"குரு உத்சவ்”

“ குரு உத்சவ்”


மாதா,பிதா, குரு, தெய்வம் என்ற வாக்கின் படி குரு இல்லாமல் ஒருவர் இருக்க முடியாது. எந்த துறையாக இருந்தாலும் கண்டிப்பாக ஒரு குரு இருக்க வேண்டும் என்பது என் கருத்து. இல்லை இல்லை நான் தன்னிச்சையாக முளைத்தேன். ஏகலைவன் போல நானே கற்றுக்கொண்டேன் என்று சொல்வதெல்லாம் வெறும் ஜம்பமே. ஏகலைவன் கூட மானசீகமாக துரோணாச்சாரியரை குருவாக வைத்துக் கொண்டு மறைந்து நின்று பாடம் கற்றுக்கொண்டான்.
   இன்று கணிணி யுகத்தில் பல்வேறு பாடங்களை கணிணி உதவியுடன் படிக்க முடிந்தாலும் அதை கணிணியில் பதிவேற்றியவர் ஒரு குருதானே. ஆக குரு என்பவர் ஒவ்வொருவருக்கும் உண்டு.
    சம்ஸ்கிருதத்தில் குருவாக மதிக்கப்படுபவர் தமிழில் ஆசிரியராக மதிக்கப் படுகிறார். இன்றைய தினம் ஆசிரியர் தினம். ஆசிரியரும் குருவும் ஒன்றே! காலம் காலமாக ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வரும் இந்த நாளை குரு உத்சவ் என்று பெயர் மாற்றம் செய்து சர்ச்சைக்கு ஆளாகி உள்ளது மத்திய அரசு. நமக்கு அரசியல் தேவையில்லை. இன்றைய தினத்தில் என் மனதில் பதிந்த என்னுடைய ஆசிரியர்கள் சிலரையும் எழுத்து துறையில் என்னை ஊக்குவித்த ஒரு குருவினையும் நினைவு கூறுகின்றேன்.

  நான் சிறுவயதில் வளர்ந்தது என் தாத்தா பாட்டி வீட்டில். (அம்மாவின் அப்பா-அம்மா வீடு) என்னுடைய ஐந்தாவது வயதில் அங்கிருந்த ஆரம்பப் பள்ளியில் கொண்டு சேர்த்தார் மாமா. அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி ஜம்பகவல்லி. ஐந்தாம் வகுப்பு வரை இருந்த அந்த ஆசானபூதூர் பஞ்சாயத்து ஆரம்பப் பள்ளியில் துவங்கியது என் பால பாடம். சுமார் முப்பது முதல் முப்பத்தைந்து மாணவர்கள்தான் மொத்தமே. ஒரே ஆசிரியை. அவரும் பக்கத்து ஊரில் இருந்து வருவார்.
     தலையைச் சுற்றி காதில் விரலை தொடுமாறு வைத்து ஐந்து வயது பூர்த்தியானதைக் கண்டுபிடித்து பள்ளியில் சேர்த்துக் கொண்டார்கள். பள்ளியின் எதிரே இருந்த திடலில் மணலில் விரலால் ஹரி நமோத்து சிங்கம் எழுதி அனா ஆவன்னா எழுதி பழக்கினார்கள். பின்பு மறுநாள் முதல் சிலேட்டில் எழுத்து பயிற்சி இப்படித் துவங்கியது என் படிப்பு. இந்த ஆசிரியை அவர்கள் பள்ளியின் மீதும் மாணவர்கள் மீதும் ஈடுபாடு கொண்டு நல்ல முறையில் பாடம் கற்பிப்பார்கள். அன்றைய காலகட்டத்தில் பல நாட்கள் பள்ளிக்கே வராத ஆசிரியர்கள் பலர் இருந்தார்கள். இவரும் லீவ் எடுப்பார். ஆனால் திரும்பியதும் பாடங்களை வெகு அழகாக சொல்லிக் கொடுப்பார். தமிழ், ஆங்கிலம், கணிதம் என்று எல்லாவற்றையும் அவர் சொல்லிக் கொடுக்கும் விதமே தனிச்சிறப்பு. கலை ஆர்வம் கொண்ட அவர் கலைநிகழ்ச்சிகளும் நடத்தி மாணவர்களை ஊக்குவித்து பரிசுகள் கொடுப்பார். பின்னாளில் நான் சில கலைநிகழ்ச்சிகள் நடத்த இந்த ஆசிரியையே முன்னுதாரணம் என்றால் மிகையில்லை. இப்பொழுது ஓய்வு பெற்றுவிட்டார். கடந்த வருடம் அவரை சந்தித்தேன். இன்றும் அதே சுறுசுறுப்புடன் தனியார் பள்ளி ஒன்றின் ஆலோசகராக இருப்பதாக கூறினார். மகிழ்ச்சியாக இருந்தது.
     நான் ஆறாம் வகுப்புக்கு சென்றபோது அந்த பள்ளியின் தமிழாசிரியர் திரு தசரதன் அவர்கள். அவர் பாடம் நடத்தும் பாங்கு என்னை மிகக் கவர்ந்தது. எல்லோரும் இயல்புத் தமிழில் உரையாட இவர் செந்தமிழில் பேசுவார்.. திருக்குறளுக்கு எடுத்துக் காட்டுக்கள் தந்து அவர் விளக்கும் பாணியே மிக அழகாக இருக்கும். இலக்கிய ஆர்வலர். சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற செய்யுள்களை சிறப்பாக விளக்குவார். நீதிபோதனை வகுப்பில் இவர் சொல்லும் கதைகள் மிக அருமையாக இருக்கும். நான் அந்த பள்ளியை விட்டு நின்றபின் இவரை மீண்டும் சந்திக்கவில்லை. ஓய்வு பெற்று இருப்பார் என்று நினைக்கிறேன்.

பொதுவாக குருவாக ஆசிரியராக இருப்பவர்கள் மாணவர்களிடம் இருக்கும் தனித் தன்மையை அறிந்து அதை வளர்க்க உதவி புரிவர்.இதை பிரபலங்கள் பலரும் எழுதி படித்து இருக்கிறேன். என்னுடைய எழுத்துத் திறமையை இந்த பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்கள் கண்டுபிடிக்கவில்லை என்னை ஊக்கப்படுத்தவில்லை என்ற வருத்தம் எனக்கு உண்டு. நான் ஏழாம் வகுப்பு படிக்கையில் கதைகள் எழுத ஆரம்பித்தேன்.
நான்  பள்ளி இறுதி முடிக்கும் வரை நான் கதை எழுதுவேன் என்று எந்த ஆசிரியருக்கும் தெரியாது. ஒருசமயம் ஒரு கட்டுரைக்கு கதை எழுதி விளக்கி இருந்தேன். அதை தமிழாசிரியர் ரசித்தார். யார் எழுதியது என்றபோது நான் எழுதினேன் என்று சொல்லாமல் கைடை பார்த்து எழுதினேன் என்று பயத்தில்  சொல்லிவிட்டேன். அவரும் அதானே பார்த்தேன்! என்று நையாண்டி செய்து விட்டுவிட்டார். ஆனால் எனது எழுத்து திறமையை அறிந்து என்னை ஊக்குவித்த ஓர் ஆசிரியர் உண்டு. அவர் திரு வி. கண்ணன். எனது தந்தையின் நண்பர்.
   நான் எட்டாவது படிக்கையில் அவர் எனக்கு பழக்கமானார். கதை என்று நான் கிறுக்குவது அனைத்தும் அவர் படித்து ரசிப்பார். விடாதே தொடர்ந்து எழுது என்று ஊக்குவித்தார். நான் ஆரம்பித்த கையெழுத்து பிரதிகளுக்கு அவர்தான் ஆசிரியர். ஆகவே அவரும் எனது குருவாகிறார். எனது கையெழுத்துப் பத்திரிக்கை நடத்த தேவைப்படும் காகிதங்களை சென்னையில் இருந்து வாங்கி வந்து தருவார். கையெழுத்து பத்திரிக்கைக்கு ஆசிரியர் பகுதி எழுதித் தருவார்.
   பால குமாரன் எழுத்துக்களின் ரசிகரான அவர் நீயும் ஒருநாள் பாலகுமாரன் போல வருவாய் என்று சொன்னது இன்றும் என் மனதில் பசுமரத்தாணி போல பதிந்து கிடக்கிறது. இன்று அவர் தொடர்பில் இல்லை என்றாலும், என் எழுத்துலகின் குரு இவர்தான் என்று சொல்லலாம்.
     அவரது ஆசியால் பாலகுமாரன் அளவுக்கு உயராவிட்டாலும் ஓரளவிற்கு பல நண்பர்கள் வாசிக்கும் அளவிற்காவது என்னால் எழுத முடிந்ததை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்.
இந்த ஆசிரியர் தினமான குரு உத்சவில் எழுத்தை கற்பித்த திருமதி ஜம்பகவல்லி, தமிழார்வத்தை எழுப்பிய திரு தசரதன், எழுத்தார்வத்தை தூண்டிய திரு வி. கண்ணன் மூவரையும் வணங்கி மனதார நன்றி கூறுகின்றேன். நன்றி! நன்றி! நன்றி!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. உண்மைதான் சார், இந்த உலகில் ஆசான் இல்லாமல் யாருமே இல்லை.. உங்கள் ஆசிரியர்கள் பற்றி பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சார்.....

    ReplyDelete
  2. நல்லதொரு பதிவு நண்பரே...
    எழுத்தறிவித்தவன் இறைவன் என்பார்கள் இன்றைய நாளில் எனது ஆசிரியர் திரு.குருந்தன் அவர்களை நினைவு கூர்கிறேன்,
    ஆசிரியர் தின வாழ்த்துக்கள் நண்பரே....

    ReplyDelete
  3. "இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்.":

    ReplyDelete
  4. ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் சுரேஷ்.
    நல்லதொரு பதிவு.

    ReplyDelete
  5. இனிய பதிவுக்கு வாழ்த்துக்கள். உங்கள் ஆசிரியர்களின் ஆசிகளும் உங்களுக்கு வளமூட்டுவதாக!

    ReplyDelete
  6. அருமையான பதிவு நண்பரே
    தங்கள் குருவின் வார்த்தையும் வாழ்த்தும் ஒரு நாள் நிச்சயம் பலிக்கும்

    ReplyDelete

  7. ஆசிரியர் தினத்தன்று ஆரம்பத்தில் பாடம் சொல்லிக்கொடுத்து உங்களை இந்த நிலைக்கு உயர்த்தியவர்களை நினைவு கூர்ந்த உங்களின் பாங்கு போற்றுதலுக்குரியது.

    ReplyDelete
  8. ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.....

    உங்களுக்கு கற்பித்தவர்களை சிறப்பித்த பதிவு.

    ReplyDelete
  9. நல்ல பதிவுப் பகிர்வு நண்பரே! தாமதமான ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!