Thursday, July 31, 2014

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 11

ஜோக்ஸ்!


1.      என் மனைவி இதுவரைக்கும் வாயைத்திறந்து அது வேணும் இது வேணும்னு கேட்டதில்லை!
அவ்வளவு நல்ல குணமா?
நீ வேற அவளே வாங்கிட்டு என்கிட்ட பில்லை மட்டும் காட்டுவா!

2.      போர்க்களத்தில் இறங்கிவிட்டால் மன்னரை கையில் பிடிக்க முடியாது?
அவ்வளவு வீரமாக போரிடுவாரா?
ஊகும்! அவ்வளவு வேகமாக ஓடுவார்!
3.      மாப்பிள்ளை இடிஞ்சி போய் வந்திருக்காரா? என்ன விஷயம்?
அடுக்குமாடி குடியிருப்பிலே ப்ளாட் வாங்கியிருந்தாராம்!

4.      அந்த டாக்டர் போலி டாக்டர்னு எப்படி சொல்றே?

பல் கூச்சம்னு சொல்லிப்போனா நாலு பேரோட சேர்ந்து பழகுனா கூச்சமெல்லாம் காணாம போயிரும்னு சொல்றாரே!


5.      தலைவரோட நிதி நிலைமை சரி இல்லை போல!
எப்படி சொல்றே?
சில்லறைக் கட்சிகளை கூட்டணியிலே சேர்த்துக்கிட்டா ஏதாவது சில்லரை தேருமான்னு கேக்கறாரே!

6.      மன்னருடைய உடல் வயிரம் பாய்ந்த உடல்!
அவ்வளவு திடமா?
ஊகும் அடிவாங்கி வாங்கி மரத்துப்போய்விட்டது!

7.      மனைவி ஊருக்குப் போனா சந்தோஷப்படாம ஏன் வருத்தமா இருக்கே?
நிறைய ஹோம் ஒர்க் கொடுத்துட்டு போயிருக்காளே!

8.      ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் ஆகலே!
அப்புறம்?
டைரக்டர் கணக்குத் தீர்த்துட்டார்!

9.      இந்த படத்துல வரலாறு காணாத திருப்பம் இருக்குன்னு சொல்றாங்களே என்ன அது?
    படம் வந்த அன்னைக்கே பொட்டிக்கு திரும்பிருச்சாம்!

10.   ஐம்பது அடியில் சுவையான குடிநீர்னு சொன்னாங்க!
வந்துதா?
இல்லை… கேட்டா ஐம்பது அடி தூரத்துல இருக்கிற வாட்டர் கம்பெனியில் வாங்கிக்கனும்னு சொல்றாங்க!


11.  தலைவர் பொதுக்கூட்டத்துல பேசும்போது மானத்தை வாங்கிட்டார்!
    என்ன பண்ணார்?
  சானியா மிர்சாவுக்கு எதுக்கு அம்பாசிடர் கொடுக்கிறீங்க? அந்த கார்தான் இல்லையே வேணும்னா ஒரு இன்னோவா இல்ல சாண்ட்ரோவை கொடுங்கன்னு பேசறார்!

12.  ஓடி ஓடி உழைக்கணும்னு சொல்லிகிட்டு இருக்காரே யாருங்க அவரு?
சீட்டுக் கம்பெனி முதலாளிதான்!

13.  உண்ணாவிரதப் பந்தல்ல என்ன கலாட்டா?
பிரியாணி போடறேன்னு சொல்லி பிரியாணி படத்தை போட்டு காண்பிச்சுட்டாங்களாம்!


14.  போர்க்களத்தில் மன்னர் எதிரியின் காதைக் கடித்து தப்பினாராமே?
நீ வேறு.. உயிர்ப்பிச்சை தா! என்று எதிரியில் காதில் சொல்லிவிட்டு ஓடிவந்தாராம்!

15.  பொண்ணுக்கு சமைக்கத்தெரியுமான்னு கேட்டது தப்பா போச்சா ஏன்?
நீங்கதான் நல்லா சமைப்பீங்களாமே! அதுக்குத்தான் உங்களை கட்டி வைக்கிறோம்னு சொல்றாங்க!

16.   மன்னா! எதிரி நாட்டு மன்னன் குஸ்தி போட்டிக்கு அழைப்பு விடுத்துள்ளான்!
அமைச்சரே! நாம் கிஸ்தியெல்லாம் ஒழுங்காக கட்டிவிடுகிறோம் அல்லவா…?

17.  அந்த பிச்சைக்காரனுக்கு அவ்ளோ கொழுப்பு இருக்கக் கூடாது?
ஏன் என்னாச்சு?
சில்லரை இல்லேப்பான்னு சொன்னா வேணும்னா என் பேங்க் அக்கவுண்ட் நம்பர் தரேன்! அதுல போட்டுருங்கன்னு சொல்றான்!

18.  ஆபிஸ் வேலையை வீட்டுல செஞ்சா என் மனைவிக்கு பிடிக்காது!

இதுல என்ன தப்பு இருக்கு?
நீ வேற ஆபிஸ் வேலையை செஞ்சுக்கிட்டிருந்தா வீட்டு வேலையை யார் செய்யறதுன்னு கோச்சுக்குவா!

19.  அவார்டுக்கும் பட்டத்துக்கும் என்ன வித்தியாசம்?
பத்திரிக்கையிலே காசு கொடுத்து வாங்கிறது பட்டம்
சேனலுக்கு படத்தை வித்து வாங்கிறது அவார்டு!

20.  வருமானத்துக்கு அதிகமா சொத்து சேர்த்த வழக்குல தலைவர் சொன்ன பதிலை கேட்டு ஜட்ஜே ஒரு நிமிஷம் அசந்துட்டாரு!
அப்படி என்ன சொன்னாரு தலைவர்?
இவ்ளோ சொத்து சேர்த்துருக்கீங்களே யாருக்காகான்னு கேட்டதும் மக்களுக்காகத்தான்னு சொல்லிட்டாரு!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Wednesday, July 30, 2014

மரபணு மாற்ற பயிர்களின் விளை நிலமாகும் இந்தியா! கதம்ப சோறு! பகுதி 46

கதம்ப சோறு  பகுதி 46

தொடரும் ஆளில்லா ரயில்வேகேட் மரணங்கள்!

      தெலுங்கானா மாநிலத்தில் ஆளில்லா ரயில்வே கேட்டை பள்ளி வேன் கடந்தபோது ரயில் மோதி 18 பள்ளிக்குழந்தைகள் பலியான செய்தி வேதனை தந்தது. விபத்து நடந்தபின் ஆயிரம் காரணங்கள் கற்பிக்கப்படுகிறது. வேன் டிரைவர் புதியவர். போன் பேசிக்கொண்டு ஓட்டினார். மாற்றுப்பாதையில் அவசர அவசரமாக பள்ளிக்கு செல்ல வேண்டும் என்று வேகமாக ஓட்டினார் என்று ஆயிரம் காரணங்கள். இந்த காரணங்கள் ஒன்றுகூட இறந்துபோன ஓர் உயிரையாவது திருப்பித் தர உதவுமா? எந்த விபத்து நடந்தாலும் அதைப்பற்றி ஆயிரம் விவாதங்கள் ஒருவாரம் இல்லை ஒருமாதம் வரை நடக்கிறது! பின் அப்படியே மறந்துபோய்விடுகிறோம். நாம் மட்டும் அல்ல அரசாங்கமும் கூட! சரி விபத்து நடந்துவிட்டது. அடுத்து நடக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும் எந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று திட்டங்கள் வகுத்து உடனே செயல்பட்டால் அடுத்து இதுமாதிரி நடக்க வாய்ப்பு இல்லை! உதாரணமாக ஆளில்லா ரயில்வே கேட் என்பதால் விபத்து. சரி இனி அந்த இடத்திற்கு ஆள் ஒருவரை நியமித்து கேட் மூடத்திறக்க செய்யலாம். இதை மாநில நிர்வாகமோ மாவட்ட நிர்வாகமோ தன் நிதியில் இருந்து ஏற்பாடு செய்யலாம். ஆனால் அதை செயல்படுத்துவதில் ஆயிரத்தெட்டு நடைமுறை சிக்கல்கள். ரயில்வே அனுமதி பெற வேண்டும். மத்திய அரசு அனுமதி வேண்டும் இது வேண்டும் அது வேண்டும் என்று பல தடைகள். இப்படி எதிலும் முட்டுக்கட்டை போடும் சட்டங்களை முதலில் தூர எறிந்து துடிப்பாக விரைவில் தீர்வு காணும் வகையில் சட்டங்கள் அமைய வேண்டும். அதுவரை இந்த மாதிரி விபத்துக்களை தினசரியில் படித்து ஒரு சொட்டு கண்ணீர் விடத்தான் சாமானியர்களால் முடியும்.

சென்னை ரேஸ் மரணங்கள்!

     பன்னாட்டு சந்தையை திறந்து விட்டு பல்வேறு ரக பைக்குகளை சந்தையில் விட்டதும் இளைஞர்கள் பைக் காதல் கொண்டு அலைகிறார்கள். சில லட்சங்களை கொடுத்து விதவிதமான பைக்குகள் வாங்க வேண்டியது. அதில் நண்பர்களுடன் ரேஸ். பந்தயம். இதில் பல அப்பாவி நடைபாதை வாசிகள்,பாதசாரிகள் இருசக்கர வாகனத்தில் செல்வோர் பலர் பாதிக்கப்பட்டும் புகார் அளித்தும் தண்டனையோ தடையோ இதுவரை ஏதும் இல்லை. இப்போதுதான் பள்ளி மாணவர்கள் பைக்குகளில் வருவதற்கு தடை போட்டுள்ளது கல்வித்துறை. இதை எத்தனை பள்ளிகள் நடைமுறைக்கு கொண்டுவரும் என்பது கேள்விக்குறி? பணக்கார வீட்டுச் சிறுவர்கள், அவர்கள் முதலில் வாழ்ந்து கொண்டிருக்கும் பள்ளி முதலாளிகள். இவர்கள் அரசின் பேச்சைக் கேட்பார்களா என்பது சந்தேகமே? இது கிடக்க இரண்டு தினங்கள் முன்  சென்னை பல்கலைக் கழகம் அருகே ரேஸ் பைக்கில் கலந்து கொண்ட இளைஞன் வண்டியைக் கட்டுப்படுத்த முடியாமல் பல்கலைக்கழக காம்பவுண்டில் மோதி அங்கேயே இறந்து போனான். இறந்த மறுநாள் அவனது பிறந்தநாள். பிறந்த நாள் பரிசாக வந்த பைக்கில் ரேஸ் ஆடி தன் உயிரை வீணடித்து இருக்கிறான்.  இன்னும் அரசு விழிக்க வில்லைஎனில் இது போன்று மரணங்கள் சகஜமாகிவிடும்.

மரபணு மாற்றுப்பயிர்கள் இந்தியாவின் விளைகலமா?

   மரபணு மாற்றப் பயிர்களை பரிசோதனை முறையில் சாகுபடி செய்யலாம் என்று கடந்த 18ம் தேதி மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. எதிலும் சுயம் என்று ஆர்.எஸ்.எஸ் கோஷம் போடும் பா.ஜ.க இந்த விஷயத்தில் இப்படி ஓர் முடிவெடுத்தது துரதிருஷ்டமான ஒன்று. நம்முடைய உணவுப் பாதுகாப்பு இப்போது கேள்விக் குறியாகிவிட்டது. உலகெங்கும் மரபணுமாற்றப்பட்ட பயிர்கள் குறித்து பலத்த எதிர்ப்பு நிலவி வரும் வேளையில், பெரும் வியாபார நோக்கோடு லாப நோக்கில் செயல்படும் அமெரிக்க நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கு வழிவகுக்கும் இந்த செயலை பா.ஜ.க அரசு அனுமதிஅளித்துள்ளது. வளர்ந்த நாடுகளில் கூட இந்த வகைப் பயிர்கள் வெறும் கால்நடைத்தீவனமாக மட்டுமே பயிரிடப்படுகிறது. இந்தியாவில் அனைத்து வகைப்பயிர்களிலும் இந்த முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் முக்கிய விஷயம் இது ஆரோக்கியத்திற்கு கேடு. அடுத்த விஷயம். இந்த பயிர்களில் விதை உருவாகாது ஒரு முறை பயிரிட்டு அதில் இருந்து மீண்டும் விதை எடுத்து உருவாக்க முடியாது. காலப்போக்கில் நமது விவசாயம் மேலை நாடுகளை சார்ந்து இருக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அப்போது அந்த நாடுகள் வைத்ததுதான் விலை! எப்படி பெப்சியும் கோக்கும் நமது உள்நாட்டு சோடாத் தயாரிப்புக்களை அழித்ததோ அதே நிலை நமது விவசாயத்தொழிலுக்கும் ஏற்படும். ஏற்கனவே நூறுநாள் திட்டம், அதிக கூலி, ரியல் எஸ்டேட், நிலத்தடி நீர் குறைவு, பாசனவசதி இல்லாத காரணங்களால் படுத்து கிடக்கும் இந்திய விவசாயம் இதனால் அடியோடு படுத்துவிடும். தேர்தல் அறிக்கையில் மரபணு மாற்றுப் பயிர்களை எதிர்ப்போம் என்று சொன்ன பா.ஜ.க இப்போது ஆதரிக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக அதன் முகமூடி கிழிந்து வருகிறது. ஆனாலும் இதை எதிர்க்க போதுமான ஒற்றுமை எதிர்கட்சிகளிடம் இல்லை! விவசாயிகள் நிலையை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது.

தங்கம் வென்ற தமிழன்!


காமன் வெல்த் போட்டிகள் ஸ்காட்லாந்தில் நடைபெற்று வருகின்றன. சென்ற முறை இந்தியாவில் நடைபெற்றபோது இந்தியா இரண்டாவது இடம் பிடித்தது. இப்போது அந்த இடம் கேள்விக் குறிதான். இருந்தாலும் குறிப்பிடத்தக்க அளவில் பதக்கம் வெல்லும் என்று எதிர்பார்க்க படுகிறது. வேலூரைச் சேர்ந்த சதீஷ் சிவலிங்கம் இந்த காமன் வெல்த் போட்டியில் பளுதூக்கும் போட்டியில கலந்து கொண்டு  தங்கப்பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். இவர் ஸ்னாட்ச் பிரிவில் 149 கிலோ எடையைத் தூக்கி புதிய காமன் வெல்த் சாதனையும் படைத்தார். வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்த சதிஷின் தந்தை ஓய்வுபெற்ற ராணுவ வீரர். இவர் தற்போது வி.ஐ.டி பல்கலைகழகத்தில் பணியாற்றி வருகிறார். இவரும் முன்னாள் பளுத்தூக்கும் வீரர் ஆவார். எப்போதும் விளையாட்டை ஊக்குவிக்கும் தமிழக முதல்வர் சதிஷ் சிவலிங்கத்தை பாராட்டி ரூ 50 லட்சம் பரிசினை அளித்துள்ளார். இது போன்ற திறமையான வீரர்களை கண்டறிந்து ஊக்குவித்தால் எதிர்காலத்தில் மேலும் பதக்கங்கள் அள்ளலாம். வாழ்த்துக்கள் சதீஷ் சிவலிங்கம்.

கிச்சன் கார்னர்:
சும்மா இருக்கும் போது பழைய புத்தகங்களை அடுக்கி வைத்து கொண்டு இருந்தேன். அப்போது பழைய மங்கையர் மலர் இணைப்பு ஒன்று கிடைத்தது. அதில் படித்த இந்த சமையல் குறிப்பு  இங்கே பகிர்கிறேன். இந்த குறிப்பை அதில் எழுதியவர் திருச்சியைச் சேர்ந்த எஸ். கோகிலாம்பாள்.

புள்ளை தாய்ச்சிக் குழம்பு


தேவையான பொருட்கள்: மலைப்பூண்டு, சின்ன வெங்காயம், நாட்டுத்தக்காளி- தலா 100கி. புளி எலுமிச்சை அளவு, மிளகு, சீரகம், சோம்பு வெந்தயம், கடுகு உளுத்தம்பருப்பு, தலா1/4 டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்துமல்லி, மஞ்சள் தூள் 1 சிட்டிகை, பெருங்காயம் சிறிது, நல்லெண்ணை 100மில்லி, உப்பு தேவையான அளவு. தேவைப்படின் மசாலாத் தூள்.
   செய்முறை: வாணலியில் எண்ணெய் 2 டீஸ்பூன் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம், தாளித்து அதிலேயே மிளகு, சீரகம், சோம்பு வெந்தயம் போட்டு மணம் வர வறுத்து ஆறவைக்கவும்.
    மீண்டும் வாணலியில் எண்ணெய்விட்டு வெங்காயம் பூண்டு சேர்த்து வதக்கவும். புளியை வெறும் வாணலியில் ஈரம் போக புரட்டியபின் அனைத்தையும் விழுதாக அரைக்கவும். அதில் ஒன்றரைகப் தண்ணீர், மஞ்சள் தூள், மசாலாத்தூள் உப்பு சேர்த்து புளிக் காய்ச்சல் போல் கொதிக்க விடவும். பின் இறக்கி பரிமாறவும். வயிற்று பொருமல், வாயுத் தொந்தரவுக்கு இந்த குழம்பு நல்ல வைத்தியம்.

டிப்ஸ்! டிப்ஸ்! டிப்ஸ்!

   விடாமல் வரும் தும்மலைக் கட்டுப்படுத்த மிளகைத்தூள் செய்து இலேசாக நெருப்பில் தூவி அதில் இருந்துவரும் புகையை சுவாசித்தால் தும்மல் நின்றுவிடும்.


பச்சைத் திராட்சையை தொடர்ந்து சாப்பிட்டு வர ஒற்றைத் தலைவலி நின்று விடும். அல்லது வசம்பை தூளாக்கி அதை கொஞ்சம் தண்ணீரில் போட்டுக் காய்ச்சி நன்கு ஆறியவுடன் எடுத்து பற்று போட்டாலும் ஒற்றைத் தலைவலி நிவாரணம் ஆகும்.

   அப்பளத்தின் இருபுறமும் எண்ணெய் தடவி நெருப்பில் சுட்டால் பொறித்த அப்பளம் போலவே சுவையாக இருக்கும்.

பல் துலக்கும் பிரஷ்ஷை வாரம் ஒருமுறை உப்பு கலந்த சுடுநீரில் அலம்பி வைத்தால் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

சாதம் பொல பொலவென்று இருக்க அரிசியை வேக வைக்கும் முன் அதில் இரு சொட்டு எலுமிச்சை சாறைச் சேர்த்தால் சாதம் உதிர் உதிராக பொலபொலவென்று இருக்கும். நல்லெண்ணையும் சேர்க்கலாம்.

இலந்தை இலை, வேப்பிலை சம அளவு எடுத்து அரைத்து தலையில் தேய்த்து இரண்டு மணி நேரம் கழித்து குளித்து வர தலைமுடி செழித்து வளரும்.


புக்ஸ் கார்னர்: இந்த வாரம் புதிதாக எந்த புத்தகமும் படிக்கவில்லை! கொஞ்சம் ஆணிபுடுங்கல் அதிகம் ஆகிவிட்டது. சில நூல்களை மின் நூலாக தரவிறக்கி உள்ளேன்! படித்து அடுத்த வாரம் எழுதுகிறேன்.

இவர்களைத்தெரிந்து கொள்வோம்.

 திருப்பூர் முருகம்பாளையத்தில் உள்ள காது கேளாதோர் பள்ளியையும் அந்த பள்ளி மாணவர்களின் ஓவியத்தையும் அறிய இங்கு  பேச இயலாதவர்களின் படங்கள் பேசுகின்றன...

படிச்சதில் பிடிச்சது:

பெண்டாகாலூறு:
விஜயநகரப் பேரரசின் ராஜாவான வீர பல்லாலி வேட்டையாட போனப்போ அடர்ந்த காடாக இருந்த ஒரு பகுதியில் அகப்பட்டுக் கிட்டாரு. வழி தெரியாம அவர் பசியால துடிச்சப்போ ஒரு வயதான பெண்மணி வேக வைச்ச பீன்ஸ் கொடுத்து அவரோட பசியைப் போக்கினாள். அதுல மகிழ்ச்சி அடைந்த ராஜா அந்த காட்டுக்கு வெச்ச பேருதான் பெண்டாகாலூறு. (அதாவது வேகவைத்த பீன்ஸ் ஊர் என்பது அர்த்தம்) அப்புறம் வந்த ஆங்கிலேயர்கள் அதை உச்சரிக்கத் தெரியாம ‘பெங்களூர்’னு ஆக்கினாங்க. இப்ப “ பெங்களூரூ” ஆகியுள்ளது.

(பாக்யா பதில்களில் பாக்யராஜ் சொன்னது)


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Tuesday, July 29, 2014

தன் குற்றம்

தன் குற்றம்

“ என்ன மாமி! சவுக்கியமா? இப்பல்லாம் நம்ம ஆத்து பக்கம் வர மாட்டேங்கிறீங்க?” என்ற குரலைக் கேட்டு முருகர் சன்னதியில் கொடிமரத்தில் சேவித்துக் கொண்டிருந்த வசந்தா மாமி நிமிர்ந்தாள்.
  “யாருடாப்பா அது? சங்கரனா? நன்னாயிருக்கியாடா கொழந்தை! ஆத்துல தோப்பனார், அம்மால்லாம் சவுக்கியமா? கொழந்தையை ஸ்கூல்ல சேர்த்திட்டியா?” விசாரித்துக் கொண்டே போனார்.
   இதுதான் வசந்தாமாமியிடம் உள்ள ஒரு நல்லப் பழக்கம்! பழகிவிட்டால் எல்லோரையும் நினைவில் வைத்துக் கொண்டு விசாரிப்பார். நாம் ஒரு வார்த்தை பேசிவிட்டால் பதிலுக்கு ஒருமணி நேரம் நம்மை விடமாட்டார். இதற்காகவே பார்த்தும் பார்க்காதது போல நழுவி விடுவது உண்டு. வயது எழுபதை நெருங்கிக் கொண்டிருக்கிறது. காப்பீடு முகவர், மல்டிலெவல்மார்க்கெட்டிங் என்று எதையாவது இன்னும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்து கொண்டிருப்பார்.
   தன்னுடைய பணி நிமித்தமாக அடிக்கடி வெளியே வருவார். அப்போதெல்லாம் மதிய வேளையில் எங்கள் ஊரில் உள்ள குருக்கள் வீட்டில் தான் ஆகாரம். வெளியே சுற்றிக் களைத்துப் போய் வருவார்.  நல்ல உச்சிவெயில் மண்டையை பிளக்கும். “ஏம் மாமி? இவ்ளோ கஷ்டப்படறேள்? உங்களுக்கு இருக்கிற வசதிக்கு இந்த தொழில் தேவையா? என்பார் குருக்கள் மாமா.
    “அதில்லே மாமா? இந்த உடம்பு இப்படியே சுத்தி சுத்தி பழகிறுச்சு! இப்படி சின்ன வயசுல இருந்து உழைச்சுத்தான் இந்த அளவுக்கு முன்னேறி இருக்கேன். சட்டுன்னு விட்டுட முடியலை! ஏதோ உடம்புல தெம்பு இருக்கிறவரைக்கும் பார்ப்போம்! அப்புறம் விட்டுடலாம்” என்பார்.
    “ சொன்னா கேக்க மாட்டீங்க! இந்த வேகாத வெயில்ல எதுக்கு வீண் அலைச்சல்? நீங்க சம்பாதித்துதான் பொழுது விடியனும்னு இல்லே! இருந்தாலும் உங்களாலே சும்மா இருக்க முடியாதுன்னு சொல்றேள்! சரி உங்க இஷ்டம்!”  என்பதோடு முடித்துக் கொள்வார் குருக்கள் மாமா.
    ஒரு புன்னகையுடன் அவர் வீட்டில் நுழைபவர் சாயங்காலம்தான் வெளியில் வருவார். மதிய ஆகாரம் மாலை காபி எல்லாம் குருக்கள் வீட்டில்தான். மதியத்துக்கு மேல் மாமியை பார்க்க வேண்டும் என்றால் குருக்கள் ஆத்தில் பார்க்கலாம் என்று எல்லோருமே சொல்வார்கள். அப்படி ஒரு பிணைப்பு குருக்கள் வீட்டோடு மாமிக்கு இருந்தது.
   கால ஓட்டத்தில் குருக்கள் மாமா இறந்து போக, மாமி குருக்கள் ஆத்துக்கு வருவது குறைந்துவிட்டது. ஆனாலும் இன்னும் தொழிலை விடவில்லை! எங்கள் ஊருக்கு வருகிறார் போகிறார். ஆனால் குருக்கள்வீட்டுப் பக்கம் வருவது குறைந்துவிட்டது. வந்தாலும் தங்குவது இல்லை! மதிய சாப்பாடு கூட இப்போது கட்டி எடுத்து வந்துவிடுகிறார். அங்கேயே கோவிலில் அமர்ந்து சாப்பிட்டு கிளம்பி விடுகிறார்.
   இன்று கோவிலில் பார்த்ததும் இதைத்தான் கேட்க வேண்டும் என்று தோன்றியது சங்கரனுக்கு.  “ஏன் மாமி? நீங்க நம்ம ஆத்துக்குத்தான் வரது இல்லை! குருக்களாத்துக்கும் போறதில்லையாமே? தப்பா நினைச்சுக்காதீங்க! எனக்குத் தெரிஞ்சு நீங்களும் குருக்கள் மாமாவும் பழகின விதத்துக்கு இப்ப அங்க நீங்க போகாம இருக்கிறது என்னமோ மனசு கேக்கலை! அதான் கேட்கறேன்” என்றான் சங்கரன்.
   மாமி பெரிசாக ஒரு பெருமூச்சு விட்டார்.  “அதையேண்டா கேக்கறே சங்கரா? அந்த குருக்கள் மாமா என் அண்ணா மாதிரிடா! அவ்ளோ வாஞ்சையா பழகுவார்! பார்த்தா பேசாம போகமாட்டார். நான் முதல்ல இப்ப மாதிரி சாப்பாடு எடுத்துவந்து சாப்பிட்டுகிட்டுதான் இருந்தேன். ஆனா அந்த மாமாதான் நம்ம ஆம் இருக்க நீ ஏன் சாதம் கட்டிண்டு வந்துண்டு இருக்கே? உனக்கு ஒருவேளை சாதம் போட்டா நான் ஏழை ஆயிரமாட்டேன்! தினம் எங்காத்துலதான் சாப்பிடனும்னு சொல்லி பிடிவாதமா கூட்டிண்டு போய் சாதம் போட்டார். அப்புறம் அந்த மாமியையும் குறை சொல்ல முடியாது. ஒரு முகச்சுளிப்பு இல்லாம நடந்துக்குவா!”
    “அப்புறம் ஏன் மாமி இப்ப அந்த பக்கம் வரதே இல்லை?”
“டேய் சங்கரா? நோக்குத் தெரியாதது இல்லே? அழையா வீட்டுக்கு நுழையா விருந்தாளியா போகக்கூடாது! குருக்கள் மாமாவுக்கு மூணு பசங்க! இப்ப மூணு பேரும் தனித்தனியா வீட்ட கட்டிண்டு சவுக்கியமா இருக்கா? அப்ப குருக்கள் வீடு ஒண்ணுதான்! இப்ப மூணா பிரிஞ்சி போச்சு! யார் ஆத்துல போய் சாப்பிடுவேன் சொல்லு? அதுவும் இல்லாம இந்த பசங்க எல்லாம் மனுஷால விட பணத்த பெரிசா நினைக்கறானுங்க! ஒரு வார்த்தை என்ன கூப்பிட்டு இருப்பானுங்களா அவனுங்க? கோயில்ல நுழைஞ்சா கூட ஒரு துளி விபூதி கொடுக்க கூட யோசிக்கிறானுங்க!”
    “நான் உள்ளே நுழைஞ்சாலே ஏதோ வேண்டாத விருந்தாளி வந்தா மாதிரி மூஞ்சை திருப்பிக்கிறானுங்க! போகட்டும்! அதான் அந்த பக்கமே வர்றது இல்லை! அங்க வேலையும் இல்லை! அவனுங்க யாரும் என்கிட்ட பாலிசியும் போடலை! அப்புறம் எதுக்கு அந்த பக்கம் வரனும் சொல்லு?” என்னையே திருப்பிக் கேட்டார்.
    “ மாமி! எல்லோரும் ஒரே மாதிரி இருப்பாங்களா? குருக்கள் குணம் வேற அவங்க பசங்க அதே மாதிரி இருக்கணும்னு அவசியம் இல்லையே?”
      “நிஜம்தாம்பா! ஆனா வரவேற்க கூட வேண்டாம்! ஒரு மாதிரி முகத்த திருப்பிக்கிறது பிடிக்கலை! குருக்கள் போனப்புறம் ஒருநாள் சாப்பாட்டு வேளையிலே அந்த பக்கம் வந்தா மூணு ஆத்து கதவும் சாத்தி இருக்கு! நான் வாசல்ல வந்து நின்னு குரல் கொடுத்தா கதவை திறந்து, அடடே மாமியா? அவர் சாப்பிட்டிண்டு இருக்கார்! அப்புறமா வாங்க மாமின்னு மூஞ்சால அடிச்சமாதிரி  சொல்றா!  ஒரு பேச்சுக்கு ஒரு வாய் சாப்பிடறேளா மாமின்னு கேக்கவே இல்லைடா”
       “ இப்படி ஒரு  விஷயம் நடந்திருக்குன்னு எனக்கு தெரியாது மாமி!” ஆனாலும் ஒரு கேள்வி மாமி? நீங்க குருக்களாத்துக்கு பத்து வருசமா பழக்கம்! அவா ஆத்துல இந்த பத்து வருஷம் சாப்பிட்டு இருக்கேள்! நிஜம்தானே!
   அதிலென்னடா சந்தேகம்? அந்த மாமா உசிரோட இருந்த வரைக்கும் எனக்கு மத்தியான ஆகாரம் அங்கதான்!
   இந்த பத்து வருசம் அங்க மத்தியானம் சாப்பிட்டு இருக்கீங்களே! ஒரு முறையாவது அவங்களுக்கு ஏதாவது பழம் பிஸ்கெட் ஹார்லிக்ஸ்னு வாங்கி தந்து இருக்கீங்களா?
  மாமி யோசனையில் ஆழ்ந்தார்!
 பெரியவங்களுக்கு வேண்டாம்! அந்த பெரியவரோட பேரன் பேத்திகளுக்காவது ஏதாவது தின்பண்டம் வாங்கி கொடுத்திருக்கேளா?
     “ இல்லைடா! நான் போற நேரம் கொழந்தைங்க ஸ்கூல் போயிருக்கும்! அதுங்க திரும்பறதுக்குள்ளே வந்துருவேன்! குருக்களோட பசங்களும் அவ்வளவா பேச மாட்டாங்க!”
   “ ஒரு இன்சூரன்ஸ் ஏஜெண்டா இருந்தும் மக்களோட மனசை புரிஞ்சிக்கலையே மாமி?”
   “ மாமி! பிரதி உபகாரம் பார்க்காம உதவி செய்யற மனசு இப்ப யாருக்கும் இல்லே! நீ இதை செஞ்சா நான் அதைச்செய்வேன்கிற மாதிரி ஆகிப் போச்சு! அந்த குருக்கள் மாமா அந்தக் காலத்து மனுஷர்! எதுவும் எதிர்பார்க்காம உங்களுக்கு ஆகாரம் போட்டிருக்கார்! ஆனா அவரோட பசங்க இந்தக் காலத்து மனுஷா இல்லையா? நீங்க அவங்க கிட்ட பழகினதும் கம்மிதான்! அவங்க உங்க கிட்ட பழகினதும் கம்மி! குருக்கள் கிட்ட கிடைச்ச மரியாதையை இவங்க கிட்டேயும் எதிர்பார்த்தா கிடைக்குமா?”
    “மாமி! பிறர் குத்தத்தை காணும்போது தன் குற்றத்தையும் நினைச்சுப் பார்க்கணும்! நீங்க அந்த பசங்களுக்கு எதுவும் செஞ்சது இல்ல! அப்ப அவங்க கிட்ட எதிர்பார்க்கிறதும் தப்புதானே?”
    “வயசுல சின்னவனா இருந்தாலும் சரியா சொன்னேடா? உண்மைதாண்டா சங்கரா? நானா ஏதோ கற்பிதம் பண்ணி குருக்களாத்து பசங்களை தப்பா நினைச்சிட்டேன்! இனிமே எதிர்பார்க்கிறது போல கொடுக்கவும் செய்யனும்கிறதையும் புரிஞ்சுகிட்டேன் என்றார் மாமி.
   “ தட்ஸ் இட் மாமி! வாங்களேன் ஒரு கப் காபி சாப்பிட்டு போலாம்” என்றேன்.
   ”கட்டாயமாடா! ஆனா அது எங்காத்துல வா! நானே உனக்கு பில்டர் காபி போட்டுத் தரேன்!” என்றார் மாமி தெளிவுடன்.


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Monday, July 28, 2014

வாரமலர் இதழில் என்னுடைய ஜோக்!

வாரமலர் இதழில் என்னுடைய ஜோக்!

வணக்கம் அன்பர்களே! வலைப்பூவிலும் முகநூலிலும் என்னதான் எழுதினாலும் அச்சு ஊடகத்தில் வார மாத இதழ்களில் நம் படைப்புக்கள் அச்சேறினால் அளவிட முடியாத மகிழ்ச்சிதான். அந்த மகிழ்ச்சி எனக்கு சில முறை அரங்கேறி இருக்கிறது.
   முதன் முதலில் கோகுலம் சிறுவர் இதழில் என் படைப்பு பிரசுரம் ஆனது. பின்னர் இருபது வருடங்கள் கழித்து பாக்யா இதழில் எனது கவிதைகளும், நகைச்சுவைகளும், ஒரு கதையும் தொடர்ந்து சில இதழ்களில் வெளிவந்தது. அப்போது ஏற்பட்ட மகிழ்ச்சியும் ஊக்கமும் மீண்டும் அச்சு ஊடகங்களுக்கு எனது படைப்புக்களை அனுப்பத் தூண்டியது.
   கடந்த மே மாதம் சில ஜோக்குகளை வாரமலர் இதழுக்கு அனுப்பி இருந்தேன். அதில் ஒன்று இந்த வார வாரமலர் இதழில் பிரசுரம் ஆகி எனக்கு இன்ப அதிர்ச்சியினை அளித்தது.
  என்னுடைய 13வது வயதில் எனக்கு எழுத்து பழக்கமானது 18வது வயதில் முதல் சிறுவர் கதை பிரசுரம் ஆனது. கையெழுத்துப் பத்திரிக்கை எல்லாம் நடத்தினேன். எல்லாம் 2000 வருடம் வரை. ஆனாலும் அதன் பின்னர் என் எழுத்தில் தோய்வுநிலைதான். சில வருடங்கள் எழுதுவதை நிறுத்தி இருந்தேன். பின்னர் டியுசன் மாணவர்களுக்காக சில கவிதைகள் எழுதி கொடுப்பேன். அவர்களுக்கு பொங்கல்வாழ்த்து என்ற பெயரில் அறிவுரை கவிதைகள் எழுதினேன். அப்புறம் 2011ல் இணையப்பக்கம் வந்தபின் தான் எழுத்தை மீண்டும் சுவாசித்தேன்!
      என் படைப்புக்களை இணையம் வாயிலாக சிலராவது படிக்க முடிகிறதே என்ற மகிழ்ச்சி! நிறையபேர் படிக்க வேண்டும் என்று சில வேண்டாத முயற்சி என்று இணையப்பயணம் தொடர்ந்தது. திரு .கரந்தைஜெயக்குமார் அவர்கள் எழுதிய ஷிட்னி ஷெல்டன் வரலாறு என்னை கொஞ்சம் ஊக்கப்படுத்தியது. சாதிப்பதற்கு வயது தடையல்ல! தொடர்ந்து முயற்சி என்று ஊக்கப்படுத்தியது. என் வாழ்நாளில் ஒரு புத்தகமாகவது வெளியிட்டுவிட வேண்டும் அது நல்ல புத்தகமாகவும் அமையவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். இப்படிப்பட்ட சிந்தனைகளை உரம் போட்டு வளர்க்க பத்திரிக்கைகளில் அவ்வப்போது வரும் என் துணுக்குகளோ,கவிதை, கதைகள் உதவிக்கொண்டிருக்கின்றன. இந்த இணையப்பக்கமும் என் இலக்கிய, கதை,கவிதை ஆசைகளை தீர்த்துக் கொள்ள வடிகாலாக அமைந்துள்ளது. இதற்கெல்லாம் இந்த பக்கத்தின் வாசகர்களான நீங்கள் மிகப்பெரிய காரணிகள். உங்களின் பெருமித்த ஆதரவினால் என் எழுத்துக்கள் செம்மைப் பெற்று இன்று அச்சு ஊடகத்திலும் வெளிவந்துள்ளது. இதற்காக உங்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன்! தொடர்ந்து இந்த வலைப்பூவினை வாசித்து என் எழுத்தார்வத்தை ஊக்குவித்து வரும் அனைத்து நண்பர்களுக்கும் என் படைப்புக்களை காணிக்கையாக்கி நன்றி கூறுகின்றேன்!

    நன்றி! நன்றி! நன்றி!

தளிர் சென்ரியு கவிதைகள் 7

  தளிர் சென்ரியு கவிதைகள் 7 1. மண்ணை அள்ளினார்கள்
    வாயில் விழுந்தது
    மண்!
 
 2. வற்றிய குளங்களில்
    புதைந்தது
   விவசாயம்!

 3. விஷம் என்றெழுதி
    விற்பனை!
   விலைபோகும் இளைஞர்கள்!

  4. ஊரெல்லாம் ஒரே மாசு!
    உறக்கத்தை இழந்தாச்சு!
    நகரமென்று பேராச்சு!

  5. வெள்ளுடை வியாபாரிகள்
     விற்பனைக்கு வந்தது
      மருத்துவம்!

   6. எங்கும் இரசாயணம்!
      மங்கிப் போனது
      மனித ஆயுள்!

7.          வேகப்பந்தயம்!
விலை போனது!
 உயிர்!

8.          உச்சிக்குப் போனது விலை!
  உயர வாய்ப்பு இல்லாத
  ஏழை!

9.          மாசு உள்ளே நுழைந்ததும்
மறைந்து போனது
 மழை!

10.      ஏற்றிவிட்டார்கள்
இறங்கிப்போனது வாழ்க்கை!
பெட்ரோல்!

11.      ஆளில்லா கடவுப்பாதை!
அழித்துவிட்டது
   குழந்தைகளின் எதிர்காலம்!


12.      நீரோடு வாழ்க்கை!
நீருக்காக போராட்டம்!
தனுஷ்கோடி!

13.      கச்சத்தை தேடி
எச்சத்தை தொலைக்கிறார்கள்
மீனவர்கள்!

14.      கரையிலா பயணத்தில்
கரைந்துகொண்டிருக்கிறது
    கடலோடிகள் வாழ்க்கை!

15.      தூதுவந்த பைங்கிளி
துரத்தி வந்த சர்ச்சை!
சானியா மிர்சா!

16. மரணித்துப்போன மனிதம்
    மவுனித்துப் போன புனிதம்!
    காஸா

17. இரக்கத்தை தொலைத்தவர்கள்!
    உறக்கத்தை கலைக்கிறார்கள்!
    காஸா

18. நஞ்சுக்குத் தெரிவதில்லை!
    பிஞ்சுகளின் உயிர்!
    காஸா


 19. உறங்கிக்கிடக்கும் உலகநாடுகள்!
     உயிர்வலியில் 
     காஸா!

 20.  எல்லைக்குப் போடுகிறார்கள் வேலி!
      எத்தனையோ கடவுப்பாதைக்கு 
      இன்னும் இல்லை வேலி!
     
    

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

    

Sunday, July 27, 2014

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 66

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 66

வணக்கம் நண்பர்களே! கடந்த பகுதிகளில் காலமாற்றத்தில் பொருட்களின் பெயர்கள் எப்படி மாறுகின்றன என்று பார்த்தோம். இந்த வாரம் கொஞ்சம் இலக்கணத்தினுள் சென்று பார்க்க இருக்கிறோம்.

   நான் இலக்கிய சுவை பகிறும்போது உள்ளுறை உவமமாக சிறப்பாக பாடப்பெற்று வந்துள்ளது இந்த பாடல் என்று குறிப்பிடுவேன். அது என்ன உள்ளுறை உவமம்? அதைப்பற்றிதான் இன்று படிக்க இருக்கிறோம். உள்ளுறை உவமத்தை அறியும் முன் உவமம் என்றால் என்ன என்பதை பற்றியும் தெரிந்துகொள்ளவேண்டும். உவமானம், உவமேயம் பற்றி ஏற்கனவே இந்த பகுதியில் படித்து இருப்பீர்கள். இருந்தாலும் இப்போது மீண்டும் பார்ப்போம்.

 ஒரு கருத்தினை விளக்க இன்னொரு பொருளை ஒப்புமைப் படுத்திக் கூறுவது உவமை ஆகும். உதாரணமாக நல்ல அழகாக நிறமாக இருக்கிறாள் என்பதை ரோஜாப்பூ போல நிறமாக இருக்கிறாள் என்று சொல்வதுண்டு. இதில் ரோஜாப்பூ என்பது உவமை அல்லது உவமம் எனப்படுகிறது.

பொதுவாக உவமம்; வினை, பயன், வடிவு, வண்ணம் என நான்கு வகைகளில் பயன்படுத்தப்படும்.

சிங்கமென கர்ஜித்தான்  - வினை(செயல்)
மாரிபோல வாரி வழங்கினான் – பயன்
வஜ்ரம் பாய்ந்த கைகள்  - வடிவு
நிலவு போன்ற முகம் – வண்ணம்.

இவையெல்லாம் வெளிப்படையாக உவமையை காட்டுகின்றது. உவமை என்று உணர முடிகின்றது. இவ்வுவமைகளில் உவமானமும் உவமேயமும் இருக்கின்றது.

இந்த நான்கு வகை உவமத்தில் அடங்காது மறைந்து நின்று பொருளைத் தருகின்ற ஓர் உவமை  உள்ளுறை உவமம் என்று வழங்கப்படுகின்றது.
இந்த உவமம் தானாக வெளிப்படாது மறைந்து ஓர் பொருளை உணர்த்தும் உதாரணமாக “ஊதை தூற்றும் உரவுநீர்ச் சேர்ப்ப” நற்றிணை பாடல் வரியை எடுத்துக் கொள்வோம்.

இந்த பாடல்வரியின் பொருள்: காற்று தூற்றுகின்ற நீர்மிக்க கடற்கரைத் தலைவனே! என்பதாகும். மேலோட்டமாக இந்த பொருளை தருகின்ற இந்த வரி ஒரு செய்தியை தருகிறது. இதில் ஓர் உவமை மறைந்து கிடக்கிறது. அதை நுணுக்கமாக ஆராய்ந்து பார்த்தால்தான் பொருள் விளங்கும்.

இந்த வரியை நுணுக்கமாக பார்த்தால், கடல் கொழித்து ஒதுக்கிய பெரும் மணலில் சிலவற்றை காற்று அள்ளித் தூற்றுகிறது. அதே போல தலைவனால் ஒதுக்கப்பெற்ற தலைவியை ஊரார் அலர் தூற்றுவர் என்று பொருள்.

கடல் ஒதுக்கிய மணல்- உவமானம், தலைவனால் ஒதுக்கப்பெற்ற தலைவி- உவமேயம்.

இதில் உவமானத்திற்கு உரிய வினை, பயன், வடிவு,வண்ணம் எதுவும் அமையவில்லை. ஆனால் உவமை பயன்பட்டு இருக்கிறது.

இவ்வாறு கவிஞன் தான் கருதிய பொருளை செய்யுளில் வெளிப்படையாக கூறாமல் நுணுக்கமாக குறிப்புப் பொருளாக உள்ளே உறையும்படி வைத்து உவமையாக்கி கூறுதல் உள்ளுறை உவமம் எனப்படும்.

இலக்கிய சுவை!


உள்ளுறை உவமம் குறித்து படித்தோம் அதனால் உள்ளுறை உவமம் அமைந்த ஒரு நற்றிணைப் பாடலை படித்தால் இன்னும் தெளிவாகும் அல்லவா? இதோ!

நற்றிணை

 திணை: நெய்தல்

பாடியவர்: அம்முவனார்

துறை: தலைவன் சிறைப்புறமாக இருந்தபோது வற்புறுத்திய தோழிக்கு தலைவி எதிர் மொழிந்தது

செந்நெல் அரிநர் கூர் வாட் புண்ணுறக்
காணார் முதலொடு போந்தென,பூவே
படையொடும் கதிரொடும் மயங்கிய படுக்கைத்
தன்னுறு விழுமம் அறியா, மென்மெல,
தெறு கதிர் இன் துயில் பசு வாய் திறக்கும்
பேதை நெய்தற் பெருநீர்ச் சேர்ப்பதற்கு
யான் நினைந்து இரங்கேனாக, நோய் இகந்து,
அறனிலாளன் புகழ, எற்
பெறினும், வல்லேன்மன் –தோழி!- யானே.

துறைவிளக்கம்} நெய்தல் நிலத் தலைவன் தலைவியை பிரிந்து சென்று குறித்த நேரத்தில் வராது தலைவியை துன்பப்படுத்தி இருக்க தோழி வருந்தாதிருக்குமாறு கூறுகையில் தலைவி கூறியது

பொருள்: செந்நெல்லை அறுக்கும் உழவர் கூரிய அரிவாளால் வயலில் நெற்கதிர்களை அறுக்கும்போது நெற்கதிரோடு நெய்தல் மலரையும் அது அறுபடுமே என்று வருந்தாது சேர்த்து அறுத்துவிடுவர்.

    பேதையான அந்த மலர் அரிவாளோடும் கதிர்களோடும் கலந்து நெல்லரியில் கிடக்கும். அப்போதும் அது தனக்கேற்பட்ட துன்பத்தை அறியாது மெல்ல மெல்ல கதிரவனின் கதிர்களை கண்டதும் தன்னுடைய இனிய துயிலை விலக்கி நெல்லரியில் இருந்து தன்னுடைய பசுமையான வாயினை திறந்து மலரும். இவ்வாறான கடற்கரையை உடையவன் நம் தலைவன்.

   தோழி! நான் அவனை நினைத்து வருந்தவில்லை. குறித்த காலத்தில் வராததால் அவன் அறனிலாளன். ஆனாலும் அயலார் புகழும்படி மீண்டும் வந்தடைந்து என்னைச் சேர்ந்தால் நானும் என் நோய் நீங்கப்பெற்று அவனை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வேன்.

உள்ளுறை உவமம்:  நெய்தல் பூ நெற்கதிர் அறுப்போரால் அறுக்கப்பெற்று நெற்கதிர்களோடு அரிக்கிடையில் வாடினாலும் தன் துன்பத்தை உணராது சூரியனைக் கண்டவுடன் மலரும். அதேபோல தலைவியானவள் தலைவனை பிரிந்து துன்பம் அடைந்து படுக்கையில் கிடந்தாலும் அவற்றை கவனியாது தலைவனை கண்டவுடன் மகிழ்ச்சியோடு எழுவேன் என்பதாகும்.

என்ன ஒரு அழகிய உவமை! அன்றாடும் காணும் ஒர் காட்சியை அகப்பொருளில் மிகச்சிறப்பாக பாடிய புலவனின் திறமை வியக்க வைக்கிறது அல்லவா?


தங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் நிரப்பி ஊக்கமிடுங்கள்!  நன்றி!

மேலும் தொடர்புடைய பதிவுகள்:
Saturday, July 26, 2014

வானம் இடிந்து விழுகிறதே…! பாப்பா மலர்!

வானம் இடிந்து விழுகிறதே…! பாப்பா மலர்!


அந்த அழகான ஆற்றங்கரையோரம் உயரமாய் தென்னைமரங்கள் வளர்ந்திருந்தன. அதில் பறவைகளும் அணில்களும் கூட்டமாய் வசித்து வந்தன. தென்னை மரத்தில் இருந்து விழும் பூக்களையும் சிறு பூச்சிகளையும் தின்று வளர்ந்து வந்தது அணில்கள். அதில் ஒரு குட்டி அணில் ஒன்றும் வசித்து வந்தது. அது யார் சொல்வதையும் கேட்காது. தானாக முடிவெடுத்து திரியும். மரத்திற்கு மரம் தாவும். அந்த அணில் அப்படி தாவி தாவி வெகு தொலைவிற்கு ஒருநாள் வந்துவிட்டது.
  அப்போது வானம் இருட்டியது. மேகங்கள் கூடின. சில்லென்ற காற்று வீசியது. அந்த காற்று அப்படியே பேய்க் காற்றாக மாறியது. கருத்த மேகங்கள் ஒன்றோடு ஒன்று மோதி பெரும் இடிச்சத்தம் கேட்டது. வானில் மின்னல் பளிச்சிட்டன. இதையெல்லாம் பார்த்ததும் பாவம் மரத்தில் விளையாடிக்கொண்டிருந்த குட்டி அணிலுக்கு பயம் வந்துவிட்டது.
      அந்த அணில் இதுவரை மழை, இடி, மின்னலை பார்த்ததே இல்லை! ஏதோ விபரீதம் என்று அது நினைக்கும்போதே காற்று மிக பலமாக வீசவும் அந்த தென்னை மரத்தில் இருந்து உலர்ந்த தேங்காய் ஒன்று டமால் என கீழே விழுந்தது. அதே சமயம் பலத்த தூறல் விழவும் அணிலு மிகவும் பயந்துவிட்டது. தேங்காய் விழுந்ததை அது வானம் இடிந்து விழுகிறது என்று நினைத்துக் கொண்டது. கூரை இடிந்துவிட்டதால் ஒழுகுகிறது என்று மழைபெய்வதை நினைத்துக் கொண்டு அப்படியே பதறி வேகமாக ஓடியது.
      பொழுது இருட்டிவிட்டது. மழை,மின்னல் எல்லாம் சேர்ந்து அது மிகவும் பயந்து போய் மூச்சிறைக்க தன் இருப்பிடம் நோக்கி ஓடி வந்து கொண்டு இருந்தது. அப்போது அங்கே ஒரு ஓணான் ஒன்று வந்தது. “என்ன அணிலாரே! ஏன் வேகமாக ஓடி வருகிறீர்கள்? என்ன விசயம்?” என்று கேட்டது.
    “ஓணான் அண்ணா! பேசுவதற்கு நேரமில்லை! வானம் இடிந்துவிழுவதை என் கண்ணால் பார்த்தேன்! வானம் விழுவதற்கு பெரிதாய் சத்தம் கேட்டு வானில் விரிசல் விழுவதையும் பார்த்தேன். சற்றைக்கெல்லாம் வானம் இடிந்து விழ ஆரம்பித்துவிட்டது. இனி நாம் பிழைத்தால் போதும் என்று ஓடி வருகிறேன்! நீயும் ஓடு! அப்போதுதான் பிழைக்கமுடியும்” என்றது.
    “அப்படியா! வானம் இடிந்து விழுகிறதா? ஐயையோ! என்ன செய்வேன்! நானும் உன்னுடன்  ஓடிவருகிறேன்!” என்று ஓணானும் அணிலுடன் கலந்து கொண்டது.
     இரண்டும் தலைதெறிக்க ஓடியதை ஒரு முயல் பார்த்தது.      ‘அணில் தம்பியாரே! ஓணான் அண்ணா! எங்கே ஓடுகிறீர்கள் இப்படி?” என்று கேட்டது.
    “நீயும் ஓடிவா! வானம் இடிந்துவிழுகிறது! சீக்கிரம் ஓடி தப்பிப் பிழைப்போம்! இல்லையென்றால் அவ்வளவுதான்!”என்றது அணில்.
     “என்னது வானம் இடிந்துவிழுகிறதா? இதை பார்த்தீர்களா?”
   “ஆமாம்” என்று தலையை ஆட்டியது ஓணான்.
   “இந்த உலகத்துக்கே கூறை வானம்தானே! அது இடிந்து விழுந்தால் என்ன ஆவது? நம்மை கடவுள்தான் காப்பாற்றவேண்டும்”. என்றபடி அவர்களுடன் ஓட ஆரம்பித்தது முயல்.
    “நீ சொல்வது சரிதான்! இந்த காட்டின் மையத்தில் ஒரு காளி கோவில் இருக்கிறது அல்லவா? அங்கே போய் முறையிடுவோம்! வேகமாக போகவேண்டும்! வானம் முழுவதுமாய் இடிந்து விழுவதற்குள் அந்த கோயிலுக்கு செல்ல வேண்டும்” என்றது அணில்.
   அணில், ஓணான், முயல் மூன்றும் ஓடிவருவதை கண்டு வழிமறித்தது ஓர் குரங்கு. “எங்கே கூட்டமாய் ஓடி வருகிறீர்கள்?” என்றது.

     “குரங்கு அண்ணா! வானம் இடிந்து விழுகிறது! உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடுகிறோம்! நீங்களும் இங்கேயே நிற்காதீர்கள்! ஓடிவாருங்கள்!” என்றது முயல்.
     “என்னது வானம் இடிந்து விழுகிறதா? நீ பார்த்தாயா?”
  “நான் பார்க்க வில்லை! அணில் தம்பி தான் பார்த்தான். அவன் தான் எங்களை எச்சரிக்கை செய்து கூட்டிவந்தான்.”
    “இது உண்மையா?”
 இப்போதும் “ஆமாம்” என்பது போல தலையாட்டியது ஓணான்.
   “அப்படியானால் இந்த மரங்களில் தாவி விளையாட முடியாதா? ஐயோ? இந்த மரங்களில் சுவையான பழங்கள் இருக்குமே? இதையெல்லாம் தின்ன முடியாதா?” என்று வருந்தியது குரங்கு.
    “பழத்தை பார்த்தால் உயிர் அவ்வளவுதான்! வா! ஓடுவோம்!”
குரங்கும் அவர்களுடன் சேர்ந்து ஓடியது. அப்போது வழியில் மயில் ஒன்று சிறகை விரித்து நடனம் ஆடிக்கொண்டு இருந்தது.
      “ஏ மயிலே! வானம் இடிந்து விழுந்துகொண்டு இருக்கிறது! உனக்கு நடனம் ஒரு கேடா? ஓடு! உயிரைக் காப்பாற்றிக் கொள்!” என்றது குரங்கு.
       “என்னது வானம் இடிகிறதா?” பயத்தில் சிறகுகளை மூடிக்கொண்டது மயில்! அது கத்தியபோது இன்னும் பயங்கரமாக இருந்தது.
    அவர்களுடம் மயிலும் ஓட்டம் பிடித்தது. இப்படி இவை நான்கும் ஓடி வருவதை ஓர் குதிரை பார்த்தது. “ எங்கே ஓடுகிறீர்கள்! நில்லுங்கள் நானும் வருகிறேன்!” என்றது.
   “நிற்பதற்கு நேரம் இல்லை! ஓடிவா! வானம் இடிந்து விழுந்து கொண்டு இருக்கிறது!” கத்தியபடி ஓடின விலங்குகள்.
   என்னது வானம் இடிந்து விழுகிறதா? ஐயோ! என்ன செய்வேன்? என்று குதிரையும் அவர்களுடன் ஓடியது. அப்போது ஓர் கழுதை ஒன்று எதிர்பட்டது. “ஏய் கழுதையாரே! ஓடு உயிர்பிழைத்துக் கொள்! வானம் இடிந்துவிழுந்து கொண்டிருக்கிறது!” என்று சொல்லியபடி ஓடியது குதிரை. கழுதை அவர்களுடன் சேர்ந்து கொண்டது.
   இதற்குள் காடே பரபரப்பாகிவிட்டது. வானம் இடிந்துவிழுகிறது என்ற தகவல் எப்படியோ பரவிவிட்டது. சிங்கராஜா அரசவையை கூட்டிவிட்டார். அமைச்சர் நரியார்  “என்ன விசயம்? எதற்கு இந்த பதட்டம்?” என்று கூடி இருந்த விலங்குகளை பார்த்துக் கேட்டார்.
     “மகாமந்திரி நரியாரே! வானம் இடிந்து விழுகிறதாம்! அதனால் பயந்து போய் இருக்கிறோம்! விலங்குகள் தம்மை காத்துக் கொள்ள ஓடிக்கொண்டே இருக்கின்றன. எங்கு ஓடினாலும் வானம்தான் கூறை! நாம் எப்படி பிழைப்பது? நீங்கள்தான் உபாயம் கூறவேண்டும்!” என்றன.
  இதைக்கேட்டதும் நரியார்  ‘கலகல’வென்று சிரித்தார்.

“மந்திரியாரே! நாங்கள் உயிர்பயத்தில் இருக்கிறோம்! நீங்கள் என்னடாவென்றால் சிரிக்கிறீர்களே?” என்று கோபப்பட்டன விலங்குகள்.
    “வானமாவது இடிந்து விழுவதாவது? எந்த முட்டாள் இதை உங்களிடம் கூறியது?” என்று மேலும் சிரிக்க ஆரம்பித்தார் நரியார்.
    “அப்படியானால் வானம் இடிந்து விழாதா?”
“ அதற்கு வாய்ப்பே இல்லை! ஆமாம் இதைக் கூறி உங்களை பயமுறுத்தியது யார்?”
   அணில் தம்பிதான் இதை முதலில் கூறியது.   “எங்கே அவனை அழைத்து வாருங்கள்!”
  சில மணி நேரத்தில் அணில் அரசவைக்கு அழைத்துவரப்பட்டது. நரியார் விசாரணை செய்தார்.
“அணிலாரே! வானம் இடிந்து விழுந்ததை நீர் பார்த்தீரா?”
  “ஆமாம் மந்திரியாரே? நான் கண்ணால் பார்த்தேன்!”
“சரி அப்போது என்ன நிகழ்ந்தது? நீர் எங்கே இருந்தீர்?”
நான் காட்டில் தென் திசையில் விளையாடிக்கொண்டு இருந்தேன். திடிரென இருட்டாகிவிட்டது. காற்று பலமாக வீசியது. வானில் பெரும் சத்தம் கேட்டது. விரிசல் விட்டது. அப்புறம் கூறை பிய்ந்து  ‘டமால்’ என விழுந்தது. நான் ஓடிவந்து விட்டேன்.
       “வா! அந்த இடத்தை போய் பார்ப்போம்! அங்கு வானத்தின் சிதறல்கள் இருந்தால் நீ கூறுவதை ஏற்றுக்கொள்கிறேன்.”
  அணில் அந்த தென்னை மரத்தடிக்கு அழைத்துச் சென்றது. அங்கே வானம் இடிந்தமைக்கான அறிகுறிகள் ஒன்றும் தென்படவில்லை.
    பொழுது விடிந்து மழை விட்டிருந்தது. ஆங்காங்கே தென்னங்காய்கள் சிதறி இருந்தன. இங்கே! இங்கே! தான் வானம் இடிந்து விழுந்தது என்று அணில் சொல்லவும் மீண்டும் ஒரு தேங்காய் கீழே விழவும் சரியாக இருந்தது.

  “தொப்” என்று சத்தம் விழ அதோ அதோ விழுகிறது பாருங்கள்! நான் சொல்லவில்லை! வாருங்கள் ஓடுவோம்” அலறியது அணில்.
    “ ஏய் முட்டாள் அணிலே! விழுந்தது ஒரு தேங்காய்! இதைப்பார்த்துதான் வானம் இடிந்து விழுந்துவிட்டது என்று களேபரம் பண்ணிவிட்டாயா?”
    “ அப்படியானால் வானம் இடியவில்லையா?”
“ஏய் முட்டாள் அணிலே! இதற்குத்தான் பொது அறிவை வளர்த்துக் கொள்ளவேண்டும்! பள்ளிக்கூடத்திற்கு போகச்சொன்னால் ஏமாற்றிவிட்டு விளையாடிக்கொண்டு இருந்தாய் அல்லவா? இடி மழையை பார்த்து பயந்துபோய் தேங்காய் விழுந்ததை வானம் இடிந்துவிட்டது என்று உளறிக் கொட்டி இருக்கிறாய்? உன்னால் எத்தனைப் பேருக்கு கஷ்டம்! இனியாவது ஒழுங்காக பள்ளிக்குப் போய் படி!” என்று அணிலை கடிந்து கொண்டது நரி.
   பின்னர் விலங்குகளை பார்த்து,  “அணில்தான் அறியாமல் எதையோ சொன்னது என்றால் நீங்களும் நம்பி இப்படி பதைபதைக்கலாமா? வீணாக பயப்படாதீர்! யார் எதைச்சொன்னாலும் அப்படியே நம்பி விடக்கூடாது. அதன் உண்மையை ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஒரு ஆபத்தும் இல்லை என்று விளங்கிவிட்டது அல்லவா? போய் வேலையை பாருங்கள்” என்று சொல்லியது.
   “ ஆமாம்! ஆமாம்! சின்ன பிள்ளை பேச்சை நம்பி ஏமாந்து பதறிப்போனோமே! இனி எதையும் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும் என்று கலைந்து போயின விலங்குகள்.


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
Related Posts Plugin for WordPress, Blogger...