ந்து போயி மந்திரி குமாரன் தான் இளவரசியை காப்பாத்தினான்னு அவனுக்கு இளவரசியை கட்டி வைக்கிறேன்னு சொன்னாராம்.
  அப்ப மந்திரிகுமாரன். ராஜாவே! நான் இளவரசியை காப்பாத்தலே! ஈர்க்குச்சி மனுசன் தான் இளவரசியை காப்பாத்துனான். அவனுக்குதான் நீங்க இளவரசியை கட்டிக் கொடுக்கணும்னு சொன்னானாம். இளவரசியும் ஆமாம்பா! ஈர்க்குச்சி மனுசன் புத்திசாலி! அவரைத்தான் நான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொன்னாங்களாம்!
  ராஜாவும் இந்த மாதிரி புத்திசாலி பையன் இளவரசிக்கு ஏத்தவன் தான்னு கல்யாணம் பண்ணி வைச்சிட்டாராம். அதுக்கப்புறம் அவங்க சந்தோஷமா வாழ்ந்தாங்களாம்!

டிஸ்கி} என் மகள் வேத ஜனனிக்கு என் அப்பா சொன்ன கதை இது! சுவாரஸ்யமாக இருக்க அந்த நடையிலேயே கதையை பகிர்ந்துள்ளேன்.  உங்க வீட்டு குழந்தைகளுக்கு சொல்லி மகிழுங்கள்! அவ்வப்போது இப்படி பகிரலாம் என்று எண்ணம். உங்கள் கருத்துக்களை கூறுங்கள்! நன்றி!

(மீள்பதிவு)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
Related Posts Plugin for WordPress, Blogger...