ஆதி காமாட்சியின் அற்புத ஊஞ்சல் தரிசனம்!



காஞ்சி என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது காமாட்சி அம்பிகைதான். இப்போது இருக்கும் காமாட்சி அம்பிகை கோயில் தவிர ஆதி காமாட்சி அம்பிகை கோயிலும் காஞ்சியில் உள்ளது தெரியுமா?
   தொண்டை மண்டலத்தே கோயில்கள் நகரமாக விளங்கும் காஞ்சியில் அமைந்துள்ளது காளிகோட்டம். இக்கோட்டத்தில் ஆதிகாமாட்சியாக அன்னை வீற்றிருந்து அருள் பாலிக்கின்றாள். இந்த அம்மனை காளிகாம்பாள் என்றும் அழைப்பர்.
  ஆடிமாத நாயகியான அம்மனை வெள்ளிக் கிழமைகளில் வழிபடுவது சிறப்பாகும். இந்த அம்பிகையை ஆடிமாத கடைசி வெள்ளியன்று தரிசித்தால் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை.

கயிலாயத்தில் சிவனும் பார்வதியும் உரையாடிக்கொண்டிருக்கும் சமயம், விளையாட்டாக அம்பிகை சிவனின் கண்களை மூடினார். அப்போது உலகமே தத்தளித்து இருண்டு போனது. உயிர்கள் அசையாமல் நின்றன. இதனால் பெரும் பாவத்திற்கு ஆளானாள் அம்பிகை. பொன்மயமான அம்பிகையின் மேனியில் இருள் படிந்து கரியநிறமானாள். உடனே அம்பிகை தன் கைகளை இறைவனின் கண்களில் இருந்து எடுத்துவிட்டாள். அப்போது சிவன் தேவியிடம், தேவி! கரிய நிறம் கொண்ட நீ காளி என்று பெயர் பெறுவாய். உன் பாவம் நீங்க பூலோகத்தில் தவம் இயற்றி அறம் பல செய்வாயாக! என்று அருள் புரிந்தார்.
   தேவியும் பூலோகம் வந்து கம்பா நதிக்கரையில் மணல் லிங்கம் அமைத்து தவமிருந்துவந்தாள். ஒருநாள் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுக்க தன் கைகளால் சிவலிங்கத்தை அணைத்துக் கொண்டாள். அப்போது உமையவளின் வளையல் தழும்பு மணல் லிங்கத்தில் படிந்தது. அம்பிகையின் அன்புக்கு பணிந்து இறைவன் தோன்றினார். தேவி, தன் கருமை நிறம் நீங்க அருள்புரியும்படி வேண்டினாள். சிவனருளால் பழைய நிறத்தை பெற்று மகிழ்ந்தாள். அவளே காமாட்சி.

  சிவன் அருள் பெற தவமிருந்தவளே ஆதி காமாட்சி என்னும் காளிகாம்பாள். அவள் அதேவடிவில் அருள்பாலிக்கத் தொடங்கினாள். கருவறையில் கிழக்கு நோக்கியபடி பத்மாசனத்தில் அமர்ந்தபடி காளிகாம்பாள் வீற்றிருக்கிறாள். மேல் கைகளில் பாச அங்குசமும், வலது கை அபய ஹஸ்தமாக அனுக்கிரக கோலத்தில் இருக்க கீழ் இடக்கையில் அட்சயபாத்திரம் ஏந்தி அசுரர்களை அடக்கி ஆள்பவள் என்பதாக திருவடியில் மூன்று அசுரர்களை சாய்த்தபடி அமர்ந்திருக்கிறாள் அம்பிகை.
  இந்த கோயிலில் அமாவாசை, பவுர்ணமி தினங்கள் விஷேசமாக பூஜைகள் நடக்கும். உற்சவர் அம்பாளின் இருபுறமும் லஷ்மியும்,சரஸ்வதியும் உள்ளனர்.
  ஆடிமாத கடை வெள்ளியன்று மாலையில் ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெறும். வெளிப்பிரகாரத்தில் உள்ள பதினாறுகால் மண்டபத்தில் அம்மன் சர்வலங்காரத்துடன் எழுந்தருளி ஊஞ்சலில் சேவை சாதிப்பாள்.

இந்த அம்பிகையை வெள்ளிக்கிழமையில் வழிபட்டால் சர்வ மங்களமும் உண்டாகும், தீயவை விலகி நன்மைகள் நடக்கும் என்பது நம்பிக்கை.
காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே கோயில் அமைந்துள்ளது. பேருந்து நிலையத்தில் இருந்து ஆட்டோவசதிகள் உண்டு.
திறக்கும் நேரம்: காலை 6.30 மணிமுதல் 11.30 வரை

   மாலை 5 மணிமுதல் இரவு 8.00 மணிவரை.

Comments

  1. தங்களின் இறைத்தொண்டிற்க்கு இறையருள் கிடைக்கட்டும் நண்பரே...
    தகவலுக்கும் நன்றி.

    ReplyDelete
  2. வணக்கம்
    கதையோடு பதிவு ஒளிர்கிறது பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. பக்திமணம் கமழ்கிறது!

    ReplyDelete
  4. ஆடி வெள்ளி
    தேடி வந்தக் காமாட்சி!
    ஓடி வந்து கண்டோம்! அவளை!
    கோடி அருள் பெற்றிட!

    தகவல்கள் அருமை சுரேஷ்!

    ReplyDelete
  5. அனைவருக்கும் நன்மைகள் நடக்கட்டும்...

    ReplyDelete
  6. அம்மன் தரிசனம் மனதிற்கு நிறைவைத் தந்தது. நன்றி.

    ReplyDelete
  7. இரண்டு முறை காமாட்சி அம்மனை தரிசித்து அருள் பெற்றிருக்கின்றேன் சகோ!

    ReplyDelete
  8. காமாட்சி அம்பிகையின் அருள் எல்லோருக்கும் கிட்டட்டும்.

    ReplyDelete
  9. ஆதி காமாட்சி அறிந்து கொண்டேன்.
    நன்றி.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!