உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 48

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 48


வணக்கம் வாசகத் தோழர்களே! சென்ற வாரம் மெய்ம்மயக்கம் குறித்தும் மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்கள், இறுதியில் வரும் எழுத்துக்கள் குறித்தும் படித்தோம். அவற்றை நினைவு கூற இங்கு சென்றுவிட்டு வரவும். உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 47
    நினைவுக்கு வந்துவிட்டதா? மொழிக்கு முதல், இடை கடையில் வரும் சொற்களை தெரிந்துகொண்டோம். மொழி என்றால் என்ன? அதன் வகைகளை பற்றி தெரிந்து கொள்வோமா?
  மொழி: ஒரு சொல் தனித்து நின்றோ அல்லது பலசொற்கள் சேர்ந்து வந்தோ ஒரு பொருளை தருமானால் அது மொழி எனப்படும். உதாரணம்: பூ, ஆ, மக்கள், குருவி, வானம்.


மொழி மூவகைப் படும்.
1.      தனிமொழி அல்லது ஒருமொழி
2.      தொடர்மொழி
3.      பொதுமொழி ஆகியன அந்த மூவகையாகும்.


ஒருமொழி அல்லது தனிமொழி: பிரிக்கப்படாத பகாப்பதமாகவோ, பிரிக்கப்படுகின்ற பகுபதமாகவோ நின்று ஒரு பொருளைத் தருவன ஒரு மொழி அல்லது தனிமொழி எனப்படும்.
எடுத்துக் காட்டு: வா, போ, தேன்,மான்.
   இவை பிரிக்கப்படாத பகாப்பதங்கள், மேலும் ஒரே பொருளை தருகின்றன.
வந்தான், போனான், படித்தான்
  இவைகளை பிரிக்க முடியும். ஒரே பொருளை தருவன.
இவை மட்டுமின்றி கொல்,மன், தில், அம்ம ஆகிய இடைச்சொற்களும், சால, உறு, தவ, நனி ஆகிய உரிச்சொற்களும் ஒரு மொழியைச் சேர்ந்தவை.

தொடர்மொழி:
      ஒருசொல்லாக நிற்காமல் பகுபத சொற்களும் பகாப்பத சொற்களும்  பொருள்தருமாறு முன்பின் இரண்டு சொற்களாக நின்று பொருள் தருவன தொடர்மொழியாகும்.
எடுத்துக்காட்டு: கடமையைச் செய், படித்து முடி, ஆணவம் வேண்டா, அன்பு காட்டு, ஏளனம் செய்யாதே, நிலத்தை கடந்தான்.

பொதுமொழி:
   ஒரு சொல்லாக நின்று ஒரு பொருளையும் அச்சொல்லை பிரித்தால் பல சொற்களாகி வேறு பொருள் தந்தும் இரண்டிற்கும் பொதுவாக நிற்பவை பொதுமொழி எனப்படும்.

எடுத்துக்காட்டு: முட்டாள் : முட்டாளை குறிக்கிறது.
 பிரிக்கும் போது முள்+தாள் என்று ஆகி முள்ளுடைய தாளை குறிக்கிறது.
தாமரை: தாமரைப்பூவை குறிக்கிறது. பிரிக்கையில் தா+மரை என பிரிந்து தாவுகின்ற மானை குறிக்கிறது.
அத்திக்காய்: அத்திக்காயை குறிக்கிறது.  பிரிக்கையில் அ+ திக்காய் என பிரிந்து அந்த திசையை எனக் குறிக்கிறது.
ஆலங்காய்: இது ஆலமரத்து காயை குறிக்கிறது பிரிக்கையில் ஆலம்+காய் எனப் பிரிந்து விஷத்தை கக்குவாய் எனப் பொருள் படுகிறது.

மூவகை மொழிகளை அறிந்து கொண்டீர்களா? தமிழின் சிறப்புக்கள் இந்த மொழியில் விளங்குகிறதை உணர முடிகிறது அல்லவா? பதங்களை பிரிக்கையில் வேறு பொருள்கள் பொருந்திவரும் அழகுதான் என்னே?

இலக்கிய சுவை!

 சங்ககால மன்னன் வேள் பாரி என்னும் பாரிவள்ளல் இறந்தபின் அவரது மகள்களை அந்தணரிடம் அடைக்கலம் தந்தபின் கையறுநிலையில் கபிலர் பாடும் இந்த பாடலை பார்ப்போம். இந்த பாடலில் சங்க கால செழிப்புநிலை மட்டுமில்லாமல் சோதிடம், வானியல் அனைத்தும் செப்புகிறது.

   1.மைம்மீன் புகையினும் தூமம் தோன்றினும்
   2.தென் திசை மருங்கின் வெள்ளி ஓடினும்
   3.வயல் அகம் நிறையப் புதற்பூ மலர
   4.மனைத்தலை மகவை ஈன்ற அமர்க்கண்
   5.ஆமாநெடுநிரை நன்புல் ஆரக்
   6.கோ ஒல் செம்மையின் சான்றோர் பல்கிப்
   7.பெயல்பிழைப்பு அறியாப் புன்புலத் ததுவே
   8.பிள்ளை வெருகின் முள்ளெயிறு புரையப்
   9. பாசிலை முல்லை முகைக்கும்
   10.ஆய்தொடி அரிவையர் தந்தை நாடே.

வரிவரி விளக்கம்:
1.      கரியநிறம் கொண்ட சனி புகையினும் அதாவது. கருமைநிறம் கொண்ட சனி தன் பகைவீடான ரிஷபம் சிம்மம், மீனம் இவற்றுள் செல்லும்போது மாறுபடும். அவ்வாறு மாறுபடினும், தூமம் தோன்றினும், தூமகேது எனப்படும் வால்நட்சத்திரம் தோன்றினாலும்
2.       வெள்ளிக்கிரகம் தென் திசையில் தோன்றினாலும் மழை பெய்யாது தீங்கு நடைபெறும். ஆனால்,
3.      வயல்கள் நன்கு செழித்து வளர்ந்து புதர்களில் பூக்கள் மலர்ந்தன.
4.      பசுக்கூட்டங்கள் தங்கள் கன்றுகளோடு
5.      நீண்டுவளர்ந்த நல்ல புற்களை மேய்ந்தன.
6.      பாரியின் செங்கோன்மையால் சான்றோர்கள் பெருகினர்
7.      இவ்வாறு விளங்கிய பாரி நாடு இன்றுபிழைப்பு இன்றி புன்செய் நிலமாகியதே
8.      காட்டுப்பூனைக் குட்டிகளின் பற்களை போன்று
9.      பசுமையான இலைகளைஉடைய முல்லை பூக்கும்
10.  வளையல்களை அணிந்த இம்மகளிரின் தந்தை நாடு.

விளக்கம்: மைம்மீன் எனப்படும் சனிக்கிரகம் பகை வீடுகளில் சஞ்சரித்தால், வெள்ளியானது தென் திசையில் தோன்றினால், தூமகேது என்னும் வால்நட்சத்திரம் தோன்றினால் கேடு நிகழும் என்று சொல்லுவார்கள். ஆனாலும் பாரியின் செங்கோன்மை திறனால் இவை தோன்றியும் பாரிநாடு வளத்தில் சிறந்து வயல்கள் செழித்து புதர்களில் பூக்கள் பூத்து பசுக்கூட்டங்கள் கன்றுகளோடு நல்ல புற்களை மேய்ந்தன. சான்றோர் சிறப்பாக வாழ்ந்தனர். மழை தவறாது பெய்தது. முல்லைக்கொடிகள் வளர்ந்து காட்டுப்பூனையின் பற்களை ஒத்த அரும்புகளை முகிழ்ந்தன. அத்தகைய பறம்புநாடு இன்று பாரி இல்லாமையால் புன்செய் நிலங்களை உடைய புல்லிய நிலத்தை அடைந்துவிட்டதே! என்று கபிலர் வருந்துகிறார்.

பத்துவரிகளில் எத்தனை செய்திகள் கிடைக்கின்றன பாருங்கள்! இனிக்கும் இந்த இலக்கிய சுவையை மீண்டும் பருகுங்கள்! மீண்டும் அடுத்தபகுதியில் சந்திப்போம்.

 மேலும் தொடர்புடைய இடுகைகள்:


    இதையும் படித்துப் பாருங்கள்!  

உங்கள் கருத்துக்களை பின்னூட்டம் செய்து ஊக்கப்படுத்துங்கள்! அது இத்தொடர் பொலிவு பெற உதவும். நன்றி!










Comments

  1. உள்ளேன்.. ஐயா!..

    //பாரிவள்ளல் இறந்த பின் ..//
    பாரி வள்ளல் - பகை கொண்ட மூவேந்தரால் நயவஞ்சகமாகக் கொல்லப்பட்டார். இதன் பின்னரே - அவருடைய இரு மகள்களும் அங்கவை சங்கவை - கபிலரின் பாதுகாப்பில் இருந்தனர்.

    வேதனையும் விரக்தியும் ஆற்றாமையும் வழிந்தோட - அவர்கள் பாடிய -
    அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் - பாடலைக் குறித்து சிந்திக்கும் கணம் - கண்களில் நீர் வழியும்.

    ReplyDelete
  2. வரிவரி விளக்கம் அருமை... நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. விளக்கம் அருமை நண்பரே
    நன்றி

    ReplyDelete
  4. ஆகா... மிக அருமை... இடையில் வந்திருக்கிறேன்... முதலில் இருந்து படிக்கவேண்டும்...

    ReplyDelete
  5. மொழிப் பற்றிய இந்த பதிவு அருமை. தொடருங்கள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!