உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 55

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 55


வணக்கம் நண்பர்களே! நலமா, சென்ற வாரங்களில் தொகைநிலைத்தொடர்கள் குறித்து படித்தோம். அதில் வினைத்தொகை பண்புத்தொகைகள் குறித்து போனவாரம் படித்தோம் அதை நினைவு கூற இங்கு செல்வோம். வினைத்தொகையும் பண்புத்தொகையும்

 இந்த முறை நாம் கற்க இருப்பது தொகாநிலைத்தொடர்களை பற்றி. தொகாநிலைத்தொடர் என்றால் என்ன? பெயர்ச்சொல்லோடு பெயர்ச்சொல்லும், பெயர்சொல்லோடு வினைச்சொல்லும் சேர்ந்த இரண்டு சொற்களும் தம்மிடையே உருபுகளும் காலமும் தொகாமல் வெளிப்படையாக வந்து தொடர் அமைந்தால் அதற்கு தொகா நிலைத் தொடர் என்று பெயர்.

  நன்றாக கவனிக்கவும்! தொகைச்சொற்களில் காலமும் வேற்றுமை உருபும் மறைந்து வரும். தொகாநிலைத்தொடரில் இந்த காலமும், உருபும் மறையாமல் வெளிப்படையாக வரும்.

  மொழி கற்றான் இது தொகைநிலைத்தொடராகும் ஐ என்ற வேற்றுமை உருபு மறைந்து வந்துள்ளது.

மொழியைக் கற்றான் இது தொகாநிலைத்தொடர் ஆகும். ஐ என்ற உருபு வெளிப்படையாக வந்துள்ளது.

 தொகா நிலைத்தொடர் ஒன்பது வகைப்படும். எழுவாய்த்தொடர், விளித்தொடர், வேற்றுமைத்தொகா நிலைத்தொடர், வினையெச்சத்தொடர், பெயரெச்சத்தொடர், வினைமுற்றுத்தொடர், இடைச்சொல்தொடர், உரிச்சொல்தொடர், அடுக்குத்தொடர் என்பன அவை.

பால்வண்ணன் வந்தான்  - எழுவாய்த்தொடர்.

மயிலே நீ தூது செல்லாயோ? – விளித்தொடர்

வழியைநோக்கினான், விழியால் பேசினான் – வேற்றுமைதொகாநிலைத்தொடர்.

உண்டுகளித்தனர்- வினையெச்சத்தொடர்.

அறிந்த பெற்றோர்- பெயரெச்சத்தொடர்.

அழைத்தனர் உற்றார்- வினைமுற்றுத்தொடர்.

அம்ம வாழி-  இடைச்சொல்தொடர்

சாலப்பேசினர்-  உரிச்சொல்தொடர்

வருகவருக  - அடுக்குத்தொடர்.

பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும் அல்லாத இடைச்சொல்லும் உரிச்சொல்லும் மற்றச்சொல்லோடு சேர்ந்து வந்தாலும் ஒரு சொல்லே இரண்டாக அடுக்கிவந்தாலும் அவை தொகாநிலைத்தொடர் என்றே அழைக்கப்படும்.

இதையும் தெரிந்து கொள்வோமா?

வீரமாமுனிவர் தமிழுக்கு அமைத்து தந்த அகராதி- சதுரகராதி

தமிழின் முதல் கவிதை நாடகம்- மனோன்மணியம்

சொல்லின் செல்வர் என்றழைக்கப்படுபவர்- டாக்டர் ரா.பி. சேதுப்பிள்ளை.

முத்தமிழ் காவலர் என அழைக்கப்படுபவர்- கி. ஆ. பெ. விசுவநாதம்.

ஏட்டில் எழுதா கவிதை என்று அழைக்கப்படுவது- நாட்டுப்புறப் பாடல்கள்.

தமிழின் முதல் காப்பியம்- சிலப்பதிகாரம்

திருத்தொண்டர் புராணம் எனப்படுவது- பெரிய புராணம்.

நன்னூல் என்னும் இலக்கண நூலின் ஆசிரியர்- பவனந்தி முனிவர்.

மூவருலா பாடியவர்- ஒட்டக்கூத்தர்.

தமிழில் எழுத்து சீர்திருத்தம்  கொண்டுவந்தவர்- வீரமாமுனிவர்.

இனிக்கும் இலக்கியம்!

     குறுந்தொகை!
பாலைத்திணை – தலைவன் கூற்று.

பாடியவர்- சிறைக்குடி ஆந்தையார்.
துறை:
தலைமகன் கொண்டுதலைப் பிரிதலை மறுத்து தான் போகின்ற வழி இடைச்சுரத்தின் பொல்லாங்கு கண்டு கூறியது.

துறைவிளக்கம்: தலைமகன், தலைவியையும் உடனழைத்துச்செல்லவேண்டும் என்ற தோழியின் கருத்தை மறுத்து தான் செல்லும்வழியின் தீமையைக் கண்டு இரங்கி கூறியது.


   வேட்டச் செந்நாய் கிளைத்தூண் மிச்சில்
   குளவி மொய்த்த அழுகற் சில் நீர்
   வளையுடை கையள், எம்மோடு உணீஇயர்,
   வருகதில் அம்ம, தானே
   அளியளோ அளியள், என் நெஞ்சு அமர்ந்தோளே.

 விளக்கம்: வேட்டை நாய்கள் வேட்டையாடி முடித்து தோண்டிய பள்ளங்களில் தேங்கிய நீரை உண்டு மீதமுள்ள நீரில் காட்டுமல்லிகைப்பூக்கள் விழுந்து அழுகி இருக்கும் சிறிய நீரை, வளையல் அணிந்த கைகளை உடைய தலைவி, எம்மோடு சேர்ந்து உண்பதற்கு வருவாளாக. அவ்வாறு வந்தால் எம் நெஞ்சில் விரும்பி உறைந்திருக்க கூடிய அந்த தலைவி மிகவும் இரங்கத் தக்கவள்.

  பாலை நிலத்தில் கடுமையான வெயில் கொளுத்தும் வேளையில் நாய்கள் தோண்டி முடித்த பள்ளங்களில் அது உண்ட மிகுதியான நீரை மல்லிப்பூக்கள் விழுந்து அழுகல்வாசனையுடையதாக மாறி இருக்கும். அத்தகைய நீரை அருந்தவேண்டியிருக்கும். என் நெஞ்சில் உறையக்கூடிய காதலி இத்தகைய துன்பத்தை அனுபவிக்க நான் விடமாட்டேன் என்கிறான் தலைவன்.

   பாலை நில வர்ணணை என்னே அழகு! பாடலை மீண்டும் ரசியுங்கள்!  தொடர்ந்து பயணிப்போம்!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டம் இட்டு ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

மேலும் தொடர்புடைய இடுகைகள்:


Comments

  1. பாலை நில வர்ணணை பிரமாதம்...

    தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் தொகுப்பிற்கும் நன்றி...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!