யட்சனை வென்ற இளைஞன்! பாப்பா மலர்!

யட்சனை வென்ற இளைஞன்! பாப்பா மலர்!


முன்னொரு காலத்தில் வாரணாசி நகரை அரசர் ஒருவர் ஆண்டுவந்தார். அவருக்கு வேட்டையாடுவதில் மிகுந்த விருப்பம். எனவே அவர் அருகில் இருந்த காட்டுக்கு அடிக்கடி வேட்டையாடச் செல்வார். ஒருசமயம் அவர் அவ்வாறு காட்டுக்குள் வேட்டையாடச் சென்றபோது கலைமான் ஒன்றினை குறிவைத்து கொன்றார். பின்னர் அதை ஒரு கம்பில் கட்டித் தொங்கவிட்டு வீரர்களை தூக்கிவரச்செய்தார். அப்போது வழியில் ஓர் ஆலமரம் தன் பெரிய விழுதுகளுடன் தழைத்து வளர்ந்திருப்பதை கண்டு அங்கேயே சற்று நேரம் ஓய்வெடுக்க முடிவு செய்தார்.
  அதன்படி அந்த மரத்தின் அடியில் தம் தோழர்கள் வீரர்களுடன் தங்கி ஓய்வெடுத்தார். அந்த மரத்தில் ஓர் யட்சன் வசித்து வந்தான். அம்மரத்தின் நிழலில் யார் தங்க வந்தாலும் அவரை அடித்து சாப்பிட்டுவிடும் அதிகாரத்தை அவன் குபேரனிடம் இருந்து பெற்றிருந்தான். ஆகவே அரசர் அந்த இடத்தை விட்டு கிளம்பும் சமயம் அவரை தன் இருகைகளால் பிடித்து தடுத்து நிறுத்தினான் யட்சன்.
  “ நீ இப்போது இங்கிருந்து கிளம்ப முடியாது! இது என்னுடைய இடம்! என் அனுமதி இல்லாமல் இங்கே தங்கியது குற்றம்! இந்த மரத்தின் நிழலில் தங்குபவர்கள் எனக்கு உணவாக வேண்டும் என்பது குபேரன் எனக்குக் கொடுத்த வரம்! எனவே நீ என் ஆகாரம்” என்றான் யட்சன்.
   யட்சனின் உருவத்தையும் பேச்சையும் கேட்டுப் பயந்து போன அரசன் என்ன செய்து தப்பிக்கலாம் என்று யோசித்தான். பின்னர், “யட்சனே! நீ என்னை சாப்பிடாமல் விட்டாயானால் நான் உனக்கு தினமும் தட்டு நிறைய உணவும், ஓர் ஆளையும் உனக்கு உணவாக அனுப்பி வைப்பேன்” என்று ஆசை காண்பித்தார்.
  யட்சன் யோசித்தான்! இந்த மர நிழலில் தங்குபவர்கள் குறைவு. அதனால் அவனுக்கு சரிவர ஆகாரம் கிடையாது. தினமும் ஓர் ஆள் மற்றும் ஒரு தட்டு உணவு என்பது அவனுக்கு ஆதாயமே என்று நினைத்தான். “ ஆகட்டும் மன்னா! இந்த ஏற்பாட்டிற்கு ஒத்துக் கொள்கிறேன்! இதில் ஒரு நாள் தவறினாலும் நான் உன்னை சாப்பிட்டுவிடுவேன்! என்று பயமுறுத்தி அனுப்பினான் யட்சன்.
  நாடு திரும்பிய அரசன் இந்த விஷயத்தை மந்திரிகளிடம் கூறினான். அடடா! எத்தனை நாளுக்கு அனுப்பி வைப்பீர்கள் மன்னா? அவசரப்பட்டு விட்டீர்களே! என்று வருந்திய மந்திரிகள் சரி! நம் மரண தண்டனைக் கைதிகளை தினமும் ஒவ்வொருத்தராக அனுப்புவோம்! பிறகு யோசிப்போம்! என்றனர்.
  மறுநாள் முதல் மரண தண்டனை கைதிகள் ஒரு தட்டு உணவோடு யட்சனுக்கு உணவாக அனுப்பி வைக்கப்பட்டனர். சில நாட்களில் சிறையில் இருந்த மரணதண்டனை கைதிகள் தீர்ந்து போயினர். இப்போது என்ன செய்யலாம் என்று மந்திரியும் அரசனும் கலந்து ஆலோசித்தனர். இறுதியில் யட்சனுக்கு உணவாக விரும்புவோருக்கு பத்து கிராமங்களும் பத்தாயிரம் பொன்னும் அளிப்பதாக தண்டோரா போட முடிவு செய்தனர்.
   அப்படி தண்டோரா போடப்பட்டது. அந்த நகரில் சுதன் என்ற இளைஞன் வசித்தான். ஏழைக் குடும்பத்தில் பிறந்த அவன் அரசரின் இந்த அறிவிப்பை கேட்டதும் மகிழ்ந்தான். தான் இறந்தாவது தன் குடும்பத்தின் ஏழ்மையை ஒழிக்கலாம் என்று முடிவு செய்து தன் பெற்றோரிடம் விருப்பத்தை கூறினான். அவர்கள் எவ்வளவோ மறுத்தும் கேளாமல் அரசனை சென்று சந்தித்தான்.
  “இளைஞா! நீ யட்சனுக்கு உணவாக சம்மதிக்கிறாயா?” அரசர் கேட்டார்.
    “ஆம் அரசே!”
 “நல்லது! உனக்கு ஏதாவது தேவையா?”
“நீங்கள் கொடுப்பதாக சொன்ன பரிசுகளோடு, எனக்கு தங்களின் தங்கப் பாதுகைகளும், குடை, மற்றும் வாளும் வேண்டும்!”
   “இவைகளால் உனக்கு என்ன பயன்? நீ யட்சனை எதிர்த்து வென்று விடுவாயா?”
   “நாளை என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது மன்னவா! யார் தரையில் நிற்கிறார்களோ அல்லது மரத்தின் நிழலில் நிற்கிறார்களோ அவர்களையே அந்த யட்சன் கொள்வான். தங்களின் பாதுகை குடை மூலம் நான் இதை சாதிப்பேன்.”
   “சரி வாள் எதற்கு?”
“சிறு துரும்பும் பல் குத்த உதவும்! ஆயுதம் வைத்திருப்பவர்களை கண்டால் பூதங்கள் கூட அஞ்சும் மன்னவா!”
 “அப்புறம் என்ன வேண்டும்?”
“ தங்கத் தட்டில் தங்களுக்கு தயாரான அறுசுவை உண்டி!”
 “சரி அப்படியே ஆகட்டும்!”
மன்னன், சுதன் கேட்ட பொருட்களை கொடுத்து அனுப்பினார். யட்சன் இன்றைக்கு யார் உணவாகப் போகிறார்களோ? என்று எதிர்பார்த்து காத்திருந்தான்.
  வழக்கத்திற்கு மாறாக காலில் பாதுகையோடும் கையில் வாளேந்தி மேலே குடைபிடித்து வரும் சுதனைப் பார்த்து வியந்தான். சுதனின் கண்களில் தீட்சண்யம் மிளிர்வதையும் கண்டு கொஞ்சம் பிரமிப்பு அடைந்தான்.

சுதன், தட்டை குடையினுள் வைத்துவிட்டு யட்சனை உணவு உண்ணுமாறு அழைத்தான். யட்சன் கோபம் கொண்டு, “அடே சிறுவா! இந்த தட்டு உணவு மட்டுமல்ல! நீயும்தான் என் உணவு! என்று கர்ஜித்தான்.
  சுதன் கலகலவென்று நகைத்தான்!
“ஏனடா நகைக்கிறாய்!”
 “நகைக்காமல் என்ன செய்வது? இந்த உலகில் எதுவும் நம் சொந்தம் கிடையாது! அப்படி இருக்கையில் மர நிழலை சொந்தம் கொண்டாடுகிறாயே! உன் நிழல் கூட உனக்கு உதவாது! அப்படி இருக்கையில் மர நிழலுக்கு பாத்தியதை கொண்டாடுகிறாய்! இங்கு தங்கும் அப்பாவிகளை கொன்று தின்கிறாய்! இதோ இன்று நான் பணத்துக்கு ஆசைப்பட்டு உனக்கு உணவாக வந்துவிட்டேன்! இன்று என்னையும் தின்றுவிட்டால் நாளை முதல் உனக்கு அறுசுவை உணவை யார் கொண்டுவருவார்கள்? என்னை போல பணத்துக்கு ஆசைப்பட்ட ஒன்றிரண்டு பேர்? அப்புறம்? அரசனை விழுங்கி விடுகிறாய் சரி! அப்புறம்? என்னை விழுங்குவதால் உனக்கு லாபமா? நஷ்டமா? நீயே யோசித்துப் பார்!” என்றான்.
   சற்று நேரம் யோசனையில் ஆழ்ந்தான் யட்சன், பின்னர், “இளைஞா! நீ சொன்னது முற்றிலும் சரி! இந்த உலகில் நம்முடையது என்று எதுவும் இல்லை! ஆனால் நமது என்று தேவையில்லாமல் உரிமை கொண்டாடி மற்றவருக்குத் தொல்லை கொடுக்கிறோம்! இதை உணர வைத்தாய்! இனி இந்த பாதகச்செயலை விட்டொழித்து விடுகிறேன்! என் கண்ணைத் திறந்த நீ சவுக்கியமாக நீண்ட காலம் உன் பெற்றோர்களுடன் வாழ்வாயாக! நான் பாதாள லோகத்திற்கு செல்கிறேன் இனி என்னால் யாருக்கும் எந்த தொந்தரவும் இருக்காது என்று கூறி சுதனை வழி அனுப்பி வைத்தான்.

   சுதன் தன் அறிவுக் கூர்மையால் யட்சனை திருத்திவிட்டதை அறிந்த அரசர் அகமகிழ்ந்தார். அவனுக்கு மேலும் பல பரிசுகள் கொடுத்து கவுரவித்தார். சுதன் தன் ஏழ்மை ஒழிந்து சிறப்புடன் வாழ்ந்தான்.

(ஜாதகக் கதைகளில் இருந்து தழுவல்)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

  1. யட்சனைபோல நமது நாட்டு அரசியல்வாதிகளும் நினைத்தால் ? ஸ்விஸ் பணமெல்லாம் உடனே இந்தியா வந்து விடுமே..... ஆஹா ...
    நண்பர் சுரேஸ் அவர்களுக்கு இந்த பதிவை உடன் நமது நாட்டு அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வையுங்கள்.

    ReplyDelete
  2. அருமையான கதை நன்றி நண்பரே

    ReplyDelete
  3. நல்ல கதைப் பகிர்வு...ஜாதக் கதைகள் எல்லாமே அருமையாக இருக்கும்....

    ReplyDelete
  4. தளிர்... கேட்க நன்றாக உள்ளது. ஆனால் கதையின் தத்துவம் கடைபிடிக்க தான் கஷ்டம். அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. வணக்கம்
    கதை நன்றாக உள்ளது சிந்தனைக்கு அறிவானது பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. அருமையானகதை நண்பரே
    நன்றி

    ReplyDelete
  7. ஆஹா அந்த சின்னப் பையனுக்கு எவ்வளவு அறிவு அருமையான கதை.
    நன்றி தொடர வாழ்த்துக்கள் ....!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!