Sunday, November 30, 2014

துன்பம் எப்படியெல்லாம் துரத்துகிறது? தித்திக்கும் தமிழ்! பகுதி 6

துன்பம் எப்படியெல்லாம் துரத்துகிறது? தித்திக்கும் தமிழ்! பகுதி 6


துன்பம் இல்லாத மனிதன் யார்? இன்பம் இல்லாத மனிதர்கள் கூட இருப்பார்கள் துன்பம் இல்லாதவர்கள் இல்லை! எல்லோருக்கும் எதோ ஒரு கஷ்டமோ துயரமோ இருக்கத்தான் செய்கிறது.
   பல கோடி அதிபனுக்கும் ஓர் துயரம் இருக்கிறது! இந்த கோடிகளை காப்பாற்றவேண்டுமே என்ற பயம் இருக்கிறது! அதற்காக துயரப்படுகின்றான். தனக்குப் பின் இந்த செல்வம் என்ன ஆகுமோ? என்று துயரப்படுகின்றான்.
    ஒன்றுமே இல்லாத ஏழைக்கும் துன்பம் இருக்கிறது! இன்றைய பொழுது எப்படி போகுமோ? அடுத்த வேளைக்கு உணவு கிடைக்குமா? என்று துயரப்படுகின்றான். இருந்தாலும் துன்பம் இல்லாவிட்டாலும் துன்பம்! பிறந்தாலும் துன்பம்! இறந்தாலும் துன்பம்.
   என்னப்பா எப்படி இருக்கே? என்று கேட்டுப்பாருங்கள்! ஏதோ இருக்கேன்! என்று விட்டேற்றியாக பதில் வரும் பலரிடம் இருந்து. அனைத்தையும் எதிர்மறையாகவே சிந்தித்து எதிர்மறையாகவே வாழ்ந்து தானும் துன்பத்தில் உழன்று பிறரையும் துன்பத்தில் ஆழ்த்தி விடுவார்கள் இவர்கள்.
     சிலரோ இப்படி எதிர்மறை எண்ணங்களை விட்டொழித்து எவ்வளவு துன்பம் வந்தாலும் அதில் இருக்கும் நன்மைகளை எடுத்துக்கொள்வர். இதற்கு ஒரு முல்லாக் கதை கூட சொல்லப்படுவது உண்டு.
   முல்லாவிடம் ஒரே ஒரு நோஞ்சான் குதிரை இருந்தது. அனைவரும் இந்த குதிரை எதற்கு விற்றுவிடு! என்று சொன்னார்கள். அந்த குதிரையும் ஒருநாள் காணாமல் போய்விட்டது. உடனே எல்லோரும் துக்கம் விசாரித்தார்கள். அடடே! அந்த குதிரையை அப்போதே விற்றிருந்தால் கொஞ்சம் பணமேனும் கிடைத்து இருக்கும் இப்போது காணாமல் போய்விட்டதே என்று சொன்னார்கள். முல்லா இப்பொழுதும் பதில் பேசவில்லை! சிலநாள் கழித்து அந்த குதிரை ஒரு நல்ல குதிரையுடன் வந்து சேர்ந்தது. இப்போது அண்டை மனிதர்கள் முல்லா அதிர்ஷ்டக் காரன்! ஓடிப்போன குதிரை இன்னொரு நல்ல குதிரையை அழைத்து வந்து விட்டது என்று பாராட்டினார்கள். இப்போதும் முல்லா ஒன்றும் சொல்லவில்லை! அந்த புதிய குதிரையின் மீது சவாரி செய்ய ஆசைப்பட்ட முல்லாவின் மகன் சவாரி செய்கையில் கீழே விழுந்து அடிபட்டுவிட்டான். உடனே பலரும் அடடே! இப்படியாகிவிட்டதே! எல்லாம் இந்த முரட்டுகுதிரையால் வந்த வினை! என்றனர். இப்போதும் முல்லா சும்மாவே இருந்தார். நாட்டில் போர் வந்தது. எல்லா இளைஞர்களும் போருக்கு கட்டாயம் செல்லவேண்டிய சூழல்! முல்லாவின் மகன் அடிப்பட்டு இருந்ததால் போருக்கு செல்லாமல் வீட்டில் இருந்தான். இப்போது பக்கத்து வீட்டினர் முல்லாவின் மகன் அதிர்ஷ்ட காரன்! என்றனர். இப்போதும் முல்லா மவுனமாக இருந்தார்.
    இப்படித்தான் மனிதர்கள் இருக்கின்றனர். நம்மை சுற்றி நடப்பது எதுவும் நம்மைக் கேட்டு நடப்பது இல்லை! பின்பு ஏன் வருத்தமும் மகிழ்ச்சியும்.
    வள்ளுவர் கூட துன்பம் வரும்போது சிரிக்க சொல்கிறார். ஆனால் ஒருவனுக்கு இத்தனை துன்பம் வந்தால் சிரிக்க முடியுமா? இராமசந்திர கவிராயரின் இந்த பாடலை படியுங்கள் பின்பு சிரிக்க முடியுமா? என்று யோசியுங்கள்!

  ஆவீன மழைபொழிய இல்லம் வீழ 
     அகத்தடியாள் மெய்நோவ அடிமை சாவ 
மாவீரம் போகுதென்று விதைகொண் டோட
 
     வழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ளச் 
சாவோலை கொண்டொருவன் எதிரே செல்லத்
 
     தள்ளவொண்ணா விருந்துவரச் சர்ப்பந் தீண்டக் 
கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்கக்
 
     குருக்கேளா தட்சணைகள் கொடுவென்றாரே  ஒரு மனிதனை எப்படியெல்லாம் துன்பங்கள் துரத்துகின்றன பாருங்கள். இத்தனை துன்பங்கள் துரத்தினால் பாவம் அவனும்தான் என்ன செய்வான் பாவம்?
   ஒருவனுடைய வீட்டில் பசு கன்று போடுகிறது. அந்த சமயம் மழை பொழிந்து இல்லம் இடிந்து விழுகிறது. அவனுடைய மனைவிக்கோ திடீரென உடல்நலம் கெடுகிறது.
   அதோடு விட்டதா? அவனுக்கு என்று ஒரு அடிமை அவனும் செத்துப் போகிறான்.விதைப்பதற்கு வைத்திருந்த விதைகளும் காணாமல் போகின்றது. இத்தனை போதாது என்று அவனை கடன்காரர்கள் வேறு வழியில் மறித்துக்கொள்கிறார்கள். அந்த சமயத்தில் யாரோ இறந்த செய்தியை ஒருவன் எதிரில் கொண்டுவருகிறான். அப்போதுதான் மறுக்க முடியாத விருந்து ஒன்று வருகிறது. விருந்துக்கு செல்ல முடியாமல் பாம்பு தீண்டி விடுகிறது. அந்த சமயம் பார்த்து அரசன் வரி கேட்கிறான்.  இதோடு குருக்கள் வேறு வந்து தட்சணைகள் கொடு என்று கேட்கிறாராம்.
     இத்தனை துன்பங்கள் துரத்தினால் பாவம் அந்த மனிதன் சிரிக்க முடியுமா? பாடல்சிரிக்க வைத்தாலும் சிந்திக்கவும் தூண்டுகிறது அல்லவா?

   சிந்தித்து பின்னூட்டங்கள் இட்டு நிரப்புங்கள்! மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்! நன்றி!

Saturday, November 29, 2014

தேனுக்கு ஆசைப்பட்ட நரி! பாப்பா மலர்!

தேனுக்கு ஆசைப்பட்ட நரி!


சயனாவனம் என்ற காட்டில் பல்வேறு விலங்குகள் கூட்டமாக வசித்து வந்தன. இயற்கை எழில் கொஞ்சும் அந்த காட்டில் ஓங்கி உயர்ந்த மரங்களும் நீரோடைகளும் பசும் புல்வெளிகளும் நிறைந்து இருந்தன. இதனால் விலங்குகள் உணவிற்கு பஞ்சமின்றி இருந்தன. அதே சமயம் அந்த காட்டினுள் வாழும் விலங்குகளை மனிதர்களோ பிறரோ துன்புறுத்துவது கிடையாது. வேட்டையாடுதல் தடைவிதிக்கப்பட்டு இருந்தது. இதனால் விலங்கினங்கள் மிகவும் நிம்மதியாக அந்த காட்டில் வாழ்ந்து வந்தது.
    அந்த காட்டினில் குள்ள நரி ஒன்று வசித்து வந்தது. அது மிகவும் தந்திரம் கொண்டது. காட்டு ராஜாவான சிங்கத்தின் மந்திரிசபையில் முக்கிய பதவியில் இருந்தது. சிங்க ராஜாவிற்கே ஆலோசனை வழங்கும் பொறுப்பில் இருந்ததால் மிகவும் கர்வத்துடன் அது சுற்றிவந்தது.
    அதை கண்டாலே மற்ற விலங்குகள் அஞ்சி நடுங்கி வணக்கம் தெரிவித்தன. அதை மதியாதவர்களை ஏகவசனத்தில் திட்டி அவர்களை தக்க சமயத்தில் பழிவாங்கிக் கொண்டு இருந்தது நரி. இதனால் நரி வருகிறது என்றாலே மற்ற விலங்குகளுக்கு கொஞ்சம் அச்சம் தான். அது என்ன சொல்லுமோ? அதன் வாயில் வீணாக மாட்டிக் கொள்ள வேண்டாமே என்று ஒதுங்கி சென்று கொண்டிருந்தன.
    இது நரிக்கு மேலும் கர்வத்தை அளித்தது. தனது சொந்த தேவைகளுக்குக் கூட மற்றவர்களை எதிர்பார்க்க ஆரம்பித்தது. தினமும் ஒருவர் அதற்கு தேவையான உணவுகளை தயாரித்து வழங்க வேண்டும். சிங்க ராஜாவிடம் ஏதாவது உத்தரவை பெற வேண்டுமானால் நரி மந்திரிக்கு தேவையானதை செய்து கொடுப்பவர்களுக்கே முன்னுரிமை வழங்கப் பட்டது. இப்படி நரி வைத்ததுதான் சட்டம் என்று அந்த காடே அல்லோகலப்பட்டது.
     ஒருநாள் நரி ஒரு மரத்தின் அடியில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தது. அப்போது மரத்தின் மேல் இருந்த தேன் கூட்டில் இருந்து தேனை உறிஞ்சிக் கொண்டிருந்தது கரடி ஒன்று. அந்த கரடி அப்படி தேனை உறிஞ்சும் போது ஒரு சொட்டுத் தேன் நரியின் முகத்தில் விழுந்தது. அதை தன் நாவால் நக்கியது நரி. அதன் சுவை அதற்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது.
   “ஆகா! என்னே இனிப்பு! என்னே சுவை!” இந்த சுவையை நான் இதுவரை ருசித்ததே இல்லை! இது என்ன உணவு என்று தெரியவில்லையே!” என்று அப்படியே அண்ணாந்து பார்த்தது.
      மரத்தின் உச்சியில் கரடி ஒன்று அமர்ந்து தேனை உறிஞ்சுவதை பார்த்து அதற்கு ஆத்திரமாய் வந்தது. இத்துணை சுவை நிறைந்த  இதை கரடி உண்பதா? நாட்டின் மந்திரியான நான் அல்லவா உண்ண வேண்டும்? இந்த கரடிக்கு என்ன திமிர்! நான் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே   உண்ணுகிறதே! அதை என்ன செய்கிறேன் பார் என்று மனதிற்குள் நினைத்தபடியே குரல் கொடுத்தது.
    “ஓய் கரடியாரே! என்ன உண்ணுகிறீர்?”
    “பார்த்தால் தெரியவில்லையா மந்திரியாரே?” கரடி இப்படி திருப்பிக் கேட்டதும் தன் அறியாமையை வெளிக்காட்டிக் கொள்ளாமல்  “தெரிகிறது தெரிகிறது! ஆனால் உன் வாயால் சொல்லேன்! என்ன உணவு அது?” என்றது நரி
     “சுவையான தேன்! இனிப்புத் தேன்! எனக்கு மிகவும் பிடிக்கும்! அதை அருந்திக் கொண்டிருக்கிறேன்!” என்றது கரடி.
  “ அது சரி! இனிப்புத் தேன் தான்! ஆனால் திருட்டுத் தேனை உண்ணுகிறாயே! உன்னை அரசரிடம் சொல்லி சிறையில் அடைக்க வேண்டும்”
   “என்னது திருட்டுத் தேனா? இந்த காட்டில் விளைகிறது! உண்கிறேன்! இது எப்படி திருட்டுத் தேனாகும்?”
    “ இந்த காடு யாருக்குச் சொந்தம்? இந்த காட்டின் ராஜா யார்?”
    “ஏன்? இந்த காட்டின் ராஜா சிங்கம்! என்று எனக்குத் தெரியாதா என்ன?”
     “அப்படியானால் தெரிந்தேதான் குற்றம் செய்கிறாயா?”
  “தேனைக் குடிப்பது ஓர் குற்றமா?”
   “தேன் குடிப்பது குற்றமல்ல! ராஜாவுக்கு சொந்தமான தேனை குடிப்பது குற்றம்”
   “இதென்ன விந்தை! தேனீக்கள் கூட்டில் சேமித்து வைக்கும் தேன் எப்படி ராஜாவுக்கு சொந்தமாகும்?”
    ” சரி! தேன் எப்படி கிடைக்கிறது?”
    “பூக்களில் இருந்து தேனிக்கள் சேகரிக்கிறது!”
  சரி இந்த காடு யாருக்கு சொந்தம்? சிங்க ராஜாவுக்குத்தானே! அப்படியானால் காட்டில் பூக்கும் பூக்கள் அவருக்குத்தானே சொந்தம்? அப்படி அவருக்கு உரிமையான பூக்களில் இருந்து தேனை திருடுவது தேனிக்களின் குற்றம்! அந்த தேனிக்களை கைது செய்து சிறையில் அடைக்க ராஜா உத்தரவு இட்டுள்ளார். தேனீக்கள் திருடி வைத்ததை நீ திருடி சாப்பிட்டு விட்டாய்! நீயும் குற்றவாளி!”
    இப்போது கரடி கொஞ்சம் மிரண்டு போனது! ஆனாலும் விடாமல்,  “இதென்ன புதுக் கதையாக இருக்கிறதே! காலம் காலமாய் நாங்கள் தேனெடுத்துக் கொண்டிருக்கிறோம்! இப்போது…”
    “காலங்கள் மாறுகிறது கரடியாரே! இப்போது தேன்கூடுகள் அரசுக்கு சொந்தம்! அதை கொள்ளையடித்த உனக்கு என்ன தண்டணை கிடைக்குமோ? தெரியவில்லையே!”
    “தெரியாமல் செய்து விட்டேன்! என்னை மன்னித்துவிடுங்கள் மந்திரியாரே!”
   “ நீ செய்தது பெருங்குற்றம்! போனால் போகட்டும்! இந்த சுவையான தேனை தினமும் நீ என் வீட்டிற்கு கொண்டுவந்து தரவேண்டும்! அப்படி செய்தாயானால் உன்னை விட்டுவிடுகிறேன்! ஒரு நாள் தவறினாலும் உன்னை ராஜாவிடம் மாட்டிக் கொடுப்பேன்! ”
   “உத்தரவு மந்திரியாரே! ராஜாவிடம் சொல்லிவிடாதீர்கள்! நான் தினமும் தாங்கள் ருசிக்க நல்ல தேனைக் கொண்டு வருகிறேன்!”
   அதில் இருந்து தினமும் ஒரு தேனடையை  தேடிப்பிடித்து கொடுத்துக் கொண்டிருந்தது கரடி. அதற்கு கிடைக்கிறதோ இல்லையோ நரிக்கு தேனடை தினமும் கிடைத்து வந்தது.
   இப்படியே சில நாட்கள் சென்றன. காட்டில் தேன் கூடுகளே இல்லை! தினமும் ஒரு கூடு பறித்தால் எங்கிருந்து கூடுகள் முளைக்கும். தேனிக்கள் எங்கும் கூடு கட்ட முடியாமல் தவித்தன.
    ஒருநாள் கரடி எங்கும் தேனடை கிடைக்காமல் தவித்துப்போய் நரியிடம் வந்து நரியாரே! மன்னித்துக் கொள்ளும்! இன்று தேனடை கிடைக்கவில்லை! காடு முழுவதும் தேடிவிட்டேன்! என்றது.
      அதெப்படி? இங்கு இல்லாவிட்டால் வேறெங்காவது போய் கொண்டுவா! இல்லையேல் சிறையில் தள்ளிவிடுவேன் என்றது நரி.
     கரடி தன் நிலையை நொந்து கொண்டு வீட்டிற்கு சென்றது. அங்கு கரடியினுடைய குட்டி இருந்தது. தந்தை கரடி சோகமாக இருப்பதை பார்த்த குட்டிக்கரடி என்ன விஷயம் என்று விசாரித்தது.
    கரடி நடந்த எல்லாவற்றையும் சொன்னது.
“ அப்பா! அந்த பொல்லாத நரியை நான் பார்த்துக் கொள்கிறேன்! நீங்கள் பயப்படாதீர்கள்! என்றது குட்டிக்கரடி.
     குட்டிக்கரடி நரியின் இருப்பிடம் சென்றது. ”மந்திரியாரே! மந்திரியாரே!” என்று அழைத்தது.
     “யாரது? குட்டிகரடியா? எங்கே உன் அப்பா?”
   உடனே குட்டிக் கரடி அழுதபடி, “மந்திரியாரே! உங்களுக்காக தேனெடுக்க சென்ற என் அப்பா மரத்தில் இருந்து விழுந்து அடிபட்டு கால் முறிந்துவிட்டது. அதனால்…
   “ அதனால்…”
  “தேன் இல்லாமல் நீங்கள் கோபப்படுவீர்கள் என்று தந்தை வருந்தினார். இன்னொன்றும் சொன்னார். குகை ஒன்றில் மிகப்பெரிய தேனடை சேமித்து வைத்திருக்கிறாராம். அந்த குகை மிகவும் இருட்டாக இருக்கிறது. சின்ன பையனானா என்னால் அந்த குகையில் நுழைய பயமாக இருக்கிறது. நீங்கள் வந்தீர்களானால் நல்ல தேனை சுவைக்கலாம். இதை சொல்லிவிட என்னை அனுப்பினார்”
     “அப்படியா? உன் தந்தை காலொடித்துக் கொண்டாலும் என் மீது விசுவாசமாய் சொல்லி அனுப்பி இருக்கிறான். பாவம் நீயும் சின்னப் பையன்! உன்னால் இருட்டு குகைக்குள் செல்ல பயமாகத்தான் இருக்கும். நான் போய் எடுத்துக் கொள்கிறேன்! அந்த குகை இருக்கும் இடத்தை மட்டும் காட்டிவிடு!”
        “வாருங்கள் அழைத்துச்செல்கிறேன்!”
குட்டிக் கரடி அந்த காட்டில் இருந்த ஓர் இருண்ட குகைக்கு நரியை அழைத்துச்சென்றது.
    நரியாரே! பாருங்கள் இதோ இருண்ட குகை! இதனுள்ளேதான் தேனீக்கள் பெரிய தேனடையில் தேனை சேமித்து வைத்துள்ளன. எனக்கு உள்ளே நுழையவே பயமாக இருக்கிறது! நீங்களே சென்று எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னது குட்டி கரடி.
    தேனெடுக்கும் ஆவலில் நரி வேகமாக அந்த குகைக்குள் நுழைந்தது. ஒரே கும்மிருட்டு! ஒன்றுமே தெரியவில்லை! சில நிமிடங்களுக்குப்பிறகு குகை இருட்டு பழக்கம் ஆக அதோ மூலையில் பெரிய தேனடை!
   தேனின் ருசியில் ஆபத்தை உணராத நரி அந்த தேன் கூட்டினுள் கை வைத்தது.
  மறுநிமிடம்! நூற்றுக் கணக்கான மலைத்தேனிக்கள் நரியின் உடலை பதம் பார்த்தன. ஆ, ஐயோ! விட்டு விடுங்கள்! வலிக்கிறதே! என்று கண் மண் தெரியாமல் ஓடிவந்தது நரி. உடல் முழுவதும் வீங்கிப்போய் விட்டது. வலி உயிரை எடுத்தது. மலைத் தேனிக்களின் விஷம் பரவ தேனெடுக்கும் ஆசையில் உயிரை விட்டது நரி.
      நரி மறைந்த செய்தியை மகிழ்ச்சியோடு தந்தை கரடிக்கு சொல்ல ஓட்டம் பிடித்தது குட்டி கரடி.


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Friday, November 28, 2014

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 24

 கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 24


 1. தலைவர் கூட்டத்துக்கு ஏற்பாடு பண்ண சொன்னாராமே எந்த ஊரிலே கூட்டம்?
அட நீ வேற! கூட்டம் எந்த ஊரிலே இருந்தாலும் கூடற கூட்டத்தைத்தான் ஏற்பாடு பண்ண சொல்லியிருக்காரு!

 1. நம்ம கட்சியோட ஒவ்வொரு தொண்டனும் விலைமதிப்பு இல்லாதவர்கள்னு தலைவர் சொன்னது தப்பா போச்சு!
விலை மதிப்பில்லாம இங்க ஏன் இருக்கணும்னு எதிர்கட்சியிலே ஒவ்வொருத்தரா போய் சேர்ந்துட்டாங்க!

 1. இந்த படத்துல பாக்யராஜ், பாரதிராஜா, பாலசந்தர், பார்த்திபன்,னு எல்லா பெரிய டைரக்டர்களோட பாதிப்பும் இருக்கும்!
அப்ப இவங்க எல்லோரட படத்துல இருந்தும் கொஞ்சம் கொஞ்சம் சீன் சுட்டு படம் எடுத்திட்டீங்கன்னு சொல்லுங்க!

 1. முத்த போராட்டத்துக்கு ஆதரவளிச்சதால மேனேஜரோட கன்னம் வீங்கிருச்சா ஏன்?
போராட்டத்துக்கு ஆதரவளிச்சு வேலைக்காரிக்கு முத்தம் கொடுத்தது வீட்டுக்காரிக்கு தெரிஞ்சு போச்சாம்!

 1. அவரு பல பேரை உயரத்திலே ஏற்றி வச்சிருக்காரு!
     ஆசிரியரா?
   இல்லே லிப்ட் ஆபரேட்டர்!

 1. நம்ம தலைவர் ஒரு பழைய பஞ்சாங்கம்னு எப்படி சொல்றே?
அவனவன் டூ ஜி, த்ரி, ஜின்னு ஊழல் பண்ணா இவர் இன்னும் அரிசியிலும் முட்டையிலுமே ஊழல் பண்ணிக்கிட்டு இருக்காரே!

 1. மன்னா! எதிரி நம் ராணியாரை கவர்ந்து போய்க் கொண்டிருக்கிறான்!
விதி யாரை விட்டது! இனி அவனை யாராலும் காப்பாற்ற முடியாது!

 1. எதிரி நம் எல்லையோரம் கூடாரம் அடித்து இருப்பது மன்னருக்கு மூக்கில் வியர்த்துவிட்டது!
அப்புறம்?
      இரவோடு இரவாக அவனது கூடாரம் சென்று சமைத்துவைத்த உணவுகளை தின்று தீர்த்து விட்டார்!

 1. அந்த டாக்டருக்கு ரொம்பவும் இளகின மனசு!
     எப்படிச் சொல்றே?
பேஷண்ட் பிழைக்கலன்னா ஈமக்கிரியை செலவை இலவசமா செஞ்சு கொடுக்கிறாராமே!

 1. அவர் வக்கீலுக்கு படிச்சுட்டு டாக்டர் தொழிலுக்கு வந்தவர்னு எப்படி சொல்றே?
ஆபரேஷன் தேதியை ஜட்ஜ்மெண்ட் டே,ன்னு சொல்றாரே!

 1. அவரு செய்யற தொழில்ல ரொம்ப பக்திஉடையவர்னு சொல்றியே என்ன தொழில் செய்யறாரு!
     சிலை திருட்டுத்தான்!

 1. இந்த ஏரியாவுலே திருட்டு பயம் அதிகம்னு எப்படிச் சொல்றே?
பக்கத்துலயே போலீஸ் ஸ்டேஷன் இருக்கே!

 1. என் மனைவி மத்தவங்க முன்னாடி என்னை விட்டுக் கொடுத்து பேசமாட்டா!
பேஷ்! பேஷ்! அப்படித்தான் இருக்கணும்!
நீ வேற நான் செய்யற சமையல் முன்ன பின்ன இருந்தாலும் மத்தவங்க முன்னாடி திட்ட மாட்டான்னு சொல்ல வந்தேன்!

 1. எங்க ஆபிஸ்ல மானேஜரோட சீட்டை கிழிச்சிட்டாங்க!
    ஐயையோ! அப்புறம்?
   அப்புறம் என்ன புது சீட் ஒண்ணு வாங்கி தரவேண்டியதா போச்சு!

 1. அந்த ‘மால்’ல எல்லா பொருளும் மோசம் விலையும் அதிகம்!
அப்ப அது சரியான “கோல்மால்”னு சொல்லு!

 1. அக்பருடைய வரலாற்றை படிக்க அதிகம் செலவாகுமா சார்?
    ஏன் அப்படி கேக்கறே?
  நீங்கதானே அக்பருடைய வரலாறு பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டதுன்னு சொன்னீங்க!

 1. வாஸ்துப்படி நடந்ததுக்கு வீட்டில பெரிய கலாட்டா ஆயிருச்சா ஏன்?
இப்ப இருக்கிற வீடு சரியில்லை! சின்னவீடு பாருங்கன்னு சொன்னார்! சின்ன வீடு செட்டப் பண்ணதும் பெரிய பிரச்சன்னை ஆயிருச்சு!

 1. எங்க வீட்டுல நானே எல்லா துணியையும் துவைச்சு காயப்போடுனும்!
     இல்லாவிட்டால்!
   என் மனைவி என் வயித்தை காயப்போட்டுறுவா!

 1. நம் மன்னர் போர்க்களம் பல கண்டவர்னு சொல்றீங்க! ஆனா உடலில் ஒரு தழும்பு கூட இல்லையே!
    போர்க்களத்தை கண்டவர்னு சொன்னேன்! போரிட்டவர்னு சொல்லலையே!

 20 அவரு எவ்ளோ பெரிய பிரச்சனை வந்தாலும் ஊதி தள்ளிட்டே இருப்பாரு!
    பெரிய சைக்ரியாட்டிஸ்டா?
    இல்லே பலூன் வியாபாரி!

 21. கட்சியின் உண்மையான தொண்டர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்னு எந்த தைரியத்தில் சொல்றார்!
    கட்சியிலே இருக்கிறதே ஒண்ணு ரெண்டு பேருதாங்கிற தைரியத்துலதான்!

 22. ஏம்ப்பா! ஒரு வாரமா ராப்பிச்சை எடுக்க வரலையே ஏன்?
இந்த ஏரியாவிலேயே பிச்சை எடுத்து பிச்சை எடுத்து போர் அடிச்சு போயிருச்சு! ஒரு மாறுதலுக்கு மூணாறுக்கு டூர் போய் பிச்சை எடுத்து வந்தேன்!


  தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Wednesday, November 26, 2014

சிகரெட்டுக்குத் தடையும்! முதல் எச்சரிக்கையும்! கதம்ப சோறு பகுதி 52

கதம்ப சோறு பகுதி 52

நல்லா போட்றாங்கய்யா சட்டம்!

       நம்ம ஆட்சியாளர்கள் போடும் சட்டங்களை பார்த்து அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை! பூனைக்கும் நண்பன் பாலுக்கும் காவல் என்பது போல உள்ளது இவர்கள் போடும் சட்டங்கள். சிகரெட்டை பாக்கெட்டாய் தான் விற்க வேண்டும் என்று புதிய சட்டம் போடப்போகிறார்கள். புகையிலைப் பொருட்களை தடை செய்ய வேண்டும் இளைஞர்கள் சீரழிகிறார்கள் என்ற நல்ல எண்ணத்தில் இந்த சட்டமாம். இதனால் பலனடையப்போவது உண்மையில் வியாபாரிகளும் சிகரெட் கம்பெனிகளுமே! ஏதோ ஐந்து பத்து கொடுத்து ஒன்று இரண்டு சிகரெட் பிடித்தவன் வாய் சும்மா இருக்குமா? அப்பா பாக்கெட்டில் கைவிட்டு ஐம்பது நூறு எடுத்து ஒரு பாக்கெட்டாக வாங்கிவிடுவான். ஒன்று ஊதியவன் அட பாக்கெட்டே இருக்கிறதே என்று ஒருநாளைக்கு ஒரு பாக்கெட் ஊதுவான். அதற்குத்தான் வழிவகுக்கும் இந்த சட்டம். பான்பராக் உள்ளிட்ட பான் பொருட்களை தடை செய்தார்கள். ஆனால் இன்று கடைகளில் பப்ளிக்காக கிடைக்கிறது. முறையான கடுமையான நடவடிக்கை கிடையாது. எல்லாம் லஞ்சம் ஊழல் நிறைந்த இந்த நாட்டில் ஒவ்வொரு சிகரெட்டாய் கூட விற்பார்கள் ஐந்து ரூபாய் சிகரெட்டை பத்து ரூபாய் என்று விற்பார்கள். அடிமைகள் அதையும் வாங்கிக் குடிப்பார்கள். இதனால் எல்லாம் சமூகம் திருந்திவிடாது. உண்மையிலேயே இந்த புகைப்பழக்கத்தை நிறுத்திவிட வேண்டும் என்றால் சிகரெட் கம்பெனிகளையே இந்தியாவில் தடை செய்ய வேண்டும். உற்பத்தியை தடை செய்ய வேண்டும். அப்போதுதான் இது நடக்கும். அதுவரை இது மாதிரி சட்டங்கள் எல்லாம் கண் துடைப்புக்களே!


பாவம் மீனவர்கள்!

   இலங்கை சிறையில் இருந்து மரண தண்டணையில் இருந்து தப்பிய மீனவர்கள் டெல்லிக்கு அழைத்து சென்று பின்னர் தமிழகத்திற்கு அனுப்பி உள்ளார்கள். மீனவர்கள் உயிரிலும் அரசியல் விளையாட்டு! நான் தான் இதைச்செய்தேன்! என்னால்தான் இவர்கள் மீண்டார்கள் என்று அடித்துக் கொள்கிறார்கள். இந்த ஐவரை விடுவித்த ராஜபக்சே இப்போது நல்லவர் ஆகிவிட்டார். லட்சக்கணக்கில் அப்பாவிகளை அவர் கொன்றதை இப்போதைய ஆட்சியாளர்கள் வேண்டுமானால் மறந்திருக்கலாம்! வரலாறு மறக்காது! மன்னிக்கவும் செய்யாது!

சகாயம்!

   கிரானைட் மோசடி குறித்து விசாரிக்க சகாயம் ஐ.ஏ.எஸ் ஐ கோர்ட் நியமித்தும் தமிழக அரசு ஒத்துழைப்பு ஏதும் தரவில்லை! மேல்முறையீடு அது இது என்று அலைகழித்தது. இப்போது கோர்ட்டே மதுரையில் நடந்த முறைகேடுகளை மட்டும் விசாரித்தால் போதுமானது என்று சொல்லிவிட்டது. மதுரையில் சில தலைகள் இதில் உருளும். ஆனால் தமிழகம் முழுவதும் சுரண்டிய ஒரு கனிம முதலை தப்பிவிட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. சகாயத்திற்கு இந்த விஷயத்தில் சகாயம் செய்ய வேண்டிய அரசே முட்டுக்கட்டையாக இருப்பது வேதனையான ஒன்று.

ப்லிப் ஹ்யூஸ்!

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ப்லிப் ஹ்யூஸ் மண்டையில் பந்து தாக்கி கோமா நிலைக்குச் சென்று உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் இருக்கிறார். விளையாட்டு வினையாகிவிடக்கூடாது என்பார்கள். இவர் விஷயத்தில் இது உண்மையாகி விட்டது. மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் வீசப்பட்ட பவுன்சர் பந்து இவரது தலையை பதம் பார்த்து உயிரை காவு கேட்கிறது. கிரிக்கெட் அனைவராலும் ரசிக்கப்பட்டாலும் சில சமயங்களில் ஆபத்தான விளையாட்டாக மாறி விடுகிறது. உயிரைக் கொடுத்து விளையாடினான் என்ற சொல் சில சமயங்களில் உண்மையாகவும் ஆகிவிடுவது வேதனையான ஒன்று. நமது இந்திய வீரர் ராமன் லம்பாவும் இப்படி பந்தில் அடிபட்டு மரணத்தை தழுவினார். சபா கரீம் என்ற விக்கெட் கீப்பர் பார்வை இழந்தார். இந்த விளையாட்டை இன்னும் நவீனப் படுத்தி ஆபத்தின்றி விளையாடுவது அவசியம் என்பதை தொடரும் விபத்துக்கள் தெரிவிக்கின்றன.

காகிதப் படகில் சாகசப் பயணம்!


      முகநூலில் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்ட பத்திரிக்கையாளர் பெ. கருணாகரன் அதை நூலாக வெளியிட்டு உள்ளார். இளம் தலைமுறை பத்திரிக்கையாளர்கள் அனைவரும் படிக்க வேண்டிய அவசியமான நூல் இது. விகடன் மாணவப் பத்திரிக்கையாளராக துவங்கி இன்று புதிய தலைமுறையில் பணியாற்றுவது வரை தனது அனுபவங்களை சுவையாக  சொன்னதோடு ஒவ்வொரு அனுபவத்திலும் ஒரு பாடத்தை புகட்டி இருப்பது நன்று. படிக்க ஆரம்பித்து விட்டால் வைக்க முடியாது. அவ்வளவு சுவாரஸ்யம். பத்திரிக்கையுலக ஜாம்பாவான்கள் ஒவ்வொருவரிடமும் தனக்கேற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொள்வதுடன் அவர்களின் குணாதிசயங்களையும் அதனால் அவர்கள் பத்திரிக்கையை எந்த அளவு நேசித்து வளர்த்து இன்று முன்னேறியுள்ளார்கள் என்பதையும் கூறும் அதே நேரத்தில் ஒரு பத்திரிக்கையாளர் எப்படி இருக்க வேண்டும் என்றும் கூறுகிறார் பெ. கருணாகரன். ஒவ்வொரு புத்தக ஆர்வலரும் படிக்க தவறவிடக்கூடாத ஓர் நூல் இது.

டிப்ஸ்! டிப்ஸ்! டிப்ஸ்!


பெருங்காயத்தை சிறிது நீர் விட்டு அறைத்து தேமல் படைகள் இருக்கும் இடத்தில் தினமும் தடவி வந்தால் விரைவில் குணமாகும்.

சுவாமி படங்களுக்கு பூ வைக்கும் போது கீழே விழுந்துவிடும். சிறிய ஒட்டும் ஹூக்குக்கள் இப்போது கிடைக்கின்றன. அவற்றை வாங்கி படத்தின் இரு முனையிலும் ஒட்டி வைத்தால் பூ வைக்க மாலை சாற்ற இலகுவாக இருக்கும்.

தோசைக்கு ஊற வைக்கும் போது கைப்பிடி உளுந்தை ஒரு நிமிடம் லேசாக வறுத்து சேர்த்து ஊறவைத்து அரைத்து தோசை வார்த்து பாருங்கள் கமகம வாசனையுடன் தோசை ஈர்க்கும்.

 கால் நகங்களில் அழுக்கு மண் புகுந்து அவதிப்படுபவர்களுக்கு வாய் துர்நாற்றத்தை தடுக்கும் லிஸ்டரினில் கால் நகத்தை ஊற வைத்தால் கால் நகம் சுத்தம் ஆகிவிடும். ( ஆனால் இதை வாய் துர்நாற்றம் தவிர்க்க பயன் படுத்த யோசிக்க வேண்டியதாகிறதே)

தினமும் ஒரு டம்ளர் மோரில் எலுமிச்சம் பழ ரசத்தை கலந்து பருகி வந்தால் ரத்த அழுத்தம் குறையும்.

சில சமயம் கைக்குழந்தைகள் வயிற்று வலி காரணமாக அழும். கறுப்பு வெற்றிலையினை லேசாக சூடுபடுத்தி அதன் மேல் விளக்கெண்ணை தடவி குழந்தையின் தொப்புள் மீது போடவும். வலி குறைந்து குழந்தை சிரிக்க ஆரம்பிக்கும்.

கிச்சன் கார்னர்!
பரங்கிக் காய் பால் கூட்டு!


தேவையான பொருட்கள்: இளம் பரங்கிக் காய் துண்டங்கள் 2 கப். வெல்லத் தூள் 1 கப், தேங்காய்த்துருவல் ¼ கப், கெட்டிப்பால் 1 கப், தாளிக்க :  உளுந்து, கடுகு சிறிது. நெய் 1 டீஸ்பூன்.

செய்முறை: பாலில் பரங்கித் துண்டுகளை சேர்த்து நன்றாக வேக விடவும்.அத்துடன் தேங்காய்த் துருவல், வெல்லத்தூள் சேர்த்து நன்றாக கிளறி எடுக்கவும். நெய்யில் உளுத்தம்பருப்பு கடுகு தாளித்து கொட்டவும். பரங்கிக் காய் பால் கூட்டு கமகமவென்று ரெடி!
    (மாலதி நாராயணன், மங்கையர் மலர் ஜனவரி 2013 இதழில் பகிர்ந்த குறிப்பு இது)


படிச்சதில் பிடிச்சது!
முதல் எச்சரிக்கை!


 திருமண வெள்ளிவிழா கொண்டாடிய தம்பதிகளிடம் திருமண வாழ்வின் வெற்றியின் ரகசியம் பற்றி கேட்கப்பட்டது.
  ஒரு கணவன் சொன்னான்….
“தேனிலவுக்கு சென்ற இடத்தில் நாங்கள் குதிரையில் பயணம் செய்தோம். நான் சென்ற குதிரை அமைதியாக சென்றது. ஆனால் எனது மனைவி சென்ற குதிரை மிகவும் குறும்புத்தனமாக ஒரு துள்ளலில் அவளை கீழே தள்ளிவிட்டது. கீழே இருந்து சுதாரித்து மீண்டும் அந்த குதிரை மீது அமர்ந்து என்  மனைவி குதிரையிடம், ‘இது உனக்கு முதல் எச்சரிக்கை’ என்றாள். சிறிது தூரம் சென்றதும் மீண்டும் அந்த குதிரை அவளை தள்ளிவிட்டது. மீண்டும் சுதாரித்து குதிரையில் ஏறிய அவள்  குதிரையிடம் ‘இரண்டாம் எச்சரிக்கை’ என்றாள். மூன்றாம் முறையாக அவளை குதிரை கீழே தள்ளிவிட்டது. அவள் உடனே குதிரையை தன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றாள்.
    அதிர்ச்சி அடைந்த நான் மனைவியை, “ஏன் இப்படிச் செய்தாய்? நீ என்ன முட்டாளா? ஒரு விலங்கை கொன்றுவிட்டாயே? அறிவில்லையா?” எனத் திட்டினேன்.
   அவள் மிகவும் அமைதியாக என்னைப் பார்த்து, ‘இதுதான் உங்களுக்கு முதல் எச்சரிக்கை என்றாள்
 அவ்வளவுதான் அதன் பிறகு எங்களது வாழ்க்கை மிகவும் அமைதியாக சென்று கொண்டிருக்கிறது.

(தமிழ் இந்து நாளிதழ் சுட்டது நெட்டளவு பகுதியில் எஸ்.எஸ். பூங்கதிர் அவர்கள் பகிர்ந்த துணுக்கு இது.)

பின் குறிப்பு} கதம்ப சோறு ஹெவியாக இருக்கிறது என்று பலரும் சொன்னமையால் இவர்களை தெரிந்து கொள்ளுங்கள் பகுதியை இந்தவாரம் நிறுத்திவிட்டேன். அடுத்த வாரம் முதல் சமையல் குறிப்புகளை தனிப்பதிவாக வெளியிடலாம் என்று ஆலோசனையில் உள்ளேன்! உங்கள் ஆலோசனைகளை கூறவும். நன்றி!


தங்கள் வருகைக்கு நன்றி!  பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Tuesday, November 25, 2014

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

இருண்டதும்
அழகாகின்றன!
நகரங்கள்!

தழுவிவிட்டு
நழுவிக்கொண்டே இருக்கின்றது
காற்று!

கேள்விகள் விளைகையில்
வளர்கிறது
குழந்தை!

மையிட்டு
பொட்டுவைத்துக்கொண்டது வானம்!
நிலா!

ஒளிரும் சாலைகள்
ஊர்ந்தன புழுக்கள்!
இரவில் வாகனங்கள்!

கடத்தல்காரனை
காதலிக்கின்றது உலகம்!
காற்று!

கடல் குளியலில்
சூரியன்!
குளிர்ந்தது பூமி!

மின்னியது!
கூசவில்லை!
மின்மினி!

விளக்கேந்தி
விடியலைத் தேடுகின்றன
மின்மினிகள்!

ஆயிரம் அர்த்தங்கள்
புதைந்துகிடக்கின்றது
குழந்தையின் மொழி!

பொம்மைக்கு அடிபட்டதும்
வலிக்கிறது
குழந்தை மனசு!

சலனப்பட்டு
வாழ்க்கை இழக்கின்றது
நீர்!

மூடிக்கொண்டன
இதழ்கள்!
மவுனம்!

மூழ்காமலே
முத்தெடுத்தது!
தாமரை இலை!

ஒற்றைக்காலில் தவம்!
கிடைக்கவில்லை வரம்!
அல்லிமலர்கள்!

அழுக்காகத் தெரிவது
அழகாகிறது!
குழந்தையின்சட்டையில் மண்!

 விரட்டினாலும் ஒட்டிக்கொள்ளவே
  விரும்புகிறது
குழந்தையிடம் மண்!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி

Friday, November 21, 2014

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 23

கொஞ்சம் சிரியுங்க பாஸ்!  பகுதி 231.      இந்த படத்துல கதை ஒண்ணையுமே காணோமே!
யாரோட கதையையும் திருடி எடுத்தேன்னு யாரும் சொல்ல முடியாதுன்னு டைரக்டர் சொன்னப்பவே நினைச்சேன்!


2.      தலைவர் அடிக்கடி இதை மேலிடத்துக்கிட்ட கேட்டுச் சொல்றேன் மேலிடத்துக்கிட்டே கேட்டுச்சொல்றேன்னு சொல்றாரே நம்ம கட்சிக்கு ஏதுய்யா மேலிடம்?
    நீ வேற மேலிடம்னு அவர் சொல்றது அவர் சம்சாரத்தை!

3.      மன்னா! நம் நாட்டை போர் மேகங்கள் சூழ்ந்துவிட்டன!
  மந்திரியாரே எதிரியுடன் சமரசம் பேசி ஒரு குடையின் கீழ் ஆட்சியை கொண்டுவந்து விடலாமா?

4.      தலைவருக்கு எப்பவுமே விளம்பர மோகம் ஜாஸ்தி!
அதுக்காக குற்றப்பத்திரிக்கையிலே கட்சி விளம்பரம் வரனும்னு சொல்றது கொஞ்சம் கூட நல்லாவே இல்லை!


5.      தொண்டர்கள் எல்லாம் எதுக்கு மாலையோட வந்து இருக்காங்க?
நீங்கதானே தலைவரே நம்மகட்சியிலே ஜனநாயகம் செத்துவிட்டதுன்னு அறிக்கை விட்டீங்க!

6.      நீதிமன்றத்திலே தலைவர் சொன்ன பதிலைக்கேட்டு ஜட்ஜே  அசந்துட்டார்!
எப்படி?
இவ்வளவு ஊழல் பண்றதுக்கு உங்களுக்கு எப்படி மனசுவந்ததுன்னு கேட்டதுக்கு அது என்னோட உடன்பிறந்த வியாதின்னு சொல்லிட்டார்!

7.      தலைவர் எதுக்கு தொண்டர்கள் எல்லாம் ஹார்லிக்ஸ் பூஸ்ட் கட்டாயம் சாப்பிடனும்னு அறிக்கை விடறார்!
கட்சியிலே தொண்டர்களோட பலம் குறைஞ்சுப்போச்சுன்னு யாரோ சொன்னாங்களாம்!

8.      உங்க கூட இத்தனை வருஷமா குப்பை கொட்டி என்ன பிரயோசனம்?
நீ கொட்டற குப்பையெல்லாம் சுத்தமா பெருக்கிஎடுத்து வெளியே போட்டு வீட்டை சுத்தமா வச்சிருக்கேனே அது போதாதா?

9.      அரசவைப்புலவர் ஏன் இவ்வளவு நடுக்கத்துடன் அஞ்சி நின்றுகொண்டிருக்கிறார்?
அவரது மகன் இளவரசியாரிடம் கொஞ்சிக்கொண்டிருக்கிறாராம் மன்னா!

10.  ஹெட் கிளார்க் நாராயணசாமிக்கு அடிபட்டதும் ஏன்யா வெட்னரி டாக்டர்கிட்டே கூட்டிட்டு போனீங்க?
நீங்கதானே சார்  மனுசன் மாடா உழைப்பார்னு சொன்னீங்க!

11.  சிக் லீவ் கேட்டதுக்கு உங்க ஆபிஸ்ல கொடுக்க மாட்டேன்னுட்டாங்களா ஏன்?
உடம்பை ’சிக்’னு வெச்சிக்க  ப்யுட்டிபார்லர் போக இல்லே லீவ் கேட்டேன்!

12.  தினம்தோறும் கிச்சன்லேயே சமைச்சு சமைச்சு போரடிச்சுபோச்சு! ஒரு மாறுதல் வேணும்னு என் மனைவிக்கிட்டே கேட்டேன்!
     என்ன சொன்னா?
   வேணும்னா இன்னிக்கு ஒருநாள் ஹால்லேயே சமைங்கன்னு சொல்லிட்டா!

13.  வாரம் ஒரு உண்ணாவிரதத்துல கலந்துக்கறதுன்னு தலைவர் கொள்கையே வைச்சிருக்கார்!
    ஏன்?
   அப்பத் தான் விதவிதமான பிரியாணியை ருசிச்சு சாப்பிட முடியுதாம்!

14.  சர்வர் அங்க என்ன கலாட்டா?
    தலப்பா கட்டு பிரியாணின்னு சொல்றீங்களே பிரியாணி இருக்கு தலப்பா எங்கேன்னு கேக்கிறாரு இவரு!

15.  மன்னருக்கு மீசை நரைத்தாலும் ஆசை நரைக்கவில்லைன்னு எப்படி சொல்றே?
மல்யுத்த போட்டிக்கு சியர்ஸ் கேர்ள்ஸை அப்பாயிண்ட்மெண்ட் செய்துள்ளாரே!


16.  யுத்தம் என்று ஒன்று வந்தால் நம் மன்னர்தான் முதல் ஆளாய்…
    வாள் எடுப்பாரா?
   நீ வேற ஓட்டம் எடுப்பார்!

17.  ஏண்டா உன்னோட வகுப்புல உக்காராம அடுத்த வகுப்புல போய் உக்காந்தே?
நீங்கதானே சார் சொன்னீங்க கனியிருக்க காய் கவர்ந்தற்றுன்னு அங்கதான் என் ப்ரெண்ட் கனி இருக்கா!

18.  டாக்டர் டாக்டர் பேஷண்ட்டுக்கு அனஸ்தீஷியா கொடுத்தும் மயக்கமே வரலை!
அப்போ ட்ரிட்மெண்ட்டுக்கு ஆவற செலவு பில்லை காட்டுங்க உடனே மயங்கிடுவார்!

19.  ஆபீஸ் வேலையை வீட்டுலேயும் செய்ய சொல்றா என் மனைவி!

     அடடே!
  என்ன அடடே! கூட்டி பெருக்குங்கிறா! நான் அக்கவுண்டட்டா இல்லெ இருக்கென்!

20.  அவர் வாழ்க்கையே ரொம்ப சிக்கல் நிறைஞ்சிதா அமைஞ்சிருச்சு!
    எப்படி சொல்றீங்க!
   அவர் மனைவியோட தலையில நிறைய சிக்கு எடுத்துக்கிட்டு இருக்கிறதா தினமும் சொல்றாரே!


21.  தலைவர் எதுக்கு கட்சிக்கு ரெண்டு கிரேன் வாங்கச்சொல்லி இருக்கார்!
சரிந்து விழுந்த கட்சியை தூக்கி நிறுத்ததான்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Wednesday, November 19, 2014

ஓடிக்கொண்டே இருக்கும் மோடியும்! ஓடாத ஓபிஎஸ்ஸும்! கதம்பசோறு பகுதி 51

கதம்பசோறு பகுதி 51

ஓடிக்கொண்டே இருக்கும் மோடியும்! ஓடாத ஓபிஎஸ்ஸும்!  நம்முடைய மாநிலத்தையோ நாட்டையோ எடுத்துக்கொண்டால் ஆட்சி முறை கூட்டாட்சி தத்துவம். எனவே பிரதமரும்- முதல்வரும் முக்கியமானவர்கள். நமக்கு வாய்த்த நல்லவர்கள் வல்லவர்களாக இல்லாதது நாம் செய்த பெரும்பாக்கியம்தான் என்ன செய்வது? பிரதமருக்கு சொந்த நாட்டில் இருப்பதை விட வெளிநாடுதான் பிடிக்கிறது! தினம் ஒரு நாடு என்று கணக்குவைத்து சுற்றிப் பார்க்கிறார் அன்னிய முதலீடு என்கிறார் அது இது என்று எல்லா நாடுகளுக்கும் சுற்றிவருகிறார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ரெகார்டை முறியடித்துவிடுவார் போலிருக்கிறது. அவராவது ஒரு அணுகுண்டு வெடித்து கார்கில் போரை வெற்றிகரமாக சமாளித்தார். இவருக்கு நாட்டில் குப்பையை அகற்றவும் கழிப்பறைகட்ட வெளிநாட்டில் நிதிகேட்கவே நேரம் போதவில்லை! இதற்கிடையில் மீடியாக்களுக்கு போஸ் கொடுக்கவும் விளம்பரங்களில் நடிக்கவும் வேறு நேரம் ஒதுக்க வேண்டும். எப்படியோ குஜராத்தை மாற்றிவிட்டேன் என்று ஒரு போலியான பிம்பத்தை உருவாக்கி இந்தியாவை மாற்றுகிறேன் என்று ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். சரி இவராவது பரவாயில்லை! ஓபிஎஸ் ஒண்ணுக்கு இருக்க வேண்டுமானால் கூட பர்மிசன் கேட்கவேண்டும் போல! ஆனாலும் சளைக்காமல் நாற்காலியைவிட்டு அசையாமலே கலைஞருக்கு பதில் அறிக்கை விட்டுக்கொண்டு அம்மா விசுவாசம் காட்டுகிறார். மழை வெள்ள நிவாரணங்களோ, போதுமான உரங்களோ கிடைக்காமல் விவசாயிகள் தவிக்கிறார்கள். ஒருபக்கம், டெங்கு, தர்மபுரி சிசுமரணம் என்று சுகாதாரத் துறையில் அலட்சியம், சென்னை நகர சாலைகள் மட்டுமின்றி தமிழக கிராமங்களில் பல சாலைகள் பராமரித்தே பலவருடங்கள் ஆகிவிட்டது. இருந்தும் இவரால் ஒன்றும் செய்ய முடியாத நிலை! தட்டு நிறைய லட்டு இருந்தும் தின்ன முடியாத சர்க்கரைவியாதிக்காரன் போல அவதிப்படுகிறார். இந்த கூத்துக்களையெல்லாம் பார்த்துக் கொண்டு காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறோம் நாம். இதுவும் கடந்துபோகும்!

திருடப்படும் கதைகள்:

     கத்தி படக்கதையை என்னுடையது என்றார் மீஞ்சூர் கோபி. அதற்கு சில ஆதாரங்களையும் வைத்தார். இப்போது லிங்கா படம் சர்ச்சையில் சிக்கியுள்ளது. முல்லைவனம் 999 என்ற நாவலை தழுவியே படமாக்கப்பட்டுள்ளது என்று அதன் உரிமையாளர் வழக்குபோட இதற்கும் அந்த நாவலுக்கும் சம்பந்தம் இல்லை என்று இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதோடு விடாமல் பென்னிகுயிக் வாழ்க்கை வரலாறு ஒருவருக்கு மட்டும் சொந்தமல்ல என்று கூறியிருக்கிறார். இணையத்திலும் வலைப்பூக்களில் இந்த திருட்டு நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. பிரபலமான பதிவர்களின் பதிவுகளை திருடி தன் பதிவில் போட்டுக்கொள்வது சிலரது வழக்கமாகவே உள்ளது. எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் பல கதைகள் திருடப்பட்டு படமாக்கப்பட்டுள்ளது என்று அவரே முகநூலில் தகவல் பகிர்ந்துள்ளார். சிந்தனை திருட்டு என்பது கண்டிக்க கூடியது என்றாலும் இதில் இருந்து தப்பிக்க திருடுபோகாமல்  எப்படி காப்பது என்பதற்கு எந்த ஒருவழியும் இருப்பதாக தோணவில்லை! திருட்டு விசிடி என்று அலறும் திரைப்பட இயக்குனர்கள் திருடி படம் எடுக்கலாமா? பல ஹாலிவுட் படங்களை தழுவி எடுத்தவர்கள் ஒரு பெயருக்காவது இதில் இருந்து தழுவி எடுத்தோம் என்று கார்டு போடுகிறார்களா என்றால் இல்லை! இதில் என்ன கொடுமை என்றால் என்னுடைய பேய்கள் ஓய்வதில்லை தொடரில் இருந்து சில சீன்களை சமீபத்தில் வந்த பேய்ப்படத்தில் சுட்டுள்ளார்களாம். அனானியாக கருத்துச்சொல்லும் ஒருவர் இதைச்சொன்னார். நாமெல்லாம் இந்த அளவுக்கு வொர்த்தாயிட்டோம் என்று சந்தோஷப்படுவதா சங்கடப்படுவதா தெரியவில்லை!

வியக்க வைத்த விராத் கோலி!

    கிரிக்கெட் பார்ப்பதை இப்போதெல்லாம் தவிர்த்துவிடுகிறேன்! ஒரு காலத்தில் இந்தியா விளையாடும் போட்டியை பார்ப்பதற்காக ஸ்கூலுக்கு லீவ் போட்டெல்லாம் பார்த்திருக்கிறேன். அப்படி ஒரு கிரிக்கெட் பைத்தியம் கொஞ்சம் விளையாடவும் செய்வேன். கிரிக்கெட் சூதாட்டங்கள் இந்தவிளையாட்டிலிருந்து என் ஆர்வத்தை கொஞ்சம் விளக்க குடும்பம் குழந்தைகள் என சமீபத்தில் முழுவதும் விலகி இருந்தேன். இருந்தாலும் என்றாவது ஒருநாள் ஓர் அரைமணிநேரம் ஒருமணிநேரம் பார்ப்பது உண்டு. அப்படித்தான் இந்தியா இலங்கை விளையாடிய ஐந்தாவது ஒருநாள்போட்டியை பார்த்தேன். முழுவதும் பார்க்கவில்லை! இந்தியா விளையாடுகையில் 20 ஓவர் கழித்து பார்த்தேன். விராத் கோலியின் தலைமைப் பண்பும் ஆட்டமும் கொஞ்சம் வியக்கவைத்தது. தோனிக்கு பிறகு இவர் கேப்டன் பதவிக்கு தகுதியானவர்தான் என்று தோன்றுகிறது. இளம் வீரர்களை ஆட விட்டு அவர்களின் திறனை தன்னம்பிக்கையை அதிகரிக்கச்செய்தார். தோனியே கூட கடைசி கட்டத்தில் ஓவருக்கு பத்து ரன்கள் எடுக்க வேண்டும் என்றால் டெயிலெண்டர்களுடன் பேட்டிங் செய்தால் அவர்களை நிறைய பந்துகளை எதிர்கொள்ள செய்ய மாட்டார். ஆனால் கோலி புதியவர்களை நம்பினார். கேதர் ஜாதவ், மற்றும் அக்சர் பட்டேலுக்கு நிறைய பந்துகளை சந்திக்க வாய்ப்பு தந்தார். அந்த நம்பிக்கையை ஜாதவ் பூர்த்தி செய்யாவிடிலும் அக்சர் நன்கு பூர்த்தி செய்தார். அடிக்கடி உணர்ச்சிவசப்பட்டு கோபப்பட்டுவிடும் கோலி இப்போது கொஞ்சம் பக்குவப்பட்டு உள்ளதாக தெரிகிறது. அதே சமயம் கொஞ்சம் கூட போராட்ட குணம் இல்லாத இலங்கை அணியை இப்போதுதான் பார்த்தேன் அதற்கு என்ன ஆயிற்று. கேப்டன் மாத்யூஸ் மட்டுமே இந்த தொடரில் குறிப்பிடத்தக்கபடி ஆடியுள்ளார் என்று புள்ளிவிவரங்களில் இருந்து தெரிகிறது. மற்றபடி பந்துவீச்சு சுத்தமாக எடுபடவில்லை! மட்டையாளர்களும் ஜொலிக்கவில்லை! சங்ககரா இந்த தொடரில் ஆடவில்லை போலும். அணித் தலைவன் என்பவன் தன்னை நம்புவதோடு அணியினரையும் நம்ப வேண்டும். அந்தவகையில் கோலியின் இந்த ஆட்டம் எனக்கு மிகவும் பிடித்து போயிற்று.

படிச்ச புத்தகம்!

 ஒரத்தநாடு கார்த்திக் தளத்தில் நிறைய நாவல்கள் வாரப்பத்திரிக்கைகள் டவுண்லோடு லிங்க் கிடைக்கிறது. அதில் அவ்வப்போது பல நாவல்கள் புத்தகங்கள் டவுண்லோடு செய்து கொள்வேன். என்னுடைய ஓய்வு நேரம் மதியம் இரண்டு மணிக்கு மேல்தான் இருக்கும் அப்போது வலைப்பூக்களை படிக்கவும் முகநூலில் மேயவும் பதிவு எழுதவுமே நேரம் சரியாகிவிடும். அதிலும் நேரம் கிடைத்தால் ஒன்றிரண்டு புத்தகங்கள் படிப்பதுண்டு. இந்த வாரம் மைண்ட் ரிலாக்ஸ் செய்ய ராஜேஷ்குமாரின் க்ரைம் நாவல் ஒன்று டவுண்லோடு செய்து படித்தேன். அவசரம் விவேக் அவசரம் என்ற நாவல் அது.

     பாக்கெட் நாவல் வெளிவந்த புதிதில் வந்தது போலிருக்கிறது. அடையாறு பார்க்கில் தலையில்லாத ஓர் உடல் பின்பு ஒரு சிதைக்கப்பட்ட தலை கிடைக்கிறது. இதைக்கொண்டு இறந்தவன் யார் கொலையாளி யார் என்று சுவைபட கொண்டு செல்கிறார் க்ரைம் கதை மன்னர். இடையில் இரண்டு லவ் டிராக் வேறு. கொலையாளியை ஊகிக்க முடியாத வகையில் கொண்டு சென்று திடீர் திருப்பமாக இவன் தான் கொலையாளி என்று சொல்லுவது சுலபமன்று. அதை சுலபமாக செய்கிறார் நாவலாசிரியர். விறு விறு நாவல்.
படிக்க வேண்டுமெனில் இங்கு டவுண் லோடு செய்து கொள்ளுங்கள்! ராஜேஷ்குமார் நாவல்கள்  அல்லது எனக்கு மின்னஞ்சல் செய்து கேட்டால் அனுப்பி வைக்கிறேன்! நன்றி!

சமையகட்டு!
  சென்றவாரம் முப்பருப்பு வடையை நிறைய பேர் ருசித்து பாராட்டினீர்கள். இந்த வாரம் கருணைக்கிழங்கு மசியல் பற்றி எழுதலாம் என்று அம்மாவிடம் கேட்டேன். அவர் பிசியாக இருந்ததால் அப்புறம் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டார். அதனால்  பழைய மங்கையர் மலரில் படித்த மாம்பருப்பு வத்தக் குழம்பு பற்றி பகிர்கிறேன்.


தேவையான பொருட்கள்!
மிளகுசீரகம் 1 டீஸ்பூன்
தனியா 2 டீஸ்பூன்
வரமிளகாய், 4, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு தலா 1 டீஸ்பூன்
பச்சரிசி புழுங்கல் அரிசி தலா ½ டீஸ்பூன்
சுண்டல் வற்றல்  3 டீஸ்பூன்
மாங்கொட்டையின் உள்ளே உள்ள மாம்பருப்பு 1
மணத்தக்காளி வற்றல் 1 டீஸ்பூன்
கடுகு வெந்தயம் தலா ½ டீஸ்பூன்
கறிவேப்பிலை, வதக்கிய பூண்டு தலாஒரு கைப்பிடி
வெல்லம் சிறிது, நல்லெண்ணை, உப்பு, தேவையான அளவு.

 மாங்கொட்டையை கேஸ் தணலில் காட்டினால் அது கருகி உள்ளிருக்கும் மாம்பருப்பு வெளிப்படும். அதை சிறு துண்டுகளாக்கி கொள்ளவும்.
 ஒரு எலுமிச்சை அளவு புளி எடுத்து அதே அளவு கல் உப்பு போட்டுக் கரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். ஒரு அடி கனமான வாணலியில், மிளகுமுதல் கருவேப்பிலை வரை மேற்சொன்ன எல்லா பொருள்களையும் சிறிது நல்லெண்ணை விட்டு வதக்கவும். மிக்சியில் மைபோல அரைத்து புளிகரைசலில் கரைக்கவும்.
   வாணலியில் தாராளமாக எண்ணெய் விட்டு கடுகு வெந்தயம் தாளித்து கரைசலை கொதிக்க விடவும். வதக்கிய பூண்டை குழம்பு கொதித்தபின் போடவும். வெல்லம் சிறிதளவு தேவையென்றால் சேர்க்கவும்.
   இதை பாட்டிலில் ஊற்றி ஃபிரிட்ஜில் வைத்து ஒருமாதம் வரை உபயோகிக்கலாம். வயிறுவலி, அல்சர் போன்றவைகளுக்கு நல்ல மருந்து.
      குறிப்பு எழுதியவர்: வேதவள்ளி ராஜம் ஸ்ரீ வில்லிப்புத்தூர்.

டிப்ஸ்! டிப்ஸ்! டிப்ஸ்!

சாப்பிட்டு முடித்ததும் ஒரு டம்ளர் வெந்நீர் அருந்த வேண்டும். உணவு செரிமானம் விரைவில் ஆவதுடன் உடல் எடை குறையும்.

அடைமாவில் வாழைப்பூ பொடிப்பொடியாக அரிந்து சேர்த்தால் சுவையாக இருப்பதுடன் எளிதில் ஜீரணமாகும்.

சீயக்காய் அரைக்கும் போது ஒரு கைப்பிடி வேப்பிலையும் ஒரு கைப்பிடி மாந்துளிர் இலையையும் சேர்த்து காயவைத்து அரைத்து தலைக்கு குளித்தால் தலையில் ஏற்படும் அரிப்பும் வியர்வை நாற்றமும் போய்விடும்.

உப்புக்கு நடுவில் எலுமிச்சை பழங்களை அமிழ்த்தி வைத்தால் ஒருவாரம் வரையில் எலுமிச்சம் பழங்கள் ப்ரெஷ்ஷாக இருக்கும்.

பிளாஸ்டிக் பொருட்களை வாங்கும்போது கவனிக்க வேண்டியது. பொருட்களின் அடியில் முக்கோணவடிவில் 1 முதல் 7 வரை எண்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். 1 என்பது உபயோகித்த பின்னர் தூக்கி எறியப்பட வேண்டியவை. 7 என்பது உயர்தரமானது. நீடித்து உழைக்கக் கூடியது.

பதிவர் அறிமுகம்!
   ஐயா முத்துநிலவன் அவர்கள் ஒரு பதிவில் நிறைய பதிவர்கள் சிறப்பாக எழுதினாலும் வெளியே தெரிவதில்லை! பிரபல பதிவர்கள் அவர்களை தங்கள் பதிவில் அறிமுகம் செய்துவைத்தால் நன்றாக இருக்கும் என்றார். நான் பிரபலம் இல்லைதான் இருந்தாலும் என்னை சிலர் தொடர்கிறார்கள். அவர்களுக்கு நான் தொடரும் ஓர் புதிய பதிவரை அறிமுகப்படுத்துவதுதான் இந்த பதிவு.

 இந்த வாரம் ஊமைக் கனவுகள் விஜி.

  தமிழாசிரியரான இவர் தமிழ்மேல் ஆர்வம் கொண்டு இலக்கணங்களை சொல்லிக் கொடுக்கிறார். அதோடு கணித புதிர்களையும் போடுகிறார். கவிதைகளும் அருமையாக எழுதுகிறார்.தற்போது வெண்பா எப்படி எழுத வேண்டும் என்று கற்றுத் தருகிறார். தமிழார்வம் உள்ளவர்கள் இவரது தளம் சென்று பதிவுகளை படித்தே தீரவேண்டும். அவ்வளவு சிறப்பாக எழுதுகின்றார். இதோ லிங்க். யாப்பு சூக்குமம்


இவர்களை தெரிந்து கொள்ளுங்கள்!
தலைவராக வந்து கொள்ளையடிப்பவர்கள் மத்தியில் இப்படியும் சுற்றுச்சூழலை பாதுகாக்கிறார் ஓர் ஊராட்சித்தலைவர். லிங்கை சொடுக்கி விவரம் அறிக!
 மாஞ்சான்விடுதியில் பாதினிக் கண்மாய் கரையில் உள்ள புளிய மரங்கள். (உள்படம்) ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ந. பாலசுப்பிரமணியன்.
படிச்சதில் பிடிச்சது!


வெள்ளைக்காரன் ஆட்சியில் நிறுவப்பட்டதுதான் தாம்பரம் கிறிஸ்துவக் கல்லூரி. அதில் அனைவரும் வெள்ளையரே பின்னாளில் இந்தியரும் சேர அனுமதித்தனர்.
   அப்போது ஓர் மாணவன் கட்டுக்குடுமி, நெற்றிப்பட்டை விபூதியோடு வந்து சேர்ந்தான். அவன் பெயர் சூரிய நாராயணன். அட்டெண்ட்ஸ் எடுக்கும் ஆங்கில பேராசிரியருக்கு அவன் பெயரை உச்சரிக்க சிரமமாக இருந்தது. மாணவனிடம் பெயரை மாற்றிக்கொள்ள சொன்னபோது மறுத்தான். தாய் தந்தையர் வைத்த பெயரை மாற்றிக்கொள்ள மாட்டேன் என்று அடம் பிடித்தான். விஷயம் பிரின்ஸ்பாலுக்குச் சென்றது. அவர் மாணவனை கூப்பிட்டு உன் பெயரை வேறுவிதமாக மாற்றிக்கொள் என்று உத்தரவிட்டு விட்டு கிளார்க்கிடம் இந்த மாணவன் சொல்லும் வேறு பெயரை அட்டெண்ட்ஸில் எழுதிவிடு என்றார்.
   மறுநாள் அட்டெண்ட்ஸ் எடுத்தபோது மாணவன் பெயர் மாறித்தான் இருந்தது. ஆனால் பேராசிரியருக்கு மயக்கம் வந்துவிட்டது. ஏன்? சூரிய நாராயணன் என்ற பெயரை சூரிய நாராயண சாஸ்திரி என்று மாற்றியிருந்தார் மாணவர். பிரின்ஸிபாலாலும் பேராசிரியரால்ம் ஒன்றும் கூறமுடியவில்லை! அவர்கள் சொன்னபடி வேறு பெயரை மாற்றிக்கொண்டாகிவிட்டதே!
   அப்படிப்பட்ட அந்த மாணவன் பிற்காலத்தில் தனித்தமிழ் இயக்கத்திற்கு வித்திட்டு  தன் பெயரையே  பரிதிமாற்கலைஞர் என்று தமிழில் மாற்றிக் கொண்டார்.

(பழைய புத்தகமொன்றில் படித்தது)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி
Related Posts Plugin for WordPress, Blogger...