Saturday, May 31, 2014

பலே கிழவியும் முட்டாள் திருடர்களும்! பாப்பாமலர்!

பலே கிழவியும் முட்டாள் திருடர்களும்! பாப்பாமலர்!


   வெகு காலத்திற்கு முன்னே கீரனூர் என்ற ஊரிலே ஒரு ஏமாற்றுக்காரன் வசித்து வந்தான். பிறரை ஏமாற்றிப்பிழைப்பதே அவனுக்கு வேலை. அந்த ஊரின் பக்கத்திலே மோகனூர் என்ற ஊர் இருந்தது. அங்கேயும் ஒரு ஏமாற்றுக்காரன் இருந்தான் அவனுக்கும் பிறரை ஏமாற்றுவதே குறிக்கோள் லட்சியம். இந்த இருவரும் ஏமாற்றுவதில் ஒருவரை ஒருவர் மிஞ்சி விட்டார்கள்.
  ஒரு நாள் கீரனூர் காரன் குப்பன் யாரை ஏமாற்றலாம் என்று சிந்தனை செய்து கொண்டு ஒரு தூக்குச்சட்டியில் அடியில்  சாணத்தை நிரப்பி மேலாக சாதம் சிறிதளவு பரப்பி அதை எடுத்துக்கொண்டு புறப்பட்டான். அதே சமயம் மோகனூர்காரன் சுப்பனும்  ஒரு தூக்குப்பாத்திரத்தில் அடியில் மணல் நிரப்பி மேலாக சிறிது அரிசி பரப்பி எடுத்துக்கொண்டு புறப்பட்டான்.
   இந்த இருவரும் வழியில் ஒரு சத்திரத்தில் சந்தித்தனர். குப்பனுக்கு சுப்பனை பற்றி நன்கு தெரியும். அதே போல சுப்பனுக்கும் குப்பனைப் பற்றித்தெரியும்  இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து அசட்டுச்சிரிப்பு சிரித்துக் கொண்டு அமர்ந்தனர்.
 அப்போது குப்பன், சுப்பனை பார்த்து, ”அண்ணே! உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி! எனக்குப் பசியே இல்லை! சாப்பாடு வேண்டாம் என்று சொல்லியும் என் மனைவி சாப்பாடு கட்டிக்கொடுத்துவிட்டாள். பசி இல்லை! இந்த சோறு பாழாக போகிறதே”என்று வருத்தமாக இருக்கிறது என்றான்.
   சுப்பனும், ”அண்ணே! உங்களுக்கு பசி இல்லை! ஆனால் எனக்கோ பசி காதை அடைக்கிறது! ஆனால் பாருங்கள் என் மனைவி அரிசியை கட்டிக் கொடுத்து அனுப்பி இருக்கிறாள். இதை சமைத்து நான் எப்போது சாப்பிடுவது? செத்தே போய் விடுவேன் போல!”என்று சலித்துக் கொண்டான்.
   குப்பன்,  “அப்படியானால் நாம் நம் பாத்திரங்களை மாற்றிக்கொள்வோம்! நீ சோறை எடுத்துக் கொள்! நான் அரிசியை எடுத்துக் கொள்கிறேன்! பசிக்கும் போது நான் சமைத்து உண்டு கொள்கிறேன்!”என்றான்.
   சுப்பனும் சம்மதித்து பாத்திரங்களை மாற்றிக் கொண்டான். இருவரும் எதிரெதிர் திசையில் பிரிந்து சிறிது தூரம் சென்று பாத்திரத்தை பிரித்தார்கள். சுப்பன் மடையன்! அரிசியைக் கொடுத்துவிட்டான் சாணியை வாங்கிக் கொண்டு என்று குப்பன் மகிழ்வோடு பாத்திரத்தை பிரித்தால் மேலேதான் அரிசி! உள்ளே பூராவும் மணல்! ”அடச்சீ! ஏமாந்து போனோமே ”என்று வருந்தினான். அங்கே சுப்பன், குப்பனை போல் மடையன் இருக்க முடியாது! நல்ல சோற்றை நமக்குத் தந்துவிட்டு அங்கு மண்ணை சாப்பிட்டுக் கொண்டு இருக்க போகிறான் என்று சிரித்தபடி தூக்கை கவிழ்த்தான். சாணி உருண்டைகள் விழ  “ஐயோ! என்னை இப்படி ஏமாற்றிவிட்டானே குப்பன்! ”என்று தலையில் அடித்துக் கொண்டான்.
   இப்படி வல்லவனுக்கு வல்லவனான இருவரும் ஒருநாள் மீண்டும் சந்தித்தார்கள்.  “நண்பா! இப்படி நாம் ஒருவரை ஒருவர் ஏமாற்றிக்கொள்வதை விட்டு இருவரும் சேர்ந்து யாரையாவது ஏமாற்றிப் பிழைத்தால் என்ன?”என்றான் சுப்பன்.  ”அருமையான யோசனைதான்! அப்படியே செய்வோம்! ”என்று இருவரும் ஒன்றினைந்து அடுத்த கிராமத்திற்கு போனார்கள். அது ஒரு அழகிய சோலைகள் நிறைந்த கிராமம். அங்கு  வயல்களுக்கு நடுவில் ஒரு கிழவி தனியாக வீடுகட்டி வாழ்ந்து கொண்டிருந்தாள். அவளிடம் நிறைய பணம் இருப்பதைக் கேள்விப்பட்டு அவளை ஏமாற்றி கொள்ளை அடிக்கலாம் என்று இருவரும் திட்டம் போட்டனர்.
   இருவரும் கிழவியிடம் போய் பணிவாக வணங்கி,  “பாட்டி! நாங்கள் கடுமையான உழைப்பாளிகள்! எங்கள் ஊரில் பஞ்சம்! அதனால் வேலை தேடி இந்த ஊருக்கு வந்துள்ளோம்! உங்களை பலரும் புகழ்ந்து சொன்னார்கள். உங்களிடம் வேலை செய்ய ஆசைப்படுகிறோம். எங்களுக்கு பணம் காசு வேண்டாம். உண்ண உணவும் உடுக்க உடையும் கொடுத்தால் போதும். உங்களுக்கு மாடாக உழைப்போம்! ”என்று சொன்னார்கள்.
  கிழவிக்கு இவர்களைப் பற்றி நன்கு தெரிந்து இருந்தது. இந்த பொய்யர்களை நான் நம்புவேனா? இவர்களுக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என்று முடிவு செய்தாள்.  “இளைஞர்களே! உங்கள் வரவு எனக்கு சந்தோஷத்தை தருகிறது! எனக்கு ஒரு பசுமாடு இருக்கிறது! பரமசாதுவான அதை மேய்த்து வரவேண்டும். ஒரு கால்காணி நிலம் இருக்கிறது. அதற்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். தொட்டி ஏத்தம் கட்டி ஒருவன் இந்த வேலை செய்ய வேண்டும். சுலபமான வேலைகள்தான் இந்த வேலைகளை செய்துவிட்டு வயிறாற உண்ணுங்கள்! ”என்றாள்.
   மறுநாள், குப்பன் பழைய சோற்றை தின்றுவிட்டு பசுமாட்டை ஓட்டிக்கொண்டு போனான். சுப்பன் தண்ணீர் இறைத்தான். பசுமாடு கிழவி சொன்னது போல சாதுவாக இல்லை! தும்பை அறுத்துக் கொண்டு காடு மேடெல்லாம் ஓடியது. அதனுடன் ஓடி ஓடி குப்பன் வாடிப்போனான்.
   அதே போல சுப்பன் தண்ணீரை இறைத்து இறைத்து ஓய்ந்தான். வாய்க்காலில் தண்ணீர் ஓடியதே தவிர கழனிக்கு செல்லவில்லை! வாய்க்காலில் இருந்த ஒரு சுரங்க வழியாக வேறு வயலுக்குச் சென்றுவிட்டது. மாலை வரை இறைத்தும் வயல் நனையவில்லை! சோர்ந்து போன சுப்பன் வீடு வந்தான்.  அன்று இரவு குப்பனும் சுப்பனும் தூங்கும் சமயம் பேசிக்கொண்டார்கள். குப்பன்,  “அண்ணே! என் வேலை சுலபமாக இருந்தது! மாடு பரமசாது. ஒரு தோப்பில் மேயவிட்டு படுத்து இருந்தேன்! மாலையானதும் ஓட்டிவந்தேன்! ”என்றான்.
  சுப்பனும்,  “தம்பீ! நானும் கால்காணி நிலத்தில் நீரை சிறிது நேரத்தில் பாய்ச்சிவிட்டேன்! பின்னர் அங்கிருந்த மரத்தினடியில் படுத்து தூங்கிவிட்டு மாலையானதும் வீடு வந்தேன். ”என்று அளந்துவிட்டான்.
   “ அப்படியானால் நாளை நான் வயலுக்கு நீர்பாய்ச்சுகிறேன்! நீ பசுமாட்டை மேய்! ”என்றான் குப்பன். சுப்பனும் நமட்டுச்சிரிப்புடன் ஒத்துக்கொண்டான்.
   இருவரும் இப்படி ஒருவரை ஒருவர் ஏமாற்றிக்கொண்டது அறியாமல் பசுமாட்டை ஓட்டிக்கொண்டு சுப்பனும் வயலுக்கு நீர்பாய்ச்ச குப்பனும் சென்றார்கள். மாடு அறுத்துக்கொண்டு ஓட, வயலில் நீர் பாயவில்லை! அன்று இரவு ஒருவரை ஒருவர் சாடிக்கொண்டார்கள்.
   “ சரி! சரி! நம்மை நாமே ஏன் ஏமாற்றிக்கொள்ளவேண்டும்! நம்மை ஏமாற்றிய இந்த கிழவியை பழிவாங்க வேண்டும். இவளை ஏமாற்றி இவளிடம் உள்ள பணத்தை பறித்துக்கொண்டுபோய் பங்கிட்டு கொள்வோம்! ”என்றான் சுப்பன். இதை கேட்டுக்கொண்டு இருந்தாள் அந்த கிழவி.
   மறுநாள் குப்பனும் சுப்பனும் காலையில் வேலைக்கு போனதும் தன்னிடம் உள்ள நகைகளையும் காசுகளையும் வெள்ளிச்சாமான்களையும் ஒரு பானையில் போட்டு ஓர் இடத்தில் புதைத்து வைத்தாள். ஒரு பெரிய இரும்பு பெட்டியில் ஓட்டுத்துண்டுகளையும் செங்கற் கருங்கற் சல்லிகளையும் நிரப்பி மேல் மூடி வைத்து பூட்டி ஒரு துணியால் கட்டி வைத்தாள்.

     மாலையில் குப்பனும் சுப்பனும் வீடு திரும்பினர். கிழவி அவர்களுக்கு நல்ல உணவு போட்டு உபசரித்தாள். பின்னர்,  “அருமைப் பிள்ளைகளே! நீங்கள் என்னிடம் வந்தது எனக்கு பெருமகிழ்ச்சி! நான் இறந்தபிறகு என் செல்வங்கள் அனைத்தும் உங்களுக்குத்தான். எனக்கு வேறு வாரிசோ சந்ததியோ கிடையாது. எல்லாமே உங்களுக்குத்தான். இதோ இந்தப் பெட்டியில் நான் சம்பாதித்து வைத்த சொத்துக்கள் இருக்கின்றன. இந்த காட்டில் திருடர் பயம் அதிகம் ஆகிவிட்டது. ஆதலால் இந்த பெட்டியை நமது கிணற்றில் இறக்கிவிடுங்கள். இது ரகசியமாக இருக்கட்டும்! யாருக்கும் தெரிய வேண்டாம். எனக்குப்பிறகு நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்! ”என்றாள்.
   கிழவி தானாக வந்து வலையில் விழுந்தாள் என்று இருவரும் உள்ளூற மகிழ்ந்து ”அப்படியே ஆகட்டும் அம்மா! ”என்று அந்த பெட்டியை தூக்கமாட்டாமல் தூக்கிச்சென்று கிணற்றில் இறக்கிவிட்டார்கள். அன்று இரவு கிழவி தூங்கியதும், குப்பன் சுப்பனை அழைத்து, இதைவிட நல்ல சமயம் கிடைக்காது! கிழவி தூங்குகின்றாள். கிணற்றில் இருக்கும் பெட்டியை எடுத்துக்கொண்டு ஓடிவிடுவோம்! சரியா? என்று கேட்டான்.
   சுப்பன் ஒத்துக்கொண்டான். குப்பன் கிணற்றுக்குள் இறங்க சுப்பன் மேலிருந்து கயிறை விட்டான். குப்பன் கிணற்றில் உள்ளே இறங்கி பெட்டியை திறந்து பார்த்தான். அவ்வளவும் ஓட்டுச்சில்லுகளும் சல்லிக் கற்களும்!  “அடி பொல்லாத கிழவியே என்னை ஏமாற்றிவிட்டாயே! ”என்று மெல்ல தனக்குள் சொல்லிவிட்டு பெட்டியில் இருந்த கற்களை எடுத்து விட்டு அதனுள் அமர்ந்துகொண்டு மூடியை மூடிவிட்டான்.
  சுப்பன் பெட்டியை மேலே இழுத்தான். பெட்டி மேலே வந்தது. குப்பன் கிணற்றின் உள்ளேயே இருக்கட்டும். அவன் மேலே வருவதற்குள் இந்த பெட்டியைத் தூக்கிக்கொண்டு ஓடிவிட வேண்டும் என்று குப்பனை ஏமாற்ற நினைத்து பெட்டியை தூக்கமுடியாமல் தூக்கிக்கொண்டு ஓடினான் சுப்பன்.
   ரொம்பதூரம் ஓடிய பின் இனி குப்பன் வரமாட்டான் என்ற தைரியத்தில்  “அந்த மடையன் குப்பனை ஏமாற்றிவிட்டேன்! இந்த பணம் முழுதும் எனக்குத்தான்” என்று உரக்கக் கூறினான்.
  அப்போது பெட்டிக்குள்ளிருந்து,  “தம்பி சுப்பா! நீயா என்னை ஏமாற்ற முடியும்! நான் தான் உன்னை ஏமாற்றினேன்! ”என்று சொன்னான் குப்பன்.
   சுப்பன் அதிர்ந்து பெட்டியைக் கீழே இறக்கினான். அதனுள் இருந்து குப்பன் வெளிப்பட உடன் சில கற்கள் மட்டுமே பெட்டியில் இருப்பதை கண்டு சுப்பன் அதிர்ச்சியுற்றான்.
    “அடே! சுப்பா! நம் இருவரை விட அந்த கிழவி பலே ஏமாற்றுக்காரி! பெட்டியில் கற்களை போட்டு ஏமாற்றிவிட்டாள்” என்று விழுந்து விழுந்து சிரித்தான் குப்பன்.
     சுப்பன்,  “நண்பா! ஒருவரை ஒருவர் ஏமாற்றி வாழ்ந்தது போதும்! அந்த கிழவி நமக்கு சரியான பாடம் கற்றுக்கொடுத்தாள். இனியாவது உழைத்து வாழ்வோம் ”என்றான்.
    “உண்மைதான் நண்பா! இனி உழைத்து பிழைப்போம்!”என்று குப்பனும் ஆமோதித்தான்.
  அதுமுதல் இருவரும் பிறரை ஏமாற்றுவதை விட்டு உழைத்து வாழ ஆரம்பித்தனர்.


செவிவழிக் கதை தழுவி எழுதியது)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Friday, May 30, 2014

அட்சராப்பியாசம் அளிக்கும் இன்னம்பூர் எழுத்தறிநாதர்!

அட்சராப்பியாசம் அளிக்கும் இன்னம்பூர் எழுத்தறிநாதர்!


இன்னும் ஒரே வாரத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பிள்ளைகளை பள்ளியில் சேர்த்து நன்கு படிக்க வேண்டும் என்று ஆயத்தப்படுத்தாத பெற்றோர்களே இல்லை. கேரளாவில் கோவில்களில் விஜயதசமி அன்று குழந்தைகளுக்கு அட்சராப்பியாசம் என்னும் நெல்லில் எழுத்து எழுதவைக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது உண்டு. இந்த மாதிரி வழக்கம் தமிழக கோயில்களில் இப்போது நடைபெறுவதாகத் தெரியவில்லை.
      இந்த அட்சராப்பியாசம் நிகழ்ச்சி கும்பகோணம் அருகில் உள்ள இன்னம்பூர் எழுத்தறிநாதர் கோவிலில் வருடம் தோறும் நடைபெறுகிறது. புதிதாக பள்ளியில் சேர உள்ள குழந்தைகள் இந்த கோவிலுக்கு வந்து எழுத்தறிநாதரை அர்ச்சனை செய்து வணங்கி நெல்லில் எழுதி பழகுகின்றனர். ஐந்து வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு செம்பருத்திப் பூவை தட்டில் பரப்பி எழுத பயிற்சி தரப்படுகிறது.

    பேச்சுத்திறமை இல்லாதவர்கள் படிப்பறிவு இல்லாதவர்களுக்கு நாக்கில் நெல் கொண்டு எழுதப்படுகிறது. இதனால் அறிவுக் கூர்மை பெறுவார்கள் என்ற நம்பிக்கை இந்தப்பகுதியில் காணப்படுகிறது.

   தல வரலாறு:  சோழமன்னரிடம் கணக்கராக பணியாற்றிவர் சுதன்மன் என்ற சிவபக்தர். அவரை பிடிக்காதவர்கள் அவரைப்பற்றி இல்லாததையும் பொல்லாததையும் மன்னரிடம் கூறி கோள் மூட்டினர். இதனால் மன்னருக்கு சுதன்மர் எழுதிய கணக்கில் சந்தேகம் ஏற்பட்டது. உடனே சுதன்மரை அழைத்து உரிய கணக்கை சரியாகக் காட்டும்படி கடுமையாக உத்தரவிட்டான்.
     சிவபக்தரான சுதன்மர், உரிய கணக்கு காட்டியும் மன்னன் நம்பவில்லையே! வீண்பழி ஏற்படுகிறதே! என்று சிவனிடம் வருந்தி முறையிட்டார். உடனே, சிவன் சுதன்மரின் வடிவத்தில் மன்னரிடம் சென்று கணக்கை காட்டி மன்னனின் சந்தேகத்தினை நீக்கிவிட்டார். பின்னர் சிறிது நேரத்தில் சுதன்மர் கணக்குடன் மன்னரை சந்திக்க சென்றார். அப்போது மன்னன், சுதன்மரே! இப்போதுதான் கணக்குக் காட்டிச்சென்றீர்! மீண்டும் ஏற்கனவே காட்டிய கணக்கை ஏன் காட்ட வருகிறீர் என மன்னன் கேட்டான்.

   அப்போது தான் இப்போதுதான் வருவதாகவும், இதுவரை இறைவன் சன்னதியில் இருந்ததையும் சுதன்மர் சொல்ல, வந்தது இறைவனே என்று மன்னன் உணர்கிறார். சுதன்மரின் இறைபக்தியை உணர்ந்த மன்னன் அவரிடம் மன்னிப்பு கேட்டதோடு சிவனுக்கு பெரிய கோவிலையும் எழுப்பினான்.
   சுதன்மர் வழிபட்ட ஈசன் சுயம்பு லிங்கம். எனவே தான் தோன்றீசர் என்று வழங்கப்பட்டது. இறைவன் சுதன்மர் வடிவில் வந்து கணக்கு காட்டியமையால் எழுத்தறிநாதர், அட்சரபுரிஸ்வரர் என்ற நாமங்களும் ஏற்பட்டன.

   அகத்தியருக்கு இறைவன் இலக்கணம் உபதேசித்த தலம் என்பதாலும் இந்த பெயர் வந்தது என்றும் சொல்கின்றனர். இங்கு இரண்டு இறைவிகள். கொந்தார் குழலம்மை என்னும் சுகந்த குந்தளாம்பாளும் நித்திய கல்யாணி அம்மனும் இரு தனி  சன்னதிகளில் அருள் பாலிக்கின்றனர்.
    சூரியன் இந்த தலத்தில் வழிபட்டு அதிக ஒளியைப் பெற்றதாக ஒரு வரலாறும் உண்டு. சூரியனுக்கு “இனன்” என்ற பெயர் உண்டு. இறைவனை சூரியன் நம்பி வழிபட்டதால்  ‘இனன் நம்பு ஊர்’  என்று பெயர். காலப்போக்கில் ‘இன்னம்பூர்’ என்று மாறிவிட்டது.

   இத்தலத்து இறைவன் மீது சூரியன் வழிபாடு இன்றும் நடக்கிறது. லிங்கம் மீது ஆவணி 31, புரட்டாசி 1,2 மற்றும் பங்குனி 13,14, 15 தேதி காலையில் சூரியனின்  கதிர்கள் விழுகிறது. 

ஆலயம் திறக்கும் நேரம்: காலை 7 -12 மணி மாலை 4-8 மணி

செல்லும் வழி: கும்ப கோணத்திலிருந்து திருப்புறம்புயம் செல்லும் ரோட்டில் 8 கி.மீ தூரத்தில் இன்னம்பூர் உள்ளது.
தொடர்புக்கு: 96558 64958.
Thursday, May 29, 2014

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 5

ஜோக்ஸ்!


1.      மூணு வருசமா டிமிக்கி கொடுத்திட்டு இருந்த ஒரு திருடனை மடக்கி பிடிச்சிட்டீங்களாமே அப்புறம்?
அப்புறம் என்ன? மூணு வருஷ மாமூலெல்லாம் வாங்கிட்டப்புறம்தான் விட்டோம்!

2.      அந்த டாக்டர்கிட்ட போனா டெஸ்ட் பண்ணி பார்க்கமா மருந்தே கொடுக்க மாட்டாரு!
     நல்ல விசயம்தானே!
   அட! நீவேற  அவர் டெஸ்ட் பண்றது பேஷண்டோட பர்ஸை!

3.      மன்னர் எதற்கு திடீரென மொட்டைப் போட்டுக் கொள்கிறார்?
எதிரி மன்னன் அவரது முடியை இறக்கிவிடுகிறேன் என்று சவால்விட்டானாம்.

4.      தலைவர் எதுக்கு போலீஸ் ஸ்டேஷன் போறார்?
வாக்கு வங்கி தொலைஞ்சி போச்சுன்னு கம்ப்ளைண்ட் பண்ணப்போறாராம்!


5.      எங்க வீட்டுல நான்    கண் அசைச்சா போதும் சாப்பாடு ரெடியாயிடும்!
எங்க வீட்டுல நான் மாவாரைச்சா போதும் சாப்பாடு ரெடியாயிரும்!

6.      தலைவர் ஏன் பதவி ஏற்பு விழாவை புறக்கணிக்கிறதா அறிக்கை விடறார்?
அவருக்கு அழைப்பே வரலைங்கிறதை சமாளிக்கத்தான்!

7.      தலைவர் எதுக்கு இப்ப கூட்டணி தர்மம் பற்றி பேசறார்?
ஒரு மினிஸ்டர் போஸ்டாவாது தர்மமா கிடைக்காதாங்கிற நினைப்புலதான்!

8.      அந்த மினிஸ்டரோட பொறுப்பை ஒவ்வொன்னா குறைச்சு அப்புறம் பதவியை பிடுங்கினாங்களே ஏன்?
அவரு படிப்படியா முன்னேறினவராம்! படிப்படியா இறக்கிவிடுறாங்க!


9.      சாந்தியைத்தேடிப்போனாரே ஆன்மீக குரு கிடைச்சுதா?
சாந்தி கிடைக்கலை வசந்தி தான் கிடைச்சாங்க!

10.  சரக்கடிச்சுட்டு நீங்க பேசறப்ப ஒரே வெறுப்பா வருதுங்க!
நான் சரக்கடிக்காம இருக்கிறப்ப நீ பேசறது எனக்கு கடுப்பா இருக்கே!

11.  துரத்தி துரத்தி ஒரு பொண்ணை லவ்பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டியே எப்படி இருக்கே?
இப்ப அவ என்னை விரட்டி விரட்டி அடிக்கிறாப்பா!

12.  அவர் ஏன் கல்யாணத்துக்கு பூச்சி மருந்து டப்பாவோட போறார்?
கல்யாணங்கிறது ஆயிரங்காலத்து பயிர்னு யாரோ சொன்னாங்களாம்!

13.  தலைவர்  அண்டர்கிரவுண்ட்ல வீடு கட்டியிருக்கார் தெரியுமா?
    சுரண்டி சம்பாரிச்சு கட்டுன வீடுன்னு சொல்லு!


14. மன்னரின் வாள் எடை ஐந்து கிலோவாமே?
   எப்படித்தெரியும்?
   பேரிச்சம் பழக் கடைக்காரன் சொன்னான்!

  15. மந்திரியாரே! மனம் உளைச்சலாக இருக்கிறது!
ராணியாருடன் உல்லாசப்பயணம் சென்றுவருகிறீர்களா மன்னா?
  வெந்தபுண்ணில் வேலைப்பாய்சாதீர்கள் மந்திரியாரே!

16. உங்க பொண்ணுக்கு பார்த்திருக்கிற மாப்பிள்ளை பிரதமர் ஆகிறதுக்கும் வாய்ப்பு இருக்கு!
   அடடே!அரசியல் வாதியா?
 இல்லே ஸ்டேஷன்ல டீ விக்கிறவர்!

17. தலைவருக்கு வரின்னாலே சுத்தமா பிடிக்காது!
  அதுக்காக முகவரிக்கு வரிவிலக்கு அளிக்கணும்னு அறிக்கை விடறது கொஞ்சம் கூட நல்லா இல்லை!

18. வாங்கின கடனை கேட்டா ஏம்ப்பா இவ்வளோ சில்லறையை கொண்டுவரே!
  நீங்கதானே நாணயமா திருப்பித்தரணும்னு சொன்னீங்க!

19. நம்ம தலைவர் சுத்த சைவம்!
   அதுக்காக ஜாமீனை கூட வேணாம்னு சொல்றது நல்லா இல்லை!


 20 டாக்டர் என் உடம்புல  இருக்கிற காயத்தை பார்த்தா உங்களுக்கு என்ன தோணுது?
உங்க வீட்டுபூரிக்கட்டை நல்ல வெயிட்டுன்னு தோணுது!

21.      ஏரியாவில் க்ரைம் ரேட் குறைஞ்சு போனதுக்கு போலீஸ் வருத்தப்படுதா ஏன்?
அவங்க மாமூல் ரேட்டும் குறைஞ்சு போவுது இல்லே!

22.      எங்க வீட்டுல சண்டையில எப்பவும் மனைவியோட கைதான் ஓங்கி இருக்கும்!
எங்கவீட்டுல என்னோட முகமும் வீங்கி  இருக்கும்!

23.      மன்னர் ஏன் திடீர்னு பிச்சைப்பாத்திரம் ஏந்தி வந்தேன்னு பாடறாரு?
அரண்மனை கஜானா காலியானதை சிம்பாலிக்கா சொல்றாராம்!

24.      அன்பே கல்யாணத்துக்கு இப்ப என்ன அவசரம்? ரெண்டுமாதம் தள்ளிப்போடலாமே!
    ரெண்டுமாசம் தள்ளிப்போனதாலதான் அவசரப்படறேன்!

25.      ஏர் ஹோஸ்டல் பிகரை கரெக்ட் பண்ணியே என்ன ஆச்சு?
    அவள் பறந்து போயிட்டா!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
   

Wednesday, May 28, 2014

மோடி தர்பார்! கதம்பசோறு பகுதி 37

கதம்பசோறு பகுதி 37

மோடியின் பதவியேற்பு:


    நாட்டின் பதினைந்தாவது பிரதமராக திங்களன்று பொறுப்பேற்றுக்கொண்டார் நரேந்திர தாமோதர் மோடி. ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்து படிப்படியாக உயர்ந்து பிரதமரான அவருக்கு முதலில் வாழ்த்துக்கள். பத்தாண்டு கால ஆட்சியில் காங்கிரஸ் நாட்டை சீர்குலைத்ததை சீர்படுத்த சில மாதங்கள் அவருக்கு பிடிக்கலாம். அதுவரை குறை சொல்வதை தவிர்த்து அவர் என்ன செய்கிறார் என்பதை உற்று நோக்குவதே விமர்சகர்கள் மாற்றுக்கட்சியினரின் கடமை. மோடி பதவியேற்கும் முன்னரே சர்ச்சை ஆரம்பித்துவிட்டது. சார்க் நாடுகளின் தலைவர்களை குறிப்பாக ராஜபக்‌ஷேவையும் நவாஸ் ஷெரிப்பையும் அழைத்தமைக்கு  கூட்டணிக் கட்சிகளிடம் இருந்தே எதிர்ப்புக்கள். இவை எதையும் மோடி காதில் வாங்கிக் கொள்ளவில்லை! தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்தார். சில சுயலாபங்களுக்காகத்தான் இவர்களை வரவழைத்தார் என்று இணையத்தில் தகவல்கள் பரவுகின்றன. அதில் எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை. எப்படியோ இந்த இரு நாட்டு தலைவர்களை அழைத்ததில் அந்த நாட்டு சிறையில் இருந்த மீனவர்கள் பலர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் பிடிக்கவில்லை என்றால் அவர்மீது தொடர்ந்து மோதல் போக்கை கை ஆள்வது சிறந்த ராஜ தந்திரம் ஆகாது. உணர்ச்சிவசப்பட்டு அரசியல் செய்யும் வைகோ இதை உணரவேண்டும். ஈழத்தாய் அவதாரம் எடுத்த ஜேவும் இந்த ராஜபக்‌ஷே அழைப்பை எதிர்த்தார். இதே அம்மாதான் போர் என்றால் உயிரிழப்பு சகஜம் என்று அப்போது அறிவித்தவர். அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா! இன்று பிரிந்தவர் நாளைக் கூடிக்கொள்வர். இது தமிழக திராவிடக் கட்சிகளின் அரசியலை பார்த்து வளர்ந்து வரும் நமக்கு நன்றாகவேத் தெரியும். ஆனாலும் இது மாதிரி செய்திகள்தான் நம்மை சுவாரஸ்யப்படுத்தி அன்றைய பொழுதை ஓட்டச் செய்கின்றன. நாம் வளர்ந்த விதம் அவ்வாறு போலும்.

பத்தாம் வகுப்பு ரிசல்ட்!


   இந்த வருட பத்தாம் வகுப்பு ரிசல்ட் மிகப் பிரமாதமாக அமைந்துவிட்டது. இது கல்விமுறையின் வெற்றியா தோல்வியா என்றெல்லாம் ஆராயாமல் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதலில் வாழ்த்துக்கள். இனி ஆராய்ச்சிக்குள் வருவோம். மாநில அளவில் 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தோர் 19 பேர். இரண்டாம் இடமான498 மதிப்பெண்கள் 125 பேர் எடுத்துள்ளனர். மூன்றாம் இடம் 497 மதிப்பெண்கள் 321 பேர். இது நமது கல்வி முறையின் வளர்ச்சியை காட்டுகிறதா? என்னைப் பொறுத்தவரையில் சீரழிவைத்தான் காட்டுகிறது. முதல் மதிப்பெண் என்பது நான் படிக்கும் காலத்தில் 460லிருந்து 470 ஐத் தாண்டாது. பள்ளி அளவில் 440 முதல் 450 மதிப்பெண்கள் பெறுவதே பெரும் சாதனையாக இருந்தது. இப்போது சர்வ சாதாரணமாக 499 மதிப்பெண்களை 19 பேர் எடுக்கிறார்கள் என்றால் மதிப்பெண்கள் அள்ளி வீசப்படுகிறது என்றுதானே அர்த்தம். இப்படி எடுத்த மதிப்பெண்கள் புரிந்து படித்து எடுத்தவையா மனப்பாடம் செய்து எடுத்தவையா? என்றும் யோசிக்கவேண்டும். ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பெயில் இல்லை என்று ஆகிய நிலையில் பத்தாம் வகுப்பில் நிறைய பேர் தமிழ் எழுதவே தடுமாறிக் கொண்டு வருவார்கள். இந்த நிலையில் அங்கு கடினமான வினாத் தாள் அமைத்தால் பாதிபேருக்கும் மேல் பெயில் ஆகவேண்டியிருக்கும். ஆகவே சாறை பிழிந்து எடுத்த சக்கையாகவே பாடத்திட்டம் அமைத்து  அதிலும் ஒவ்வொரு பாடத்திற்கு பிராக்டிகல் மதிப்பெண் கொடுத்து கல்வி முறையை அழித்து வருகிறார்கள். மொழிப்பாடங்களில்தான் அதிகம் பேர் தோற்று இருக்கிறார்கள். இதை விவாதிக்க ஒரு தனிப்பதிவே எழுத வேண்டும். சமச்சீர் கல்வி சமச்சீரான வெற்றியை மேம்போக்காக தந்திருக்கிறது என்று மட்டுமே சொல்லவேண்டும்.

ஐ.பி.எல் அதிசயம்!


    ஐ.பி.எல் போட்டிகளில் சூதாட்டம் என்று தெரிந்த பின் போட்டிகளை பார்ப்பதை தவிர்த்துவிட்டேன். செய்தித் தாள்களில் மறுநாள் போட்டி விவரம் படித்து தெரிந்துகொள்வேன். முன்பு போல அதீத ஆர்வம் குறைந்துவிட்டது. ஓவ்வொரு வருடமும் ஒரு அதிசயம் ஐ.பி. எல்லில் நிகழும். இந்தவருடம் தொடக்கம் முதல் பஞ்சாப் அசத்தி வர மும்பை சொதப்பி வந்தது. தொடர்ச்சியாக ஐந்து போட்டிகள் தோற்ற அது எப்படியோ மீண்டு புள்ளிகளில் முன்னேறி வர ராஜஸ்தானுடனான போட்டியில் 13.4 ஓவர்களில் வெற்றி இலக்கு 190-ஐ எட்ட வேண்டும் என்ற கடின இலக்கில் களம் இறங்கி சரியாக 189 ரன்களை எடுத்து டை செய்த நிலையில் ராஜஸ்தான் பெருமூச்சு விட்டனர். ஆனால் நடுவர்கள் இன்னும் ஆட்டம் முடியவில்லை! அடுத்த பந்தில் பவுண்டரி அடித்தால் மும்பை அடுத்த சுற்றுக்கு செல்லும் என்று சொல்ல ராஜஸ்தான் அணிக்கு தலையில் இடிவிழுந்தது. பால்க்னர் வீசிய புல்டாசை சிக்ஸ் அடித்து மும்பையை அடுத்த எலிமினேட்டர் சுற்றுக்கு கொண்டு சென்றுவிட்டார் ஆதித்ய தாரே! எதற்கும் உணர்ச்சி வசப்படாத டிராவிட்டே அன்று தோற்றபோது உணர்ச்சிவசப்பட்டு தன் தொப்பியை தூக்கி எறிந்தாராம். இதெல்லாம் செய்திகளில் படித்தேன். இதன் மூலம் போட்டிகள் முன்னரே முடிவு செய்யப்படுகின்றன என்று உறுதியாகவே தெரிகின்றன. இந்த கோமாளித்தனமான போட்டிகளின் மூலம் இந்திய அணிக்கு ஆள் தேர்வு செய்யப்படுவது அதைவிட கோமாளித்தனம். கோடிகள் புரளும் கிரிக்கெட்டில் இதெல்லாம் சகஜம் ஆகிவிட்டது. இன்று எலிமினேட்டரில் சென்னை தோற்றாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை! பார்ப்போம்.

நாட்டின் முதல் பெண் வெளியுறவு அமைச்சர்!


    ஏற்கனவே பல முதல்களுக்கு சொந்தமானவர் சுஷ்மா சுவராஜ். இந்தியாவின் முதல் பெண் வெளியுறவு அமைச்சர் என்ற சாதனையும் தமதாக்கிக் கொண்டார். மிகவும் அனுபவம் வாய்ந்தவர்களுக்கு வழங்கப்படும் இந்தியாவின் மூன்றாவது உயரிய பதவி இது. அதை எளிதாக தனதாக்கிக் கொண்டார் சுஷ்மா. இந்தியாவில் அவருக்கு சவால்கள் நிறைய காத்து இருக்கின்றன. சுஷ்மா அதை சமாளித்துக் காட்டுவார் என்று எதிர்ப்பார்ப்போம். 25 வயதில் அரியானா மாநில அமைச்சரவையில் முதல் இளம் பெண் அமைச்சராகிய அவர் டெல்லியின் முதல் பெண் முதல்வர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர். அத்வானிக்கு நெருக்கமான தலைவராக  சுஷ்மா கருதப்படுகிறார். அத்வானியை சாந்தப்படுத்த சுஷ்மாவுக்கு வெளியுறவுத்துறை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. பாகிஸ்தாந் சீனா- இலங்கை என நமது அண்டை நாடுகளுடம் பிரச்சனைகள் உருவெடுத்துள்ள நிலையில் இவர் இதை எப்படி கையாளப்போகிறார் என்று இந்தியாவே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

எவரெஸ்டில் கால்பதித்து ஆந்திர சிறுமி சாதனை!


   ஆந்திர மாநில சமூகநலத்துறை விடுதியில் தங்கி படிக்கும் பூர்ணா ஸ்வேரோஸ் என்ற பதிமூன்றுவயது சிறுமியும் உடன் படிக்கும் ஆனந்த என்ற பதினாறுவயது சிறுவனும் ஞாயிற்றுக்கிழமையன்று காலை ஆறுமணி அளவில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி நமது கொடியை நட்டனர். மொத்தம் 52 நாட்கள் பயணம் செய்த இவர்கள் இந்த சாதனையை பூர்த்தி செய்தனர். பிரான்ஸ் மலைப்பயிற்சி குழுவினர் இவர்களுக்கு பயிற்சி அளித்தனர். பூர்ணாவின் தாய் லட்சுமி கூலித்தொழிலாளி. ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் இவர் எவரெஸ்டில் ஏறிய மிகக் குறைந்த வயதுடையவர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்த இருவருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. தளிர் தளமும் அவர்களுக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

என் நூலகம்!
    நீங்கள் விரும்புவது எதுவானாலும் அதை அடைவது எப்படி?டாக்டர் எம். ஆர் காப்மேயர் எழுதி குமுதம் ஆசிரியர் குழுவினர் தமிழ்ப்படுத்தி குமுதத்தில் தொடராக வந்த நூல் இது. கண்ணதாசன் பதிப்பகத்தார் இப்போது நூலாக வெளியிட்டுள்ளனர். சுயமுன்னேற்ற கருத்துக்கள் நிரம்பிய இந்த நூலை நிறைய பேர் வாசித்திருப்பார்கள் என்றே நினைக்கிறேன்! குமுதத்தில் தொடராக வந்த போதே நிறைய பாராட்டுக்கள் பெற்ற தொடர் அது. 408 பக்கங்கள் கொண்ட இந்த நூலின் இருபத்தோராம் பதிப்பை நான் படித்தேன். அது 2006ல் வெளியானது. இப்போது மேலும் சில பதிப்புக்கள் கண்டிருக்கலாம்.
  நீங்கள் வெற்றிபெறவே பிறந்திருக்கிறீர்கள் என்று சொல்கிறார் முதல் அத்தியாயத்திலேயே ஆசிரியர். வெற்றி என்பது நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதை பொறுத்து அல்ல வெற்றிக்கான வழிமுறைகளை பயன்படுத்தி என்ன செய்கிறீர்கள் என்பதை பொறுத்தே இருக்கிறது என்று அடுத்த அத்தியாயத்தில் சொல்லுகிறார். இப்படி ஒவ்வொரு அத்தியாயமும் சுவையாக எளிமையாக புரியும் படி அமைந்திருக்கிறது. சிறப்பான சுய முன்னேற்ற நூல். வாங்கி படிக்கலாம்.

டிப்ஸ்! டிப்ஸ்! டிப்ஸ்!

புதினாவை தயிரில் சேர்த்து அரைத்து தொடர்ந்து முகத்தில் பூசி வந்தால் முகம் பளிச்சிடும்.

காய்ந்த எலுமிச்சைத் தோலை அலமாரியில் போட்டு வைத்தால் பூச்சி வராது.

பீன்ஸ், அவரை போன்ற காய்களை வேக வைக்கும் போது எலுமிச்சை, தக்காளி ஜூஸ் சிறிது பிழிந்தால் சீக்கிரம் வெந்துவிடும்.

தயிர் நீண்ட் நேரம் புளிக்காமல் இருக்க ஒரு தேங்காய் பத்தையை தயிரில் போட்டுவைத்தால் இரண்டுநாட்கள் தயிர் புளிக்காமல் இருக்கும்.

பூந்தொட்டியில் ரோஜாச்செடியை நடும்போது அத்துடன் இரண்டு சிறிய வெங்காயத்தை ஊன்றி வைத்தால் பூச்சிகள் செடியை அரிக்காமல் பாதுகாக்கும்.

அரை வாளித் தண்ணீரில் நான்கு மேஜைக்கரண்டி வினீகரை கலந்து ஜீன்ஸ் துணிகளை அலசினால் சாயம் போவதை தடுக்கலாம்.
கிச்சன் கார்னர்.

  கூல் டொமேட்டோ குக்கூம்பர்!தேவையான பொருள்கள்: நாட்டுத் தக்காளி 4 வெள்ளரிக்காய் சிறியது 1 மிளகுத் தூள், உப்பு தேவையான அளவு, புதினா இலைகள் சிறிது.
   செய்முறை: தக்காளியை மிக்சியில் அரைத்து வடிகட்டிக் கொள்ளவும். வெள்ளரிக்காயை தோல் சீவி துருவவும். வடிகட்டிய தக்காளி ஜூஸில் மிளகு, உப்புத்தூள் கலந்து  ஃபிரிட்ஜில் வைக்கவும். குளிர வைத்த ஜூஸில் வெள்ளரித்தூவல் போட்டு கலக்கிவிட்டு புதினா இலைகளை அலங்கரித்து பறிமாறவும்.
 கொடுமையான வெயிலை கூல் செய்யும் குக்கூம்பர் ரெடி.

{பழைய மங்கையர் மலர் இதழொன்றில் வாசகி பி.ரமா தேவி எழுதிய குறிப்பு இது}

இவரைத்தெரிந்து கொள்வோம்!
   பிள்ளைகளே பெற்றோரைக் காப்பகங்களுக்கு அனுப்பும் இந்த காலத்தில் சென்னையில், அப்படி கைவிடப்பட்ட முதியவர் களுக்கு மகனாக இருந்து இறுதிச் சடங்குகளைச் செய்துகொண் டிருக்கிறார் இவர்: இங்கு சென்று இவரை தெரிந்து கொள்வோம்: ஸ்ரீதர் 

குழந்தைகள் பார்லிமெண்டில் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை பற்றி பேசி அசத்திய மாற்றுத்திறனாளியான இவரை தெரிந்து கொள்ள  சுவர்ண லட்சுமி

படிச்சதில் பிடிச்சது!

சொல்விளையாட்டு!

    புலவர் ஒருவர் தன் மாணவனை சோதிக்க எண்ணினார். சில சில்லறைக் காசுகளை கொடுத்து மேகம், பசு, மணி இந்த மூன்றையும் வாங்கி வரச்சொன்னார்.
   அந்த கெட்டிக்கார மாணவரும் புலவர் கேட்டதை வாங்கி வந்து கொடுத்துவிட்டார். 
 புலவர் மகிழ்ந்து அந்த மாணவனை தட்டிக்கொடுத்தார்.
 அந்த மாணவன் என்ன வாங்கி வந்தான்?
   காராமணிப் பயறு.
காராமணி பிரித்தால் கார்+ ஆ+ மணி
    கார்- மேகம், ஆ- பசு

சொல்விளையாட்டு எப்படி?

(பழைய பாக்யா வார இதழில் பாக்யராஜ் பதில்களில் படித்தது)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Tuesday, May 27, 2014

துப்பாக்கி!

துப்பாக்கி!


அப்போது எனக்கு ஒரு பன்னிரண்டு அல்லது பதிமூன்று வயது இருக்கும்.ஒரு சிறிய பிராமணக்குடும்பத்தின் மூத்தமகன் நான். என் தந்தையார் ஒரு ராலே சைக்கிள் அப்போதுதான் வாங்கியிருந்தார். அதை எப்பொழுதாவது அவர் ஓட்டக்கொடுப்பாரா? என்று ஏக்கம் எங்கள் அனைவருக்கும் உண்டு. எங்கள் என்றால் என் தம்பிகளைத்தான் சொல்லுகிறேன்.
   அந்த வயதில் எனக்கு குருவிக்காரன் என்று அழைக்கப்படும் நரிக்குறவர்களைக் கண்டால் பெரும் பயம்! அதற்கு காரணம் அவர்கள் தோளில் எப்போதும் தொங்கிக்கொண்டிருக்கும் துப்பாக்கிதான். அந்த துப்பாக்கியில் இருந்து புறப்படும் தோட்டாக்கள் பல பறவைகளின் உயிரை சட்டெனக் குடிப்பதை பார்த்ததில் இருந்து அவர்களைக் கண்டாலே ஒரு மிரட்சி. எங்கே அவர்கள் நம்மையும் சுட்டுக் கொன்று விடுவார்களோ என்று ஒரு பயம். அதைக்கொண்டு விலங்குகளையும் பறவைகளையும் சுடமுடியுமே தவிர மனிதர்களை சுடமுடியாது என்ற அறிவெல்லாம் வளராத பருவமாக அந்த பருவம் அமைந்திருந்தது. இன்றையிலிருந்து எடுத்துக்கொண்டால் சுமார் ஐம்பது ஐம்பத்தைந்து வருடங்கள் பின்னோக்கிய காலத்தில் நடந்த கதை இது. இன்றைக்கிருப்பது போல பல வசதிகள் இல்லாத காலம் அது.
   அப்போதுதான் ஒருநாள் என் அப்பா என்னை அழைத்தார். டேய்! சாமிநாதா! இந்த பையில ஒரு மாசத்துக்கு தேவையான மளிகை சாமான் எல்லாம் போட்டுக் கட்டி சைக்கிள்ல கட்டி வைச்சிருக்கேன்! இதை எடுத்துக்கிட்டு நத்தம் போய் கொடுத்திட்டு நாளைக்கு திரும்பிடு! ரெண்டு நாள் பள்ளிக்கூடம் லீவுதானே? என்றார்.
     எங்களுடடைய குடும்பம் பெரிது. மொத்தம் ஒன்பது பேர். கோவில்பூஜை செய்து வரும் வருமானத்தில் பிழைக்க வேண்டும். அவ்வப்போது ஒரு சில புரோகிதம் கிடைக்கும். இப்போது மாநெல்லூரில்வசித்தாலும் நத்தத்தில் பூர்வீகமான கோயில் இருந்தது. அதை என் தாத்தா பூஜை செய்துவந்தார். அவரது மறைவுக்கு பின் நான் என் அம்மாவுடம் தங்கி பூஜை செய்துவந்தேன். என் படிப்பு காரணமாக இப்போது நான் மாநெல்லூர் வந்துவிட என் தம்பி அங்கே பூஜை செய்து வந்தான். அவனுக்கு உதவியாக என் அம்மா. மாதம் ஒரு முறை அப்பா மளிகை சாமான்களை சைக்கிளில் கட்டி எடுத்துச்சென்று கொடுத்துவிட்டு வருவார்.  இன்று அவருக்கு வேறு ஏதோ அலுவல் போல அதனால் என்னை நத்தம் போகச்சொல்கிறார். எனக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது.  அதற்கு காரணம் இரண்டு. ஒன்று ராலே சைக்கிள்! இன்று முழுவதும் என் வசம்! இன்னொன்று நத்தம் சென்று தம்பியை சந்திப்பது அவனோடு விளையாடப்போவது!
     சரிப்பா! என்று சந்தோஷத்துடன் தலையசைத்தேன்! காலை டிபன் முடித்துவிட்டு சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பினேன்! விதி என்னோடு விளையாடப்போவதை உணராமல். இந்த இடத்தில் உங்களுக்கு ஒன்றை சொல்லியாக வேண்டும். மாநெல்லூர் என்பது ஆந்திர எல்லையோரம் உள்ள ஒரு கிராமம். அங்கிருந்து மாதரப்பாக்கம்,பூவலம்பேடு, தாணிப்பூண்டி, தண்டலச்சேரி வழியாக வந்து கவரைப்பேட்டை, புதுவாயல், பஞ்செட்டி, நத்தம் வர வேண்டும். ஏறக்குறைய நாற்பது கிலோமீட்டர். இன்று நிறைய பேருந்துகள் இந்த வழியாக செல்கிறது. தார் சாலை. ஆனாலும் இருபுறமும் காடுகளாய் மரங்கள்! ஆள் அரவம் சற்றுக் கம்மிதான். இப்போதே அப்படி என்றால் அப்போது எப்படி இருந்திருக்கும் என்று நினைத்து பாருங்கள்! அப்போது தார் சாலை கிடையாது. இந்த வழியே ஒரே ஒரு தனியார் பேருந்து ஒரு நாளைக்கு இரு நடைகள் வந்து போகும். மற்றபடி இந்த சாலை வெறிச்சோடி இருக்கும். இரண்டுபுறமும் மரங்கள் சூழ்ந்து புதர்க்காடுகளாய் இருக்கும். தாணிப்பூண்டி தாண்டியதும்  வலதுபுறம் ஒரு கிளைவழி உண்டு அந்த வழியே இன்னும் சுத்தமாக ஜனநடமாட்டமே கிடையாது. ஆனால் நத்தம் வர அது குறுக்குப்பாதை அந்த வழியே நுழைந்தால் ஆரணி வந்து விடும். அங்கிருந்து அகரம் அப்படியே ஆமதாநல்லூர் வழியாக நத்தம் வந்துவிடலாம். சுமார் பத்து கிலோமீட்டர் மிச்சம் பிடிக்கலாம். என் தந்தையோடு பலமுறை வந்திருப்பதால் இந்த வழியெல்லாம் எனக்கு அத்துப்படி. சரி இனி கதைக்குள் நுழைவோம்
       மாநெல்லூரில் இருந்து புறப்பட்டு மாதரப்பாக்கம் வந்து தாணிப்பூண்டியை தாண்டிவிட்டேன். அப்போது ஒரு சரிவுப்பாதை வந்தது. மலைமேலிருந்து இறங்குவது போல சரிவாகச் செல்லும் பாதை அது. இது மாதிரி பாதை என்றால் எனக்கு வெகு குஷி! ஏனென்றால் சைக்கிள் மிதிக்க வேண்டாம். வேகமாக மிதித்துவிட்டு பெடலில் காலை வைத்துக்கொண்டால் போதும் சர்ரெண சைக்கிள் ரெக்கைக் கட்டிப் பறக்கும். அது ஒரு சாகசமாக அந்த நாளில் எனக்கு தெரிந்தது. அந்த சரிவைக் கண்டதும் நான் வேகமாக சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தேன் சரிவில் இறங்கும்போது சைக்கிள் வேகமெடுக்க ஆக்ரோஷமாய் பெடலை உந்தினேன்.
  அது சரிவுப்பாதை என்பதால்  இந்தப்புறமும் மேடாக இருக்கும் பெடல் செய்வது கடினம். அதே சமயம் அந்தப்புறம் யார் வருகிறார்கள் என்று தெரியாது. ஆனாலும் சரிவில் இறங்க போகும் ஆர்வத்தில்பெடலை வேகமாக மிதிக்க மேட்டை கடந்துவிட்டேன். சரிவில் இறங்க வேண்டும் அப்போதுதான் அந்த ஆபத்துவந்தது.
    சாலையின் வலது புறமிருந்து ஒருவன் சாலையின் குறுக்காக எங்கோ பார்த்தபடி ஆ… அவன் கையில் அது… என்ன? அது ஒரு துப்பாக்கி! அவன் ஒரு குருவிக்காரன். எங்கோ குறிபார்த்தபடி நான் வருவதை கவனிக்காமல் சாலையின் குறுக்கே வர சரிவில் வேகமெடுத்த என் சைக்கிள் அவனை நெருங்கிக் கொண்டிருந்தது.
   இருவருமே இதை எதிர்பார்த்திருக்க வில்லை! என்னால் பெல் அடிக்கவோ ப்ரேக் பிடிக்கவோ தோணவில்லை! எதிர்பாராத அதிர்ச்சியில் செய்வதறியாது கடைசி நொடியில் ப்ரேக் பிடிக்க அதற்கு டமால் என்ற சத்தம். அவன் ஏதோ குருவியை சுட்டுவிட்டிருக்க கூடும் போலும்! அது என்னை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கி பிரேக்கிலிருந்து கையை விட அவன் மேல் மோதி சைக்கிள் ஒருபுறம் அவன் ஒரு புறம்! நான் மறுபுறம் என்று கவிழ்ந்தோம்!
    சைக்கிளில் இருந்த மூட்டை அவிழ்ந்து அதில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடக்க அவன் ஏதோ புரியாத மொழியில் காச் மூச்சென்று கத்திக் கொண்டு ஒரு புறம் செல்ல நான்  மடமடவென்று எழுந்து சைக்கிளை நிமிர்த்தினேன். தூரத்தில் குருவிக்காரன். ஒன்றும் பாதியுமாய் சாமான்களை பொறுக்கி பையில் போட்டபடி அதை கட்டி முடித்து சைக்கிளை நகர்த்தி மேலே ஏறினேன். பின்னால்  வெகு தூரத்தில் அவன். சைக்கிள் அவன் மீது மோதி அவன் அதே இடத்தில் விழுந்து இருந்தான். உருட்டு என்பதால்  நானும் சைக்கிளும் சரிவில் இருந்தோம்.  எனக்கோ ஒரே பயம்! அவன் கையில் துப்பாக்கி! நம்மை சுட்டு விட்டால் என்ன செய்வது? அவன் மீது மோதிவிட்டோமே கோபத்தில் சுட்டாலும் சுட்டு விடுவான். அவன் வருவதற்குள் ஓட்டம் எடுப்போம்! என்று சைக்கிளை வேகமாக மிதிக்க அவன் மீண்டும் சுட்டான்.  “டமால்” ஐயோ! என்னைத்தான் சுட்டான் போலிருக்கிறது! குறிதவறிவிட்டது! இன்னுமொருமுறை சுடுவதற்குள் தப்பித்தாக வேண்டும்! வேகமாக பெடலை அழுத்த, பின்னால், “சாமியோவ்”  “யோவ்! சாமியோவ்” என்று குரல் கேட்க அது மேலும் அச்சுறுத்த வேகமாக அங்கிருந்து ஓட்டம் எடுத்தேன்.

    ஒரு ஐந்து நிமிடம் கழித்து மெல்லத் திரும்பிப் பார்த்தேன்! ஸ்! அப்பாடா! அவன் இல்லை! நல்ல வேளை! தப்பித்தேன் என்று பெருமூச்சு விட்டேன்!
   சைக்கிளை நிதானமாக மிதிக்க ஆரம்பித்தேன்! இப்போது மீண்டும் குரல் கேட்டது.  “சாமியோவ்! சாமியோவ்”
    அட சைத்தான் விடாது போலிருக்கிறதே! திரும்பிப்பார்த்தேன்! அவன் தோளில் துப்பாக்கியுடன் ஒரு சைக்கிளில் வந்து கொண்டிருந்தான். என்னைப்பார்த்ததும் ,  “யோவ்! சாமியோவ்! உன்னைத்தான் சாமியோவ்” என்று குரல் கொடுக்க  சைக்கிளை வேகமெடுத்தேன். என்ன பிரயோசனம்! என் சைக்கிள் நகர மறுத்தது.
     பேக் வீல் பஞ்சர் ஆகியிருந்தது! காற்று இல்லாமல் திணறியது வண்டி. ‘ம்.. இன்று அவ்வளவுதான்! குருவிக்காரன் கையால் சாக வேண்டியதுதான் போல!” என்று திடப்படுத்திக் கொண்டாலும் மனது கேட்கவில்லை! சைக்கிளைத் தள்ளிக்கொண்டு ஓடினேன். எல்லாம் கொஞ்ச நேரம்தான்! அவன் அந்த முறுக்கு மீசை குருவிக்காரன் என்னை நெருங்கிவிட்டான்.
   “ அட நில்லு சாமியோவ்! நீ பாட்டுக்கு இந்த வேகம் ஓட்டற உன்னை பிடிக்குறதுக்குள்ள எம்பாடு பேஜாரா பூடுச்சு!” என்றான்.
     “ என்னை சுட்டுறாதே! தெரியாம தெரியாம மோதிட்டேன்!”
  அப்படியே கெஞ்சுதலாக கேட்கவும்! அவன் ஹாஹாஹா! என்று அதிரலாய் சிரித்தான்.
   ஏன் சிரிக்கிறே?” நான் பாவமாய் கேட்க,
   “ஏஞ்சாமியோவ்! நான் சுட்டுறப்போறேன்னுதான் இந்த வேகம் ஓடியாந்தியா?”
     மையமாய் தலையாட்டினேன். இன்னும் கொஞ்சம் சத்தமாக சிரித்தவன். “ சாமியோவ்! இந்த துப்பாக்கியால கொக்கு குருவிதான் சுடலாம்! மனுசங்களை சுடக்கூடாது! அப்படி சுட்டா என்னை பிடிச்சு உள்ள போட்டுருவாங்க. இது கூட தெரியாத அறியாத புள்ளையா இருக்கியே!”
    சுடறதுக்கு இல்லேன்னா அப்ப ஏன் என்னை துரத்திட்டு வந்தே? நான் கேட்க
  இதுக்குத்தான் சாமியோவ்? என்று தன் ஜேபியில் கைவிட்டு ஒரு பர்ஸை எடுத்து நீட்டினான். அது என்னுடைய பர்ஸ்? மாத செலவிற்கு அம்மாவிற்கு அப்பா கொடுத்தனுப்பிய பணம் அதில்தான் இருந்தது. அதை தொலைத்து இருந்தால் அப்பா முதுகில் டின் கட்டியிருப்பார்.
     கீழே விழுந்த வேகத்துல இந்த பர்ஸ்  விழுந்திருச்சு போல அதை எடுக்காம இவ்ளோ தூரம் ஓடியாந்துட்டியே சாமி? அவன் கேட்க, பதில் பேச முடியவில்லை!
    உருவத்தை கண்டு நாம்தான் தான் தவறாக நினைத்து பயப்பட்டு இருக்கிறோம்! இந்த பர்ஸை அவன் எடுத்துக்கொண்டு இருக்கலாம். ஆனாலும் அதை என்னிடம் ஒப்படைக்க துரத்தி இருக்கிறான். அதை நாம் தவறாக நினைத்து விட்டோம் எதையோ நினைத்து பயந்து போய்விட்டோம் என்று தோன்றியது.
   இந்தா சாமி உன் பர்ஸ்! வண்டி பஞ்சர் ஆயிருச்சு போல! பார்த்து போய் சேரு! இனிமே கவனமா வண்டி ஓட்டு! என்று பர்சை என் கையில் திணித்தவன் வந்த வழியே செல்ல ஒரு நன்றி கூடச் சொல்ல தோன்றாமல் திகைத்து நின்றேன் நான்.


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கபடுத்துங்கள்! நன்றி!

மேலும் தொடர்புடைய பதிவுகள்Monday, May 26, 2014

புகைப்பட ஹைக்கூ 74

புகைப்பட ஹைக்கூ 74


பாடச்சுமையை விட
பெரிதானது!
பாசச்சுமை!

படிப்பவர்களை
பார்க்கையில்
பாரமாகிறது மனசு!

கலைந்த கனவை
தேடுகிறாள்
சாலையில்!

வாழ்க்கையை ஓட்ட
இழுக்கிறாள்
வண்டி!

தள்ளிப்போனது கல்வி!
எட்டிப்பார்த்தது
வறுமை!

பாதை ஒன்றுதான்
பயணம்
எதிரெதிர்பாதைகளில்!

ஏங்கும் பிள்ளைகள்!
இறங்கிவராத
கல்வி!

பார்வைகள் ஒன்று!
ஏக்கம் மட்டும்
இரண்டு!

வறுமையை துரத்த
விரட்டப்பட்டது
கல்வி!

மிதிபட்டதால்
தள்ளப்படுகிறது
கல்வி!

வண்டி ஓட்டுகையில்
வாழ்க்கையும் சேர்த்து
ஓட்டுகிறாள்!

தடம் மாறிய பயணம்
தடுமாறுகிறது
ஒரு கணம்!

ஏழ்மை சுகமானதால்
சுமையாகிப்போனது
ஏடு!

அனைவருக்கும் கல்வி!
இயக்கங்களின் தோல்வி!
இளிக்குதுங்கே  சொல்லி!

எட்டாக்கனியினை
ஏக்கமுடன் பார்க்கும்

பிஞ்சுகள்!

சிலருக்கு நினைவாகிறது
பலருக்கு வெறும் கனவாகிறது
கல்வி!

கரை சேரப்பயணிக்கின்றன
கலங்கள்!
களங்கள் மாறி!

மிதிபட்டது வண்டி
வலிபட்டது
மனசு!

எல்லோருக்கும் கல்வி!
எள்ளி நகையாடுது துள்ளி!
என்று திறக்குமோ இவர்களுக்கு பள்ளி?

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Sunday, May 25, 2014

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 57

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 57


வணக்கம் அன்பர்களே! சென்ற வாரம் படித்த ஒரு ஓர் குழப்பம் பகுதியை நிறைய பேர் பாராட்டினீர்கள் மிக்க மகிழ்ச்சி! அந்த பகுதியை நினைவுகூற இங்கு: ஒரு ஓர் குழப்பம்

   இந்த வாரம் நாம் படிக்க இருப்பது அதிலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒன்று. அது உரிச்சொல்.

   அது என்ன உரிச்சொல்? கடிநகர்,  தவசீலர், என்ற சொற்களுக்கு இலக்கணக் குறிப்பு உரிச்சொல்தொடர் என்று படிக்கையில் எழுதியிருப்பீர்கள். உங்கள் தமிழாசிரியரும் சால, உறு, தவ, நனி, கூர், கடி, கழி என்று  சொற்களின் முன் வந்தால் உரிச்சொல்தொடர் என்று எழுதுங்கள் என்று சொல்லிக்கொடுத்திருப்பார். நீங்களும் எழுதி இருப்பீர்கள். நம்முடைய கல்வி முறை அவ்வளவுதான். மதிப்பெண்களுக்காக படிக்கிறோம்! அதை மீறி எதையும் கற்றுக்கொள்வது இல்லை. கற்றுக்கொள்ள நாமும் ஆசைப்படுவதில்லை. சரி காலம் கடந்தாயினும் இப்போது கற்றுக் கொள்வோமே!

   உரிச்சொல் ஆங்கிலத்தில் (Attribute) என்று வழங்கப்படுகிறது. பல்வேறு வகைப்பட்ட பண்புகளை கொண்டதாய், ஒருசொல் பல பொருளும், பல சொல் ஒரு பொருளும் உணர்த்துவதாய் பெயர்ச்சொல், வினைச்சொல், ஆகிய சொற்களை விட்டு நீங்காத செய்யுளுக்கு உரிமை பூண்ட சொல் உரிச்சொல் எனப்படும். பொருளின் தன்மையை மிகுதி படுத்தும்.

   என்ன குழப்பமாக இருக்கிறதா? கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள். வேண்டுமானால் வேறு வலைப்பூவை படித்துவிட்டு வாருங்கள். ஒரு எடுத்துக்காட்டை பார்த்தால் ஓரளவுக்கு விளங்கும்.
  சால என்ற சொல்லுக்கு மிகுதி என்று பொருள். இது பல்வேறு தொடர்களில் பல்வேறு பண்புகளை காட்டும். அதே சமயம் மிகுதி என்ற ஒரே பொருளை உணர்த்தும். பெயர்ச்சொல்லையோ வினைச்சொல்லையோ சார்ந்து வரும்.

  எடுத்துக்காட்டு, சாலச்சிறந்தது.  மிகுதியும் சிறந்தது என்று பொருள் கொள்ள வேண்டும். சிறப்பு என்ற பண்பினை காட்டுகிறது.

   சால, தவ, உறு, நனி, கூர், கழி, இந்த ஆறும் மிகுதி என்ற ஒரே பொருளினைத் தரக்கூடிய உரிச்சொற்கள்.

  சாலவும் நன்று, தவ சீலர், உறுபசி, நனிதேன், கூர்முனை, கழிசடை இந்த உரிச்சொற்கள் பல்வேறுபட்ட பண்புகளை குறித்து ஆனால் மிகுதி என்ற ஒரே பொருளைத் தருகின்றன பார்த்தீர்களா?

கடிநகர் என்ற உரிச்சொல்லை படித்திருப்பீர்கள். இதில் கடி என்னும் உரிச்சொல் பதிமூன்று பொருள்களை தரக்கூடியது.

கடிநகர் – காவல்நகர், கடிநுனைப்பகழி- கூர்மையான அம்பு
கடிமாலை- நறுமணமுள்ள மாலை, கடிமார்பன்-விளக்கம்பொருந்திய மார்பினை உடையவன், கடிஅரமகளிர்- அச்சம்தரும் பெண்டிர், கடிவிடுதும்- விரைவில் விடுதும்
கடி உணவு –மிகுதியான உணவு, கடிமணச்சாலை- புதுமையான திருமணச்சாலை, கடிமுரசு- ஒலிக்கும் முரசு, கடிவினை- திருமணவினை கடிமிளகு- காரமான மிளகு இவ்வாறு பதிமூன்று வகையான பொருளைத் தருகிறது.

   சுருக்கமாக ஒருசொல் பலப்பொருள் தருவதும், பலசொல் ஒருபொருளை உணர்த்துவதும் உரிச்சொல் என்று அறிந்து கொள்ளுங்கள்.

இனிக்கும் இலக்கியம்.


 குறுந்தொகை

பாலைத்திணை- தலைவி கூற்று

பாடியவர் – ஓதலாந்தையார்

துறை- ஆற்றாள் என கவன்ற தோழிக்கு கிழத்தி உரைத்தது.

எறும்பி அளையின் குறும் பல் சுனைய
உலைக்கல் அன்ன பாறை ஏறி,
கொடு வில் எயினர் பகழி மாய்க்கும்
கவலைத்து என்ப அவர் தேர் சென்ற ஆறே;
அது மற்று அவலம் கொள்ளாது,
நொதுமல் கழறும் இவ் அழுங்கல் ஊரே.

விளக்கம்:   தலைவர் சென்ற வழியானது எறும்பின் வளையைப் போல் குறுகிய பல சுனைகளை உடையது; கொல்லனது உலைக்களத்தில் உள்ள பட்டடைக் கல்லைப் போன்ற வெம்மையுடைய பாறைகளின் மேல் ஏறிச்செல்ல வேண்டியுள்ளது. வளைந்த வில்லை உடைய எயினர் என்னும் வழிப்போக்கர் பொருளை கவரும் கள்வர்களை வாழும் வழியானது; என்று அந்த வழி சென்றோர் கூறினர்.  நம்முடைய இந்த ஆரவாரத்தை உடைய ஊரானது அந்த வழியின் கொடுமையை பற்றி எண்ணாது,என்னை வேறுபட்ட சொற்களை கூறி இடித்துரைக்கிறது. என்கிறாள் தலைவி.

   இங்கு ஊர் என்று தோழியினை சுட்டுகிறாள் தலைவி. தன்னை புரிந்து கொள்ளாத தோழியை கோபம் கொண்டு பாடுகிறாள்.
 தலைவி தலைவன் பிரிந்து சென்றான் என்ற வருத்தில் இருப்பதாக தோழி சொல்ல அதை மறுத்து  நீ என்னையே நினைத்து என் வருத்தத்தை பெரிது படுத்துகிறாய் எனக்கு என் துயரைவிட தலைவன் சென்ற வழியின் துயர் மிகக் கொடுமையானது அந்த வழியில் தலைவர் சென்றாரே என்று வருந்துகிறேன் என்று தலைவி எடுத்துரைக்கிறாள்.

  தலைவன் சென்ற வழிக்கு எடுத்தாளப்பட்ட உவமைநயம் என்னே அழகு! மீண்டும் படித்து ரசியுங்கள்!


உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்! மீண்டும் அடுத்த பகுதியில் சந்திப்போம்! நன்றி!

தொடர்புடைய இடுகைகள்:


Related Posts Plugin for WordPress, Blogger...