சங்கடங்கள் நீக்கும் சங்கட ஹர சதுர்த்தி!

சங்கடங்கள் நீக்கும் சங்கட ஹர சதுர்த்தி!


சங்கடங்கள் இல்லாத மனிதர்கள் கிடையாது. பகவான் கிருஷ்ணரே கூட நான்காம் பிறை சந்திரனை பார்த்தமையால் சியாமந்தக மணியை களவாடியதாக அபவாதம் ஏற்க நேர்ந்தது. இராமபிரான் தன்னுடைய அவதாரத்தில் பெற்ற சங்கடங்கள் ஏராளம். துன்பங்களை கடந்தால் இன்பம். இந்த துன்பங்களை கடக்க மன உறுதி அவசியம். இத்தகைய உறுதியை நமக்கு தர வல்லன விரதங்கள். அத்தகைய விரதங்களுள் சிறப்பான ஒன்று விநாயகரை குறித்து இருக்கும் சங்கட ஹர சதுர்த்தி விரதம் ஆகும்.
   சங்கடங்கள் என்றால் தொல்லை, கஷ்டம் என்று பொருள். ஹர என்றால் நீக்கும் என்று பொருள். சங்கடங்களை நீக்கும் விரதம் சங்கடஹர சதுர்த்தி விரதம் ஆகும். பவுர்ணமி கழித்த நான்காம் நாள் சதுர்த்தி ஆகும். இந்த நாளில் விநாயகரை வழிபட்டு இழந்த கலையை பெற்று விநாயகரின் முடியிலும் இடம் பிடித்தான் சந்திரன். சந்திரனின் சங்கடம் நீங்கப் பெற்றது போல நமது சங்கடங்களும் நீங்கப் பெற இந்த விரதம் இருந்து கணபதியை வணங்குதல் மரபாகி வருகிறது.
    
ஒரு சமயம் கைலாயத்தில் விநாயகர் மிக்க மகிழ்வுடன் தாளமிசைத்து ஆடிப்பாடி மகிழ்ந்து இருந்தார். அந்த சமயத்தில் அங்கே வந்த சந்திரன். விநாயகரின் தொந்தி போன்ற உருவத்தையும் முறம் போன்ற காதுகள் வயிறு குலுங்க அவர் ஆடுவதை பார்த்து பரிகசித்தான்.
    சந்திரன் எள்ளி நகையாடுவதை கண்டு கோபம் கொண்டார் பிள்ளையார். அழகன் என்ற ஆணவத்தில்  அகம்பாவத்தில் என்னை பரிகசிக்கிறாயா? உன்னுடைய கலைகள் ஒளி மங்கி தேய்ந்து போகட்டும் என்று சாபம் இட்டுவிட்டார்.

     சந்திரன் தன் தவறை உணர்ந்து உடனே மன்னிப்பு கேட்டான். எனவே விநாயகர் சந்திரனை மன்னித்து தன் தலையில் சூடிக்கொண்டார். தேய்ந்த கலைகள் படிப்படியாக வளர்ந்து பிரகாசிக்கும் என்றும் சதுர்த்தி நாளில் என்னை வழிபடுபவர்கள் உன்னை கண்ட பின் வணங்கி விரதம் முடிப்பார்கள் என்றும் வளர்பிறை நான்காம் நாள் சந்திரனை பார்த்த தோஷம் இந்த விரதம் இருப்பவர்களை பீடிக்காது என்றும் வரம் வழங்கினார்.
    சியாமந்தக மணியை அபகரித்ததாக அபவாதம் பெற்ற கிருஷ்ண பரமாத்மாவும் இந்த விரதத்தை அனுஷ்டித்து சந்திர தரிசனம் செய்து தன் அபவாதம் நீங்கப் பெற்றார். ஸ்ரீ கிருஷ்ணர் வழிபாடு செய்து, கெட்ட பெயர் நீக்கிக்கொண்டு நற்பெயர் பெற்றதை நினைவு கூறும் வகையிலும் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு முக்கியமானதாகின்றது.
பொதுவாக, நாலாம் பிறை எனப்படும் சதுர்த்தி தினத்தன்று சந்திரனைப் பார்க்கலாகாது. அவ்வாறு பார்க்க நேர்ந்தால், கீழ்வரும் மந்திரத்தைச் சொல்ல வேண்டும்.

"
ஸிம்ஹ: பிரஸேநம் அவதீத் ஸிம்ஹோ ஜாம்பவதா ஹத: ஸுகுமாரக மா ரோதீ: தவ ஹ்யேஷ ஸ்யமந்தக:" "சிங்கம் பிரசேனனைக் கொன்று இந்த மணியை அடைந்தது, அந்தச் சிங்கத்தை உன் தந்தை ஜாம்பவான் கொன்று இந்த மணியை உன்னிடம் அளித்தார்' என்பது அவள் பாடிய இந்த ஸ்லோகத்தின் பொருள்.

   வீண் அபவாதங்கள் நீங்க இந்த விரதம் அனுஷ்டிப்பது மிக நன்றாகும். சங்கடஹர சதுர்த்தி தின வழிபாட்டினால், சனி பகவானின் பார்வையால் ஏற்படும் தோஷங்களும், ஸர்வ ரோகங்கள் எனும் நோய்களும்   நீங்குகின்றன என்று புராணங்கள் கூறுகின்றன.

  கோசாரப் பலன்களை அருளும் சந்திர பகவான் விநாயகரின் அருள்பெற்றதால், சந்திர பகவானின் நற்பலனாக, நம் அன்றாட வாழ்வில் ஏற்படும் தடங்கல்கள் நீங்கும்.
செவ்வாய் பகவான் வழிபட்டதால், அங்காரக (செவ்வாய்) தோஷ பாதிப்புகள் நீங்கித் திருமணத் தடைகள் நீங்கும். நல்ல மங்கலமான நல்வாழ்வு அமையும்.
சனி பகவானின் தோஷம் நீங்குவதால், ஆயுள் அபிவிருத்தி, பதவி உயர்வு போன்றவை கிடைக்கும்.

சந்திரன், விநாயகரை நோக்கி தவம் இருந்து அவரது அருளைப் பெற்றான். சந்திரனுக்கு விநாயகர் தரிசனம் தந்தநாள் மாசி மாதம் தேய்பிறை முடிந்து 4-ம் நாள் ஆகும். அன்று செவ்வாய்க்கிழமை, இதைத்தான் நாம் சங்கடஹர சதுர்த்தி என்கிறோம். தேய்பிறைச் சதுர்த்தியில் சந்திரன் உதயமாகும் போது சதுர்த்தி திதி இருக்க வேண்டும்.

அந்த நாள் செவ்வாய்க்கிழமையாக அமைந்து விட்டால் மிகவும் சிறப்பு. அதை அங்காரக சதுர்த்தி என்பார்கள். அங்காரகனான செவ்வாய், விநாயகரை பூஜித்ததன் மூலமே நவக்கிரக நாயகர்களில் ஒருவன் என்ற பதவியை பெற்றான்.

அதனால் தான் செய்வ்வாய்க்கிழமை சதுர்த்தி விசேஷமாகச் சொல்லப்படுகிறது. சதுர்த்தியில் விரதம் இருந்து சங்கடம் நீங்கியதாலேயே இந்த விரதம் சங்கடஹர சதுர்த்தி விரதம் என்று பெயர் பெற்றது. சங்கடஹர சதுர்த்தி பற்றி கூறப்படும் இன்னொரு விளக்கம் வருமாறு:-

கஷ்டம் என்பது வறுமை, இல்லாமை என்று செந்தமிழில் சொல்லப்படுகிறது. சங்கம் என்றால் சேருதல் என்று பொருள். கஷ்டம் மனிதனின் வாழ்வில் சேருவதே (சங்+கஷ்டம்=சங்கஷ்டம்) சங்கஷ்டம் என்ற சொல்லால் குறிப்பிடப்படுகிறது. இந்த சங்கஷ்டமே பின்பு சங்கட்டமாகி கடைசியில் சங்கடமாக உருமாற்றம் பெற்று விட்டது.

சங்கடம் என்றால் இதுதான் அர்த்தம். இந்த சங்கடத்தை நீக்குவதே சங்கடஹர சதுர்த்தியாகும். பிரதிமாதமும் பவுர்ணமிக்கு அடுத்த நான்காம் நாள் சங்கடஹர சதுர்த்தியாகும். சதுர்த்தி என்றாலே நான்காவது என்றுதான் பொருள்.
  ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி கழித்த நான்காவது நாள் சங்கட ஹர சதுர்த்தி ஆகும். சில மாதங்களில் திதி அதிக நாழிகை வியாபிப்பதால் மாறி வரும். பஞ்சாங்கள், மற்றும் தின காலண்டரில் இந்த விரதம் போட்டிருக்கும்.
    இந்த நாட்களில் இவ்விரதம் அனுஷ்டித்து அருகில் உள்ள விநாயகர் ஆலயங்களில் நடைபெறும் சதுர்த்தி பூஜை, அபிஷேகங்களில் கலந்து கொண்டு கணபதியின்  அருளினை பெற்றிடுவோம்!


நாளை 17-5-14 அன்று நத்தம் ஸ்ரீ காரிய சித்தி கணபதி ஆலயத்தில் காலை 8-30 மணி முதல் 12 மணிவரை ஸ்ரீ காரியசித்தி கணபதியின் அருள் வேண்டி சங்கட நிவாரண ஹோமம், விஷேச அபிஷேகம், அலங்காரம், சஹஸ்ர நாம அர்ச்சனை முதலியவைகள் நடைபெற உள்ளது. விழாவில் கலந்து கொண்டு இறையருள் பெற்றிடுவோம்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

  1. வணக்கம் சகோதரரே
    சங்கட சதுர்த்தியில் விரதம் இருந்து சங்கடங்கள் போக்குவோம். செவ்வாய்கிழமை வரும் சதுர்த்தி பற்றிய செய்திகளையும், சுலோகங்களையும் பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. சங்கட ஹர சதுர்த்தியைப் பற்றி விரிவான விளக்கத்திற்கும், ஸ்லோகத்திற்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  3. விளக்கம் பலருக்கும் உதவும்... நன்றி...

    ReplyDelete
  4. சங்கடஹர சதுர்த்தி பற்றிய தகவல்களும் நன்று. பலருக்கு உதவும்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!