உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 47.

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 47.


வணக்கம் வாசக நண்பர்களே! எளிமையாக இலக்கணமும் இலக்கியமும் பழகும் இந்த பகுதியில் சென்றவாரம் மெய்மயக்கம் என்பது பற்றி பார்த்தோம். தமிழில் ஒரு சொல் எப்படி உருவாகிறது? முதலில் இடையில் எப்படி சொற்கள் சேருகின்றன என்பதை அதில் பார்த்தோம். அதை நினைவுகூற இங்கு சென்று வருக: மெய்ம்மயக்கம்!
         மெய்மயக்கத்தில் இரண்டுவகைகள் உடனிலை, வேற்றுநிலை என்று இரண்டைத்தவிர இன்னொன்றும் உண்டு. அதுதான் இனநிலை வேற்று மெய்ம்மயக்கமாகும்.
அது என்ன இனநிலை வேற்று மெய்ம்மயக்கம்?
    மெல்லின மெய்களான ங்,ஞ்,ந்,ம் ஆகிய நான்கு மெய்கள் தம்முடன் தான் மயங்குவதோடு க,ச,த,ப, என்னும் நான்கு உயிர்மெய்யெழுத்துக்களுடனும் மயங்கும். இதுவே இனநிலை வேற்று மெய்ம்மயக்கம் ஆகும்.
உதாரணமாக தம்முடன் தாம் மயங்கி உருவாகும் சொற்கள் சில
  இங்ஙனம், அஞ்ஞன், முந்நீர், அம்மா
தம்முடன் பிற மயங்குவதற்கு சில உதாரணங்கள்
  தேங்காய், மாங்காய், அஞ்சாமை, தந்தை, பம்பரம், கம்பம்,
இந்த ங்,ஞ்,ந்,ம் எனபன எல்லா மெய்களோடும் மயங்காது க,ச,த,ப என்ற நான்கு எழுத்துக்களோடு மட்டும் மயங்கும்.
   க,ச,த,ப என்ற வல்லின மெய்கள் தம்முடன் தாம் மட்டுமே மயங்கும் என்று முன்னரே படித்தோம். இந்த ங்,ஞ்,ந்,ம், என்னும் மெல்லின மெய்கள் தம்முடன் தாம் சேர்வதோடு குறிப்பிட்ட சில எழுத்துக்களோடு மயங்குவதால் இவை இன நிலை வேற்று மெய்ம்மயக்கம் எனப்படுகிறது.

     மொழிக்கு முதலிலும் இறுதியிலும் வரும் சொற்களை முன்பே படித்தோம். இப்போது மீண்டும் கொஞ்சம் நினைவு கூறுவோம்.
    மொழிக்கு முதலில் வருவன முதல்நிலை எழுத்துக்கள் என்று வழங்கப்படுகிறது. அவை உயிரெழுத்துக்கள் பன்னிரண்டும், உயிர்மெய்யெழுத்துக்களில் க,ச,த,ப,ந,ம,வ,ய,ஞ,ங ஆகிய பத்து எழுத்துக்களும்.
இவை தவிர வேறு எழுத்துக்கள் இலக்கணரீதியாக முதலில் வருதல் கூடாது. அப்படி வர நேரின் சொற்களுக்கேற்றபடி சொல்லின் முதலில் வரும் ஓர் எழுத்தை சேர்த்து சொற்களை அமைக்க வேண்டும்.
உதாரணமாக, டமாரம், என்பதை தமாரம் எனவும் ரூபாய் என்பதை உரூபாய் என்றும், லட்சியம் என்பதை இலட்சியம் என்றும் எழுதவேண்டும்.

ட,ண,ர,ல,ள,ழ,ற,ன ஆகிய எட்டெழுத்துக்கள் மொழிக்கு முதலில் வராது. இந்த எட்டு எழுத்துக்களும் நாவானது மேலண்ணத்தை தொடுவதால் பிறக்கிறது. இதில் முயற்சி மிகுந்து இருப்பதால் இவை முதலில் வருவது இல்லை.

மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்களை போல இறுதியிலும் இந்த எழுத்துக்கள்தான் வரவேண்டும் என்ற விதி இருக்கிறது.

பன்னிரண்டு உயிர் எழுத்துக்களும், ஞ,ண,ந,ம,ன,ய,ர,ல,வ,ழ,ள என்னும் உயிர்மெய்யெழுத்துக்களுடன் குற்றியலுகரம் சேர்ந்து 24 எழுத்துக்கள் மொழிக்கு இறுதியில் வரும்.
  க,ச,ட,த,ப,ற,ங என்னும் ஏழு எழுத்துக்கள் இறுதியில் வரக்கூடாது.
வல்லின மெய்களான கசடதபற என்னும் ஆறு எழுத்துக்கள் சொல்லின் இறுதியில் வராது. வர நேரின் குற்றியலுகரம் சேர்த்து முடியும்.
  உதாரணமாக பாக்க், பேச்ச், பாட்ட் ஆகியவை உகரம் சேர்ந்து பாக்கு, பேச்சு, பாட்டு என முடியும். இவைபோலவே ங் என்ற மெய்யும் இறுதியில் வராது குரங் என முடியாது உகரம் சேர்த்து குரங்கு என முடியும். ட்,ற் என இரண்டு எழுத்துக்கள் சொல்லின் முதலில் மற்றும் இறுதியில் வராது.

ஓரளவிற்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். இதை விரிவாக முன்பே படித்து இருந்தாலும் நாம் அவ்வப்போது மீண்டும் நினைவில் வைத்திருக்க சுருக்கமாக கூறினேன்.

இலக்கிய சுவை!

நற்றிணை!

நற்றிணை பண்டைய தமிழரின் அகவாழ்வை சிறப்பிக்கும் நானூறு பாடல்களை கொண்டது. மொத்தம் நூற்று எழுபத்தைந்து புலவர்கள் இந்த பாடல்களை பாடியுள்ளனர். பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி என்பவர் இதனை தொகுப்பித்தார். 9அடிமுதல் 12 அடிவரை அமைந்துள்ள செய்யுள்கள்.
    

  வெள்ளிவீதியார் என்பவர் தலைவியின் கூற்றாக பாடிய இந்த பாடலை காண்போம்.

சிறுவெள்ளாங்குருகே! சிறுவெள்ளாங்குருகே!
துறைபொகு அறுவைத் தூ மடி அன்ன
நிறம் கிளர் தூவிச் சிறு வெள்ளாங்குருகே!
எம் ஊர் வந்து எம் உண்துறைத் துழைஇ
சினைக் கெளிற்று ஆர்கைய அவர் ஊர் பெயர்தி;
அனைய அன்பினையோ பெரு மறவியையோ—
ஆங்கண் தீம் புணல் ஈங்கண் பரக்கும்
கழனி நல் ஊர் மகிழ்நர்க்கு என்
இழை நெகிழ் பருவரல் செப்பாதோயே?

தலைவன் வராததால் வேட்கை பெரிதும் சிறப்ப துன்பப்பட்டு தலைவி பாடுவதாக பாடல் அமைந்துள்ளது.

விளக்கம்: சிறிய வெள்ளை நாரையே சிறிய வெள்ளை நாரையே; நீர்த்துறையில் வெளுத்த வெள்ளாடையின் மாசற்ற மடி போன்ற வெள்ளை நிறமான சிறகுகளை உடைய சிறிய வெள்ளை நாரையே!
    நீ எம் ஊரில் வந்து எமது நீர் உண்ணும் துறைகளில் துழாவி கெளிற்று மீன்களை உண்கிறாய். பிறகு தலைவருடைய ஊருக்கு திரும்பிப் போகிறாய்.அங்கேயுள்ள நீர்தான் இங்கும் பரவிக் கிடக்கிறது. வயல்களையுடைய நல்ல ஊரையுடைய என்னுடைய அன்பருக்கு நீ எனது அணிகள் கழன்ற நோயை செப்பாமல் இருக்கின்றாயே! அவ்வாறாயின் நீ என் அன்பினை பெற்ற பறவையா? அல்லது மறதியுடைய பறவையா? என்று எனக்கு விளங்கவில்லை! என்று தலைவி கூறுகிறாள்.
    தலைவனை நீண்டநாட்களாக காணாது தலைவி உடல்மெலிந்து அணிகலன்கள் கழன்று விழுமளவிற்கு பசலைநோயில் வாடுகிறாள்.அப்போது நாரையிடம் தன் ஊரில்வந்து நீரில் உள்ள மீன்களை தின்று தலைவன் ஊருக்கு செல்கிறாயே! என்னுடைய நோயை அவரிடம் சொல்லாதிருக்கிறாயே! நீ நன்றி மறந்த பறவையாக இருக்கிறாயே! என்று வருந்தி பாடுகிறாள்.

எளிமையான பாடலாக இருப்பதால் வரிக்குவரி விளக்கம் கூறவில்லை!
என்ன அழகான உவமைநயம் மிக்க பாடல். மீண்டும் அடுத்த பகுதியில் சந்திப்போம். உங்களின் பின்னூட்டங்கள் எங்களை மெருகேற்றும். நன்றி வணக்கம்.


 மேலும் தொடர்புடைய இடுகைகள்:







Comments

  1. உள்ளேன் ஐயா!...

    ’’.......?’’

    வீட்டுப் பாடம் ஏதும் எழுதி வர வேண்டுமா ஐயா!..

    ReplyDelete
  2. தொடருங்கள் ...தொடர்கிறேன் ...

    ReplyDelete
  3. பலருக்கும் புரியும்படி அருமையான விளக்கம்... பாராட்டுக்கள்...

    நற்றிணை பாடலை ரசித்தேன்...

    ReplyDelete
  4. பாடலை ரசித்தேன் சுவைத்தேன் நண்பரே
    நன்றி

    ReplyDelete
  5. அருமையான தகவல்கள்... தொடர்கிறேன்...

    ReplyDelete
  6. மெய் மயக்கம் விளக்கம் அருமை. சங்கப் பாடல் விளக்கம் ரசித்தேன். தொடர்க

    ReplyDelete
  7. பாடத்தையும் ரசித்தேன் பாடலையும் ரசித்தேன் .மெய் மயக்கம் பற்றி அறிந்திருக்கவில்லை.அல்லது மறந்து விட்டேனோ தெரியவில்லை தொடருங்கள் தொடர்கிறேன்.

    ReplyDelete
  8. பாடலையும், இலக்கணத்தையும் எளிதாக புரிய வைத்துவிட்டீர்கள். தொடருங்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!