Wednesday, December 31, 2014

ஏகாதசி அன்று ஏன் சாப்பிடக் கூடாது? கதம்பசோறு பகுதி 55

கதம்பசோறு! பகுதி 55


போக்குவரத்து தொழிலாளர் போராட்டமும் உறங்கும் அரசும்!

       ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்கு பின் போக்குவரத்து ஊழியர்கள் மீண்டும் போராட களம் இறங்கிவிட்டார்கள். அவர்களது கோரிக்கைகள் ஒன்றும் தள்ளிவிடக் கூடியதாக இல்லை! மக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடம் செல்ல முக்கிய வாகனம் பேருந்துதான். அலுவலகம், பள்ளி, பொழுதுபோக்கிடங்கள் என்று எங்கு செல்ல வேண்டுமானாலும் பேருந்து மிக அவசியம். திட்டமிட்டதற்கு ஒருநாள் முன்னதாகவே போராட்டம் தொடங்கிவிட தமிழ்நாடு ஸ்தம்பித்து போய் இருக்கிறது. அதுவும் விழா நாட்களில் இந்த மாதிரியான போராட்டங்கள் விழாவையே குலைத்துவிடும். வழக்கம் போல அரசு பஸ்கள் இயங்கும் என்று சப்பைக் கட்டு கட்டினாலும் பேருக்கு ஒன்றிரண்டு பேருந்துகளே இயக்கப்படுகின்றன. தமிழகத்தின் ஜனத்திரளுக்கு அவை போதுமானதாக இல்லை! தொழிலாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி ஒரு சுமூக முடிவுக்கு வராமல் அரசு உறங்கிக் கிடக்கிறது. அவர்களுக்கென்ன இப்போது தேர்தலா வரப்போகிறது? அப்போதுதான் ஏழைகளின் கஷ்டம் அவர்களுக்குப் புரியும்.

கடலில் விழுந்த விமானம்!

    காணாமல் போன  ஏர் ஏசியன்   விமானம் கடலுக்குள் நொறுங்கி வீழ்ந்துவிட்டதாக வந்த தகவல் மனதை பிழிவதாக அமைந்தது162 பேர் ஜலசமாதி அடைந்தது எதனால்? விமானத்தின் தொழில்நுட்ப கோளாறா? விமானிகளின் தவறா?. நிறைய விமானவிபத்துக்கள் மற்றும் கடத்தல்கள் விமான பயணத்தையே பாதுகாப்பு இல்லாதவையாக மாற்றிவிட்டது. இதில் பயணித்த பயணிகளின் உறவினர்களின் நிலை இரக்கத்திற்கு உரியது. எத்தனை இழப்பீடு கொடுத்தாலும் இறந்தவர்களை மீட்டுவிட முடியுமா? எந்த பாதுகாப்பும் வழங்காத இதுபோன்ற விமான நிறுவனங்களில் விமானப் பயணம் தேவையா என்ற கேள்வியும் எழுகிறது. இதுவரை 40க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் மீட்பு பணி தொடர்வதாகவும் சொல்லப்படுகிறது. இதில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு புத்தாண்டு மிகவும் சோகமானதாக அமைந்துவிட்டது வேதனைக்குரியது.பெங்களூர் குண்டுவெடிப்பில் உயிரிழந்த பெண்

   பெங்களூரில் கடந்த பதினெட்டாம் தேதி குண்டுவெடிப்பில் உயிரிழந்த பவானியின் உடல் தமிழகம் கொண்டுவரப்பட்டு தகனம் செய்யப்பட்டு உள்ளது. அவரது மகள் இன்னும் தன் தாய் இறந்ததை நம்ப மறுக்கிறாள். அவரது இழப்பு அந்த நடுத்தரக் குடும்பத்தை மிகவும் பாதித்து உள்ளது. பெங்களூரில் தொடர்ந்து குண்டுவெடிப்புக்கள் நிகழ்வதும் மக்கள் பாதிப்பதும் தொடர்கதையாகிவிட்டது. அங்கு வசிப்பதற்கே பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதையே இத்தகைய குண்டுவெடிப்புக்கள் காட்டுகின்றன. நம் தமிழக அரசியல் கட்சிகள் இந்த நிகழ்வை சாதாரணமாக எடுத்துக் கொண்டுவிட்டன. உயிரிழந்த இத்தனை நாள் கழித்து உடல் கொண்டுவரப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் வீட்டைச்சுற்றி சாக்கடை ஓடுகின்றது. அவரது மரணத்திற்கு ஒரு அரசியல்வாதி கூட வருத்தம் தெரிவிக்கவில்லை! சவ அடக்கத்தில் பா.ஜ. தமிழிசை மட்டும் கலந்து கொண்டுள்ளார். இதுவே பெங்களூருவை சேர்ந்த ஒருவர் இங்கே இதுமாதிரி உயிர்விட்டிருந்தால்  அவர்கள் ஓடிவந்திருப்பார்கள். தமிழகத்தில் ஒரு மனிதனின் உயிர்மீது யாருக்கும் அக்கறை இல்லை!

கிழக்கு கடற்கரைச்சாலையின் அபாயங்கள்!

    ஈ.சி.ஆர் எனப்படும் கிழக்கு கடற்கரைச்சாலை அதிவேக பயணங்களுக்கு ஆபத்தானது என்ற கருத்து இருந்தது. இப்போது அந்த சாலையில் பாலியல் துன்புறுத்தல்களும் அதிகரித்துவருவது அந்த சாலையின் பெயரை கெடுத்துவருகிறது. பன்னாட்டு நிறுவனங்கள், ஐ.டி நிறுவனங்கள் அந்த பக்கம் இருப்பதுடன் நீண்ட பீச் இது போன்ற குற்றங்களுக்கு உதவியாக அமைந்துவிடுகிறது. யாரும் தொந்தரவு செய்யாத தனிமையை விரும்பும் காதலர்கள் இந்த சாலையை தேர்ந்தெடுக்க குற்றவாளிகளும் இதையே தேர்ந்தெடுத்து தொலைத்துவிட்டார்கள்! சென்ற வாரத்தில் நீலாங்கரை அருகே ஒர் கல்லூரி மாணவி காதலருடன் பேசிக்கொண்டிருந்த போது போலீஸ் என்று சொல்லி ஒருவர் ஏமாற்றி அழைத்து சென்றிருக்கிறார். அவரிடமிருந்த தப்பித்த மாணவி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக போலீஸில் கூற மருத்துவ பரிசோதனையில் அப்படி நடக்கவில்லை என்று தெரிந்தது. எப்படியோ போலீஸ் குற்றவாளியை கண்டுபிடித்துவிட்டது. அவனும் ஓர் ஐ.டி ஊழியன்.திருமணமாகி குழந்தைகளும் உள்ளது. பல பெண்களிடம் இது போன்ற குற்றங்கள் புரிந்துள்ளான். சிறுவயது முதல் தகாத பழக்கங்கள் ஏற்பட்டதால் இப்படி நடந்து கொண்டதாக கூறியுள்ளான். சமூக விரோதிகளின் உறைவிடமாக மாறும் இந்த சாலையை எப்படி காக்கப் போகிறார்கள் தெரியவில்லை!

தோனி ஆட்டம் ஓவர்!

    மெல்போர்னில் போராடி டிரா செய்த தோனி டெஸ்டில் இருந்து விலகுவதாகச் சொல்லிவிட்டார். ஓரிரு வருடங்கள் முன்பே டெஸ்ட்டில் இருந்து விலகிவிடுவேன் என்று சொல்லியிருந்தார். இப்போது சரியான தருணத்தில் விலகி இருக்கிறார். இந்த தொடர் ஆரம்பத்திலேயே அல்லது இறுதியிலோ விலகி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். போகட்டும் பதவி ஆசை யாரைவிட்டது. புதிய கேப்டன் கோஹ்லி. முதல் டெஸ்ட்டினை போலவே கடைசி டெஸ்டிலும் வித்தியாசங்கள் செய்வார் என்று எதிர்பார்ப்போம்.
 ஆனாலும் தோனியின் இந்த திடீர் ஓய்வு சில சந்தேகங்களை எழுப்பி உள்ளது. அணியினருடன் தோனிக்கு சுமூக உறவு இல்லையோ குறிப்பாக கோஹ்லியுடன் என்ற கேள்வி எழுகிறது. கேப்டன் பொறுப்பை மட்டும் துறந்து இருக்கலாமே ஏன் ஓய்வையும் அறிவித்தார் என்கிறார்கள். நம் நாட்டில் தான் ஒரு பிளேயர் நன்றாக ஆடிவிட்டால் சாகும் வரை அவரை விடமாட்டார்கள் தொடர்ந்து சொதப்பினாலும் தாங்குவார்கள். என்னை பொறுத்தவரை தோனியின் முடிவு சரியென்றே தோன்றுகிறது உலக கோப்பை முடிந்தபின் மற்றவகை போட்டிகளுக்கும் அவர் டாட்டா சொல்லலாம்! தோனி ரசிகர்கள் இந்த இழப்பை தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும்.

கிச்சன் கார்னர்!
  கதம்ப இட்லி! மங்கையர் மலரில் பரிசுபெற்றசமையல் குறிப்பு
 செய்முறை எழுதியவர்: கலைவாணி


   தேவையான பொருட்கள்: புழுங்கல் அரிசி, துவரம்பருப்பு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, பயத்தம் பருப்பு, தலா 100 கிராம். இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து 1.1/2 மணி நேரம் ஊறவைத்து மிக்சியில் கோதுமை ரவை போல அரைக்க வேண்டும்.
  தாளிக்க தேவையானவை: நல்லெண்ணெய் தேவையான அளவு, கடுகு ½ ஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, மிளகு 1 டீஸ்பூன் முந்திரிப்பருப்பு 10 வரமிளகாய் -2 மோர்மிளகாய் -4 கறிவேப்பிலை சிறிது, பெருங்காயம் சிறிது, எலுமிச்சம்பழம் 1 மஞ்சள்தூள் சிறிது, தேங்காய் துருவல்  3 டீஸ்பூன், சமையல்சோடா- 1 சிட்டிகை , உப்பு தேவையான அளவு.

செய்முறை: ஒரு கடாயில் தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றி கடுகு போட்டு வெடித்ததும் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு முந்திரி, மிளகு, வரமிளகாய், பொடியாக கிள்ளிய மோர்மிளகாய், கறிவேப்பிலை போட்டு பொன்னிறமாக வறுக்கவும். அத்துடன் பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், தேங்காய்த் துருவல் இவை அனைத்தையும் அரைத்து வைத்துள்ள மாவில் கொட்டி எலுமிச்சம் சாறு, சமையல் சோடா ,தேவையான அளவு உப்பு கலந்து நன்றாக பிசைந்து கொள்ளவும். பின்பு டம்ளர்களில் நல்லெண்ணை ½ ஸ்பூன் ஊற்றி பின் ஒரு கரண்டி மாவு ஊற்றி இட்லி பாத்திரத்தில் வைத்து 20 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும்
  தண்ணீர் உள்ள பாத்திரத்தில் டம்ளர்களை வைத்து பின் கூறாக உள்ள கத்திக்கொண்டு எடுக்கவும். இந்த இட்லிக்கு இட்லிபொடி புதினா சட்னி தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்.


டிப்ஸ்! டிப்ஸ்! டிப்ஸ்!

இஞ்சி பச்சை மிளகாயை அரைத்து வெங்காயத்துடன் வதக்கி ரவை உப்புமா செய்தால் வாசனையாக இருப்பதுடன் மிளகாயும் வாயில் கடிபடாது.

வாய் துர்நாற்றத்தால் அவதிப்படுபவர்கள் தண்ணீரை கொதிக்க வைத்து சிறிது படிகாரத்தை போட்டு காய்ச்சி இறக்கவும். ஆறியதும் அந்த நீரில் வாய் கொப்பளித்துவர துர்நாற்றம் நீங்கும்.

சிறு குழந்தைகளின் ஷூவிற்கு பாலீஷ் தினமும் போட முடியாவிட்டால் ஒருசொட்டு தேங்காய் எண்ணெய் தடவினால் போதும் பளபளப்பாகிவிடும்.

உலர்ந்த ரோஜா இதழ்களை நீரில் ஊறவைத்து அதில் தேன் விட்டு சாப்பிட்டால் வயிற்றுவலி நீங்கும் உடல் சூடு தணியும்.

சளி இருமல் தொல்லையா? கறிமுள்ளி இலைச்சாறு அல்லது தூதுவளை இலைச்சாறுடன்  தேன் கலந்து சாப்பிட குணமாகும்.

துவையல் அரைக்கும்போது புளிக்கு பதிலாக மாங்காயை நறுக்கி சேர்த்து அரைத்தால் சுவையாக இருக்கும்.

பதிவர் அறிமுகம்!

 கோயில் பிள்ளை

கோயில் பிள்ளையின் செதுக்கல்கள் என்ற வலைப்பூவில் எழுதி வருகிறார். இவரும் அமெரிக்கா வாசி என்று நினைக்கிறேன்! சுவையான பல தகவல்களை இயல்பான நடையில் எழுதுவது இவரது பலம்! நகைச்சுவையில் அசத்துகிறார். சமூக விழிப்புணர்வுடன் புகையில்லா உலகம் புத்தாண்டில் மிளிர வேண்டும் என்று எழுதி உள்ளார். இவரது தள இணைப்பு   கோயில் பிள்ளையின் செதுக்கல்கள்!ஏகாதசி அன்று ஏன் சாப்பிடக் கூடாது?

   உலகில் மூடப்படாத தொழிற்சாலை சமையலறை. ஓயாது வேலை செய்வது வயிறு. ஆண்டின் அனைத்து நாட்களிலும் இவை இயங்கிக் கொண்டேதான் இருக்கின்றன. மனித கவனமும் பெரும்பாலான நேரம் இதற்கே செலவழிகிறது. ஏகாதசியன்று மட்டும் இந்த தொழிற்சாலையை மூடிவிட்டால் பக்தர்களுக்குப் பெருமாளிடம் 100 சதவிகிதம் கவனம் வந்துவிடும். அதனால் சாப்பிடக் கூடாது என்பது உருவாகி இருக்கலாம்.
  உப என்னும் சொல்லுக்கு அருகில் என்று பொருள். வாசம் என்றால் இருப்பது என்று அர்த்தம். வைகுண்ட ஏகாதசி அன்று பெருமாளையே நினைத்து இருக்கும் உயிர்வாசமே உபவாசம்.
(தமிழ் இந்துவில் படித்தது)

படிச்சதில் பிடிச்சது!
டாக்டரை சந்திக்காத நோயாளி!


  மனோதத்துவ டாக்டரிடம் வந்த ஒருவன், டாக்டர்! நான் எப்பவுமே பரபரப்பாக இருக்கிறேன்! உள்ளத்திலே அமைதியே இல்லை! என்றான்.
   அவனை நன்கு பரிசோதித்த டாக்டர், கவலைப்பட தேவையில்லை! உங்களுக்கு ஒரு நோயும் இல்லை! யார் யார் உங்களுக்கு எரிச்சல் உண்டாக்குகிறார்களோ அவர்களைவிட்டு சிறிது காலம் விலகி இருங்கள் எல்லாம் சரியாகிவிடும். வாரத்திற்கு ஒரு முறை என்னை வந்து பாருங்கள் என்றார்.
  இரண்டுவாரம் கழிந்தது நோயாளி வந்து டாக்டரை பார்க்கவில்லை! என்ன ஆயிற்றோ என்ற கவலையில் நோயாளிக்கு போன் செய்தார் டாக்டர்.
  “நீங்கதானே டாக்டர், எரிச்சல் ஏற்படுத்தறவங்களைக் கொஞ்ச காலம் பார்க்க வேண்டாம் என்று சொன்னீர்கள். உங்களைவிட யாரும் எனக்கு அதிக எரிச்சல் தருவதாகத் தெரியவில்லை. அதனால்தான் பார்க்க வரவில்லை! என்று பதில் சொன்னார் அந்த நோயாளி.

(முட்டாள் ஜோக்ஸ் என்ற நூலில் இருந்து)

டிஸ்கி} கதம்பசோறின் வடிவம் புத்தாண்டில் இருந்து மாற்றி அமைக்கபட உள்ளது. இந்த ஆண்டின் கடைசி கதம்பசோறு பதிவு இது. வேளைப்பளுவின் ஊடே எழுதி உள்ளேன்! ஆண்டின் முதல் பதிவு நாளை எழுதுவேனா என்பது சந்தேகமே! பார்ப்போம்! நன்றி!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Tuesday, December 30, 2014

“இருள்” சிறுகதை

 “இருள்”


 சென்னை மெரினா கடற்கரை! இருள் சூழ்ந்த வேளை! கடலலைகள் ஆக்ரோஷமாக மணலைக் கரைத்து எடுத்துச்சென்று கொண்டிருந்தன. நேரம் பத்துமணியை கடந்து கொண்டிருந்ததால் கூட்டம் கலைந்து ஆங்காங்கே ஓரிருவர் மட்டுமே இருந்தனர். அவர்களையும் விரட்டிக்கொண்டிருந்தனர் போலீசார்.
     அப்போது புத்தம் புதிய வாக்ஸ் வேகனில் வந்து இறங்கினாள் அவள். அந்த இருண்ட பிரதேசத்திலும் அவள் முகத்தில் ஒளிவீசியது. அவள் முகத்தில் சோகம் இழையோடினாலும் அதையும் மீறிய ஓர் நம்பிக்கைத் தெரிந்தது. பர்தா அணிந்திருந்த அவள் திரையை மூடினாள். கடலை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
     இந்த நேரத்தில் தன்னந்தனியே நடக்கும் இவளை ஒன்றிரண்டு பேர் வித்தியாசமாக பார்த்தாலும் ஒன்றும் கேட்கவில்லை! சென்னையின் சவுகர்யங்களில் இதுவும் ஒன்று. யார் எப்படி போனால் என்ன? என் வேலையை மட்டும் கவனி என்ற மனோபாவத்திற்கு மக்களை சென்னையின் பரபரப்பு மாற்றி அமைத்து விட்டிருந்தது.
     சரி பர்தா அணிந்த அவள் யார்? உங்களுக்குச் சொல்லாமலா? அவள் “சஞ்சனா” இன்றைய வெள்ளித்திரையின் இளைய தாரகை. தமிழ் திரையுலகிற்கு மலையாளக் கரை தந்த மற்றுமொரு காணிக்கை. தெலுங்கு படம் ஒன்றில் தலையை காட்டியவளை தமிழின் முன்னனி நடிகர் தனக்கு ஜோடியாக நடிக்க சிபாரிசு செய்ய அதிர்ஷ்டம் அவளை அள்ளிக் கொண்டது. அவளின் கர்வம் இல்லாத தயாரிப்பாளர்களுக்கு சிரமம் கொடுக்காத பண்பும் நேரத்திற்கு ஷுட்டிங் வரும் நேரக்கட்டுப்பாடும் எல்லோரையும் கவர்ந்து போக முன்னனி நடிகர்கள் முதல் இளைய நடிகர்கள் வரை அவளையே கதாநாயகியாக போட வேண்டும் என்று வற்புறுத்த ஒரே வருடத்தில் பிஸியான நடிகை ஆகிவிட்டாள். அத்துடன் அவள் நடித்த எல்லா படமும் ஹிட்டடிக்க ராசியான நடிகை என்று முத்திரை குத்தப்பட்டு இன்று கைவசம் பதினைந்துக்கும் மேற்பட்ட படங்கள்.
    எல்லாம் இருந்தும் என்ன பயன்? இன்று அவள் முகத்தில் நிம்மதி தெரியவில்லையே! எதையோ பறிகொடுத்தவள் போல சுதந்திரமாக உலாவக் கூட முடியாமல் இதோ பர்தா அணிந்து நிம்மதி தேடி கடற்கரையினில் நிற்கின்றாள். கடலின் சில்லென்ற காற்று சுகமளித்தாலும் ஓவென்ற இரைச்சல் அவள் மனதை போலவே அழுவதாய் தோன்றியது.
    காற்று அவள் முகத்திரையினை விளக்க ஒன்றிரண்டு பேர் அடையாளம் கண்டு அவளை நெருங்க தவிர்த்து வேகமாக நடந்து காருக்குள் அடைக்கலம் புகுந்தாள்.
  “ச்சே! இதென்ன வாழ்க்கை! நிம்மதியாக காற்றுக்கூட வாங்க முடியவில்லை!” அலுத்துக் கொண்டு முணுமுணுத்தவள் காரை ஸ்டார்ட் செய்து கிளம்பினாள்.
    பரபரப்பான திரையுலக வாழ்க்கை வசதியைத் தந்தாலும் நிம்மதி இல்லாமல் இருந்தது அவளுக்கு. ஆனால் சமீப காலமாக அவளுக்கு ஒர் நிம்மதி கிடைத்தது. அந்த நிம்மதியை தந்தவன் யோகேஷ்.
   யோகேஷ் ஓர் புகைப்பட கலைஞன். முதல் முதலில் அவளை புகைப்படம் எடுத்தவன் அவன் தான். அந்தபடங்கள் சிறப்பாக அமைந்து ஹீரோயின் சான்ஸும் கிடைக்க, அவன் மேல் ஓர் நம்பிக்கை விழுந்துவிட்டது. அதிர்ஷ்டமானவன் என்று. தொழிலிலும் கெட்டிக்காரன்.  அந்த அதிர்ஷ்டம்தான் அவனை தொடர்ந்து புகைப்படம் எடுக்க அவள் அழைத்தாள். இயக்குனர்களுக்கு அறிமுகம் செய்து ஸ்டில்ஸ் எடுக்க வாய்ப்பு வாங்கி கொடுத்தாள்.

        அந்த பழக்கம் அவள் வீடுவரை வருவதில் ஆரம்பித்து அப்படியே ஓய்வு நேரங்களில் சந்திப்பதாக தொடர்ந்தது. யோகேஷ் புகைப்பட கலைஞன் மட்டுமல்ல! சுவையாக பேசுவான். அவன் இருக்குமிடத்தில் சிரிப்புக்கு பஞ்சம் இல்லை! கலகலப்பாக இருப்பான். இது சஞ்சனாவின் மனதில் அவனுக்கு ஒர் இடத்தை தந்துவிட்டது.
    சஞ்சனாவுக்கு என்று அவன் பார்த்து பார்த்து எதையாவது செய்வான். இவளே மறந்துவிட்ட ஒன்றை ஞாபகப்படுத்துவான். அவள் ஒருசமயம் உடல்நலக்குறைவால் படுத்துக்கிடந்தபோது கூடவே இருந்து கவனித்துக் கொண்டான். இதெல்லாம் அவன் அவள் மனதில் இடம்பிடிக்க போதுமானதாக இருந்தது.
   ஒருசமயம் அவள் நினைத்தாள் சினிமாவையே மறந்துவிட்டு யோகேஷை திருமணம் செய்து கொண்டு எங்காவது வெளிநாட்டில் சென்று செட்டில் ஆகிவிடவேண்டும் என்று. ஆனால் இதை எப்படி அவனிடம் கேட்பது?
    அதற்கும் ஒருநாள் வந்தது. ஒருநாள் சீக்கிரம் படப்பிடிப்பு முடிவடைய யோகேஷிற்கு போன் செய்து வரவழைத்தாள். காரில் ஏறிக்கொள்ளும் படி சொல்லிவிட்டாள். டிரைவரை அனுப்பிவிட்டு அவளே டிரைவ் செய்து அந்த நட்சத்திர ஹோட்டலை அடைந்தாள்.
    அங்கே புக் செய்திருந்த டேபிளில் அமர்ந்து வந்து நின்ற பேரருக்கு ஆர்டர் கொடுத்தபின் கேட்டாள். ”யோகேஷ் நீ என்னை பற்றி என்ன நினைக்கறே?”
    ”எதுக்கு?”
   “சும்மா சொல்லேன்!”
    “ம்ம்! நல்ல நடிகை! நல்லா பழகுறே! தலைக்கனம் இல்லே! மொத்தத்தில் ஒரு நல்ல பெண்!”
     “சரி! என்னால குடும்பம் நடத்த முடியும்னு ஒரு நல்ல மனைவியா இருப்பேன்னு நினைக்கறியா?”
    “ அதிலென்ன சந்தேகம்! நீ நல்ல குடும்பத் தலைவியாவும் இருப்பே!”
      “சரி அப்ப என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா யோகேஷ்? நான் உன்னை நல்லா பார்த்துப்பேன்!”
      திடீரென்று இந்த கேள்வி வரும் என்று யோகேஷ் எதிர்பார்க்கவில்லை.
   “என்ன யோகேஷ் பதிலையே காணோம்! என்னை உனக்கு பிடிக்கலையா?”
     “இல்லே ஏன் இப்படி திடீர்னு கேக்கறே?”
  “எனக்கு இந்த வாழ்க்கை அலுத்துப்போச்சு! எனக்குன்னு யாரும் இல்லை! யாரும் என் வாழ்க்கையை பத்தி அக்கறைப்படலை! எல்லோரும் என்னை ஒரு பணம் காய்ச்சி மரமாத்தான் பாக்கிறாங்க! நான் நானா இருக்கணும்னு நினைக்கிறேன்! நீதான் அதுக்கு உதவனும்! செய்வியா?”
    “ சஞ்சனா! நீ எனக்கு கிடைக்கிறது பெரிய பாக்கியம்! சொல்லப்போனா எனக்கும் உன் மேல லவ் இருந்தது! ஆனா சொல்ல தைரியம் இல்லை!”
      “ஓ! அதனாலதான் அன்னிக்கு உடம்பு சரியில்லாதப்ப அப்படி விழுந்து விழுந்து பார்த்துக்கிட்டியா?”
      “ சரி சஞ்சனா! இதுக்கு உன் வீட்டுல சம்மதிக்கனுமே!”
  “அவங்க சம்மதம் எதுக்கு! நான் மேஜர் ஆயிட்டேன்! என்னை யாரும் தடை செய்ய முடியாது!”
   “அப்ப எப்ப கல்யாணம்?”
  “அய்ய! ஐயாவுக்கு அதுக்குள்ள ஆசையைப் பார்! கைவசம் நிறைய படங்க இருக்கு! அதெல்லாம் முடிச்சு கொடுக்கணும்! இல்லேன்னா புரடியூசர்ஸ் பாதிக்கப்படுவாங்க! அதனால ஒரு வருஷம் தள்ளிப் போடுவோம்! புதுப்படம் எதுவும் ஒத்துக்காம இருந்துடறேன்! அப்புறம் வருஷ கடைசியில பிரஸ் மீட் வைச்சு நம்ம கல்யாணத்தை அறிவிச்சுடுவோம்!”
    ”ஓகே சஞ்சனா! நீ சொல்றதுதான் சரி! ஒருவருசம் நிதானிப்போம்! ஆனா புதுப்படம் ஒத்துக்கலைன்னா சந்தேகம் வருமே!”
   “ அதை நான் பாத்துக்கறேன்!”
  இப்படித்தான் யோகேஷை மணப்பது என்று தீர்மானித்து அன்று பேசினார்கள். அப்புறமும் யோகேஷ் நல்லவனாகவே தெரிந்தான். ஒன்றிரண்டு பத்திரிக்கைகளில் கிசு கிசு கூட வந்தது. அவள் அதை பெரிது படுத்திக்கொள்ளவில்லை! ஆனால் யோகேஷோ பத்திரிக்கை காரர்களை பொரித்து எடுத்தான். விட்டு தள்ளு யோகேஷ் என்றபோதும் நம் அந்தரங்கத்தில் எட்டிப்பார்க்க இவர்கள் யார்? என்றான் அப்படிப்பட்டவன் இன்று என்ன பேச்சு பேசி விட்டான்?
     இன்று காலையில் படப்பிடிப்புக்கு வந்திருந்தாள் சஞ்சனா. டூயட் சீன்! ஹீரோவுடன் கொஞ்சம் நெருக்கமாகவே நடிக்க வேண்டி இருந்தது. கூட நடனமாடுபவர்கள் சில தவறுகளை செய்ய டேக் வாங்கிக் கொண்டு இருந்தது.

   அப்போதுதான் அங்கே யோகேஷ் வந்தான். சீன் முடியும் வரை பார்த்திருந்தவன் முடிந்ததும் கேரவனுக்குள் நுழைந்தான்.
   “பிடிக்கலை!” என்றான்
  “எது யோகேஷ்?” என்றாள் சஞ்சனா.
   “இப்படி அவன் கூட கட்டிப்பிடிச்சு கொஞ்சறது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கலை!” என்றான்.
   “இதானே என் தொழில்!”
  “அப்ப விட்டுடு!”
  “ எதை விடச்சொல்றே?”
  “ ஒண்ணு தொழிலை விட்டுடு! இல்லே என்னை விட்டுடு!”
 அதிர்ந்தாள் சஞ்சனா! இந்த வார்த்தைகளை அவனிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை அவள்.
   “ இது நடிப்பு யோகேஷ்! நிஜமல்ல! நடிக்க வந்துட்டா நடிச்சுத்தான் ஆகனும்! இதை போய் பெரிசுபடுத்தாதே!”
  “ எனக்கே பாடம் சொல்றியா? நீ நெனச்சா இப்படி நடிக்க முடியாதுன்னு சொல்லி இருக்கலாம்!”
   “அது தப்பு யோகேஷ்! தொழிலுக்கு செய்யற துரோகம்!”
   “அப்ப எனக்கு துரோகம் பண்ணாலும் பண்ணுவே தொழிலுக்குத் துரோகம் பண்ணமாட்டே!”
   “புரிஞ்சுக்கோ யோகேஷ்! புரடியூசர் கிட்ட கை நீட்டி பணம் வாங்கி இருக்கேன்! டைரக்டர் சொல்றபடி நடிக்க வேண்டியது என் கடமை! இந்த சீன்ல ஆபாசம் இருந்ததா? இல்லையே! லவ்வர்ஸ் எப்படி தொடாம நடிக்க முடியும்? தூர தூர இருந்தா அது நல்லா அமையாது!”
   “நல்லா அமையாதுதான்! நீதான் அந்த ஹீரோ பயலோட  லயிச்சு போயிட்டியே!”
  “யோகேஷ்! ஸ்டாப் இட்! இப்படி பேசறதை முதல்ல நிறுத்து!”
   “உள்ளதை சொன்னா கோபம் பொத்துக்கிட்டு வருதா! பேப்பர்ல போட்டப்ப கூட எனக்கு ஆத்திரமா வந்தது! ஆனா இப்ப நேர்ல பாத்தப்பறம்தான் எல்லாம் புரியுது!”
    “ என்ன புரியுது?”
  “உனக்கும் அவனுக்கும் தொடர்புன்னு பேப்பர்ல எழுதனான்! நம்பலை! இப்ப நல்லாவே புரியுது!”
    “யோகேஷ்!  நீ அத்துமீறி பேசற!”
 “சர்தான் நிறுத்துடி! கட்டிக்கப்பொறவன் முன்னாடியே நீ அத்துமீறி நடந்துப்ப! நான் அத்துமீறீ பேசக்கூடாதா?”
   “இவ்ளோ நடந்ததுக்கப்பவும் உனக்கு இங்க மரியாதை இல்லை! கட்டிக்க போறவன்! அந்த பட்டம் வாபஸ் ஆகி அஞ்சு நிமிஷம் ஆயிருச்சு! உன்னை போர்த்தியிருந்த போர்வை விலகி இப்பத்தான் சுயரூபம் வெளிப்பட ஆரம்பிச்சிருக்கு! நீ வித்தியாசமானவன்னு நினைச்சேன்! சாதாரணமானவன் தான்னு நிருபிச்சிட்டே!”
     “ சஞ்சனா! இப்பவும் நான் உன்னை விரும்பறேன்! ஆனா இப்படி கண்டவன் கூட கட்டிப்பிடிச்சி நடிக்கறதை விட்டுடு!”
      “ஆனா நான் விரும்பலை மிஸ்டர் யோகேஷ்! என்னோட கணிப்பு இங்கேயும் தப்பிச்சிருச்சு! ஆனா நானும் தப்பிச்சுட்டேன்! அதுவரைக்கும் உங்க குணம் இப்பவாவது எனக்கு தெரிஞ்சுதே! அதுக்கு அந்த கடவுளுக்குத்தான் நன்றி சொல்லனும்!  இன்னிக்கு நடிப்புல ஹீரோ கூட டூயட் பாடினதையே சகிச்சுக்க முடியாத உங்களை கட்டிக்கிட்டிருந்தா நாளைக்கு இந்த மாதிரி சீன் வரப்ப எல்லாம் நீங்க என்ன சொல்லுவீங்கலோன்னு பயத்தோட இருக்கணும்!
    காலம் பூராவும் அவஸ்தை பட நான் தயாரா இல்லை! உங்களை மாதிரி சந்தேக மனுசங்களை கட்டிக்கிட்டா வாழ்க்கை சுடுகாடு ஆயிரும்! நல்ல வேளை நான் தப்பிச்சேன்! குட்பை யோகேஷ்!”
      கார் அவளது பங்களா வாசலில் வந்து நின்றது. நினைவுகளில் இருந்து மீண்டாள் சஞ்சனா. காரில் இருந்து இறங்கி வீட்டினுள் நுழைந்து தன் அறைக்குச் சென்று கதவை தாழிட்டுக் கொண்டாள்.
     அவள் மனம் கனத்துப் போயிருந்தது. கண்களில் நீர் கோர்த்திருந்தது. இந்த யோகேஷை எவ்வளவு மதிப்பாக நடத்தினாள்? ஆனால்… அவனும் சராசரி மனிதனாக மாறிவிட்டானே!
    போகட்டும் இந்த உலகம் எப்பவும் இப்படித்தான்! யோகேஷும் உலகத்தில் ஒருவன் தானே? நாம் தான் அவசரப்பட்டுவிட்டோம். தப்பாக அவனை எடைபோட்டு அவமானப்பட்டுவிட்டோம்! நடிகை என்றாலே கேவலமாக அல்லவா பார்க்கிறார்கள்? பெண் என்றாலே இளக்காரமாகிவிடுகிறது! என்ன வெல்லாம் பேசுகிறார்கள்? இந்த காலம் எப்பொழுது மாறுமோ?
    சிந்தனைகளுடன் கட்டிலில் தூக்கம் வராமல் புரண்டாள் சஞ்சனா. ஜன்னல் வழியே பார்த்தாள். வெளியே வானமும் அவள் வாழ்க்கையை போல இருண்டு கிடந்தது.

டிஸ்கி} எனது கையெழுத்து பத்திரிக்கையில் எழுதிய சிறுகதை இது! சில மாற்றங்கள் செய்து இங்கே பதிவிடுகிறேன்! சினிமாத்துறை பற்றி சிறிய கேள்வி ஞானம் மட்டுமே! அதனால் முடிந்த அளவில் எழுதி இருக்கிறேன்.
   சினிமாக்காரர்களை இழிவு படுத்துகிறேன் என்று குற்றம் சாட்டிய அன்பர் ஒருவருக்கும் இதையே பதிலாக தருகிறேன்! நன்றி!


     தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Monday, December 29, 2014

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

1.மறைந்து முத்தம்
 காட்டிக்கொடுக்கின்றன கால்கள்!  
 ஆற்றுமீன்கள்!

2.கரையக்கரைய
 வெளுக்கிறது பூமியின் அழுக்கு!
 மேகம்!

3.எதிரியின் ஊடுறவல்
 ஆட்டம்கண்டது உடல்!
 குளிர்!

4.சலித்தது
 மிஞ்சவில்லை நீர்!
 மேகங்கள்!

5.குளத்தில் இறங்கி குளித்தாலும்
 வாடிக்கொண்டிருந்தது
 மரங்கள்!

6.நனைந்த மரங்களை
 துவட்டி விட்டது காற்று!
 மழை!

7.அருகில் இருந்தும்
 தூர நிறுத்துகிறது!
 எண்ணங்கள்!
 
8.ஒளிக்குப் பின்னே
 ஒளிந்துகொண்டது இருட்டு!
 விளக்கு!

9.ஈரத்தடங்கள்!
 எளிதாய் அழித்தது
 காற்று!

10.கைகொடுத்தவனை
 கழற்றிவிட்டார்கள்!
 துணிக்கிளிப்புகள்!

11.காற்றுவிரட்டுகையில்
 பூமியிடம் அடைக்கலமாகின்றன
 பூக்கள்!

12.அழுத்தம் அதிகமானதும்
  வெடித்தது மேகம்!
  மழை!

13.தாயான குழந்தைமடியில்
  சுகமாய் உறங்குகின்றது
  பொம்மை!

14.காணாமல்போன சூரியன்!
  கதறி அழுதது வானம்!
   மழை!

15.பிடித்தவர்களிடம்
  பிடித்துப்பார்க்கிறது குழந்தை!
  அடம்!

16.படிக்காமலேயே நிறையக்
  கற்றுக்கொடுக்கிறது
  குழந்தைகள்!

17.குளிரெடுத்த பூமி!
  போர்த்திக்கொண்டது
  பச்சைப்போர்வை!

18.வாட்டி வதக்கினாலும்
  ருசிக்கவில்லை!
   மார்கழிப்பனி!

 19.புதைத்துக்கொண்டன
   குழந்தைகளிடம்
   கற்பனை சுரங்கங்கள்!

 20.சுவற்றுக்கும்
    முகவரி தந்தன
    குழந்தைகள்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Saturday, December 27, 2014

யானைக்கு வந்த நாட்டிய ஆசை! பாப்பாமலர்!

   


முல்லை வனக் காட்டில் விலங்குகள் கூடி இருந்தன. வரப் போகும் புத்தாண்டை எப்படி கொண்டாடுவது என்பதுதான் கூட்டத்தின் நோக்கம். நரியார் தான் முதலில் பேச ஆரம்பித்தார்.
   “ மனிதர்கள் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டை விதவிதமாக கொண்டாடுகிறார்கள். இசை நடனம், விருந்து என்று கேளிக்கைகளில் ஈடுபட்டு சந்தோஷமாக கொண்டாடுகிறார்கள் நமது காட்டிலும் இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட வேண்டும்”என்றது.
   அப்போது குறுக்கிட்ட கரடி, “மனிதர்களின் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நமக்குத் தேவையா? அவர்களுக்கு மற்றவர்களின் கஷ்டத்தை பற்றிய கவலையே கிடையாது. நடு இரவில் வீதியில் பட்டாசு வெடித்து  சத்தமான பாடல்களை பாடவிட்டு குடித்து கும்மாளமிட்டு  அயலாரை துன்பபடுத்துகின்றனர்! இதெல்லாம் காட்டுக்கு தேவையில்லை!” என்றது.
     அப்போது மான் ஒன்று பதில் பேசியது, கொண்டாட்டம் என்றால் ஆட்டம் பாட்டம் இருக்கத்தான் செய்யும்! அது இல்லாமல் விழா இல்லை! அது மற்றவர்களை பாதிக்காத வண்ணம் இருந்தால் நல்லது. யாரோ சிலர் செய்யும் தவறுக்கு ஒட்டு மொத்த மனிதர்களையும் குறை சொல்லக் கூடாது! என்றது.
    இதுவரை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த சிங்கராஜா! “ சரி இதுவரை நாம் புத்தாண்டு கொண்டாடியது இல்லை! இந்த வருடம் கொண்டாடுவோம்! ஆனால் அது மற்றவர்களுக்கு சங்கடம் இல்லாத வகையில் கொண்டாடுவோம்!” என்றது.
   எல்லா விலங்குகளும் மகிழ்ச்சி ஆரவாரம் இட்டன.  புத்தாண்டு அன்று விருந்து தயாரிக்கும் பொறுப்பை புலிக்கூட்டம் ஏற்று கொள்கிறது. விலங்குகளுக்கு தேவையான அனைத்து உணவுகளும் நாங்கள் தயாரிக்கிறோம் என்றது புலி.
   அதைக்கேட்டு பலத்த கரகோஷம் எழுந்தது. அடுத்து குயிலும் மயிலும் எழுந்து இசை நாட்டியம் பொறுப்பை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்றது.
    விளையாட்டு போட்டிகளுக்கான பொறுப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என்றன முயல்களும் மான்களும்
   விழா நடத்த தேவையான இடத்தை தயார் செய்யும் பொறுப்பை நாங்கள் செய்கிறோம் என்றன யானைகளும் கரடிகளும்.
   விழாவில் அனைவருக்கும் இனிப்பான பாணம் வழங்கும் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்றது குரங்குகள்.
   இப்படி அனைவரும் ஒவ்வொரு பொறுப்பை ஏற்றுக்கொள்ள விழா ஏற்பாடுகள் தொடங்கின. ஒத்திகைகள் நடந்தன. புத்தாண்டு அன்று காட்டின் மையத்தில் விழாவுக்கான மேடை அமைக்கப்பட்டது. அதில்  முதல் நிகழ்ச்சியாக குயில் பாட மயில் நடனம் ஆடியது. குரங்குகள் நகைச்சுவை செய்து காட்டின. விளையாட்டு போட்டிகளை மானும் முயலும் நடத்த அனைத்து விலங்குகளும் கலந்து கொண்டன. குரங்கார் இளநீர்களை பறித்து வந்து அனைவருக்கும் வழங்கினார்.புலியாரின் தயாரிப்பில் அறுசுவை உணவுகளை அனைவரும் சாப்பிட்டு முடித்து விழாவை நிறைவு செய்து கிளம்பினர்.
    விழாவில் மயிலின் நாட்டியம் மிகவும் பிரமாதமாக பேசப்பட்டது. அதைக் கேட்ட ஓர் குட்டி யானைக்கு தாமும் அப்படி நாட்டியம் ஆட வேண்டும் என்று ஆசை வந்தது. அது தன் தாயிடம் போய், அம்மா அம்மா! நானும் மயில் போல நடனம் ஆட ஆசைப்படுகிறேன்! என்று கேட்டது.
   தாய் யானையோ, குழந்தாய்! மயில் இயல்பிலேயே நடனம் ஆடக்கூடியது. நாம் உடல் பெருத்தவர்கள் நம்மால் அதைப்போல் ஆட முடியாது உன் ஆசையை விட்டு விடு என்றது.
    “ அப்படியானால் மனிதர்கள் எப்படி நடனம் ஆடுகிறார்கள்?” குட்டி யானை கேட்கவே, “அது எப்படி உனக்குத் தெரியும்?”என்று கேட்டது தாய் யானை.
    காட்டில் தான் மனிதர்கள் அடிக்கடி வருகிறார்களே! ஒருநாள் காட்டிற்குள் வந்தவர்கள் கையில் ஏதோ பொருளை வைத்துக்கொண்டு எதையோ பார்த்துக் கொண்டிருந்தார்கள்.நான் தூர இருந்து கவனித்தேன். அதில் ஒரு பெண் நடனம் ஆடிக்கொண்டிருந்தாள்.”
     “இதற்குத்தான் மனிதர்கள் பக்கம் நெருங்காதே என்று சொல்வது? பார்த்தாயா இப்போது உனக்கு விபரீத ஆசை வந்துவிட்டது?”
   ”நான் ஆடமுடியாதா அம்மா?”
   “மனிதர்கள் பயிற்சி எடுத்து ஆடுகிறார்கள்! உன்னால் அதுபோல பயிற்சி எடுக்க முடியுமா? யார் கற்றுக்கொடுப்பார்கள்?”


  “ மயிலிடம் போய் கற்றுக் கொள்கிறேன்!”
“மயிலாட்டம் உனக்கு வராது! எதற்கும் முயன்று பார்ப்போம்!”
   இரண்டும் மயிலிடம் சென்று தங்கள்  விருப்பத்தைக்கூறின.
   மயில், எனக்கு ஆடத்தான் தெரியும் கற்றுக்கொடுக்கத் தெரியாது. பட்டணத்தில் இந்த நடனம் கற்றுக் கொடுப்பவர்கள் இருக்கிறார்கள் அங்கு சென்று பாருங்கள் என்றது.
       இரண்டும் காட்டை விட்டு நகரத்துக்குள் வந்தன. நிறைய அலைந்து ஓர் நடனப் பள்ளியை அடைந்தன. தங்கள் விருப்பத்தை கூறின. அந்த நடனப்பள்ளியின் ஆசிரியை சொன்னார்.
   உன் விருப்பத்தை தடை செய்ய வில்லை! நாளையே உனக்கு கற்றுக் கொடுக்கிறேன். ஆனால் அதற்கான உடையை அணிந்து வா! என்றார்.
    உடை எங்கே கிடைக்கும்?துணிக்கடைக்கு போய் வாங்கி வாருங்கள் என்றார்.
   இரண்டும் அங்கிருந்து அருகில் உள்ள ஒரு துணிக்கடைக்குச் சென்றன. தாய் யானை குட்டி யானையுடன் வருவதை கண்டு கடைக்காரர் மிரண்டு போனார். நில்லுங்கள் நில்லுங்கள்! உள்ளே வந்து பொருட்களை உடைத்து விடப்போகின்றீர்கள் உங்களுக்கு என்ன வேண்டும்?
    பரதநாட்டிய உடை வேண்டும்!
 உன்னுடைய சைஸுக்கு உடை தயாராக இல்லை! வேண்டுமானால் துணி தருகிறேன்!  தைத்து கொள்ளுங்கள். ஆனால் பணம் யார் தருவார்கள்?
   பணமா? அப்படி என்றால்…
துணியை சும்மா தர முடியுமா? அதற்கு விலை இருக்கிறது! அந்த விலையைத் தான் கேட்கிறேன்!
  சரி அது எங்கே கிடைக்கும்? உழைத்தால் கிடைக்கும்!
உழைப்பதா? அப்படி என்றால்…
   ஏதாவது வேலை செய்தால் பணம் கிடைக்கும்!
சரி நீங்களே ஏதாவது வேலை கொடுங்களேன்!”
 “ சரி இந்த் துணி மூட்டைகளை சுமந்து கடைக்குள் வையுங்கள்!”

 மூட்டைகளை இரண்டும் சுமந்தன.
  “பார்த்து பார்த்து கண்ணாடிகளை உடைத்துவிடப் போகிறீர்கள்!”
மாலை முழுதும் வேலை செய்துவிட்டு இப்போது துணியை தருகிறீர்களா? என்றன யானைகள்.
     இந்தாருங்கள் துணி! இதை தையல் காரனிடம் கொடுத்து தைத்துக் கொள்ளுங்கள்! இரண்டும் தையல் காரனை தேடிச்சென்றன.
     ஒரு தையல்காரனை கண்டு துணியை கொடுத்து தைக்கச் சொல்லின. என் வாழ்நாளில் இதுவரை யானைக்கு துணி தைத்தது இல்லை! இதை தைக்க நிறைய கூலி தேவை! அது உங்களிடம் இருக்கிறதா?
     இரண்டும் முழித்தன. கூலியா அப்படின்னா?
இந்த துணியை சும்மாவா தைச்சு கொடுப்பேன்? அதுக்கு பணம் வேணும்? அது உங்க கிட்ட இருக்கா?  இல்லேன்னா கிளம்புங்க!

    அப்போது அங்கு வந்தான் சர்க்கஸ் கம்பெனி முதளாளி ஒருவன். அவன் தன்னுடைய கூடாரத்துணியை தைக்க வந்தான். அவன் மனதில் ஒரு திட்டம் உருவானது. என்னுடன் வருகிறீர்களா என்று நைச்சியமாக அழைத்தான்.
      இல்லை! இல்லை! நாங்கள் நாட்டியம் கற்க வேண்டும்?
   அதற்குத்தான் கூப்பிடுகிறேன்! நான் நன்றாக நாட்டியம் கற்றுத்தருகிறேன்!
    அதற்கு  உடை தைக்க வேண்டுமே?
   அதெல்லாம் இல்லாமலே நான் கற்றுத் தருகிறேன்!
     அப்படியானால் சரி வருகிறோம்!
  இரண்டையும் கூண்டு வண்டியில் ஏற்றினான் சர்க்கஸ் கூடாரத்திற்கு அழைத்து வந்தான். தினமும் அதற்கு பயிற்சிகளை வழங்கினான். சரியாக ஆடவில்லை என்றால் சவுக்கால் அடித்தான். பெரிய யானைக்கும் பயிற்சிகள் வழங்கினான். இரண்டையும் சங்கிலியால் கட்டிவைத்தான்.

இப்போது குட்டியானை தாயிடம் கேட்டது, அம்மா நாட்டியம் கற்க இவ்வளவு கஷ்டப்பட வேண்டுமா? வேண்டாம் அம்மா நாம் காட்டிற்கே போய்விடலாம்!
  சரி வா முதலாளியிடம் கேட்போம்!
    அய்யா! நாங்கள் எப்போது கானகம் போவது?
   என்னது கானகத்திற்கா? இவ்வளவும் எதற்கு சொல்லிக் கொடுத்தேன்! நான் சம்பாதிக்க வேண்டாமா?
 இன்றுமுதல் ஷோ ஆரம்பம்! நான் சொல்லி கொடுத்ததை எல்லாம் அரங்கத்தில் நீ செய்து காட்ட வேண்டும். ஷோ நிறைய வேண்டும்.
      என்னது? நாங்கள் இவ்வளவு கஷ்டப்பட்டு கற்றது நீ சம்பாதிக்கவா? இல்லை முடியாது…!
     உங்களை யார் விடப்போகிறார்கள்! முடியாது என்பதே கிடையாது! நீங்கள் ஆடித்தான் வேண்டும்.
    அம்மா நாம் தப்பிக்கவே வழி கிடையாதா?
   உண்டு! நான் சொல்வதைக் கேள்! இதுவரை நாட்டியம் கற்கவேண்டும் என்ற ஆசையால் இவன் சொல்வதை கேட்டு அடிமை போல இருந்தோம்! உன் நாட்டிய ஆசையை விட்டுவிடு நம் உடல் பளுவின் மேல் நம்பிக்கை வை! இந்த சங்கிலியை அறுத்தெறிந்து இவனை தூர வீசி நாம் தப்பித்துவிடலாம்.
    உண்மைதான் அம்மா! இயல்புக்கு மாறாக இருந்து துன்பப்பட்டது போதும்! இப்போதே கிளம்புவோம்!
   யானைகள் இரண்டும் ஆக்ரோசம் கொண்டன! சங்கிலிகளை அறுத்தெறிந்து ஓடத்தொடங்கின. தடுக்க முனைந்த பயிற்றுனரை தூக்கி வீசின. அவன் பயந்து ஓடினான்.
    உடல் சோர்ந்து காட்டுக்குள் நுழைந்த யானைகளிடம் மயில் கேட்டது! யானையாரே நடனம் கற்றுக் கொண்டீர்களா?
    நடனம் மட்டும் அல்ல! நல்ல பாடமும் கற்றுக்கொண்டேன்! என்று சொன்னன யானைகள்.


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்!

Friday, December 26, 2014

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 26

  கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 26


 1. தலைவருக்கு செண்ட்ரல்ல பவர் அதிகம்!
பிரதமர்கிட்டேயா இல்ல அமைச்சர்கள் கிட்டேயா?
நீ வேற நான் சொன்னது செண்ட்ரல் ஜெயில்லன்னு!

 1. பாரதரத்னா விருதை கோடானுகோடி ரசிகர்களை பெற்றிருக்கும் அனுஷ்காவிற்கு தராமல் மாளவிகாவிற்கு தந்ததை வன்மையாக கண்டிக்கிறோம்..!
    தலைவரே! அது மாளவிகா இல்லே மாளவியா!

 1. தலைவர் எதுக்கு இவ்ளோ பெரிய காந்தத்தை முதுகிலே கட்டிக்கிட்டு திரியறார்!
    மக்களை கவர்ந்து இழுக்க முயற்சி பண்றாராம்!

 1. கல்யாணமான புதுசுல என் வொய்ஃப் வாயைத் திறந்து எதையும் பேசவே மாட்டா?
     இப்போ?
   வாயைத் திறந்தா மூடவே மாட்டேங்கிறா!


 1. மன்னா! இளவரசர் தங்கள் மகன் என்பதை நிரூபித்துவிட்டார்!
அடடா! அப்படி மெச்சும்படி என்ன காரியம் செய்தான்?
கோலிவிளையாட்டில் தோற்றுவிட்டு நண்பர்களை ஏமாற்றி ஓடி வந்துவிட்டார்!

 1. மன்னர் அரசு கஜானாவை திறந்துவிடுங்கள் என்று சொல்கிறாரே மக்கள் மீது அவ்வளவு அக்கறையா?
நீ வேறு காலியாக இருக்கும் கஜானாவை எதற்கு பூட்டிவைக்க வேண்டும் என்றுதான் அப்படி சொல்லுகிறார்!

 1. மூணு அடிக்கு பயந்த உன் பையன் இப்ப ஆறு அடிக்கு வளர்ந்திட்டானா? என்னடி சொல்றே?
முன்னெல்லாம் மூணு அடி வாங்கவே பயப்படுவான் இப்ப ஆறு அடிவரைக்கும் அசராம தாங்கறான்னு சொல்ல வந்தேன்!

 1. இவ்ளோ டெஸ்ட் எடுத்தும் ஏதோ ஒண்ணு குறையுதுன்னு சொல்றீங்களே டாக்டர் என்ன அது?
    உங்க பில் அமவுண்ட் ரவுண்டா வராம  கொஞ்சம் குறையுது அதைத்தான் சொன்னேன்!

 1. அவர் யாருக்கிட்டேயும் பல்லைக்காட்டிக்கிட்டு நிற்கமாட்டாரு…!
அதுக்காக டெண்ட்டிஸ்ட் கிட்ட கூட பல்லை காட்டமாட்டேன்னு சொன்னா பல்வலி எப்படி குணமாகும்?

 1. அந்த ஓட்டல் சர்வருக்கு ஆனாலும் இவ்வளவு நக்கல் கூடாது!
    ஏன் என்ன ஆச்சு?
 வடையில நூல் நூலா வருதுன்னு சொன்னா ஊசிப்போனா நூல் வராம என்னவரும்னு கேக்கறான்!

 1. பாம்பை மையமா வச்சு ஒரு படம் எடுத்தாரே டைரக்டர் படம் என்ன ஆச்சு?
பெட்டியை விட்டு வெளியே வரவே இல்லை!

 1. எனக்கு மரியாதை கொடுக்காட்டிக்கூட நான் போட்டு இருக்கிற இந்த காக்கி யூனிபார்முக்காவது மரியாதை கொடுன்னு கபாலிக்கிட்ட சொன்னது தப்பா போச்சு!
    என்ன பண்ணான்?
யூனிபார்மை கழட்டி வாங்கிட்டு போயி மாலை மரியாதை பண்ணிக்கிட்டு இருக்கான்!

 1. காய்கறியெல்லாம் இப்படியா முத்தலும் சொத்தையுமா வாங்கிட்டு வருவீங்க இதைக்கூட ஒழுங்கா வாங்கத் தெரியாதா?
உன்னை செலக்ட் பண்ணி கட்டிக்கிட்டதுல இருந்து என்னோட லட்சணம் தெரியலையா?

 1. வக்கீல் எதுக்கு சட்டப் புத்தகத்தை தண்ணியிலே ஊற வைக்கிறார்?
சட்டத்தை கரைச்சு குடிக்க போறாராம்!

 1. தலைவர் மக்களோட மக்களா குடியிருப்பேன்னு சொல்றாரே எதுக்கு?
டாஸ் மாக் வாசல்ல குடியிருக்கிறதைத்தான் அப்படி நாசூக்கா சொல்றாரு!

 1. புலவரை எதற்கு கட்டிவைத்து சவுக்கால் அடிக்கிறார்கள்?
உலா பாடுகிறேன் என்று ‘பீலா” விட்டுக் கொண்டிருந்தாராம்!


 1. பதுங்குக் குழிக்குள் பதுங்கியிருந்த மன்னரை மணியடித்து யாரோ காட்டிக்கொடுத்தார்களாமே? 
    யாரும் காட்டிக்கொடுக்கவில்லை! அவர் இடுப்பில் இருந்த செல்போன் மணியடித்து தான் மாட்டிக் கொண்டார்!

 1. மாப்பிள்ளை பேங்க் ல வேலை பார்க்கிறார்னு சொல்லி ஏமாத்திட்டாங்களா? எப்படி?
ப்ளட் பேங்க் ல வேலை பார்க்கிறார்!

 1. தலைவர் உடனே ஒரு கிளினிக் ஆரம்பிக்கனும்னு எதுக்கு சொல்றார்?
அவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்திட்டாங்களே அதான்!

 1. சின்ன பட்ஜெட்ல படம் எடுக்கணும்னு சொன்னாங்க அதுக்காக இப்படியா?
ஏன் என்ன ஆச்சு?
 செல்போன்ல படம் எடுக்கணுமாம்!

21. சிட்டியிலே க்ரைம் ரேட் கூடிப்போச்சுன்னு மீட்டிங் போட்டாங்களே அப்புறம் என்ன முடிவு பண்ணாங்க?
    மாமூல் ரேட்டை உயர்த்தி கேட்பதுன்னு ஒருமித்து முடிவு பண்ணி இருக்காங்களாம்!

22. உடல் நிலை சரியில்லாத மன்னரை பார்க்க புலவரை அனுப்பியது தவறாக போய்விட்டது!
      ஏன்?
  இரங்கற்பா பாடிவிட்டார்!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Thursday, December 25, 2014

பாரத ரத்னாக்களும் கடவுளின் ஆஃபரும்! கதம்பச்சோறு! பகுதி 54

மார்கழி மரணங்கள்!


     நானும் கவனித்துக் கொண்டு வருகிறேன்! டிசம்பர் சீசன் சங்கீதத்திற்கு உகந்தது போல மரணங்களுக்கும் ஏற்றது போல! ஒவ்வொரு வருடமும் டிசம்பர் (மார்கழி) வருகையில் பிரபலங்கள் மறைந்து வருகிறார்கள். இந்த வருடமும் விகடன் பாலசுப்ரமண்யம், பாலச்சந்தர், கூத்தபிரான் என்று பெரும் பிரபலங்கள் மார்கழி மாதத்தில் உயிரை விட்டிருக்கிறார்கள். இவர்கள் வாழ்ந்து சாதித்தவர்கள். வேறுபட்ட துறைகளில் தங்கள் உழைப்பை வெளிப்படுத்தி வெளிச்சத்துக்கு வந்தவர்கள். இவர்களின் இழப்பால் இன்று வளர்ந்து நிற்கும் அந்தந்த துறைகளுக்கு பெரிய இழப்பொன்றும் இல்லைதான். ஆனாலும் சம்பிரதாய இரங்கல் தெரிவிப்பது எனில் அந்த துறைக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று அனைவரும் சொல்வது பழக்கம் ஆகிவிட்டது. பாலச்சந்தர் திரைப்படங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பரிமாறி சர்ச்சைகளில் சிக்கியவர். இன்று இறந்தபோதும் அவரைப்பற்றி முகநூலில் இரங்கல் என்ற பெயரில் உலாவும் சர்ச்சைகள் வேதனைக்குரியது. ஒருவர் இறந்த பின் அவர் நல்லவன், கெட்டவன், வியாபாரி, உயர்ந்தஜாதி, தாழ்ந்த ஜாதி என்ற வேறுபாடுகள் விவாதங்கள் தேவையில்லை! இத்தனைகாலம் வாழ்ந்தார் அதில் எத்தனை நல்லது செய்தார் என்று பெருமைகளை பற்றி பேசி விடைகொடுப்பதே சிறந்த மாண்பு. விகடன் முன்னாள் ஆசிரியர் தனது உடலை மருத்துவக்கல்லூரிக்கு தானமாக கொடுத்தது பாரட்டத்தக்க ஒன்று. நீண்டகாலம் விகடன் ஆசிரியராக இருந்து தனது கனவுகளை கலைத்துக்கொண்டு விகடன் வளர உரமாக இருந்தவர் அவர் என்பது அவரோடு பழகியவர்கள் சொல்லும் கருத்துக்கள் மூலம் தெரிகிறது. வானொலி அண்ணா கூத்தபிரான் 80களில் இளம்பிராயத்தில் இருந்தவர்கள் யாரும் மறக்க முடியாது. ஞாயிறு தோறும் சென்னை வானொலியில் மதியம் 2.15க்கு ஒளிபரப்பான சிறுவர் சோலையின் இயக்குனர் இவர். சென்னையில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளுக்கு வர்ணணைகளும் தந்துள்ளார். பிள்ளைகள் எல்லாம் எப்பவும் சிரிச்சிக்கிட்டு இருக்கணும் சந்தொஷமா இருக்கணும்! என்று நிகழ்ச்சி முடிவில் இவர் சொல்லும் அழகே தனி. பாலச்சந்தரைப் பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கும். சாதாரண மனிதர்களை கதாநாயகர்கள் ஆக்கிய அவரது தைரியம் பாராட்டத்தக்கது. என்னுடைய படத்தில் கதைதான் ஹீரோ என்று அவர் பலமுறை நிரூபித்து இருக்கிறார். இவர்கள் மூவரின் மறைவு கலைத்துறைக்கு கட்டாயம் வருத்தத்தை தரக்கூடியதே! மூவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்!

பாரதிய ஜனதாவின் தமிழக ஆட்சிக்கனவு!

      திராவிட முன்னேற்ற கழகம் அறிஞர் அண்ணா தலைமையில் இந்தியாவில் காலூன்றி ஆட்சியை பிடித்த பின் எந்த தேசிய கட்சியும் தமிழக அரசியலில் எடுபடவில்லை! பின்னர் இந்த கட்சியில் இருந்து பிரிந்த அதிமுக ஆட்சியை பிடித்ததே ஒழிய காங்கிரஸோ கம்யூனிஸ்ட்களோ இன்னபிற கட்சிகளோ ஆட்சியை பிடிக்க முடியவில்லை! ஆட்சியை பிடித்த கட்சிக்கு ஒத்து ஊதி தங்களை கொஞ்சம் வளர்த்துக்கொண்டன அல்லது அழித்துக் கொண்டன. இப்போது அமித் ஷா என்பவர் பாரதிய ஜனதாவை தமிழகத்தின் ஆட்சிக் கட்டிலில் ஏற்றுவேன் என்று சபதம் போட்டு சில ஆளிழுப்பு வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார். இதெல்லாம் வேலைக்கு ஆகும் என்று தெரியவில்லை! மக்களை கவரும் திட்டம் எதுவும் மத்திய அரசால் செயல்படுத்த படவில்லை! இருக்கும் திட்டங்களையே கலைத்துக் கொண்டு இருக்கிறார்கள். திராவிட அரசுகள் தரும் இலவசங்கள் பி.ஜே.பிக்கு ஒவ்வாத ஒன்று. கட்சியில்வலுவான தலைவர்கள் இல்லை! மக்களைக்கவரக்கூடிய செல்வாக்கு மிக்கவர்களும் இல்லை! மக்களோடு மக்களாய் செயல்பட்டு அவர்களுக்கு உதவ கட்சியினர் யாரும் இல்லை! இந்த நிலையில் பாரதிய ஜனதாவின் கனவு வெறும் கனவாகத்தான் தோன்றுகிறது. போணியாகாத சில நடிகர்களை இழுத்து கட்சியை இன்னும் அசிங்கப்படுத்திக் கொண்டு இருக்கிறது பா.ஜ.க.

பள்ளி மேலாண்மைக் குழு!

    சென்றவாரம், ஒரு மூன்று நாள் என் பெண் படிக்கும் பள்ளி சார்பாக அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் பள்ளி மேலாண்மைக் குழு கருத்தரங்கத்தில் கலந்து கொள்ள நேர்ந்தது. பள்ளி மேலாண்மைக்குழு என்றால் என்ன? என்பதில் இருந்து அரசாங்கம் பிள்ளைகள் படிக்க என்னவெல்லாம் செய்கிறது என்பது வரை அறிந்து கொள்ள முடிந்தது. ஆசிரியர் பயிற்றுநரான திருமதி அமுதாவும், ஆசிரியரான திரு குமாரும் சிறப்பாக விளக்கினார்கள். பள்ளி மேலாண்மை குழுவில் 50 சதவீதம் பேர் பெண்களாகத்தான் இருக்க வேண்டுமாம். அதனால் கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களில் 90 சதவீதம் பேர் பெண்கள். இறுதி நாளன்று ஏதேதோ டேஸ்க் எல்லாம் கொடுத்தார்கள். கலந்து கொண்ட பெண்கள் சிறப்பாக செய்தார்கள். இந்த பயிற்றரங்கில் கலந்து கொண்டபோது ஆசிரியர் பயிற்றுநர் அமுதா கூறிய ஒர் விஷயம் மிகவும் என்னை பாதித்தது. அதே போல விவாதத்திற்கு வந்த ஒரு பொருள் அரசுப்பள்ளிகள் மாணவர்களை கட்டுக்கோப்பாக வைக்கவில்லை என்பது. இது குறித்து விரிவாக தனி பதிவில் எழுதுகின்றேன். இந்த கருத்தரங்கில் தெரிந்துகொண்ட இன்னொரு விஷயம் ஒரு கரு (குழந்தை) உருவாகிவிட்டால் அது அரசாங்கத்தின் சொத்தாகிறது. அரசாங்கமே இலவசமாய் வளைகாப்பு நடத்துவதில் இருந்து சத்துமாத்திரைகள் தந்து பிரசவம் பார்த்து செலவிற்கு பணமும் தந்து அனுப்புகிறது. எனவே என் குழந்தை என் குழந்தை என்று சொன்னாலும் முழு உரிமை அரசுக்கே என்றார்கள். பெண் சிசுக்கொலை பற்றி விவாதம் வந்தபொது கிடைத்த தகவல் இது.

டோனி உங்க ஆட்டம் சரியில்லை!

    முதல் டெஸ்டில் போராடி வீழ்ந்த அணியாக இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி தெரியவில்லை! முதல் இன்னிங்சில் சிறப்பாக ஆடிய போதும் இரண்டாவது நாளில் விரைவாக வீழ்ந்துவிட்டது. பந்துவீச்சில் முதலில் உமேஷும் ஷமியும் மிரட்டினாலும் கடைநிலை வீரர்களான ஆஸ்திரேலியர்களை கட்டுப்படுத்த தவறிவிட்டனர். வாய்ப்பேச்சில் சீண்டுவது ஆஸ்திரேலியர்களுக்கு கைவந்த கலை. இது நம்மவர்களுக்கு பொருந்தாது. வீணாக ஆஸ்திரேலியர்களை வெறுப்பேற்றியது சரியல்ல! ஆடத்தெரியாத ரோகித்சர்மா இப்படி வாய் ஆடியது கிரிக்கெட் ஜெண்டில்மேன் கேம் என்று சொல்வதை கேவலப்படுத்திவிட்டது. கொஞ்சம் கூட போராடத் தெரியாத ஒரு செத்தப் பாம்பாகத்தான் இந்திய அணி தோனி வழிநடத்துதலில் தென்பட்டது. இதில் ஆடுகளம் சரியில்லை! உணவு சரியில்லை என்பதெல்லாம் வெறும் சப்பைக் கட்டு! டோனி உங்க ஆட்டம் சரியில்லை என்பதுதான் என்னோட தீர்ப்பு!

கிச்சன் கார்னர்!

  வடகறி என்றாலே வாசனை மூக்கைத்துளைக்கும்! நாவில் நீர் சுரக்கும். இந்த வடகறியை நான் முதலில் சுவைத்தது பெரும்பேடு கிராமத்தில் தாமோதர ஐயர் ஓட்டலில்தான். ஒரு கிருத்திகை சமயம் தாத்தா இட்லிக்கு வடகறி வாங்கித்தந்து சுவைத்தபின் அதன் ரசிகன் ஆகிவிட்டேன். பின்பு பலமுறை இந்த உணவை சாப்பிட்டும் அந்த டேஸ்ட் வருவது இல்லை! இதோ இன்று ஒரு வடகறி பகிர்வு. தி. இந்துவில் படித்தது.

கருணைக்கிழங்கு வடைகறி
     தேவையானவை: கருணைக்கிழங்கு 200கிராம், பொடியாக நறுக்கிய பூண்டு 1 டீஸ்பூன், மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன், பொட்டுக்கடலை 8 டீஸ்பூன், பெருங்காயம் 1 சிட்டிகை, பொடியாக நறுக்கிய மல்லித்தழை சிறிது, உப்பு, எண்ணெய், தேவையான அளவு, தக்காளி, வெங்காயம் தலா 1, பச்சைமிளகாய் 2, தேங்காய்ப்பால் 1கப், உப்பு தேவையான அளவு.
    செய்முறை:
            கருணைக்கிழங்கை தோல் சீவி, துருவிக்கொள்ளவும். பொட்டுகடலையை ரவைபொல உடைத்துக் கொள்ளவும். துருவிய கருணைக்கிழங்கை உடைத்தபொட்டுக்கடலை, மிளகாய்த்தூள் பெருங்காயம் பூண்டு இவற்றுடன் தேவையான உப்பு சேர்த்து பிசையவும். இதை சிறு சிறு வடைகளாக தட்டி சூடான எண்ணெயில் பொட்டு பொரித்தெடுக்கவும்.
    வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் பச்சைமிளகாய், பூண்டு தக்காளி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். பிறகு தேவையான அளவு உப்பு தேங்காய்ப்பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் உதிர்ந்த வடைகளை சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும். சுவையான வடைகறி ரெடி!
பகிர்ந்தவர் மவுலிவாக்கம் ராஜகுமாரி, நன்றி: தி இந்து, தமிழ்நாளிதழ்.

டிப்ஸ்! டிப்ஸ்! டிப்ஸ்!

விடாமல் வரும் தும்மலை கட்டுப்படுத்த மிளகை தூள் செய்து இலேசாக நெருப்பில் தூவி அதில் இருந்து வரும் புகையை சுவாசிக்க தும்மல் நின்றுவிடும்.

ரேசன் கோதுமை பில்ஸ்பெரி கோதுமை மாவுபோல மெத்தென்று இருக்க வேண்டுமா? கோதுமையை கழுவி உலர்த்தி புடைத்து அதனுடன் கிலொவிற்கு 100 கிராம் வெள்ளை மூக்கடலை சேர்த்து அரையுங்கள் சப்பாத்தி செய்தால் மெத்தென்று இருக்கும்.

தண்ணீரில் செல்போன் விழுந்துவிட்டால் உடனே பேட்டரியை கழற்றி வெயிலில் வைப்பதொடு செல்போனை ஹேர் டிரையர் மூலம் சுத்தம் செய்தால் ஈரம் விரைவில் காய்ந்து பழுதடையாமல் இருக்கும்.

பல் துலக்கும் பிரஷ்ஷை வாரம் ஒரு முறை உப்பு கலந்த சுடுநீரில் அலம்பி வைத்தால் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்கும்.

உடல் பருமன் குறைய வேண்டுமா? தினமும்  உணவில் கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி, அவரைக்காய், கொள்ளு என மாற்றி மாற்றி சேர்த்துக் கொள்ளுங்கள். விரைவில் பலன் தெரியும்.

கசகசாவை முதல் நாளே ஊறவைத்து மறுநாள் தேங்காய்ப்பால் விட்டு அரைத்து விழுதை வேர்க்குரு உள்ள இடங்களில் தடவி வர வேர்க்குரு மறையும்.

கொடுக்கலாமா பாரதரத்னா!

    ஒவ்வொரு வருடமும் பாரத ரத்னா விருது அறிவிப்பதும் சர்ச்சைகள் உருவாவதும் தவிர்க்க முடியாததாக ஆகிவிட்டது. இந்தியாவின் உயரிய விருதின் கவுரவம் அரசியல் வியாதிகளால் கொஞ்சம் கொஞ்சமாக கலைக்கப்பட்டு வருகிறது. சென்ற வருடம் டெண்டுல்கருக்கு கொடுத்து காங்கிரஸ் வாங்கிக் கட்டிக்கொண்டது. இந்த வருடம் வாஜ்பேயிக்கு அறிவித்து பி.ஜே.பி சர்ச்சையில் சிக்கிக்கொண்டுள்ளது. வாஜ்பேயி நல்லவர்தான். அனைவரும் மதிக்கும் தலைவர்தான். சிறந்த கவிஞர், பாராளுமன்றவாதி, அரசியல் தலைவர், இந்தியாவின் முன்னாள் பிரதமர் இப்படி எல்லாம் இருந்தும் ஏதொ ஒன்று இடிக்கிறது அவருக்கு ரத்னா பட்டம் தர.அது அவர் மீது பூசப்பட்டு இருக்கும் மதச் சாயம். பி.ஜே.பி யில் இருப்பதால் இவருக்கு தரலாமா? என்று கேட்கிறார்கள்.  என்னைக் கேட்டால் வருடத்திற்கு மூன்று என்பதை ஐந்தாக்கி கட்சி பேதம் இல்லாமல் ஆளுங்கட்சிக்கு இத்தனை, எதிர்கட்சிகளுக்கு இத்தனை என்று கொடுத்துவிடலாம். ஐந்து என்ன பத்து கூட தேவைக்கேற்ப உருவாக்கி கொள்ளலாம். காசா பணமா விருதுதானே! போனால் போகிறது. இதில் இன்னொரு விஷயம் தெரியுமா? உயர்ந்த விருதுன்னு பேரே தவிர இதனால் பணப்பலன் எதுவும் கிடையாது வெறும் கவுரவம்தான்! இதுக்குத்தான் இத்தனை அக்கப்போர்!

பதிவர் அறிமுகம்:
   யாதவன் நம்பி.  குழல் இன்னிசை என்ற வலைப்பூவில் எழுதிவருகிறார் இவர். இயற்பெயர் புதுவை வேலு என்று நினைக்கிறேன்! கவிதைகளுடன் உலகில் கடைபிடிக்கப்படும் பல்வேறு தினங்களை பற்றியும் எழுதுகின்றார். பிரான்சில் இருந்து எழுதுகிறார் இவர்.  குழல் இன்னிசை
படிச்சதில் பிடிச்சது

சிரிக்க மட்டும்..!
ஏர்டெல் நிறுவனர் இறைவனை நோக்கி கடும் தவம் புரிந்தார்,
அவரது தவத்தின் பயனாக கடவுள் அவர் முன் தோன்றி "உனக்கு 10 வாய்ப்புகள்,அந்த 10 முறையும் நீ நினைப்பது நடக்கும்" என்று அருளினார்.
பாபா ரஜினி போல் முதலில் இதில் முழு நம்பிக்கை இல்லாத ஏர்டெல் நிறுவனர், 'அந்த பட்டம் தன் கைக்கு வர வேண்டும், அந்த பெண் வந்து தன்னுடன் பேச வேண்டும்' போன்ற சிறு சிறு விசயங்களை சோதித்து 6 வாய்ப்புகளை வீணடித்தார்.
வரத்தின் மீது நம்பிக்கை வந்தது,7வது வரமாக தன் போட்டி நிறுவனமான வோடபோன் நிறுவனர் சிறைக்கு செல்ல வேண்டினார். அதே போல் வோடபோன் நிறுவனர் ஒரு மோசடி வழக்கில் சிறை சென்றார்.
மகிழ்ச்சியடைந்த அவர் மீதமுள்ள 3 வரங்களை தெளிவாக பயன்படுத்த திட்டமிட்டார். அவற்றை பயன்படுத்த தான் உயிரோடு இருப்பது அவசியம் என்பதால் முதல் வரமாக "எனக்கு மரணம் வரக்கூடாது" என்று கேட்ட போதே கார் விபத்தில் சிக்கி அவர் மரணமடைந்தார்.
நேரே கோவத்துடன் கடவுளிடம் சென்ற அவர்,"10 வாய்ப்புகள் தருவதாக சொல்லி 7 வாய்ப்புகள் தான் தந்தாய், 8வது வாய்ப்பை பயன்படுத்தியும் பலிக்காமல் நான் இறந்துவிட்டேன். நீ ஒரு ஏமாற்றுக்காரன்" என்றார்.
கடவுள் பொறுமையாக,"நீ மட்டும் 10 ரூபாய்க்கு கார்டு போட்டா 7 ரூபாய்க்கு தான பேச விடுற..?
"அது மாதிரி தான் இதுவும் 3 வரம் சர்விஸ் சார்ஜ்"
யாரங்கே இவனை நரகத்தில் தள்ளுங்கள்" என்றார். தன் பாவத்தை உணர்ந்தார் ஏர்டெல் நிறுவனர்.......

( ரிலாக்ஸ் ப்ளீஸ் முகநூல் குழுமத்தில் படித்தது)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்தவும்! நன்றி!
Related Posts Plugin for WordPress, Blogger...