ஆலமரத்து பூதம்! பாப்பா மலர்!

ஆலமரத்து பூதம்!


இந்திரபுரி என்ற நாட்டை சந்திரவர்மன் என்ற மன்னன் ஆண்டுவந்தான். அந்த நாட்டு ராஜபாட்டையில் ஒரு பெரிய ஆலமரம் ஒன்று இருந்தது. பல விழுதுகளுடன் தழைத்து படர்ந்து இருந்த அந்த மரத்தினடியில் வழிப்போக்கர்கள் தங்கி இளைப்பாறுவது வழக்கம். நிறைய பறவைகளும், குரங்குகளும் அந்த மரத்தில் வசித்து வந்தன.
    அந்த மரத்திலே ஒரு நாள் ஒரு பெரிய பூதம் ஒன்றுவந்து குடியேறியது. மிகப் பருத்த உருவமும் கொடிய கோரைப்பற்களும் தலையில் ஒரு ஒற்றைக்கொம்பும் உடையதாகவும் நீண்ட காதுகளையும் மூக்கினை உடையதாய் இருந்த அது  பயங்கரமாக இருந்தது. அந்த பூதம் அந்த வழியே செல்பவரை எல்லாம் மிரட்டி விழுங்கவும் அவர்களின் உடைமைகளை பறிக்கவும் செய்தது.
   பூதம் செய்த கொடுமைகள் மன்னருக்குத்தெரிய வந்தன. அந்த ஆலமரம் ராஜபாட்டையில் இருப்பதால் பிரதானமான பாதையானதால் பக்கத்து நாடுகளுக்கு சென்றுவர அது ஒன்றே சிறந்த வழிப்பாதையாகவும் இருந்ததால் நாட்டில் வருமானம் போன்றவை பாதிக்கப்பட்டது.
    சந்திர வர்மன் யோசனையில் ஆழ்ந்தார். இறுதியில் தானே அந்த பூதத்தை அடக்கி வென்று வருவது என்று முடிவு செய்து புறப்பட்டார். ஆலமரத்தை அடைந்து, ஏ பூதமே! ஏன் இங்கு வந்து தங்கி தொந்தரவு கொடுக்கிறாய்! மரியாதையாக சென்றுவிடு! இல்லையேல் உன்னை விரட்ட வேண்டியிருக்கும் என்று அறைகூவல் விடுத்தார் மன்னர்.
   பூதம் மெல்ல யோசித்தது, சரி மன்னா! நீ ரொம்பவும் நல்லவன், மக்கள் நலனில் அக்கறை உள்ளவன் என்று அறிந்தேன். நான் இங்கு இருந்து தொல்லை செய்யாமல் இருக்க வேண்டும் என்றால் ஒரு நிபந்தனை என்றது பூதம்.
   என்ன நிபந்தனை?
என்னால் சும்மா இருக்க முடியாது! ஏதாவது வேலை செய்து கொண்டே இருக்க வேண்டும். நான் உன்னுடன் அரண்மணைக்கு வந்துவிடுகிறேன். எனக்கு தொடர்ந்து ஏதாவது வேலை கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். அப்படி வேலைக் கொடுக்காத பட்சத்தில் உன்னை விழுங்கிவிடுவேன் சம்மதமாயின் இந்த மரத்தை விட்டு வந்துவிடுகிறேன் என்றது.
   இதென்ன பிரமாதம்! இப்போதே என்னுடன் கிளம்பு! அரண்மணையில் வேலைக்கா பஞ்சம்? ஆயிரக்கணக்கில் வேலை இருக்கிறது. வா போகலாம் என்று அழைத்து வந்தார் சந்திர வர்மன்.
  அரண்மனைக்குள் நுழைந்ததுமே மன்னா! வேலை கொடுங்கள் என்றது பூதம்.
   வேலையா? பூதமே! நமது கோட்டைக் கொத்தளங்களும், மதில்களும், கோபுரங்களும் பழுதாகி உள்ளன. அவைகளை இடித்து புதிதாக கட்டு. என்றார் மன்னர்.
   இந்த வேலையை பூதத்தால் செய்ய எப்படியும் ஆறுமாத காலமாவது ஆகும் என்று நினைத்தார் அவர். ஆனால் பூதம் அந்த பணியை ஒரு நிமிடத்தில் செய்து முடித்துவிட்டது. இதோ மன்னா! எல்லாம் சரி செய்துவிட்டேன். அடுத்த வேலையை சொல்லுங்கள் என்றது.

   அட! இதற்குள் முடித்துவிட்டாயா? சரி நமது நாட்டில் ஏரிகளும் குளங்களும் தூர்ந்து கிடக்கிறது. அவை எல்லாவற்றையும் தூர் வாரி சீரமை!
  அடுத்த நிமிடத்தில் பூதம் அந்த வேலையை முடித்துவிட்டு மன்னா! அடுத்து என்ன? என்றது.
  மன்னனால் நம்பவே முடியவில்லை! பல நாள் பிடிக்கும் ஒரு வேலையை ஒரே நிமிடத்தில் முடித்துவிடுவதா? என்று ஆச்சர்யப்பட்டுவிட்டான். ஒரு உதறலும் அவனுக்கு ஏற்பட்டுவிட்டது. அவசரப்பட்டு சனியனை விலை கொடுத்து வாங்கிவிட்டோமோ? என்ன செய்வது என்று யோசித்தான்.
   மன்னா! அடுத்த வேலையை சொல்லுங்கள்! இல்லாவிட்டால் விழுங்கிவிடுவேன் என்றது பூதம்.  என்ன சொல்வது என்று தெரியாமல் நான் குளிக்க  கங்கை போன்ற புண்ணிய நதிகளின் தீர்த்தங்களை கொண்டு வா! என்றான்.
  அடுத்த நொடியில் தீர்த்தங்கள் அங்கு வந்தன. மன்னா! அடுத்து? என்றது.
 நான் பூஜை செய்ய வேண்டும் அதற்குரிய ஏற்பாடுகளை செய்! காசியில் இருந்து லிங்கம் கொண்டுவா.
  பூதம் லிங்கம் எடுத்துவர புறப்பட்டதும் மகாராணி உள்ளே நுழைந்தாள். மன்னா! உணவு தயாராகிவிட்டது. சாப்பிடலாமா? என்றாள்.
   ம்.. இதுதான் எனது கடைசி சாப்பாடு போலிருக்கிறது!
   என்ன சொல்கிறீர்கள் மன்னா?
சந்திரவர்மன் நடந்தது அனைத்தும் சொன்னான். ப்பூ! அவ்வளவுதானா? விஷயம்? பூதம் வந்ததும் என்னிடம் அனுப்பி வையுங்கள். அதற்கு நான் வேலை கொடுக்கிறேன் என்றாள் ராணி.

   காசி லிங்கத்துடன் வந்த பூதம் மன்னா! இதோ லிங்கம்! அடுத்து என்ன வேலை? என்று கேட்டது.
    வேலையா? மகாராணி உனக்கு வேலை சொல்வார்கள் என்றார் மன்னர்.
    பூதமே என்னுடன் வா! மகாராணி பூதத்தை அழைத்துச் சென்றார்.
    கடற்கரை வந்தது. பூதமே! நன்றாய் கேட்டுக்கொள். இதோ சொம்பு. இந்த சொம்பால் இந்த கடல் நீர் முழுவதையும் நி இறைக்க வேண்டும். இறைத்துவிட்டு. இதோ இங்கே இருக்கின்றதே மணல் இதை எண்ணி முடித்து அந்தபள்ளத்தில் நிரப்ப வேண்டும். எத்தனை மணல் எடுத்து நிரப்பினாய் என்று வந்து என்னிடம் கணக்கு சொல்ல வேண்டும். புரிகிறதா? என்றாள்.
    பூதம் அப்படியே வாயால் நீரை உறிஞ்ச முயற்சி செய்தது. பூதமே என்ன செய்கிறாய்? நான் சொன்னது என்ன? இந்த சொம்பால்தான் முகர்ந்து இறைக்க வேண்டும்.  எங்கே செய்! என்று சொல்லிவிட்டு அரண்மணைக்கு வந்தாள்.
   மன்னா! பூதத்திற்கு தகுந்த வேலை கொடுத்துவிட்டேன். இனி அது வராது என்றாள்.
   அப்படி என்ன வேலை கொடுத்தாய்!
  கடலை இறைக்கும் வேலை! என்ற மகாராணி வாருங்கள் சாப்பிடலாம் என்று மன்னருக்கு உணவு பறிமாறினாள்.
  பூதம் சொம்பில் நீரை மொண்டு மொண்டு ஊற்றியது. எத்தனை தடவைதான் அது ஊற்றும். ஊற்றிய நீர் கடலோடு கலந்துகொண்டிருக்க சரி மணலையாவது எண்ணுவோம் என்று முயற்சித்தது. ஒரு மூட்டை மணலை எண்ணுவதற்குள் அதற்கு மூச்சு வாங்கியது. அய்யயோ! வசமாக மாட்டிக்கொண்டுவிட்டோமே என்று  அழுதது.
  அன்று மாலை மகாராணி வந்தாள். என்ன பூதமே? வேலையை துவக்கவே இல்லையா? என்று அதட்டினாள்.
  மகாராணி! என்னை மன்னித்துவிடுங்கள்! இதை செய்ய முடியவில்லை! என்னது செய்ய முடியவில்லையா? அப்போ சிறையில் தள்ளிவிட வேண்டியதுதான்.
   அய்யோ! அது மட்டும் வேண்டாம் கருணை காட்டுங்கள்!
  அப்படியா! இனி இந்த நாட்டு பக்கமே தலை வைத்து படுக்க கூடாது. எந்த நாட்டிலும் எந்த உயிரினத்திற்கும் தீங்கு செய்யக் கூடாது. சத்தியம் செய்து கொடுத்துவிட்டு ஓடிப்போ!
   பூதம் அவ்வாறே சத்தியம் செய்துவிட்டு விட்டால் போதும் என்று ஓடிப்போனது.
 அதன் பின் அந்த ராஜ்யத்தில் பூதத்தினால் தொல்லையே இல்லை!
நீதி:
   புத்தி மான் பலவான்!
 
(செவிவழிக்கதை தழுவல்)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

  1. நல்ல கதை. இதெல்லாம் பிள்ளைப் பருவத்தில் படித்தது . ரசித்தது. மீண்டும் படித்திட பதிவு செய்தமைக்கு மகிழ்ச்சி!..

    ReplyDelete
  2. மகளிர் தின நாளில் பெண்ணை நீங்கள் போற்றிய விதம் அருமை !

    ReplyDelete
  3. நல்ல கதை. பகிர்ந்துகொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  4. இன்று இரவு குழந்தைகளுக்கு இது தாங்கும்

    ReplyDelete
  5. சிறப்பானதொரு மகளீர் தினப் பகிர்வு அருமை !
    வாழ்த்துக்கள் சகோதரா மிக்க நன்றி பகிர்வுக்கு .

    ReplyDelete
  6. நல்ல கதை. பகிர்ந்துகொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  7. சிறப்பான கதை.... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!