மரபணு மாற்ற பயிர்களின் விளை நிலமாகும் இந்தியா! கதம்ப சோறு! பகுதி 46

கதம்ப சோறு  பகுதி 46

தொடரும் ஆளில்லா ரயில்வேகேட் மரணங்கள்!

      தெலுங்கானா மாநிலத்தில் ஆளில்லா ரயில்வே கேட்டை பள்ளி வேன் கடந்தபோது ரயில் மோதி 18 பள்ளிக்குழந்தைகள் பலியான செய்தி வேதனை தந்தது. விபத்து நடந்தபின் ஆயிரம் காரணங்கள் கற்பிக்கப்படுகிறது. வேன் டிரைவர் புதியவர். போன் பேசிக்கொண்டு ஓட்டினார். மாற்றுப்பாதையில் அவசர அவசரமாக பள்ளிக்கு செல்ல வேண்டும் என்று வேகமாக ஓட்டினார் என்று ஆயிரம் காரணங்கள். இந்த காரணங்கள் ஒன்றுகூட இறந்துபோன ஓர் உயிரையாவது திருப்பித் தர உதவுமா? எந்த விபத்து நடந்தாலும் அதைப்பற்றி ஆயிரம் விவாதங்கள் ஒருவாரம் இல்லை ஒருமாதம் வரை நடக்கிறது! பின் அப்படியே மறந்துபோய்விடுகிறோம். நாம் மட்டும் அல்ல அரசாங்கமும் கூட! சரி விபத்து நடந்துவிட்டது. அடுத்து நடக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும் எந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று திட்டங்கள் வகுத்து உடனே செயல்பட்டால் அடுத்து இதுமாதிரி நடக்க வாய்ப்பு இல்லை! உதாரணமாக ஆளில்லா ரயில்வே கேட் என்பதால் விபத்து. சரி இனி அந்த இடத்திற்கு ஆள் ஒருவரை நியமித்து கேட் மூடத்திறக்க செய்யலாம். இதை மாநில நிர்வாகமோ மாவட்ட நிர்வாகமோ தன் நிதியில் இருந்து ஏற்பாடு செய்யலாம். ஆனால் அதை செயல்படுத்துவதில் ஆயிரத்தெட்டு நடைமுறை சிக்கல்கள். ரயில்வே அனுமதி பெற வேண்டும். மத்திய அரசு அனுமதி வேண்டும் இது வேண்டும் அது வேண்டும் என்று பல தடைகள். இப்படி எதிலும் முட்டுக்கட்டை போடும் சட்டங்களை முதலில் தூர எறிந்து துடிப்பாக விரைவில் தீர்வு காணும் வகையில் சட்டங்கள் அமைய வேண்டும். அதுவரை இந்த மாதிரி விபத்துக்களை தினசரியில் படித்து ஒரு சொட்டு கண்ணீர் விடத்தான் சாமானியர்களால் முடியும்.

சென்னை ரேஸ் மரணங்கள்!

     பன்னாட்டு சந்தையை திறந்து விட்டு பல்வேறு ரக பைக்குகளை சந்தையில் விட்டதும் இளைஞர்கள் பைக் காதல் கொண்டு அலைகிறார்கள். சில லட்சங்களை கொடுத்து விதவிதமான பைக்குகள் வாங்க வேண்டியது. அதில் நண்பர்களுடன் ரேஸ். பந்தயம். இதில் பல அப்பாவி நடைபாதை வாசிகள்,பாதசாரிகள் இருசக்கர வாகனத்தில் செல்வோர் பலர் பாதிக்கப்பட்டும் புகார் அளித்தும் தண்டனையோ தடையோ இதுவரை ஏதும் இல்லை. இப்போதுதான் பள்ளி மாணவர்கள் பைக்குகளில் வருவதற்கு தடை போட்டுள்ளது கல்வித்துறை. இதை எத்தனை பள்ளிகள் நடைமுறைக்கு கொண்டுவரும் என்பது கேள்விக்குறி? பணக்கார வீட்டுச் சிறுவர்கள், அவர்கள் முதலில் வாழ்ந்து கொண்டிருக்கும் பள்ளி முதலாளிகள். இவர்கள் அரசின் பேச்சைக் கேட்பார்களா என்பது சந்தேகமே? இது கிடக்க இரண்டு தினங்கள் முன்  சென்னை பல்கலைக் கழகம் அருகே ரேஸ் பைக்கில் கலந்து கொண்ட இளைஞன் வண்டியைக் கட்டுப்படுத்த முடியாமல் பல்கலைக்கழக காம்பவுண்டில் மோதி அங்கேயே இறந்து போனான். இறந்த மறுநாள் அவனது பிறந்தநாள். பிறந்த நாள் பரிசாக வந்த பைக்கில் ரேஸ் ஆடி தன் உயிரை வீணடித்து இருக்கிறான்.  இன்னும் அரசு விழிக்க வில்லைஎனில் இது போன்று மரணங்கள் சகஜமாகிவிடும்.

மரபணு மாற்றுப்பயிர்கள் இந்தியாவின் விளைகலமா?

   மரபணு மாற்றப் பயிர்களை பரிசோதனை முறையில் சாகுபடி செய்யலாம் என்று கடந்த 18ம் தேதி மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. எதிலும் சுயம் என்று ஆர்.எஸ்.எஸ் கோஷம் போடும் பா.ஜ.க இந்த விஷயத்தில் இப்படி ஓர் முடிவெடுத்தது துரதிருஷ்டமான ஒன்று. நம்முடைய உணவுப் பாதுகாப்பு இப்போது கேள்விக் குறியாகிவிட்டது. உலகெங்கும் மரபணுமாற்றப்பட்ட பயிர்கள் குறித்து பலத்த எதிர்ப்பு நிலவி வரும் வேளையில், பெரும் வியாபார நோக்கோடு லாப நோக்கில் செயல்படும் அமெரிக்க நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கு வழிவகுக்கும் இந்த செயலை பா.ஜ.க அரசு அனுமதிஅளித்துள்ளது. வளர்ந்த நாடுகளில் கூட இந்த வகைப் பயிர்கள் வெறும் கால்நடைத்தீவனமாக மட்டுமே பயிரிடப்படுகிறது. இந்தியாவில் அனைத்து வகைப்பயிர்களிலும் இந்த முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் முக்கிய விஷயம் இது ஆரோக்கியத்திற்கு கேடு. அடுத்த விஷயம். இந்த பயிர்களில் விதை உருவாகாது ஒரு முறை பயிரிட்டு அதில் இருந்து மீண்டும் விதை எடுத்து உருவாக்க முடியாது. காலப்போக்கில் நமது விவசாயம் மேலை நாடுகளை சார்ந்து இருக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அப்போது அந்த நாடுகள் வைத்ததுதான் விலை! எப்படி பெப்சியும் கோக்கும் நமது உள்நாட்டு சோடாத் தயாரிப்புக்களை அழித்ததோ அதே நிலை நமது விவசாயத்தொழிலுக்கும் ஏற்படும். ஏற்கனவே நூறுநாள் திட்டம், அதிக கூலி, ரியல் எஸ்டேட், நிலத்தடி நீர் குறைவு, பாசனவசதி இல்லாத காரணங்களால் படுத்து கிடக்கும் இந்திய விவசாயம் இதனால் அடியோடு படுத்துவிடும். தேர்தல் அறிக்கையில் மரபணு மாற்றுப் பயிர்களை எதிர்ப்போம் என்று சொன்ன பா.ஜ.க இப்போது ஆதரிக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக அதன் முகமூடி கிழிந்து வருகிறது. ஆனாலும் இதை எதிர்க்க போதுமான ஒற்றுமை எதிர்கட்சிகளிடம் இல்லை! விவசாயிகள் நிலையை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது.

தங்கம் வென்ற தமிழன்!


காமன் வெல்த் போட்டிகள் ஸ்காட்லாந்தில் நடைபெற்று வருகின்றன. சென்ற முறை இந்தியாவில் நடைபெற்றபோது இந்தியா இரண்டாவது இடம் பிடித்தது. இப்போது அந்த இடம் கேள்விக் குறிதான். இருந்தாலும் குறிப்பிடத்தக்க அளவில் பதக்கம் வெல்லும் என்று எதிர்பார்க்க படுகிறது. வேலூரைச் சேர்ந்த சதீஷ் சிவலிங்கம் இந்த காமன் வெல்த் போட்டியில் பளுதூக்கும் போட்டியில கலந்து கொண்டு  தங்கப்பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். இவர் ஸ்னாட்ச் பிரிவில் 149 கிலோ எடையைத் தூக்கி புதிய காமன் வெல்த் சாதனையும் படைத்தார். வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்த சதிஷின் தந்தை ஓய்வுபெற்ற ராணுவ வீரர். இவர் தற்போது வி.ஐ.டி பல்கலைகழகத்தில் பணியாற்றி வருகிறார். இவரும் முன்னாள் பளுத்தூக்கும் வீரர் ஆவார். எப்போதும் விளையாட்டை ஊக்குவிக்கும் தமிழக முதல்வர் சதிஷ் சிவலிங்கத்தை பாராட்டி ரூ 50 லட்சம் பரிசினை அளித்துள்ளார். இது போன்ற திறமையான வீரர்களை கண்டறிந்து ஊக்குவித்தால் எதிர்காலத்தில் மேலும் பதக்கங்கள் அள்ளலாம். வாழ்த்துக்கள் சதீஷ் சிவலிங்கம்.

கிச்சன் கார்னர்:
சும்மா இருக்கும் போது பழைய புத்தகங்களை அடுக்கி வைத்து கொண்டு இருந்தேன். அப்போது பழைய மங்கையர் மலர் இணைப்பு ஒன்று கிடைத்தது. அதில் படித்த இந்த சமையல் குறிப்பு  இங்கே பகிர்கிறேன். இந்த குறிப்பை அதில் எழுதியவர் திருச்சியைச் சேர்ந்த எஸ். கோகிலாம்பாள்.

புள்ளை தாய்ச்சிக் குழம்பு


தேவையான பொருட்கள்: மலைப்பூண்டு, சின்ன வெங்காயம், நாட்டுத்தக்காளி- தலா 100கி. புளி எலுமிச்சை அளவு, மிளகு, சீரகம், சோம்பு வெந்தயம், கடுகு உளுத்தம்பருப்பு, தலா1/4 டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்துமல்லி, மஞ்சள் தூள் 1 சிட்டிகை, பெருங்காயம் சிறிது, நல்லெண்ணை 100மில்லி, உப்பு தேவையான அளவு. தேவைப்படின் மசாலாத் தூள்.
   செய்முறை: வாணலியில் எண்ணெய் 2 டீஸ்பூன் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம், தாளித்து அதிலேயே மிளகு, சீரகம், சோம்பு வெந்தயம் போட்டு மணம் வர வறுத்து ஆறவைக்கவும்.
    மீண்டும் வாணலியில் எண்ணெய்விட்டு வெங்காயம் பூண்டு சேர்த்து வதக்கவும். புளியை வெறும் வாணலியில் ஈரம் போக புரட்டியபின் அனைத்தையும் விழுதாக அரைக்கவும். அதில் ஒன்றரைகப் தண்ணீர், மஞ்சள் தூள், மசாலாத்தூள் உப்பு சேர்த்து புளிக் காய்ச்சல் போல் கொதிக்க விடவும். பின் இறக்கி பரிமாறவும். வயிற்று பொருமல், வாயுத் தொந்தரவுக்கு இந்த குழம்பு நல்ல வைத்தியம்.

டிப்ஸ்! டிப்ஸ்! டிப்ஸ்!

   விடாமல் வரும் தும்மலைக் கட்டுப்படுத்த மிளகைத்தூள் செய்து இலேசாக நெருப்பில் தூவி அதில் இருந்துவரும் புகையை சுவாசித்தால் தும்மல் நின்றுவிடும்.


பச்சைத் திராட்சையை தொடர்ந்து சாப்பிட்டு வர ஒற்றைத் தலைவலி நின்று விடும். அல்லது வசம்பை தூளாக்கி அதை கொஞ்சம் தண்ணீரில் போட்டுக் காய்ச்சி நன்கு ஆறியவுடன் எடுத்து பற்று போட்டாலும் ஒற்றைத் தலைவலி நிவாரணம் ஆகும்.

   அப்பளத்தின் இருபுறமும் எண்ணெய் தடவி நெருப்பில் சுட்டால் பொறித்த அப்பளம் போலவே சுவையாக இருக்கும்.

பல் துலக்கும் பிரஷ்ஷை வாரம் ஒருமுறை உப்பு கலந்த சுடுநீரில் அலம்பி வைத்தால் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

சாதம் பொல பொலவென்று இருக்க அரிசியை வேக வைக்கும் முன் அதில் இரு சொட்டு எலுமிச்சை சாறைச் சேர்த்தால் சாதம் உதிர் உதிராக பொலபொலவென்று இருக்கும். நல்லெண்ணையும் சேர்க்கலாம்.

இலந்தை இலை, வேப்பிலை சம அளவு எடுத்து அரைத்து தலையில் தேய்த்து இரண்டு மணி நேரம் கழித்து குளித்து வர தலைமுடி செழித்து வளரும்.


புக்ஸ் கார்னர்: இந்த வாரம் புதிதாக எந்த புத்தகமும் படிக்கவில்லை! கொஞ்சம் ஆணிபுடுங்கல் அதிகம் ஆகிவிட்டது. சில நூல்களை மின் நூலாக தரவிறக்கி உள்ளேன்! படித்து அடுத்த வாரம் எழுதுகிறேன்.

இவர்களைத்தெரிந்து கொள்வோம்.

 திருப்பூர் முருகம்பாளையத்தில் உள்ள காது கேளாதோர் பள்ளியையும் அந்த பள்ளி மாணவர்களின் ஓவியத்தையும் அறிய இங்கு  பேச இயலாதவர்களின் படங்கள் பேசுகின்றன...

படிச்சதில் பிடிச்சது:

பெண்டாகாலூறு:
விஜயநகரப் பேரரசின் ராஜாவான வீர பல்லாலி வேட்டையாட போனப்போ அடர்ந்த காடாக இருந்த ஒரு பகுதியில் அகப்பட்டுக் கிட்டாரு. வழி தெரியாம அவர் பசியால துடிச்சப்போ ஒரு வயதான பெண்மணி வேக வைச்ச பீன்ஸ் கொடுத்து அவரோட பசியைப் போக்கினாள். அதுல மகிழ்ச்சி அடைந்த ராஜா அந்த காட்டுக்கு வெச்ச பேருதான் பெண்டாகாலூறு. (அதாவது வேகவைத்த பீன்ஸ் ஊர் என்பது அர்த்தம்) அப்புறம் வந்த ஆங்கிலேயர்கள் அதை உச்சரிக்கத் தெரியாம ‘பெங்களூர்’னு ஆக்கினாங்க. இப்ப “ பெங்களூரூ” ஆகியுள்ளது.

(பாக்யா பதில்களில் பாக்யராஜ் சொன்னது)


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. இந்திய அரசியலமைப்பு சட்டங்கள் எறிக்கப்பட வேண்டியவை..
    இதை சொன்னதே டாக்டர் அம்பேத்கர் அவர்கள்.
    சட்டங்கள் மாற்றி எழுதப்பட்டாலே இனி நாம் நிம்மதியாக வாழமுடியும்.

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்
    சதீஷ் சிவலிங்கம்

    ReplyDelete
  3. பாக்யராஜ் சொன்னது உண்மைதானா ,இல்லை முருங்கைக்காய் போன்று ஜாலிக்கு சொன்னதா ?
    கதம்பம் அருமை பாராட்டுக்கள் !

    ReplyDelete
  4. வணக்கம்
    தங்களின் பகிர்வு நன்றாக உள்ளது அதிலும் சமயல் டிப்ஸ்....சூப்பர்..வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. Kindly add - Feedburner Widget - to enter email id.
    My email id: rathnavel.natarajan@gmail.com
    Kindly send your blogs to my email id.
    Thank You.

    ReplyDelete
  6. இந்த வார கதம்ப சோறு பகுதியில் தெரியாத சில செய்திகள், தெரிந்து கொள்ள முடிந்தது.
    டிப்ஸ் அருமை.

    ReplyDelete
  7. இந்த வார கதம்ப சோறு நன்றாக உள்ளது, பல விஷயங்கள் புதியன. பகிர்விற்கு நன்றி சுரேஷ்.

    ReplyDelete
  8. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    ReplyDelete
  9. சுரேஷ் தாமதத்திற்கு மன்னிக்கவும்...... நிறைய வேலைகள்.....

    கேட் இல்லா ரயில்வே கேட்டுகள் தமிழகத்திலும் பல விபத்துகளை ஏற்படுத்துகின்றது....கேட் இருக்கும் போதே ஏற்படும் போது...இல்லனா...கேக்கணுமா....

    ரேஸ் பற்றி அடிக்கடி வரும் செய்திதான்...நடுவில் போலீசார் சில இளைஞர்களைப் பிடித்து எச்சரிக்கை செய்தும் அனுப்பி உள்ளனர்...ஆனால் அதையும் ம் ஈறி....தமிழ அரசு இதற்கு கண்டிப்பாக ஏதேனும் ஸ்ட்ரிக்ட் நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டிய தருணம்....

    பையோடெக் பற்றி அடிக்கடி விழிப்புணர்வும், போராட்டங்களும் எழும்...பின்னர் அடங்கும்....என்ன நடந்தாலும்...சந்தைகளில் பையோடெக் கத்தரிக்காய்களுக்கு பஞ்சமில்லை....அதே போல மாதுளைகள் கூட வந்துவிட்டன....என்ன கோஷம் போட்டாலும்....தீர்வு கிடைக்கப் போவதில்லை..தோட்டக்கலை.விவசாய கூட்டங்களில் எந்தக் காய் வாங்கினாலும் பூச்சி இருந்தால் அவை நல்ல காய்கள் மருந்து தெளிக்கப்படாத காய்கல் என்றும், இது போன்ற பயோடெக் இல்லாத நாட்டுக் காய்கள் வாங்கவும் அறிவுறுத்துகின்றன....ம்ம்ம்..வேறு என்ன செய்ய முடியும்?

    பச்சைத் திராட்சை நிதர்சனமான உண்மை....ஒற்றைத் தலைவலிக்கு நல்ல தீர்வு. அனுபவம் உண்டு....தொடர்ந்து ஊவொரு நாளும் 10 திராட்சைகள் ஒரு மண்டலம் எடுத்துக் கொண்டால் நிவாரணம் உண்டு.

    கதம்பத் சோறு அருமை சுரேஷ்!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!