Monday, August 25, 2014

தளிர் சென்ரியு கவிதைகள்! பகுதி 8

தளிர் சென்ரியு கவிதைகள்!


வெட்டும் முன்னே
உயிரை விட்டது!
தமிழக மின்சாரம்!

வளர்ந்தன சாலைகள்!
அழிந்தன
கிராமங்கள்!

பிடிப்பதாக சொல்லி
விடுகிறார்கள்
புகை!

பகையாளி ஆனாலும்
பலரோடு உறவாடுகிறது
பாக்கும் சிகரெட்டும்!

மழைவிட்டும்
சலசலப்பு அடங்கவில்லை!
தெலுங்கானா!

பிறந்தநாளுக்கு
பிறப்பெடுக்கின்றன
விதவிதமான விநாயகர்கள்!

முதலிடம் பிடித்தனர்
குடிமகன்கள்!
டாஸ்மாக்!

வீங்கிப்போன பொருளாதாரம்
உடைபட்டான்
இந்தியன்!


நவீன பயிரிடல்!
நச்சுக்கள் ஆகின்றது
நல்லுணவு!

பீட்ஸாவும் பர்கரும்
டாடா காண்பித்தன
கடலைமிட்டாய்க்கு!

களம் புகுந்த அரசியல்!
கண்ணாமூச்சி ஆடியது!
விளையாட்டு!

விலை போகும் விருதுகள்!
வீழ்ச்சியில் திறமை!
எழுச்சியில் ஊழல்!

 வலுவுள்ளவன் கையில்
 வதைபடுகின்றன
 வளங்கள்!


வளர்ச்சிக்கு விதை ஊன்றினார்கள்!
அழிவு ஆரம்பமானது!
பன்னாட்டு நிறுவனங்கள்!


கொதித்து
அடங்கிப்போனது!
கூடன் குளம்!

கோடிகளை இரைத்து
கொள்ளிவைத்துக் கொண்டார்கள்
கூடன்குளம் அணு உலை!

எல்லையில்லா மீன்கள்!
எல்லை தாண்டியதும்
இறந்தான் மீனவன்!

இன்றைய வருமானம் அறியாதவன்
நாளைய எதிர்காலம் சொல்கிறான்!
கிளி ஜோஸ்யன்!


நெல்லுக்கு விலை போன கிளி
சொல்லுகிறது

எதிர்காலம்!

வருங்காலத்தை இழந்த கிளி
சொல்கிறது உங்களது
எதிர்காலம்!

கடிதப் போக்குவரத்தை
காணாமல் செய்தன
கைபேசிகள்!

உள்ளங்கையில் உலகம்!
சுருங்கிப்போனது
சுற்றம்!

தங்கள்  வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Sunday, August 24, 2014

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 70

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 70


அன்பார்ந்த வாசகர்களே வணக்கம்! சென்ற வாரம் ஒப்புமைப்படுத்தல் குறித்து படித்தோம். வாரா வாரம் ஓரளவுக்கு தமிழ் மொழியின் இலக்கணத்தை சிறிதாவது அறிந்து வருகிறோம். இலக்கண கடலில் சிறிது தூரமே நாம் நீந்தி வந்துள்ளோம். நம் நோக்கம் பாடம் சொல்லிக் கொடுப்பது அல்ல! தமிழை ஓரளவு தெரிந்து கொள்ள வைப்பது மட்டுமே! அதனால்தான் இலக்கணங்கள் வரிசையாக வராமல் மாறி மாறி வந்திருக்கும். இந்த எழுபதாவது பகுதியோடு இந்த தொடர் நிறைவு பெறுகிறது. இலக்கணம் முழுமையும் சொல்லவில்லையே என்று வருத்தப்படாதீர்கள்! அன்றாட வாழ்வுக்கு எழுதவும், பேசவும், தேர்வுகளுக்கு உபயோகமான இலக்கணங்களை அறிந்து கொண்டுவிட்டோம். இன்னும் ஆழ்ந்து சொல்லித்தர நான் இலக்கண ஆசிரியனோ தமிழாசிரியனோ அல்லன். நான் படித்ததை, நான் கற்றதை ஓரளவுக்கு உங்களுடன் பகிர்ந்து கொண்டேன் அவ்வளவே! இன்று நாம் பார்க்கப் போவது உரைநடை பற்றி.

      தமிழ்ப்பாடம் என்றாலே செய்யுளும் உரைநடையும் என்று இருக்கும். கடவுள் வாழ்த்து ஆரம்பித்து பக்தி இலக்கியங்கள் வரை செய்யுள் வடிவில் படிப்போம். உரைநடை வடிவில் கட்டுரைகள், கதைகளை படிப்போம். செய்யுள் நாமாக புரிந்துகொள்ள முடியாது ஆசிரியர் விளக்க வேண்டியிருக்கும். உரைநடையை நாமாகவே புரிந்து கொள்வோம்.

   உரைநடை என்றால் என்ன?

    செய்யுள் அமைப்பும் இன்றி,ஓசையும் இன்றி பல சொற்கள் அடுத்தடுத்து தொடர்ந்து நடந்து பொருளைத் தருமாயின் அது உரை நடை எனப்படும்.

சரி உரைநடை ஒன்று தானா? இல்லை இல்லை! உரைநடை நான்கு வகைப்படும்.


உரைநடையின் வகைகள்:

1.      பாட்டிடை வைத்த குறிப்பு. 2. பாவின்று எழுந்த கிளவி.
3.பொருளோடு புணராப் பொய்ம்மொழி 4. பொருளோடு புணர்ந்த நகைமொழி.

1. பாட்டிடைவைத்த குறிப்பு: பாட்டுக்களின் இடையே வைக்கப்படும்  குறிப்பாகும். எடுத்துக்காட்டு. சிலப்பதிகாரம்.

2. பாவின்று எழுந்த கிளவி.  பொருள் விளங்கிக் கொள்ளும் பொருட்டு சூத்திரத்திற்கு எழுதப்படும் உரை. உதாரணமாக தொல்காப்பியம் நன்னூல் போன்றவற்றிற்கு எழுதப்பட்ட விளக்கவுரை.

3. பொருளோடு புணராப் பொய்ம்மொழி: பொருள் மரபாகிய உண்மை நிகழ்ச்சியின்றி பொய்யை புனைந்துரைக்கும் வகையில் எழுதப்படுவது ஆகும்.
எ.கா) ஒரு யானையும் ஒரு குருவியும் நட்பு கொண்டு பழகின என்று இயல்புக்கு பொருந்தாத கற்பனை.

4. பொருளோடு புணர்ந்த நகைமொழி: முழுவதும் பொய்யே எழுதாமல் உலகியலாகிய உண்மை நிலையை வலியுறுத்தி எழுதப்படுபவை.
எ.கா) பஞ்ச தந்திரக்கதைகள்.

உரைநடையை பற்றி அறிந்து கொண்டோம்! இத்துடன் முத்தாய்ப்பாக இலக்கணப்பகுதி நிறைவு பெறுகிறது.

இனிக்கும் இலக்கியம்!

குறுந்தொகை.

திணை: முல்லை

பாடியவர்: ஓதலாந்தையார்.

வண்டு படத் ததைந்த கொடி இணர் இடையிடுபு
பொன் செய் புனை இழை கட்டிய மகளிர்
கதுப்பின் தோன்றும் புதுப் பூங் கொன்றைக்
கானம், கார் எனக் கூறினும்,
யானோ தேறேன் அவர் பொய் வழங்கலரே.

விளக்கம்: தோழி! வண்டுகள் தேன் உண்ணுவதற்காக வந்து படியும்படி செறிந்து மலர்ந்த நீட்சியையுடைய பூங்கொத்துக்களைத் தழைகளின் இடையே மேற்கொண்டு பொன்னாற் செய்த பெண்கள் அணிந்து கொள்வதற்காக செய்த தலை அணிகளை கோர்த்து கட்டிய மகளிரின் கூந்தலைப் போன்று காட்சி அளிக்கும் புதிய பூக்களை உடைய கொன்றை மரங்களையுடைய காடானது இது. கார்ப்பருவமென்று அம்மலர்கள் தெரிவிப்பினும் நான் தெளியேன். ஏனெனில் தலைவர் பொய்மொழியைக் கூறார்.


தலைவன் தலைவியைப் பிரிந்து வேலைநிமித்தம் செல்கிறான். கார்காலத்தில் வருவதாகக் கூறிச் செல்கிறான். கார்காலம் வந்து கொன்றை மரங்கள் பூத்து பெண்களின் கூந்தலில் அணியும் அணிகலன்களை போன்ற பூக்களால் பெண்கள் போலத் தோன்றுகிறது. ஆனாலும் அது பெண் அல்ல என்று உணர்கிறாள் தலைவி. அதுபோலவே இது கார்ப்பருவம் போன்று தோற்றம் வரினும் கார் இல்லை என்று தெளிந்து கொள்வேன். ஏனெனில் தலைவன் பொய் கூறமாட்டான். அவன் கட்டாயம் கார்ப்ருவத்தில் வருவான் என்று சொல்லி பிரிவாற்றாமையை தணித்துக் கொள்கின்றாள் தோழி.

  தலைவன்மேல் தலைவி கொண்ட நம்பிக்கையை அழகாக சொல்கிறது பாடல். உவமைகள் மிகச்சிறப்பாக அமைந்து பாடலை மேலும் அழகுபடுத்துகிறது. மீண்டும் பாடலை படித்து மகிழுங்கள்.


இத்துடன் இந்த தமிழ் அறிவு எப்படி என்ற தொடர் நிறைவு பெறுகிறது. உங்களின் கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்!  மீண்டும் சமயம் வாய்ப்பின் மற்றுமொரு தொடரில் சந்திப்போம்! இத்தொடருக்கு இதுவரை ஆதரவளித்து வந்த அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றி! நன்றி! நன்றி!

இந்த தொடர் எழுதிய உதவிய நூல்கள்: நன்றி:
  தமிழ்நாடு அரசு தமிழ் பாடநூல்கள்
   முனைவர் சொ. பரமசிவம் எழுதிய நற்றமிழ் இலக்கணம்.
  வர்த்தமானன் பதிப்பகம் வெளியிட்ட சங்க இலக்கியங்கள்.

Saturday, August 23, 2014

புலி மாப்பிள்ளையும்! நரி மாமாவும்! பாப்பா மலர்!

புலி மாப்பிள்ளையும்! நரி மாமாவும்! பாப்பா மலர்!


வெகு காலத்திற்கு முன்னால் காட்டில் ஒரு நரி வசித்துவந்தது. அது மிகவும் தந்திரம் மிக்கது. புத்திசாலியான அது இக்கட்டான தருணங்களில் இருந்து தன்னைக் காத்துக் கொள்வதில் வல்லமை மிக்கது. அந்த காட்டில் ராஜா ஒருவரின் செம்மரி ஆட்டு பட்டி ஒன்று இருந்தது.
   ராஜாவுடைய பட்டி என்பதால் அதற்கு நல்ல கவனிப்பு. அந்த ஆடுகளுக்கு நல்ல மேய்ச்சல்! அது மட்டுமல்லாமல் நல்ல தீனியும் வேளாவேளைக்கு கிடைக்க அந்த ஆடுகள் நன்கு கொழுத்து இருந்தது. நரிக்கு அந்த ஆடுகளை பார்க்கும் போதெல்லாம் நாக்கில் நீர் ஊரும். இந்த ஆடுகளை அடித்துத் தின்றால் நன்றாக இருக்குமே! என்றாவது ஒருநாள் இவைகளை சுவைபார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டது.
    ஆனால் அதனால் அந்த பட்டியை நெருங்கக் கூட முடியவில்லை! எந்த நேரமும் அங்கு ஆடுகளை காவல் காத்துக் கொண்டிருந்தனர் மேய்ப்பவர்கள். நரியினால் ஆசையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே அது பூமியைத் தோண்டியபடியே பட்டியை அடைந்தது. ஆனால அதன் பொல்லாத நேரம் அதனால் ஆடுகளை தின்ன முடியவில்லை. காவல்காரர்களிடம் சிக்கிக் கொண்டது.
   ஆடு மேய்ப்பவர்கள் நரியை பிடித்து ஓரிடத்தில் கட்டிவைத்தனர். அவர்கள் ஆடு மேய்த்து களைத்துப் போய் இருந்தமையால் இந்த நரியை நாளைப் பார்த்துக் கொள்வோம்! அதுவரை இங்கேயே கிடக்கட்டும் என்று வெளியேறிவிட்டனர். பிழைப்பதற்கு நாளை வரை சந்தர்ப்பம் இருக்கிறது என்றதும் பெருமூச்சு விட்டு நிம்மதி அடைந்தது நரி.
   இவ்வாறு நரி அங்கே மாட்டிக் கொண்டிருந்த சமயம், புலி ஒன்று அந்தவழியாக சென்றது. அது ஒரு முட்டாள் புலி, நரி ஆட்டு மந்தைக்குள் இருப்பதை பார்த்த அது ஆச்சர்யம் அடைந்தது.  “ நரியாரே! இங்கு என்ன செய்கிறீர்?” என்று கேட்டது புலி. “புலியாரே! நான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன்!” என்று நக்கலாக சொன்னது நரி.
  நரியின் நக்கலை புரிந்துகொள்ளாத புலி, “அப்படியானால் பெண் எங்கே? மற்றவர்கள் எல்லாம் எங்கே?” என்று கேட்டது.
  “மணப்பெண் இந்த நாட்டு இளவரசி! அவரை அழைத்துவர மற்றவர்கள் போயிருக்கிறார்கள்!”
 “ அப்படியானால் உன்னை ஏன் கட்டி வைத்திருக்கிறார்கள்?”
  “ எனக்கு இந்த திருமணத்தில் இஷ்டமில்லை!”
 “என்னது? இளவரசியை மணந்து கொள்ள உனக்கு விருப்பம் இல்லையா?”
   “ஆமாம்! எனக்கு இந்த கல்யாணத்தில் இஷ்டமில்லை! சுதந்திரமாக சுத்தி அலைய விரும்பும் எனக்கு திருமணம் பிடிக்கவில்லை!”
  “ அப்படியானால் நான் இளவரசியை மணந்து கொள்கிறேன்! என்னை இங்கே கட்டி வைத்துவிடேன்!” என்றது புலி.
   “என் மைத்துனர்கள் பொல்லாதவர்கள்! கிண்டல் பேர்வழிகள்! அவர்கள் உங்களை கிண்டலும் கேலியும் செய்தால் பொறுத்துக் கொள்வீர்களா?”
     “இளவரசி கிடைக்கும் போது இதெல்லாம் எனக்கு சாதாரணம்!”
      “முதலில் என்னை அவிழ்த்துவிடுங்கள்! நான் உங்களை கட்டிவிடுகிறேன்!”
   புலி நரியை அவிழ்த்துவிட நரியும் புலியை கட்டிவைத்துவிட்டது. “புலியாரே! மைத்துனர்கள் சீண்டுவார்கள்! கோபப்பட்டு விடாதீர்கள்! அப்புறம் பெண் கிடைக்காது!” என்று சொல்லிவிட்டு பறந்துவிட்டது நரி.
   மறுநாள் ஆடு மேய்ப்பவர்கள் வந்தார்கள். மந்தைக்குள் புலி இருப்பதை பார்த்து முதலில் பயந்தாலும் அதை கட்டி வைத்திருப்பதை பார்த்து  “பயப்பட ஒன்றுமில்லை!” என்று அதன் மீது கல்லை எறிந்தார்கள்.
   இது மைத்துனர்களின் விளையாட்டு! என்று புலி ஹிஹி! என்று சிரித்தபடி இருந்தது.
  வேலைக்காரர்களுக்கு தைரியம் வந்துவிட்டது. மூங்கில் கழிகளாலும் ஈட்டியாலும் கற்களாலும் தாக்க ஆரம்பித்தார்கள். “ஹாஹா”  “ஹிஹி!” என்று சிரித்து கொண்டிருந்த புலிக்கு வலி தாங்க முடியவில்லை! “ போதும் விளையாடியது போதும் மைத்துனர்களே! முதலில் இளவரசியை அழைத்து வாருங்கள்! என்றது.
     வேலைக்காரர்கள் ஒரு பெரிய ஈட்டியை கொண்டு வந்து புலியை தாக்க, இதற்கு மேலும் தாக்குப் பிடிக்க முடியாது! எனக்கும் பெண்ணும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் அடித்து பிடித்துக்கொண்டு ஓடியது புலி.

   அப்போது காட்டில் ஒரு மர ஆப்பின் மீது அமர்ந்து கொண்டு இருந்தது நரி. ஆப்பு என்பது மரவெட்டிகள் ஒரு மரத்தை பிளக்க ஒரு பெரிய கட்டையை பாதியாக உடைத்து பிளக்க பிளவில் ஒரு கட்டையை செருகி வைப்பது வழக்கம். அந்த ஆப்பை அடித்து இரண்டாக பிளப்பர். அந்த மாதிரி ஒரு கட்டை மீது அமர்ந்திருந்தது நரி. அங்கே வந்தது புலி. நரி நமுட்டு சிரிப்புடன்,   “புலியாரே! திருமணம் நல்லபடி முடிந்ததா?” என்றது.
    நரியின் பக்கத்தில் வந்தமர்ந்த புலியின் வால் அந்த ஆப்பில் சிக்கிக் கொண்டது. அது மிகவும் வெறுப்பாக, “அடப் போப்பா! உன் மைத்துனர்கள் பொல்லாதவர்கள்! அவர்களின் விளையாட்டை தாங்க முடியவில்லை! அவர்கள் என்னை அடித்து நொறுக்கிவிட்டார்கள்! நான் ஓடிவந்துவிட்டேன்” என்றது புலி.
    “ நல்ல காரியம் செய்தாய்! சரி நாம் அரட்டை அடிப்போம்!” என்று சொல்லியபடியே  புலியின் வால் மர பொந்தில் சிக்கியிருப்பதை பார்த்த நரி “இப்போது வேடிக்கையை பார்!” என்றபடி ஆப்பை நகர்த்திவிட்டது. மறுகணம் டமால் என்ற ஓசையுடன் புலியின் வால் மரக்கட்டையில் சிக்கிக் கொண்டது. வலியால் துடித்த புலி மரக்கட்டையோடு உருண்டது. நரியும் அதனுடன் சேர்ந்து பாசாங்காய் உருண்டது. எவ்வளவோ முயன்றும் ஆப்பில் இருந்து வால் வெளியே வரவில்லை! அப்படியே உருண்டுபோய் அருகில் இருந்த ஓர் அல்லிக் குளத்தில் விழுந்தன இரண்டும்.
   அங்கிருந்த தவளைகளை பிடித்து உண்ட நரி, புலி மாப்பிள்ளையே சாப்பிடுகிறீரா? என்றது.
   வலியாலும் பசியாலும் துடித்த புலி, “சாப்பிட என்ன இருக்கிறது?” என்றது.

    “வேறென்ன இருக்கும்? இந்த அல்லிப்பூக்களைத்தான் சாப்பிட வேண்டும்! இதை சாப்பிட்டு எனக்கு வயிறு ஊதிப்போய்விட்டது!” என்றது நரி.
     அல்லிப் பூக்களை தின்ன முடியாமல் தின்ற புலிக்கு முகமும் தொண்டையும் வீங்கிப் போய்விட்டது. அதன் வால் வேறு ஆப்பில் சிக்கி வலித்துகொண்டிருந்தது. அப்படியே ஒரு வாரம் சேற்றில் படுத்துக் கிடந்தது. இப்போது நரி அந்த பக்கம் வந்தது.  “என்ன புலியாரே! இன்னுமா குணம் ஆகவில்லை! ”என்றது.
   “உனக்கு எப்படி குணமானது?” என்று கேட்டது புலி.
 “நான் எனது கால்களையும் கைகளையும் நானே மென்று தின்றேன்! எனது நோய் குணமாகிவிட்டது. பிறகு எனக்கு புதிய கால்களும் கைகளும் முளைத்துவிட்டது!” என்றது நரி.
   “ இதை ஏன் முதலிலேயே நீ சொல்ல வில்லை!”
“உன் கைகளையும் கால்களையும் உன்னால் சாப்பிட முடியாது அல்லவா?” நரி சொன்னதும் புலிக்கு கோபம் வந்தது. “கேவலம் ஒரு நரி! உன்னால்  செய்ய முடிந்ததை நான் செய்ய முடியாதா?” என்று கோபித்தது.
   “ அவ்வளவு பெரிய கல்யாணத்தையே சின்ன விளையாட்டுக்காக விட்டுவந்த நீ இதை செய்வாயா?” உசுப்பிவிட்டது நரி.
    “இப்போது பார்! நான் தின்று காட்டுகிறேன்! அப்புறம் குணமாகியபின் உன்னை கவனித்துக் கொள்கிறேன்! என்று உறுப்புக்களை தானே தின்ன ஆரம்பித்தது புலி.
   இரண்டு மூன்று தினத்தில் அதற்கு கடுமையாக புண்கள் ஏற்பட்டு இறந்தும் போனது. சுவையான புலி மாமிசத்தை பயமில்லாமல் தின்ன ஆரம்பித்தது நரி.

 (செவிவழிக்கதை தழுவல்)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
   


Thursday, August 21, 2014

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 14

ஜோக்ஸ்! 21 


1.      அவர் போலி டாக்டரா இருப்பார்னு எப்படி சந்தேகப் படறீங்க?
அவர் கிளினிக்ல மருந்துக்கு கூட கூட்டம் இல்லையே!

2.      டெஸ்ட் போட்டிக்கும் டி 20க்கும் என்ன வித்தியாசம்?
  அடிச்சு அவுட் ஆறது டி 20 ஆடாமலேயே அவுட் ஆகறது டெஸ்ட் போட்டி!

3.      தலைவர் எதையுமே வித்தியாசமா பண்ணுவார்?
அப்படி என்ன பண்ணினார்?
தன்னோட எதிரிகளை அழவைக்கணும்னு அஞ்ஞான் சி.டியை பார்சல் பண்ணி அனுப்பி இருக்கார்!


4.      தலைவருக்கு கட்சிக்குள்ளேயே எதிரிகள் பெருகிட்டாங்க?
எப்படிச் சொல்றே?
அஞ்ஞான் படம் பார்க்க கூட்டிட்டு போயிருக்காங்களே!

5.      மூணு டெஸ்ட் ஆடுறதுக்கு  ஒரே வாரத்துக்கு டூர் அரேஞ்ச் பண்ணியிருக்கீங்களே எப்படி சாத்தியம்!
டூருக்கு வரப்போறது இந்தியன் டெஸ்ட் டீம் ஆச்சே! இதுவே அதிகம்!

6.      என் மனைவிகிட்ட தினமும் என் கைதான் நீளும் ஒரு நாள்தான் அவ கை நீளும்!
எப்படி சொல்றே?
முப்பதாம் தேதி சம்பளத்தை வாங்க மட்டும் அவ கை நீளும் ஒண்ணாம் தேதியிலிருந்து தினமும் பாக்கெட் மணிக்கு என் கை நீளும்!

7.      கேடி கபாலிக்கிட்ட இருந்து போன் வந்திருக்கு சார்!
    என்னவாம்?
   வழக்கமா வாங்குற மாமுல்ல ஆடித்தள்ளுபடி தருவீங்களான்னு கேக்கறான்!

8.      ஆனாலும்  என் மாமனாருக்கு இவ்ளோ அழுத்தம் கூடாது?
ஏன் என்ன ஆச்சு?
உங்க உடம்புல இவ்ளோ காயம் பட்டும் வீட்டுல ஒரு சாமானும் நசுங்கலியேங்கிறார்!

9.      நம்ம தலைவருக்கு கொஞ்சம் கூட விவஸ்தையே இல்லை!
என்ன பண்றார்?
எதிர்கட்சி தலைவர் பதவி கொடுக்கலைன்னா பராவாயில்லை பக்கவாட்டு கட்சி தலைவர் பதவியாவது கொடுங்கன்னு கேட்கிறார்!


10.  மன்னா எதிரியிடம் இருந்து மெசேஜ் வந்துள்ளது!
    என்னவாம்?
ஒரு 10 ஜி.பி டேட்டா அவர் போனுக்கு ரீசார்ஜ் பண்ண வேண்டுமாம் இல்லாவிட்டால் நீங்கள் புறமுதுகிட்ட காட்சிகளை வாட்ஸ் அப்பில் போட்டுவிடுவாராம்!

11.  மன்னருக்கு வர வர நாக்கு நீளமாகிவிட்டது!
    எப்படிச் சொல்றே?
   எதிரி நாட்டு சிறையில் உணவு நன்றாக இருக்குமான்னு கேக்கறாரே!

12.  திட்ட கமிஷனை கலைக்கப் போறேன்னதும் தலைவருக்கு கோபம் வந்துருச்சு!
அப்புறம்?
இதுவரைக்கும் நீங்க கமிஷன் வாங்கிட்டு எங்க ஆட்சியிலே மட்டும் கலைச்சா என்ன நியாயம்னு பொங்கி எழுந்துட்டார்!

13.  வாழ்க்கை ஒரு வட்டங்கிறதை இப்போதான் புரிஞ்சுகிட்டேன் மந்திரியாரே!
     எப்படி மன்னா?
எதிரி மன்னன் எங்கே போனாலும் ரவுண்டு கட்டி அடிக்கிறானே!

14.  அந்த டாக்டருக்கு குழந்தை மனசு!
அதுக்காக பேஷண்டுக்கு மாத்திரைக்குப் பதிலா சாக்லேட் கொடுக்கிறது கொஞ்சம் கூட நல்லா இல்லை!


15.  கோயில்ல பிரசாதம் கொடுக்கிற எடத்தில என்ன கலாட்டா?
தயிர்சாதத்தோட ஊறுகாயும் தரமாட்டீங்களான்னு யாரோ கேட்கறாங்களாம்!

16.  காது குத்துவிழாவுக்கு தலைவரை கூப்பிட்டது தப்பா போச்சு!
    ஏன்?
   பையனுக்கு காது குத்திட்டு கம்மலை அவர் பாக்கெட்ல போட்டுண்டு போயிட்டார்!

17.  தலைவர் சின்னவீடு வெச்சிருக்கிற விவகாரம் மேலிடத்திற்கு தெரிஞ்சிடுச்சு!
    அப்புறம்?
  பெருசா ஒரு வீடு வாங்கிக் கொடுத்து சமாளிச்சிட்டார்!

18.  தலைவருக்கு பதவி ஆசை அதிகம்னு எப்படி சொல்றே?
    மணிவிழா கொண்டாடியும் இன்னும் இளைஞர் அணித் தலைவராவே இருக்காரே!

19.  பிறந்தநாள் விழா கொண்டாடியதில தலைவர் மனசு நிறைஞ்சிருச்சாமே!
பின்னே அவர் வைச்சிருந்த உண்டியலும்தான் நிறைஞ்சிருச்சே!

20.  கல்யாண மாப்பிள்ளையை எதுக்கு வன்கொடுமை பாதுகாப்பு சட்டத்துல கைது செய்து கொண்டு போறாங்க!
புது மனைவியோட ‘அஞ்ஞான்’ படம் பார்க்க கூட்டிட்டு போனாராம்!

21.  எதுக்கு அந்த கவர்ச்சி நடிகை வருத்தமா இருக்காங்க!
படத்துல அதிகமாக கவர்ச்சி காட்டறாங்கன்னு எல்லோரும் ‘கண்டமேனி’க்கு திட்டறாங்களாம்!


         தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கமெண்ட்களை அனுப்பி ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Wednesday, August 20, 2014

செத்துப்போன டெஸ்ட் அணி! கதம்ப சோறு பகுதி 49

 கதம்ப சோறு பகுதி 49

திட்டக்குழுவைக் கலைக்கலாமா?


   சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி பேசியதில் முக்கியமான ஒன்று திட்டக்குழுவினை கலைத்தல். அவர் சொன்னதின் சாராம்சம் என்ன வென்றால் இந்த குழுவினால் இப்போது எந்த உபயோகமும் இல்லை. சுதந்திரம் பெற்ற புதிதில் இந்த குழுவின் செயல்பாடுகள் தேவைப்பட்டது. செம்மையாகவும் இருந்தது. இப்போது சரியில்லை. இதை சரிப்படுத்தவும் முடியாது. எனவே நாட்டுக்குத் தேவையான வகையில் திட்டக் கமிசனை கலைத்து புதிய அமைப்பு உருவாக்கப்படும் என்று கூறியுள்ளார். என்னை பொறுத்தவரை இது சரியென்றே தோன்றுகிறது. எந்த ஒரு பொருளுக்கு ஓர் ஆயுட்காலம் இருக்கிறது. அது முடிந்தவுடன் அதை தூக்கிவீசிவிடுகிறோம். திட்டக்கமிசனும் அப்படித்தான். சுதந்திரம் பெற்ற புதிதில் நாட்டை வளர்ச்சிக்குக் கொண்டு செல்ல ஐந்தாண்டுதிட்டங்கள் வகுக்க இது அமைக்கப்பட்டது. இந்த கமிசன் அப்போது சிறப்பாக செயல்பட்டது. இப்போது சுதந்திரம் அடைந்து 68 ஆண்டுகள் கடந்துவிட்டது. இன்னும் பழைய முறையில் செயல்பாடுகள் சட்டத்திட்டங்கள் என்பது வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாகவே அமையும். எனவே இப்போதுள்ள சூழலுக்குத் தகுந்தவாறு திட்டக் கமிஷனை மாற்றி அமைக்க வேண்டியது அவசியம்தான் என்று தோன்றுகிறது. எதிர்கட்சிகளும் இடது சாரிகளும் இப்போதே எதிர்ப்பை கிளப்பிவிட்டன என்ன நடக்கிறது பொறுத்திருந்து பார்ப்போம்.

செல்பேசிக்கொண்டு கொடியேற்றியவர்!

       எதற்கு மரியாதை கொடுக்கிறோமோ இல்லையோ சுதந்திரத் தினத்தன்று கொடிக்கு மரியாதை செலுத்துவது மரபு. கொடியேற்றவும் இறக்கவும் நிறைய மரபுகள் உண்டு. சென்னை அருகே ஓர் பள்ளியில் கொடியேற்ற சென்ற நகராட்சி தலைவர் செல்பேசிக்கொண்டே கொடியேற்றி சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ளார். உங்களுக்கு ஆயிரம் வேலைகள் இருக்கலாம். அதையெல்லாம் கொடியேற்றப்போகும் ஐந்து நிமிடமாவது தள்ளிவைத்துவிட்டு கொடிக்கு மரியாதை செலுத்தலாம் அல்லவா? அப்படி செலுத்த முடியாது எனில் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமலாவது இருந்து இருக்கலாமே! இப்படி கொடிக்கு அவமரியாதை செலுத்தலாமா? இதே போலத்தான் பல்வேறு இடங்களில் சுதந்தர தின கொண்டாட்டங்களில் மீறல்கள் நடந்துள்ளது. காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்திலேயே கொடி ஒரு முனை மட்டுமே கட்டப்பட்டு ஏற்றி பின்னர் சரி செய்துள்ளனர். காலம் செல்ல செல்ல சுதந்திர தினம் என்பது ஒரு வெறும் சம்பிரதாயம் ஆகிவிட்டது. அன்றைக்கு ஒரு நாள் லீவு என்ற அளவிலேயே சுதந்திரம் நமக்கு சுதந்தரத்தை கொடுத்து இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இன்னும் சில ஆண்டுகளில் வீடியோ கான்ப்ரஸ் முறையில் கூட கொடியேற்று வைபவங்கள் நடந்தால் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை!

செத்துப்போன இந்திய டெஸ்ட் அணி!

  போனவாரமே இந்திய அணியின் திணறலை கூறி இருந்தேன். இதோ கடைசி டெஸ்டில் படு கேவலமாக தோற்று தொடரை இழந்துவிட்டது. பிளட்சரை மாற்ற வேண்டும். தோனியை மாற்றவேண்டும் என்று ஆளுக்கு ஆள் கூறுகிறார்கள். இந்த மாற்றத்தால் எல்லாம் மாற்றம் வந்துவிடாது என்றே தோன்றுகிறது. இப்போதைய ஆட்டக்காரர்கள் யாருக்கும் டெஸ்ட் விளையாடும் திறன் இல்லை! பயிற்சி இல்லை என்பதையே இந்த தொடர் நம் கண்முன்னே நிரூபித்து இருக்கிறது. வெளிநாட்டில் தோல்வி என்பது இன்றைக்கோ நேற்றோ நடந்ததுஅல்ல. எப்போதுமே உள்நாட்டு புலியாக இருக்கும் எல்லா அணிகளும் வெளிநாட்டில் மண்ணைக் கவ்விக்கொள்ளும். இந்தியாவும் இதற்கு முன் எத்தனையோ தோல்விகளை வெளிநாட்டு மண்ணில் கண்டிருக்கிறது. ஆனால் இப்படி ஓரேடியாக சரண்டர் ஆனது இல்லை. கொஞ்சம் போராடி அப்புறம் உயிரைவிடும். ஆனால் தோனி தலைமையில் சென்ற அணிக்கு போராடத் தெரியவில்லை! களத்தில் நிற்கவே எல்லா பேட்ஸ்மேன்களும் பயப்பட்டார்கள். தேவையில்லாத பந்துகளை தானாக சென்று அடித்து ஆடி விக்கெட்டை பறிகொடுத்தார்கள். சிலர் பந்துகளை எல்லாம் வீணடித்தார்களே தவிர ரன் எடுக்க முயற்சிக்கவில்லை! டி 20 போட்டிகளின் தாக்கமே டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்களிடம் காண முடிந்தது. அதற்கேற்ப இளைஞர் அணி என்று டி 20 ஸ்பெஷலிஸ்டுகளே அணியில் இடம்பெற்றனர். ஆல்ரவுண்டர் என்று ஸ்டுவர்ட் பின்னியும், ரவீந்திர ஜடேஜாவும் இடம்பெற்றனர். இவர்கள் இருவரும் இதுவரை ரஞ்சிப் போட்டியில் எதை பெரிதாக சாதித்துவிட்டனர் என்று டெஸ்ட் அணியில் இடம்பெற்றார்கள் என்று தெரியவில்லை. ஓபனிங்கிற்கு தேர்வான ஷிகர் தவானும் ரஞ்சியில் ஒன்றும் பெரிதாக கிழிக்கவில்லை. இவர்களுக்கு டெஸ்ட் தொழில்நுட்பம் இன்னும் கைகூடிவரவில்லை. ஏதோ ஒர் போட்டியில் அதிர்ஷ்டம் அடித்து சதமடித்து அணியில் நிரந்தரர்கள் ஆகிவிட்டார்கள். தோனியும் விக்கெட் கீப்பிங்கிலும் கேப்டன் ஷிப்பிலும் ஒன்றும் புதிய உத்திகளை கையாளவில்லை! அணித்தேர்வு மொத்தமாக சொதப்பலாக அமைந்தது. கடைசி போட்டியில் எதற்கு பின்னியை சேர்த்தார் என்பது கடவுளுக்கே வெளிச்சம்? திறமையான சுழல்பந்து வீச்சாளர்கள் ப்ரக்யான் ஓஜாவுக்கு அல்லது அமித் மிஸ்ராவுக்கு தொடர்ந்து டெஸ்ட் அணியில் வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டு வருகின்றது. அஸ்வின் கேப்டனின் செல்லப்பிள்ளையாகி தொடர்ந்து வாய்ப்பு பெறுகிறார். அவர் பந்துவீச்சு சொல்லிக்கொள்ளும்படி இல்லை. அப்புறம் எப்படி வெற்றிக் கிடைக்கும். இந்திய கிரிக்கெட் வாரியம் டி 20 யில் கவனம் செலுத்துவதை விட்டு ரஞ்சிப்போட்டிகளில் கவனம் செலுத்தினால் டெஸ்ட் போட்டிகளுக்கு உயிர் கொடுக்கலாம். இல்லையேல் இந்திய அணி இங்கிலாந்தில் செத்துப்போனது செத்துப்போனதுதான்.

தொட்டால் தொடரும்!

  சக வலைபதிவரான திரு கேபிள் சங்கரின் படம் இது. இதன் இசை வெளியீடு நடந்து பாடல்கள் யூ டியுபிலும் பகிரப்பட்டு ஹிட்ஸ் அடித்துக் கொண்டிருக்கிறது. நிறைய பேர் இதைப்பற்றி எழுதிவிட்டார்கள். நான் பெரிய சினிமா ரசிகனோ இசை ரசிகனோ கிடையாது. எப்போதாவது பொழுது போகாதபோது பாட்டுக்கள் கேட்பது உண்டு. இதே ஒரு இருபது வருடம் முந்தி என்றால் பாட்டுக்களை விழுந்துவிழுந்து சேகரித்து கேட்பேன். அப்போது இப்போது போல மெமரிகார்டோ சி.டியோ எதுவும் கிடையாது. கேசட்கள்தான். ரிச்சி ஸ்டீரிட் சென்று கேசட்களை வாங்கி போட்டு பாட்டுக்களை கேட்டு மகிழ்ந்து கொண்டிருந்தேன். ஏ. ஆர் ரகுமான் கோலொச்சிய நேரம் அது. அவரின் இசை என்னை வசீகரித்தது. இளையராஜாவின் பாடல்களும் பிடிக்கும்தான். ஆனால் பெரிதான இசை அறிவு கிடையாது. நிற்க, தொட்டால் தொடரும் பாடல்களை டவுண்லோட் செய்துவிட்டேன். யூ டியுபிலும் பாஸு பாஸு பாடலை பார்த்தேன். இன்னொரு மெலடியும் எனக்கு பிடித்து இருக்கிறது. ஒரு படம் வெற்றிபெற பாடல்கள் மிக முக்கிய காரணி. சங்கமம் படத்தை உதாரணமாக கூறலாம். படம் ஒன்றுமில்லை என்றாலும் பாட்டுக்கள் ஹிட்டானதால் பிழைத்தது. கேபிள் சங்கரின் படம் அப்படி இருக்காது படமும் நன்றாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது. அவரது படப்பாடல்கள் எனக்கு பிடித்து இருப்பதால் படமும் பிடிக்கும் என்றே தோன்றுகிறது. வாழ்த்துக்கள் கேபிள்ஜி! படம் பயங்கர ஹிட்டடிக்க வாழ்த்துக்கள்!

கிச்சன் கார்னர்:


பொன்னாங்கன்னி மசியல்!

தேவையானவை:
பொன்னாங்கன்னி கீரை- 1 கட்டு
வெங்காயம் -2
தக்காளி -1
காய்ந்த மிளகாய்- 2
பூண்டு 4 பல்
கடுகு – 1 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு, தேவையான அளவு.

கீரையைச் சுத்தம் செய்து கொண்டு இலையை நறுக்கி திட்டமாக தண்ணீர் சேர்த்து வேகவிடவும். வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிளகாயை கிள்ளிப்போட்டு வதக்கவும். அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், நசுக்கிய பூண்டை சேர்த்து வதக்கவும் வெங்காயம் பொன்னிறமானதும் நறுக்கிய தக்காளியைச் சேர்த்து வதக்கவும். வேகவைத்த கீரையை தண்ணீர் வடித்து சேர்த்துக் கிளறவும். உப்புச் சேர்த்து குழைவாக கிளறவும். கடுகு தாளித்து இறக்கவும். சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்.சாத வகைகளுக்கு தொட்டுக்கொள்ளவும் செய்யலாம்.
(தி இந்துவில் படித்தது)  எழுதியவர்: வரலட்சுமி முத்துசாமி.

டிப்ஸ்! டிப்ஸ்! டிப்ஸ்!

பட்டுப்புடவையை சாதாரண தண்ணீரில் அலச வேண்டும். கறைஏதேனும் பட்டால் உடனே அலசவேண்டும். எண்ணெய் போன்றவை பட்டால் அந்த இடத்தில் விபூதி போட்டு 5 நிமிடம் வரை பொறுத்திருந்து பின்பு தண்ணீர் விட்டு அலச எண்ணெய்கறை அகலும்.

வசம்புத்துண்டுகளை பட்டுப்புடவை வைக்கும் துணிப்பையில் போட்டுவைத்தால் பூச்சிகள் அரிக்காது.

ஹேண்ட் பேக்கில் சில டிஷ்யூ பேப்பர்களை வைத்து இருந்தால் கோயில்களில் தீபம் ஏற்றி வழிபடும் போது கைகளை துடைத்துக் கொள்ள உதவும்.

தூங்கும் முன் ஒரு கப் தண்ணீர் குடிப்பது நெஞ்சு அடைப்பு, பக்கவாதத்தை தடுக்க உதவுகிறது. சாப்பிடும் முன் ஒரு கப் வெதுநீர் குடிப்பது செரிமானத்திற்கு உதவும்.

தினமும் ஒரு டம்ளர் மோரில் எலுமிச்சம் பழ ரசத்தை கலந்து பருகிவந்தால் இரத்த அழுத்தம் குறையும்.

வடை, சிப்ஸ், பஜ்ஜி போன்றவை எண்ணெயில் பொறித்தெடுக்கும்போது நான்கைந்து துளி எலுமிச்சை சாறை சேர்த்தால் எண்ணெய் குறைந்த அளவே செலவாகும்.

இந்தவாரமும் எந்த புத்தகமும் படிக்கவில்லை! அதனால் நோ புக்ஸ் கார்னர்.

இவரைத் தெரிஞ்சுக்கோங்க!
மாற்றுத்திறனாளியான ஞானப்பிரகாசம் அவர்களின் சாதனைகளை அறிந்துகொள்ள இங்கு  நான் ஞானப்பிரகாசம்

 வடமாநிலங்களில் வெள்ளம்!

   உத்திரப்பிரதேசம், பீகார்,  உத்திரக் கண்டில் பெய்து வரும் பெருமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்துள்ளது. சுமார் 200 கிராமங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது. 50க்கும் அதிகமானோர் இந்த வெள்ளம் மற்றும் மழையினால் இறந்துள்ளார்கள். பல இடங்களில் நிலச்சரிவு! ஒவ்வொரு வருடமும் இது போன்ற மழையும் வெள்ளமும் தொடர்கிறது. இயற்கையை வெல்லுவது கடினம்தான். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் பாதிப்பு ஏற்படும் போது நிவாரணப்பணிகள் செய்யும் அரசு அடுத்த வருடத்திற்குள் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ளாதது ஏன் என்று தோன்றுகிறது. அந்த பகுதியில் தாழ்வான இடங்களில் வசிப்போருக்கு தகுந்த எச்சரிக்கைச் செய்து நீர் உள்ளே புகாமல் செய்ய எந்த பணியையும் அரசு இதுவரை செய்ததாக தெரியவில்லை! புகைப்படங்களில் தீவுக் கூட்டங்கள் போல காட்சி தரும் கிராமங்களை காண்கையில் பகீர் என்கிறது! இத்தனை ஆண்டுகள் ஆகியும் பல்வேறு ஆட்சிகள் மாறியும் மக்கள் நிலை மாறவில்லை! அப்புறம் எதற்கு அரசாங்கம்! திட்டங்கள்! நம் சென்னை நிலைமையும் அதுதான்! ஒரு சாதாரண மழைக்கே சென்னையில் வெளியில் வர முடியாது ஆங்காங்கே தண்ணீர் தேங்கிவிடும்! இப்போது மெட்ரோ ரயில் அது இதென்று இன்னும் அடைப்புக்கள் அதிகம்! போனவருடம் மழை குறைவு. இந்த வருடம் கண்டிப்பாக வெளுத்து வாங்கும் என்று நினைக்கிறேன்! அம்மா அரசு கவனத்தில் வந்து என்ன நடவடிக்கை எடுக்குமோ தெரியவில்லை! இல்லையென்றால் ஒரு பத்து வருடம் முன்பு படகு ஓட்டியது போல ஓட்ட வேண்டியதுதான்.

படிச்சதில் பிடிச்சது!
தேன் உண்ணும் வண்டு.

புலவர் புகழேந்தி சோழ மன்னனின் தமிழ் அவையில் தான் எழுதிய நள 
வெண்பாவை  அரங்கேற்ற ஆரம்பித்தார்.பாக்களின் இனிமையில் அவையோர் மயங்கி இருந்தனர்.இனிய மாலைப் பொழுதின் அழகை வர்ணித்த புகழேந்தி,''மல்லிகையே வெண்சங்கா வண்டூத,''என்று பாடினார்.அதன் பொருள்,''மல்லிகைப் பூக்களை சங்குகளாக்கி வண்டுகள் ஒலி  செய்த போது, '' என்பதாகும்.சோழ மன்னனின் தமிழ் அவையில் ஒட்டக்கூத்தனும் உண்டு.அவருக்கும்,புகழேந்திக்கும் ஏழாம்  பொருத்தம்.புகழேந்தி ஆரம்பித்ததில் இருந்து எதில் குறை கண்டு பிடிக்கலாம் என்று காத்திருந்தார். புகழேந்தி மல்லிகைப் பூக்களைப் பற்றிப் பாடியதும் வெகுண்டு எழுந்தார்,ஒட்டக்கூத்தர். அவர் கூறினார்,''சங்கு ஊதுபவன் சங்கின் பின் புறம் இருந்து ஊதுவதுதான் முறை.மல்லிகைப் பூவின் மேல்புறம் தேன் குடிக்கும் வண்டுகள் சங்கு ஊதுவதாய்க் கூறுவது காட்சிப் பிழையானது.புகழேந்தி பாடுவது வெண்பா அல்ல.வெறும்பா,''சபையில் கடுமையான அமைதி நிலவியது. புகழேந்தி என்ன சொல்லப் போகிறார் என்று அனைவரும் ஆர்வத்துடன் யோசித்துக் கொண்டிருந்தனர்.புகழேந்தி சொன்னார், ''ஒட்டக்கூத்தரே! நீர் பெரிய புலவர்தான்.ஆனால் உமக்கு ஒரு விஷயம் தெரியவில்லையே!கள் குடிப்பவனுக்கு தலை எது கால் எது என்று தெரியுமா?கள் குடித்த வண்டு மட்டும் அதற்கு விதி விலக்கா?''சபையில் ஆரவாரம் அடங்க சிறிது நேரம் ஆயிற்று.

(ஜெயராஜன் அவர்களின் தென்றல் என்ற வலைப்பூவில் படித்தது) http://jeyarajanm.blogspot.in/2014/08/blog-post_8.htmlRelated Posts Plugin for WordPress, Blogger...