ஹரியும் சிவனும் சந்திக்கும் சந்திப்பு மகோற்சவம்!

ஹரியும் சிவனும் சந்திக்கும் சந்திப்பு மகோற்சவம்!


இந்து மதத்தில் சைவ வழிபாடும் வைஷ்ணவ வழிபாடும் மிக சிறப்பாக வழிபடப்படுகிறது. இதில் ஒரு காலத்தில் தீவிர சிவ பக்தர்கள் தீவிர வைஷ்ணவர்கள் இருந்தனர். சிவனை கண்டாலே பாவம் என்று வைஷ்ணவர்களும் விஷ்ணுவை விரோதியாக சைவர்களும் பாவித்தனர். இவர்களுக்கும் அடிக்கடி தம் கடவுள்தான் உயர்ந்தவர் என்ற தர்க்கங்களும் விவாதங்களும் நடக்கும்.
   கடவுள்களில் வேறுபாடில்லை அரியும் சிவனும் ஒன்னு! அறியாதவர் வாயில் மண்ணு! என்ற பழமொழியும் உண்டு. சிவ வைஷ்ணவ ஒற்றுமையை சிறப்பிக்கும் வண்ணம் சிவாலயங்களில் விஷ்ணுவை ஸ்தாபித்து பூஜைகளும் நடைபெறுகின்றது. இதற்கு உதாரணமாக சென்னை தி.நகர் சிவா-விஷ்ணு ஆலயத்தை கூறலாம். இன்றைய நவ நாகரீக உலகில் இன்று ஒரே ஆலயத்தில் எல்லா கடவுளர்களும் எழுந்தருளி உள்ளனர். பக்தர்களும் ஒரே சமயத்தில் எல்லோரையும் தரிசித்து வருகின்றனர்.
    சைவ- வைஷ்ணவ ஒற்றுமைக்கு அந்த காலத்திலே சிவனும்- விஷ்ணுவும் சந்திக்கும் சந்திப்பு உற்சவங்கள் பல ஊர்களிலே நடைபெற்று இரு உற்சவர்களும் எழுந்தருளுவர். பக்தர்கள் சண்டை மறந்து தரிசித்து மகிழுவர். காலப்போக்கில் இந்த வகை உற்சவங்கள் நடைமுறையில் மறைந்து விட்டன.

    திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் இந்த சந்திப்பு உற்சவம் வருடம் தோறும் பத்து நாட்கள் பிரம்மோற்சவமாக நடைபெற்று அதில் ஆறாவது நாள் சந்திப்பு உற்சவம் நடைபெறுகிறது.
   பொன்னேரி கும்ப முனி மங்கலம் ஆனந்தவல்லி அம்பிகை வலம் கொண்ட அருள்மிகு அகத்தீஸ்வர சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. பொன்னேரி பழைய பஸ் நிலையம் அருகே இந்த ஆலயம் அமைந்துள்ளது.

   அகத்தியர் இந்த தலத்தில் வந்து பூஜை செய்ததால் கும்ப முனி மங்கலம் என்று பெயர். கும்பம் என்றால் குடம் கும்ப முனி அகத்தியர், காவிரியை ஒரு குடத்தில் அடைத்து எடுத்து வருகையில் விநாயகர் காகம் வடிவம் எடுத்து கவிழ்த்ததால் காவிரி ஆறு உருவான புராணக்கதை தெரிந்திருக்கும். அந்த வகையில் கும்ப முனி அகத்தியர் இந்த தலத்து இறைவனை வழிபட்டமையால் அகத்தீஸ்வரர் என்று வழங்கப்படுகிறார்.
   இந்த ஆலயத்தை கட்டியது இராசேந்திர சோழன் என்பது இந்த ஆலய கல்வெட்டுக்களில் இருந்து அறியப்படுகிறது. உழவர்கள் முதல் முதலில் ஏர் உழுகின்ற போது முதல் ஏரை பொன் ஏர் என்று வழங்குவது மரபு. இந்த பொன்னேரைக் கட்டி உழுகையில் ஏரை அலங்கரித்து உழுவர். இந்த ஏரைக் கொண்டு இந்த ஊரை ஆண்ட இராஜன் ஒருவன் உழுதபோது ஏர்க்காலில் இடறியது இந்த சிவலிங்கம். என்றும் ஒரு கதை உண்டு.
   பொன் ஏர் கொண்டு உழுபவர்கள் நிறைய வசித்த ஊர் பொன்னேரி ஆயிற்று.
   இந்த சிறப்பு வாய்ந்த பொன்னேரியில் திரு- ஆயர்- பாடியில் அமைந்துள்ளது கரிகிருஷ்ணப் பெருமாள் ஆலயம். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் கிருஷ்ணபெருமான் காளிங்க நர்த்தன கோலத்தில் அமைந்துள்ளார். ஆயர்குல இளவலான கிருஷ்ணபெருமான் கோயில் கொண்டுள்ள இந்த பகுதி திருஆயர்பாடி என்று மிகப்பொருத்தமாக வழங்கப்படுகிறது.

     நாளை 19-1-2014 அன்று இந்த இரண்டு ஆலயங்களிலும் விஷேச அபிஷேக அலங்கார ஆராதனைகள் செய்யப்பட்டு இரவு 1.மணிக்கு மேல் அகஸ்தீஸ்வர பெருமான் பஞ்ச மூர்த்திகளோடு அரிஹரன் பஜார் ஆஞ்சநேயர் கோயிலருகே விஷேச அலங்காரத்தில் எழுந்தருள்வார். அதே சமயம் கரிகிருஷ்ண பெருமாளும் ஸ்ரீதேவி- பூதேவி சகிதமாக அலங்காரத்தோடு ஆஞ்ச நேயர் கோயிலுக்கு வந்தருள்வார்.
    இரு சுவாமிகளும் சந்தித்து கொள்ளும் காட்சி கண்ணுக்கு இனிமை தரும். அந்த சமயத்தில் சிவாச்சார்யர்களும் பட்டாச்சார்யர்களும் தங்கள் ஆலய மரியாதைகளை பரஸ்பரம் மாற்றிக் கொள்வர். வானவேடிக்கைகளும், பொய்க்கால் குதிரை, சிலம்பம், நாதஸ்வர கச்சேரி, பேண்டு வாத்தியங்கள் முழங்க இரு சுவாமிகளும் சந்தித்துக் கொள்ளும் காட்சியை காண கண்கோடி வேண்டும். சந்திப்பு முடிந்ததும் திருவீதி உலா நடைபெறும். மறுநாள் தேரோற்சவம் நடைபெறும்.
  இத்தகு சிறப்பு வாய்ந்த சந்திப்பு உற்சவம் வருடம் தோறும் சிறப்பாக பக்தர்களால் நடத்தப்பட்டு வருகிறது.
  ஹரியும் ஹரனும் சந்திக்கும் இந்த சிறப்பு வாய்ந்த நிகழ்வை கண்டு இறைவன் அருள் பெறுவோமாக!
 இந்த தலத்தின் வரலாறினை அறிய இந்த தளங்களுக்கு செல்லுங்கள் தளம் ஆங்கிலத்தில் இருக்கும்.  கரிகிருஷ்ணப் பெருமாள்
               அகத்தீஸ்வரர்

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

  1. அந்த சந்திப்பை காண முடியாமல் இருந்தாலும்,தங்களின் இந்த பதிவு மூலம் தெரிந்து கொள்ளவாவது முடிந்தது. பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete

  2. வணக்கம்!

    தன்னோ் இலாத தனித்தமிழ் போல்மின்னும்
    பொன்னோ் உழவா் புகழ்!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  3. நல்ல தகவல். சில கோவில்களில் இரண்டு மூர்த்திகளும் இருப்பதைக் கண்டதுண்டு.... இந்த தகவல் புதிது.

    ReplyDelete
  4. நீங்க எழுதியதே நேரில் பார்த்த அனுபவத்தை தருகிறது நண்பா

    ReplyDelete
  5. படித்தே இறைவன் அருள் பெற்று விட்டோம்!

    ReplyDelete
  6. ஒரு அருமையான ஸ்தலத்தை
    அற்புதமாக அறிமுகம் செய்தமைக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. ஒரு பழம்பெரும் ஆலயத்தை அறிமுகம் செய்தமைக்கு நன்றி. தல புராணமும் அறிந்தேன்.
    பெரும்பாலான சிவாலயங்களில் விஷ்ணுவைக் காண முடிகிறதுஆனால் விஷ்ணு ஆலயங்களில் சிவனை பார்த்ததாக நினைவு இல்லை

    ReplyDelete
  8. சிறப்பான இப் பகிர்வுக்கு என் பாராட்டுக்களும் நன்றி கலந்த வாழ்த்துக்களும் சகோதரா .

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!